Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனுக்கு எதிர்காலம் உண்டா?

Featured Replies

தமிழனுக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வி சிக்கல் நிறைந்த கேள்வி. எளிதில் பதில் அளிக்க முடியாது என்பது மட்டுமல்ல, இதற்குப் பதில் அளிப்பது கடினம் என்று தான் கூற வேண்டி இருக்கும். ஆனால் இந்தக் கேள்வி இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பப்பட்ட கேள்வியாக விளங்குகிறது. பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைந்தது 1921ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11ஆம் தேதி. அவன் மனதிலேயே இக்கேள்வி எழுந்துள்ளது. "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று ஒரு பேதை உரைத்தான் என்று கோபம் கொள்ளும் பாரதி, மற்றுமோர் இடத்தில் "விதியே விதியே தமிழ்சாதியை என்ன செய்ய நினைத்தாய்?" என்று கேள்வி கேட்டு ஏங்குகிற காட்சியையும் காண்கிறோம்.

தமிழன் வாளாத நாடில்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை:

"தமிழன் வாழாத நாடில்லை, ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை" என்று பேசுமளவுக்கு, ஏறக்குறைய 60 நாடுகளில் சிதறுண்டு வாழ்கிறான் தமிழன். உலகின் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன் என்ற முறையில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற தமிழர் நிலையை விளக்க என் உள்ளம் விரும்புகின்றது. ஆனால் சில இட நெருக்கடி காரணமாக அவை அனைத்தையும் இங்கு விளக்குவது கடினம்.

தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி போன்ற நாடுகளில் இந்திய வம்சாவழி தமிழ்மக்கள் மூன்றாம், நான்காம் தலைமுறையாக வாழ்கிறார்கள். கனடாவிலும் ஹாயானா நாட்டைச் சேர்ந்த, 3ம், 4ம் தலைமுறைத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். தென்னாபிரிக்காவிலும், மொரீசியசிலும், பிஜி தீவிலும் தமிழர் தம் தனித்துவத்தைப் பேண முனைகின்றனர். தமிழைப் பேச அவர் முயல்கின்ற போதிலும் தமிழ் பேச முடியாத தத்தளிப்பு நிலவுகிறது. கனடாவில் வாழ்கின்ற ஹாயானாவிலிருந்து வந்த தமிழர்கள் தமிழை முற்றாக மறந்த நிலையில் இருக்கின்றனர். தாங்கள் தமிழர் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

ஏறக்குறைய 1827 இல் இங்கு வருகை தந்த இவர்கள் மூன்னூறு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தாம் தமிழர் என்ற உணர்வே அற்ற நிலையில் தம்மை அறியாமலே சில தமிழ்ப் பெயர்களைத் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த நிலை தமிழகத் தமினுக்கும், ஈழத்தமிழனுக்கும் ஏற்படக் கூடாது.

தமிழகத் தமிழனும், தமிழீழத் தமிழனும் ஒப்பு நோக்கு

தமிழகத் தமிழனும், தமிழீழத் தமிழனும் அழிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பு நோக்குகையில் ஒரு வேறுபாடு உண்டு. தமிழகத் தமிழன் தான் அழிகிறான் என்று உணராமல் அழிந்து கொண்டிருக்கிறான். ஈழத்தமிழன் பெரும்பான்மையோர் தாம் அழிகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு ஏதோ செய்ய வேண்டும் என்ற நிலையில் போராடிக் கொண்டும் வாழ்கிறார்கள்.

தமிழகத் தமிழர்கள் அனைவர் மீதும் நான் குற்றம் சுமத்தவில்லை. ஆனால் விதிவிலக்காக தமிழையும் தமிழரையும் வாழ்விப்பதற்கு தற்கொலை செய்த தமிழக்தமிழர்களை நாம் மறப்பதற்கில்லை. இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து மறைந்த மாவீரர்களை நாம் இங்கு மறப்பதற்கில்லை. ஈழத்தமிழர் இன்னல் கண்டு வெதும்பி அழுது தம்முயரை மாய்த்த முத்துகுமாரனையும் மற்றும் இஸ்லாம் தழுவிய இன்னுமொரு தமிழனையும் நாம் மறப்பதற்கில்லை. அவர்கள் அனைவருக்கும் நாம் தலைசாய்த்து வணக்கம் செலுத்துகின்றோம்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் வடமொழியின் வல்லாண்மைக்கு அடிமையாகி வடமொழிப் பெயர்களைப் பெருமளவுக்கு தாங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். இன்று சுவாமி வேதாசலம் என்ற முத்தமிழ் அறிஞர் மொழியை முற்றாக ஆய்ந்த நிலையில் சுவாமி வேதாசலம் என்ற பெயரை மறைமலை அடிகளார் என மாற்றியதன் விளைவு பெயர் மாற்றம் உட்பட தமிழ் நாட்டில் மீண்டும் மறுமலர்ச்சி உருவாகியது. தமிழ் மன்றங்களிற் தமிழ் தலைதூக்கியது. கோயில்களிலும் தமிழ் வழிபாடு வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. வடமொழி வல்லாண்மையை அடுத்து ஆங்கில ஆதிக்கத்துக்கு இன்று தமிழர்கள் ஆளாகியுள்ளதன் விளைவு தமிழர் தமிழ் பேசாது தமிங்கலம் பேசுகின்றனர். அம்மா, அப்பா, மாமா என்ற சொற்களுக்குப் பதில் டடி, மம்மி, அங்கிள் என்ற சொற்கள் தமிழ் மக்களின் நாவில் நடம்புரியத் தொடங்கியுள்ளன. வடமொழி வல்லாண்மை ஒருபுறம், ஆட்சி மொழி என்ற முறையில் ஹிந்தி ஆதிக்கம், உலக மொழி என்ற பெயரில் ஆங்கிலம் அரசோட்ச முயல்கின்ற காட்சி எம்மைக் கண்ணீர் மல்கச் செய்கிறது.

தமிழகத்தில் வழிபாடு என்ற பெயரில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது. இசை என்ற பெயரில் தெலுங்கு தலைதூக்கியுள்ளது. தேசிய மொழி என்ற பெயரில் இந்தி திணிக்கப்படுகிறது. அனைத்துலக மொழி என்ற நிலையில் ஆங்கிலத்திற்கு அடிமையாகின்ற போக்கு நிலவுகிறது. அந்நிலையில் எங்கே தமிழ் என்ற கேள்வி எழுகிறது. ஈழத்திலும் இதே நிலை நிலவுகிறது. தேசிய மொழி என்ற நிலையில் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுகிறது, ஈழத்தில் தேசிய மொழி என்ற நிலையில் சிங்களம் திணிக்கப்படுகின்றது. ஆனால் அனைத்து நிலையிலும் தமிழகத்தமிழனும், ஈழத்தமிழனும் அடிமையாகத் தான் இருக்கிறான்.

தமிழனின் தாயம் பறிபோகின்றது

எனினும் இன்றைய நிலையில் ஈழத்தமிழனை வாட்டி வதைப்பது மொழியை மிஞ்சுகின்ற நிலையில் தமிழனின் தாயகம் திட்டமிட்டு ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு சிங்கள அரசுகளினாலும் அழிகப்பட்டு வருகிறது. ஆனால் அண்மையில் தமிழ் மண் பறிக்கப்படுகின்ற தன்மை நிமிடத்துக்கு நிமிடம் நடக்கின்றது. "நித்தமும் தவம் செய்யும் குமரி எல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு" என்று பாரதி பாடிய நிலையிலும் வடமாலவன் குன்றம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதாவது கோடிக்கணக்கில் வருவாய் பெற்றுத் தரும் திருப்பதி இப்போது எம்கையில் இல்லை. நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை எம்மிடமிருந்து பறிக்கப்படும் ஆபத்து அன்று நிலவியது.

குமரியோ எமக்குத் தொல்லை, நெல்லையே எமக்கு எல்லை என்று கூறி திருநெல்வேலியை மட்டும் எல்லையாகக் கொண்டு சோம்பேறித் தமிழர் சிலர் நிறைவடைய எண்ணியதுண்டு. ஆனால் நற்றானியலும், நேசமணியும், குஞ்சிநாடார் போன்றோர்; போரிட்டதன் விளைவு தென்குமரி இன்னும் எங்கள் கையில் உண்டு. விழிப்போடு இல்லாவிடின் குமரி பறிபோகும் ஆபத்து தொடரும். வடமாலவன் குன்றத்தைக் காப்பாற்ற சிலம்புச்செல்வர் மா.பொ.சி. நடாத்திய போராட்டத்தை நாம் நன்றியுணர்வோடு நினைவு கொள்வோமாக. எனினும் மக்கள் ஆதரவற்ற நிலையில் வடமாலவன் குன்றத்தை இழந்து விட்டோம், திருத்தணியோடு நிறைவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஈழத்தைப் பொறுத்த வரையில் அம்பாறையின் அபகரிப்போடு தொடங்கி,; நித்திலம் கொளிக்கும் கோணமாமலைக்கும் கொடுமைகள் சூழ கோணேசன் கோயிலும் எம்மிடமிருந்து பறிபோகின்ற பேரின்னல் எம்மைத் தொடருகிறது. கோணேசர் கோயிலில் "கோணேசா அருள்னேசா" என்ற குரலோடு "கோணமலை காணாத கண்ணென்ன கண்ணே கும்பிட்டு இல்லாத கையென்ன கையே" என்ற குரலுக்குப் பதிலாக "புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தமிழன் மரணம் கச்சாமி" என்ற வெறிச்கூச்சல் சிங்கள கும்பலால் பாடப்படுகிறது. சித்தார்த்தன் சிலை எங்கும் எழுப்பப்படுகிறது.

சிங்கக் கொடியும் எங்கும் பறக்கிறது. சித்தார்த்தனுக்கும் சிங்கக் கொடிக்கும் என்ன உறவோ நாமறியோம். உலகின் தலை சிறந்த இயற்கைத் துறைமுகம் எம்மிடம் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எம்மை எதிர்நோக்கியுள்ளது. மூன்று போக விளைச்சல் உள்ள பூமியை நாம் இழக்கப் போகிறோமா என்ற கேள்வி எம்மை வாட்டி வதைக்கிறது. கந்தளாய், அல்லை, முதலிக்குளம் போன்ற நீர்ப்பாசனக் குளங்கள் எம்மிடம் இருந்து ஏற்கனவே பறிக்கப்பட்டுள்ளன. கிண்ணியா வெந்நீருற்றின் ஆட்சி அதிகாரத்தை சிங்கள அரசு பறித்துள்ளது. திருமலையில் உள்ள கனிமப் படிவங்களும் எம்மிடமிருந்து பறிக்கப்படுகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக வடக்குக் கிழக்கை இணைக்கும் இணைப்புப் பாலம் திருகோணமலை. அந்த இணைப்புப் பாலம் துண்டிக்கப்படின் தமிழர் தாயகம் முற்றாகத் துண்டிக்கப்படும். சுருங்கக் கூறின் திருமலை இப்போது எரிமலையாக உருவெடுக்கின்றது.

மீன்பாடும் தேன்நாட்டை மீட்போமா?

மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பும் எம்மிடம் இருந்து பறிபோய்கொண்டிருக்கின்றது. முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகள் பிறந்த மட்டக்களப்புக் காரைதீவிற்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மட்டுநகர் வாவி புகழ் பாடும் எமது அரசவைக் கவிஞர் காசி ஆனந்தன் பிற்நத மண் மட்டக்களப்பு என்பதை நாம் மறவாது இருப்போமாக.

கேடுகள் நீக்கும் கேதீஸ்வரனுக்கும் கேடுகள் சூழ்கிறது

இந்த நிலம் பறிபோகிற தன்மை தொடர்வதன் விளைவு கேடுகள் நீக்கும் கேதீஸ்வரனுக்கும் கேடுகள் சூழ்ந்துள்ளன. புதை பொருள் ஆய்வு என்ற பெயரில் தமிழர் வரலாறு புதைக்கப்படுகிறது. மாதோட்ட நந்நகரை இழக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளோம். மடுமாதாவின் எதிர்காலமும் ஏக்கம் நிறைந்ததாக விளங்குகிறது. இன்று தமிழனுக்கு வருகின்ற ஆபத்து தமிழன் வணங்குகின்ற தெய்வங்களுக்கும் ஆபத்தாக உருவாகியுள்ளது. கதிர்காமக் கந்தன் இப்போது கத்துறகம தெய்வோ ஆக மாற்றப்பட்டுள்ளான். முனீஸ்வரம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர் எம்மை முடித்துக்கட்ட எடுக்கப்பட்ட முயற்சி

பறிபோகும் கதை தொடர முல்லைத்தீவிலும் முல்லைத்தீவிற்கு வளமூட்டும் மணலாறு வலியோயாவாக சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் வெறிகொண்ட சிங்கள அரசு ஏறக்குறைய இருபதுநாடுகளின் துணையோடு ஈழத்தமிழன் வரலாற்றினை முடித்துக்கட்ட - முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முனைந்துள்ளது. இயற்கைவளம் உள்ள முல்லைத்தீவும் வணங்கா வன்னி மண்ணும் இப்போது சிங்களவர் கையில் உள்ளது. சீனனும், இந்தியனும் சிங்களவனுக்குப் பக்க பலமாக தமிழரை அழிப்பதில் பேருவகையோடு செயற்படுகின்றனர். சிங்கள இனவெறிக்கு எல்லையே இல்லை எனக் கூறும் அளவுக்கு முருகண்டிப் பிள்ளையாரையும் முற்றுகையிட்டு சிஙகள இராணுவமுகாம்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழர் பண்பாட்டுத் தலைநகர் யாழ்ப்பாணமும் பறிபோகும் நிலை

முருகண்டியில் வெறியாட்டம் ஆடிய சிங்கள அரசு தமிழனின் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்குகின்ற யாழ்ப்பாணத்தைத் தம் கைவசமாக்க முயற்சிகள் பலவற்றில் முனைந்துள்ளது. நயினாதீவில் புத்தகோயில் வழிபாட்டுக்கு வந்துள்ளோம் என்று கூறுகின்ற சிங்கள இனம் நயினை அம்மனையும் விரைவில் அப்புறப்படுத்தினால் அதில் வியப்பில்லை. சங்கமித்தை எப்போது வந்தாள் என்பது எமக்குத் தெரியாது ஆனால் அவள் வந்தாள் என்று கூறி மாதகலில் சங்கமித்தைக்குச் சிலை எழுப்பியுள்ளனர். அங்கு சிங்களவரின் எண்ணிக்கை பெருகியுள்ளது.

தமிழராண்ட கந்தரோடைப் பகுதியையும் தமதாக்க வரலாறு திரிக்கப்படுகிறது. மணிமுடிதாங்கிய மன்னர் முடியோடு, கொடியோடு, சீரோடு, சிறப்போடும் ஆண்ட தலைநகரம் நல்லூர். அங்குள்ள நல்லூர் முருகன் கோயிலில் செருப்புகளைத் தலையில் தாங்கிக் கொண்டு சிங்கள ஆடவரும், சிங்களப் பெண்களும் வலம் வருகின்றனர். திலீபனின் சிலை சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. கிட்டுவின் பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. நல்லூர்க் கோயிலுக்கு அருகிலுள்ள நாவலர் மண்டபத்துக்கு அடுத்து என்ன நடக்குமோ என்பது ஒரு கேள்வியாக விளங்குகிறது. "என்னை எனக்கு அறிவித்த என்குருநாதன் பித்தனென்று பிறர் பேசும் பெருமானாகிய செல்லப்பர்" நல்லூர் தேரடியில் தான் வாழ்ந்தார் என்று கொழும்புத்துறை யோகசுவாமிகள் பாடுகிறார். நல்லூர்த் தேரடிக்கு தீங்கு ஏற்படாது என்று எவரும் உத்தரவாதம் தரமுடியாது.

தீக்கிரையான யாழ் நூலகம் எந்நிலைக்கு ஆளாகுமோ?

தென்னாசியாவில் தலைசிறந்த நூலகம் என்று யாழ்ப்பாண நூலகம் வர்ணிக்கப்படுவதுண்டு. 1981இல் நூலகம் எரிக்கப்பட்டது. அண்மையில் வெறிகொண்ட சிங்களக் கும்பல் அடாத்தாக இந்நூலகத்துள் புகுந்து நூல்களை அங்கு இங்காக தூக்கியெறிந்துள்ளனர். தந்தை செல்வாவின் சிலையில் ஒருபகுதி நாசமாக்கப்பட்டுள்ளது. வெறியாட்டம் தொடர யாழ்ப்பாணத் தொடர்வண்டி நிலையத்தில் புகுந்து அப்பகுதி தமக்கே உரியது என்று உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளது சிங்கள இனம். சிங்கள அமைச்சர்கள் அங்கு வருகைதந்து இம்மக்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுத்ததோடு அங்குள்ள காணிகளையும், அங்குள்ள வீடுகளையும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று யாழ் அரசாங்க முதல்வர் வற்புறுத்தப்படுகிறார் - அச்சுறுத்தப்படுகிறார். இவ்வச்சுறுத்தலை அடுத்து கொழும்புத்துறை மணியம் தோட்டம் சிங்கள மயமாக்கப்பட்டுள்து.

பின்பு சடுதியாக இரவோடு இரவாக யாழ் நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள நாவற்குழியில் தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் வீடுகள் சிலவும் அபகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வலோத்கார நிகழ்ச்சி எப்படி நடைபெற்றது என்று வினா எழுப்பப்பட்டபோது நாட்டின் குடியரசுத் தலைவர் - மன்னிக்கவும் கொடியரசின் தலைவர் தனக்கிது நடந்தது தெரியாது என்றும் தன்னைச் சங்கடத்தில் மாட்ட யாரோ செய்த சதி என்றும் கூறிய இவர் எனினும் அங்கு குடியேறிய அம்மக்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

சிங்கள இனத்தின் எண்ணிக்கைப் பெருக்கம் தமிழரின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பது உறுதி

சிங்கள இனத்தின் எண்ணிக்கைப் பெருக்கமும் இலட்சக் கணக்கில் சிங்கள இராணுவத்தினர் இங்கு நிலைகொள்ளவதும் தமிழர் பண்பாட்டைச் சீரழிப்பது உறுதி. சராசரி ஒரு சிங்கள குடும்பமும், சிங்கள இராணுவ குடும்பமும் ஐந்து பேரைக் கொண்டிருக்கும். இந்நிலை தொடரின் தமிழரின் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வாக்களிப்பு முறையிலும் மாற்றம் ஏற்படும். இவற்றின் விளைவு சிங்கள நிர்வாகம் தலையெடுக்கும் சிங்களப் பள்ளிக்கூடங்களும், புத்தகோயில்களும் காளான் முளைத்தது போல் உருவாகும். தென் தமிழ் ஈழத்தை – கிழக்கு மாகாணத்தை விழுங்கி ஏப்பமிட்டுள்ள சிங்கள அரசு வடமாநிலத்தையும் தனதாக்கிக் கொள்ள சதித்திட்டம் தீட்டியுள்ளது. உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிடின் தமிழர் தாயகமும் - தமிழரும் இல்லா நிலையும் உருவாகும்.

தமிழ் விதைவைகளை விலைமகளீர் ஆக்க சதி

தமிழீழத்தில் தமிழ் விதவைகளின் எண்ணிக்கை 89 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது என்று மீள்வாழ்வுக்குடியேற்ற அமைச்சரே கூறியுள்ளார். கோடிக்கணக்கில் செலவழித்து சிங்கள இராணுவத்திற்கு வீடுகட்டிக் கொடுக்கும் அரசிடம் இப்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க பணமில்லை என்றும் கூறியுள்ளார். பொய் சொல்லும் உரிமை அரசுக்கு உண்டெனினும் பொருந்தப் பொய் சொல்லல் வேண்டும். இளம் விதவைகள் உட்பட இளம் பெண்கள் வெறிகொண்ட சிங்கள இராணுவத்தின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளனர். வெறிகொண்ட இராணுவத்தினால் கருத்தரித்த பெண்கள் கருத்தரித்த குழந்தைகளை தம் பிள்ளைகள் அல்ல, சிங்கள வெறியாட்டத்தின் விளைவு என்று கூறி மருத்துவமனையில் அல்லது தெருவோரங்களில் கைவிட்டுள்ளனர்.

நிலம்தான் ஒரு இனத்திற்கு நிலையான வாழ்வு

ஒரு இனம் எதனையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். மொழி இழந்த இனம், தொழில் இழந்த இனம், படிக்க முடியாது தத்தளிக்கும் இனம் கூட ஏதோ ஒரு விதத்தில் வாழ முடியும். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்து விட்டால், அந்த இனத்திற்கு வாழ்வே இல்லை. ஒரு இனம் தன்னைத் தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, தன் உயிர்ப்பாதுகாப்புக்குக் கூட – உயிரோடு உடலொட்டி வாழ்வதற்குக் கூட நிலப்பரப்பு வேண்டும். நாளை எதிர்பாராத நிலையில் மகிந்தாவின் சிந்தனையின் மாற்றம் ஏற்பட்டு தமிழனுக்கு மொழி உரிமை, தொழிலுரிமை, படிப்புரிமை போன்றவற்றை தருவதாக நாம் கற்பனை செய்யினும் அதனால் எதுவித பயனும் நமக்கு ஏற்படப் போவதில்லை. உயிரை இழந்த நிலையில் உலகத்தைப் பெற்று என்ன பயன்? தமிழன் உயிர் உடலோடு ஒட்டியிருக்க, அவனுக்கு நிலப்பாதுகாப்புத் தேவை. இடந்தான் ஒரு இனத்திற்கு நிலையான வாழ்வு கொடுக்கும். எம் மகிந்தாவின் சிந்தனையின் படி தமிழர் ஒரு தேசிய இனம் இல்லை என்கிறார். தமிழருக்குத் தாயகம் இல்லை என்கிறார். தமிழரின் தன்னுரிமை நிலைநாட்டும் உரிமை – சுயநிர்ணயக்கோட்பாட்டை ஏற்க முடியாதென்கிறார். அனைத்தையும் ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தீர்ப்பேன் என்கிறார். இணைப்பாட்சிக்கு இணைய மறுக்கிறார்.

புலம் பெயர் தமிழ் மக்கள் ஈழத்தமிழரை எப்படிக் காப்பாற்றுவது?

தலைவர் விடுத்த வேண்டுகோள் என்ன?

60 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றையாட்சியால் நாம் ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் நாம் செய்யத் தக்கது என்ன? நாம் புலம்பி அழுவதினால் ஏதும் பயனுண்டா? ஆகவே அழுகையை விட்டு ஆக்கச் சிந்தனையில் நாம் ஈடுபட வேண்டும். இதற்கு ஈராயிரம் ஆண்டுகளாக உலகெல்லாம் சிதறுண்டு வாழ்ந்து யூத இனம் எமக்கு வழிகாட்டட்டும். வெறிகொண்ட கிட்லர் ஆறு மில்லயன் யூதர்களை எரிவாயு முகாம்களில் சித்திரவதை செய்து சாகடித்ததன் விளைவு யூத இனம் கொதித்தெழுந்தது. யூத இனத்தின் செல்வந்தர்கள் தாம் தேவையற்ற விளம்பரம் எதுவும் செய்யாமல், பலஸ்தீன அரேபியர்களிடமிருந்து வெறும் வனாந்தர பூமிகளைக் கூட பெருந்தொகை கொடுத்து நிலவங்கிகள் ஊடாக நிலங்களைக் கொள்வனவு செய்ததன் விளைவு காலப்போக்கில் இஸ்ரேல் உருவாவதற்கு வழிவகுத்தது. வனாந்தரப் பூமியான இஸ்ரேல் இன்று வளம்மிக்க பூமியாக - ஒரு வல்லரசாக விளங்குகிறது. கடல்நீரைக் குடிப்பதற்குரிய நன்னீராக்கியுள்ளது. பொலித்தீன் பைகளில் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. இஸ்ரேலுடைய எல்லைப் பரப்பு ஈழத்தமிழ் மக்களுடைய எல்லைப்பரப்பை ஏறக்குறைய ஒத்தது.

இஸ்ரேலில் வாழுகின்ற யூதர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் வாழுகின்ற யூதர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவு. ஆனால் இஸ்ரேல் ஒரு தனிநாடாக இருப்பதனால் அமெரிக்காவில் வாழுகின்ற யூதர்கள் நிதித்துறையிலும், வெளியுறவுத்துறையிலும், ஊடகத்துறையிலும் அரசோட்சி அமெரிக்காவின் சிந்தனையையும், செயற்பாட்டையும்; கட்டி ஆழ்கிறார்கள்.

ஒரு இனம் வாழ வேண்டின், அதனுடைய எண்ணிக்கை முக்கியமல்ல, அதனுடைய எல்லைப் பரப்பு முக்கியமல்ல, எண்ணத்தில் ஏற்றம் பெற்றுவிட்டால், தனக்கென ஒரு நாட்டை அமைத்து விட்டால் அந்த இனம் வாழ்ந்தே தீரும். இஸ்ரேல் இதற்கு எடுத்துக் காட்டு. சிங்கப்பூரைச் சிங்கார பூமி என்று கூறுகிறோம். ஏப்போதும் சிங்கப்பூரை சிந்தையில் கொண்டு உச்சரிக்கின்றோம். சிங்கப்பூர் யாழ்ப்பாணத்தை விட சிறியது. ஆனால் அது இன்று ஓர் வல்லரசாக விளங்குகின்றது. ஐ.நா.மன்றத்தில் இன்று 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றுள் ஏறக்குறை 25 நாடுகள் சுண்டங்கா அளவு நாடுகள். ஆனால் அவை சுதந்திரம் பெற்று விளங்குவதனால் அவர்களை எவரும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தாம் ஆட்சி செலுத்துகின்றனர். சிலவேளைகளில் உலக வல்லரசுகளோடும் மோதுகின்றனர்.

யூதர் போல் நிலவைப்பகத்தை உருவாக்கி ஈழம் காப்போம்!

இவற்றையெல்லாம் நினைவு கொண்டு நம்பிக்கையை இழக்காத நிலையில் நம்பிக்கை மலைகளை அசைக்கும் என்ற விவிலியக் கூற்றில் நம்பிக்கை வைத்து தோல்வி நிலையைப் போக்கி, சோர்வகற்றி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தங்களிடையே நிலவுகின்ற மாறுபாட்டை, வேறுபாட்டை, கூறுபாட்டை நீக்கி ஒன்றுபட்டு குரலெழுப்புவதோடு யூதர்கள் போல் நிலவைப்பகங்களை - நிலவங்கிகளை உருவாக்கி, தமிழீழத்தில் பறிபோக இருக்கும் எம் நிலங்களை எம்வசமாக்கிக் கொள்ள வேண்டும். "காலம் கனியும் என்று காத்திராது காலத்தை கனிய வைக்கின்ற முறையில் விரைந்து செயற்படுவோமாயின் இருளுக்குப் பின் விடிவு ஏற்படும் என்பதற்கமைய எம்மைச் சூழ்ந்த இருளினைப் போக்கி, எமக்கு விடிவினைக் காண விடுதலையை நிலைநாட்ட நாம் ஒன்றுபட்டு செயற்படுவோமாக." புலம் பெயர் தமிழ் மக்களிடம் இதனைத் தான் எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2008 மாவீரர் உரையில் எடுத்துரைத்து வலியுறுத்தி உள்ளதை நாம் நினைவு கொள்வோமாக.

எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்.

ஆக்கம்: ம.க. ஈழவேந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.