Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் புலனாய்வாளர்களின் சதியா எம்மவரின் அறியாமையா?

Featured Replies

புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று மகிந்த அரசு அறிவித்த பின்னர் முன்னையதை விட சிங்களப் புலனாய்வு படையினரும் அன்னிய நாட்டு புலனாய்வு அமைப்புக்களும் மேலும் மேலும் எப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நன்கு திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

இந்தத் திட்டங்களுக்கு இரையாகுவோர் புலம்பெயர் நாடுகளிலும் மற்றும் உள்நாடு, அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவியான ஆதரவாளர்களும் கூடத்தான்.

பல்வேறு வழிமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழர்களின் பணத்திலும் , இரத்தத்திலும், சதையிலும் - ஏன் உணர்வுகளிலும் விளையாடுவது சிங்கள புலனாய்வு குழுக்களுக்கும். அயல்நாட்டுப் புலனாய்வு அமைப்புக்களுக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் கூடவே நீண்டகால அடிப்படையிலான நாசகாரத் திட்டமாகவும் இருந்து வருகின்றது.

ஆனால் தமிழர்கள் இந்த விடயங்களை மேலோட்டமாகப் பார்த்து அசட்டை செய்பவர்களாகவும், கண்டும் காணாதவர்களாகவும் - ஏன் ஏதும் நடந்தால் கூட அதனை ஒரு வீரதீரச் செயல் என்று பாராட்டவும் இன்னமும் ஊடகங்கள் தயாராகவே இருக்கின்றன.

ஏதாவது ஓர் அசம்பாவிதத்தை சிங்கள புலனாய்வுப் பிரிவுகள் செய்தால் அதற்கு ஆய்வு எழுதி எப்படியாவது இயக்கத்தின் சாயம் பூச, சிங்கள ஊடகங்களை விட தமிழ் ஊடகங்களே முன்னிற்பார்கள்.

ஏதாவது ஒன்று நடக்காதா? யாராவது ஒரு பெரிய ஆள் மிதக்க மாட்டாரா? ஓர் ஆறுதல் வார்த்தை சொல்ல மாட்டாரா? அடுத்த கட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பில் தமிழினம் இருப்பது இயல்பானதே.

ஆனால் இவற்றைச் சரியாகக் கணித்து, சிங்கள மற்றும் அன்னிய புலனாய்வு அமைப்புக்கள் காய்களை நகர்த்தத் திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. இது பழைய விடயம் என்றாலும் புதிதான பிறிதொரு நகர்வாகவே காணக்கிடைக்கின்றது.

அண்மையில் ஸ்கன்டினேவிய நாடு ஒன்றில் இருந்து இருவர் கொண்ட அணி (தம்மை அமைப்பு செயற்பாட்டாளர்கள் எனக் கூறி இருக்கின்றார்கள். அடையாளம், பெயர், சென்ற நாடு ஆகியன சட்டச் சிக்கல் கருதி நீக்கப்பட்டுள்ளது) அயல் நாட்டுக்குச் சென்று, அங்கே தப்பி வந்திருந்த போராளிகளிடம் கதை விட்டிருக்கின்றார்கள்.

அதாவது உங்களுக்கு காசு எல்லாம் நாங்கள் ஒழுங்குபடுத்தித் தருவோம். நீங்கள் ஏதாவது ஒரு தாக்குதல் செய்தால் போதும், பிறகு நாங்கள் உங்களை வெளி நாட்டிற்கு எடுப்போம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள்.

இவர்கள் யார்? ஏதோ அந்த போராளிகள் உதவி கேட்டுள்ளார்கள் என்பதற்காக, அவர்களது தொடர்பைப் பெற்று முன்பின் தெரியாமல் அந்தப் போராளிகளிடம் போய் இப்படி பேசுவதன் மூலம் எதனைச் சாதிக்க முற்படுகின்றனர்?

சிறிலங்காவில் இப்போது தாக்குதல் செய்யவேண்டியதன் அவசியம் அல்லது அதுபற்றி முடிவெடுக்க வேண்டியது நாட்டில் உள்ளவர்களே தவிர, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்லவே (நான் உட்பட.) பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போன கதைபோலதான் இதுவும் இருக்கும்.

”அண்ணை, இவங்கட முகத்தைப் பார்த்தாலே எங்களுக்குப் பாவமா இருக்கு. சின்ன பபாக்களை சொக்லேற் கொடுத்து ஏமாற்றுவதுபோல, தாக்குதல் செய்தால்தான் வெளிநாட்டுக்கு எடுக்கலாம். ஏனென்றால் அப்படி ஏதும் செய்தால்தான் சனம் நம்பும் எனச் சொல்கிறார்கள்” என்று அந்தப் போராளி நண்பர்கள் சொல்கின்றார்கள்.

இதே போல யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருப்பவர்களிடம் வெளிநாட்டில் இருந்து சிலர் கேட்டிருக்கின்றார்கள்.

தொலைபேசியில் கதைக்கும் கதையா இது?

அதாவது என்ன மாதிரி, ஏதும் செய்யலாமா எனக் கேட்டிருக்கின்றார்கள். ஏதும் செய்தால்தான் இங்க பிரளும் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒன்றும் செய்ய ஏலாது எனச் சொல்லியிருக்கிறார்கள்.

கூடவே, ‘மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தியும் தலைவரின் பிறந்த நாளிற்கு எப்படியாவது கொண்டாடி ஒவ்வொரு படமாவது எடுத்து அனுப்புங்கோ’ என மன்றாடியும் இருக்கின்றார்கள்.

இங்கு என்ன விடயம் என்றால், உண்மையிலேயே இது சிங்கள, இந்தியப் புலனாய்வாளர்களின் இயங்கு தளத்தில் இருப்போர்களின் நோண்டிப்பார்க்கும் செயற்பாடா?

அல்லது வெளிநாட்டில் இருக்கும் சிலர் மீண்டும் நிதி திரட்டி தமது இருப்பினை பாதுகாக்க முற்படும் இரகசிய நடவடிக்கையா?

உண்மையாக களத்தில் இருந்த போராளிகள் (இறுதிப்போரில் களத்தில் நின்றவர்கள்) உடனடியாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் எந்தத் தாக்குதல் நடவடிக்கைகளையுமே இப்போது செய்ய சிந்திக்க மாட்டார்கள்.

சிலவேளை அப்படிச் சிந்தித்தாலும்கூட தொலைபேசியிலும் ஸ்கைப்பிலும் போராட்டத்தினை நடாத்த மாட்டார்கள்.

ஆகவே, இத்தகைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது, ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்கள் போராளிகளைப் பகடைக்காய் ஆக்கி காசு சேகரிக்க முற்படும் திட்டமாக இருக்கலாம். அல்லது சிங்கள, அன்னிய நாடுகளின் புலனாய்வு இயங்கு தளத்தில் இருந்து புலிகள் போன்று செயற்படுபவர்களாகவும் இருக்கலாம்.

இன்னமும் கரை சேராத நிலையில் சிக்கித் தவிக்கும் போராளிகள் ஒருபக்கம், சிறையில் உள்ளோர் ஒருபக்கம், சித்திரவதைப்படும் மக்கள் ஒருபக்கம் இருக்க, ஒரு கிளைமோர்த் தாக்குதல் நடத்தி, அல்லது ஒரு குண்டை எறிந்துவிட்டு அதனை வீரதீரச் செயல் என்று பரப்புரை செய்து யாரை உசுப்பேற்ற இந்தப் புண்ணியவான்கள் முயல்கின்றார்கள்?

இப்போது இப்படிக் கேட்க இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகின்றது? இப்படிக் கேட்பவர்கள் ஏன் தாம் போய் இதனைச் செய்யக் கூடாது?

தயவு செய்து கூலிக்கு மாரடிக்கும் கூலிப்பட்டாளமாக போராளிகளைப் பார்க்காதீர்கள். அத்தோடு தாயகத்தில் இருப்போரையும் அப்படிப் பார்க்காதீர்கள்.

உண்மையாகவே தொடர்புடையவர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் எடுக்க வேண்டும். இப்படியான காரியங்களை சிங்களவனே திட்டமிட்டுச் செய்ய நினைக்கின்றபோது, அல்லது சிங்கள, இந்தியப் புலனாய்வாளர்கள் சேர்ந்து செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் வெளி நாட்டில் இருக்கும் ஒரு சில செயற்பாட்டாளர்கள் ஏன் கோடாரிக் காம்புகளாக இருக்க முற்படுகின்றார்கள்?

இப்போ தமிழர் ஓரடி பாய்ந்தால் சிங்களவன் நூறு அடி பாயும் நிலையில் தான் நிலமை உள்ளது. அதற்கான ஆளணி (போராளிகள்), இயக்கத்தின் ஆயுதங்களெல்லாமே சிங்களவனிடம் உண்டு. இவ்வாறான செயற்பாடுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சில புலம்பெயர் ஆட்கள் உடந்தையாக இருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரிய விடயம்.

போட்டிச் செயற்பாடுகளுக்கும், யார் உண்மையான புலி என்று புலம்பெயர் மக்களுக்கு நிரூபிப்போம் என்று தர்க்கம் பேசுவதற்கும், நாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள் என நிரூபிப்பதற்கும் ஒரு கிளைமோரை சார்ச் பண்ணிக் காட்டி மக்களையும் போராளிகளையும் பலிக்கடாவாக்காதீர்கள்.

சிங்களவன்தான் இதனைப் பின்னணியில் இருந்து செய்யப்போகின்றான் என்றால் அதனை நாம் எல்லோரும் சேர்ந்து அம்பலப்படுத்த வேண்டும்.

ஆகவே, அன்பின் உறவுகளே,

முடிந்தால் உதவி செய்யுங்கள் உபத்திரவம் செய்யாதீர்கள்.

விக்கிரமபாகு கருணாரட்ண சொன்னது போல, எல்லோருக்கும் போராட இடமுண்டு. முடிந்தால் உங்கள் நாட்டிலே உங்கள் நாட்டுப் பாணியில் போராடுங்கள். சிங்களவனுக்கு அடிக்க ஆசை என்றால் நீங்களே போய் முயற்சி செய்யுங்கள்.

அங்கிருப்போரையும் அயல் நாடுகளில் அகதி முகாம்களிலில் இருப்போரையும் இப்போதைக்கு விட்டுவிடுங்கள். அவர்கள் பட்ட துன்பம் போதும், கொஞ்ச நாட்களுக்காவது அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

குறிப்பு: தாயகம் மற்றும் அயல் நாடுகளில் இருந்து என்னுடன் பேசிய கருத்துக்களை தொகுத்து குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் தந்த பெயர் மற்றும் அடையாளங்களை சட்ட சிக்கல் கருதி குறிப்பிடவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.