Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடம்மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - கட்டித் தழுவியபடி சினிமா குத்தாட்டம்

இரவு 8.00 மணியிருக்கும். இருள் கவிந்தவேளை. புத்தூரிலுள்ள எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறேன். பருத்தித்துறை வீதி வழியாக எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. செல்லும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூங்காவனத் திருவிழா களைகட்டியிருந்தது. பலவருடங்களாக இரவு நேரத் திருவிழாக்கள், இரவு நேர நிகழ்வுகள் என்பவற்றுக்கெல்லாம் பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை தெரிந்த விடயமே. ஆனால், தற்போதைய சூழலில் இரவுநேர நிகழ்வுகளுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் இராப்பொழுதைக் கழிக்கின்றனர்.

அதிலொரு அங்கமாக அந்த சிற்றூரின் பெருமையைப் பறைசாற்றும் சிவன் கோயிலின் பூங்காவனத் திருவிழா. கோயிலைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் வண்ணக் கொடிகளாலும் வண்ண ஒளிகளை உமிழும் மின்குமிழ்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த பிரதேசப் பரப்பில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளின் அலறல்கள் ஒரு புறம் காதைப்பிழந்தன.

அந்தளவிற்கு 10 இற்கும் மேற்பட்ட ஒலி பெருக்கிகள் ஆலய சுற்றாடலின் அமைதியைக் குலைத்தன. மோட்டார் சைக்கிளின் வேகத்தை தணித்து அந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி விட்டு எனது பயணத்தைத் தொடர்ந்தேன். புத்தூரிலுள்ள உறவினருடன் உரையாடி விட்டு மீண்டும் அதே வழியாக எனது வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்த போது நேரமோ இரவு 10.00 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. வரும் வழியாக அதே சிவன் ஆலயத்தை அடைந்த போது சினிமாப்பாடல்கள் அப்புனித சூழலை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

பெரும்பாலான ஆலயங்களில் பூங்காவனத் திருவிழாக்களின் போது பணத்தின் இருப்பை பறைசாற்றும் பாட்டுக் கோஷ்டிகளில் ஒன்றுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது. பல வருடங்களாக இத்தகைய இசை நிகழ்ச்சியை ரசிக்கும் பாக்கியம் கடந்த காலங்களில் கிடைக்காமல் போயிருந்தது. எனவே சிறிது நேரம் இந்த பாட்டுக்களைக் கேட்டு ரசித்துவிட்டுச் செல்லாம் என்ற தவிப்பில் அங்கு நடக்கும் நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். யாழ் நகரின் புகழ் பூத்த இசைக்குழவினர் தமது இசையால் ரசிகர்களை குஷிப்படுத்தியவாறு இருந்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு திரண்டிருந்தனர்.

முன்னர் இரவு வேளை என்றதுமே நேர காலத்துடன் வீடுகளுக்குள் முடங்கிப் போகும் மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல ஒருவித பிரமிப்பில் திளைத்திருந்ததைக் கண்டேன். பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகையில் அவர்களின் முகத்தில் எத்தகைய பூரிப்பு இருக்குமோ அதேபோல் அங்கு திரண்ட மக்களின் முகங்களிலும் ஒருவித பூரிப்பு பளிச்சிட்டதை அவதானிக்க முடிந்தது.

இசைக்குழுவின் பிரபல அறிவிப்பாளரின் கணீரென்ற காந்தக் குரல் பார்வையாளர்களை வசீகரித்தது. அந்த அறிவிப்பாளர் தனது வசீகரக் குரலில் அடுத்த பாடலுக்கான அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கிறார். அறிவிப்பு முடிகிறது, பாடகர்கள் மேடையில் தோன்றுகிறார்கள். சுறா படத்தில் வரும் 'நான் நடந்தால் சரவெடி' என்ற பாடல் தூள்கிளப்புகிறது.

அந்தப் பாடலின் இசையினால் உந்தப் பெற்ற பலர் தங்களை மறந்து ஆடிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாரத விதமாக ஒரு இளம் பெண் மேடையின் முன் தோன்றினாள். சுமார் 20 வயதிருக்கும். இறுக்கமான ஜீன்சும் ரிசேட்டும் அணிந்த பருவப் பெண். பேரழகி இல்லாவிட்டாலும் இளம் பெண்ணுக்குரிய எடுப்பான தோற்றமும் பளபளப்பும் கதகதப்பும் அவளில் தெரிந்தது. பார்வையாளர்களின் விழிகள் அனைத்துமே அவ் இளநங்கையின் மீதே கூர்மையடைந்திருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற அங்காலாய்ப்பில் பார்வையாளர் இருந்தனர். அவர்களைத் திணறடிப்பது போல பாட்டுக் கோஷ்டியை ரசித்தவாறு இருந்த ஒரு இளைஞனின் கையைப்பிடித்து இழுத்ததாள் அந்தப் பெண். மேடையில் இருவரும் குத்தாட்டம் போட்டனர்.

நவீன சினிமாவின் பாடல் காட்சிகளில் வரும் அத்தனை அம்சங்களையும் அந்த இளம் ஜோடிகளில் கண்டுகொண்டேன். ஒருவரையொருவர் கட்டித் தழுவியபடி அவர்கள் போட்ட ஆட்டம் அங்கு நின்ற அனைவரையும் வாயடைக்க வைத்தது. அந்தப் பாட்டு முடியும் வரைக்கும் அந்த ஜோடி தமது ஆட்டத் திறமையை வெளிப்படுத்தியபடியிருந்தனர். அவர்களது ஆட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில் கூடி நின்ற இளைஞர்களின் கரவொலிகள், விசிலடிகள் ஒரு புறம் அவர்களின் குத்தாட்டத்தை பார்க்க முண்டியடித்த மக்கள் இன்னொரு புறம் என பார்வையாளர் அரங்கமே ஆர்ப்பரித்தபடி ,அதிர்ந்தபடி இருந்தது. ஈஸ்வரா! உனது சந்நிதானத்திற்கு முன்னாலேயே இப்படியான அலங்கோலங்கள் எல்லாம் நடந்தேறுகின்றதே இது எல்லாம் எம் இனத்தின் தலைவிதியா? அல்லது நீ செய்யும் சதியா? என எண்ணி என்னையே நொந்து கொண்டேன்.

அதற்குப் பின்னர் என்ன நடந்திருக்கும். யார் அந்தப் பெண்? எப்படி அவளால் இவ்வாறு செய்ய முடிந்தது? அந்த இளைஞனுக்கும் யுவதிக்கும் ஏற்கெனவே ஏதேனும் உறவுத் தொடர்புக்கள் இருந்ததா? என்ற பல கேள்விகள் பலர் மனங்களைத் துளைத்திருக்கும். முன்னர் இரவு வேளை என்றதுமே பெண்கள் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள். ஆனால் தற்போது நிலமை தலை கீழாக மாறிவிட்டது. நாகரிகம் என்ற போர்வையில் அநாகரீகமாக நடக்க முற்படுகின்றனர். தற்போது செல்லிடத் தொலைபேசிக் கலாசாரம் மேலோங்கியிருப்பதால் யாழ் குடாநாட்டில் நடந்தேறுகின்ற சமூகச் சீரழிவுகளுக்கெல்லாம் அதுவும் ஒரு ஊந்துகோலாக அமைகிறது.

நாளுக்கு நாள் கைத்தொலைபேசி பாவனையாளர்களின் தொகை அதிகரித்துச் செல்கின்றது. இன்றைய அவசர உலகில் மக்களின் பல்வேறு அவசரத் தேவைகளுக்கு கைத்தொலைபேசி பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதெனில் மிகையில்லை.

ஆனால், அதை தவறாகப் பயன்படுத்தும் கலாசாரம் மேலோங்கியிருப்பது வேதனைக்குரியது. பாடசாலைகளுக்குக் கூட வயது குறைந்த மாணவர்கள் கொண்டு சென்று பயன்படுத்துகின்றார்கள். இன்று வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கைத்தொலைபேசி என்ற மாயைக்குள் அமிழ்ந்து கிடக்கின்றனர். மது போதைக்கு அடிமையானவர்கள் அவற்றிலிருந்து விடபடமுடியாமல் தவிப்பது போல கைத்தொலைபேசிப் பாவனைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட முடியாதவர்களாக தவிக்கின்றனர். இது எமக்கு சாபக்கேடே தவிர வேறொன்றுமில்லை.

அளவுக்கு மீறிய கைத்தொலைபேசிப் பாவனையால் வாழ்வியல் யதார்த்தத்தை உணராதவர்களாகப் பலர் இருப்பது விசனிக்கத்தக்கது. குடாநாட்டில் கலாசாரச் சீர்கேடுகள் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. இதற்கு முறையற்ற தொலைபேசிப்பாவனை முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆக, இன்றைய நவீன யுகத்தில் தகவல் தொடர்பாடல்களின் அசுர வளர்ச்சியால் உலகமே எமது கைக்குள் அடங்கியிருக்கிறது. அந்தளவிற்கு வியத்தகு விஞ்ஞானத்தின் வளர்ச்சி உலகத்தேயே ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால் அத்தகைய தகவல் தொடர்பாடல்களை தவறான நடவடிக்கைகளுக்கு பிரயோகப்படுத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறன.

அத்தகைய அளவுக்கதிகமான எல்லை மீறிய பயன்பாடுகள் புற்றுநோய் போல எமது சமூகத்தில் நிலையெடுத்துள்ளது. இதனால் பல்வேறு பட்ட உடல், உள, சமூக, கலாசார பிரச்சினைகளுக்கும் அத்திவாரமிடுகின்றன. எனவே எதிர்காலத்தில் கைத்தொலைபேசிகளின் எல்லை மீறிய பயன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்பது விடை தெரியாத புதிராகவே இருக்கப்போகிறது.

உதிஸ்டிரன்

http://www.yarlmann.lk/head_view.asp?key_c=580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.