Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 ஆண்டு உலகப் பொருளாதாரம் எப்படியிருக்கப் போகிறது..

Featured Replies

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரம் எப்படியிருக்கப் போகிறது..

புலம் பெயர் தமிழ் மக்கள் அடுத்த பொருளாதார மந்தத்திலும் சிக்குப்படாமல் புத்திசாலித்தனமாக தப்ப ஆவன செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டு ராசி பலன் எப்படியிருக்கும், குரு பெயர்ச்சி எப்படி மாறப்போகிறது என்று ஜோதிடம் பார்ப்பதைவிட முக்கியமானது அடுத்த ஆண்டின் உலகப் பொருளாதாரமும் நீங்கள் வாழும் நாட்டின் பொருளாதாரமும் எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிவதுதான்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் அடுத்த ஆண்டு பொருளாதாரம் பிரகாசமாக அமையாது என்கிறார்கள் நிபுணர்கள். ஓ.ஈ.சி.டி நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 இல் இருந்து 2.0 வரையே காணப்படும். இது BRIK நாடுகளுடன் ஒப்பிட்டால் மிகக்குறைந்த வளர்ச்சியாகும்.

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார பெரு மந்தத்தின் இரண்டாவது பள்ளம் வரவிருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் இதில் விழுந்து மறுபடியும் ஒரு குலுங்கு குலுங்க இருக்கிறது. அதில் ஏற்படும் அதிர்வுகள் பல நாடுகளை பாதிக்கும். அதேவேளை BRIC நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளிலும் 8 இலிருந்து 9 வீத பொருளாதார வளர்ச்சி காணப்படும்.

இந்த நான்கு நாடுகளிலும் வர்த்தகச் சுழர்ச்சியும், கொள்வனவு சக்தியும் அதிகரித்துக் காணப்படும். ஆகவே பங்குச் சந்தைகளில் முதலிடுவோர் இந்த நாடுகளின் பங்குகளை குறியாக வைத்து தமது முதலீடுகளை நகர்த்தினால் கூடுதல் இலாபமடைய வழியுண்டு என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும் மக்களின் கொள்வனவு சக்தி முந்தய காலங்களுடன் ஒப்பிட்டால் வீழ்ச்சியடைந்தே காணப்படும். பெருந்தொகையானவர்கள் சகல நாடுகளிலும் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட காரணத்தால் பெரும் கொடுப்பனவு சிக்கல்களில் இருந்து அரச கஜானாக்கள் காப்பாற்றப்படும். அதேவேளை அடுத்த ஆண்டு பாரிய சம்பள உயர்வுகள் அறிவிக்கப்படாமல் இருப்பதும் அரசுகளுக்கு சிறிய ஆறுதல் கொடுக்கும். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் உயர்வு ஏற்படவுள்ளது, இதற்கு அமைவாக சம்பள உயர்வு கோருவதால் வரும் சிக்கல்களை நாடுகள் சந்திப்பது தவிர்க்க முடியாதது.

தற்போதுள்ள உலகப் பொருளாதார மந்தம் பாரிய மாற்றங்கள் இன்றி நகர்ந்து கொண்டே இருக்கும், இதில் பாரிய திருப்பங்கள் எதுவும் நடைபெறமாட்டாது. ஆனால் மேலும் பல வேலையிழப்புக்கள் தொடர்கதையாகும். வங்கிகள் பலத்த நஷ்டத்துடன் தாம் சந்தித்துள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுகளை காணும். பொருளாதார சுழர்ச்சி வேகம் போதாமையால் பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணப்படும். பொருளாதாரம் வீழ்ந்து பின் சிறிது உயர்ந்து மறுபடியும் வீழப்போகிறது. இதனால் பல நாடுகளும் கவலை கொண்டாலும் ஒரு பொருளாதார புயலை சந்தித்த அனுபவம் இருப்பதால் அடுத்த புயலையும் அதுபோல சந்திப்பதே ஒரே வழியாகும் என்கிறார்கள் டேனிஸ் பொருளியல் நிபுணர்கள். ஆக விழுந்து எழும்புவதைவிட உலக மன்றில் தீர்வு கிடையாது என்பதே யதார்த்தமாகும்.

கடந்த 10 – 15 வருடங்களாக கைத்தொழில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வட்டிவீதம் பூஜ்ஜியத்தை தொட்டுள்ளது. பணவீக்கத்தின் தாக்கங்கள் பல நாடுகளில் ஏற்படும். அமெரிக்க டாலருக்கு இணையான பெறுமதியை பல நாடுகள் குறைத்துள்ளன. இதில் மோசமான பத்து நாடுகளின் வரிசையில் சிறீலங்கா கடைசிக்கு முதலாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு இணையாக -51 வீதத்தை பெறுமதி குறைத்து மோசமான இடத்தில் உக்ரேன் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக -50 வீத பெறுமதி குறைத்து இரண்டாவது மோசமான இடத்தை பெற்றுள்ளது சிறீலங்கா. டாலருக்கு இணையாக மோசமான குறைப்பை செய்துள்ள இதர எட்டு நாடுகளின் விபரம் வருமாறு. கொங்கொங் -49 வீதம், சீனா -43, தாய்லாந்து -32, பிலிப்பைன்ஸ் -41, மலேசியா – 41, எகிப்து – 39, ரஸ்யா – 38, தைவான் – 39 வீதமும் பெறுமதி இறக்கம் செய்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் டபிள் டிப் ( சாணேற முழம் சறுக்கும் நிலை ) பாதிப்பு இந்த நாடுகளில் பிரதிபலிக்கும்.

டேனிஸ் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அதன் வளர்ச்சி வெறுமனே 1.1 முதல் 1.6 வரையே காணப்படும். இன்றுள்ளதுபோலவே அதன் நிலை காணப்படும். வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிறிய வீழ்ச்சி காணப்படும். ஏற்கெனவே பல நெருக்கடிகளை சந்தித்துவிட்ட டென்மார்க்கிற்கு அற நனைந்தவனுக்கு கூதல் என்ன குளிர் என்ன என்ற நிலைதான் காணப்படுமென டென் டென்ஸ்க வங்கி இயக்குநர் ஸ்ரீவ் பொக்கேயின் கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் அடுத்த ஆண்டு ஆகா ஓகோ என்று கூறமளவிற்கு உலகப் பொருளாதாரம் இருக்காது என்பதே நிஜமாகும். புலம் பெயர்ந்ந தமிழ் மக்கள் வேலைகளுக்கு லீவு எடுப்பதை தவிர்த்து, நேரம் தாமதமாக போவதைத் தவிர்த்து, வேலையிழப்பிற்கு காரணமாகக் கூடிய குறைபாடுகளை கூடுதலானளவு தவிர்த்து நடக்க வேண்டும். வேலை, பொருளாதாரம் இவை இரண்டையும் முதலாவதாக வைத்து தமது வாழ்க்கை வியூகத்தை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2011 ல் வரப்போகும் அடுத்த பள்ளத்தில் விழுந்து எலும்பை முறிக்க நேரிடும்.

அலைகள் பொருளாதார அவதானிப்புப் பிரிவு 20.12.2010

பொருளாதாரம் – இம்மாத டேனிஸ் சஞ்சிகையில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=52675

  • தொடங்கியவர்

தனது வட்டி வீதத்தை அதிகரிக்கும் சீனா / வங்கிகளின் பண கையிருப்பையும் கூட்ட சொல்லியுள்ளது

2010ம் ஆண்டின் டிசம்பர் 26ம் நாள் முதல், நிதி அமைப்புகளின் ரென்மின்பி வைப்புத் தொகை மற்றும் கடனின் வட்டி விகிதம், 0.25 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று சீன மக்கள் வங்கி 25ம் நாளிரவு அறிவித்தது.

2011ம் ஆண்டு சீனாவில் பணவீக்கம் ஏற்படும் சாத்தியக்கூறு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இவ்வாண்டுக்குள் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவது, எதிர்காலத்தில் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கும். மலிவான கடன் மீதான சந்தையின் அளவுக்கு மீறிய தேவையைத் தடுக்கத் துணை புரியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தார்.

http://tamil.cri.cn/121/2010/12/25/104s104373.htm

  • தொடங்கியவர்

உலக பொருளாதார நெருக்கடி- ஒரு பார்வை

அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, "டாலரில்' தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.

"டாட் காம் பபுள்' நெருக்கடி : கடந்த 1990களில், இணையதள நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், "டாட் காம்' சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் என்பதன் மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து 70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, "பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 சதவீதம் இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் : "டாட் காம் பபுள்' நெருக்கடி காலகட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்க ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா. தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்டதால் இந்தக் கடன், "சப் ப்ரைம்' கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர்.இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

"சப் ப்ரைம்' நெருக்கடி : கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் "கடன் பத்திரங்களாக' மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்?கடனுக்கான வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. "வீடு வேண்டாம்' என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் "கரன்சி' இல்லை; மாறாக, பத்திரம் தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், "சப் ப்ரைம்' நெருக்கடி என்றனர்.

சமச்சீரற்ற நிலை : அமெரிக்காவின் "செக்யூரிட்டைசேஷன்' என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, "ரேட்டிங் ஏஜன்சி' மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின.அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை "உலக சமச்சீரற்ற நிலை' என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.

அமெரிக்க நுகர்வு கலாசாரம் : இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? "வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், "குடும்பம்' என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்தது தான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம் : தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது.அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்து தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, "ட்ரஸ்ட்' என்ற நூலில், "எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்' என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மனநிலை : அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடையவை தான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும்.அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்லவில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத் தான் நமது கலாசாரம் தவறு என்கிறது.ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, "நான் திவாலாகி விட்டேன்' என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் துவங்க முடியும். இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் துவங்க முடியாது.அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு சதவீதம் பேருக்குத் தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 சதவீதம் பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.இந்தியாவின் மொத்த முதலீடு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீடு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும்.நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீடாகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், "இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்' என்றனர். ஆனால், அது நடக்கவில்லை.கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.

ஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது "யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்'குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் "யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை தான்கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர். அவை:

* தவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 17 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

* சந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.

* இணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட "டாட் காம் பபுள் நெருக்கடி!'

* அமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

*"சப் ப்ரைம்' நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.

* கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.

வேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர். அவை:

* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.

*உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.

*உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.

நிதிக் கொள்கை :உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140131

  • 4 months later...
  • தொடங்கியவர்

ஐரோப்பிய கடன் பிரச்சனை செல்வந்த நாடுகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது - EU debt crisis spreads to richer nations

கிரீஸ்,ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பொருளாதார நிலை தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போய் கொண்டிருப்பது உலக பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

Monday’s market turmoil came after Spain’s Socialist Party suffered an election rout, confidence in Italy’s economic reform efforts fell and fresh data showed that euro zone growth is slowing after a remarkable spurt early this year.

http://www.theglobeandmail.com/report-on-business/eu-debt-crisis-spreads-to-richer-nations/article2032138/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.