Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணீரைக் கொச்சைப்படுத்தாதீர்கள்!

Featured Replies

karuna.jpg

ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார். கடல்வழியில் அகதிகளாக வரும் தமிழ்மக்கள் பாதிவழியிலேயே மணல்திட்டுகளில் இறக்கிவிடப்படுவதால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதைக் கண்ணீருடன் சித்திரிக்கும் ‘தவிப்பு’ குறும்படத்தின் இயக்குநரான அவரது வாதம் நியாயமானது. இதற்கிடையே; கருணாநிதியின் ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ காமெடி வேறு. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல, தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறார்.

வீரர்களைப் பற்றிப் பேசவே விடமாட்டார் போலிருக்கிறது. அவரால் இதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. கருணாநிதியின் காமெடியைப் படித்ததும், சிறிய வயதில் கேள்விப்பட்ட ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது. அழகான ஆட்டுக்குட்டி ஒன்றைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டு போனான் ஒரு விவசாயி. அதைப் பார்த்த 4 திருடர்கள், எப்படியாவது அதை அபகரிக்க நினைத்தனர். விவசாயியோ, வல்லவரையன் வந்தியத்தேவன் போல வாட்டசாட்டமாக இருக்கிறான். ஒற்றை ஆளாய் 4 பேரை அடிப்பான் போலிருந்தது. என்ன செய்வது என்று யோசித்தார்கள் திருடர்கள். நான்குபேரும் நாலாபக்கம் பிரிந்தனர். விவசாயி போகிற வழியில், 4 வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அவனை எதிர்கொண்டனர்.

‘என்னப்பா இது ஓநாயைத் தூக்கிக் கொண்டு திரிகிறாய்’ என்று கேட்டனர். முதல் ஆள் கேட்டபோது விவசாயி கோபப்பட்டான். ‘உனக்கென்ன பைத்தியமா’ என்று திருப்பிக்கேட்டான். அடுத்த ஆள் கேட்டபோது, இவன் எதுவும் திருப்பிக் கேட்கவில்லை. மூன்றாவது ஆள் கேட்டபோது இவனுக்குச் சந்தேகம் வந்தது. தோளில் வைத்திருப்பது ஆடு தானா என்று தலையை உயர்த்திப் பார்த்தான். ஆடு மாதிரிதான் தெரிந்தது. நான்காவது ஆளும் அதே கேள்வியைக் கேட்டபோது பயம் வந்தது. ஆட்டுக்குட்டியைக் கீழேபோட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான் விவசாயி. மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொன்னால் அதை உண்மையென்று நம்பிவிடும் அபாயம் இருக்கிறது.

முத்தமிழறிஞர் அதற்குத்தான் முயற்சி செய்கிறாரோ! காமராஜர் குடியிருந்த வாடகைவீட்டின் படத்தைச் சுவரொட்டியில் அச்சிட்டு, ‘ஏழைப் பங்காளனின் பங்களா பாரீர்’ என்று நயவஞ்சக வார்த்தை ஜாலம் காட்டி ஒரு தேர்தலையே வென்றுகாட்டிய ராஜதந்திரிகளுக்கு, உண்மை என்றால் விளக்கெண்ணெய் மாதிரி. யார் வீட்டில் இழவு விழுந்தால் என்ன, ரத்த வெள்ளத்தில் ஒரு இனமே மிதந்தாலென்ன, தன்வீட்டுப் பாயசத்தில் மந்திரிப்பருப்பு… மன்னிக்கவும்… முந்திரிப்பருப்பு மிதந்தாகவேண்டும். இல்லாவிட்டால், தமிழ் மக்களின் ரத்தம் அரியணைக்குக் கீழேயே பெருக்கெடுத்து ஓடியபோது, மஞ்சள்துணியால் கண்ணை மூடிக்கொண்டிருந்திருப்பார்களா? காமராஜராயிருந்தாலென்ன, பிரபாகரனாயிருந்தாலென்ன, சந்தனக்கட்டைகளைச் சகதிக்குள் புதைத்துக் கேவலப்படுத்துவதுதான் இவர்களது சாதுர்யம்.

இப்படிப்பட்ட அற்பத்தனமான அரசியலுக்கு பதில் சொல்லாமல், இவர்களை ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அலட்சியப்படுத்துவது தான் நல்லதோ என்று தோன்றுகிறது. எனினும் போகிறபோக்கில், இரண்டொரு புகார்களை மட்டும் குறிப்பிட வேண்டியுள்ளது. ஜெயலலிதாமீது பாயத் துணிவில்லாமல் தம் மீது பாய்வதாகக் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார் கருணாநிதி. பதவியில் இருக்கிற இவரைப் பற்றி விமர்சிக்கத் துணிவு வேண்டுமா, அதிகாரம் இழந்துள்ள ஜெயலலிதாவை விமர்சிக்கத் துணிவு வேண்டுமா? இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் வாழும் வள்ளுவர். அய்யா! தமிழக முதல்வரே! நீங்கள் ஒரு கிரிக்கெட் ரசிகர். முன்பெல்லாம் ஓய்வு நேரத்தில் பார்ப்பீர்கள். இப்போது 5 நாள் டெஸ்ட் மாட்ச்சையெல்லாம் கூட முழுமையாகப் பார்க்க வாய்ப்பிருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த நம்பிக்கையுடன் கேட்கிறேன்… பேட்டிங் செய்துகொண்டிருப்பவருக்குப் பந்து வீசாமல், ஆட்டமிழந்து பெவிலியனில் உட்கார்ந்திருக்கிற பேட்ஸ்மேனுக்கா பந்து வீசிக்கொண்டிருக்க முடியும்? ராஜீவ்காந்திக்கும் அமிர்தலிங்கத்துக்கும் கண்ணீர் சிந்த உங்களுக்கு உரிமையில்லையென்று யாராவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்களா? கொத்துக் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்ட எங்களது ஒரு லட்சம் சொந்தங்களுக்காகக் கண்ணீர் சிந்தாத நீங்கள், இவர்களுக்காக எப்படி கண்ணீர் சிந்தலாம் என்று நாங்கள் யாராவது கேட்டோமா? பின் எதனால், அவர்களுக்காகக் கண்ணீர் சிந்த எனக்கு உரிமையில்லையா என்று கேட்கிறீர்கள்? ராஜீவ் காந்திக்காகக் கொஞ்சம் கூடுதலாகக் கண்ணீர் சிந்தி, மன்மோகன் அமைச்சரவையில் இன்னும் இரண்டு சீட்டுக்கு கர்சீப் போட்டு வைத்தால், அதற்காக உங்களை யாரும் தட்டிக்கேட்கப் போகிறார்களா?

இத்யாதி காரணங்களுக்காக, ராஜீவ் முதலானோருக்கு நீங்கள் தாராளமாகக் கண்ணீர் சிந்தலாம். அதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால், பிரபாகரன் மாதிரி ஒரு மாவீரனுக்காகக் கண்ணீர் சிந்துவதற்கான தகுதி இருக்கிறதா உங்களுக்கு? ‘தெளிவில்லாமல் அவசரப்பட்டு பிரபாகரனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் இத்தனை பாதிப்புகள்’ என்று, மனசாட்சியை டெல்லியில் அடகுவைத்துவிட்டு, சென்னையில் வந்து கயிறு திரிக்கிறீர்களே… முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறீர்களே… உங்களால், பிரபாகரனுக்காக எப்படி கண்ணீர் சிந்தமுடியும்?’விடுதலையின் வேரில் வெந்நீரும் ஊற்றுவேன், பிரபாகரனுக்காகக் கண்ணீரும் சிந்துவேன்’ என்று விசித்திரமாக அறிவிக்கிறீர்கள்.

இந்த நீலிக் கண்ணீர், பிரபாகரனை மட்டுமல்ல, ஆயிரமாயிரம் தமிழ் வேங்கைகளின் வீரவரலாற்றையும் களங்கப்படுத்திவிடுமே என்ற கவலையாவது இருக்கிறதா உங்களுக்கு? உங்கள் திருப்திக்காக, ஒரு வாதத்துக்கு, பிரபாகரன், வீழ்த்தப்பட்ட வேங்கை என்றே வைத்துக்கொண்டாலும், தமிழகத்தின் மானம் மரியாதையையெல்லாம் பழைய பேப்பர் கடையில் போட்டுவிட்டு டெல்லியின் காலடியில் வீழ்ந்தே கிடக்கிற உங்களுக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இறந்து போனான் என எதிரி எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறப்பெடுக்கின்றன….

1991ஜூலையில் ஆனையிறவை மீட்பதற்கான சமரில் போரிட்டு உயிர்நீத்த வீரச்சகோதரி கேப்டன் கஸ்தூரி இறப்பதற்கு சற்றுமுன் களத்திலிருந்து எழுதிய இந்த ஆவேசக் கவிதை, உங்களைப் போன்றவர்கள் அவசியம் படிக்கவேண்டிய கவிதை. சரியாத ஒரு சரித்திரத்தின் முகத்தில் சகதி வாரிப் பூசிவிட்டு, அந்த மாவீரனின் உடலுக்கு நான்தான் சந்தனம் பூசுவேன் என்று மூக்குசீந்துவோரைப் பார்த்துக் கூனிக்குறுகி நிற்பது நாங்கள் மட்டுமல்ல, நீண்டநெடுங்காலமாக உங்களை ஒரு போராளி என்று நம்பி ஏமாந்த அண்ணாவின் தம்பிகளும் அப்படித்தான் நிற்கிறார்கள்.

மத்திய அரசில் குடும்பத்தின் பங்கைப் போராடிப் பெறமுடிகிறது, உயிருக்குப் போராடிய ஒரு லட்சம் சொந்தங்களை மட்டும் காப்பாற்றமுடியாமலேயே போய்விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தலைகுனிகிறார்கள் அவர்கள். இந்த உணர்வெல்லாம் உங்களுக்கு முற்றுமுழுதாகவா அற்றுப்போய்விட்டது பிரபாகரன் வீழ்ந்துவிட வேண்டும் என்று விரும்பியவர்கள், அவர் வீழ்ந்துவிட்டதாகவே நினைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாமென்றா சொல்கிறோம்? அப்படியே உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டாலும், தமிழர் வாழும் நிலமெல்லாம் விடுதலை விருட்சத்தின் விழுதுகளைப் படரவிட்டிருக்கிறானே அந்த மாவீரன்…

அந்த விழுதுகளையும் விருட்சத்தையும் உங்களால் என்ன செய்யமுடியும்? நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. இருந்தும் கோழைகளால் சாதிக்கமுடியாததை, இறந்தும் சாதிக்க வீரர்களால் முடியும். கையாலாகாதவர்களால், அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். இருந்தபோது செய்த பிரச்சாரத்தை, பிரபாகரன் வரைக்கும் புதுப்பிக்கமுடியுமே தவிர வேறென்ன செய்யமுடியும்?இனிமேலாவது ‘விழிகள் நீரைப் பொழிகின்றன’ என்றெல்லாம் வசனம் எழுதாதீர்கள். முதியவர்கள்- குழந்தைகள் என்ற பாகுபாடேயின்றி அத்தனைப் பேரும் கொன்று குவிக்கப்பட்டபோது கண்ணிருந்தும் குருடராய்க் கற்சிலைபோல் நின்றிருந்த உங்கள் விழிகள், இவ்வளவுக்கும் பிறகு பொழிந்தாலென்ன, பொழியாது போனால்தான் என்ன? உலகிலேயே கண்ணீர் தான் அப்பழுக்கற்றது, தூய்மையானது, உன்னதமானது. அதைக் கொச்சைப்படுத்திவிடாதீர்கள்.

கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல

மண்வழி வரலாம் பெற்ற மகன்வழி வரலாம்- சேர்ந்த

மண்வழி வரலாம் பெற்ற மகன்வழி வரலாம்- சேர்ந்த

பெண்வழி வரலாம் செய்த பிழை வழி வரலாம்- பெற்ற

நண்பர்கள் வழியிலேதான் நான்கண்ட கண்ணீர் உப்பு…

என்றான் கண்ணதாசன். இதை, கவிதை என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியமில்லை. இதுதான் கவிதை. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும்வகையில், இரங்கல் கவிதை எழுதியதாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்களே…கண்ணதாசன் எழுதியிருப்பது கவிதை என்றால், நீங்கள் எழுதியிருப்பது என்ன? ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடனும், இன்னொரு கையில் எழுதுகோலோடும் இயங்கி, வன்னிப் போர்க்களத்தை வார்த்தைகளில் வடித்தெடுத்த போராளி, மலைமகள்.

ஊர்ந்துபோன கதை

ஊர் கலைத்த எதிரிகளை உளவறிந்த கதை

கொல்லவந்த பகைவருக்கு குண்டெறிந்த கதை

அலையலையாய் நாம் புகுந்து ஆட்டி அடித்த கதை

என்றாயிரம் கரு எமக்குக் கவிதை எழுத

என்ற அந்த வீரத் தமிழ்மகளின் கவிதையிலுள்ள ஒவ்வொரு வரியும், சமரில் உயிர்துறந்து மாவீரரான எம் சகோதரிகளின் முகவரி. தமிழரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் வீரத்துக்கும் விவேகத்துக்கும் அடையாளச் சின்னமாயிருந்த கிளிநொச்சியிலிருந்து சில மைல் தொலைவில் பனைமரங்களால் முற்றுகையிடப்பட்டிருக்கும் ‘பளை’யில்தான் என் இனத்தின் பெருமைக்குப் பெருமை சேர்த்த பெண்புலிகளை முதல்முதலில் தரிசிக்கும் வாய்ப்பு தோழர் திருமாவளவனுக்கும் எனக்கும் கிடைத்தது. நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருக்கிறோம்.

பளை, யாழ்ப்பாணம் செல்லும் வழியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் முடிவடையும் இடம். அதையடுத்து, நார்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த சூனியப்பிரதேசம். அதைத் தாண்டித்தான், சிங்கள ராணுவம் நிற்கிறது. நாங்கள் பளையைச் சென்றடைந்தபோது மாலை மயங்கும் நேரம். அங்கே முகாமிட்டிருந்த போராளிகள், இரவு தங்கிச் செல்லும்படி சொன்னபோது, காலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கவேண்டிய அவசியத்தை அவர்களிடம் சொல்லி விடைபெற்றோம். சூனியப் பிரதேசம் தொடங்குவதற்கு முன்புள்ள புலிகளின் கடைசிப் புள்ளியை நாங்கள் சென்றடைந்தபோது ஏறக்குறைய இருட்டிவிட்டது. அது அடர்ந்த காட்டுப்பகுதி. எங்கள் வாகனத்தை நாலைந்து டார்ச் விளக்குகள் நிறுத்த, சிங்கள ராணுவம்தான் நிறுத்துகிறது என்று நினைத்தோம்.

அண்ணா என்று எங்களை அழைத்த ஒரு பெண்குரல் தான், வழிமறித்திருப்பவர்கள் எங்கள் சொந்தச் சகோதரிகள் என்பதை உணர்த்தியது. சீருடையில் இருந்த அந்த 4 பெண் புலிகளும், கம்பீரமாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நேரம் கடந்துவிட்டதைக் காரணம்காட்டி சிங்கள ராணுவம் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிக்காவிட்டால், திரும்பிவந்துவிடும்படி சொன்ன அந்தச் சகோதரிகளில் ஒருத்தி, “உங்களுக்கு இங்கே எல்லாப் பாதுகாப்பும் இருக்கும்” என்றபோது, எனக்குக் கண்கலங்கிவிட்டது. அந்த இருட்டில் என் கண்ணீரை அவர்கள் கவனிக்கவில்லை. சாலையின் குறுக்கே கிடத்தப்பட்டிருந்த முள்கம்பிச் சுருளை அகற்றி எங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனமாக இருந்தனர்.

‘நீங்கள் இந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருப்பீர்கள்’ என்று கேட்டேன். ‘நாளை காலைவரை இங்கேதான் டூட்டி’ என்று அவர்கள் இயல்பாகச் சொல்ல, அதற்குப் பிறகு அவர்களுடன் பேசக்கூட எனக்கு நா எழவில்லை. கைகூப்பி வணங்கி விடைபெற்றேன். புறநகர் சென்னையில் கூட இல்லை, சென்னை மாநகரின் மையப்பகுதியான வேப்பேரியில் உள்ள ஒரு பள்ளியில் அப்போது படித்துக் கொண்டிருந்தாள் என் மகள். பள்ளிக்கு இரண்டு தெரு தள்ளி வீடு. நடந்துபோனால் ஐந்து நிமிடம் தான். அப்படியும், அவள் பாதுகாப்பாகப் போய்ச் சேர்ந்திருப்பாளா என்று மனசு தவிக்கும். இதை நகரென்றும் நாடென்றும் அழைக்கிறோம். பளையில் என் சகோதரிகள் நிற்கும் இடத்தைக் காடு என்கிறோம். யாழ்ப்பாணம் போய்ச் சேரும் வரை, எது நாடு, எது காடு என்கிற கேள்விதான் மனத்தைக் குடைந்தது. ‘உங்களுக்கு இங்கே எல்லாப் பாதுகாப்பும் இருக்கும்’ என்று எங்களிடம் சொன்ன அந்தச் சகோதரி இன்றைக்கு எங்கேயிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியவில்லை.

தாயே, உங்களால்தான் அந்தப்பூமி பாதுகாப்பாக இருந்தது, உங்களால்தான் அந்த மண் வணங்கா மண்ணாக இருந்தது. அந்த மண்ணைக் காக்கப் போராடிய ஒரு மாவீரனின் கனவைப் பொத்திப் பாதுகாத்தவர்கள் நீங்கள்தான். எங்கள் அண்ணன், எங்கள் அண்ணன் என்று அந்த மாவீரனை நீங்கள் உரிமையுடன் குறிப்பிட்டதைக் கேட்டபோதெல்லாம் மனம் நெகிழ்ந்தவன் என்கிற முறையில் கூறுகிறேன் தாயே… அந்த மாவீரனுடன் சேர்ந்து நீங்கள் ஒவ்வொருவரும் மீண்டுவரவேண்டும். துரோகத்தாலும் சுயநலத்தாலும் இனவெறியாலும் அபகரிக்கப்பட்ட தமிழர் மண்ணை மீட்டுத்தரவேண்டும். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று வாழ்நாளெல்லாம் வசனம் பேசி எம் இனத்துக்கு வாய்க்கரிசிபோடும் தலைவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்துசெய்தே அடக்கம் செய்யப்பட்டவர்கள் நாங்கள்.

வீழ்வது நாங்களாக இருந்தாலும் வாழ்வது தமிழினமாக இருக்கும் என்று அஞ்சா நெஞ்சினராய் அறிவிப்பவர்கள் நீங்கள். அஞ்சாநெஞ்சினர் என்று அழைக்கப்படும் தகுதி உங்களைத் தவிர வேறெவருக்காவது இருக்கிறதா? மாவீரன் மில்லர் வீழ்ந்தான், தமிழினம் எழுந்தது. மாவீரர்கள் புலேந்திரன், குமரப்பா வீழ்த்தப்பட்டனர், தமிழினம் வீறுகொண்டெழுந்தது. மரணத்துக்கஞ்சாத மாலதி போன்ற வீராங்கனைகளின் மனவுறுதி, எந்த வீழ்ச்சியிலிருந்தும் விடுபட்டு எழமுடியும் என்கிற அசையாத நம்பிக்கையை விதைத்தது, ஆக்கிரமிப்பை அடித்துவிரட்டியது. இப்போதும் அதுதான் நடக்கும் என்பது தெரிந்தே காத்திருக்கிறோம். மலையென மறித்துநின்ற அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய மலர்களைப் போல நீங்கள் உதிர்ந்தீர்கள். 12 நாள் தண்ணீர் கூட குடிக்காமல் போராடி உயிர்நீத்த மாவீரன் திலீபன், “என்றேனும் ஒருநாள் எம் மக்கள் சுதந்திரத்தை வென்றெடுப்பார்கள்….

தாயகத்துக்காக உயிரிழந்துள்ள 650 மாவீரர்களுடன் இணைகிறேன். என்னுடைய தேசியப் பொறுப்பை நான் நிறைவேற்றியிருப்பது எனக்குப் பெரும் மனநிறைவைத் தருகிறது” என்று இறப்பதற்குமுன் பெருமிதத்துடன் சொன்னான். அப்போது, மண்ணுக்காக இன்னுயிர் நீத்த மாவீரர்களின் எண்ணிக்கை 650. இன்று, ஆயிரமாயிரம் மாவீரர்களின் ரத்தத்தால் நனைந்திருக்கிறது அந்த மண். திலீபனின் கனவு நிறைவேறாமலா போய்விடும்! தமிழ்மக்கள் வீரவணக்கம் செலுத்தும்பொருட்டு போர்க்களத்தில் உயிரிழந்த முதல் மகனின் உடலை வீட்டிலிருந்து வெளியே எடுத்துவருகிறார்கள் இளம் போராளிகள். அந்த உடல் வெளியே வருவதற்குள், இரண்டாவது மகனின் உடல் வீரத் தழும்புகளுடன் உள்ளே நுழைகிறது.

வசனகர்த்தாக்கள் எழுதுகிற வசனமல்ல இது. வீரஞ் செறிந்த ஈழத்தின் ஈர வரலாறு. இருபுறமும் தமிழர்கள்தான். ஒரு கரையில், இரண்டு மகன்களுக்கும் ஒரேநேரத்தில் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்பதற்காக டெல்லியில் போய் மண்டியிடும் அவலம் அரங்கேறுகிறது. மறுகரையில், மாவீரர்கள் துயிலுமிடங்களில் மனப்பூர்வமாக மண்டியிடுகிறது எங்கள் தொப்புள்கொடி உறவு. கிடைக்காமலா போய்விடும் ஈழம்!’ஆயிரக் கணக்கான மாவீரர்களின் குருதியால் மட்டுமல்ல, விடுதலைத் தாகம் கொண்ட எம் மக்களின் பங்களிப்பாலும்தான் வெற்றி பெறுகிறோம்’ என்று வெற்றிப் புன்னகையுடன் உண்மையைச் சொன்னவன் மாவீரன் சுப.தமிழ்ச்செல்வன். அதனால்தான், மக்களது பங்களிப்பைத் தடுக்க, முள்வேலி அமைத்திருக்கிறது இனவெறி சிங்கள அரசு.

மகிந்த ராஜபக்ஷேவின் அடப்பக்காரர்களாகவே மாறிவிட்ட எங்கள் தலைவர்கள், அதைத் தகர்த்து எறியும் தகுதியைத் தொலைத்துவிட்டு, முள்வேலிக்குப் பின்னிருக்கும் மூன்று லட்சம் சொந்தங்களை வேடிக்கை பார்க்க ஆள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான், ‘நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்ற மாவீரன் முத்துக்குமாரின் கேள்வியை மனத்தில் தாங்கி, நயவஞ்சக நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அம்பலப்படுத்துவதுதான் நமது முதல் முக்கியக் கடமை என்று முடிவெடுத்து, அதை நிறைவேற்றுவதில் போட்டிபோட்டுக்கொண்டு முன் நிற்கிறோம்.

இந்தியாவின் தலையை மிதித்துக்கொண்டிருக்கும் சீனா, இங்கேயிருப்பவர்கள் செய்த துரோகத்தின் விளைவாக, தமிழகத்தின் வாலில் வந்து வலைவீசிக் கொண்டிருக்கிறது. எந்த மாவீரர்களின் ரத்தத்தால் தனது கடலெல்லை பத்திரமாயிருந்தது என்பது, இப்போதுதான் புரிகிறது அதிமேதாவி இந்தியாவுக்கு. இதை எப்போதோ புரிந்துகொண்டு, உடுக்கை இழந்தவன் கைபோல அந்த மாவீரர்களுக்கு ஓடோடிச் சென்று உதவிய எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதனின் ராஜதந்திரம், அவருக்குப் பின் வேறெவருக்கும் இல்லாதுபோனது எப்படி என்கிற கேள்வி நிச்சயம் எழும். மாத்தி யோசி என்று ஒட்டுமொத்த இந்தியாவும் உத்தரவிடும். எல்லாச் சூழலும் இயல்பாகவே மாறக்கூடிய ஒரு காலக்கட்டத்தில்தான் இந்த ஆண்டு மாவீரர் தினத்தை கனத்த மனத்துடன் அனுஷ்டிக்கிறோம்.இந்த உன்னதமான நாளில், 1991 ஆனையிறவு சமரில் உயிரிழந்த சகோதரி-மாவீரர் கேப்டன் வானதி களத்திலேயே எழுதிய கவிதையொன்றை கண்ணீர்மல்க பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது.

“மீட்கப்பட்ட எம் மண்ணில்

எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால்

அவை உங்கள் கண்ணீர் அஞ்சலிக்காகவோ

மலர் வளைய மரியாதைக்காகவோ அல்ல.

எம் மண்ணின் மறுவாழ்வுக்கு

உங்கள் மனவுறுதி மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காகவே!

……………………

அர்த்தமுள்ள என் மரணத்தின் பின்

அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில்

நிச்சயம் நீங்கள் உலா வருவீர்கள்.

அப்போ

எழுதாத என் கவிதை உங்கள்முன் எழுந்து நிற்கும்.

என்னைத் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள்

அரவணைத்தவர்கள் அன்புகாட்டியவர்கள்

அத்தனைபேரும்

எழுதாது எழுந்து நிற்கும் என் கவிதைக்குள் பாருங்கள்.

அங்கே

நான் மட்டுமல்ல,

என்னுடன்

அத்தனை மாவீரர்களும்

சந்தோஷமாய்

உங்களைப் பார்த்து புன்னகை பூப்போம்.”

வீரத்துடன் போரிட்டு சாவைத் தழுவிய அந்த பெண்புலியின் இறுதிப் பாடல் இது. போர்க் களத்தில் நின்றுகொண்டு எங்கள் சகோதரிகள் புல்லாங்குழல் வாசித்த வரலாறு இது. அவர்களுக்கு ஆயுதத்தையும் பயன்படுத்தத் தெரிந்தது, கவிதை எழுதும் காகிதத்தையும் பயன்படுத்தத் தெரிந்தது. கவிதை எழுதுவதாக தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, அந்த வசன வரிகளைவைத்து தமிழ்நாட்டையும் ஏமாற்றும் தலைவர்கள் கூட இந்தக் கவிதையைப் படித்து மனந் திருந்த வாய்ப்பிருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான், மரணத்தின் மடியிலும் கவிதை நெய்துகொண்டிருந்த வானதியின் காவிய வரிகளை நினைவுகூர்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!

-புகழேந்தி தங்கராஜ்

நன்றி: மீனகம்

Edited by Sniper

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.