Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரும் அவர்தம் பொருளாதார பலமும்

Featured Replies

ஐப்பசி 01, 2010 - பணவீக்கம் (inflation)

பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு குறைவாக ஒருவரது தனிப்பட்ட வருமானம் உயரும் பட்சத்தில் அவரது பாடு திண்டாட்டமாகி விடும். குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள், வங்கி வைப்புத் தொகை வட்டியில் வாழ்பவர்கள் மேலும் பொருளாதார வேகத்திற்கு ஏற்றபடி தம்முடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கைப் பயணம் (ஒப்பீட்டு முறையில் பார்க்கும் போது) தடுமாறுவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது.

இரண்டிலக்க (double digit) பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஒவ்வோர் ஆண்டும் நமது பணத்தின் மதிப்பை இருபது முதல் இருப்பதைந்து சதவீதம் வரை குறைக்கின்றது என்பது ஆச்சரியமூட்டும் ஆனால் மறுக்கவியலாத உண்மை ஆகும். அரசியல் லாபங்களுக்காக பொறுப்பில் உள்ளவர்கள் பணவீக்கத்தை கட்டுப் படுத்த விரும்புவது இல்லை. எப்போதும் விரும்பப் போவதுமில்லை. எனவே வருங்காலத்திற்கான தமது சேமிப்பை திறம்பட நிர்ணயிப்பது மற்றும் நிர்வகிப்பது ஒவ்வொருவது முக்கிய தனிப்பட்ட கடமை ஆகும்.

ஆகவே நண்பர்களே! நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது

நம்முடைய சொந்த கடமையாகும்.

இளமையில் சேமியுங்கள், விரைவாக சேமிக்க ஆரம்பியுங்கள், திட்டமிட்டு சேமியுங்கள்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

ஐப்பசி 03, 2010 - 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்'

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் ( Microsoft ) நிறுவனம் தன் போட்டியாளர்களை நசுக்கி உலகின் நம்பர் ஒன் கணினி மென்பொருள் நிறுவனம் என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள செய்த முறைகேடுகளும் சட்ட மீறல்களும் ஏராளம்.

இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கிடையில் 1999இல் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு, உலக அளவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவற்காக அவர் 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' எனும் சேவை நிறுவனத்தைத் துவக்கினார்.

http://www.gatesfoundation.org/Pages/home.aspx

இந்த அமைப்பின் முக்கிய இலக்குகள்:

1. அமெடிக்காவில் என்பது வீதமானோரை கல்லூரிக்கு படிக்க அனுப்புவது

2. உலகில் போலியோவை இல்லாது ஒழிப்பது

மேலும் கிடத்தட்ட நாற்பது உலக கோடீஸ்வரர்கள் தம் சொத்தில் ஐம்பது வீதத்தை இந்த மதி அமைப்புக்களுக்கு தர சம்மதித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

ஐப்பசி 05, 2010 - 'கடன் அட்டை '

'எது எப்படி இருந்தாலும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும். கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது'.

இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது. ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம்:

I- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

II- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

III- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.

கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார் வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.

உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

இது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.

மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.

தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.

எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.

மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.

முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?

மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.

நண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.

எப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.

மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.

வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் சிவில் தளத்தில், உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.

அதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து தூக்கில் போட போவதில்லை.

இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்று" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.

நீங்கள் கடன் அட்டையை மற்றும் அதன் பாதிப்பை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தாலோ அல்லது மேல் சொன்னபடி கடன் அட்டையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளே சென்று விட்டு வெளியே வர வழி தெரியாமல் உதவியை எதிர்பார்த்தோ நட்பு முறை இலவச ஆலோசனைக்கு, இங்கே பின்னூட்டமாக கேட்கலாம்.

கடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே!

  • தொடங்கியவர்

ஐப்பசி 06, 2010 - ' தங்கம் ஒரு முதலீடு '

இன்று ஐப்பசி திகதி 06, 2010 தங்கம் மீண்டும் ஒரு புதிய அதிகூடிய விலையை உலக சந்தையில் சந்தித்துள்ளது (http://www.goldprice.org/spot-gold.html ).

-- பெரும்பாலான தங்க வயல்கள் ஒரு டன் தாதுவிற்கு 1 முதல் 5 கிராம் வரை தங்கம் கொண்டிருக்கின்றன. அதாவது பத்து இலட்சம் துகள்களில் 1 முதல் 5 துகள்கள் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் மண்ணில் உள்ள தங்கம்.

-- கடல் நீரில்கூடத் தங்கம் இருக்கிறது. ஆயிரம் கோடியில் ஒன்றிரண்டு பங்கு தங்கம் அதில் செறிந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கடல் நீரில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் முயற்சி Fritz Haber என்ற விஞ்ஞானியின் முயற்சியால் ஜெர்மனியில் நடந்தது. பொருளாதாரச் சாத்தியமின்மை காரணமாக அது கைவிடப்பட்டது.

-- தங்கம் பாதரசத்தைத் (Mercury) தவிர வேறு எதிலும் கரையாது. அதனோடு கலக்கப்படும் வெள்ளி முதலிய உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரையும். எனவே அந்த அமிலத்தில் தங்கத்தை கரைத்துப் பார்த்தால் சுத்தத் தங்கம் போக மற்றதெல்லாம் கரைந்து போகும். கரையாமல் அப்படியே இருந்தால் அது சுத்தத் தங்கம். இதனை 'அமிலப் பரிசோதனை' (acid tect) என்கிறார்கள்.

இந்த உலகத்திலேயே உபயோகம் மிகுந்த உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் இரும்பு அதிமுக்கியமான இடத்தைப் பெறும். உபயோகம் இல்லாத உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. இருந்தாலும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கியும், மதிப்பும் வாய்க்கிறது. துருப்பிடிக்காத, ஜொலிப்பான, அடர்த்தியான உலோகமாக அனைவரையும் ஈர்க்கிறது. பன்னெடுங்காலமாக செல்வத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. .

தங்கம் என்பது இரும்பைப் போல பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உலோகம். அதன் மதிப்பு அல்லது விலை என்பது அதை வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவுக்குச் சமமாக இருக்க வேண்டும். வெங்காயத்தை விளைவித்து சந்தைக்கும் கொண்டு வருவதற்கு ஆகும் செலவு வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது போல, இரும்பை வெட்டி எடுக்க ஆகும் செலவு அதன் விலையை நிர்ணயிப்பது போல, தங்கத்தை வெட்டியெடுக்க ஆகும் செலவுதான் அதன் விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ஒரு லாரி வெங்காயத்தையோ, பத்து டன் (tonne) இரும்புக் கம்பியையோ நாம் பத்து வருடத்திற்கு சேமித்து வைப்பதில்லை. ஆனால் தங்கத்தை சேர்த்து வைக்கிறோம். சிறிதளவே தேவைப்படுகிற இடம், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்லும் வசதி, காலத்தால் அழியாத தன்மை மற்றும் இயல்பாகவே தங்கத்தின் மீது பெண்களுக்கு உள்ள மோகம் ஆகியன தங்கத்தின் தேவையை நிர்ணயித்து அதன் விலையையும் நிர்ணயிக்கின்றன.

ஆக தங்கத்தின் தேவை என்பது அதன் பயன்பாடு சார்ந்தது மட்டுமல்ல. நகை வாங்குவதற்குச் சொல்லப்படும் முதன்மையான காரணம் 'பணவீக்கத்தைச் சமாளிப்பது'. உண்மையே! எப்படியானாலும் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும், அதாவது விலைவாசி ஏறிக்கொண்டே போகும். பணத்தை அப்படியே வைத்திருப்பதற்குப் பதிலாக தங்கத்தில் போடலாம். விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான இன்சூரன்ஸ் என்றுகூட இதைக் கருதலாம்.

ஆனாலும் தங்கத்தை சேமிப்பாகக் கருத வேண்டுமே தவிர முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை ஏற்க வேண்டும். பணத்தை ஒரு நிறுவனத்தில்/தொழிலில் இட்டால் அதன் மூலம் உற்பத்தி கூடுகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவுகிறது. அப்படிப் போடும் பணத்திற்கு இலாபமும் கிடைக்கிறது. 'முதலீடு' என்பதன் உண்மையான பொருள் இதுதான். அப்படிச் செய்யாமல் நாட்டில் இருக்கிறவர்கள் எல்லோரும் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அல்லது ஒருவர் மாற்றி ஒருவர் தங்கத்தை விற்றுக்கொண்டும் வாங்கிகொண்டும் இருந்தால் உற்பத்தி எப்படிப் பெருகும், வேலைகள் எப்படிப் பெருகும்? சேமிப்பதைவிட முதலீடு செய்வதே நாட்டிற்கு மட்டுமல்லாமல் தனி நபருக்கும் நல்லது.

பொருளாதாரம் தேக்க நிலை அடையும் போதும் (recession), எதிர்காலம் குறித்தான கவலைகள் தோன்றும் போதும் மக்களுக்கு எழுகிற பிரதானமான கேள்வி, நிலையில்லாத எதிர்காலத்தை நம்பியிருப்பதா அல்லது நிலையான நிகழ்காலத்தைப் பாதுகாப்பதா என்பதே. முதலீடு வாயிலாகக் கிடைக்கப்போகும் இலாபம் என்பது எதிர்காலம் சம்மந்தப்பட்டது. அதைவிட நிகழ்காலத்தில் இருப்பதைச் சேமிப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிறுவனத்தின் எதிர்கால இலாபத்தைக் குறிக்கும்

தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.

நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தங்கத்தில் செய்த சேமிப்பு ஏறத்தாழ அதே அளவில் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இது சீராக இருந்ததில்லை. அதாவது பணவீக்கம் எந்த அளவுக்கு கூடுகிறதோ அதே அளவு தங்கத்தின் விலை கூடியதில்லை. பணவீக்கம் குறையும் போது அதே அளவுக்குக் குறைந்ததும் இல்லை. தங்கத்தின் விலை கூடுவதற்கும் குறைவதற்கும் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமான காரணியாக இருந்து வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரைக் கருதுவோம். பல காலமாக டாலர் கரன்சியின் புன்புலமாகத் தங்கம் செயல்பட்டது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர் என்று அமெரிக்கா நிர்ணயித்திருந்தது. அந்த நாட்டு கஜானாவில் அவ்வளவு தங்கம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 தொடங்கி சுமார் 1970 களின் ஆரம்பம் வரை இதே அளவில் தங்கத்தின் விலை நிலவியது. அதன் பிறகு டாலரைத் தங்கமாக மாற்ற முடியாத சூழ்நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதும் தங்கத்தின் விலை டாலர் கணக்கில் உயரத் தொடங்கியது. 1980 ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 850 டாலர். 1970 களின் பொருளாதாரச் சூழல் அப்படி. இன்று, ஐப்பசி 06, 2010, அதன் விலை ஒரு அவுன்ஸ் 1345 டாலர்.

பிறகு எதிர்காலம் ஒளிமயமாக அனைவருக்கும் தோன்றியது. பங்குகள் உயர்ந்தன. தங்கம் சரிந்தது. படிப்படியாகக் கீழே இறங்கி வந்து 1999 இல் ஒரு அவுன்ஸ் வெறும் 252 டாலருக்கு இறங்கியது. 'டாட் காம் குமிழ்' என்று சொல்லப்படுகிற கணினி நிறுவனங்களின் பங்குகள் முன்னெடுத்துச் சென்ற மாபெரும் பங்கு சந்தை விலையேற்றத்தின் மும்முரமான நாட்கள் அவை. குமிழ் உடைந்து பங்குச் சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்ட காலம் மீண்டும் வந்த போது தங்கம் மறுபடியும் ஏறியது. தங்கம் தனது 1980 உச்சக் கட்ட விலையை இந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி மீண்டும் எட்டிப் பிடித்தது. அதன் பிறகு மார்ச் மாதம் ஆயிரம் டாலரையும் எட்டியது. என்னதான் ஆயிரம் டாலர் என்றாலும், 1980 விலையைக் காட்டிலும் குறைவே என்கிறார்கள். பணவீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் 1980 இல் 850 என்பது இப்போது 2,400 என்று சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால்கூட 1980 விலையின் பாதியில்தான் இப்போது இருக்கிறோம். ஆனால் தற்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கல் அப்போதைய சூழலைக் காட்டிலும் மோசமானதா என்றும், அப்படி இருந்தால் தங்கத்தின் விலை மேலும் ஏறக் கூடுமே என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம்.

தங்கத்தின் முதன்மையான சந்தை இலண்டன் மாநகரம். அங்கே நாளுக்கு இரண்டு முறை விலை நிர்ணயிக்கிறார்கள். தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது ஆபரணம் செய்வதற்கான தேவையைக் காட்டிலும், தேசங்களின் மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வாங்கி விற்கும் செயலே ஆகும். மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிச் சேகரிப்பது அந்தந்த தேசங்களின் பணம் மதிப்பு நிலையாக இருக்க வேண்டும் என்பதற்கே. மேலும் 1991 சமயத்தில் வெறும் இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலவாணியை இந்தியா வைத்திருந்த போது வங்கிக் கையிருப்பில் இருந்த தங்கத்தை இரண்டு விமானத்தில் ஏற்றி பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்கு (Bank of England) அனுப்பி அடமானம் வைத்த நிகழ்ச்சி 'தங்கம் எதற்காக?' என்ற கேள்விக்கு விடை தருகிறது.

2004 கணக்குப்படி மனித குல வரலாற்றில் அது வரை தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம் என்று கணிக்கப்படுகிற சுமார் 1,60,000 டன்னில் கிட்டத்தட்ட 19 சதவீதம் பல்வேறு மத்திய வங்கிகள் வசம் இருந்தன. அதில் முதலிடம் அமெரிக்காவிற்கு. இந்தியாவிற்கு 14 ஆவது இடம். ஆபரணத்திற்காக அதிகம் பயன்படுத்துவது இந்தியாவே! வருடாந்த தங்க சந்தையின் மதிப்பு ரூ 50,000 கோடிக்கு மேல்.

முடிவிரை : மதிப்பு குறைந்து கொண்டே செல்லக் கூடிய முதலீடுகளில் இருந்து தற்காப்பதற்காகவும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காகவும் நமது செல்வத்தின் ஒரு பகுதியைத் தங்கத்தில் இட்டுச் சேமிப்பது சரியான அணுகுமுறைதான். அதே நேரம் ஆபரண வடிவத்தில் வாங்காமல் காசு வடிவத்தில் வாங்குவது புத்திசாலித்தனமான காரியம். ( 'பிஸ்கெட்' அல்லது 'காசு' வடிவத்தில் வாங்கிச் சேமிக்கலாம். அப்படிச் செய்யும் போது ஆபரணத் தங்கமாக இல்லாமல் சுத்தமான 24 காரட் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளேகூட பொற்காசுகளை விற்பனை செய்கின்றன.)

Edited by akootha

  • தொடங்கியவர்

ஐப்பசி 07, 2010 - ' பொருளாதார செய்திகள் '

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை, இனத்தின் செல்வாக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

புலம் பெயர் தமிழர்கள் பத்திரிகைகளும் வானொலிகளும் இந்த துறையில் கவனம் செலுத்தி மக்களை ஊக்குவிப்பது இல்லை எனவே சொல்லலாம்.

உலகில் தமிழர் தளைத்து நிமிர்ந்து வாழ பொருளாதார அறிவும் பொருளாதார வழிப்படுத்தலும் இன்றி அமையாதது. மேலும் இந்த பொருளாதார பலமும் படிப்பும் எமது சந்ததிக்கு நாம் இட்டு செல்லும் முதலீடுகளில் முக்கியமானது.

நவீன பொருளாதார உலகம், உலக மயமாக்குதல், பொருளாதார தேக்கம், பணவீக்கம் போன்ற பல காரணிகள் நாம் விரும்பாமல் விட்டாலும் அவை எம்மை சுற்றி சுற்றி வருபவை. எனவே நாம் அவற்றை கற்று தான் சூட்சுமங்களை சுதாகரித்து நீச்சல் போடுவதே சரியான பாதை.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஐப்பசி 15, 2010 - ' இணையத்தளம் - வர்த்தகங்களை இணைக்கும் '

தமிழர் வாழும் நாடுகள் எல்லாம் இருந்து வர்த்தகங்களை, கலாச்சாரங்களை இணைக்கும் முறையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாபார மட்டைகளை ஒருங்கிணைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தளத்தில் உள்ள வீடியோவை கேட்டுப்பாருங்கள் இவர்களின் முயற்சியை அறிய :

http://www.tamilbizcard.com/uk/

ஆனந்தராஜ் நவஜீவனின் யாழ்ப்பாணத்தில் எடுத்த பேட்டி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கார்த்திகை 02, 2010 ராக்ஃபெல்லர் (http://en.wikipedia.org/wiki/John_D._Rockefeller)

தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் ஒன்று சேர்த்து, கச்சா எண்ணெய் சுத்திகரித்து விற்கும் வியாபாரத்தில் இறங்கினார் ராக்ஃபெல்லர். நீராவியில் ஓடிய ரயில் மட்டுமே அப்போது பெரிய போக்குவரத்துச் சக்தியாக விளங்கியது என்பதால், பெட்ரோலின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை.

ஏற்கனவே இந்தத் தொழில் இருந்தவர்களைவிட பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்; அதே நேரம், அதிக பணம் சம்பாதிப்பதிலும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார் ராக்ஃபெல்லர். உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடங்களுக்கு அனுப்புவதற்கான ரயில் கட்டணம் மிக அதிகமாக இருந்தது. ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, தினமும் குறிப்பிட்ட பேரல்கள் அனுப்புவதாகவம், அதற்காக கட்டணச் சலுகை தரவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறையவே விலையை குறைத்து விற்பனை செய்தார். வியாபாரம் சூடுபிடித்ததும் போட்டியில் இருந்த சில கம்பெனிகளை அதிகவிலை கொடுத்து வாங்கினார். விற்பனைக்கு மறுத்தவர்களைக் கூட்டாளியாக்கிக் கொண்டார்.

கார்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தொட்ட 1872ம் வருடம் அமெரிக்க முழுவதும் ஆயில் வியபாரம் செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது ராக்ஃபெல்லரின் '‘ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனிதான்”. போட்டி நிறுவனம் இல்லை என்பதால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆகிவிட்டார்.

“கோடிக் கோடியாகப் பணம் குவித்து விட்டீர்கள் இப்போது சந்தோஷம்தானா?” என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “சந்தோசம் என்பது பணத்தில் இல்லை; வெற்றியில்தான் இருக்கிறது!” என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.