Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.எம்.எஸ். மக்களின் பாடகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டி.எம்.எஸ். மக்களின் பாடகன்

ஷாஜி

"நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்" என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. "அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சொன்னார். "நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்’’ என்று நான் சொன்னேன். தமிழ்நாட்டில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும் தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தைத் தாண்டுவதேயில்லை!

2005063000360301.jpg

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் அவரது பாடலொன்றை பள்ளி நிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாகத் தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக் கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

‘அண்ணாச்சி’ என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்துதான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. ‘அண்ணாச்சி’ என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர்க் கடையில் தினக்கூலித் தொழிலாளர்.

கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ பாட்டை அவர் அருமையாகப் பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

tm-soundararajan-17-02-10.jpg

டீக்கடைக்கு கிராமத்துக் கிணறுகளில் இருந்து தண்ணீர் சேந்தி சுமந்து கொண்டுவருவது அவரது வேலை. சமையலெண்ணெய் வைத்திருக்கும் பெரிய சதுர தகர டின்களை மூங்கிலின் இருபக்கமும் கட்டி நீர் நிறைத்துத் தோளில் காவடியாகத் தூக்கி வருவார். அவருடனேயே நடந்து சென்று அவரிடம் ‘சத்தியமே லட்சியமாய்’ பாடும்படி சொல்லி வற்புறுத்துவேன். சிலசமயம் அவர் பாடவும் செய்வார். நான் அந்த ‘சத்தியமே...’ என்ற தீவிரமான எடுப்பையும் ‘செல்லடா’ என்ற மென்மையான முடிப்பையும் ஒரு போதும் மறக்க முடியாது. ஏனோ அந்த டீக்கடைவேலையிலிருந்து ஒருநாள் அவர் நீக்கப்பட்டபோது, கண்ணீர் வடித்தபடி அண்ணாச்சி எங்களூரைவிட்டுச் சென்ற காட்சியையும் என்னால் மறக்கமுடியாது.

‘பட்டிக்காடா பட்டணமா’, ‘அடி என்னடி ராக்கம்மா’, ‘பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த’ போன்ற டி.எம்.எஸ் பாடல்களெல்லாம் எங்கள் குளிர்ந்த மலைக்கிராமங்களில் மிகப்பிரபலமாக இருந்தன. ஆரம்பத்தில் டி.எம். எஸ் பாட்டை வெறுத்த நான் மெல்ல மெல்ல அவரது உணர்ச்சிகரமான பாடும் முறைக்காக அவரை விரும்ப ஆரம்பித்தேன். ஆனால் ஹைதராபாத்தில் நான் வாழ்ந்த காலகட்டத்தில்தான், நான் டி.எம்.எஸ் பாடல்களை முழுமையாகக் கேட்டேன்.

http://kathaldesam.com/Mp3/TMS Part 1/Adi Ennadi Rakkamma - Pattikada Pattanama.mp3

ஃபெரோஸ் குடா என்னும் அரைச் சேரிப்பகுதியில்தான் நான் அப்போது வாழ்ந்துவந்தேன். இந்தியா முழுக்க இருந்து வேலைதேடிவந்த பிரம்மசாரிகள் அந்தத் தெருக்களில் அலைந்தனர். அவர்கள் இடுங்கலான ஒற்றை அறைக் குடியிருப்புகளில் சேர்ந்து வாழ்ந்தார்கள். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, ஒண்டிக்கொண்டு தூங்கினார்கள். ஒருவரோடொருவர் கலந்து, ஒருவர் கனவை ஒருவர் பகிர்ந்து, வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப் பதைப்பற்றிப் பேசியே நாட்களைக் கழித்தனர். தமிழ்நாட்டு வெயிலைவிட ஹைதராபாத்தின் கோடைவெயில் கடுமையானது. கூரைமேலும் மொட்டை மாடியிலும் போய் படுத்துத் தூங்குவார்கள். நானும் அவர்களில் ஒருவன். எங்கள் தெருவின் மூலையில் ஒருவர் இருந்தார். பிரம்மசாரிதான். ஆனால் தனியாக ஒரு ஒற்றையறையில் குடியிருந்தார். வெளியே வருவதோ மற்றவர்களிடம் பழகுவதோ சுத்தமாகக் கிடையாது. குமரி மாவட்டம் குழித்துறை அவரது ஊர், பெயர் டென்னிஸ். வெயில் நாற்பத்தேழு டிகிரியைத் தொட்டாலும் அவரை வெளியே பார்க்கமுடியாது!

காலையிலேயே எழுந்துவிடுவார். உடனே தன் டேப் ரிகார்டரில் டி.எம்.எஸ் பாடிய ஒரு பக்திப்பாடலைப் போடுவார். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’, ‘நீ ஒரு தாயானால்’, ‘கற்பனை என்றாலும்’ இம்மாதிரி ஏதாவது. அதன்பின் வேலைக்குப் போகும்வரை இடைவேளையே இல்லாமல் டி.எம்.எஸ் பாடிய திரைப் பாடல்களைக் போட்டுக் கேட்டுக் கோண்டே இருப்பார். மாலையில் வந்ததுமே அவரது டேப் ரிக்கார்டர் டி.எம்.எஸ் பாடல்களை மறுபடியும் முழங்க ஆரம்பித்துவிடும். அவர் வேறு எந்தப் பாடகரின் பாடலையாவது போட்டுக்கேட்டதாக எனக்கு நினைவில்லை. ஞாயிறுகளில் காலை முதல் இரவு வரை நிற்காமல் டி.எம்.எஸ் பாட்டுகள் அவரது அறையிலிருந்து ஒலிபரப்பாகும். நான் அந்த ஒலி பரப்பின் தினசரி நேயர்!

http://download.tamilwire.com/songs/Devotional/Devotional_Songs_T.m.s/-karpanai_Endraalum.mp3

டென்னிஸ் எப்போதுமே அணுக முடியாத ஒரு பாவனையைக் கொண்டிருப்பார் என்றாலும் நான் அவரிடம் நட்பு கொள்ள ஆசைப்பட்டேன். முக்கியமாக அவரது ஒலிநாடாக்களைப் பார்ப்பதும் நல்ல ஒலியைக் கொடுத்த அந்த ஒலிநாடாக்கருவியைப் பார்ப்பதும்தான் என் நோக்கம். ஆனால் என் அறை நண்பர்கள் என்னை எச்சரித்தார்கள். டென்னிஸுக்கு ஏதோ குணப்படுத்தமுடியாத தோல்நோய் இருக்கு, அது தொற்று நோயும்கூட என்றார்கள். அவரது முகமும் உடலும் தோல் ஆங்காங்கே தடித்து பொருக் குலர்ந்து சிவந்து காணப்படும். அவர் பிறரிடமிருந்து அன்னியப்பட்டது அதனால்தான்.

ஒருநாள் காலை நான் அவரது வீட்டுக்கதவைத் தட்டினேன். பனியன் மட்டும் போட்டு வந்து கதவைத் திறந்தார். அவரது சருமம் எல்லாம் அடையடையாக உரிந்து கொண்டிருந்தது. அது சோரியாஸிஸ் (Psoriasis) என்ற தோல் ஒவ்வாமை நோய்தான். நான் தமிழில் அவரிடம், பேசலாமா என்றேன். அவர் என்னை உள்ளேயே விடவில்லை. வேலையிருக்கிறது என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அவரை நட்பாக்கிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைவதற்கு எனக்கு பலநாட்கள் தேவைப்பட்டன. ஆனால் அவருடன் நட்பு கொண்டபின் ஒன்று தெரிந்தது, டென்னிஸ் மிக அருமையான ஒரு நண்பர். நான் அவரிடம் சோரியாஸிஸ் என்பது ஒன்றும் ஒரு மாபெரும் நோய் அல்ல என்று விளக்கினேன். அது தொற்றுவதுமில்லை என்றேன். அவர் என்னுடன் நெருங்கினார்.

அவரது ஒலிநாடாப்பெட்டி பெரியது. ஹாலந்தில் செய்யப்பட்ட அசல் பிலிப்ஸ் ஒலிநாடாக்கருவி அது. அவரது டி.எம்.எஸ் சேகரிப்பும் மிகப் பிரமாண்டமானது. எந்தப் பாட்டைச் சொன்னாலும் அது அவரிடம் இருக்கும். நான் டென்னிஸ் அறையில் பல வெப்பமான இரவுகளை டி.எம்.எஸ் பாட்டைக் கேட்டபடியும் அவற்றைப்பற்றி பேசியபடியும் செல வழித்திருக்கிறேன். எப்போது போனாலும் சுவையான தேநீர் போட்டுத் தருவார், சிலசமயம் சாப்பாடும் சமைப்பார். அவர் எவருக்குமே தன் இசை சேகரிப்புகளைக் காட்டுவதோ கொடுப்பதோ இல்லை. ஆனால் எனக்கு நிறைய ஒலிநாடாக்களை பதிவு செய்வதற்காக அளித்தார். இன்றும்கூட அவர் தந்த ஒலிநாடாக்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட பல டி.எம்.எஸ் பாடல்கள் என்னிடம் இருக்கின்றன.

ஓரிரு வருடங்கள் கழித்து ஒரு காதல்தோல்வியினால் ஏற்பட்ட மன அழுத்தம் என்னை ஹைதரா பாத்தை விட்டுவிட்டு மும்பைக்குச் செல்லவைத்தது. கையில் வெறும் நூறு ரூபாயுடன் ஒரு டாங்கர் லாரிக்காரர் கொடுத்த இலவசப்பயணம் வழியாக நான் மும்பைக்கு வந்திறங்கினேன். இரண்டுநாட்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று அலைந்தேன். சில உறவினர்களையும் பழைய நண்பர்களையும் தேடிப்போனேன். யாருமே உதவவில்லை.

கையில் மீதமிருந்த முப்பது ரூபாயில் இருபது ரூபாய்க்கு ஒரு புட்டி பீர் வாங்கிக் குடித்தேன். அந்த அளவுக்கு மன அழுத்தம் இருந்தது. அங்கிருந்து எங்களூரைச் சேர்ந்த ஒருவர் இருந்த தலோஜா என்னும் பகுதிக்கு பஸ் பிடித்துச் சென்றேன். அவரது அறை மூடியிருந்தது. பக்கத்துவீட்டுக்காரர் அவர் ஏதோ வெல்டிங் வேலைக்காக நகரத்துக்குச் சென்றிருப்பதாகவும் என்றைக்கு வருவாரென்றே தெரியாது என்றும் சொன்னார்.

இரவு எட்டு மணிக்கு நான் மும்பை பூனா ஹைதராபாத் நெடுஞ்சாலையில் உள்ள கலாம்பொலி என்ற ஊரை அடைந்தேன். லாரிகளுக்காக கை காட்டினேன். யாருமே நிறுத்தவில்லை. இலக்கில்லாமல் நெடும் சாலையில் நடக்க ஆரம்பித்தேன். பசியும் களைப்புமாக என் மனம் அப்படியே மரத்துப்போய் இருந்தது. அருகே வேகமாகச் செல்லும் வண்டிகளின் காற்று விம் விம் என்று என்னை அறைந்து சென்றது. அரைமணிநேர நடைக்குப்பின் நான் லாரிகள் நிறுத்தும் ஒரு வளைவை கண்டேன். அதை நெருங்கியபோது நான் டி.எம்.எஸ் பாடிய ‘என்னைத் தெரியுமா’ என்ற பாடலைக் கேட்டேன். என் மனம் விழித்துக்கொண்டது. வெள்ளைத் தகரத்தில் சிவப்பு எழுத்துகளில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தெலுங்கிலும் அதோடு தமிழிலும் ‘மணி கா தாபா’ என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு சாலையோர சாப்பாட்டுக்கடை. அதை நோக்கித் தள்ளாடி நடந்து சென்றேன்.

அங்கே வாடிக்கையாளர்களான டிரைவர்களும் உதவியாளர்களும் பொரித்த சிக்கனுடன் பலவகையான குருமாக்களையும் தந்தூரி ரொட்டியையும் சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தார்கள். நான் அங்கே இருந்த காசாளரின் பக்கம் சென்று பரிதாபகரமாக நின்றேன். அவர் "என்ன?" என்று கடுமையாக இந்தியில் கேட்டார். நான் என் நிலைமையை தமிழில் அவரிடம் சொன்னேன். அவர் என் பேச்சைப் புரிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அவருக்குத் தமிழ் தெரியாது.

அவர் சமையலறைக்குக் குரல் கொடுத்து "வா, இங்கே ஒரு தமிழ் ஆசாமி வந்து என்னமோ சொல்றான்’’ என்றார். கரிய நிறமுள்ள கட்டுமஸ்தான ஒருவர் சட்டையேதும் இல்லாமல் வெளியே வந்தார். அவர்தான் மணி, அந்தக்கடையின் உரிமையாளர். அவர்தான் அங்கே சரக்குமாஸ்டர்கூட என்று தோன்றியது. நான் டி.எம்.எஸ் பாட்டைக்கேட்டு அங்கே வந்ததாகச் சொன்னேன். என் கதையை அவர் கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டு விட்டு சமையலறைக்குப் போய்விட்டார். ‘பல்லாக்கு வாங்கப் போனேன்’, ‘கண்போன போக்கில் கால் போகலாமா’, ‘யாரை நம்பி நான் பொறந்தேன்’, ‘சோதனைமேல் சோதனை’ . . . டி.எம்.எஸ் பாட்டுகளாக வந்து கொண்டேயிருந்தன. அவை என் பசியை மறக்கச்செய்தன. அங்கே கயிற்றுக்கட்டில்களில் அமர்ந்து சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டு, தாகூரின் பாடலில் வருவதைப்போல தொலைதூரக் கரைக்கு என்னைக் கூட்டிச்செல்லும் கப்பலை எதிர் பார்த்து அமர்ந்திருந்தேன்.

கொஞ்சம் நேரம் கிடைத்ததும் மணி வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார். திருச்சிக்காரரான அவர் ஒரு டி.எம்.எஸ் அடிமை. டி.எம்.எஸ் பற்றி என்னிடம் அவர் ஆவேசமாகப் பேசினார். அவரது ஒலிநாடாப்பெட்டி மிகப்பழைய பாணியிலானது. ஆனால் டி.எம்.எஸ் பாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்கள் அங்கே குவிந்து கிடந்தன. "டி.எம்.எஸ் பாட்டு தான் தம்பி என்னோட வாழ்க்கையே. முட்டாப்பசங்க அதையெல்லாம் எம்ஜியார் பாட்டு சிவாஜி பாட்டுன்னு சொல்றாங்க. எல்லாமே டி.எம்.எஸ் பாட்டுதான். நான் சாகிறவரைக்கும் என் வீட்டிலே டி.எம்.எஸ் பாட்டுதான் கேட்டுட்டே இருக்கும். . ." மணி எனக்கு தந்தூரி ரொட்டியும் சிக்கன் குழம்பும் தந்தார். அங்கேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்.

பெரிய மரத்தின் அடியில் நான் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டேன். ‘உலகம் பிறந்தது எனக்காக’, ‘அறிவுக்கு வேலை கொடு’.. நான் மிகக் கவனமாக அந்தப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சட்டென்று நான் அப்பாடல்கள் அளிக்கும் நம்பிக்கையைப்பற்றி எண்ணிக் கொண்டேன். அவை ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. அவற்றில் உள்ள தன்னம்பிக்கை, தெளிவு, மிதப்பான உச்சரிப்பு, ஓங்கி உச்சத்துக்குச் செல்லும் கம்பீரம்... ஆகவே தான் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்த லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு டி.எம்.எஸ்ஸின் பாட்டு அத்தனை பிடித்திருக்கிறது என்று தோன்றியது. என் மனமும் சோர்வை இழந்து ஆறுதல் கொண்டது.

தூங்கியதே தெரியவில்லை. மணி ஒரு மஸ்தா டிரைவரை ஏற்பாடு செய்தபின் என்னை எழுப்பினார். நான் அவரது வண்டியில் ஹைதராபாத் போகலாம், அங்கே போன பின்னர் பணம் கொடுத்தால் போதும். நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாமல் நின்றேன். டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருந்தார் ‘நீயெங்கே என் நினைவுகள் அங்கே...’ எதனால் என்று தெரியவில்லை, என் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

பலவருடங்கள் கழித்து நான் சென்னையில் டி.எம்.எஸ்-ஐ ஒரு பேட்டி எடுப்பதற்காகச் சந்தித்தபோது அண்ணாச்சி, டென்னிஸ், மணி மூவரைப்பற்றியும் சொன்னேன். அண்ணாச்சியின் அதே களங்கமில்லாத சிரிப்பை டி.எம்.எஸ் முகத்திலும் கண்டேன். "நான் என் வாழ்க்கைய தொடங்கினப்ப உங்க அண்ணாச்சிய மாதிரித்தான் இருந்தேன் தம்பி" என்றார் டி.எம்.எஸ். "பாட்டு படிக்கிறதுக்குப் பணம்கேட்டு பல பேர் முன்னாடி பிச்சைக்காரனா நின்னிருக்கேன். அப்புறம் பாடறதுக்கு சான்ஸ் கேட்டு இன்னொரு வகையான பிச்சைக்காரனா அலைஞ்சேன். அந்தக் காலத்தில் ஒரு படத்திலே பிச்சைக்காரனா நடிக்கவும் செஞ்சிருக்கேன் தெரியுமா? பாத்திருக்க மாட்டீங்க, 1951லே வந்த ‘தேவகி’ங்கிற சினிமாவிலே. அதிலே நான் ‘தீராத துயராலே பாழாகியே’ங்கிற பாட்டைப் பாடி பிச்சை எடுக்கிறேன். ஆனா பாட்டுக்கு என் பேரைப் போடலை. பெயர் காட்டறப்ப டி.எம். சௌந்தரராஜன் - பிச்சைக்காரன்னு வந்தது...’’ அவரது புன்னகை பெரிதாகி சிரிப்பாக மாறியது. "என் வாழ்க்கையிலே நான் சம்பாரிச்சதெல்லாம் லட்சக்கணக்கான ரசிகர்களைத்தான். அதுதான் கடவுள் எனக்குப்போட்ட மிகப்பெரிய பிச்சை’’.

‘தொகுளுவ மீனாட்சி சௌந்தரராஜன்’ 24-03-1923 இல் பிறந்தவர். நான் பிறக்கும்போதே டி.எம்.எஸ்ஸுக்கு 45 வயது தாண்டிவிட்டிருந்தது. ஆனால் நான் இன்றும் எங்கே போனாலும் டி.எம்.எஸ் பாட்டுக்களைக் கேட்க முடிகிறது. கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டுகளைப் பாடியிருக்கிற டி.எம்.எஸ்தான் தமிழ் பின்னணிப் பாடகர்களிலேயே மிக மிகப் பிரபலமானவர். அடிநாதம் முதல் உச்ச ஸ்தாயி வரை சாதாரணமாக உலவும் அபாரமான குரல் கொண்டவர். கர்நாடக சங்கீதப் பாடகராக ஆகவேண்டும் என்ற கனவு கொண்டிருந்த டி.எம்.எஸ்ஸின் அக்கால லட்சியப் பாடகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப் போலவே பாட ஆரம்பித்த டி.எம்.எஸ், பின்னர் தன்னுடைய பிரபலமான பாணிக்கு மாறிக்கொண்டார்.

1950இல் திரையில் பாட ஆரம்பித்த டி.எம்.எஸ் விரைவிலேயே ஒரு நட்சத்திரப் பாடகராக ஆனார். அவர் காலகட்டத்தில் இருந்த எல்லா பிரபல நடிகர்களுக்கும் அவர்தான் பின்னணி பாடினார். பாடலின் உணர்ச்சிகளுக்கும் அந்த நடிகரின் நடிப்புப்பாணிகளுக்கும் ஏற்ப நாடகத்தனமாகப் பாடி உணர்ச்சிகளை உருவாக்குவதில் அவருக்குத் தனித்திறமை இருந்தது. அவர் குரல் எப்படி ஒரு திரைநட்சத்திரத்தை மக்கள் தலைவராக ஆக்கி முதல்வராகவும் ஆக்கப்பயன்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். சாதாரண மனிதனின் வாக்குகளைப் பெறுவதற்கான கருவியாக அவரது குரல் இன்றும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது!

மதுரையில் ஒரு மிக வறுமையான குடும்பத்தில் டி.எம்.எஸ் பிறந்தார். அவரது அப்பா மீனாட்சி அய்யங்கார் அவ்வப்போது கிடைக்கும் புரோகித வேலையின் வருமானத்தில் இரண்டுவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் குடும்பத்தை நடத்தினார். அவர் ஒரு பஜனைப் பாடகரும்கூட.

தன் பஜனைகளுக்கு மகனையும் அழைத்துச்செல்வார். எம்.கெ.தியாக ராஜ பாகவதரின் படங்களைப் பார்த்தும் பாட்டுகளைக் கேட்டும் டி.எம்.எஸ் தன் இசையார்வத்தை வளர்த்துக்கொண்டார். எம்.கெ.டி பாடல்களை அற்புதமாக திருப்பிப் பாடிய டி.எம்.எஸ் பள்ளிப்படிப்பில் பரிதாபகரமான தோல்வியையே அடைந்தார். ஆனால் அவர் கவலைப்படவில்லை. நல்ல ஒரு குருவிடமிருந்து கர்நாடக சங்கீதம் படிப்பது தான் அவரது லட்சியமாக இருந்தது. அதற்கு குருதட்சிணை கொடுக்க அவரிடம் பணமிருக்கவில்லை. தான் சார்ந்த சௌராஷ்டிர சமூகத்தின் செல்வந்தர்களிடம் இரந்து பெற்ற சிறிய தொகையுடன் அவர் காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் சீடராகச்சேர்ந்து இசையை முறையாகக் கற்க ஆரம்பித்தார். ஆனால் அந்தக் கல்வி ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை.

டி.எம்.எஸ், அவர் தன் குருவிடமிருந்து ஒரு வருடத்திலேயே ஸ்வரஸ்தானங்களை மதிப்பிடுவதையும் கர்நாடக சங்கீத அடிப்படைகளையும் 48 கீர்த்தனைகளையும் 12 வர்ணங்களையும் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். அவருக்கு அதன்பிறகு கர்நாடக சங்கீதத்தில் எந்த சந்தேகமும் இருக்கவில்லையாம். மிச்சமெல்லாம் அவரே தன்னுடைய கடுமையான சொந்த உழைப்பு மூலம் கற்றுக் கொண்டதாம். அந்தத் தன்னம்பிக்கையுடன் அவர் தன் அரங்கேற்றத்துக்கு முயன்றார். ஆனால் கூடத்தை வாடகைக்கு எடுப்பது, விழா ஏற்பாடுகள் எதற்கும் அவரிடம் பணமிருக்கவில்லை. வறுமை. ஆகவே அவர் எந்தத் தொகை கொடுத்தாலும் கச்சேரி செய்யப் போக ஆரம்பித்தார். அவர் சில கச்சேரிகளில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் திரைப் பாடல்களைப் பாடியபோது பெரும் கூட்டம் நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்தது. அந்த வரவேற்பு அவரைத் திரையிசையை நோக்கிச் செல்லத் தூண்டியது. மேலும் அப்போது அவருக்குத் திருமணமாகியிருந்தது, குடும்பம் நடத்த வருமானம் தேவைப்பட்டது.

கோவை சென்டிரல் ஸ்டுடியோ அக்காலத்தில் தமிழின் முக்கியமான படங்களை எடுத்து வந்தது. டி.எம்.எஸ் வாய்ப்புத்தேடி அடிக்கடி அங்கே செல்ல ஆரம்பித்தார். பி.யூ.சின்னப்பா நடித்த ‘சுதர்சன்’ என்ற படம் அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கே அவர் ஒரு எடுபிடி ஊழியராக வேலைக்குச்சேர்ந்தார். சமையல், சுத்தப்படுத்துதல், நடிகர் நடிகைகளுக்குப் பணிவிடை செய்தல், உரிமையாளர் குழந்தைகளைப் பராமரிப்பது என எல்லா வேலைகளையும் அங்கே அவர் செய்தார். அதேசமயம் வேற்றுக் குரலை நாடுபவர்கள் என்றாவது தன்னைக் கவனிப்பார்கள் என்ற எண்ணத்தில் தொடர்ந்து முயற்சியும் செய்துவந்தார். ஒருமுறை சுப்பையா நாயுடு முன்னால் பி.யு.சின்னப்பாவின் பாடல் ஒன்று பயிற்சி செய்யப்பட்டு வரும்போது டி.எம்.எஸ் வெளியே நின்று பி.யு.சின்னப்பா பாடல் ஒன்றை உரத்த தொண்டையில் பாடினாராம். ‘இதென்ன இந்தப்பையனுக்குப் பைத்தியமா?’ என்று அங்கே இருந்த ஒருவர் கேட்டபோது பி.யூ.சின்னப்பா "இல்லை, நல்லாத்தான் பாடுறான். நல்ல குரல். இப்படியே சாதகம் பண்ணினான்னா ரொம்ப நல்ல பாடகனா வந்திருவான்" என்று சொன்னாராம்.

1950 இல் இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி டி.எம்.எஸ்க்கு முதல் திரை வாய்ப்பை வழங்கினார். அது ‘கிருஷ்ண விஜயம்’ என்ற படம். இன்றைய சொல்லாட்சியை வைத்து அந்தப் பாடலை ஒரு ரீமிக்ஸ் என்று சொல்லவேண்டும். 1936இல் வந்த ‘சிந்தாமணி’ படத்தில் எம்.கே.டி பாடிய ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ’ என்ற செஞ்சுருட்டி ராகப் பாடலை அப்படியே போட்டது தான் அந்தப்பாடல். அதேமெட்டில் ‘ராதே நீ என்னைவிட்டு ஓடாதேடீ’ என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னணி இசையமைப்பு இன்னும் சமகாலத் தன்மையுடன் அமைக்கப்பட்டிருந்தது. சில ஸ்வரங்களையும் ஜதிகளையும் டி.எம்.எஸ் அவரே சேர்த்துக் கொண்டார். அதைப் பதிவுசெய்ய 10 மணிநேரம் ஆகியது. இன்று அவரது அந்தப்பாடலைக் கேட்கும்போது அவர் எம்.கே.டியின் புதுவடிவம் போல இருப்பதாகத்தோன்றுகிறது. அந்தப் பாடல் ஒரு நட்சத்திரத்தின் வருகையை அறிவித்தது. அதே படத்தில் மேலும் மூன்று பாடல்கள் டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தன.

ஆனால் டி.எம்.எஸ்ஸின் போராட்டம் ஓயவில்லை, அவருக்கு மேலும் வாய்ப்புகள் வரவில்லை. பலரிடம் முயற்சி செய்தபின்னர்தான் மந்திரி குமாரி (1950) படத்தில் ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஜி.ராமநாதன் அதன் இசையமைப்பாளர். அந்தப் பாடல் பிரபலமாகவில்லை. அவரது பேரும் படத்தில் இடம்பெறவில்லை. அதற்குப்பின்னர்தான் அந்தப் பிச்சைக்காரர் பாட்டு. தொடர்ந்து இரண்டு வருடம் அவருக்குப் பாட்டே கிடைக்கவில்லை. 1952இல் ஜமுனாராணியுடன் சேர்ந்து இரண்டு இணைப் பாடல்களை பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, வளையாபதி என்ற படத்தில். அதன்பின்னரும் ஒன்றும் நடக்கவில்லை.

அப்போது சென்னை, தமிழ் சினிமாவின் மையமாக மாறிவிட்டிருந்தது. பிற ஊர்களில் இருந்த ஸ்டுடியோக்கள் முக்கியத்துவமிழந்தன. ஏ.எம்.ராஜாவும் கண்டசாலாவும் பிரபலமான பாடகர்களாக உருவெடுத்தார்கள். கைவசம் மிகக் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு டி.எம். எஸ் சென்னைக்குக் கிளம்பிச்சென்றார். படநிறுவனங்கள் தோறும் சென்று வாய்ப்புக்காகக் கெஞ்சினார். எவருமே அவரில் ஆர்வம் காட்டவில்லை. கோவை, சேலம் ஸ்டுடியோக்களில் ஏழு பாடல்களைப் பாடியிருந்ததெல்லாம் சென்னையில் வேலைக்கு ஆகவில்லை. கைப்பணம் கரைந்தது, ஒருநாளைக்கு ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலை வந்தது. மதுரைக்கே திரும்பிவிடலாம் என்று முடிவெடுத்தார் டி.எம்.எஸ்.

இருந்தாலும் மனம் கேட்காமல் அப்போது எச்.எம்.வி நிறுவனத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய கே.வி.மகாதேவனிடம் சென்று கண்ணீருடன் வாய்ப்புக் கேட்டு மன்றாடினார். மகாதேவனுக்குப் பிடித்தமான பாடல்கள் சிலவற்றை அவருக்குப் பாடிக்காட்டி வாய்ப்புக் கேட்டார். மகாதேவன் அந்த இளம்பாடகரின் திறமையை உடனே ஊகித்துக் கொண்டு அப்போதே இரண்டு பக்திப் பாடல்களுக்கு டி.எம்.எஸ்ஸை முடிவு செய்து உடனேயே அப்பாடல்களுக்கான ஊதியத்தையும் வாங்கிக்கொடுத்தார். ஏ.வி.எம் படநிறுவனத்துக்குப் போய் வாய்ப்புக்கேட்குமாறு அறிவுரையும் சொன்னார்.

மறுநாளே டி.எம்.எஸ் ஏ.வி.எம் நிறுவனத்துக்குச் சென்று அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் சுதர்சனம் அவர்களைக் கண்டு வாய்ப்புக் கோரினார். சுதர்சனம் அவரை ஏ.வி.எம்மின் உரிமையாளர் மெய்யப்பச் செட்டியாரிடம் அழைத்துச் சென்றார். டி.எம்.எஸ் ஒரு கீர்த்தனையை எல்லாவிதமான சங்கதிகளுடனும் பாடினார். செட்டியார் எந்த எதிர்வினையையும் காட்டவில்லை. மாறாக அவர் டி.எம்.எஸ்ஸிடம் ஒரு நகைச்சுவைப்பாடலைப் பாடும்படி கேட்டார். இதயம் வலிக்க டி.எம்.எஸ் ‘நல்ல கழுதை’ என்ற வேடிக்கைப் பாடலைப் பாடிக்காட்டினார்.

அது பலன் தந்தது. செல்லப்பிள்ளை என்ற படத்தில் அதேபோன்ற இரு வேடிக்கைப் பாடல்களைப் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது.

நடுவே கே.வி.மகாதேவன் அவரைக் கூப்பிட்டு கூண்டுக்கிளி படத்துக்குப் கூட்டுக்குரல் பாடும்படி சொன்னார். அதன் பாடலாசிரியரான தஞ்சை ராமையா தாஸ் டி.எம்.எஸ்ஸின் குரலையும் பாணியையும் ரசித்து அவருக்கு ஒரு தனிக்குரல் பாட்டைக் கொடுக்கும்படி மகாதேவனிடம் சொன்னார். அப்படித்தான் டி.எம். எஸ் அந்தப்படத்தில் ‘கொஞ்சும் கிளியான பெண்ணை’ என்ற பாடலைப்பாடும் வாய்ப்பைப்பெற்றார். எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளியில் உள்ள இப்பாடலில், தீவிர உணர்ச்சிகளை உருவாக்கும் டி.எம். எஸ்ஸின் தனித்துவம் மிக்க குரலை நாம் இப்போதும் கவனிக்கலாம்.

ஒருநாள் அவர் கோடம்பாக்கம் வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது ஒரு கார் வந்து அவரை மடக்கியது. அதிலிருந்த பாடலாசிரியர் மருதகாசி அவரைத்தேடி வந்திருந்தார். சிவாஜி கணேசன் நடிக்க தூக்குதூக்கி என்ற படத்தை அப்போது தயாரித்துக்கொண்டிருந்த அருணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு அவர் டி.எம்.எஸ்ஸை அழைத்துக் கொண்டு சென்றார். ஜி.ராமநாதன் இசையமைத்த அப்படத்தில் எட்டு பாடல்கள் இருந்தன. அன்றைய நட் சத்திரப்பாடகரான திருச்சி லோகநாதன் அந்தப்பாடல்களைப் பாடுவதாக இருந்தது. அதில் எட்டுப் பாட்டுகள் இருந்தமையால் மொத்தமாக ஒரு குறைந்த தொகைக்கு சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்கள் லோகநாதனைக் கேட்டார்கள். அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இன்னொரு பாடகரைப் பாடவைக்கலாமென்ற முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்திருந்தார்கள். கடும்பொருளாதார நெருக்கடியுடன் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த டி.எம்.எஸ் அந்த வாய்ப்பை ஆவலுடன் பற்றிக் கொண்டார்.

ஆனால் அங்கேயும் போராட்டம் முடியவில்லை. பராசக்தியின் புகழில் திளைத்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் அந்தப்படத்தில் தனக்காகப் பாடிய சி.எஸ்..ஜெயராமனின் குரலே தனக்குப் பொருத்தமானது என்னும் எண்ணம் கொண்டிருந்தார். ஆகவே தூக்குதூக்கியிலும் சி.எஸ்.ஜெயராமனே பாடட்டும் என்று அவர் நினைத்தார். டி.எம்.எஸ்ஸின் திறமையை முன்னரே அறிந்திருந்த ஜி.ராமநாதன் டி.எம்.எஸ்ஸுக்காக வாதாடினார்.

படத்தின் பெரும்பாலான பாட்டுகள் நாட்டுப்புற இசையின் சாயலுடன் இருப்பதனால் டி.எம்.எஸ் பாடினால்தான் நன்றாக இருக்குமென்று வாதாடினார். ஆனால் சிவாஜி ஜெயராமனுக்காக வற்புறுத்தினார். டி.எம். எஸ் மனம் சோர்ந்துபோனார். "ஒரு மூணு பாட்டை மட்டும் கொடுங்க. பாடிக்காட்டறேன். நல்லா இல்லேன்னா நான் திரும்பி ஊருக்கே போயிடறேன்" என்று அவர் அவர்களிடம் சொன்னார்.

'சுந்தரி சௌந்தரி நிரந்தரியே’ ‘ஏறாத மலைதனிலே’ ‘பெண்களை நம்பாதே’ ஆகிய மூன்று பாடல்களும் பதிவுசெய்யப்பட்டன. அதைக்கேட்டபின் சிவாஜி டி.எம்.எஸ்ஸிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். "நீங்க பாடுறீங்கன்னு சொன்னப்ப இன்னும் ஒருத்தர் பாடுறார்னுதான் நெனைச்சேன். இந்த அளவுக்கு நான் எதிர் பார்க்கவேயில்லை. மிச்சபாட்டுகளையும் நீங்களே பாடிடுங்க’’. 1954இல் வந்த தூக்குதூக்கி படத்தின் பாட்டுகள் டி.எம்.எஸ்ஸின் இசைவாழ்க்கையை புகழ் நோக்கிக் கொண்டு சென்றன. சிவாஜியின் திரைக்குரலாக டி.எம்.எஸ் மாறினார். அவரது குரலும் உச்சரிப்பும் பாடல் பாணியும் தமிழகமெங்கும் பேசப்பட்டன.

அப்போது கோவை பக்ஷிராஜா படநிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து மலைக்கள்ளன் படத்தை எடுத்து வந்தது. கூண்டுக்கிளி பாட்டுகளைக் கேட்டபோதே டி.எம்.எஸ்தான் தனக்குப் பாடவேண்டும் என்று சொன்னார் எம்.ஜி.ஆர். பக்ஷிராஜா நிறுவனம் டி.எம்.எஸ்ஸுக்கு முதல் வகுப்பு ரயில்டிக்கெட் எடுத்து அனுப்பியது. அவரை ஒரு மகாராஜா போல வரவேற்று கொண்டுசென்றது. அதே பக்ஷிராஜாவில் டி.எம்.எஸ் எத்தனையோ முறை பரிதாபமாகச் சென்று நின்று வாய்ப்புக்காகக் கெஞ்சி அவமானப்பட்டிருக்கிறார். மலைக் கள்ளனுக்குப் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் நிரந்தரமான பாடும்குரலாக டி.எம்.எஸ் மாறினார்.

டி.எம்.எஸ்ஸின் வருகையுடன் தமிழ்ப் பின்னணிப்பாடல்கள் நிரந்தரமான மாற்றத்தை அடைந்தன. மரபார்ந்த இசையானாலும் நாட்டுப்புற இசையானாலும் மேலையிசையானாலும் எந்தப்பாடலிலும் அவர் உணர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்குவார். அந்தக்காலப் பாடல்களில் உணர்ச்சிகரமான நாடகத்தன்மையைத் தன் குரல்நடிப்புவழியாக உருவாக்கியவர் டி.எம்.எஸ். மெல்லிசை மெட்டுகள், சமூகப்பாடல்கள், மரபிசைப்பாடல்கள் எல்லாமே அவருக்குப் பொருத்தமானவைதான். "எனக்குக் கெடைச்ச எல்லா பாட்டுகளையும் கடவுளைக்கும்பிடுற மாதிரி பூரணமான பக்தியோடதான் பாடியிருக்கேன்’’. தன் பாடல்களில் சிலசமயம் அவர் மிகையாக நடித்தார், சிலசமயம் அடக்கி வாசித்தார். எல்லாம் அந்தந்த நடிகர்களின் நடிப்பையும் அந்தப்படத்தின் தேவையையும் பொறுத்ததுதான்.

அவரது பல்லாயிரம் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவை பல உள்ளன. ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, முத்துக்களோ கண்கள், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, என்னை யாரென்று எண்ணி எண்ணி, மாதவிப்பொன் மயிலாள், சொல்லடி அபிராமி, பூ மாலையில் ஓர் மல்லிகை, தொட்டால் பூ மலரும், பாட்டும் நானே பாவமும் நானே, இசைகேட்டால் புவி அசைந்தாடும், முல்லைமலர் மேலே, ஓராயிரம் பார்வையிலே, மாசிலா நிலவே நம், யாருக்காக, அன்பே வா, ஏன் பிறந்தாய் மகனே, வசந்த முல்லை போலே, யாரடீ நீ மோகினீ, பார் மகளே பார், முத்தைத்தரு பத்தித்திருநகை, மெல்ல மெல்ல அருகில் வந்து, நான் ஏன் பிறந்தேன், மலர்களைப்போல் தங்கை, யார் அந்த நிலவு... இந்தப் பட்டியலை நான் நிறுத்தவே முடியாது.

எழுபதுகளின் நடுவிலேயே டி.எம்.எஸ்ஸின் உச்சகாலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. குறிப்பாக இளையராஜாவின் வருகையுடன். ‘அந்தப்புரத்தில் ஒரு மகாராணி’, ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு’, ‘அம்மா நீ சுமந்த பிள்ளை’, ‘சிந்து நதிக்கரையோரம்’ போல சில வெற்றிப் பாடல்களை அவர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்திருந்தாலும் கூட அவர்களின் இணைப்பு நீடிக்கவில்லை. அவர்களுக்குள் கடுமையான மனஸ்தாபங்களும் முறிவுகளும் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இளையராஜாவின் காலம் ஆரம்பித்தபோது டி.எம்.எஸின் காலம் முடிவுக்கு வந்தது. மேலும் உருவாகி வந்த புதிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களின் நடிப்புக்கு அவரது குரல் பொருந்திப்போகவில்லையாம். அவ்வப்போது சில பொதுவான பாட்டுகளை மட்டுமே பாடிவந்த டி.எம்.எஸ். மெல்ல மெல்ல விலக்கப்பட்டார். டி.எம்.எஸ்ஸின் கடைசிக் காலத்துப் பாட்டுகள் ஒரு சுய அங்கதத் தன்மையுடன் அமைந்திருப்பது தற் செயல்தான். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என் கதை முடியும் நேரமிது’.... கடந்த 20 வருடங்களாக அவர் எந்தத் திரைப்பாடல்களையும் பதிவுசெய்யவில்லை.

டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் மேல் பலவகையான விமரிசனங்களை எத்தனையோ வருடங்களாகக் கேட்டு வருகிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்கள் சொல்லித்தருவதுபோல பாடல்களைப் பாட டி.எம்.எஸ்ஸால் முடிந்ததில்லை என்பது அதில் ஒன்று. எம். எஸ்.விஸ்வநாதனின் பாடல்களை நூறு சதவீதம் அப்படியே பாட எந்தப் பாடகர்களாலும் முடிந்ததில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். டி.எம்.எஸ் அந்தப்பாடல்களை தனக்கேயுரிய கவனத்தைக் கவரும் பாணியில் பாடினார் என்று நினைக்கிறேன். அவரது மரபிசைப்பாடல்கள் பிழைகள் கொண்டவை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. "நான் சங்கீதத்தோடயே பிறந்தவன். சின்ன வயசிலேயே பாட ஆரம்பிச்சிட்டேன். கர்நாடக சங்கீதத்திலே எனக்கு அஸ்திவாரம் இருக்கு. அது எனக்கு சினிமாவிலே பாடுறதுக்கு உதவியா இருக்கு’’ என்றார் டி.எம்.எஸ். அது செவ்வியலிசையோ இல்லையோ, அவரது பாடும் முறை ரசிகர்களைக் கவரும்படியாக இருந்தது என்பதே உண்மை. ஒரே ஒரு வருடம்தான் அவர் கர்நாடக இசை பயின்றார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

அவரது பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றும் சிவாஜி பாடல்கள் என்றும் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டபோது டி.எம்.எஸ் சொன்னார் "தம்பீ, நான் பொழைக்கிறதுக்காகப் பாட வந்தவன். அதை முழுசா அர்ப்பணம் பண்ணி செஞ்சேன். ஒரு ஹீரோவுக்காகப் பாடுறப்ப நான் பல மணிநேரம் உக்காந்து அவரோட பேச்சு, உச்சரிப்பு, ஸ்டைல் எல்லாத்தையும் கவனிச்சுக்கிடுவேன். பாடுறப்ப அந்த ஹீரோவை மாதிரி குரலிலே நடிச்சுப்பாடுவேன். அதனாலேதான் என் பாட்டுகளை எம்ஜிஆர் பாட்டுன்னும் சிவாஜி பாட்டுன்னும் சொல்றாங்க. தப்பில்லை’’ டி.எம்.எஸ்ஸின் இந்தத் தனித்தன்மையால்தான் எளிய ரசிகர்கள் அந்த நடிகர்களே பாடுவதாக எண்ணி மயங்கினார்கள்.

சிலருக்கு டி.எம்.எஸ்ஸின் பாட்டு என்பது குரல் வித்தையும், குரல் போலி செய்தலும் மட்டும்தான் என்னும் எண்ணமிருக்கிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை டி.எம்.எஸ் அவரது குரலை எந்த நடிகருக்காகவும் முழுமையாக மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை. எந்த நடிகருக்காக அவர் பாடினாலும் அது எப்போதுமே டி.எம்.எஸ் பாடல் தான். மூக்கு, நாக்கு, தொண்டை போன்றவற்றைப் பயன்படுத்தி அவர் தன் குரலின் தொனியை மட்டும் கொஞ்சம் மாற்றிக்கொண்டார். தன்னுடைய குரலை, ஒரு நடிகருக்கு அடிவயிற்றில் இருந்தும், இன்னொருவருக்கு நெஞ்சில் இருந்தும், இன்னொருவருக்குத் தொண்டையில் இருந்தும் கொண்டுவருவதாக டி.எம். எஸ் சொல்வதை நான் எப்போதுமே ஏற்றுக்கொண்டவன் அல்ல. குரல் நுரையீரலின் காற்று தொண்டை வழியாக வெளிவருவதன்மூலம் உருவாவது மட்டுமே.

ஆனால் அது எனக்கு ஒரு பெரிய விஷயமல்ல. காரணம் டி.எம்.எஸ் பாடிய பெரும்பாலான படங்களை நான் பார்த்ததே கிடையாது. அதனால் அவரது குரல் நடிகர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதெல்லாம் எனக்கு முக்கியமும் அல்ல. அதையெல்லாம் பார்க்காமல் தான் நான் அவரது பாட்டுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். பிறகு தொலைக்காட்சியில் அப்பாடல்களின் காட்சிகளைப்பார்த்தபோது அவற்றில் பல எனக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தன. என் மனதில் அப்பாடல்கள் மிக மேலான காட்சிகளை உருவாக்கியிருந்தன. திரையிசை என்பது திரையின் பகுதி என்றாலும் திரையின் காட்சிகளின் உதவியே இல்லாமல் தனித்து நிற்கக்கூடிய ஒரு இசை வடிவம் என்பதுதான் எப்போதுமே என் எண்ணம்.

என்னைப்பொறுத்தவரை டி.எம்.எஸ் பாடல்களின் மிகமுக்கியமான இயல்பென்னவென்றால் அவற்றில் உணர்ச்சிகள் சீராகவும் தெளிவாகவும் வெளிப்பட்டிருக்கும் விதம்தான். மிகையான உணர்ச்சிகள் என்றால் அந்த மிகை பாடல் முழுக்க சீராகப் பரவியிருக்கும். மென்மையான உணர்ச்சிகள் என்றால் பாட்டு முழுக்கவே அந்த அடக்கம் தென்படும். ஒரு பாடகராக அவர் என்றுமே அப்பாடலின் தேவைக்குக் குறைவாகவோ கூடுதலாகவோ உணர்ச்சிகளைக் கொடுத்ததில்லை.

டி.எம்.எஸ் நெடுநாட்களாகவே கிட்டத்தட்ட மறக்கப்பட்ட நிலையில் சென்னையில் வாழ்ந்து வருகிறார். 2002இல் அவர் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட செய்தி வந்தது. அதன்பின் 2003 ஜூன் 22 அன்று அவர் அமிலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது. கடும் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சட்டென்று அம்முயற்சியில் ஈடுபட்டார் என்று சொல்லப்பட்டது. அவரது குடும்பம் அச்செய்தியை மறுத்தது. அவர் இருமல் மருந்து என்று எண்ணித்தான் அமிலத்தைக் குடித்தார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் பின் டி.எம்.எஸ் தொலைக்காட்சியில், சந்தேகத்துக்குரிய மருத்துவர்கள், காம ஊக்கத்துக்கான மருந்துகளைப் பற்றிப் பேசும் விளம்பர நிகழ்ச்சிகளில் வந்து அமர்ந்து அவர்களைப் பாராட்டிப்பேசுவதையெல்லாம் காண நேர்ந்தது. அவர் பழைய புகழ்வெளிச்சத்துக்காக ஏங்குகிறார் எனப்பட்டது. அந்த ஏக்கமும் துக்கமும் கசப்பும் அவரது பேச்சுகளில் வெளிப்பட்டது. தன் அந்திமக்காலத்தில் ஒரு பெரும் கலைஞன் அவ்வாறு கீழிறங்கியதைக் கண்டு நான் மிக மனம்வருந்தினேன்.

"நான் சிங்கம்போல பாடுறவன் தம்பீ’’ என்பார் டி.எம்.எஸ். இதை எழுதும்போது யூ ட்யூபில் (You tube) டி.எம்.எஸ் உச்ச ஸ்தாயியில் ‘தெய்வம் இருப்பது எங்கே’ என்று யாராலோ எடுக்கப்பட்ட ஒரு ஹோம் வீடியோ காட்சியில் பாட முயல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த ஸ்வரத்தையும் அவரால் சீராகப்பாட முடியவில்லை. அந்த ஏமாற்றம் அவரது முகத்தில் தெரிகிறது. அந்த உண்மையை மனம் நொந்து அவர் ஏற்றுக்கொள்கிறார். "எனக்கு குரல் இப்பவும் இருக்கு... பாடுறதுக்கான ஆசை இருக்கு. எண்ணம் இருக்கிறது ஆனா உடம்பிலே அதுக்கான சக்தி இல்லை. வயசாயிடுச்சு...’’

விடாப்பிடியாக அந்த உச்சக் குரல் பாடலின் ஒருவரியையாவது ஒழுங்காகப்பாடிவிடுவதற்கு முயற்சி செய்கிறார் டி.எம்.எஸ். மூச்சுவாங்கி முகம் சிவந்து கண்கலங்குகிறார். அந்த வீட்டுக்குள் யாரெல்லாமோ உரத்த குரலில் பேசிக்கோண்டே இருக்கிறார்கள். யாருமே அவரைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. புகழிலும் திறனிலும் அதி உச்சத்தில் இருந்த ஒரு நட்சத்திரப்பாடகர் மூப்பினால் தன் கலையை இழந்து ஏமாற்றத்தின் அடித்தட்டில் தத்தளிப்பதை எவருமே பொருட்படுத்தவில்லை. என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. கண்களை மூடினால் அண்ணாச்சி, டென்னிஸ், மணி என முகங்கள் மிதந்து வந்து கொண்டே இருக்கிறது. டி.எம்.எஸ் பாடல்களில் இருந்து தங்கள் வாழ்க்கையின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டவர்களின் முகங்கள்!

http://www.4shared.com/audio/BIpQ2cDT/Pookkari.html]Pookkari.mp3

தமிழில்: ஜெ.

shaajichennai@gmai.com

www.shajiwriter.blogspot.com

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.