Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதுவும் தராதவரைவிட ஏதோவொன்றைத் தர முன்வருபவரை ஆதரிக்க வேண்டிய நிலைமை!-தினக்குரல்

Featured Replies

எதுவும் தராதவரைவிட ஏதோவொன்றைத் தர முன்வருபவரை ஆதரிக்க வேண்டிய நிலைமை

எமது பிரச்சினைக்கு எதுவித தீர்வையும் தர முன்வராத ஒருவரை விட ஏதாவதொரு தீர்வை வழங்க முன்வரும் ஒருவரை ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பதன் மூலம் மோசடிகளைத் தவிர்த்து எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஜெனரல் சரத்பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தந்தை செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரை பலர் கடந்த காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியை நிர்வகித்துள்ளனர். இன்று மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமை பதவியை நான் ஏற்றிருக்கிறேன். மக்களாகிய உங்களின் உதவியுடன் எந்தச் சவாலையும் நாம் சந்திக்க தயாராகவுள்ளோம். இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடு கட்சியின் தேசிய மாநாடு 1951 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமஷ்டி அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்மொழி வாரியான சுயாட்சி மாநிலம் அமைய வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும்.

சிங்களம், தமிழ் பேசும் மக்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இதன் பின்புலமாகும். இலங்கை அரசினால் இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் வாக்குரிமைச் சட்டத்தினால் சுமார் 10 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். நாடு சுதந்திரமடைந்த காலத்தில் நிலவிய இன விகிதாசாரத்தை மாற்றுகின்ற வகையில் கிழக்கில் பாரிய குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அவை சம்பந்தமாக தமிழரசுக் கட்சி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. இதனையே நாம் முதல் தீர்மானமாக நிறைவேற்றியிருந்தோம்.

நாடு சுதந்திரமடையமுன்னர் பெரும்பான்மையினத் தலைவர்கள் இந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென பிரேரணையை முன்வைத்தனர். சமஷ்டியை முதலில் கேட்டது நாங்களல்ல. பெரும்பான்மையினத் தலைவர்களே அதில் முன்னணியில் நின்றார்கள்.

காலம்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு சமஷ்டி அவசியமென தீவிரமாக வலியுறுத்தி வந்தார். சமஷ்டிமுறை ஏற்படாவிட்டால் இந்த நாடு பிளவுபடுமென தனது பேச்சுகளில் குறிப்பிட்டு வந்தார். அரசியல் சாசனத்திருத்தம் சம்பந்தமாக டொனமூர் ஆணைக்குழு வருகை தந்தபோது டொனமூர் ஆணைக்குழு முன்னால் சென்று சமஷ்டி வேண்டுமென்று கண்டியச் சிங்களத் தலைவர்கள் சாட்சியம் அளித்தார்கள்.

இதன்படி கண்டிப்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கான மாநிலம், கீழ்நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கான மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான மாநிலம் என சமஷ்டியின் கீழ் மூன்று மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்றனர். துரதிர்ஷ்டவசமாக நாம் சிந்திக்கவில்லை. ஏனெனில் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தோம். டொனமூர் கமிஷன் சிபார்சு செய்த தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாண இளைஞர் மன்றத்தீர்மானத்தின் பிரகாரம் வடமாகாணத்தில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டது. இதனால் வடமாகாணத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லவில்லை.

டொனமூர் கமிஷன் சிபார்சு செய்த மாகாணசபைகள் உருவாக்கப்படவேண்டும். அந்த மாகாணசபைகளுக்கு போதிய அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். பகிஷ்கரிப்பினால் அதைப்பெற்றுக்கொள்ளவில்லை.காலப்போக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி முறை ஆட்சி அனைத்து மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1972 ஆம் ஆண்டு இலங்கை அரசின் முதலாவது குடியரசு சாசனம் நிறைவேற்றப்படும் வரையில் தமிழரசுக் கட்சி அமைதியான வழியில் ஒரு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது.

தமிழ் மக்கள் அகிம்சை வழியில் பல சாத்வீகப் போராட்டங்களை நடத்தினார்கள். அதில் இன ரீதியான பல வன்முறைத் தாக்குதலுக்குள்ளானார்கள். 1963 ஆம் ஆண்டு வடகிழக்கில் பாரிய சாத்வீகப் போராட்டத்தை நடத்தினோம். பலர் கைதுசெய்யப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டோம். 1972 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கு முன்னால் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது சமஷ்டி முறையிலான அரசியல் சாசனத்தை முன்வைத்தது. துரதிர்ஷ்டவசமாக இவை நிராகரிக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.

இலங்கையில் தமிழரசுக் கட்சி மேலும் சில கட்சிகளை உள்ளடக்கிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை 1976 ஆம் ஆண்டு வைகாசிமாதம் 16 ஆம் திகதி உருவாக்கி தனது முதல் மாநாட்டை வட்டுக்கோட்டையில் நடத்தியது. அதில் சமஷ்டி அடிப்படையிலான சாசனம் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக சுதந்திரமான, இறைமையுடைய, மதச் சார்பற்ற, சோசலிஷ தமிழீழம் உருவாக்கப்பட வேண்டுமென்பதை அந்த மாநாடு உருவாக்கியது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் இத்தீர்மானத்தை அமோகமாக ஆதரித்தனர்.

இதனால் அ.அமிர்தலிங்கம் தலைமையில் 18 பேர் பாராளுமன்றம் சென்றோம். நாம் ஆரம்பத்தில் கேட்டது தமிழீழம் அல்ல. சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வேயாகும். 1972 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். அன்றைய போராட்டத்திற்குப் பின்னால் ஒரு நியாயம் இருந்ததை எவரும் நிராகரிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமலே போராட்டத்துக்கு தள்ளப்பட்டார்கள்.

1983 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் காரணமாக சர்வதேச சமூகத்தின் கவனம் விசேடமாக இந்தியாவின் கவனம் எமது பிரச்சினையில் ஈர்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன.

பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ வரை பல தலைவர்கள் எமக்கு எந்தத் தீர்வுகளையும் வழங்கவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ முன்வரவில்லை. பலரது வற்புறுத்தல் காரணமாகவே 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷவினால் 15 பேர் அடங்கிய சர்வகட்சி மாநாடு அமைக்கப்பட்டது. அதில் 6 சிங்களவர்கள், 4 தமிழர்கள், ஒரு முஸ்லிம் அடங்கலாக 11 பேர் சமர்ப்பித்த பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் சிந்திக்கவே இல்லை. தாம் விரும்பியதைச் செய்து துவேச கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வு மகிந்த காலத்தில் பின்நோக்கி சென்று விட்டது.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், தமிழ், முஸ்லிம் மக்கள் வட கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. ஐ.நா.வின் சாசனங்களில் சிவில் அரசியல் உரிமை சம்பந்தமான சாசனத்திலும் சமூக பொருளாதார சாசனத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது. எமக்கு சொந்த மொழி,கலாசாரம், பாரம்பரியம் உண்டு. இதை எவரும் மறுக்க முடியாது.எமக்கு சமூக, அரசியல், பொருளாதார, கலாசார ரீதியில் முழுமையான சுய நிர்ணய உரிமை வேண்டும். அதனை ஒருமித்த நாட்டுக்குள்ளேயே நாம் கேட்கின்றோம். அதையும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்பவே கேட்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்பும் பாராளுமன்றத் தேர்தலின் பின்பும் இதற்கான ஒரு வழி பிறக்கலாம். இதனால், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், மாணவர்கள் உட்பட பலரது கருத்துகளைக் கேட்டோம். அதேபோல் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேசினோம். அதன் பின்பே எமது முடிவை அறிவித்தோம்.

எமது முடிவு அறிவிக்கப்பட்ட பின்பே பெருமளவு சலுகைகள் குறித்து அறிவிக்கப்படுகிறது. இவையெல்லாம். எமது முடிவு அறிவிக்கப்பட்ட பின்பே அறிவிக்கப்படுகின்றன என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது வன்னி மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கும் வீடுகளுக்கும் செல்ல வேண்டும். அதற்கு எமது புலம் பெயர்ந்த மக்கள் உதவ வேண்டும். நாமும் அவர்களிடம் கேட்கின்றோம். அவர்களும் உதவுவதாகச் சொல்லியிருக்கின்றனர். அதேபோல் கடந்த 20 வருடங்களாக வலிகாமத்தில் தமது இடங்களுக்குச் செல்லவில்லை. ஒரு காலத்தில் நியாயம் இருந்திருக்கலாம் இன்று என்ன நியாயம் உண்டு என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

எமது மக்கள் படுகின்ற துன்பங்களில் இருந்து அவர்களை விலக்கிவிட வேண்டும்.எமக்கு நியாயமான தீர்வு அவசியம். இதற்காக எமது புலம்பெயர் உறவுகள் கோஷங்களை எழுப்பாமல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர வேண்டும்.

இதற்கு இந்திய சமூகமும் சர்வதேச சமூகமும் கூடிய கவனம் எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்தியா பல பங்களிப்பைச் செய்திருக்கின்றது. துரதிர்ஷ்டவசமான பல செயற்பாடுகளால் இந்தியா ஒதுங்கி நின்றது. ஆனால், இன்று அரசியல் தீர்வு வேண்டுமென்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

பல நாடுகள் எமது விடயத்தில் பங்களிப்பு செய்தன. ஆனால், இந்தியா ஒதுங்கியதால் அவை இந்தியா செய்தால் நாம் பின்னால் நிற்போம் எனக் கூறின. இன்று இந்தியாவின் நிலைப்பாடுகள் மாறத் தொடங்கிவிட்டது.

"தயவு செய்து எமக்கு உதவுங்கள்%27 நாம் நிம்மதியாகவும் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ உதவுங்கள் என்றே கேட்கின்றோம். கடந்த காலங்களில் எமது மக்கள் பலதுயரங்களையும் துன்பங்களையும் சந்தித்து விட்டனர்.

நாம் நாடோடிகள் அல்ல. சுயமரியாதையுடனும் ஐக்கியமாகவும் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் கைதிகள் விடுவிப்பு தொடர்பான முடிவுகள் எதுவும் காத்திரமாக இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகளின் மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு புறம் வெறுங்கையும் மறுபுறம் ஏதோ ஒரு தீர்வுக்கான நம்பிக்கையும் காணப்படுகின்றது. எமது மக்களை நாம் ஒரு போதும் விற்க மாட்டோம். அதில் நாம் உறுதியாகவுள்ளோம். எம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாம் இழக்க மாட்டோம்.

கடந்த 60 வருடமாக நடைபெற்ற போராட்டம் இன்றைய இளம் சமூகத்தினராகிய நீங்கள் சுபிட்சமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம். இது உங்கள் அனைவரிடமும் கலந்து எடுக்கப்பட்ட உங்கள் முடிவு. இதன் பின்னால் நீங்கள் நிற்க வேண்டும்.

எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெருமளவில் நாம் பாராளுமன்றம் செல்ல வேண்டும். இதற்காக படித்தவர்களையும் இளம் சமூகத்தினரையும் அரசியலுக்குள் உள்வாங்க வேண்டிய தேவை உண்டு. அதை நாம் நிச்சயம் செய்யவுள்ளோம்.

இன்றைய நிலையில் எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான ஓரளவு நம்பிக்கை காணப்படுவதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது தீர்மானத்தின் படி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் இதற்காக ஒரு ஆட்சி மாற்றம் தேவை. கடந்த 4 வருடகால ஆட்சியில் எமது மக்கள் எதுவித நலனையும் அனுபவிக்கவில்லை. இதனால், இந்தத் தேர்தலில் 90 வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிகாலையில் சென்று வாக்களிப்பதால் மோசடிகளைத் தவிர்க்க முடியும்.

இதன் மூலம் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலட்சியங்களை அடைவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். ஆண்டவன் எம்மைக் கைவிட மாட்டான். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்றார்.

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=756

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.