Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படிக்காத மேதை - ஜூலியன் அஸாஞ்

Featured Replies

‘பள்ளிக்கூடங்கள் என்பவை கட்டளைகளுக்குக் கீழ்ப்பணியச் சொல்லும் கேந்திரங்கள். அதனால், நீ எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் போகாதே’ என்று எந்த அம்மா சொல்லுவாள் ? ஒருத்தி சொன்னாள்.

அதனாலேயே அந்தச் சிறுவன் படித்ததெல்லாம் வீட்டில்தான். கொஞ்ச நஞ்சமல்ல. நிறையப் படித்தான். நூலகங்கள், வெளியுலகப் புத்தகங்கள் என்று, படிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாமல் படித்தான். பின்பு பல்கலைக்கழகப் படிப்பு. அம்மா அவனுக்கு கமாடார் 64 (Commodore 64) என்ற பழசான ஒரு கணினியை வாங்கிக்கொடுத்தாள்.

16 வயதில் Mendax என்கிற பெயரில் உலாவ ஆரம்பித்தான். அவனும் அவனுடைய 2 நண்பர்களும் சேர்ந்துகொண்டு International Subversives என்ற ஒரு குழுவை ஆரம்பித்தார்கள். இரண்டே வருடங்கள், ஜூலியனுக்கு நெட்வொர்க் எல்லாம் பழகிவிட்டது. அப்போது இணையம் வரவில்லை. ஆனால் பெரிய டெலிகாம் கம்பெனிகள் தங்களுடைய நெட்வொர்க்கை வைத்துக்கொண்டிருந்தன. மொபைல் போனின் ஆரம்ப காலம் அது. ஜுலியன் விளையாட்டாக, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான நார்டெலுக்குள் (Nortel Networks) போய்ப் பார்க்க ஆரம்பித்தான். இணையத்தில் ஹாக்கர்கள் (தாய்க்காம்பனி கனடா), ஸ்பாமர்களுக்கெல்லாம் (spammers) முன்னோடி விஷயம் இது. அப்போதெல்லாம், இவற்றைக் கட்டுப்படுத்த சரியான சட்டங்களே இல்லை.

1992-ல் பிடிபட்ட ஜூலியனின் மீது 24 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. கடைசியில் அந்த வெள்ளை டோப்பா ஆஸ்திரேலிய ஜட்ஜ், “சின்னப் பையன், போனாப் போகட்டும், சும்மா ஒரு சுவாரசியத்துல விளையாடிட்டான். பெருசா டேமேஜ் இல்லை, போய்த் தொலையட்டும்” என்று வெறும் ஆஸ்திரேலிய $2100-ஓடு விட்டுவிட்டார். இதே நேரத்தில்தான் ஜூலியனுக்கும் அவருடைய மனைவிக்கும் ஒத்துவரவில்லை. மனைவி, அவர்களுடைய மகனைத் தன் பாதுகாப்பில் கொண்டு சென்றுவிட்டாள். மணமுறிவும் நார்டெல் வழக்கும் ஜூலியனை உள்ளுக்குள் கிழித்துப் போட்டுவிட்டன. தன் மகனைத் தன்னிடையே வைத்துக்கொள்ள மிகவும் முயன்று தோற்றுப்போனார் ஜூலியன். ஆனாலும், அந்த நிகழ்வு ஜுலியனின் மனத்தில் மாறாத வடுவாகிப் போனது. ஒன்றும் செய்யாமல், நேர்மையான ஹாக்கராக இருந்தாலும், அதிகாரமும் அரசும் அவருடைய வாழ்க்கையை நிலைகுலையச் செய்தன. அன்றைக்கு ஜூலியனின் மனத்தில் ஏற்பட்டது ஓர் எண்ணம்.

அரசாங்கங்கள் மக்களுக்கானவை. ஆனால் மிகப் பெரிய அளவில் ரகசியங்களும் அழுக்கு ஆட்டமும் நிறைந்தவையாக இருக்கின்றன. இவற்றைத் தோலுரிப்பதுதான் மிக முக்கியம் என்று அவருக்குப் பட்டது. அந்த விதை 16 வருடங்கள் கழித்து ஓர் இணையத்தளம் மூலமாக வெடித்து, இன்றைக்கு உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விஷயமாக மாறி போனது.விக்கிலீக்ஸ் என்கிற இணையத்தளம் தான் அதற்கெல்லாம் காரணம். விக்கிலீக்ஸை உருவாக்கியவர்தான் ஜூலியன் அஸாஞ்ச். இன்றைக்கு 39 வயதாகும் அஸாஞ்சை அமெரிக்கா துரத்தோ துரத்தென்று துரத்துகிறது.

2006-ல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட Collateral Murder என்கிற வீடியோதான் ஜுலியன் அஸாஞ்ச் என்று ஓர் ஆள் இருக்கிறான்; ஆஸ்திரேலியன்; விவகாரமான ஆசாமி என்று உலகத்துக்குச் சொல்லியது. Collateral Murder, அமெரிக்கா ஈராக் மீதான வான் வெளித் தாக்குதலில், ராய்ட்டர்ஸின் இரண்டு செய்தியாளர்களைக் கொன்றதையும், அப்பாவி மக்கள்மீது வான் வெளித் தாக்குதல் நடத்தியதையும் அப்பட்டமாகக் காட்டியது. அன்றைக்குப் பிடித்தது சனி.

இன்றளவும் நேர்மையான சைபர் உள்நுழைவோரில் (ethical hacker) ஒருவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஜூலியன் முன்வைக்கும் அரசியல், வித்தியாசமானது. அரசாங்கங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன, முக்கியமாக அமெரிக்க அரசாங்கம். அதைத் தொழில்நுட்ப சாம, தான, பேத, தண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி பொதுவெளிக்குக் கொண்டுவந்து முகத்திரையைக் கிழிப்பதில்தான், அடுத்த தலைமுறைக்கான பத்திரிக்கை தர்மம் இருக்கிறது என்று அவர் தீவிரமாக நம்புகிறார்.

அமெரிக்காவின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர்களில் முக்கியமானவர் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ. இன்றைக்கு உலகெங்கிலும் இருக்கக்கூடிய இடதுசாரி அரசுகள், ஜுலியனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அமெரிக்காவின் ஒட்டுமொத்த மானமும், ஜூலியனாலும் விக்கிலீக்ஸின் தன்னார்வலர்களாலும், சர்வர் சர்வராகக் கப்பலேற்றப்பட்டது. இடதுசாரி அறிவுஜீவிகள், ‘நாங்களெல்லாம் அப்பவே சொன்னோம்ல’ என்று சந்தோஷத்தில் குதிக்கிறார்கள். வெள்ளை மாளிகையோ, மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்துக்கு பிறகு தலைகுனிந்தும் தர்மசங்கடத்தோடும் விக்கிலீக்ஸ் சமாசாரத்தை அணுகுகிறது. ஹிலாரி கிளிண்டன் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு அரசுகளோடு பேசி, விக்கிலீக்ஸ் சொன்னது எல்லாம் டூபாக்கூர் என்று நிறுவ முயன்று வருகிறார்.

உலகத்தின் போக்கை மாற்றியவர்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், போர் வீரர்கள், அரசர்கள், விஞ்ஞானிகளாக இருந்திருக்கிறார்கள். ஒரு கீபோர்டும், கொஞ்ச மெமரியும், வீடியோவும், நுட்பமும் கொண்டு இன்றைக்கு உலகத்தின் போக்கை மாற்றிக்கொண்டிருப்பவர் ஜூலியன் அஸாஞ்ச்.

உலகத்தையே ஆட்டுவித்த அமெரிக்காவினை ஒரு தனிமனிதனும் சில நூறு தன்னார்வலர்களும் ஒட்டுமொத்தமாக அசைத்திருக்கிறார்கள். வெள்ளை மாளிகை ஆடிப்போயிருக்கிறது. இதற்குக் காரணமான ஜுலியன் அஸாஞ்ச் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் மறைவாக இருந்தார். திடீரென வெளிவருவார். அவரின் ஆதரவாளர்களுக்கு வெவ்வேறு தொலைபேசி எண்கள், மெயில் ஐடிகள், ஸ்கைப் கால்கள் எனச் செய்திகளும் ஆணையும் வரும். கடைசியாக, டைம் இதழுக்காக அடையாளம் தெரியாத ஓர் இடத்திலிருந்து ஸ்கைப்பில் பேச முயன்று அது மொக்கையாக முடிந்தது. ஜூலியன் கடைசியாகப் பேட்டி கொடுத்தது டைம் இதழுக்கானது, அது இங்கே.

அமேசான் வழங்குதளத்தில் விக்கிலீக்ஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடம் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.wikileaks.org/ என்கிற தளத்தின் டொமைன் சேவை தருபவர், அதைத் தர மறுத்துவிட்டார். பேபால், விக்கிலீக்ஸுக்கான நன்கொடைகளை வாங்க மறுத்துவிட்டது. கிட்டத்திட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் விக்கிலீக்ஸ் தடைசெய்யப்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இப்போது http://www.wikileaks.ch/ என்கிற முகவரியில் இருந்து இயங்குகிறது. 300-க்கும் மேற்பட்ட ப்ராக்சி சர்வர்களில் விக்கிலீக்ஸின் அமெரிக்க தூதரக ரகசியங்கள் இப்போது வைக்கப்பட்டிருக்கின்றன.

இது தாண்டி, சுவீடன் நாட்டில், ஜூலியன் மீது பாலியல் வன்புணர்ச்சிக் குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. ஜூலியன் தரப்போ, அரசாங்கங்கள் விக்கிலீக்ஸையும் ஜுலியனையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்யும் சதி இது என்று கொதிக்கிறார்கள்.

சுவீடன் அரசின் குற்றச்சாட்டை முன்வைத்து, இண்டர்போல், அஸாஞ்ச்மீது ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் முழுமைக்கும் செல்லுபடியாகும் அரஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 7 டிசம்பர் 2010 அன்று லண்டனில் காவலர்களைச் சந்தித்தார் அஸாஞ்ச். தொடர்ந்து அவரை லண்டன் போலீஸ் கைது செய்தது. இப்போது பெயில் தரப்படாத நிலையில், லண்டன் ஜெயிலில் இருக்கிறார் அஸாஞ்ச். அவரை சுவீடன் தன் நாட்டுக்குக் கொடுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சே குவாராவுக்கான கவர்ச்சியும் அலையும் இன்றைக்கு ஜூலியன் அஸாஞ்சுக்கு இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. இது எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்று தெரியாது. ஆனால், உலகெங்கிலும், ஜூலியன் அஸாஞ்ச் இன்று ஒரு ஹீரோ. கட்டுகளற்ற, தடைகளற்ற இணையம் நீக்கமற நிறைந்திருக்கக்கூடிய உலகில் ஜூலியன் ஒரு பெரிய ஆதர்சம். அதிகார வர்க்கத்தையும் அரசுகளையும் குடாய்வதில், ஜூலியனுக்கு அலாதிப் பிரியம். காதில் கடுக்கனும், ஹிப்பி வாழ்க்கையும், அமைதியின்மையும் இருக்கக்கூடிய இளைஞர்களின் மத்தியில் ஜூலியன் ஒரு கல்ட் பிகர். சின்ன வயதிலிருந்தே ஜூலியன் அந்த மாதிரிதான்.

ஜூலியன் ஒரு மாயாவி ரிப்போர்ட்டர். உலகின் எதேச்சாதிகார அரசுகளின் முகமூடியைக் கிழிக்கும் சூப்பர்மேன். தொழில்நுட்பத்தையும் மறைவிடங்களையும் கொண்டு உலகின் மிகப் பெரிய அரசான அமெரிக்க யானையின் காதில் நுழைந்த கட்டெறும்புதான் விக்கிலீக்ஸ்.

அமெரிக்க தூதரகச் செய்திகளை நவம்பர் 28-ல் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தளத்தில் தந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கே அமெரிக்கா ஆடிப் போயிருக்கிறது. இந்நிலையில், அடுத்த அணுகுண்டு ரெடியாகக் காத்திருக்கிறது. ஜூலியனும் அவர் தோழர்களும் அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியின் ரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வாஷிங்டனும் நியூ யார்க்கும் கதிகலங்கிப் போயிருக்கின்றன. அது வெளிவரும் சமயத்தில் ஜூலியன் ஜெயிலில் இருப்பார். அவர் ஜெயிலில் இருந்தாலும், அதற்கடுத்த அணுகுண்டைத் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பார்.

  • தொடங்கியவர்

கடந்த சில நாள்களாக விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் பற்றி தமிழ்ப் பத்திரிகைகள்கூடப் பேசத் தொடங்கிவிட்டன. அப்படி என்றால், இது முக்கியமானதாகத்தான் இருக்கவேண்டும்!

ஜூலியன் அஸாஞ்ச் என்ற ஆஸ்திரேலியர் 2006-ல் விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தை ஆரம்பித்தார். அரசாங்க (மற்றும் மக்களைப் பாதிக்கக்கூடிய தனியார்துறை) ரகசிய ஆவணங்களைப் பதிப்பிப்பதே இந்தத் தளத்தின் நோக்கம். சில ஆண்டுகளாக ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தத் தளம் பதிப்பித்துவந்தாலும் அது நொட்டோரியஸ் (notorious) ஆக ஆரம்பித்தது, அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டபோதுதான். ஜூலை 2010-ல் அமெரிக்கா ஈராக்கில் நிகழ்த்திய போர் தொடர்பான ரகசிய அரசு ஆவணங்கள். அது போதாதென்று, இன்னும் கடுமையாக நவம்பர் இறுதியில் ஆரம்பித்தன அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆவணங்கள்.

அஸாஞ்ச்மீது ‘ஒரு மாதிரியான’ ‘வன்புணர்ச்சி’க் குற்றச்சாட்டு சுவீடன் நாட்டில் இருந்தது. (ஒரு மாதிரியான என்பதற்கான விளக்கம், தேடிப் பார்த்தால் இணையத்தில் கிடைக்கும். இதைக் குற்றம் என்றே சொல்லமுடியாது என்று நான் சொன்னால், ஆணாதிக்கவாதி என்று கருதப்படலாம். இந்தக் குற்றச்சாட்டு தூசி தட்டி எடுக்கப்பட்டது. இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்தது. அரஸ்ட் வாரண்ட் விநியோகிக்கப்பட்டு, 7 டிசம்பர் 2010 அன்று அஸாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு இடம் வழங்கியிருந்த அமேசான்.காம் ( www.amazon.com) அதிலிருந்து பின்வாங்கியது. அந்தத் தளத்துக்கான DNS server, தன் சேவையை நிறுத்திக்கொண்டது. எனவே wikileaks.org என்று உங்கள் உலாவியில் தட்டினால், எங்கும் போகாத நிலை ஏற்பட்டது. ஆனால் இணையத்தில் அப்படி எளிதில் ஒரு தளத்தை அழிக்கமுடியாது. ரக்தபீஜனின் கீழே சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் மற்றொரு ராட்சசனாக மாறுவதுபோல, பல தளங்கள், பல பிரதிகள்.

1. அமெரிக்க அரசு, தனக்கு ஆபத்து என்று நினைத்தால் எவ்வளவு தூரத்துக்குச் செல்லும் என்பதை நாம் கவனிக்கவேண்டும். தகவல்கள் முழுமையாக நம்மிடம் இல்லை என்றாலும், அமெரிக்காவின் மிரட்டலால்தான் அமேசான், விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு இடம் தரவில்லை. அதனால்தான் EveryDNS என்ற டி.என்.எஸ் சேவை வழங்கி, பின்வாங்கியது. அமெரிக்காவின் கைவண்ணம் இல்லாமல் சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் அஸாஞ்சைத் துரத்த மாட்டார்கள். அஸாஞ்சைக் கைது செய்து உச்சபட்ச தண்டனையை வழங்குவது அமெரிக்காவின் நோக்கம்.

இது ஒரு ஹை புரொஃபைல் ( high profile) வழக்கு என்பதால் இந்தத் துரத்துதலும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையும் நம் கவனத்துக்கு வருகின்றன. நம் கவனத்துக்கு வராத இதேபோன்ற நடவடிக்கைகள் எத்தனையோ. ஜனநாயகத்தை மதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நாடுகளிலேயே இதுதான் நிலை. சீனாவில் என்ன நடக்கிறது என்று யார்தான் அறிவாரோ.

2. அஸாஞ்ச் அமெரிக்க அரசின் நடவடிக்கையால் துரத்தப்படுகிறார் என்பதாலேயே அவர் செய்வது எல்லாம் நியாயம் ஆகிவிடாது. முக்கியமாக டிப்ளோமேடிக் விவரங்களை வெளியிடுவது நியாயமற்ற செயல் என்றுதான் படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் தூதரகங்கள், தகவல்களைச் சேர்த்து, அத்துடன் தூதர்கள் அளிக்கும் விளக்கங்களைச் சேர்த்து, அவற்றை தன் நாட்டில் வெளியுறவுத் துறைக்கு அனுப்புகிறது. வெளியுறவுத் துறை, அவற்றைப் பரிசீலித்து, மேற்கொண்டு தான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறது.

இதில், பல செய்திகள் வெளியுலகத்தைப் பொருத்தமட்டில் ‘வம்பு’ என்பதற்குமேல் ஏதும் இல்லை. ஒரு நாடு ரகசியமாக, மற்றொரு நாட்டையோ, தன் நாட்டு மக்களையோ அழிக்கத் திட்டமிடுவது பற்றியோ, அல்லது அதற்கு இணையானவையோ அல்ல இந்தத் தகவல்கள். அப்படி இருக்கும்போது, இவற்றைத் திருடி வெளியிடுவது நியாயமற்றது என்பது மட்டுமல்ல; சட்டத்துக்கு புறம்பானதும்கூட. இந்தத் தகவலை வெளியிடுவதால், உலகத்துக்கு நன்மை என்று எந்தவிதத்திலும் நிரூபிக்கமுடியாது. வம்பு பேச விரும்புவோரின் வாய்க்கு நல்ல தீனி.

அரசு என்பது கிட்டத்தட்ட தனி மனிதர் மாதிரிதான். தனி மனிதர் அளவுக்கு அரசின் ரகசியங்கள் காக்கப்படவேண்டியதில்லை. தனி மனிதர் ஒருவர் குற்றம் செய்தால், அதனை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியம் சட்டத்தில் இல்லை. அதனால்தான் தான் அளித்த ‘கன்ஃபெஷன்’ (confession) என்பதிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் எப்போது வேண்டுமானாலும் பின்வாங்கலாம். விசாரணை மூலமும் பிற சாட்சியங்கள்மூலமும் குற்றத்தை நிரூபிக்கவேண்டிய கடமை காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும்தான் உள்ளது.

ஆனால் சர்வ வல்லமை பொருந்திய அரசு குற்றம் செய்யக்கூடாது. குற்றம் செய்தால், குற்றத்தை உள்ளிருந்தே கண்டுபிடிக்க பிற துறைகளும் அரசில் உண்டு. குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால், நியாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டியதும், அதற்கான பரிகாரங்களைச் செய்யவேண்டியதும் அரசின் கடமை. (தனி மனிதனுக்கு அப்படியல்ல!) குற்றம் ஏதேனும் செய்து, அந்தக் குற்றத்தை அரசு மறைத்தால் ஒழிய, அது தொடர்பான அரசின் ரகசிய ஆவணங்களைத் திருடி வெளியிடுவது நியாயமற்றது, சட்டத்துக்குப் புறம்பானது என்பதே என் தனிப்பட்ட கருத்து.

இந்த வகையில் அஸாஞ்ச் செய்தது தவறு. முக்கியமாக வெளியுறவுத்துறை தொடர்பான ஆவணங்களை அவர் வெளியிட்டது. இதுபோன்ற செயல்களை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

3. ஆனால், அஸாஞ்ச் செய்தது தவறு என்றாலுமே, அவரது கையை அமெரிக்கா இப்போது முறுக்குவதும் தவறானது. ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்தாது. (அதேபோலத்தான், அஸாஞ்சின் வங்கிக் கணக்கு, பேபால் கணக்கு ஆகியவற்றை முடக்கியதால் கோபம் கொண்ட ஹேக்கர்கள், சில நிதிச் சேவை நிறுவனங்களின் தளங்களைத் தாக்குவதும். அவையும் ஏற்க முடியாதவையே.)

இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால்… நீதிமன்றம் இந்த ஆவணங்களின் சில முக்கியப் பகுதிகள் வழக்கின் தீர்ப்புக்குத் தேவை என்று கருதினால், அவற்றை மட்டும், அதுவும் நீதிமன்றம்தான், வெளியிடலாம். ஆனால் முழு ஆவணங்களை பிறர் வெளியிடுவது, சம்பந்தப்பட்ட தனி மனித சுதந்தரத்தில் தலையிடுவது.

குற்றச் செயல் நடக்காமல் இருக்குமாறு அமைப்புகளை வலுப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டும். குற்றம் செய்யக்கூடியவர்கள் என்று சந்தேகிப்பவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது நமது நோக்கமாக ஒருபோதும் இருந்துவிடக்கூடாது. இப்படி ஆரம்பிக்கும் செயல்தான் ஆர்வெல்லியன் ( Orwellian: http://en.wikipedia.org/wiki/Orwellian ) உலகுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

மொத்தத்தில்,

1. அஸாஞ்ச் பதிப்பிக்கும் பல ஆவணங்கள் முறையற்றவை. அவற்றை வெளியிடுவது நிறுத்தப்படவேண்டும்.

2. அஸாஞ்சை அமெரிக்கா முறையற்ற வழியில் நசுக்குவதை நிறுத்தவேண்டும். நியாயமான வழியில் அவரது செயலைத் தடை செய்ய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

3. அரசு அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒட்டுக் கேட்கும் உரிமையைப் பெறுகின்றன. அந்த வட்டத்துக்குள்ளாக மட்டுமே அவை தன் செயல்களைச் செய்யவேண்டும். அதற்கு மேலாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன என்றால், முறையாக அதைக் காரணம் காட்டி, தனியாக மீண்டும் ஒட்டுக்கேட்கும் உரிமையைப் பெற்று, அதற்கான நடைமுறைகளில் ஈடுபடவேண்டும்.

4. தனி மனித சுதந்தரம் காப்பாற்றப்படவேண்டும். அந்தச் சுதந்தரத்துக்குள்தான் கெட்ட காரியம் செய்வது பற்றிய திட்டமிடுதல்களும் கூட! ஆனால் கெட்ட காரியங்கள் நடவாமல் இருக்கவேண்டிய தடுப்புச் செயல்களை ஒரு சமுதாயமும் அரசும் திட்டமிடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.