Jump to content

வட்டுக்கோட்டை வாக்கெடுப்புத் தொடர்பான ஒரு வட அமெரிக்க அனுபவம்


Recommended Posts

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு வரும் வழியில் ஒரு தமிழ்க்கடைக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு, சற்று முன்னறிமுகமுள்ள ஒருவர் குசலம் விசாரித்துவிட்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிப் பேச்செடுத்தார். வாக்களித்து விட்டுத் தான் வருகின்றேன் என்றேன். உடனே மாக்சும் லெனினும் சொன்னதாகப் பின்வருமாறு சொன்னார் “ஓரு போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களால் தான் மேற்கொள்ளப்படவேண்டுமே அன்றி வெளியில் இருந்து அல்ல என்று”. அவர் மேற்படி மேற்கோளை நின்று சுதாகரித்து கண்கள் மேலே சொருகி ஞாபகப்படுத்திக் கூறிய விதமும், மேற்கோளின் பொதுமைப் படுத்தப்பட்ட வடிவமும், அவர் வாழ்வில் மாக்சின் கட்டுரை எதையுமே வாசித்ததில்லை, ஆரோ கொடுத்தனுப்பிய துண்டு மேற்கோளோடு அங்கு நிற்கிறார் என்பதை வெளிப்படையாய்க் காட்டின.

துண்டு மேற்கோள் காவியுடன் மாக்சிசம் பற்றி விவாதிக்க மனம் இடந்தரவில்லை. எனவே, அவரது மேற்கோள் பற்றி எதுவும் கூறாது பொதுவாகக் கேட்டேன், மாக்ஸ் சொன்லிவிட்டால் அது பிரபஞ்ச சத்தியமாய்த் தான் இருக்க முடியுமா? மாக்சின் பேச்சிற்கு மறுபேச்சு இருக்கவே முடியாதா? அப்படி ஒரு விதி எவ்வாறு உருவானது என்று?

(குறிப்பு: அவரது மேற்கோள் வழி சென்று புலம்பெயர்ந்த தமிழரும் பாதிக்கப்பட்ட தமிழர் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்குவர் என்று நிறுவது இலகு என்றபோதும், அவரது துண்டு காவித்தனம் மீதான வெறுப்பு அவ்வாறு என்னை விவாதிக்கவிடவில்லை)

அவர் காவிய துண்டு மேற்கோள் தொடர்பில் எதிர்க்கேள்வி எழுந்தால் என்ன செய்யவேண்டும் என்றும் சில மாக்சிசம் சார்ந்த ஆயத்தங்களை அவரை அனுப்பியவர்கள் செய்து கொடுத்துள்ளர்கள் போலும். ஆனால், மாக்சிசத்தின் சரத்துக்கள் பற்றி விவாதிக்காது வேறு கேள்வி நான் கேட்டதால், அதிருப்த்தி அடைந்த அவர், இது அளாப்பல் என்பது போல் பார்த்தார். பின் சுதாகரி;த்துக் கொண்டு, சொர்க்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகளின் அபிலாசைகளைத் தீர்மானிக்கமுடியாது என்று, மீண்டும் நின்று சுதாகரித்து மேலே கண்சொருகி பாடமாக்கியதைச் சொன்னார்.

வட்டுக்கோட்டைத் தீhமானம் வெற்றிபெறுவதால் ஏதேனும் பலனுன்டா, இவ்வாக்கெடுப்புச் சரியானதா போன்ற கேள்விகளை ஒரு கணம் கிடப்பில் போட்டுவிட்டு, பின்வரும் கேள்விகளிற்கு விடை தாருங்கள் என்றேன். 1) கனேடிய ஊடகங்கள் எல்லாம் விளம்பரப்படுத்த வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கின்றது என்பது உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? 2) இவ்வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் எம்மவர்கள் வாக்கெடுப்பு நிலையங்களிற்குச் செல்லாது புறக்கணித்தால் அத்தகைய வெளிப்பாடு கனேடிய கொள்கை வகுப்பாளர்களின் மனங்களில், தமிழீழக் கோரிக்கை புலிகளின் தீவிரவாதமே அன்றி மக்களினுடையது அல்ல. புலிப்பயம் இன்று இல்லாததால் மக்கள் வாக்களிப்பைச் சுதந்திரமாய் புறக்கணித்தனர். இலங்கையில் சிங்கள பிரச்சினை என்பது கற்பனைக் கற்பிதம் மட்டுமே, உண்மையில் இலங்கையில் தமிழர்க்குப் பிரச்சினை இன்னமும் இருப்பின், கடந்த 20 வருடமாகக் கனேடிய தெருவெல்லாம் கத்தித் திரிந்த கனேடியத் தமிழ்ச் சனம், தமிழர் அரசியல் அபிலாசை தொடர்பிலான ஒரு சுதந்திரமான வாக்கெடுப்பில் பங்கெடுக்காது விடுவார்களா போன்றதான புரிதல்களிற்கான சாத்தியத்தை உருவாக்குமா இல்லையா? இவ்வாக்கெடுப்பை நாம் புறக்கணிப்பின், அது கடந்த 30 வருடங்களை புலிகளின் மனநோய் என்று சிறுமைப் படுத்தி தமிழர்களிற்குப் பிரச்சினையே இல்லை என்று அல்லது இருந்தபிரச்சினை முடிந்து விட்டது என்று நிறுவ விரும்புவர்கள் நிறுவதற்கு வழி சமைக்குமா இல்லையா?

அனைத்துக் கேள்விகளிற்கும் அவர் ஆம் என்று பதில் தந்தார். ஆனால் கூட்டணியின் குளப்படி தான் உண்மையில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியது என்றார். ஆயுதப் போராட்டம் நியாயமற்றது என்றார்.

கனடாவில் நீங்கள் வீடு வைத்துள்ளீர்களா என்று சம்பந்தமே இன்றிக் கேட்டேன். அவர் திமிருடன் தான் ஐந்து வருடத்திற்கு முன்னே வீடு வாங்கி குறைந்த வட்டிவீததத்தில் அடைவுக்கடனையும் லொக் பண்ணி விட்டேன் என்றார்.

மீண்டும் விடயத்திற்கு வருவோம் என்றேன். சரி சிஙளவனும் தமிழ் அரசியல் வாதிகளும் இந்தியாவும் இன்னும் எங்களிற்கே தெரியாத வேறு பலரும் சேர்ந்து தான் ஆயுதப்போராட்டத்தை திணித்தார்கள் என்று கொள்வோம். நதி மூலம் ரிசி மூலம் எல்லாத்தையும் ஒரு கணம் விட்டு விட்டு எண்பதுகளின் முற்பகுதியில் நிலமை எப்பிடி இருந்தது என்று பாப்பம். பாராளுமன்று மலடாய் இருந்தது. சிங்களம் அரசகரும மொழியான சிங்கச் சிறைகள் தமிழில் மட்டுமே பேசின. நெருப்புக்கள் தமிழரையும் தமிழ் சொத்துக்களையும் மட்டுமே தீண்டின. தமிழர்க்கு வழி தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்றேன். ஆம் அதனால் தான் அத்தனை இயக்கம் தொடங்கினது என்றார்.

நான் மீண்டும் அவரது வீட்டுக்குத் தாவி, நாளை நீங்கள் தொழில் இழந்து போய் உங்கள் அடைவுக்கடனைத் தொடரமுடியாது போகிறது என்று சும்மா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். நாளை உங்கள் வீட்டை வங்கி எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற நிலையில் இன்று உங்களின் பக்கத்து வீட்டுக் வெள்ளைக்காரன் தான் பணம் தருவதாயும் நீங்கள் பின்னர் மீளச் செலுத்தலாம் என்றும் கூறுகின்றான். இந்நிலையில், அவன் ஏன் காசு தாறான், உங்கட மனைவிக்கு இதில் ஏதேனும் எதிர்கால சம்பந்தம் வருமோ போன்றெல்லாம் அந்த நேரத்தில் நீங்கள் சிந்திப்பீர்களா? நீங்கள் யார் ஐந்து வருடம் முன்பே வீடு வாங்கியவர். ஆண்மை மிக்கவர். வெள்ளை விரும்பினாலும் உங்கள் மனைவியின் உங்கள் மீதான காதல் விட்டுவிடுமா. உங்களின் இன்றைய பிரச்சினை உங்களது ஒட்டுமொத்த உழைப்பும் நாசமாகிவிடாது காப்பது. அதற்கு தானாய் வந்த பணம் அவசியம். அதை நீங்கள் பெறாது விட்டால், ஒரு வேளை வெள்ளைக்காரனிற்கு எந்த உள்ளெண்ணமும் இருக்காது இரக்ககுணம் மட்டுமே இருந்திருந்தால், நீங்கள் கேணையராய்ப் போவீர்கள். எனவே தேவை அற்ற கற்பனை விடுத்து நாளை நீங்கள் நமிர்வீர்கள் என்ற உங்களின் தன்நம்பிக்கையில் நீங்கள் அப்பணத்தைப் பெறுவீர்கள். இது தான் எங்களது ஆயுதப்போராட்டமும். தானாக நீட்டப்பட்ட ஆயதங்களை நாங்கள் பற்றிக் கொண்டோம். நக்குண்டார் நாவிழந்தார், சிறுகக்கட்டிப் பெருக வாழ், கடன் உறவிற்குப் பகை போன்று ஆயிரக்கணக்கில் எங்களிடம் பெறுமதிகள் இருக்கின்றன தான். அதற்காக நாளை வீடு போய்விடும் என்ற நிலையில் வெள்ளையனின் கடனை நீங்கள் பெற்றே தீர்வது தவிர்க்கமுடியாதது. வாழ்வாதாரப் போராட்டம் இப்படித் தான் இருக்கும்.

மேலும், சொர்க்கத்தில் வாழ்பவர்கள் நரகத்தில் வாழ்பவர்களின் அபிலாசைகளைத் தீர்மானிக்க முடியாது என்ற உங்களின் கூற்றிலேயே இலங்கையில் தமிழன் வாழ்வு நரகம் என்பதனை நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படி இருக்கையில், சொர்க்கத்தில் இருப்பவர்கள் நரகத்தில் எல்லாமே அற்புதமாய் இருக்கிறது என்றோ அல்லது நரகம் உண்மையில் நரகமே இல்லை என்றோ கூறுவது மட்டும் நியாயமா? சரியோ பிழையோ, வாக்கெடுப்பு நடக்கிறது என்றான பின்னர், அதி;ல் நாம் கலந்து கொள்ளாது புறக்கணிப்பது என்பது நரகத்தைச் சொர்க்கமாய் நிறுவதற்கே பயன்படும் என்று நீங்கள் கருதவில்லையா என்று கேட்டபோது, அதிருப்திப் பார்வை ஒன்றை மட்டுமே அவர் தந்தார்.

வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் கேட்காத காதுகளும் பார்க்காத விழிகளும், வாக்கெடுப்பு நம்மவர்களால் புறக்கணிக்கப்படால் தெளிவாய்க் கேட்கத் தொடங்கும் பார்க்கத் தொடங்கும்.

இவ்வாக்கெடுப்பில் பங்கெடுப்பதா இல்லையா என்ற முடிவு, எனது அண்மைய வாழ்வில் நானெடுத்த மிகக் கடினமான ஒரு முடிவு. பங்கெடுக்கக் கூடாது என்பதற்கு ஆதரவாக எனக்குத் தோன்றிய காரணங்களில் சில:

1) அதிக தொகை மக்கள் தெருவில் இறங்குவதாலோ அல்லது கூட்டம் போடுவதாலோ கோசம் எழுப்புவதாலோ கனேடிய வெளியுறவுக் கொள்கைகளை மாற்றலாம் என்ற விவாதத்திற்குரிய நம்பிக்கையை, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அபரிமித வெற்றி மூலமான எழுச்சி தக்க வைக்கும்.

2) உணர்ச்சி வசப்பட்ட மக்களை உறுஞ்சிச் சுரண்டி வாழும் ஒட்டுண்ணிகளிற்கு மேற்படி எழுச்சி சாதகமாய் அமையும்.

3) கடிவாளம் இடப்பட்ட ஒற்றைப் பார்வைக்குள் தமிழர் சிந்தனையை அத்தகு எழுச்சி தக்கவைக்கும்.

4) சமூகத்தைப் பிழவு படுத்தி, பிழவுகளிற்குள் கன்னை சேர்த்து (கனடா உதயன் லோகேந்திரலிங்கத்தின் பயன்பாடு ஒரு உதாரணம்), புலி ஆதரவாளர்கள் தான் வாக்கெடுப்பு நடாத்தினார்கள், இது கனடாவில் தொடரும் “புலியிசத்தின்” வெளிப்பாடு என்று நிறுவி அதன்வாயிலாக தமிழர் தங்கள் பிரச்சினை பற்றிக் கூற வெளிப்படும் தருணங்களில் எல்லாம் பயங்கரவாதம் பற்றி கொள்கை வகுப்பாளர்கள் கதைப்பதற்கும். எமது நிகழ்வுகளிற்கு மண்டபங்கள் தராது அரசியல் வாதிகள் எமை தீண்டத்தகாதவர்களாய் நடத்தி வெளிப்படையாய் எம்மை ஒடுக்குவதற்கும், இலங்கையில் இருப்பது புலிப்பிரச்சினை மட்டுமே என்று கத்துவதற்குமாக இந்த நிகழ்வு கடத்தப்படலாம் (இது ஓரளவிற்கு இங்கு நடந்தது).

5) தனது நலன்களின் அடிப்படையில், பிரிவினை வாதத்தைக் கெட்டவார்த்தையாக்கி வைத்திருக்கும் கனடா, தமிழீழமே தீர்வு என்ற எமது விடாப்பிடி நிலையை தீவிரவாதம் என்றும் நடைமுறைக்கெதிரானது என்றுமு; பழமை வாதம் என்றும் சித்தரித்து எமக்கெதிராகத் திருப்புவதற்கு விரும்பும்.

எனினும் மேற்படி கருத்துக்கள் எல்லாம் இவ்வாறு ஒரு வாக்கெடுப்பை நடாத்துவதா இல்லையா என்ற முடிவெடுக்கும் கூட்டத்தில் மட்டுமே கதைக்கப்படவேண்டியனவே அன்றி வாக்கெடுப்பு விளம்பரப்படுத்தப்பட்டு நடந்து கொண்டிருக்கும் போதல்ல. வாக்கெடுப்பு விளம்பரப்படுத்தப்பட்டு நடந்து கொண்டிருக்கும் போது, அதை அபரிமித வெற்றி கொள்ளச் செய்யவேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயம். இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போலவும் Nவுறும் பல காரணங்களின் அடிப்படையிலும், வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதன் புறக்கணிப்பு அல்லது தோல்வி என்பது மிகப்பாரதூரமானது. உண்மையில் அந்தவகையில், கனடாவில் வாக்களித்த 48 ஆயிரத்திச் சொச்சம் என்பது வருத்தம் தரும் குறைந்த தொகை தான். அதுவும் நானறிந்தவரை, ஈழத்தமிழர் நலன் தொடர்பில் அசையாத பற்றுறுதி கொண்ட பலர், என்னத்தை வாக்களித்து என்னத்தைச் செய்வது என்று வாழாதிருந்திருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இறுதியாக, வழர்த்தால் குடுமி வழித்தால் மொட்டை என்று “அறிவு எதிர் உணர்ச்சி” என்ற விடயத்தில ;நாம் இருந்து விடமுடியாது. எவ்வளவிற்கெவ்வளவு அறிவு முக்கியமோ அவ்வளவிற்கவ்வளவு உணர்ச்சியும் முக்கியம். ஏனெனில் நாங்கள் வாழும் மனிதர் பற்றிப் போராடிக்கொண்டிருக்கின்றோம். உணர்ச்சி அற்ற அறிவு ஒன்றில் மலடாய்ப்போகும் அல்லது ஆபத்தாய்ப் போகும்.

வரும் காலங்களில் வாக்கெடுப்பு நிகழ உள்ள நாடுகளில் உள்ளவர்களிடையே இது பற்றிய கருத்தாடலைத் தூண்டுவதற்காக இப்பதிவு.

Link to comment
Share on other sites

எனது நெஞ்சை தொட்டு சொல்லிறதாய் இருந்தால்... வாக்கெடுப்பில் கலந்துகொண்ட எனக்கு நன்கு அறிமுகமான உறவினர்கள், நண்பர்களின் எண்ணிக்கையைவிட கலந்துகொள்ளாதோர் எண்ணிக்கை அதிகம். பலர் இதை முக்கியமான கடமையாக, தேவையாக, பெரிய விசயமாக எடுக்க இல்லை. டொரோண்டோ மாநகரில மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது சுமார் 120,000 பேர் பங்குகொண்டு இருந்தார்கள் என்று சொல்லப்பட்டுச்சிது. அப்போது இருந்த தீவிரம், உத்வேகம் இப்போது நம்மவர்களிடம் இருந்து காணாமல் போயிட்டிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இந்த தேர்தல் வைத்தால் என்ன நடக்குமோ கடவுளுக்கு தான் வெளிச்ச‌ம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.