Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்ள வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழம்.. இனிச் செய்ய வேண்டியது என்ன?

புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செயல்பாடு குறித்தும் குற்றத் திறனாய்வு உண்டு. போரின் உச்ச கட்டத்தில் போரை நிறுத்தக் கோரி உலகெங்கும் அவர்கள் கிளர்ந்தெழுந்து இரவும் பகலும் உண்ணாமலும் உறங்காமலும் போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகத்தை ஈழத்தின் பக்கம் திரும்பச் செய்தது. போராட்டக் குறிக்கோளில் அவர்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், உலகத்தின் மனச்சான்றை (மனசாட்சியை) அசைக்கவே செய்தனர். ஆனால் இத்தகைய 'அரசியல் போராட்டங்களை' அவர்கள் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கலாம். ஈழப்போராட்டத்தின் வரலாறும் அப்போராட்டத்தின் அரசியல் அறமும், ஈழ மக்களின் அரசியல் விருப்பமும் உலக மக்களிடையே உயிர்ப்போடு எடுத்து விளக்கப் பட்டிருந்தால் இப்போதைய பின்னடைவு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அரசியல் செயற்பாட்டிற்கு மாறாகப் புலிகளின் படைவலிமையைப் பெருக்குவதிலேயே அவர்களின் முழுக்கவனமும் இருந்தது என்பதே அவர்களின் மீதான குற்றாய்வு. பிரபாகரனின் படை ஒன்றே போதும், ஈழ விடுதலையைப் பெற்றுத்தர என்ற அவர்களின் நம்பிக்கை தவறாகிப் போனது என்கிறார்கள் சில அரசியல் ஆய்வாளர்கள். ஏற்பட்ட பின்னடைவிற்கும் பேரழிவிற்குமான காரணங்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராயப்பட வேண்டும். அதில் தவறொன்றும் இல்லை. கடந்த காலத்தவறுகள், குறைகள், போதாமைகள் சரிவர அறியப்பட்டால்தான் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பிழையின்றி மேற்கொள்ள இயலும். திறனாய்வு என்ற பெயரில் சேற்றை வாரி இறைப்போர் எப்போதும் இருப்பர். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இத்தகையவர்கள், ஒன்று, மக்கள் விடுதலையை விரும்பாதவர்களாக, விடுதலைக் கோட்பாட்டில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள் அல்லது, எதிரியின் சோற்றுக்கு இரையானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆக்கவகையான திறனாய்வுகள் வரவேற்கப்பட வேண்டும், ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தவறுகள் திருத்தப்பட்டு முன்னோக்கி நகர வேண்டும்.

மே 17,18,19 தமிழர் நினைவிலிருந்து என்றென்றும் அகற்றப்பட முடியாத நாள்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கதறக் கதறக் கொல்லப்பட்ட நாள்கள். "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்!" எனக் கைநீட்டிக் கதறி ஓலமிட்டு அழுதபொழுதும் உலகமே "மவுனித்து"க் கைகட்டி வேடிக்கை பார்த்த நாள்கள். வீரஞ்செறிந்த விடுதலைப் புலிகளின் போர்க் கருவிகளும் இறுதியாய் "மவுனித்துப்" போன நாள்கள். உலகெங்கும் தமிழர்கள் அத்துயர நாள்களை 'வலிசுமந்த நாள்களாக' நினைவு கூர்கின்றனர். உலக உருண்டையில் கடைசித் தமிழன் உள்ள வரை அந்நாள்கள் அவ்வாறுதான் நினைவுகூரப்படும்.

ஓராண்டு நிறைவுற்ற நிலையிலும் ஈழத்தாய் மண்ணிலே தமிழர்கள் இன்னும் வலி சுமந்தே அல்லல் உறுகின்றார்கள். முள்வேலிக் குள்ளே இலட்சக்கணக்கான தமிழர்கள் முடமாகி மடிகின்றார்கள். முள் வேலியை விட்டு வெளியேற்றப்பட்ட தமிழர்களும் வாழ்க்கைக்கு வழியின்றிப் பிறந்த மண்ணிலேயே ஏதிலியாய் அலைகின்றார்கள். ஈழ மண் எங்கும் சிங்களப் படை அரண்கள் விரிவு படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் 50,000 தமிழர்களுக்கு 1,00,000 சிங்கள வீரர்கள் உள்ளனர். ஒரு தமிழனுக்கு இரு படை வீரர்கள் காவல்! ஈழமே திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டு வருகிறது. ஈழத்தமிழன் இனி முக்கவும் முனகவும் மூச்சு விடவும் கூட சிங்களனிடம் இசைவு பெற வேண்டும்.

முஸ்லீம், தமிழர் என ஈழத் தமிழர்களை சூழ்ச்சியாய்ப் பிரித்த சிங்களம், ஈழத்தையும் வடக்கு, கிழக்கு எனப் பிரித்து விட்டது. திரிகோணமலை உட்படக் கிழக்கு ஈழத்தின் பெரும் பகுதி சிங்களர்மயமாகி விட்டது. இப்பொழுது வடக்கிலும் சிங்களமயமாக்கல் தொடங்கி உள்ளது. படை அரண்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிங்களப் படை வீரர்களுக்கு நிலையான குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அவர்களின் குடும்பங்கள் அங்கே குடியேற்றப்படுகின்றன. வடக்குப் பகுதி எங்கும் சிங்கள வணிகர்கள் கடைவிரித்து வருகிறார்கள். சிங்களர்களை நேரடியாகக் குடியேற்றும் திட்மும் தொடங்கி விட்டது. தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்க, அவர்களின் வீடுகளும் நிலங்களும் சிங்களர்களுக்குப் பிரித்துத் தரப்படுகின்றன.

தமிழர்களின் அறிவுக் கருவூலமாம் யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்திய சிங்களன் இன்று தமிழர் வரலாற்று அடையாளங்களையும் ஒவ்வொன்றாய்ச் சிதைக்கத் தொடங்கி விட்டான். எல்லாளன் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டாயிற்று. மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவும் உழவுந்தால் (டிராக்டர்) உழப்பட்டு மண்ணோடு மண்ணாகிப் போயுள்ளன. அவை இருந்த இடங்களில் சிங்கள வெற்றிச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. அப்படியொரு நினைவுச் சின்னத்தைக் கோத்தபய இராசபட்சே அண்மையில் திறந்து வைத்துத் திமிர் நிறைய உரையாற்றியும் உள்ளான். ஈகி திலீபனின் நினைவுச் சின்னம் நல்லூரில் சிதைக்கப்பட்டதோடு, வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இல்லமும் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாகி உள்ளது. தமிழர் விடுதலைப் போராட்டத்தை நினைவுபடுத்தும் எதனையும் சிங்களன் விட்டு வைக்கப் போவதில்லை. ஏனென்றால் அவற்றை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. வரலாற்றுச் சின்னங்களை அழிக்க வேண்டாம் என யாழ் பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் விடுத்த வேண்டுகோளைச் சிங்கள அரசு கண்டு கொள்ளவே இல்லை.

ஆண்டாண்டுக் காலமாய் ஈழத் தமிழர்கள் சைவர்கள். சிவமுருக பக்தர்கள். ஒரு கட்டத்தில் அங்கு இசுலாம் குடியேறியது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் கிறித்துவமும் வளர்ந்தது. அசோகர் காலத்தில் புத்த மதமும் கூட பரவியது. ஆனால் வரலாற்றில் அது எப்பொழுதும் பவுத்த நாடாக இருந்ததில்லை. இப்பொழுது வரலாற்றைத் திரிக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. பல இடங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. தமிழர் இல்லாக் கிளிநொச்சியில் மாபெரும் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழர் கோயில்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வருங்காலத்தில் அவை இடிக்கப்பட்டு புத்த விகாரைகளாக மாற்றப்பட்டாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

தமிழ்ப் பகுதிகளில் சிங்கள மொழித் திணிப்பும் தொடங்கி உள்ளது. விளம்பரப் பலகைகள் தொடங்கி, தெரு சாலைப் பெயர்கள் சிங்கள மொழியில் பெரிது பெரிதாக எழுதப்படுகின்றன. ஊர், நகரப் பெயர்களும் கூட சிங்கள மொழியிலேயே எழுதப்படுகின்றன. தமிழ் சிறிய அளவில் இரண்டாம் இடத்தையே பெறுகிறது. இப்பெயர்களைச் சிங்கள மொழியில் எழுதுவதோடு நின்று விடாமல் சிங்கள ஒலிப்பு முறைக்கு ஏற்பப் பெயர் மாற்றம் செய்யும் முயற்சியும் நடைபெறுகிறது.

தமிழர் தாயகம் ஈழம் என்ற புவிசார் அடையாளத்தை அடியோடு அழித்து விட அங்கு இன்னொரு முயற்சியும் நடைபெறுகிறது. தமிழர் பகுதிகளில் சிங்களரைப் பெரும்பான்மையாகக் குடியேற்றுவதோடு நின்றுவிடாமல் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்கும் பணியும் தொடங்க இருக்கிறது. இதன்வழி எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வராமல் பார்த்துக் கொள்ளப்படும். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் குரல் கேட்பதற்கே வழியற்றுப் போகும். இலங்கைத் தீவிற்குள் தமிழர்களுக்கான சனநாயக வழி அறவே அடைக்கப்படும். இலங்கைத் தீவு முழுவதும் சிங்களர்க்கே உரியது என்பது உறுதி செய்யப்படும். அதன் பிறகு உலகத் தமிழினத் தலைவர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அறிவுறுத்தியது போல சிங்களரை அனுசரித்தே" தமிழர்கள் வாழ வேண்டி யிருக்கும், வேறுவழி இருக்காது.

உலக விடுதலைப் போராட்டங்களில் ஈடிணையற்ற போராட்டமாகக் கருதப்படும் ஈழ மக்கள் போராட்டம் இப்படியொரு கொடிய சோக முடிவை அடைந்ததற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள், கருணா, பிள்ளையான் போன்றோரின் இரண்டகம் போர்நிறுத்தக் காலத்தில் சிங்களன் படைவலிமையைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டது, உலகளவில் எந்த ஒரு நாட்டின் ஆதரவும் கிடைக்காமல் போனது, ஈழத் தனியரசை விரும்பாத வல்லாதிக்க ஆற்றல்கள், குறிப்பாகத் தன் தென் மூலையில் கருவிப் போராட்டத்தின் மூலமாக ஒரு தமிழ்த் தேசிய அரசு அமைவதை விரும்பாத இந்தியா� எனப் பல்வேறு காரணங்கள் அவரவர் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செயல்பாடு குறித்தும் குற்றத் திறனாய்வு உண்டு. போரின் உச்ச கட்டத்தில் போரை நிறுத்தக் கோரி உலகெங்கும் அவர்கள் கிளர்ந்தெழுந்து இரவும் பகலும் உண்ணாமலும் உறங்காமலும் போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகத்தை ஈழத்தின் பக்கம் திரும்பச் செய்தது. போராட்டக் குறிக்கோளில் அவர்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், உலகத்தின் மனச்சான்றை (மனசாட்சியை) அசைக்கவே செய்தனர். ஆனால் இத்தகைய 'அரசியல் போராட்டங்களை' அவர்கள் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கலாம். ஈழப்போராட்டத்தின் வரலாறும் அப்போராட்டத்தின் அரசியல் அறமும், ஈழ மக்களின் அரசியல் விருப்பமும் உலக மக்களிடையே உயிர்ப்போடு எடுத்து விளக்கப் பட்டிருந்தால் இப்போதைய பின்னடைவு தவிர்க்கப்பட்டிருக்கலாம். அரசியல் செயற்பாட்டிற்கு மாறாகப் புலிகளின் படைவலிமையைப் பெருக்குவதிலேயே அவர்களின் முழுக்கவனமும் இருந்தது என்பதே அவர்களின் மீதான குற்றாய்வு. பிரபாகரனின் படை ஒன்றே போதும், ஈழ விடுதலையைப் பெற்றுத்தர என்ற அவர்களின் நம்பிக்கை தவறாகிப் போனது என்கிறார்கள் சில அரசியல் ஆய்வாளர்கள்.

ஏற்பட்ட பின்னடைவிற்கும் பேரழிவிற்குமான காரணங்கள் விருப்பு வெறுப்பின்றி ஆராயப்பட வேண்டும்.

அதில் தவறொன்றும் இல்லை. கடந்த காலத்தவறுகள், குறைகள், போதாமைகள் சரிவர அறியப்பட்டால்தான் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பிழையின்றி மேற்கொள்ள இயலும். திறனாய்வு என்ற பெயரில் சேற்றை வாரி இறைப்போர் எப்போதும் இருப்பர். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இத்தகையவர்கள், ஒன்று, மக்கள் விடுதலையை விரும்பாதவர்களாக, விடுதலைக் கோட்பாட்டில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள் அல்லது, எதிரியின் சோற்றுக்கு இரையானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆக்கவகையான திறனாய்வுகள் வரவேற்கப்பட வேண்டும், ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தவறுகள் திருத்தப்பட்டு முன்னோக்கி நகர வேண்டும்.

இந்த வகையில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தாயகத் தமிழர்களாகிய நம் பங்கு பற்றிய கறாரான கணிப்பும் திறனாய்வும் கட்டாயத் தேவையாகிறது. ஈழப்போரில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் முகாமைக் கண்ணிகளாக உள்ளனர் என்பது இன்னும் முழுமையாக உணரப்படாமலே உள்ளது. ஈழத் தமிழர்களின் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தோல்விகளுக்கும் பின்னடைவுகளுக்கும் எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் செயல்பாடு போதாமல் போனது முதன்மைக் காரணங்களில் முதன்மையானது ஆகும். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளில் தெருக்களில் இறங்கி வாழ்வா சாவா எனப் போராடிய போது, தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் அப்போராட்டங்களுக்கு இணையான போராட்டங்களை நடத்தவில்லை. நாமும் அமைதி பூண்டிருக்கவில்லை போராடத்தான் செய்தோம்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்திற்குப் பின் தமிழ்நாடு முழுதும் பேரெழுச்சி உருவாகத்தான் செய்தது. கொட்டும் மழையில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் கட்சி, சாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் தெருவிற்குக் கொண்டுவந்தது. மாணவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், திருநங்கையர் எனப் பல்வேறு மக்களும் போராடத்தான் செய்தனர். சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேறின.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் விஞ்சிய தற்கொடை ஈகங்களில் முத்துக்குமாரையும் சேர்த்து மொத்தம் 18 பேர் தீ வேள்வியில் வெந்து மாண்டனர். ஆனால் இவை அனைத்தும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் படிப்படியாக நீர்த்துப் போயின.

அடையாளப் போராட்டங்களாகவே மிஞ்சி நின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மக்களின் கவனம் முழுமையாய்த் திசைமாறிப் போயிற்று. எழுச்சியோடு தொடங்கிய ஈழ ஆதரவுப் போராட்டம் மெலிந்து போனதற்குக் கருணாநிதியைப் பலரும் காரணம் ஆக்குகின்றனர். மூல முதற்காரணம் அவரே என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லை.

அவர் போட்ட நாடகங்கள் ஒன்றா இரண்டா?

அண்ணா நினைவகத்தில் அவர் அரங்கேற்றிய நாடகத்திற்கு ஈடு இணை ஏதாவது உண்டா?

வழக்கறிஞர் போராட்டத்தைத் திசை திருப்ப அவர் கையாண்ட சதி கொடிதினும் கொடிது. வரலாற்றில் (கோயபல்சு எனத் தவறாகக் குறிப்பிடப்படும்) ஜீபல்சையும் மிஞ்சி விட்டார் கருணாநிதி. மெய்போலவே பொய்யுரைத்தலுக்கு இனி கருணாநிதியே காட்டு, ஜீபல்சு அல்லர்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாய்ச் செத்து வீழ்ந்து கொண்டிருந்த பொழுது கருணாநிதி தில்லியில் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் சுழன்று சுழன்று பதவிப் பேரம் பேசிக் கொண்டிருந்தார்.

கொடிய இவ்விரண்டகத்தைத் தமிழினம் என்றுமே மறக்காது, மன்னிக்காது. கருணாநிதியை மட்டும் அன்று, அவரின் ஒவ்வொரு செயலுக்கும் "வக்காலத்து வாங்கி வியாக்கியானம்" செய்யும் தொண்டரடிப் பொடியாழ்வார்களையும் தமிழுலகம் மறக்கவும் செய்யாது, மன்னிக்கவும் செய்யாது. வரலாற்றில் வீடணன், எட்டப்பன் எனத் தொடங்கி கருணா, பிள்ளையான் என நீளும் பட்டியலில் இவர்களது பெயரும் கட்டாயம் இடம்பெறும்.

ஆனால் கருணாநிதியை மட்டுமே குறை கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை. உலகத் தமிழினமே ஒன்றுசேர்ந்து இடித்துரைத்தாலும் அவர் திருந்த மாட்டார். குடும்ப நலன் தவிர வேறு நலன் அறியார். அவர் உயிர் வாழ்வதும் அதற்காக மட்டுமே. தேசியத் தலைவரின் தாயார் எனத் தமிழர் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும், எண்பது அகவையைக் கடந்து நினை வாற்றலையும் பேச்சாற்றலையும் இழந்த பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பி அவர் போட்ட நாடகம் அவரைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்று. எனவே அவரைப் பற்றிப் பேசுவதை விட்டு விட்டு, தமிழ்த் தேசிய ஆற்றல்களும் ஈழ ஆதரவு ஆற்றல்களும் தங்கள் செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி மேற்செல்ல வேண்டும்.

இந்தியாவின் கீழ் வாழ்கின்ற தமிழர்களாகிய நாம் முதலில் ஒன்றை ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழ விடுதலைக்கு அன்றும் இன்றும் என்றும் தடையாயிருப்பது இந்தியா என்பதே அது. ஈழ விடுதலை தெற்காசியாவில் தன் வல்லாதிக்கத்திற்கு அறைகூவலாக அமையும் என்பதை அது நன்றாகவே உணர்ந்துள்ளது. பகை நாடுகளான பாகிஸ்த்தான், சீனாவை விட விடுதலை பெற்ற ஈழமே தனக்கு இடையூறாய் அமையும் என்பதையும் அறிந்தே உள்ளது. அமெரிக்காவிற்குக் கியூபா அமைந்திருப்பது போலத் தன் தென் மூலையில் ஈழம் அமைந்து விடக் கூடாது என்பதில் அது கவனமாய் இருக்கிறது. ஈழம் நட்பு நாடாய் அமையும் என நம்மில் சிலர் எவ்வளவுதான் வலிந்து வலிந்து எழுதினாலும், அதை நம்ப அது அணியமாய் இல்லை. எனவேதான் வாய்ப்புக் கிடைத்த பொழுது எதிரிகளான பாகிஸ்த்தான், சீனாவோடு கைகோத்து, ஈழத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

சீனா பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவை ஈழப் பக்கம் திருப்பலாம் எனச் சிலர் நினைப்பதும் தவறானது. என்றும் நிறைவேறாதது. புதிய உலகமயமாக்கல் சூழலில் வல்லாதிக் கங்கள் ஒன்றோடு ஒன்று இணங்கிச் செல்லவே விரும்பும். தம் ஆதிக்கங்களுக்கு எதிரான சூழல் உருவாவதை ஒன்றுசேர்ந்து ஒழிக்கும். அவற்றிற்று இடையேயான முரண்கள் பகை முரண்களாக மாற வாய்ப்பில்லை. கடந்த கால அமெரிக்க�எதிர் உருசியா பனிப்போர் நிலைமை உருவாகும் வாய்ப்பு இல்லை.

இந்தியாவின் அகச்சூழலும் தனி ஈழத்தை ஆதரிக்க இசைவளிக்காது. காஷ்மீர் தேசிய இனப் போராட்டம், வடகிழக்குத் தேசிய இனங்களின் போராட்டங்கள் என இந்தியாவிற்குள்ளேயே தேசிய இனப் போராட்டங்கள் வளர்ந்து வருகையில், பக்கத்தில் ஒரு தேசிய இன விடுதலையை அது ஆதரிக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழ விடுதலை தமிழ்நாட்டின் தேசிய உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் என்பதையும் அது அறிந்திருக்கவே செய்கிறது.

இந்தியா ஈழத்தை ஆதரிக்காததற்கு இன்னொரு வரலாற்றுக் காரணமும் இருக்கிறது. அது தமிழர்களுக்கு எதிரான பார்ப்பனப் பகை. வரலாற்றில் காலங்காலமாய்த் தொடர்ந்து வரும் இனப் பகை. சிந்து சமவெளி நாகரிக அழிவிலிருந்து தொடங்கி வடக்கே ஆரியவர்த்தம் உருவாக்கத்தின் ஊடாக இன்றைய சங்கராச் சாரியார் காலம் வரை தொடர்ந்து தமிழினத்தைத் தாக்கிவரும் கோரப் பகை. தமிழர்கள் அதிகாரத்தைப் பெறுவதையும் நாடாள்வதையும் செரித்துக் கொள்ளாதப் பாசிசப் பகை. சிவசங்கர மேனன்களும் நாராயணன்களும் இராம்களும் ஓரணியில் அணிவகுப்பதின் பின்புலம் இதுதான். வடநாட்டு ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் தோல்வியைக் கொண்டாடி மகிழ்ந்ததற்கான பின்னணி இதுதான். தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் காக்கை குருவிகளைப் போலச் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும் இந்திய அதிகார வகுப்பின் சதைகள் ஆடாததற்கான உளவியல் காரணமும் இதுவே. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே! ஈழ மக்களுக்காய் நம் சதை ஆடும். அவாள் சதை இந்தியச் சதை, ஆடவே ஆடாது.

இராஜீவ்காந்தி படுகொலை, சோனியாவின் பழிவாங்கும் போக்கு என்பன மட்டுமே இந்தியாவின் உள், வெளிநாட்டுக் கொள்கைகளைத் தீர்மானிப்பவை அல்ல. அவ்வாறு புரிந்து கொள்வது இந்திய வல்லாதிக்க அரசியலை மேலோட்டமாகப் புரிந்து கொள்வதாகும். அவ்வாறு அரசியலைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. அவை ஏற்கெனவே உள்ள போக்கிற்குத் தூண்டுகோல்களாக அமைந்திருக்கலாம், அவ்வளவே!

அதுபோலவே இந்திராகாந்திக்கு முன், பின் என்று பார்ப்பதிலும் பொருளில்லை. 1948 தொடங்கித் தமிழர்கள் போராட்டத்தை என்றுமே இந்தியா ஆதரித்தது இல்லை. இலட்சக் கணக்கானத் தேயிலைத் தோட்டத் தமிழர்களின் வாக்குரிமை பறிபோன போது நேரு அரசு அமைதியே காத்தது. சிறிமாவோ பண்டாரா நாயக்காவுடன் இலால்பகதூர் சாசுத்திரி செய்து கொண்ட ஒப்பந்தம் மலையக மக்களின் வாழ்வுரிமையைப் பறித்தது. ஈழ மக்களை ஆதரித்ததாகச் சொல்லப்படும் இந்திரா காந்திதான் இலங்கைக்குக் கச்சத்தீவை வாரிக் கொடுத்தார். அவர் மகன் இராஜீவ்காந்தி அமைதிப் படை என்ற பெயரில் அட்டூழியப் படையை அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தார். அவர் மனைவி சோனியா காந்தி முள்ளிவாய்க்காலில் எண்ணற்ற தமிழர்களுக்குக் கொள்ளி வைத்தார். ஈழத் தமிழர்களை அடுத்துக் கெடுப்பதிலும் எதிர்த்துக் கெடுப்பதிலும் அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாய்த் திட்டமிட்டுச் செயல்படுகிறது இந்தியா.

தானே சிங்களத்தின் போரை நடத்தியதோடு நில்லாமல் போருக்குப் பிந்தைய நிலையிலும் சிங்களத்தைக் காப்பாற்றுவதில் முன்னின்று செயல்படுகிறது இந்தியா. ஐ.நா. அவை உள்ளிட்ட உலக அரங்கில் சிங்களத்திற்கு எதிரான அசைவுகள் தோன்றும் முன்னரே இந்தியா அங்குத் தோன்றி அவற்றைத் தடுத்து நிறுத்துகிறது. சிறீலங்காவிற்கானத் துணி ஏற்றுமதிச் சலுகைகளை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொள்ளும் போது விரைந்து சென்று கைகொடுக்கிறது பல்வேறு பிரிவுகளில் கோடி கோடியாய் வாரி வழங்கி அதன் வீழ்ந்த பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கிறது. ஜி-15 நாடுகள் கூட்டமைப்பிற்கு இராசபட்சேவைத் தலைவராக்குகிறது. கொடிய போர்க் குற்றவாளிக்குக் கண்ணியத்தை வழங்குகிறது. இந்தியத் திரைப்பட விழாவை வலிந்து கொழும்புவிற்கு மாற்றி உலக மக்களின் கண்களில் மண்ணைத் தூவவும் முயற்சி செய்கிறது.

உலக நாடுகள் எதுவும் ஈழத்திற்கு ஆதரவாய்ச் சென்றுவிடக் கூடாது என்பதில் இலங்கையைக் காட்டிலும் இந்தியாவே கண்ணும் கருத்துமாய்ச் செயல்படுகிறது. எனவே இந்த இந்தியத் தடையை அகற்றாத வரை ஈழப் போராட்டம் மேலும் மேலும் பின்னடைவுகளைச் சந்திக்கும் வாய்ப்பே மிகுதி. புலம்பெயர் ஈழத் தமிழர்களாலோ, ஈழத் தாயகத் தமிழர்களாலோ 'இந்தியத் தடை'யை அகற்ற முடியாது. இந்தியாவை நட்பு நாடாக்கும் அவர்கள் முயற்சி தொடர்ந்து தோல்வியையே தழுவும்.

தமிழ்நாட்டுத் தமிழர்களால்தான் இந்தியத் தடையை அகற்ற முடியும். அதற்கான வரலாற்றுத் தேவையும் நமக்கு இருக்கிறது. கடமையும் இருக்கிறது. அதை நாம் உணரும் பொழுது அத்தடை உடையும். அதை விடுத்துத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதாலோ முதலமைச்சரை மாற்று வதாலோ எதுவும் நடந்து விடாது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டகர் கருணாநிதி இருப்பதால்தான் ஈழத்தமிழர்க்கு அழிவு என்றும், உண்மையான இன உணர்வாளர் அப்பதவியில் அமர்ந்தால் ஈழம் கிடைத்துவிடும் என்றும் நினைப்பதைக் காட்டிலும் சிறுபிள்ளைத் தனமானது எதுவும் இல்லை.

இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சரிடம் இல்லை. ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் ஒரு முதலமைச்சரை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும், அவரைச் சிறையில் அடைக்கும் அதிகாரமும் இந்திய அரசிற்கு உண்டு. காசுமீர அரிமா சேக் அப்துல்லாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவோம். நேரு அரசின் காசுமீரக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதாலேயே அவர் வாழ்வின் ஒரு பெரும் பகுதியை ஊட்டியில் வீட்டுச் சிறைக்குள் கழிக்க நேர்ந்தது. பின்னர் அந்த அரிமா எலிமா ஆகிப் போனாலும் இன்று அவர் மகனும் பேரப் பிள்ளையும் தில்லியின் எடுபிடி ஆட்களாக மாறிப் போனதும் வரலாறு. தில்லி நாடாளுமன்றத்திற்கு நாற்பது தூய தமிழ்த் தேசிய உணர்வாளர்களை அனுப்பினாலும் எஞ்சியுள்ள 420 உறுப்பினர்களின் எதிர்க் கூச்சலில் அவர்களது குரல் காணாமல் போய் விடும்.

இந்திய அரசியல் அதிகாரக் கட்டமைப்பைப் பற்றி அறிவார்ந்த புரிதலின்றிச் செயல்படுவது எள்ளளவும் பயன்தராது. இந்திய அதிகாரத்தை உடைக்காமல் இந்தியாவின் கீழ் அதிகாரம் தேடுவது, இந்தியாவிற்குள் மாற்றம் காண்பது என்பனவெல்லாம் கானல் நீர்த் தேடலே. இத்தகைய புரிதல் இன்மையால்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தோற்றுப் போனது. அதன் போராட்டங்களைப் போர்நிறுத்தக் குறிக்கோள் நோக்கி நகர்த்த முடியவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சிதறிப் போனார்கள். இப்புரிதல் இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்குள் தேர்தல் நடைபெறாமல் இக்கட்சிகள் தடுத்திருக்கலாம். அதன்வழி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஈழத் தமிழ் மக்களும் காப்பற்றப்பட்டிருக்கலாம்.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த பொழுது, போர் அறநெறிமுறைகள் எதுவுமின்றித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நேரத்தில் இங்கு நடந்த தேர்தல் திருவிழா கோர முரண். இதில இதுவரை தேர்தலில் பங்கேற்காதத் தமிழ்த் தேசிய ஆற்றல்களும் இனப் பகை காங்கிரசையும், இன இரண்டகத் திமுகவையும் தோற்கடிப்பது என்ற குறிக்கோளுடன் பரப்புரை மேற்கொண்டன. இதில் இன எதிரிகளான இளங்கோவனும், தங்கபாலுவும், மணிசங்கர் அய்யரும் தோற்றுப் போனதும் சிதம்பரம் வெற்றிபெற ஊழல் செய்ய வேண்டியிருந்ததும் சின்னஞ் சிறிய அளவிலான ஆறுதல் வெற்றிகள். ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கருணாநிதி மட்டும் குற்றவாளியாகவில்லை. நாமும் நம்மை அறியாமல் குற்றவாளிகள் ஆகிப்போனோம்.

கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொண்டு புதுப் பாய்ச்சல் காணவேண்டும். புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அப்பாய்ச்சலுக்கு அணியாகி விட்டனர்.

நாடு கடந்த தமிழீழ அரசு, மிகப் பெரிய சீரிய முயற்சி. அதற்கான தேர்தலும் தமிழர் வாழும் பரப்பெங்கும் நடந்து முடிந்து அதன் முதல் அமர்வும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அதன் தலைவராக விசுவநாதன் உருத்திரகுமாரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் முடிவல்ல, விழ விழ எழுவோம் என்பதைச் செயல்வழி மெய்ப்பித்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய ஆற்றல்களும், ஈழத் தமிழ் ஆதரவாளர்களும் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும். அதற்குத் தமிழ் நாட்டுத் தமிழர்களை ஒன்றுதிரட்ட வேண்டும், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிக்காக அன்று, போராடுவதற்காக!

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நாம் போராடியாக வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, அமராவதி, பவானி, பாலாறு ஆகியவற்றிற்காகக் களம் கண்டாக வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க, நீதிமன்ற மொழியாக்க, கல்வி மொழியாக்கப் போராடியாக வேண்டும். தொழிலையும், வேளாண்மையையும் படை யெடுத்துவரும் வல்லாதிக்கங்களிலிருந்து காப்பாற்றியாக வேண்டும் சாதியொடுக்கு முறைக்கு எதிராக சமூகநீதிப் போர் காண வேண்டும். போராடாமல் இனி வாழ்வில்லை என்பதை உணர்ந்தாக வேண்டும். உணர்த்தியாக வேண்டும். மெய்ந்நடப்பில் இவை இயல்பாகும். (சாத்தியப்படும்) பொழுது இந்தியத் தடை உடையும் ஈழமும் விடுதலை பெறும். தமிழ்த் தேசமும் மலரும். உலக நாடுகளின் அணிவகுப்பில் இரு தமிழ்த் தேசக் கொடிகள் பறக்கும்.

- தமிழகத்திலிருந்து கலைவேலு

http://www.infotamil.ch/ta/view.php?2b24OSs4a42Rd4Ae4b42EQ6ce2be0AO2cd3KcoC2e0dC0MqEce03cYJJ0cd2qgmAd0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.