Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்பின் இறுதிப் போர் : மே மாதம் கவிதைகள் : தீபச்செல்வன்

Featured Replies

இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன்

17 May 10 12:15 am (BST)

ஆட்களை இழந்த வெளி

வானம் நேற்றுக் காலைவரை

உறைந்திருந்தது.

இப்பொழுது சிதறி

கொட்டிக்கொண்டிருக்கிறது.

வானம் அழுகிறதென யாரோ

சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை.

சனம்

தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது.

குடி எரிந்து முடிகிறது.

டெலிகப்ரர்கள் அலைந்து

கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது

எரிந்த வாகனங்களை

மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா.

எல்லாம் நசிந்துபோக

அடங்கிக் கிடக்கிறது

ஆட்களை இழந்த வெளி.

கைப்பற்றப்பட்டவர்களாக

குழந்தைகளை தொலைக் காட்சிகள்

நாள் முழுவதும்

தின்று கொண்டிருந்தது.

நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நந்திக்கடலில்

பறவை விழுந்து மிதக்கிறது.

பறவைதான் சனங்களை தின்றது

என்றனர் படைகள்.

நந்திக்கடல்

உனது கழுத்தை நனைத்து

அழைத்துக்கொண்டு போயிருக்கிறது

உடைந்த ஆட்கள் குழிகளில்

நிரப்பட்டனா.

ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது

மாடு காகத்தை சுமந்து

வீழ்ந்து கிடக்கிறது.

அந்தச் சிறு கூடுகள்; நிலத்தை

பிரித்து சிதறின.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை.

பெரு மழை பெய்கிறது

எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க

மிருகம் ஒன்று

சூரியனை தின்று கொண்டிருக்கிறது

யாருமற்ற நிலத்தில்

தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.

18.05.2009

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி

மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்

மூடுண்டு போயிற்று

கடைசிவரை வைத்துக் காத்திருந்த

உடைந்த முகத்தின் எச்சங்கள்.

எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்

அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.

மண்ணில்

உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.

மிகவும் பயங்கரமான வெளியில்

தூக்கி வீசப்பட

கொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது மனம்.

மண்ணடியில்

புதைந்துபோனது விரிந்த வானமும்

நெடுநாள் காணாதிருந்த நட்சத்திரங்களும்.

வாசல் அடைக்கப்பட்ட குழியில்

யாரோ அடைக்கப்பட்டு நாளாகிறது.

முகங்கள் வெளியில் தனித்தலைந்தன.

மூடிப் புதைத்துவிடப்பட்ட கிராமம்

பிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு

தென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு

எல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.

முகமற்ற நகரத்தில்

அழிப்பின் சபதம் எழுதப்பட்டு

சிறையிலடைக்கப்படுகிறது.

அச்சத்தின் சனங்கள் வெளியில்

எடுத்து போடப்பட்டனர்.

உடைந்த சனங்களை மீளவும்

குழிகளில் போட்டு மூடிக்கொண்டு

அழிவு புதைக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டிருக்கிறது.

மணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது

மனிதாபிமான யுத்தம்.

எண்ணி அடுக்கப்பட்ட துண்டங்களாய்

வந்து விழுகின்றன

தாய்மாரை இழந்த குழந்தைகள்.

மழை மூழ்கடித்த இரவில்

கடும் சமரில்

யாரும் அறியாது இருளை பெய்தபடி

நிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.

ஒளியிழந்து கொடியில் அடிபட்டு

வீழ்ந்து போகிறது சூரியன்.

இருள் பெரு வெள்ளமென வந்து

பதுங்குகுழிகளை குடித்து பசியாறின.

மண்ணை கிளறி உழுது

எச்சரிக்கைகளை விதைக்கப்பட்டன.

உலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது

பதுங்குகுழியில் ஒளிந்திருந்த வெளி

கனவின் சுடலையாகிய

தரையிலிருந்து எழுந்து போகிறது.

எங்களுடன் நிலவும் பயங்கரவெளியில்

தோய்ந்தபடி அலைந்து கொண்டிருக்கிறது.

29.05.2009

கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை

தீபச்செல்வன்

நந்திக்கடலில் விழுந்திருந்தன

நிறைய முகங்கள்

சயனட் குப்பிகளில் குழந்தைகள்

பால் குடித்தனர்.

தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி

குழந்தைகளை சுமந்து சென்றனர்.

முள்ளி வாய்க்காலின் கிடங்குகள்

எல்லாம் மூடுண்டு விடுகிறது.

கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர்

பிணங்களும் அதன் குழந்தைகளும்.

கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து

கடலில் அள்ளுண்டு செல்லுகிறது.

முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன

ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி.

விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின்

குளிர் அறைகளாக மாறிவிட

சித்திரவதையின் பாடல்களில்

இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.

பெருநிலம் மயானமாக மாற

அகதிமுகாம்கள் நெருங்குகின்றன.

தாய் கைது செய்யப்பட்டிருந்தாள்.

குழந்தை சரணடைந்திருந்தது.

துப்பாக்கி இருவருக்கும் நடுவில்

நின்று கொண்டிருக்கிறது.

முட்கம்பி ஆடையாக படர்கிறது.

நந்திக்கடலின் பிணங்கள்

ஒதுங்கி முடிகின்றன.

ஈழத்தை இலங்கை விழுங்கி முடிக்கிறது.

17 மே 2009

சொற்கள் சிதைகிற மணல்

தீபச்செல்வன்

நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

நீ பேசு.

சொற்களற்ற காட்டில்

துயர் பொழிந்து கொண்டிருப்பதை

பகிர முடியாதபடியால்

பாதியாய் சிதைந்து உடைகிற சொற்களை

நான் விழுங்குகிறேன்.

என்னை விடுத்து

உன்னை பற்றி சொல்லிக்கொண்டிரு.

காதுகளில் மணல் நிரம்புகிறது.

ஷெல்கள் வந்து விழுவதையும்

விமானங்கள் பறந்தலைவதையும்

துவக்குகளின் சத்தங்கள்

எங்கும் புகுந்து செல்வதையும்

தவிர

எந்த சத்தங்களுமற்றிருக்கிறது

உனது தொலைபேசி.

மணல் அணை எழும்புகிறது.

உயிரோடிருப்பதை தவிர

அங்கு எதுவுமில்லை.

உயிரும் பாதியாய் குறைந்துபோயிருக்க

சிதைகிற சொற்கள் ஒவ்வொன்றாய் வருகின்றன.

குண்டுகளால் சிதறியபடியிருக்கிற

உனது ஒரு இரு சொற்களைத் தவிர

நான் அடைந்தது ஒன்றுமில்லை.

மணல்தரை சூடாகிறது.

பாதியில் அறுந்துபோகிற உரையாடலில்

மீளவும் உன்னை குறித்தான

அச்சம் தொடங்குகிறது?

நீ தொலைபேசியை வைத்ததிலிருந்து

நான் காத்திருக்கிறேன்

பெரும் சமரிற்குப்பிறகான

உனது சொற்களுக்கு.

மணல் கிடங்கு வாய் பிளக்கிறது.

எதுவரை எனது சொற்கள் சிதைய

விழுங்கிக்கொண்டிருப்பேன்

உன்னிடமிருந்து என்னை மறைத்தபடி?

தொலைபேசி கனத்துப் போய்க்கிடக்கிறது.

மணல் எழுந்து வீசுகிறது.

மே 2009

சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்

இனி திரும்பாத சூரியனுக்காய்

நீயும் நானும் சாம்பலில் காத்திருக்கிறோம்.

கதிரைகளால் மேலெறியப்படும் குண்டுகள்

தின்று தீர்த்துக்கொண்டிருக்கிற

வலயத்தில் மூளப்போகிற சண்டையில்

அவர்கள் நம்மிடம்

எதை எடுக்கப் போகின்றனர்.

குண்டுகள் அடக்கிய ஊரில்

துவக்கு மெல்ல புகுந்து

தின்று கொண்டு நிற்கிறது இறப்பர் குடில்களை.

சிறிய ஆயுதங்களால்

போரிட கிடைத்திருக்கிற அனுமதியின்

இடையில் கனகரக ஆயுதங்கள்

அறிவுருத்தியபடி

ஓய்ந்துபோயிருக்கிறதை நாம் அறிவோம்.

அதன் முற்றுகைகளால் நிறைந்திருக்கிறது

சனங்களின் வாழ்நிலம்.

போரிற்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது

பாதுகாப்பு வலயம்.

ஷெல்கள் எந்நேரமும் உலவித்திரிந்து

சனங்கள் அறிந்தபடியிருக்க

இழுத்துக் கொண்டு போகிறது.

ஐ.நாவின் அனுமதி கிடைத்தது

அமைதியாக சனங்களை கொன்றகற்றுவதற்கு.

மெலிந்து போய்விட்ட சனங்கள்

அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.

இழந்து போக முடியாத

தேசம் பற்றிய கனவை நீயும் நானும்

மறக்க நிர்பந்திக்கப்படுகிற நடவடிக்கையில்

நீயும் நானும் எல்லாவற்றையும்

பிரிந்து துரத்தி அலைக்கப்டுகிறோம்.

வாழ்வுக்கான பெருங்கனவை

அதிகாரங்களின் கனவுக்கூட்டங்கள்

கூடிச் சிதைத்தனர்.

நாம் கூடு கலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.

போரிட்டு செத்துக்கொண்டிருந்தது

பெருநிலம்.

சடலங்களாய் அள்ளுண்டு போகிறது

வளர்த்தெடுக்கப்பட்ட கனவு.

முடிவு நெருங்குகிற கடைசிக் களத்தில்

தொடங்கக் காத்திருக்கிறது

எல்லை கடந்து பரவுகிற போர்.

அம்மாவே உன்னைப் போலிருந்த

எனது நகரத்தை நான் பிரிந்தேன்.

தங்கையே உன்னுடன் வளர்த்த

எனது கனவுகளை நான் இழந்தேன்.

அவர்கள் எல்லாவற்றையும் என்னிடமிருந்து

பிரித்தனர்.

தூரத்தே சென்று தொலைகிறது எனது தெரு.

அதிகாரங்களின் முற்றுகையில்

வழிகளற்று துடித்துக்கிடக்கிறது

நமது வாழ்வின் போராட்டம்

கனவுகளுடன் குண்டேறி விழுந்த பேராளிகளின்

மூடுப்படாத விழிகளுடன்.

நான் எல்லாவற்றையும் இழந்தேன்.

எப்படி உன்னை பதுக்கி

காத்துக்கொள்ளுவாய்?

அச்சங்களில் ஒளிந்திருக்கிற தங்கையின்

துடிக்கிற மனதை பொத்தி எதற்குள் வைப்பாய்?

நமக்கெதிராக வந்திருக்கிற போர்

பாதுகாப்பு வலயத்தின்

எல்லை கடந்து பரவுகிறதுபோல்

எல்லா இடமிருந்தும் வருகிறது.

மெலிந்து போய்விட்ட சனங்கள்

அனுமதியுடன் ஒழிக்கப்படுகின்றனர்.

07.04.2009

எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி

தரப்பால்களின் கீழாய் கிடந்து

அடங்குகிறது நமது எல்லா வழிகளும்.

துப்பாக்கியின் நுனியில்

வடிகிற முகத்தில்

எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள்.

எல்லாமே சட்டென தலைகீழாகிறது

நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற

துவக்கு

சாம்பலை எதிராய் கிளம்புகிறது.

சனங்களின் குருதி கடலில் குதித்து

தப்பிச் செல்லுகிறது.

வழியில் தற்கொலை செய்துகொள்ள

துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு.

ஒரு மாபெரும் அரசனின்

ஒற்றை வாளில்

முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது.

பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின்

கண்ணீரைத்தவிர

குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை.

மிகவும் கொடுமையான அனுபவங்களை

வானத்திற்கு மேலால்

கடல் நிரம்புகிறது.

இப்பொழுது கடைசி வாழ்விற்கான

அநாதைக் கெஞ்சல்

எதுவுமற்று வெளித்து கேட்டுக்கொண்டிருக்கிறது.

முகத்தின் முன்னாலொரு ட்ராங்கியின் துவக்கு

குத்திக்கொண்டிருப்பதைபோலவே

எப்பொழுதும் துரத்துகிறது

தோல்வியின் பிறகான கூச்சல்.

இன்றைக்கான தோல்வி பரிசளிக்கப்படுகிற

அலங்கரிக்கப்பட்ட மேடையில்

அழுகையை

தள்ளிக்கொண்டு

ஆக்கிரமிப்பின் சொற்கள

ஒலிவாங்கியினுள் நுழைகிறது.

தேசம் முழுக்க புழுக்கிறது.

வெளியேறுகிற வழி ஆக்கிரமிப்பின்

வலையாக

கடல் நமது எல்லாம் புதைகிற கிடங்காகிறது.

கனவு மற்றும் அதற்காய் சிந்திய குருதி

பறிக்கப்பட்ட

நிலத்தில் அழிக்கப்படுகிறது.

வீழ்ந்த நகரம் தற்கொலை செய்துகொள்ளுகிறது.

கைப்பற்றப்பட்ட அதன் சுவர்கள்

உக்கத்தொடங்குகிற

எலும்புக்கூடாய் பிரிகையடைகிறது.

சனங்களுடன் வெளியேற்றப்படுகின்றன

தற்கொலையுண்ட நகரத்தின் எலும்புக்கூடுகள்.

இனியொன்றும் இல்லை துயரங்களைத்தவிர.

சயனைட்டை அணைக்கிறது வாழ்வு.

வெளியேற வழியற்ற நிலம் அந்தரித்து திரிகிறது.

பதுங்குகுழிகளை அள்ளி ஏற்றுவதற்கு

கடலால் வருகிறது எண்ணெய் கொதிக்கிற கிணறு.

பிள்ளைகளை கொன்று தாய்மார்களை

பிடித்துச் செல்லுகிறது சிங்கம்.

தரப்பாலை சுற்றிக்கொண்டிருக்கிறது பாம்பின் புகை.

25.02.2009

கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி

ஒரு பக்கத்து வானத்தில்

முட்டிக் கிடக்கிற அவலத்தில்

பெருந்துயர் மிகு சொற்கள் உதிக்கின்றன.

எல்லாருக்குமான

பாவங்களைச் சுமக்கிற

சனங்களின் குருதியை கழுவுகிற

துண்டுக் கடலில்

கறுப்பு இரவு நடந்து திரிகிறது.

எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து

கழித்து

ஓ.. என்ற

பெரும் அழுகையை மணல்வெளியில்

புதைத்தபடியிருக்கிறாய்.

வானம் தாறுமாறாய் கழிகிறது.

சப்பாத்துகள் நெருக்கி கடலில்

தள்ளிவிடத்துடிக்கிற ஒரு துண்டு நிலத்தில்

எச்சரிக்கப்பட்டிருக்கிற

மணல் வாழ்வு உருந்துகொண்டிருக்கிறது.

எல்லாவற்றையும் இழந்து

ஒடிவருகிற இரவு

மிருகத்தின் வாயில் சிக்குண்டுவிடுகிறது.

எறிகனை கடித்த

காயத்திலிருந்து கொட்டுகிற கனவுகளை

மிதிக்கிறது

மண்ணை குடிக்கிற டாங்கிகள்.

வழியின் காயங்களை

உப்புக் காற்று கழுவுகிறது.

நெடுநாளின் பெருந்துயர் பொதிந்த

அடைபட்ட காட்டு வழிகளின் சொற்களை

கேட்டுத்துடித்துக்கொண்டிருக்கிறேன்.

உன்னைச் சூழ்ந்திருக்கிற

பற்களின் கோரமான வாய்களில்

எதற்கும் மேலால் ஒலிக்கிற பசிக்கான பாடல்களில்

கரைந்துகொண்டிருக்கிறது

உனக்காய் என்னிடமிருக்கிற பதுங்குகுழி.

பெருமௌனத்தை கடல் குழப்பி

பார்த்துக்கொண்டிருக்கிறது.

துண்டுக் கடற்கரையை

அளந்தபடியிருக்கிறது எச்சரிக்கை.

காற்றுள் புகுந்து

யாரும் அறியாதபடி மிக அமைதியாக

வந்து வெடிக்கிறது முதலாவது எறிகனை.

பின்னிரவை தொடரக் காத்திருக்கிற

மற்றைய எறிகனைகளில் அதிருகிறது கடல்.

அசைவற்றிருக்கிற கரையிலிருந்து

குருதியின் பாரம்

வெறுமையை அரித்துக்கொண்டிருக்கிறது.

உன்னிடமிருக்கிற பெருஞ்சொற்களில்

சிலதை

நான் கேட்டு முடித்தபோது

நாம் சேருவதற்கான கனவு

நீயிருக்கிற மணற் பதுங்குகுழியின்

மூலையில் உருந்துகொண்டிருக்கிற மணலில்

புதைய அதற்குள் கடலின் மௌனம் நுழைகிறது.

அதிர்ந்து கொண்டிருக்கிறது

மணற்குழியின் பெருந்துயர்மிகு சொற்கள்.

18.02.2009

அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்

இலைகொட்டியிருக்கிற அலம்பல்களில்

குந்துகிறது துரத்தப்படுகிற கூரையின் துண்டு.

களப்புவெளி விரிய இடையில்

சிக்குண்டு விடுகிற

பயணங்கள் தடுக்கப்பட்ட ஒற்றைப் பேருந்துக்குள்

ஒளிந்திருக்கும் குழந்தைகளை

தேடுகின்றன எறிகனைகள்.

ஒற்றை புளியமரத்துடன்

மாத்தளன் வெளித்துக்கிடக்கிறது.

விமானங்கள் குவிந்து எறிகிற குண்டுகள்

விழப்போகிற

அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்

நிறைகிற சுடு மணலில்

இப்போதிருக்கிற

குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைகின்றன.

ஒரு சில பனைகளுக்கிடையில்

படருகிறது மணலின் வெம்மை.

உவர்க்களியில் கொதிக்கிற ஈரலிப்பில்

எழுத முடியாத சொற்கள் புதைகின்றன.

உப்புவெளியில் பாதிச்சூரியன்

சுருண்டு விழ அனல் காற்றில் பறந்துபோகிறது

இல்லாத குழந்தைகளது

அகற்றிக்கொண்டு வரப்படுகிற சட்டைகள்.

கிணியாத்தடிகளில்

கட்டப்பட்டிருக்கிற கயிறுகளுக்கிடையில்

தொங்குகிறது

நேரம் குறித்திருக்கிற கொடு நெருப்பின்

கடைசித்துளி.

உடல்வேலன் முள்ளுகளுக்குள் வந்து

மிரட்டுகிற இரவில்

பாதிநகரங்களின் நிழல் விழகிறதென

கைவிடப்பட்ட குழந்தைகள் அழுதனர்.

மண் துடித்து கடல்மேல் எழுகிறது.

முன்பொரு வலயத்தில் சிதறுண்டுவர்களின்

பெயர்களை

யாருமற்ற சிறுவன் சுடு மணலில் எழுத

கள்ளிச்செடிகளின் நிழலில் கிடக்கிறது

மிஞ்சியிருக்கிற ஒற்றைப்பொதி.

நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற

பெருங்குரல்களை தள்ளுண்டுபோகிற

கடல் மட்டும் கேட்டுத் துடிக்கிறது.

ஒற்றைத் தென்னை மரத்துடன்

வட்டுவால் வெளித்துக் கிடக்கிறது.

தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்

மிதக்கிறது இனத்தின் பெருங்கனவு.

ஒரு பெருமிருகம்

முள்ளிவாய்க்காலை குடிக்க

திட்டுமிடுகிற குருட்டிரவில்

அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக

பற்கள் விழ பெரும்பாம்பு பறக்கிறது.

மணல் சுடாகி கொதிக்கிற கரையில்

பொட்டென மிதக்கிறது கடல்.

12.02.2009

தீபச்செல்வன்

www.globaltamilnews.net

  • 3 weeks later...

இனவழிப்பு போரை நன்றாக படம் பிடித்துள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.