Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேர்தல் கூத்துகள் - அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!

Featured Replies

யாழ் தேர்தல் கூத்துகள் - அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!

'பொங்கு தமிழ்' இணையத்திற்காக – சிவ பாக்கியராஜா

யாழ்ப்பாணத்தில் இப்பொழுது சிரிப்புக்கிடமான சங்கதி என்னவென்றால், உடனேயே நீங்கள் சொல்வீர்கள் தேர்தல் திருவிழாத்தான் என்று. அப்படி நீங்கள் சொன்னால், உங்களுக்கு வெற்றிதான். சரியாகக் களயதார்த்தத்தை மதிப்பிட்டிருக்கிறீங்கள். அல்லது, நம்ம ஆக்களைச் சரியாகக் கணித்திருக்கிறீங்கள்.

அந்தளவுக்கு தேர்தற் கூத்துகள் அமோகம். வன்னியில் புலிகள் பரப்புரைக்காக தெருக்கூத்துகளைப் போட்டதைப்போல இங்கே தேர்தலுக்காக தெருக்கூத்துகள் நடக்கின்றன.

ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் படி தெருவெளி நாடகத்துக்கான பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பேராசிரியர் தன்னுடைய பழைய மாணவர்களை அழைத்து அரசியல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்....

தனியார் கல்வி நிறுவனத்தில் மிகவும் புகழ்பூத்த ஆசிரியர் தன்னுடைய தேர்தல் விளம்பரத்தை மிகப் பிரமாண்டமாக வைத்திருக்கிறார்.

ஓட்டோக்களில் கட் அவுட் கட்டிக் கொண்டு 'அந்த மாதிரிப் பாட்டு' க்களைப் போட்டுக் கொண்டு, அந்த நாளைய எம்.ஜீ.ஆர், சிவாஜி சினிமாப் படங்களுக்கு விளம்பரம் செய்ததைப் போல ஒரு தரப்பின் பரப்புரை.

வீடு வீடாக விலாசங்களைக் கேட்டு நடையாய் நடந்து சிலர் இன்னொரு வகையான பரப்புரை. இப்படிப் போவோரில் பலரை அவர்களுக்குத் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள், 'எப்ப வந்தனீங்கள், மனுசி பிள்ளையள் எல்லாம் எங்கை இருக்கினம்? பிள்ளையள் வளர்ந்திருப்பார்கள்... என்ன? அப்பிடியெண்டால் இப்ப எங்க தங்கி நிற்கிறியள்?' என்று.

இந்தக் கேள்வியை இந்தச் சனங்கள் சத்தியமாக வம்புக்குக் கேட்கவில்லை. தங்களைத் தெரிந்தவர் என்றபடியாலும் நீண்டகாலத்துக்குப் பிறகு ஊருக்கு ஆள் வந்திருக்கிறார் என்றபடியாலும் உண்மையான அன்போடுதான் கேட்கிறார்கள்.

ஆனால், சனங்கள் எப்பிடித்தான் விசுவாசமாகக் கேட்டாலும் வேட்பாளர் என்று வந்து விட்டாலோ என்னவோ தெரியவில்லை, யாரையும் சந்தேகிக்கிற புத்தி வந்து விடுகிறது. எனவே இந்தக் குசல விசாரிப்புகளை நம் வேட்பாளர்கள் ஏதோ நக்கலுக்காகத்தான் கேட்பதாகக் கருதிக் கவலைப்படுகிறார்கள்.

பழைய தனியார் கல்வி நிறுவனமொன்றைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் அந்தக் கல்வி நிறுவனத்தின் அந்தக் காலத்துப் பழைய மாணவர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தொலைபேசிகள் அலறிக் கொண்டேயிருக்கின்றன. சில பழைய நண்பர்கள் ஆட்காட்டிகளாக மாறியிருக்கிறார்கள்.

இணையங்கள் பலவும் இந்தத் தேர்தல் குறித்து எழுதித் தள்ளுகின்றன. அதிலும் புலம் பெயர் மக்களின் இணையத்தளங்களில் பலவும் கற்பனைச் செய்திகள், ஊகநிலைத் தகவல்கள், விருப்புடையோருக்கான கருத்துநிலை வளர்ப்புகளில் ஈடுபடுகின்றன. அந்தந்த இணையங்களுக்குப் பொருத்தமான முறையில் இங்குள்ள பத்திரிகைகளும் பக்கங்களை ஒதுக்குகின்றன.

புதிய ஜனநாயகக் கட்சியும் இந்த முறை முதற்தடவையாகத் தேர்தலில் குதித்துள்ளது. அது தன்னுடைய பரப்புரைக்காக ஒரு வீதி நாடகத்தையும் களமிறக்கியிருக்கிறது. பல சுயேட்சைக் குழுக்களில் ஊரறிந்த பலர் போட்டியிடுகிறார்கள். அவர்களுடைய படங்களும் பத்திரிகைகளின் வருகின்றன.

பாடசாலை அதிபர்கள் கல்வித் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். போதாதென்று பழைய மாணவர்கள், தங்கள் சக அதிபர்கள், ஆசிரியர்கள் என்போரையெல்லாம் இரவு பகலாகச் சந்தித்து ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பல பாடசாலைகளில் ஆசிரியர்களிடையே அந்த அதிபருக்கு ஆதரவளிப்பதா இல்லை இந்த அதிபருக்கு ஆதரவளிப்பதா என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கு.

முதலாளிகள் தொழிலாளிகளைத் திரட்டி தமக்கு ஆதரவு தேடும் பணிகளில் இறக்கியிருக்கிறார்கள். பல தொழிலாளிகள் இப்பொழுதுதான் அதிக வசதி வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். பல தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வே வழங்கப்பட்டிருக்கிறது.

தாம் தேர்தலில் வெற்றியடைந்தால் மேலும் சம்பள உயர்வு வழங்கப்படும். கடுமையாக உழைத்தவர்கள் குடும்பத்துடன் இலங்கை முழுவதையும் சுற்றிப்பார்ப்பதற்கு வாகன வசதியுடன் பொருளாதார உதவியும் செய்து தரப்படும் என்றும் இந்த முதலாளி வேட்பாளர்கள் வாக்குறுதியளித்திருக்கிறார்கள்.

ஊடகநிறுவனங்களைச் சேர்ந்தவர்களில் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பதால் அவர்களைச் சேர்ந்த ஊடகங்களும் ஒளித்து மறைத்து தங்கள் வேட்பாளர்களுக்காக எழுதியும் இயங்கியும் கொண்டிருக்கின்றன.

தமது வெற்றிக்காக உழைக்கும் பணியாளர்களுக்கான சம்பள உயர்வு தொடக்கம் பல சிறப்புச் சலுகைகள் முன்னோட்டமாக இந்த ஊடக நிறுவனங்களால், அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, தமக்கு வெற்றிவாய்ப்பைப் பெற்றுத்தந்தால், இந்தியச் சுற்றுப் பயணத்துக்கு உதவுவதாகவும் இந்தப் பணியாளர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊடகவியலாளர்கள் உதவினால், அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் டென்மார்க்குக்கு ஊடகப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் வாக்களிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை விளம்பரங்கள் அமோகம். ஒரு மூத்த பத்திரிகை ஒரு கட்சியின் துண்டுப் பிரசுரம் மாதிரியே ஆகிவிட்டது. நாட்டில் இப்போது எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஒரேயொரு பிரச்சினை தேர்தல் மட்டுமே. மக்கள் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே அவர்களுக்கான ஓரே விசயம் என்ற மாதிரி விளம்பரங்கள். ஸ்ரிக்கர் ஓட்டப்பட்ட வாகனங்கள் தொடரணியாக ஓடித்திரிகின்றன.

சில வேட்பாளர்களுக்கு சில ஊடகவியலாளர்கள் பரப்புரைச் செயலர்களாகவும் ஆலோசகர்களாகவும் இயங்குகின்றனர். சில ஊடகவியலாளர்கள் கூட்ட ஏற்பாட்டாளர்களாகவும், அணிசேர்ப்போராகவும் எதிர்த்தரப்பிலிருந்து தகவல் பெறுநர், தகவல் வழங்குநர்களாகவும் இருக்கின்றனர். அதாவது ஊடகத்துறைக்கு அப்பால் அதன் மூலம் உருவாகியிருக்கும் அறிமுகத்தை வைத்துக் கொண்டு, இவர்களிற் பலரும் ஒரு வகையான புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சில வேட்பாளர்கள் தாங்கள் இந்த மண்ணின் மனச்சாட்சிகளாக இருந்தோம். கதையாகவும் கவிதையாகவும் எல்லாவற்றையும் சாட்சியாக நின்று பதிவு செய்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

சிலர் தாங்கள் வகித்த பதவிகள், தாங்கள் இதுவரையில் செய்த பணிகள் எல்லாவற்றையும் ஒன்று மிச்சமில்லாமல் பட்டியலிட்டுப் பகிரங்கப்படுத்துகிறார்கள். அதற்காக தங்களுக்கிருக்கும் தகுதிகள் என்னவென்று தாங்களே சொல்கிறார்கள்.

இதைவிட கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தும் விதமாக 'யார் இவர்?, இவரைத் தெரியுமா?| என்ற தலைப்புகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறன. இந்தப் பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் ஊர், கல்வித் தகுதி, படித்த பாடசாலை, பெற்ற பட்டங்கள், எழுதிய கட்டுரைகள், வெளியிட்ட புத்தகங்கள் என்ற மாதிரி எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி சில வேட்பாளர்கள் தமக்கு ஆதரவானப் பரப்புரைகளைச் செய்கிறார்கள். குறிப்பாக, 'அழுவதற்கென்று எவரும் வந்து பூமியில் பிறப்பதில்லை..” என்ற பாடலை ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் பயன்படுத்துகின்றது. இந்தப் பாடல் சுனாமி அவலத்தை வெளிப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

இதைவிட நாங்கள்தான் எப்போதும் இந்த மண்ணிலே இருந்தோம். உங்களுடன் எப்போதுமிருந்து நீங்கள் பட்ட எல்லாக் கஸ்ரங்களையும் நாமும் பட்டோம். அதனால் உங்கள் வாக்குகளை எங்களுக்கே போடுங்கள் என்ற விளம்பரங்கள்.

ஒரே கட்சியைச் சேர்ந்த சிலர் வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்து இப்போது இந்தத் தேர்தலுக்காகவே – நீண்டகாலத்தின் வந்திருக்கிறார்கள். அதே கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்தும் இந்தப் பகுதிகளிலேயே இருந்தனர். இவர்களுக்கிடையில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் போட்டிகள் நடக்கின்றன.

ஆக. தேர்தலில் ஒரே கட்சி சார்பாகப் போட்டியிட்டாலும் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக இந்த மாதிரி 'சேர்ட்டிபிகேற்' கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதைப்போல போர்ச் சூழலில் வாழ்ந்தவர், வாழாதவர் என்ற அடையாளங்களும் அடிக்கடி சொல்லப்படுகின்றன. போர்ச் சூழலுக்குள் வாழாதபோதும் தாம் அதற்குள் வாழ்ந்ததாகவே சொல்வோரும் உள்ளனர்.

அரசாங்கத்தின் நேரடிப்பிரதிநிதி தாமே என்று வேறு சிலர் அறிவித்துள்ளனர். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈடுகளைப் பெற்றுத் தருவோம். காணாமல் போனோரைக் கண்டு பிடித்துத் தருவோம். போர்க்கைதிகளை மீட்டுத் தருவோம். இருபத்தையாயிரம் ரூபாய் தருவோம். ஐம்பதாயிரம் ரூபாய் தருவோம். அதற்காகப் பதிவுகளைச் செய்யுங்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

சனங்களும் வேறு வழியில்லாமல் பதிந்து கொண்டேயிருக்கின்றனர். இந்தப் பதிவுகளுக்காக பங்குனிமாத வெயிலில், நீண்ட கீயூவில் வெந்து கொண்டேயிருக்கின்றனர் வேட்பாளப் பெருமக்கள்.

இதைப்போலவே இந்தத் தடவை இலங்கைக்குள் சுயாட்சித் தீர்வைக் கோருவோம், இல்லையென்றால் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் தரப்பினரும் வேலைவாய்ப்புகளை வாங்கித்தருவோம், வீதிகளை அபிவிருத்தி செய்வோம், வன்னியில் இழந்த பொருட்களை மீட்டுத்தருவோம், அரசியல் கைதிகளை விடுவித்துத் தருவோம், தகவலே இல்லாமலிருக்கும் பலரைப் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்களையும் கண்டு பிடித்துத் தருவோம் என்று ஆயிரமாயிரம் வாக்குறுதிகளை அள்ளி விசுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதைவிட வாகனத் தொடரணிகள். இசை நிகழ்ச்சிகள்... சிறு கருத்தரங்குகள். பாடசாலைகள், அலுவலகங்கள் உட்படப் பல இடங்களிலுமான கூட்டங்கள்... என்று என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அத்தனையையும் செய்கிறார்கள் இந்த வேட்பாளப் பெருமக்கள். இதற்காக பெருமளவு நிதியை கட்சிகள் ஒதுக்கியிருக்கின்றன. கட்சிகளின் ஆதரவாளர்கள் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் கட்சிகள், நண்பர்கள், குழுக்களின் ஆதரவாளர்களும் அனுப்பி உதவுகிறார்கள்.

இந்த வாகனத் தொடரணிகளைக் கண்டால் உண்மையில் மிரண்டு போவீர்கள். அல்லது ஆச்சரியத்தால் உறைந்து போவீர்கள். குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கும் ஸ்ரிக்கர்களால் முழுமையாக ஒட்டப்பட்ட வாகனங்கள் தொடராகப் பயணிக்கும். இது ஊர் ஊராக ஊர்வலம் போகும் ஏற்பாடு. காட்சிக்காக மிகப் பெரிய லொறியில் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்ட புத்தம் புதிய காரைக்கூடக் கொண்டு திரிகிறார்கள். இது ஏதோ வாகன விற்பனைக்கான விளம்பரம் என்று எண்ணிவிடாதீர்கள். தேர்தல் விற்பனைக்கான விளம்பரமே இது.

அச்சகங்கள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. துண்டுப் பிரசுரங்கள், போஸ்ரர்கள் அச்சடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கலண்டர்கள், டயறிகள், கையேடுகள் என்று பல வகையான இலவச வெளியீடுகளைச் செய்து தாராளமாக வழங்குகிறார்கள்.

ஸ்ரூடியோக்களில் வேட்பாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் போட்டோக்களைப் பிரதி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மிகப் பெரிய கட் அவுட்களை பிறிண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஈ.பி.டி.பி.யினர் கட்டவுட் கலாசாரத்தில் இறங்கியுள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவின் படம் நகரத்தில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் சுற்றுச்சூழலைப்பற்றிக் கதைக்கிறார். இன்னொருவர் கல்வியின் மேம்பாடுகளைப் பற்றி பெரிய திட்டங்களை வைத்திருக்கிறேன் என்கிறார். மற்றொருவர், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கதைக்கிறார்.

வேறொருவர் 'அடைந்தால் மகா தேவி, இல்லையென்றால் மரணதேவி' என்ற மாதிரி என்னதான் நடந்தாலும் அதே முடிவுதான் என்கிறார். அது என்ன முடிவு என்றால், அதற்காக நீங்கள் என்ன செய்வீர்கள் என்றால், எல்லாவற்றையும் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்கிறார்.

இன்னும் ஒருவர் கடந்த கால அழிவுகளை ஒரு தடவை மீட்டுப் பாருங்கள் என்கிறார். அந்தக் கடந்த காலத்தில்தான் உங்களின் எதிர்காலமே தங்கியிருக்கிறது என்கிறார்.

சிலர் இந்தியாவைச் சொல்கிறார்கள். சிலர் அமெரிக்காவைச் சொல்கிறார்கள். சிலர் பிராந்தியம் என்கிறார்கள். சிலர் சர்வதேசம் என்கிறார்கள். சிலர் நாங்களும் சிங்களவர்களும் எப்படிப் பிராந்தியத்தினாலும் சர்வதேசத்தினாலும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம் என்று விளக்குகிறார்கள்.

கலர் கலராக கொடிகள் பறக்கின்றன. கலர் கலராகவே வாகனங்கள் போஸ்ரர்களைக் கொண்டு போகின்றன. போஸ்ரர் ஒட்டுவது நூற்றுக்கணக்கானவர்களின் பிரதான தொழிலாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் சினிமாவுக்குப் போஸ்ரர் ஒட்டுவதற்காக யாழ்ப்பாணத்திலும் சிலர் இருந்தனர். ஆனால் இந்த மாதிரித் தொழில் இந்தியாவில்தான் அதிகப் பிரபல்யம்.

இப்போது இது யாழ்ப்பாணம் வவுனியா போன்ற இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. போர் ஓய்ந்த பிற்பாடு இந்தப் பிரதேசங்களில் புதிதாக நிலைப்படுத்தத் தொடங்கிய வங்கிகளும் நிறுவனங்களும் வணிக மையங்களும் இந்தப் போஸ்ரர் ஒட்டும் தொழிலை தங்கள் விளம்பரங்களுக்காக அறிமுகப்படுத்தியிருந்தன. அது இப்பொழுது மிகக் கச்சிதமாக நடக்கிறது. பலருக்கும் பல கட்சிகளுக்கும் தாராளமாக உதவுகிறது.

வேறு சில தரப்புகள் ஏழைகளுக்கு உதவும் திடீர்த் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. அதன்படி சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. காசு வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு உதவியளிக்கப்படுகின்றன. ஆனால், இதெல்லாம் ஏதோ ஒழுங்குபடுத்தப்பட்டு சகலருக்கும் கிடைக்கிறது என்று எண்ணிவிடாதீர்கள்.

இலவசமாக தனியார் பஸ் சேவை ஒன்றை பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்காக ஒரு வேட்பாளர் ஆரம்பித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நான் மீனவ நண்பன், நான் விவசாயிகளின் தோழன், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, நான் இனத்தின் சீறும் சிங்கம், நான் வெளிநாட்டுப் படிப்புக்காரன், நான் இளைஞர்களுக்கான வழிகாட்டி, நான்தான் உங்கள் விடிவெள்ளி, நானே உங்களின் எதிர்காலம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்களை நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள்.

சனங்கள் ஜனாதிபதித் தேர்தலில் இருந்த ஆர்வத்தையும் விட இந்தத் தேர்தலில் அக்கறையில்லாமலே இருக்கிறார்கள். ஆனால், வேட்பாளர்களோ ஆரவாரமாக ஓடித்திரிகிறார்கள். திறக்காத படலைகள் திறக்கப்படுகின்றன. தட்டதாக கதவுகள் தட்டப்படுகின்றன. சில வேட்பாளர்கள் தங்களுடைய மாணவர்களை ஆதரவுப் பரப்புரையில் நேரடியாகவே ஈடுபடுத்துகின்றனர். இதற்காக பெரும் தொகை காசு செலவளிக்கப்படுகின்றது. எப்படித் தெரியுமா? மாணவர்களை - இளைஞர்களை உற்சாகப்படுத்துவதற்காக தண்ணீர்ப் போத்தல்கள் (பியர் போத்தல்கள்) வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.

இந்தத் தேர்தலுக்காக அள்ளிச் செலவழிக்கப்படுகிற பணம் கொஞ்சமல்ல. அப்பப்பா, இந்தப் பணத்தை ஒன்று திரட்டியிருந்தாலே போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வை முழுதாக நிறைவேற்றியிருக்கலாம். பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களில் முக்கால் வாசிப்பேருக்காவது உதவியிருக்கலாம். சில புதிய அபிவிருத்திப் பணிகளைத் தொடங்கியிருக்க முடியும். அல்லது இரண்டாயிரம் மூவாயிரம் கை, கால் இழந்தவர்களுக்கு அவற்றை மீளப் பொருத்தும் காரியங்களுக்கு உதவி, அவர்களுடைய வாழ்க்கைக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கலாம்.

ஆனால், 'எம்பி' ஆசையும் 'எம்பி'க் கனவும் இப்படி இவர்களைப் பிடித்து நாயாய், பேயாய் ஆட்டிக் கொண்டிருக்கிறது. 'கதிரை மோகம் நன்றாகத்தான் எங்கடை ஆக்களுக்குப் பிடிச்சுப் போட்டுது. இனி நாங்கள் உருப்பட்ட மாதிரித்தான்' என்று பொன்னப்பா சொல்கிறார்.

இந்தப் பொன்னப்பா தன்னுடைய ஆயுள்காலத்தில் ஏழு தடவை தேர்தலுக்கு வாக்களித்திருக்கிறார். அப்போதெல்லாம் தான் சேர்த்து வைச்சிருக்கின்ற துண்டுப்பிரசுரங்களையும் போஸ்ரர்களையும் இப்ப எடுத்துப் பார்த்தாராம். என்ன ஆச்சரியம்! உண்மையில் அரசியலில் இவர்களில் சிலர் மாமேதைகள் தான் என்றார் பொன்னப்பா.

எப்படியென்றால், 'அந்தக் காலத்தில சொன்னதை எல்லாம் அப்படியே மறக்காமல் இப்பவும் அதே மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதையெல்லாம் நல்லாய்ப் படிச்சுத்தானிருக்கிறாங்கள். உண்மையில இவங்கள் அரசியலில டிப்ளோமா எல்லாம் செய்திருக்கிறாங்கள்தான். இல்லையெண்டால், இப்பிடிக் கதைக்க ஏலுமே? அதைப்போல இவங்களைப் போல நாங்களும் இவங்களைப் படிச்சு டிப்ளோமா எடுத்திருக்கிறம்' என்றார் பொன்னப்பா.

அப்போது சொன்ன அதே கதைகளையும் காரணங்களையும் சொல்லிக்கொண்டு, அதே மாதிரித்தான் இப்பவும் பலர் வருகிறார்கள் என்றார் அவர் மேலும்.

இந்தத் தேர்தல் பல தொழிலாளர்களுக்கு தற்காலிகமாகவேனும் சம்பள உயர்வைக் கொடுத்திருக்கிறது. பல தொழிலாளர்களுக்கும் (சுவரொட்டி ஒட்டுநர்கள், ஓட்டோ ரிக்சாக்காரர்கள், மினிபஸ்காரர்கள் மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் போன்றோருக்கும் வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் தந்திருக்கிறது.

ஆனால், எங்களின் சமூகம் இப்படி நாறிப்போய், மனிதாபிமானம் கெட்டு, பதவி ஆசை பிடித்து, அதற்காக படித்தவர்கள், சமூகத்தில் மதிக்கப்படுவோராக இருந்தோர் எல்லாம் அலைகிறார்கள். இவர்களா இப்படி என்று சிந்திக்கும் படி பலர் இந்தத் தேர்தலில் குதித்து கூத்தாடுகிறார்கள். இப்படியொரு உள்ளக் கிடக்கை இவ்வளவு காலமும் உள்ளுறையாக இவர்களுக்குள்ளே – எங்கள் சமூகத்துக்குள்ளே இருந்திருக்கிறதே.

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்றொரு பாடல் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அதைப்போல இன்னும் என்னவெல்லாமோ வரவும் கூடும். என்னதான் செய்ய முடியும் நாம்? ஆனால், ஒன்று நீங்கள் எப்படியோ தப்பிவிட்டீர்கள். அதாவது புலம்பெயர்ந்த மக்கள் இந்த விசயத்தில் மாபெரும் புண்ணியம் செய்தவர்களே! இல்லையென்றால் அவர்களும் இந்தச் சேற்றுக்குள் உழன்று, இந்த நாற்றத்தை மணந்து....

நானே வேர் என்கிறார்கள் சிலர்

நானே கிளை என்கிறார்கள் வேறு சிலர்

நானே கனி என்கிறார்கள் இன்னும் சிலர்

நானே கூடு என்கின்றனர் மற்றுஞ் சிலர்

நானே காய் என்கிறார் வேறாரோ சிலர்

நானே மலர் என்கிறார்கள் சிலர்

நானே தளிர் என்கின்றனர் வேறு சிலர்

நானே மரம் என்கின்றனர் மற்றுஞ் சிலர்

நாமோ வெட்ட வெளியில் - வெயிலில் நிற்கிறோம்

யாரும் மரமுமில்லை, யாரும் கனியுமில்லை,

யாரும் பூவுமில்லை, பிஞ்சுமில்லை.

யாரும் கிளையுமில்லை. யாரும் தளிருமில்லை.

நிலமென்ற எங்கள் நெஞ்சின் ஈரமுறிஞ்சி

பூத்தும் காய்த்தும் கனிந்தும் வேர் விட்டும் துளிர்த்தும்

இலையுதிர்த்தும் தன் வாழ்வெழுப்பும் இவர் யாரும் எதுவுமில்லை

எதுவுமே இல்லை!!

பொங்கு தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.