Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு எல்லைகளற்ற பயணம்....

Featured Replies

நான் ரசித்த ஒரு அருமையான பதிவு..விண்வெளியின் அதிசயங்களை ஒரு எழுத்தாளனின் பார்வையில் எங்கள் கண்முன் கொண்டுவந்துதந்திருக்கிறார் இந்தக்கட்டுரையாளர்..எல்லைகளற்ற வானம்போலவே மனிதனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் ஏது...பிரபஞசத்தை பற்றி நான் கேட்டு வாசித்து படித்து அறிந்து கொண்டவைகளால் ஏற்பட்ட பிரமிப்பால் வானவியல் சம்பந்தமான பல அறிவியல் புத்தகங்களை தேடித்தேடி வாங்கி வாசித்துள்ளேன்..ஆனாலும் தமிழ்ச்சுவையோடு தீட்டப்பட்டுள்ள இந்தக்கட்டுரையை வாசித்து முடித்தபொழுது ஒரு தனி சுகம் இருந்தது... வாசித்து முடித்த பொழுது விண்வெளிக்கு ஒரு இலக்கியப் பயணம் போய் வந்தது போன்றதெரு உணர்வு...இதோ உங்களுக்கும் அவரின் அனுமதியுடன் அந்த அநுபவம் கிடைக்கட்டும்...

ஒரு எல்லைகளற்ற பயணம்-கை.அறிவழகன்

smileyfaceatsunset2000pxmikesalway_thumb.jpg?w=244&h=164

ஒரு நாளின் சில நிமிடங்களையாவது வானத்தைப் பார்ப்பதில் நான் செலவிடுகிறேன், வானத்தைப் பார்ப்பது எப்போதும் சலிக்காத ஒரு வியப்பான மனநிலையை எனக்கு வழங்குகிறது, தெளிவான மேகங்கள் அற்ற வானம் இன்னும் மலைப்பைத் தருவதோடு மட்டுமன்றி நாம் எவ்வளவு சிறிய துகள் போல இந்தப் பேரண்டத்தின் ஒரு பகுதியில் கிடக்கிறோம் என்கிற இருப்பின் எளிமையை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது, இரவு நேரத்தின் விண்மீன்கள் நிரம்பிய வானம் இன்னும் மேலதிகமான வியப்பையும், மன எல்லைகள் கடந்த நிலையை நோக்கியும் நம்மை அழைக்கிறது, மனிதக் கண்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட எல்லை வரையறை செய்யப்பட்டிருக்கிறது, ஆயினும் மனித மனதுக்குக் கண்களின் எல்லைகளை உடைத்துச் செல்வதில் எப்போதுமே தனித்த ஆர்வம் இருக்கிறது. வானத்தை உற்று நோக்கும் கண்களுக்கு விண்மீன்களின் சின்னஞ்சிறு மின்னும் ஒளியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்றாலும், நமது மனம் அந்த விண்மீனில் குடியேறுகிறது, விண்மீன்களின் பரப்பில் நம்மை நடக்க வைக்கிறது, அதன் மேடு பள்ளங்களை நமக்குக் காட்டுகிறது, விண்மீனுக்குச் செல்லும் வழியை இப்படியான மனித மனங்களில் ஒன்று தான் கண்டடைகிறது, அதற்கான விண்கலங்களைத் தயார் செய்கிறது.

அறிவியல் மனிதனின் மன எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது, உயிர்களின் இயக்கத்தை செயற்கையாக இன்றைய அறிவியல் உருவாக்கி இருக்கிறது, கடவுளின் குழந்தைகளாக அல்லது அடிமைகளாக இருந்த மனிதனை அறிவியல் கடவுளின் முதலாளியாக மாற்றி இருக்கிறது, மனிதன் உடலைக் கடந்து உயிர் வாழக் கூடிய சாத்தியக் கூறுகளை நோக்கி மிக வேகமாக விரைகிறான், இந்த வேகமான பயணத்தில் மனிதன் இயற்கை என்கிற ஒரு மிகப்பெரிய அரணை எப்படிக் கையாள்கிறான் என்பதில் தான் அவனது இருப்பு ஒளிந்து கிடக்கிறது. உடலைக் கடந்த மனிதன் என்பது இயற்கையின் பாதைக்கு எதிரானதாக இருக்கும் என்று ஒரு சிலரும். இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் இதனைப் பயன்படுத்த முடியும் என்று மற்றொரு பிரிவும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

47998a7d147d83_20517842frogviewgallery_thumb.jpg?w=244&h=184

சரி நாம் மீண்டும் வானத்துக்குச் செல்வோம், வானம் அல்லது பேரண்டத்தைப் பற்றிய வியப்பு சிறு வயதில் இருந்தே நம்மைத் தொற்றிக் கொள்கிறது, நான்கு அல்லது ஐந்தாம் வகுப்புப் படிக்கும் பொது ஒரு பிறந்த நாளில் அப்பா ஒரு நூலைப் பரிசளித்தார். அந்த நூலின் பெயர் சயூஸ் – அப்போல்லோ கூட்டுப் பறப்பு. அந்த நூல் ஒரு விண்வெளிப் பயணம் பற்றியது, அமெரிக்க மற்றும் ரஷ்ய நாட்டு விண்வெளி ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஒரு வெற்றிகரமான விண்வெளிப் பயணம் அது. ரஷ்யாவில் இருந்து சயூசும், அமெரிக்காவில் இருந்து அப்போல்லோவும் தனித்தனியாகப் புறப்பட்டு விண்வெளியின் ஒரு சுற்றுப் பாதையில் இணைக்கப்படுகிறது. இருநாட்டு விஞ்ஞானிகளும் அந்த இணைப்பில் பின் கலந்துரையாடி மகிழ்கிறார்கள், கட்டித் தழுவித் தங்கள் வெற்றியை உணர்கிறார்கள். இந்த நூல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது, நீண்ட நாட்கள் அந்த விண்கலத்தின் ஏதோ பகுதியில் நானும் அமர்ந்து கொண்டு அந்த விஞ்ஞானிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஒரு மன எழுச்சி எனக்குள் உருவாகி இருந்தது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் வானத்தை உற்று நோக்கியபடி அமர்ந்திருப்பேன், விண்வெளி அறிவியல் பற்றிய நூல்களைத் தேடித் படிப்பதில் இன்று வரை எனக்கு இருக்கும் ஆர்வம் அந்த நூலின் வாயிலாகவே தொடங்கி வைக்கப்பட்டது.

mars_thumb.jpg?w=244&h=167

வானூர்திப் பயணங்களின் போது உயர எழும் வானூர்தியின் சாளரங்களின் வழியாக பூமியைப் பார்க்கையில் கிடைக்கிற பார்வை உணர்வு விண்வெளிப் பயணங்களில் பல மடங்காகிறது என்று நினைக்கிறேன், விண்கலங்களில் சாளரங்கள் இருக்குமா?புள்ளிகளாய்க் காட்சி தரும் சதுர நிலப்பரப்புகள், ஏரிகள், மழைக் குன்றுகள் இவற்றை எல்லாம் தாண்டி ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலெழும்பும் போது புவிப்பந்தின் எல்லைகளில் இருந்து மனிதன் விடுவிக்கப்படுகிறான், புவிப் பந்து குழந்தைகள் விளையாடும் ஒரு அழுக்கான பந்தைப் போல நம் கண்களில் விழுவதை ஒரு அற்புதமான உணர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்குப் பின்னே இன்னும் உயரப் பறக்கையில் புவிப்பந்தைப் போலவே விண்வெளியில் இறைந்து கிடக்கும் எண்ணற்ற பந்துகளாய்க் கோள்களும் துணைக் கோள்களும் விண்வெளிப் பயணம் செய்யும் மனிதர்களைக் கடக்கக் கூடும், எதிரில் மிதந்து வரும் எரிகற்கள், பல முறை உதிக்கும் சூரியன் என்று அந்தப் பயணம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சராசரி மனித மனத்தின் எல்லைகளைக் கடந்து அவனை ஒரு அகண்ட இன்னும் விசாலமான மனநிலைக்குக் கொண்டு செல்லும், ஒரு முறை விண்வெளிப்பயணம் செய்து விட்டு வருகிற விண்வெளி ஆய்வாளர்களில் பலர் மரணம் குறித்த அச்சம் அகண்டவர்களாக, அக உலகச் சிக்கல்களைப் பொருட்படுத்தாதவர்களாக மாறி விடுகிறார்கள் என்று சில ஆய்வுகள் சொல்கிறது. பல்வேறு தேவைகளோடும், உளவியல் சிக்கல்களோடும் நாம் வாழும் இந்த பூமியின் பரப்பு நமக்கு முன்னர் ஒரு கிழிந்த துணியைப் போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க நேருவதால் இப்படி ஒரு மனநிலை அவர்களுக்கு உருவாகி இருக்கலாம். நாம் வாழும் பூமியை உள்ளடக்கிய இந்தப் பால்வெளி என்கிற பகுதியும், அதனைப் போலவே பல்லாயிரக்கணக்கான பால்வெளிகளும் எத்தனையோ கோடிக் கணக்கிலான சூரியனையும், கோள்களையும், துணைக்கோள்களையும் உள்ளடக்கி இருக்கிறது, இப்படி நாம் கண்டறிந்து இருப்பது நமது அறிவியல் எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு வெளியில் மட்டுமே, நமது அறிவியல் கருவிகளின் எல்லைகளுக்குப் புலப்படாத நீண்ட அல்லது உருண்ட ஒரு பெருவெளியில் இன்னும் எத்தனை புலப்படாத ஆற்றல் மையங்கள் இருக்கக் கூடும் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கூட ஒரு விதமான மலைப்பைத் தருகிறது.

andromedagalaxy_thumb.jpg?w=244&h=184

மனிதனின் உடல் விண்வெளியில் தனது புவி ஈர்ப்பு விசையை இழந்து விடுகிறது, அவனுடைய எலும்புகளும், தசைகளும் மெலிந்து வலுவிழந்து விடுகின்றன, புவிஈர்ப்பு விசை காரணமாக மேலிருந்து கீழாகப் பயணிக்கிற குருதி ஓட்டம் விண்வெளியில் தலை கீழாக மாறி விடுகிறது, முகம் காற்றடைத்த பந்தைப் போலக் காட்சி அளிக்கிறது, பயன்படுத்துகிற நீர் கீழிருந்து மேலாக வழிகிறது. சயூஸ் அப்போல்லோ கூட்டுப் பரப்பில் பங்கு பெற்ற ஒரு விண்வெளி ஆய்வாளர் தனது பயணத்தை விவரித்து எழுதி இருந்தது அவர் என்னையும் அவரோடு கூட்டிச் சென்றது போன்ற ஒரு உணர்வைத் தரும். நிலைத்த ஒளியில்லாத பேரண்ட வெளியில் தூரத்து விண்மீன்களின் ஒளி, சுற்றித் திரிகிற கற்கள் மீது பட்டுத் தெறிக்கும் எதிரொளி இவை தான் பொருட்களைப் பார்க்க நமக்கு உதவும் ஒரே ஒளி. அப்படியான ஒரு திசைகள் அற்ற ஒளியற்ற வெளியில் தான் முதன் முறையாக மிதந்து திரிந்ததை சொற்களால் விவரிக்க முடியாது என்று சொல்கிறார் அவர், ஆம், அதை சொற்களால் விவரிக்க முடியாத இனம் புரியாத மிதப்பாகத் தான் அது இருந்திருக்கும். நெருப்பைக் கீழ் நோக்கி உமிழ்ந்து புகை மண்டலத்தின் நடுவே சீறிப் பாய்ந்து அவர்களின் விண்கலம் விண்ணை நோக்கிப் பாய்வதில் இருந்து தொடங்கி ஒரு இனம் புரியாத பாதையில் அவர் பயணிக்கிறார். அவரது பாதையை சில இயந்திரங்கள் கட்டுப்படுத்துகின்றன. மனிதர்களின் காலடித் தடம் படியாத ஒரு வெறுமையான நிலத்தில் அவர்கள் இறங்கும் போது அங்கே யாருக்கும் சொந்தம் இல்லாத நிலம் பரவிக் கிடக்கிறது, நீரின் பாதையோ அல்லது வேறொன்றின் பாதையோ அகண்ட பள்ளத்தாக்குகளாய் அவர்களின் கண்களில் படிகிறது, மரங்களும் மலர்களும் இல்லாத மலைகளை அவர்கள் காண்கிறார்கள்,

sombrero_galaxy_big_thumb.jpg?w=244&h=179

முதன் முதலாய் நிலவில் இறங்கிய மனிதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்த மனிதன் ஒரு இயந்திரத்தை மட்டுமே நம்பி அங்கே இறங்குகிறான், விண்வெளி நிலையங்களில் தங்கி இருந்து ஆய்வு செய்யும் மனிதர்கள் உறவுகளைத் தேடுவார்கள், அவர்களின் முன்னே இருக்கும் எந்தப் பொருளும் மனிதர்கள் இதுவரை பார்த்திராத வியப்புக்குரிய பரப்புகளாய் இருந்திருக்கும், அந்த இயந்திரம் ஒரு வேளை தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுமேயானால் அந்த மனிதன் திரும்பி வருவது சாத்தியமில்லை, மற்ற எல்லாப் பொருட்களையும் போல உயிரியக்கம் இல்லாத ஒரு விண்கல்லைப் போன்று ஆண்ட வெளியில் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள், கூடவே அவர்களின் கனவுகள், கடைசியாய் உமிழ்ந்த சொற்கள் யாவும் பேரண்டத்தில் யாரும் தொட முடியாத தூரத்தில் உலவிக் கொண்டிருக்கும். பேரண்டம் என்பதை எப்படி உணர்வது என்று இன்னும் ஒரு சரியான விளக்கத்தை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறது மனித மனம், மனித மனத்தில் இருந்துதான் பேரண்டத்தின் இயக்கம் துவங்குகிறது, சூரியக் குடும்பத்தின் கோள்கள், அது பொதிந்து கிடக்கும் பால்வெளி வீதி, பல பால்வெளி வீதிகளை உள்ளடக்கிய அண்டவெளி என்று தொடர்ச்சியாக நீண்டு கிடக்கிறது பேரண்டம். அதன் பாதைகளில் பல மில்லியன் வருடங்கள் உறைந்து கிடக்கிறது. காலத்தைக் கண்டறிந்த அல்லது உருவாக்கிய மனிதனின் அளவீடுகள் தான் இந்த வருடங்களை பேரண்ட வெளிகளில் உள்ளீடு செய்திருக்கிறது, பேரண்ட வெளியில் காலம் ஒளியின் திசை வேகத்தால் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள், ஒரு பால்வெளிக்கும் இன்னொரு பால்வெளிக்கும் இடையிலான உறவு வியப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, அருகருகில் இருக்கும் இரண்டு பால்வெளிகளின் ஆரம் ஒரே மையப் புள்ளியை நோக்கி இயங்குவதாகச் சொல்கிறார்கள், அழியும் நிலையில் இருக்கும் ஒரு பால்வெளியின் எஞ்சிய பொருட்கள் பக்கத்துப் பால்வெளிக்குத் தாவிக் கொள்வதற்காக இப்படி ஒரு பாதுகாப்பு.

27_ed_whiteg4_eva_s6534635_thumb.jpg?w=243&h=244

அறிவியல் அறிஞர்களுக்கும், தத்துவஞானிகளுக்கும் இடையில் பேரண்டம் குறித்த போர் நடக்கிறது, பேரண்டத்தை ஒரு பருப்பொருளாகப் பார்க்கும் விஞ்ஞானிகளிடம் இருந்து தத்துவ ஞானிகள் மாறுபடுகிறார்கள், இரண்டு பருப்பொருட்களுக்கு இடையிலான உறவுகளே பேரண்டத்தை கட்டமைக்கின்றன என்று அவர்கள் வாதிடுகிறார்கள், இவர்களுக்கிடையில் காலம் வேறு புகுந்து கொண்டு இவர்கள் இருவரையும் ஆட்டிப் படைக்கிறது. இவற்றை எல்லாம் கடந்து மனித மனம் பேரண்டத்தின் குறிப்பிட்ட ஒரு எல்லையில் அமர்ந்து கொண்டு முழுதையும் அளந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறது, செல்ல முடிந்த தூரம் வரையில் சென்று புதிய அதன் பகுதிகளை நமக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. செவ்வாயில் முன்னொரு காலத்தில் ஓடிய நதிகள், வற்றிப் போன பெருங்கடலின் சுவடுகள், எவரெஸ்ட் சிகரத்தைப் போலப் பல மடங்கு உயரமான சிகரங்கள் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பாறைகள் என்று எண்ணிப் பார்க்க முடியாத உயரங்களை நமக்கு பேரண்ட அறிவியல் படம் பிடித்து அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது, பேரண்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் கருந்துளைகள் சில கோள்களை, சூரியன்களை, விண்மீன்களை விழுங்கிக் கொண்டு அங்கேயே இருக்கிறது, அதன் மறுபக்கம் எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது, சின்னஞ்சிறு கண்களைக் கொண்ட மனிதன் தன் அறிவினால் தொட முடிந்த தூரத்தை மட்டுமே அடைந்திருக்கிறான், அவனால் பால்வெளியைத் தாண்டி இன்னும் பயணிக்க முடியவில்லை, அல்லது அதற்கு அப்பால் இருக்கும் பொருட்களைக் காணும் அளவு தகுதி வாய்ந்த தொலைநோக்கியை மனிதனின் அறிவால் கண்டடைய முடியவில்லை.

cvximage01_thumb.jpg?w=244&h=160

ஆயினும் மனிதனின் இந்தப் பயணம் மகத்தானது, அவன் சென்று காலடி வைத்திருக்கும் தொலைவு குறித்து அவன் பிறக்கும் போது கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. தன்னுடைய மன எல்லைகளை உடைத்துக் கொண்டே மனிதன் தொடர்ந்து பயணிக்கிறான் என்பது தான் கடவுளுக்கு இருக்கும் ஒரே சவால். உயிர்களின் எல்லையை மனிதன் ஏறத்தாழ உடைத்தெறிந்து விட்டான், கடவுளை விடவும் நேர்த்தியாகவும், தவறுகள் இல்லாததாகவும் மரபணு மூலக் கூறுகளை உருவாக்கும் வல்லமையை மனிதன் பெற்றுக் கொண்டு விட்டான், இனி அவனால் பிரிவின் துயரத்தில் இருந்தும், அழிவின் பயத்தில் இருந்தும் தனது மனநிலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படியான ஒரு பாதுகாப்பு மனிதனுக்கு இன்னும் புதிய நீண்ட பயணங்களுக்கான மனநிலையைப் பரிசாக வழங்கும்.

நீண்ட நேரம் விண்வெளியில் சுற்றி ஆயிற்று, இனி வாருங்கள் இருப்பிடம் திரும்புவோம், பறந்து விரிந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரவிக் கிடக்கும் பேரண்டத்தின் வழியாக பால்வெளிகளைக் கடக்கிறேன் நான், எனது பால்வெளியை அடையாளம் கண்டு பின் சூரியக் குடும்பத்தின் உள்ளே நுழையும் என்னை வரவேற்கின்றன ஒன்பது கோள்கள், மன்னிக்கவும் எட்டுக் கோள்கள், அதோ பசுமையும், நீலமும் கலந்து சுழல்கிறது நமக்கான பூமி, இனி நாம் எல்லைகளைக் கண்டடைய வேண்டும், கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள், சாலைகள், தெருக்கள், அக்ரகாரங்கள், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதி, சேரிப் பகுதி, முதலாளிகள், உழைக்கும் தொழிலாளிகள் என் வீடு, என் மக்கள் என்று எல்லாவற்றையும் கடந்து என்னுடைய கண்களில் புகுந்து கொள்கிறது நான் என்கிற பருப்பொருளும், தத்துவமும் கலந்த பேரண்டத்தின் ஒரு துகள்.

science_fiction_universe_man_1024x768_thumb.jpg?w=244&h=184

இப்போது தெரிந்திருக்குமே உங்களுக்கு நான் வானத்தை ஏன் ஒருநாளில் சில நிமிடங்களாவது ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்று, அது நான் என்கிற பருப்பொருளையும், பேரண்டம் என்கிற இன்னொன்றையும் இணைத்து என்னை உருவாக்கித் தன்னை வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது. எனது மன எல்லைகளுக்கும், எனக்குப் புலப்படுகிற பேரண்டத்தின் எல்லைகளுக்கும் இடையிலான இந்த இடைவெளியில் தான் எனக்கான, உங்களுக்கான, நமக்கான, எல்லோருக்குமான உலகம் இயங்குகிறது, உறவுகள், பொருள் தேடும் பயணம், அலுவலகம், அரசியல், கருத்துக்கள், விவாதங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், காதல், போர், குழந்தைகள், விடுதலை இப்படி இன்னும் எல்லாம் எனக்கும், பேரண்டத்தின் இன்னொரு எல்லைக்கும் இடையில் தான் கிடந்து உயிர் வாழ்கிறது.இப்படி உணர்ந்தவர்களால் மனிதர்களின் பிறப்பில் அடையாளங்களைச் சேர்க்க முடியாது. இப்படி உணர்ந்தவர்களால் மனிதர்களின் உழைப்பைக் கொள்ளையிட்டு உயிர் வாழ முடியாது. என்ன நண்பர்களே, வருகிறீர்களா என்னோடு வானத்தைப் பார்க்க????

****************

tamizharivu.wordpress.com

Edited by நெருப்பு நீலமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.