Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமிய வங்கி

Featured Replies

அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் அரச செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை கடவுச்சீட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் குடிவரவு அதிகாரிகளின் இரத்த அழுத்தம்

எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க கடவுச்சீட்டை விரித்து "பெஸ்ட் செல்லர் லிஸ்ட்" புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன.

அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?

இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல் அது.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி ‘வட்டி வாங்காதே வழங்காதே’ என்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.

இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.

மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா. பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.

ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும். இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.

சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?

இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.

ஷரியா என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை’ என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.

ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)

2) (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)

3) நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)

4) நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)

5) ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)

ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.

1) அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு

2) ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு

3) பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு

தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.

ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.

பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).

ரிபா …சாரி’பா, அது ஹராம் நெம்பர் ஒன்.

ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.

புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.’

சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.

இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில் ஒரேபோல!

  • தொடங்கியவர்

வங்கி மைனஸ் வட்டி

கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே புரட்டிப் போடும் கோட்பாடு அது.

பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர் அளவுகோல்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம் எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு ஈடாக இருக்காது.

ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர் பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும். ஒரே பண மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா, எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.

உங்களிடம் ஒரு கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange) உதவுகிறது.

ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு மதிப்பு கிடையாது.

பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக் கூலியாக வட்டி வாங்கினால், அந்த வட்டிக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை. அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத பணத்தை வட்டிக்கு விட்டால் பாவம் உருவாகும். வட்டி விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).

‘அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே கிடையாது!’

‘இங்கே கடன் கொடுக்கப்படும்’ என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம் எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.

ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும் நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள் முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.

வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில் நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள் கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவது, பந்தயங்களில் முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.

சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.

‘என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க் லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல் ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார். அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு இருப்பாங்க என்பது வேறு விஷயம்.

‘சார், லோன் வேணும்’.

‘என்ன லோன்?’

‘சிறு தொழில் கடன்’.

‘என்ன வேணும்?’ என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.

‘ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்’ என்று ஈசியான தமிழில் சொல்கிறோம். ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க. பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில், விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.

ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா எழுதறீங்க.

நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் – கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.

சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு உத்திரவாதம்?

விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.

‘இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம் அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக் கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?

ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக் கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.

‘சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’

அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.

‘உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.’

அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம். இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு ஆட்டோகூட வரலாம்.

ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்

1. வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.

2. வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும் தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால் என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.

3. தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ, வழங்குகிறவருக்கு ‘முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக் கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.

நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன் கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை, கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.

இஸ்லாமிய வங்கி?

‘வாங்க, முதரபா (Mudarabah) தரோம்’ என்கிறது.

கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற, சமூக நோக்கு கொண்ட உதவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.