Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கொலைக் களம் – இளமாறன்

Featured Replies

நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழில் பேசுவது ஏதோ தவறான போக்கு என்றோ, அல்லது கீழ்த்தரமானது என்றோ ஒரு மனநிலை நமது மக்களிடம் ஆழமாக பதிந்துவிட்டது. ஆகவே ஆங்கிலம் பேசுபவர்களை அவர்கள் பெரும் மேதாவிகள் என்று கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருமுறை ஒரு பகல் வேளையில் ஆங்கில பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்த ஒரு இளம்தாய், அந்த குழந்தையை கண்டபடி திட்டிக் கொண்டே அடித்தார். எமக்குப் புரியவில்லை. சிறு குழந்தைகளை அடிப்பதென்பது குழந்தைகளின் மனவோட்டத்தை, அவர்களின் சிந்தனையை, அவர்களின் செயல்திறனை முறிப்பதற்கு சமமாகும்.

நமக்கு அறிமுகம் இல்லாதவர் என்றாலும்கூட, குழந்தையை அடிப்பதை நாம் தடுக்காமல் இருக்க முடியாது. ஆகவே அவரிடம் சென்று குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த தாய் கூறிய பதில் எம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சாதாரண குடிசைப் பகுதியில் வாழும் ஒரு பெண், அந்த பகுதியிலிருந்து குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறார். அந்த தாயின் ஏக்கமெல்லாம் ஒன்றுதான். அந்த குழந்தை தம்மை மம்மி என்று அழைக்கவில்லையாம். ஏராளமான பண செலவு செய்தும், பள்ளிக்கான சிறப்பு கட்டணங்கள் செலுத்தியும்கூட, அந்த குழந்தை தம்மை மம்மி என்று அழைக்காமல் அம்மா என்று அழைத்தால்தான் அந்த தாய் வேதனையுடன் தமது குழந்தையை கடிந்து கொண்டதும், அடித்ததும் என்ற செய்தி நமக்கு இதயத்தில் தேள் கொட்டியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இது ஏதோ இங்கே அங்கே நடைபெறும் நிகழ்வுகள் அல்ல. மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும் நமக்கு ஒரே செய்தியை சொல்கிறது. அது நமது மொழி, நமக்கான அடையாளம் இல்லை என்பதுதான். உலகெங்கும் வாழும் ஒரு இனம், தமது மொழி அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறதே இதற்கான காரணம்தான் என்ன? இன்று தமிழ்நாட்டில் வந்தேறிகளாக இருக்கும் வேறு இன மக்கள் வர்த்தகத்திற்காக தமிழ் எனும் மொழி அடையாளத்தை முகமூடியாக அணிந்துகொண்டு தம்மை உயர்த்திக் கொண்டே இருக்கும்போது தமிழர்கள் தமக்கான உயிர் வாழ்வை என்று சொல்வதைவிட, தமது அருட்கொடையை இழந்து கொண்டிருக்கிறார்களே இதை முறியடிக்கவே முடியதா? என்ற எண்ணம் நமக்குள் ஒவ்வொரு நாளும் எரிந்துகொண்டே இருக்கிறது. நாம் நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறோம்.

மொழி சொல்லி, இனம் சொல்லி, ஆட்சிக்கு வந்த திமு கழகம்தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். 1967ஆம் ஆண்டு தமிழர்களுக்கான ஆட்சி என்று நாமெல்லாம் இறுமார்ந்து கொண்டிருந்த காலத்தில் கடந்த ஆட்சியே பரவாயில்லை என்பதுபோன்ற ஒரு நிலையை இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. கடந்த 43 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகளில் தமிழ் மெல்ல மெல்ல தேய்ந்து இன்று எலும்புருக்கிக் கண்ட மேனியாக காட்சியளிக்கிறது. இதுகூட பரவாயில்லை. ஆனால் தமிழ் பேசுவது மிகவும் கேவலமானது என்கிற மனப்போக்கு உருவாகி இருக்கிறதே, இதுதான் நமது மொழி குறித்த எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி இருக்கிறது.

உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய தமிழ்நாட்டில் தமிழ் பள்ளிகளை விட, ஆங்கில பள்ளிகளே அதிகரித்து, ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த மம்மி-டாடி கல்விக் கூடங்கள் நமது இளம் குருத்துக்களை அழித்தொழித்து, அந்த நாக்களில் தமிழ் வராமல் முடக்கிப்போடும் கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடிப்படை அற்ற வாழ்வியல், தமது பொருளாதாரத்திற்கு அதிகமான கல்வி கட்டணங்கள் என தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களை பிரிட்டிஷ் காரர்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மொழியின் அடிமைகளாக நமது குழந்தைகள் தொடர்ந்து அந்த ஆங்கிலகூடங்களில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கல்விக் கூடங்கள் அல்ல, தமிழின் கொலைக்கூடங்கள். அங்கேதான் நமது தமிழுக்கு சமாதி கட்டுவது தொடங்குகிறது. நமது பெற்றோர்கள் தமிழை சுமந்து கொண்டுபோய் அந்த கூடங்களிலே புதைப்பதற்கு தமது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். இதை முறியடித்து, மாற்றி, மொழி காக்க, உழைக்க வேண்டிய தமிழக அரசு, ஏராளமான ஆங்கில பள்ளிகளுக்கு அனுமதி அளித்து தமிழை மெல்ல மெல்ல கொல்வதற்கு உறுதுணை புரிகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்கான பொருட் செலவுகள், திட்டமிடல்கள், அரசு தளவாடங்களில் அதிரடி செயல்கள் என மிக வேகமாக நடைபெற இருக்கும் இச்செம்மொழி மாநாடு நமக்கு மிகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது. 43 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்த இரண்டு திராவிட கட்சிகள்தானே ஆட்சியிலே இருந்தது. 43 ஆண்டுகள் என்பது சற்றேறக்குறைய அரைநூற்றாண்டு காலமல்லவா? நாம் கடந்து வந்த இந்த அரை நூற்றாண்டு காலத்திலே நமது மொழிக்கான அடையாளத்தை, நமது மொழி தேசியத்தை, நமது மொழி இன உணர்வை, நமது மொழியின் மானத்தை, நமது மொழியின் உயிரை உயர்த்தி பிடிக்க இந்த அரசு செய்தது தான் என்ன? இதுவரை நமது உயர்நிலைக் கல்விகளில் குறிப்பாக, அறிவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், பொறியியல், மருத்துவ இயல், ஆழ்கடல் ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி என ஏதாவது ஒரு கல்வி நமக்கு தமிழிலே அளிக்கப்பட்டதா?

சாதாரணமாக நமது பிள்ளைகளுக்கு பயிற்சி மொழியாகவாவது தமிழை முன்னிலைப்படுத்தினார்களா? நாம் தமிழர்கள் என்பதற்கான அடையாளத்தையாவது ஏற்படுத்த முனைப்புக் காட்டினார்களா? இப்போது சென்னை மாநகராட்சியிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அத்தீர்மானம் சொல்கிறது, வர்த்தக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகைகளில் தமிழை முதல் மொழியாக எழுத வேண்டும் என்று. ஒரு நாட்டில் அரைநூற்றாண்டு காலமாக தமிழ் பெயர் சொல்லி தம்மை நிலைநிறுத்திக் கொண்ட இந்த மண்ணில், ஒரு நிறுவனத்திற்கு பெயரை தமிழில்தான் வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவதற்கே இப்போதுதான் விருப்பம் தெரிவித்திருக்கிறது என்றால் தமிழின்மீது இந்த அரசிற்கு எவ்வளவு பெரிய விருப்பம் இருக்கிறது என்பதை நாம் இந்த நேரத்திலே எண்ணி பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு பெயர்களை தமிழில் வைத்தால் அதற்காக அரசு மானியம் வழங்கும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால், அரசு பரிசளிக்கும் என்பதெல்லாம் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ தமிழ் மீது கொண்ட அக்கறை போன்று தோன்றலாம். ஆனால் இது தமிழுக்குக் கிடைத்த அவமானம், தமிழுக்கு நாம் செய்கிற தீச்செயல் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. காரணம் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது நமது இனத்தை முன்னிலைப்படுத்துவதற்காக. தமது இன அடையாளத்தை வெளிப்படுத்துவதற்காக செய்யப்படும் ஒரு சிறந்த செயலாகும். காரணம் பெயரை வைத்து இவன் எந்த இனத்தைச் சார்ந்தவன் என்பதை அறிந்து கொள்வதற்கு அந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் அடையாளமே பெயர்களாகும்.

உலகநாடுகளில் ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சீனத்திலும், அமெரிக்காவிலும் வேறு எந்த நாடுகளிலும் கண்மணி, கயல்விழி, இளமாறன், இளவேனில் போன்ற பெயர்களை சூட்டிக் கொள்வது கிடையாது. அல்லது அவர்கள் கூறிக் கொள்கின்ற இந்திய நாட்டில் வேறொரு வடஇந்திய மாநிலங்களில் நாம் மேலே குறிப்பிட்ட எந்த பெயரையும் விரும்பி தமக்கான பெயர் அடையாளமாக ஏற்பதும் கிடையாது. ஆனால் தமிழன் மட்டும் தமது பெயரை ரிஷி, ருச்சி இன்னும் நமது நாவிலே நுழையாத அளவிற்கெல்லாம் ஏதேதோ சூட்டிக் கொள்கிறானே நாளடைவில் இவன் பெயரைக் கேட்டு இவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது? பேசுவதும் தமிழல்ல, பெயரும் தமிழல்ல. அப்படியானால் இவன் வாழ்வும் தமிழாக இருக்கப் போவது கிடையாது.

காரணம் இவன் வாழ்வாக கருதுவது பீசா கார்னர்களையும் மற்றும் துரித உணவகங்களையும். அப்படியிருக்க அவனுக்கான அடையாளம் என்று ஒன்றுமே இல்லாமல் அவனே துடைத்தெறியும்போது நாளைய தமிழின அடையாளம் எப்படி விழித்திருக்கும் என்பதை இந்த காலத்திலும்கூட இவ்வளவு நெருக்கடியான நிலையிலும்கூட நாம் சிந்திக்க தவறுவோமேயானால் நமது வாழ்வு மட்டுமல்ல, நமது இனமும் அடையாளம் தெரியாத நிலைக்கு அடித்துச் செல்லப்படும் என்பதை வருத்தத்துடன் நாம் இங்கே பதிவு செய்கிறோம். உலகெங்கும் வாழ்ந்த பல்வேறு இனங்கள் முதலில் தம்மை அழித்துக் கொண்டது தமக்கான மொழியை இழந்ததின் மூலம்தான். இன்று அந்த மொழி பேசிய இனங்கள் இருக்கிறதா? என்கின்ற கேள்வி இருக்கிறது. ஆகவே நமது மொழியை காக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

ஒவ்வொரு நாளும் நாம் உறுதியாக முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலைப்பாடு என்னதென்றால், நான் தமிழன். எனக்கான ஒரு மொழி இருக்கிறது. எனக்கென்று இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் தனித்தன்மையோடு சிறந்து எனக்குள் புதைந்து இருக்கிறது. இது எம்முடைய மூதாதையர் எம்மை காக்க விட்டுச் சென்ற சிறப்பு சொத்துக்கள். இதை நான் சுமக்கவில்லை, மாறாக அனுபவிக்கிறேன். இதை சுவைத்துப் பார்க்கிறேன். அதை அனுபவித்து மகிழ்கிறேன் என்கின்ற உணர்வு நமக்குள் எழ வேண்டும். இந்த உணர்வு நம்மை, நமது மொழியை, நமது இனத்தை, நமது கலாச்சாரத்தை செழித்து வளர துணைபுரிய வேண்டும்.

தமிழர்கள், தமிழர்களோடு பேசும்போது தமிழில் பேசுங்கள். தமிழர்கள், தமிழர்களுக்கு எழுதும்போது தமிழில் எழுதுங்கள். நாம் எந்த நேரத்திலும் பிற இனத்திற்கோ, பிற மொழிக்கோ எதிரிகள் அல்ல. ஆனால் அதே நேரத்தில் எமது மொழியை நாம் காப்பதற்கும், எமது இனத்தை காப்பதற்கும், எந்த நேரத்திலும் பின்வாங்கப் போவதும் இல்லை என்பதை உறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். பிற மொழிகளை கற்றுக் கொள்வதற்கு விரும்புங்கள். ஆனால் நம் மொழியை புறக்கணித்து விடாதீர்கள். உலகெங்கும் எத்தனையோ தாய்மார்கள் இருக்கிறார்கள். ஆனால் உன் தாய் மட்டும்தான் உன்னை கருத்தரித்தவள். உன்னை பிரசவித்தவள். அவளுக்குத்தான் தெரியும், உன்னை சுமந்ததற்கான அடையாளமும், உன்னை கருத்தரித்ததின் வலியும்.

ஆகவே நமது தாயை நேசியுங்கள். நமது தாயை விட மேலாக தமிழை நேசியுங்கள். நமது மொழி அழியாமல் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நமது பிள்ளைகளை தமிழ் பிள்ளைகளாக வளர்த்திடுங்கள். அவர்களுக்கு இனமான உணர்வை ஊட்டிடுங்கள். இதுதான் நாம், நமது இனத்திற்கு செய்யும் நன்றி கடனாகும்.

http://meenakam.com/2010/03/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9/

நல்ல விடயங்கள் உண்மைகள் கசப்பானதாகவேயிருக்கும்.

யதார்த்தை பிரதி பலிக்கும் கட்டுரை. ஆனால் இதற்கு வழி தேட வேண்டியவர்களும் நாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனிசை செல்லப்பா அவர்கள் பாடிய பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது..."தமிழா நீ பேசுவது தமிழா....."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.