Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்பது முடிந்த முடிவு!

Featured Replies

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்பது முடிந்த முடிவு!

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள் மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும் வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல.

சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் மார்ச்சு 20 இல் தொடங்குகிறது. காரணம் புவி தனது சுற்றுப்பாதையில் சூரிய - சந்திர ஈர்ப்பினால் பின்னோக்கி (Precession of Equinoxes) நகர்கிறது. அண்ணளவாக 71.6 ஆண்டுகளில் ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 14 நாள்கள் நகர்ந்துவிடுகிறது. இன்று இந்திய சோதிடக் கணிப்புக்கும் கிறகேறியன் காலக் கணிப்புக்கும் 24 நாள்கள் வேறுபாடு காணப்படுகிறது. இன்னும் 11,230 ஆண்டுகளில் இளவேனில் காலத்தில் சூரியன் மேடராசிக்குப் பதில் துலா இராசியில் புகுவார்! அதாவது மேட இராசிக்கு எதிர்ப்புறம் 180 பாகையில் காணப்படும் துலா இராசியில் புகுவார்.

தமிழர்களது புத்தாண்டு என்றும் சித்திரையில் தொடங்கவில்லை. தொல்காப்பியர் (கிமு 2,500 ஆண்டு) தமிழர்களது ஆண்டு ஆவணியில் தொடங்கி ஆடியில் முடிந்ததாகச் சொல்கிறார்.

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி

கூதிர் யாமம் என்மனார் புலவர்

இந்த நூற்பாவிற்கு உரை எழுதிய நர்ச்சினார்கினியர் சிம்ம ஓரைக்கு (இராசி) உரிய மாதம் ஆவணி. கடக ஓரைக்கு உரிய மாதம் ஆடி. ஆக முன்னாளில் ஆவணி மாதத்தில் ஆண்டு தொடங்கி ஆடி மாதத்தில் முடிந்திருக்கிறது என்கிறார். தமிழ்ப் புத்தாண்டு பண்டுதொட்டு சித்திரையில் தொடங்கவில்லை என்பதற்கு இந்த உரை ஆணித்தரமான சான்றாக விளங்குகிறது.

இந்துத்துவவாதிகள் ஆதி தொட்டு தமிழர்கள் இந்து சமயத்தவர்களாக இருந்து வருகிறார்கள் என நினைக்கிறார்கள். . ஆனால் உண்மை அதுவல்ல. தமிழகத்தில் நந்தர், மோரியர் காலத்தில் இருந்தே வேதநெறி, ஆசீவகம், சமணம், பவுத்தம், உலகாய்தம் போன்ற நம்புநெறிகளும் நம்பாநெறிகளும் ஊடுருவி இருந்தன.

தமிழில் உள்ள அய்ம்பெருங்காப்பியங்களும் அய்ஞ்சிறு காப்பியங்களும் சமண, பவுத்த காப்பியங்களாகும். ஒன்றேனும் வேதநெறிக் காப்பியம் அல்ல.

சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்கள்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்;டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேள்வைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவென்ன?

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல். எழுத்து - நூல்மரபு 8)

(இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி.)

காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், கணிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை உருவாக்கவில்லை. அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

அரசர்கள் முடிசூடிக் கொண்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த அரசர்கள் 25 ஆண்டுகள், 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் எனக் கல்வெட்டுகளிலும் மெய்கீர்த்திகளிலும் குறிப்பிட்டார்கள். இராசராசன் (கிபி 985 - 1014) தனது 19 ஆவது ஆட்சியாண்டில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. முடிசூட்டிக்கொள்வதற்குமுன்பு வரை அருண்மொழிதேவன் என அறியப்பட்டிருந்த இராசராசனுக்கு அவனது பத்தொன்பதாவது ஆட்சியாண்டில்தான் ‘இராஜராஜதேவன்‘ என்ற பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அவன் இருபத்தேழு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் தஞ்சைப் பெரிய கோயிலை யார் கட்டியது என்பது நீண்ட காலம் தெரியாமல் இருந்தது. 1886 ஆம் ஆண்டில் சென்னை அரசு ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக அமர்த்தியது. அவரே பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து அதனைக் கட்டியவன் மாமன்னன் இராசஇராசனே என முதன்முதலாகக் கூறினார். புலவர்களைப் பொறுத்தளவில் பிறந்த இறந்த ஆண்டு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அதனால் சங்க காலப் புலவர்கள் மட்டுமல்ல சங்கம் மருவிய காலப் புலவர்கள், இடைக்காலப் புலவர்கள் எந்த ஆண்டில் மட்டுமல்ல எந்த நூற்றாண்டில் பிறந்தார்கள் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக கம்பர் காலம் 9 - 12 ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகிறார்கள்.

தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடர் ஆண்டு இல்லாதது முக்கிய காரணமாகும், இருக்கிற 60 ஆண்டுகளும் சுழற்சி முறையில் வருவது மேலும் குழப்பத்தை உருவாக்கவே உதவியது. இதனால் வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியவில்லை.

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940).

இடைக் காலத்தில் 'சக' ஆண்டை வைத்துத் தொடர் ஆண்டு எண்ணப்பட்டது. சக என்பது சாலிவாகன் பெயரில் உள்ள சாலிவாகன சகாப்தம் என்பதன் சுருக்கமாகும். தமிழ்நாட்டில் மொகலாயர் ஆட்சியில் அரசு ஆவணங்களில், குறிப்பாக வருவாய்த் துறை ஆவணங்களில் 'பசலி' ஆண்டு என்ற தொடர் ஆண்டு பின்பற்றப்பட்டது.

புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் 'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, நான் இல்லாத பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

தமிழ் அல்லாத அறுபது ஆண்டுமுறை தமிழர்களுக்குத் தேவைதானா என்பதை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான "சுக்கில" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்துஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். இதனை மனதில் இருத்தி தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள்.

தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றை உருவாக்கி அதனைப் பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையாய தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் ஆவர்.

1935 ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயசார்பற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

பொங்கலைச் சமயவிழா என்று குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்ட கொற்றன் வரலாற்றில் சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டான 1935 டுடன் 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 1966 ஆகும். (கி.பி. 31 +1935 = தி.பி. 1966)

இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனை அடுத்து திரு.வி.க. அவர்கள் பெரியாரின் முடிவைப் பாராட்டிப் பேசினார்.

அடிகளாரின் அறிவித்தலை அறிஞர் அவை ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு (பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935) வருகிறது.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமை நாள்களின் பெயர்களில் புதன், சனி நீங்கலாக எஞ்சியவை தமிழ்ச் சொற்களாகும். புதன் தமிழில் அறிவன் என்றும் சனி தமிழில் காரி என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ் அறிஞர்களின் முயற்சியால் தமிழர் திருநாளான பொங்கல், தமிழ் ஆண்டு, திருவள்ளுவர், தமிழ் மறை ஆகியன உலகத் தமிழரால் போற்றிக் கொண்டாடடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு, பெருவாழ்வு, புகழ் வாழ்வு பெற முடிகிறது.

தமிழக அரசைப் பொறுத்தளவில் தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் என்பதை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாள்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 1969 ஆம் ஆண்டு தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நினைவாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னரே தமிழீழ நிழல் அரசும் தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என அறிவித்தது நினைவிருக்கலாம்.

பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்!

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பத அறுதியிட்டுக் கூறுகிறது.

தைப் புத்தாண்டில் நம்பிக்கையோடு கால் பதிப்போம். உலகம் வாழ் தமிழ்மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கட்டும். துன்பங்கள் தொலையட்டும். இருள் அகலட்டும். விடியல் தோன்றட்டும். கோடி இன்பங்கள் குவியட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும். கல்வி துலங்கட்டும். தொழில்வளம் பெருகட்டும். அறிவியல் வளரட்டும். தமிழுணர்வு ஓங்கட்டும். இனவுணர்வு மலரட்டும்.

நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்க்கு சொந்த நாடு இல்லாத நிலையில்..... புத்தாண்டை எப்ப கொண்டாடினாலும் ஒண்டுதான்.....

உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்க்கு சொந்த நாடு இல்லாத நிலையில்..... புத்தாண்டை எப்ப கொண்டாடினாலும் ஒண்டுதான்.....

இதை அப்படியே தந்தியில் கருணாநிதிக்கு அடிச்சுவிடுங்கோ :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.