Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் தான் தமிழ் புதிய பன்முக பரிமாண வளர்ச்சியை பெற்றிருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் தான் தமிழ் புதிய பன்முக பரிமாண வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னர்தான் சென்னை திரும்பியிருந்தார் இந்திரன். சற்று களைப்பாகக் காணப் பட்டாலும் மிகவும் உற்சாகமாகவே இருந்தார். கடந்த நாற்பதாண்டு களாக கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா என்று பல்வேறு துறைகளைப் பற்றி தமிழி லும், ஆங்கிலத்திலுமாகச் சலியாது எழுதி வருகிற வர் என்பதை துளியும் காட்டிக் கொள்ளாத எளிமை.

பிரிட்டிஷ் அருங் காட்சியகத்தில் சேக ரிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆப்பிரிக்க இலக்கியத்திலிருந்து ஆதிவாசி இலக்கியம் வரை தமிழில் இதுவரை காணக் கிடைத்திராதவற்றை மொழிபெயர்த்துக் கொடுத்தவர்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டபோது குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகள் கொண்ட மாபெரும் கண்காட்சியை தமிழக அரசுக்காக அமைத்துக் கொடுத்தவர். அவை "ஓவியக் குறள்' என நல்வடிவம் பெற்றுள்ளது.

Times of India, Indian Express ஆகிய தேசிய நாளேடுகளிலிருந்து, Marg கலை இதழ் வரையிலும் இவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்.

இவரது வீட்டின் காற்றோட்டமான வரவேற்பறையின் எதிரெதிர் சுவர்களில், நைஜீரியாவிலிருந்து வந்திருந்த ஆப்பிரிக்க முகமூடியும், சோழமண்டல சிற்பி கே.எம். கோபால் படைத்த அர்த்தகனேஷ்வரி உலோகப் புடைப்புச் சிற்பமும் ஒன்றை ஒன்று பார்த்தபடி மௌன உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

இந்திரன் தான் அதுவரை படித்துக் கொண்டிருந்த ஐரிஷ் பெண் எழுத்தாளரின் நாவலான A GLASSFUL OF LETTERS எனும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு நம்முடன் உரையாடத் தயாரானார்.

எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றில் தற்போது எதில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்?

""வாசிப்பதில்தான் அதிக நேரம் செலவிடுகிறேன். பல நேரங்களில் நான் ஒரு எழுத்தாளன் இல்லையோ என்று எனக்கே சந்தேகம் வரும் அளவுக்கு அதிகமான நேரம் வாசிப்பதில் லயித்து விடுவேன்.

பிரான்சிலிருந்து வந்த நாளிலிருந்து நான் இந்த புத்தகத்தை வாசித்து வருகிறேன். வெறும் கடிதங்களாலேயே கதை சொல்லப்பட்டு வருகிற புதுமை என்னை அப்படியே உள்வாங்கி இழுத்துச் செல்கிறது. டப்ளின் நகரத்தில் நான் சந்தித்த மூத்த பெண் எழுத்தாளர் எவ்லின் கோன்லான் என்பவர் எழுதிய இந்த நாவல், விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஒரு பெண்ணின் அக வாழ்க்கையைப் பேசிச் செல்கிறது. இதை எழுதிய பெண் எழுத்தாளரை நேரில் அறிவேன் என்பதால், கதாபாத்திரங்களின் உள்மன ஓட்டங்களை இந்த அளவுக்கு ஆழமாக எழுதியிருக்கும் இந்த எழுத்தாளரின் மிக இயல்பான தன்மைகளை ரசித்தபடியே படித்துக் கொண்டிருக்கிறேன்.

எழுத்தைப் பொறுத்த மட்டிலும் என் கதை வேறு. நினைத்தவுடன் எழுத உட்கார்ந்து விடுகிற ஆள் அல்ல நான். தினந்தோறும் இத்தனை பக்கம் எழுதி விடவேண்டும் என்கிற தீர்மானங்கள் எதுவும் எனக்குக் கிடையாது. ஒருவிதத்தில் எழுத்து என்பது உயிரியலுக்கு எதிரான நடவடிக்கை என்றுகூட நான் நினைப்பது உண்டு.''

அப்படியென்றால் எது உங்களை எழுத வைக்கிறது?

""ஏனோ தெரியவில்லை. எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று, எனது கோபத்தை- மனசைப் பிழியும் சோகத்தை- ஒரு மலரின்மீது அல்லது ஒரு குழந்தையின்மீது கொண்டிருக்கும் சொல்லொணாத பிரியத்தை- சொல்லப்படும் தருணம்வரை எதுவென்று அடையாளம் காட்டாத ஏதோ ஒன்றைக்கூட சக மனிதர்களோடு பகிர்ந்து கொண்டே தீர வேண்டும் என்று என்னை வற்புறுத்தத் தொடங்கி விடுகிறது. இந்த வற்புறுத்தலிலிருந்து தப்ப முடியாது என்கிற நிலை வருகிறபோது நான் எனது கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்து விடுகிறேன்.

என் முன்னாலிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் வார்த்தைகளை அடுக்கத் தொடங்கியவுடனேயே அந்த வார்த்தைகளின் எடை அல்லது எடையின்மை குறித்த அக்கறையும், கூடுதல் கவனக் குவிப்பும் வந்து விடுகிறது. நான் சொல்ல வந்த விஷயங்களைச் சிந்தாமல் சிதறாமல் என் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எனது கவலையின் இன்னொரு முகமாக, அதைச் சொல்ல முனையும் விதம் குறித்த ஒருவிதமான கவலையும் என்னை வந்து கவிந்து கொள்ளும். எழுதுகிறவனைக் காட்டிலும் வாசகன் அதிக புத்திசாலி என்று நம்புகிற காரணத்தால், சிறந்த எழுத்தை மட்டுமே அவன்முன் படைக்க வேண்டும் என்று நான் அக்கறை கொள்கிறேன். என் உள்ளத்து உணர்ச்சிகளை என் சஹிர்தயனுடன் பகிர்தல் என்பதே என்னை எழுத வைக்கிறது.

கவிதையாக எழுதிய ஒன்றை ஒரு ஓவியமாகத் தீட்டியிருந்தால், தொட்டுணர முடியாத என் உள்ளத்து உணர்ச்சியை என் சக மனிதர்களுடன் இன்னும் முழுமையாகப் பகிர்ந்து கொண்டிருப்பேனோ என்றுகூட பலமுறை நினைப்பது உண்டு. இதனால்தான் நான் பல நேரங்களில் சித்திரங்களை கீறத் தொடங்குகிறேன். மிக அரூபமான உணர்வுகளைத் தெரிவிக்க மொழி தகுந்த சாதனமாக இல்லை என்று தோன்றுகிற சந்தர்ப்பங்களில் நான் ஏன் இசையைப் பயிலாமல் போனேன் என்றுகூட நான் நினைப்பதுண்டு.''

ஆரம்பகாலங்களில் உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்? ஏன்?

""எனக்கு பதின்மூன்று வயதிருக்கும்போது என் வீட்டருகே இருந்த பொது நூலகமொன்றில் கா. அப்பாதுரையார் எழுதிய "உலக இலக்கியங்கள்' எனும் உன்னதமான நூலைப் படித்தேன். வாழ்க்கையில் என்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று முக்கிய நூல்களில் இதுவும் ஒன்று.

இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்த என்னை வாழ்க்கையில் தொடர்ந்து போராடும் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதனாக்கியது எமெர்ஸன் எழுதிய "விதியும் தன்னம்பிக்கையும்' எனும் உன்னதமான புத்தகம்தான். அதை யார் தமிழில் மொழி பெயர்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அதுதான் எனது வாழ்க்கையை மாற்றிய புத்தகம்.

அடுத்ததாக ஈழத்துத் தமிழ் அறிஞர் ஜோசப் தனிநாயகம் அடிகளார் எழுதிய "ஒன்றே உலகம்' எனும் உன்னதமான புத்தகம். அந்த புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுக்கவே மனசு வராமல் மீண்டும் மீண்டும் அதை எடுத்துக் கொண்டே இருப்பேன். .அதை என் மார்போடு அணைத்தபடி போவதும் வருவதுமாக இருப்பேன்.

"அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', "பசித்த தலைமுறை' என்கிற மூன்றாம் உலக இலக்கியம், "காற்றுக்குத் திசை இல்லை' என்கிற இந்திய இலக்கியம், "கவிதாயனா' என்னும் 30 கலைஞர்களின் ஒரிய மொழிக் கவிதைகள், "மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள், மனோரமா பிள்ளை மொகப்பத்ரா என்பவரின் ஒரிய மொழிக் கவிதைகள், "கடவுளுக்குமுன் பிறந்தவர்கள்' ’’எனும் ஆதிவாசிகளின் கவிதைகள் என்று உலகின் பல்வேறு மொழி இலக்கியவாதிகளின் குரலைத் தமிழில் கொண்டு வரவேண்டும் எனும் என் செயலுக்கான விதையை சிறுவனாக இருந்தபோதே நெஞ்சில் ஆழமாக ஊன்றியவை பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின் எழுத்துகள்தான்.

சிறுவனாக இருந்தபோதே சிறுகதையோ நாவலோ அதிகம் படிக்க விரும்பாமல், மொழிபெயர்ப்புகளையும், வாழ்க்கை வரலாறு களையும் தணியாத தாகத்துடன் படித்து வந்த எனக்கு கா. அப்பாதுரை யார் எழுதிய ரவிவர்மா, ஐன்ஸ்டீன், சர்ச்சில், பெர்னாட்ஷா போன்றோ ரின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் மிகவும் சுவையானவையாகவே இருந்தன.''

அப்பாதுரையாரை நீங்கள் நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

""அப்பாதுரையாரை மிக மூத்த நிலையில்- அவர் அரசு கலைச் சொல்லாக்கத் துறையின் தலைவராக இருந்தபோது நான் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன்.

பெரிய மேசையின் முன்னால் கருநிறத்தில் பருமனான உடல்வாகுடன் காட்சி அளித்த அப்பாதுரையார் மிகுந்த கனிவுடன் என்னை வரவேற்றார். நிறைய பேசினார். தன்னுடைய அறிவின் செல்வங்களை இளைஞர் களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்தவராகத் தென்பட்டார். அந்தப் பதவியில் தனக்கு நேரும் சிரமங்களைப் பற்றியும்கூட அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது திறந்த மனம் தென்பட்டது.

ஆப்பிரிக்க மொழி உட்பட சுமார் நாற்பது மொழிகள் கற்றவர் என்ற பெருமிதத்தை அவரிடம் காண முடியவில்லை. தான் எழுதிய நூற்றியெழுபது நூல்களில் ஐந்து நூல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் என்கிற பெருமிதமோ, அறுபத்தியிரண்டு நூல்களை அந்தந்த மூல மொழிகளிலிருந்து மொழிபெயர்த்தவர் என்ற செருக்கோ, காரல் மார்க்சின் ’’"மூலதனம்'’’ என்ற நூலின் முதற் பகுதியை மொழி பெயர்த்தவர் என்ற ஆணவமோ, ஜப்பானிய மொழியிலிருந்தே ஒரு நாவலை மொழிபெயர்த்தவர் என்ற மயக்கமோ, கில்ப்ர்ட் ஸ்லேட்டெரின் "இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு' நூலிலிருந்து கால்டுவெல்லின் "ஒப்பிலக்கணம்' வரை பல உன்னத நூல்களை மொழிபெயர்த்தவர் என்ற இறுமாப்போ அப்பாதுரையாரிடம் காணப்படவே இல்லை. ஒரு இளைஞன்தானே என்கிற அலட்சியம் இல்லாமல் அவர் என்னிடம் நிறைய பேசினார்.''

அவர் பேசியவற்றில் இன்றைக்கும் உங்கள் நினைவில் நிற்பவை எவை?

""கனிவுடன் அவர் பேசிய அந்த உரையாடலில் அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. அவர் சொன்ன மூன்று முக்கிய விஷயங்களாக இவற்றைக் கருதுகிறேன்.

1. உலக இலக்கியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் உன்னதங் களை எடுத்துரைக்கும் அதே நேரத்தில், நமது தமிழ் இலக்கியங்களின் மாண்புகளையும் நாம் மறந்து விடக்கூடாது.

2. அதேபோல் தமிழர் யார் என்று இனங்காண்கிறபோது தமிழ் மொழியிடம் பற்று கொண்டவர்கள் அனைவரையும் நாம் தமிழராகவே கருத வேண்டும். இந்த வகையில் "வீரமாமுனிவரை ஒரு மிகச் சிறந்த தமிழராகக் கருதுகிறேன்' என்று சொன்னார். தமிழ்த் தேசியம் பேசுகிறபோதுகூட அப்பாதுரையாரின் பரந்து விரிந்த பார்வையை இது காட்டுகிறது.

3 மேனாட்டுக் கலை வரலாற்றைப்போலவோ அல்லது வடநாட்டுக் கலை வரலாற்றைப் போலவோ தென்னாட்டுக் கலை வரலாறு இன்னும் விளக்கமாக எழுதப்படவில்லை. ஆனால் கட்டடக் கலை, இசை, இலக்கியம், வான நூல், மருத்துவம் ஆகிய எல்லாத் துறைகளை யும்போலவே இத்துறையிலும் தென்னாட்டுக்கென்று ஓர் தனி மரபு உண்டு.

இந்த மூன்று விஷயங்களும் எனது எழுத்துகளுக்குத் திசை காட்டும் கருவிகளாக எப்போதும் இருந்து வருகின்றன என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.''

தமிழ் இலக்கியத்தடத்தில் தங்களைப் பாதித்தவர் எவர்? ஏன்?

""ஒரு ஓவியரின் மகனாகப் பிறந்து, இலக்கியம், இசை, நடனம், பத்திரிகை என்று இளமைக்காலம் முழுவதும் எனது பெரிய குடும்பம் என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தது. எந்நேரம் பார்த்தாலும் ஓவியம் தீட்டிக்கொண்டு இருந்த நான், ஒரு ஓவியனாகத்தான் எதிர் காலத்தில் திகழ்வேன் என்று நம்பிக்கொண்டிருந்தேன். இத்தகைய என்னை தனது எழுத்தினாலும், சேகரித்து வைத்திருந்த புத்தகங் களினாலும் கவர்ந்து இலக்கியத்தின்பால் ஈர்த்தவர் எனது அத்தை மகனான கவிஞர் ப. இராஜேஸ்வரன். எழுதத் தொடங்கிய என்னை மிகக் கண்டிப்பாக தகுந்த வாசிப்பு இன்றி எழுதக்கூடாது என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் இராஜேஸ்வரன்தான். நான் நிறைய படிக்கத் தொடங்கிவிட்டேன்.

இராஜேஸ்வரனின் நண்பராக இருந்து எங்கள் குடும்ப நண்பராக மாறிய புலவர் த. கோவேந்தனின் செல்லப் பிள்ளையாக நான் மாறி விட்டேன். த. கோவேந்தனின் மூலமாக சிதம்பரம் ரகுநாதன், கே.சி.எஸ். அருணாசலம், மாஜினி, ஜெயகாந்தன், அவ்வை நடராஜன், ம.இலெ. தங்கப்பா என்று இலக்கிய ஜாம்பவான்களோடு எனக்கு நேரிடைத் தொடர்பு ஏற்பட்டது. கோவேந்தன் நிறைய இலக்கியத் தேடல் கொண்ட மனிதர். நான் ஆங்கிலத்தில் எழுத பிள்ளையார் சுழி போட்டவர்கூட கோவேந்தன்தான். சென்னையில் நடந்த பாரதி விழா ஒன்றில், அகில இந்திய கவிஞர்கள் பங்கெடுத்துக் கொண்ட நிகழ்வில் என்னை பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்க வைத்து அரங்கேற்றம் செய்தவர் கோவேந்தன்தான். கோவேந்தனிடம் தயாரான இன்னொரு சக்தி இன்றைக்கு வரலாற்று ஆய்வுலகத்தை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் டாக்டர். ஆ. இரா. வெங்கடாசலபதி. என்னுடைய இளமைக் காலத்தில் எனது எழுத்தை நேரிடையாகப் பாதித்தவர்கள் கவிஞர்.ப. இராஜேஸ்வரனும் த. கோவேந்தனும்தான்.''

கவிதை, ஓவியம் ஆகியவற்றைப் படைப்பதற்கும் ஒரு மொழி பெயர்ப்பைச் செய்வதற்கும் எத்தகைய வேறுபாட்டை நீங்கள் உணர்கிறீர்கள்?

""என்னைப் பொறுத்தவரையிலும் எனது எல்லா படைப்புச் செயல்பாடுகளும்- மொழிபெயர்ப்பு உட்பட - எழுத்தாளனுக்குள் இருக்கும் அந்தராத்மாவை இன்புறுத்துவதற்காகச் செய்யப்படுகிற ஒரு செயல்பாடுதான். அதே எழுத்து ஒரு பத்திரிகையில் வெளியிடப்படுகிற போது- ஒரு நூலாக வெளியிடப்படுகிறபோது- ஒரு ஓவியக் கண்காட்சியாக இடம் பெறுகிறபோது அது ஒரு சமூகச் செயல்பாடாகி விடுகிறது.

இளமையிலிருந்து எனக்கு ஒரு குணம் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு படைப்பைப் படிக்கிறபோது அதை எனக்கே எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நான் விரும்புவேன். இத்தருணங்களில் அந்த வேற்று மொழி படைப்பை எனது தாய்மொழியான தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கிவிடுவேன்.

இப்படி மொழிபெயர்க்கிறபோது வார்த்தைகள் மொழிபெயர்க்கும் செயல்பாட்டில் மேலும் எனக்கு நன்கு துலங்கத் தொடங்கும். ஒரு இலக்கியப் படைப்பை மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே மொழிபெயர்ப்புகளை நான் மேற்கொண்டிருக்கிறேன். "அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்', "காற்றுக்குத் திசை இல்லை', "பசித்த தலைமுறை' போன்ற எனது மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் இருக்கும் பல படைப்புகள் இப்படி என்னுடைய சொந்த சந்தோஷத்துக்காகச் செய்யப்பட்டவைதான்.

இப்படி நான் சொல்வதன் அர்த்தம் நான் சமூகத்தைப் புறக்கணிக் கிறேன் என்பது அல்ல. எனது கலை - இலக்கியச் செயல்பாடுகளை ஒரு தாவரம் எனக் கொள்வீர்களெனில், அது நான் எனும் தனிமனித மண்ணில் வேர்விட்டு சமூகம் என்கிற விண்ணை நோக்கி வளர்கிறது என்பதுதான்.''

அப்படியானால் இளமையில் முதன்முதலாக எழுதத் தொடங்கிய போது யாருக்காக எழுதினீர்கள்?

""இளமையில் எனது எழுத்துகளைப் படிப்பதற்கென்று யாருமே இல்லாத ஒரு காலகட்டத்தில்கூட நான் எழுதிக்கொண்டுதான் இருந்தேன்.. எனது சுய மகிழ்ச்சிக்காக ஓவியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு பதினான்கு வயது இருக்கிறபோது பிற்பகலில் எனது வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் தனிமையான பொழுதுகளில் நான் எனக்கே எனக்கான கவிதைகளை எழுதி சந்தோஷித்திருக்கிறேன். எனக்கு ஆறு வயதிருக்கும்போதே- ஒரு ஓவியரான எனது தந்தையாரின் தூரிகைகளையும் வண்ணங்களையும் அவருக்குத் தெரியாமல் எடுத்து ஓவியங்களாகத் தீட்டி மகிழ்ந்திருக்கிறேன். அவற்றை ரசிப்பதற்கென்று அப்போது ஒருவர்கூட இருந்தது கிடையாது.

இன்றைக்கும்கூட அப்படித்தான். கலை - இலக்கியச் செயல்பாடுகள் எனது அந்தராத்மாவுக்குச் சம்மதமற்று இருந்தால் அதில் நான் ஈடுபடுவதில்லை. கலை - இலக்கியம் எனும் பரந்த களமே எனது சுதந்திர பூமி. இன்றைக்கு தமிழ்ச் சமூகத்தை ஆட்டிப்படைத்து வரும் அரசியல், சினிமா ஆகியவற்றின் கையில் நான் சிக்காமல் இருப்பதற்குக்கூட எனது சுதந்திர உணர்வுதான் காரணம்.''

அப்படியானால் தீவிர இலக்கியம் பேசுகிற எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், தமிழ்ச்செல்வன்,

வ.ஐ.ச. ஜெயபாலன் போன்றவர்கள் சினிமாவுக்குப் பணியாற்றுவது தவறு என்று சொல்கிறீர்களா?

""நிச்சயமாக இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், தமிழ்ச் செல்வன், வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகிய எல்லாரும் தமிழ் எழுத்துக்கு புதிய எல்லைகளை வகுத்தவர்கள். தீவிர இலக்கியவாதிகளான இவர்கள் மடி ஆசாரம் பார்க்கும் சிறு பத்திரிகைகளின் படி தாண்டி சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொன்னால் தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.

சினிமா ஒரு கலை சாதனம் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு ஓவியத்தைப்போல்- ஒரு சிற்பத்தைப்போல்- ஒரு கவிதையைப்போல் சினிமாவை ஒரு கலை வடிவமாகக் கருதுகிறவன்தான் நான். "ரேயின் சினிமாவும் கலையும்' எனும்- வங்காள சினிமா மேதை சத்யஜித்ரே பற்றிய ஒரு நூலை 1986-ல் - அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வெளியிட்டேன்.

அதே நேரத்தில் "தமிழ் சினிமா ஒரு குறுக்கு விசாரணை' எனும் தொடர் கட்டுரைகளை கவிஞர் மீரா நடத்திய "அன்னம்' இதழில் எழுதி வந்ததன் மூலமாக தமிழ் வணிகச் சினிமாவைக் கடும் விமர்சனத்துக்கு உட்படுத்தி வந்தும் இருக்கிறேன்.

சத்யஜித்ரே பற்றிய எனது நூலை சென்னையில் ஜெயகாந்தன்தான் வெளியிட்டுப் பேசினார். அந்த ஜெயகாந்தனும் சினிமாவுக்குப் போனவர்தான்.

ஜெயகாந்தன் தமிழில் மாற்று சினிமாவுக்கான முதல் கல்லை நடுவதற்காக சினிமாவுக்குப் போனவர். அதில் நிறைய இன்னல்களைச் சந்தித்தவர். இன்று மிஷ்கின் தனது "நந்தலாலா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு பட்ட சிரமங்களைப்போல் பல மடங்கு சவால்களைச் சந்தித்தார்; வெற்றியும் கண்டார்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவையும் அதில் ஈடுபட்டவர் களையும் வெகுஜன கலாசாரம் என்று முத்திரை குத்தி இழிவாகப் பேசி வந்தவர்கள் எல்லாம் இன்று சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொன்னால், தமிழ் சினிமாவின் தரம் உயரத் தொடங்கி இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

இதை தீவிர இலக்கியவாதிகளின் வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் பாலா, மிஷ்கின், வசந்தபாலன், ஞான. ராஜசேகரன் என்று நீளும் தமிழ் சினிமா இயக்குனர்களின் வெற்றி என்றே சொல்லுவேன்.''

விமர்சனத்தின் மூலமாக குற்றம் குறைகளைக் கண்டுபிடித்து எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பது உங்களுக்கு உவப்பானதாக இருக்கிறதா?

""விமர்சகன் என்று என்னை அழைப்பவர்கள், கலைப் படைப்புகளில் குற்றம் குறைகளை மட்டுமே கண்டுபிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவன் என்று என்னைக் கருதுவார்களெனில் அவர்கள் என்னை முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே உண்மை

.ஓவியத்தை அல்லது ஒரு புதினத்தை ரசிப்பதற்கான அழகியல் மனநிலை, ஒருவர் தான் பெற்ற கலை பற்றிய கல்வி மற்றும் பண்பாட்டு ரீதியாக அவர் பெற்ற கலை பற்றிய அனுபவம் ஆகியவற்றால் வாய்க்கிறது. கணிதத்தை ஒருவருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அவருக்கு கணக்கு என்பது எப்படி ஒரு புரியாத புதிராகப் போய்விடுமோ அதேபோல்தான், ஓவியம் என்றால் என்ன என்று பார்வையாளர்களுக்குக் கற்றுக் கொடுக்காவிட்டால் அது அவர்களுக்கு ஒரு புரியாத புதிராகத்தான் தென்படும்.

தனிப்பட்ட மனிதர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளைக் கடந்த நிலையில், ஒரு கலைப் படைப்பை மதிப்பிடுவதற்குத் தேவைப்படும் தரவுகளை முன்வைப்பது என்பது எனது விமர்சனச் செயல்பாட்டின் முக்கியக் குறிக்கோள். அதனால்தான் கலை பற்றிய தத்துவார்த்தமான பார்வையாகிய அழகியலைப் பற்றி நான் பேச நேர்கிறது. தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான அழகியல் பார்வை இருக்கிறது என்று ஒரு கருத்துருவாக்கத்தை முன்வைத்து வாதாடவும் செய்கிறேன்.

நவீன ஓவியம் என்றாலும், மரபார்ந்த சிற்பம் என்றாலும் அவற்றைப் புரிந்து கொள்ளும் மனநிலையை கட்டமைக்கும் முயற்சிகள் இன்றைய தமிழில் இடம்பெறவில்லையே என்கிற ஏக்கத்தின் காரணமாகவேதான் நான் கலை விமர்சனத்தைக் கையில் எடுத்தேன்.''

உலகமயமாதல் என்பது முழுமையடைந்திருக்கிற இந்த கால கட்டத்தில், தமிழ் அழகியல்’’ என்கிற கருத்துருவாக்கத்தை நீங்கள் முன்வைப்பது என்பது காலத்துக்குப் பொருத்தமானதாகத் தெரிகிறதா?

""எனது "அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்' 1982-ல் வெளிவந்த போது அதற்கு நான் எழுதிய முன்னுரையில், "விரைவில் நாம் ஒரு கிரகம் தழுவிய பண்பாட்டைச் சந்திக்கப் போகிறோம். அத்தகைய புதிய பண்பாட்டைக் கட்டித் தழுவி வரவேற்பதற்கு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது எனும் விழிப்புணர்ச்சி நமக்குத் தேவைப்படுகிறது' என்று எழுதினேன். இன்றைய உலகமயமாதலுக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டியம் கூறியவன் நான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பௌதீகத்தில் அமெரிக்க பௌதீகம் என்றும், ஆப்பிரிக்க பௌதீகம் என்றும் இரண்டு கிடையாது. ஆனால் கலையில் அப்படி இல்லை. அதற்கு தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள் உண்டு. சீன ஓவியமும் ஆப்பிரிக்க ஓவியமும் தங்களுக்கென்று தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை. கோதிக் கட்டடக் கலையும் திராவிட கட்டடக் கலையும் தனித் தனியான பண்புக் கூறுகளைக் கொண்டவை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் தமிழ்ப் படைப்புகளில் அது ஓவியமானாலும் சிற்பமானாலும் அதற்கென்று தனியான பண்பாட்டு அடையாளங்களும், உப பண்பாட்டு அடையாளங்களும் இருக்கின்றன என்று வாதிடுகிறேன்.

இந்த இடத்தில் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றையும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்பது ஒரேமாதிரியான- மொன்னையான- தட்டையான ஒற்றைப் பரிமாணம் கொண்டது அல்ல என்பதை மிக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்பது பல்வேறு அடுக்குகள் கொண்டது.''

சர்வதேச மொழியில் பேசக் கூடிய ஒரு ஓவியம் எப்படி தமிழ் அடையாளம் கொண்டதாக இருக்க முடியும்?

""இந்த வினா இன்றைய ஓவியர்களுக்கும் இருக்கிறது. கலையில் இன, பண்பாட்டு அடையாளங்களைத் தேடுவது என்பது பிற்போக்கானது என பல ஓவியர்களும், சிற்பிகளும் இன்றைக்கு நினைக்கிறார்கள். கே.எம். ஆதிமூலம்கூட என்னுடனான "இண்டியன் எக்ஸ்பிரஸ்' நேர்காணல் ஒன்றில் "ஓவியம் என்பது சர்வதேசத் தன்மை கொண்டது' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கேள்வி எழுகிறபோதெல்லாம் பாரீஸ் பல்கலைக் கழகப் பேராசிரியரான மைக்கேல் டப்ரேன் ஒருமுறை கூறியதை என்னால் மறக்க முடிவதேயில்லை. அவர் சொன்னார்:

"கான்சாஸ் கணிதம் என்றோ, சோவியத் உயிரியல் என்றோ எதுவும் இல்லை. ஆனால் பாலினீசிய நம்பிக்கை, ஸ்பானிய கலைப் போக்கு என்ற ஒன்று இல்லை என்று நாம் கூற முடியுமா?'

ஆப்பிரிக்க நாட்டுக் கவிஞரும் நாடகாசிரியருமான வோல்லே சொயின்கா தனது நாடகங்களை பிரிட்டனில் ஆங்கிலத்தில் எழுதி அரங்கேற்றுகிறார். ஆனால் அவரது நாடகங்களை அவர் அவரது சொந்த மண்ணான நைஜீரியாவின் பண்பாட்டு அடையாளங்களுடன்தான் தயாரிக்கிறார். இந்தப் பண்பாட்டு அடையாளத்துக்காகத்தான் அவர் நோபல் பரிசு பெறுகிறார்.

இதேபோல் ஐசாக் பெஷ்விஷ் சிங்கர் எனும் யூதரால் அவரது தாய்மொழியான ஈடிஷ் மொழியில் எழுதப்பட்ட நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தன என்றால் என்ன காரணம்? அவர் அமெரிக்காவில் குடியேறி முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபோதிலும், அவரது கதைகள் அவர் ஒரு காலத்தில் வாழ்ந்த யூத சமூகம் பற்றியதாகவே இருக்கிறது.''

அப்படியானால் தற்கால நவீன ஓவியர்கள், சிற்பிகள் ஆகியோரில் தமிழ் அழகியல் கூறுகள் கொண்ட ஓவியர்கள் யாரேனும் இருக்கிறார்களா?

""நிறையவே இருக்கிறார்கள்... ஆனால் அவர்களை அடையாளம் காண வேண்டும். இந்தத் திசையில் பயணிக்கிறபோது தற்காலத் தமிழ் ஓவியர்களின் ஓவியங்கள் சிறக்கின்றன. தமிழகத்தின் மிக முக்கிய சிற்பியாகத் திகழ்ந்த டி.ஆர்.பி. மூக்கையாவின் சுடுமண் சிற்பங்களையும் உலோகச் சிற்பங்களையும் எடுத்துக் கொண்டால் அவை பிகாசோ, ஹென்றீ மூர் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற சிற்பிகளின் பாணிகளின் பாதிப்புக்கு உள்ளானவை என்று பேசப்படுவது உண்மைதான். ஆனால் அவை தமிழகத்துக்கே உரிய கரகாட்டம், ஏறுதழுவுதல், பறை அறைதல் போன்றவற்றையே கருப்பொருளாகக் கொண்டவை. அவை மேலை நாட்டு பாணியை மேற்கொள்ள நினைத்த அதே நேரத்தில், தமிழகத்தின் சுடுமண் சிற்பங்களின் மரபார்ந்த மக்கள்கலை பாணியையும் உட்கிடையாகச் சுவாசிப்பதை நாம் கவனிக்க வேண்டும். இதை மூக்கையா கலைரீதியான ஒரு முடிவெடுத்துச் செய்தார் என்று சொல்வதைக் காட்டிலும், அவரது கிராமத்தில் அவர் பார்த்து அறிந்திருந்த மக்கள் கலை மரபுகள் அவரை அறியாமலேயே அவரது படைப்புகளில் தொழிற்பட்டன என்றே நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

இதே போன்று இன்று மூத்த ஓவியராக வாழ்ந்து படைப்புகளைச் செய்துவரும் பி. பெருமாளின் ஓவியங்களை எடுத்துக் கொண்டாலும் அவை மேலை ஓவிய உலகத்து ஓவியப் போக்காக இருந்து வந்த ஃபாவிஸ்டுகளின் பாணியை நினைவுறுத்தினாலும், அவரது ஓவியப் படைப்புகளில் தமிழ்ப் பண்பாட்டுக்குக் கூறுகள் இருப்பதை நாம் அறிய முடியும். எஸ். தனபால், ராஜவேலு போன்றவர்களின் சித்திரங்களில் சோழர்கால சுவரோவியங்களில் காணப்படும் ஆற்றொழுக்கான கோடுகள் ரீதியாக உருவங்களை வரையறுக்கும் மரபு தொழிற்படுவதை உணர முடியும். சந்தானராஜ், அல்ஃபொன்சோ அருள்தாஸ், அந்தோணிதாஸ் போன்றவர்களின் ஓவியங்களிலும் தமிழ்க் குறியீடுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவை இடம்பெறுவதைக் காண முடியும். மூத்த ஓவியர் முத்துசாமியின் ஓவியங்களில் மிக நவீன பாணியான கொல்லாஜ்’’ ஓவிய முறை பயன்படுத்தப்பட்டபோதிலும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் போன்றவையே கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

தமிழ் இலக்கியக் களத்தில் தனியே கவனிக்கப்பட்ட கே.எம். ஆதிமூலத்தின் ஓவியங்கள் பெரும்பாலும் அரூப ஓவியங்களாக இருந்த போதிலும், அவரது சித்திரங்கள் மரபான சுடுமண் சிற்பங்கள், உலோக படைப்புகள், தோற்பாவைகள் ஆகியவற்றின் தன் மனோலயத்திற்கு ஏற்ற உருத்திரிபுகளோடு வெளிப்பட்டன என்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

இத்தகைய ஓவிய முன்னோடிகளின் பாதையில் தற்கால இளம் ஓவியர்கள் இயங்கத் தொடங்குவார்கள் என்றால், அவர்கள் இன்று சந்திக்கும் பண்பாட்டு அடையாளச் சிக்கலை படைப்பு ரீதியாக அவர்கள் தீர்த்துவிட முடியும்.

பின்காலனித்துவப் பார்வையில் நாம் நமது கலைப் படைப்புகளைப் பார்க்கத் தொடங்குவோமேயானால் அரசியல், பொருளாதார, வரலாற்றுப் பின்னணியிலான ஒரு அழகியல் பார்வை நமக்குக் கிடைக்கும்.

இது குறித்து நாம் செய்ய வேண்டிய ஒன்றாக இந்தியாவின் தலை சிறந்த ஓவியரும், கலை விமர்சகருமான கே.ஜி. சுப்பிரமணியம் கூறுவதை நாம் கவனித்தே தீர வேண்டும்.

"நவீன இந்திய ஓவியர்கள் தங்கள் மரபுகளோடு உண்மையான இணக்கம் கொள்ள வேண்டுமானால், அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொள்ளும் சாதனையைச் செய்ய வேண்டும்.'

இதனை அவர்கள் செய்வார்கள் என்றால் அவர்களது மரபு பல தலைகள் கொண்ட ஒரு அசுரனைப்போல உயிர்பெற்றெழுந்து அதனது பல வாய்களினால் அவர்களுடன் பேசத் தொடங்கிவிடும்.''

பின்காலனித்துவப் பார்வை என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

""காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றை ஐரோப்பிய மயப் படுத்தப்பட்ட- உலகமயப்படுத்தப்பட்ட தீர்ப்புகளிலிருந்து விடுபட்ட தரவுகளால் எடை போடும் பார்வையை நான் பின்காலனித்துவப் பார்வை என்று குறிப்பிடுகிறேன்.

எட்வர்ட் செய்த் எழுதிய "ஓரியண்டலிசம்', ஃப்ரான்ஸ் ஃபனான் எழுதிய "ரெச்சர்ட் ஆஃப் தி எர்த்', பார்த்தா மிட்டர் எழுதிய "தி மச் மாலைண்ட் மான்ஸ்டர்ஸ்' போன்ற நூல்கள் இதற்கான தரவுகளை முன்வைக்கின்றன.

இந்தியா பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்ததனால், இந்தியாவில் காலனி ஆதிக்கத்துக் காலத்து பிரதி ஒன்றை அல்லது கலைப் படைப்பு ஒன்றை மறு வாசிப்பு செய்வதற்கு மிக உகந்த ஒரு விமர்சனக் கருவியாக பின்காலனித்துவம் என்கிற கருதுகோளை எடுத்துக் கொள்கிறோம்.''

ஏதேனும் ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டி இதை விளக்க முடியுமா?

""இதை விளக்கிப் பேச வேண்டுமென்றால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

24 ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரிய கணக்குப் புத்தகங்களில் எழுதப்பட்ட ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகள் சில நேரங்களில் அவரது கைப்பட எழுதப்பட்டபோதும் பல நேரங்களில் அது அவர் வாய்மொழியாகச் சொல்லப்பட்டே எழுதப்பட்டுள்ளன.

இந்த டைரிக் குறிப்புகளை தனது "பாலபாரதி' மாத இதழில் தொடர்ந்து வெளியிட்டார் வ.வே.சு. அய்யர். இவை அந்தரங்கமான நாட்குறிப்புகள் அல்ல. தன்னை ஒரு சாட்சியமாக வைத்து தன் காலத்தின் பல்வேறு நிகழ்வுகளை ஆனந்தரங்கம் பதிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில் அதை ஒரு வரலாற்று ஆவணமாக ஆக்கும் நோக்கமும் அவருக்கில்லை என்றே தோன்றுகிறது. தன்னை ஒரு பார்வையாளனாக வும் ஒரு பங்காளியாகவும் கொண்டு மிகவும் இயல்பான முறையில் அவர் தன் குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்.

1736- செப்டம்பர் 6-ல் தொடங்கி 1761- ஜனவரி 12-ஆம் தேதி வரை எழுதப்பட்ட ஆனந்தரங்கரின் டைரிக் குறிப்புகள், ஒரு சமூக- வரலாற்று ஆவணம் என்பதையும் கடந்து ஒரு முக்கிய இலக்கியப் பிரதியாகவும் விளங்குவதை நாம் மறுக்க முடியாது; மறக்கவும் கூடாது. தமிழில் உரைநடை வளர்ச்சிக்கு இதன் மூலமாக பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் ஆனந்தரங்கம்.

பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின் எதிர்ப்பாளராக இல்லாமல், துப்ளெக்ஸ் துரையின் நண்பராக அவருக்கு பல்வேறு உதவிகளைச் செய்த அதே நேரத்தில், தனது சமூகத்தின் விழுமியங்களை பிரெஞ்சுக்காரர்களிட மிருந்து காப்பவராகவும் ஆனந்தரங்கம் விளங்கினார். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் புதுச்சேரியின் சம்பாகோவில் இந்துக் கோவிலாக இருந்து கிறித்துவக் கோவிலாக பிரெஞ்சுக்காரர்களால் மாற்றப்பட்டபோது அவர் அதைச் சமாளித்த விதம்.

ஹெகமோனி என்ற இத்தாலிய மார்க்சிஸ்டான அந்தோனியோ கிராம்சி 1930-ல் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும். "ஆனந்தரங்கர் தான் எடுக்கும் முயற்சிகள் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான நன்மை தரக் கூடியவைதான் என்று அனைவரையும் நம்பவைக்கும் திறன் கொண்டிருந்தார். அதிகாரத்தினால் அல்லாமல், மக்களை வேண்டிக் கொள்வதனாலும் அல்லாமல் ஆளும் வர்க்கத்துக்கு எது நலமானதோ அதுவே எல்லாருக்கும் நலமானது என்று நம்பச் செய்யும் சாதுரியத்தினால் அவர் மாபெரிய ஆளும் வர்க்கமாக விளங்கினார். பிரெஞ்சு விழுமியங்கள் மிகவும் இயல்பான முறையில் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டன.'

ஆனந்தரங்கரின் இந்த மாபெரும் திறமையினால் ஒட்டு மாஞ்செடி ஒன்றை உருவாக்குவதுபோல் இந்திய- பிரெஞ்சு பண்பாடு ஒன்று விளங்கித் தோன்றுவதற்கு அவர் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.''

இந்திய - பிரெஞ்சுப் பண்பாடு உருவாக்கப்பட்டது சரியானதுதான் என்று குறிப்பிடுகிறீர்களா?

""சரி, தவறு என்கிற வாதத்துக்கே இதில் இடமில்லை. வரலாற்றைச் சரியான வெளிச்சத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.

Hybridity எனும் சொல்லால் ஒரு கலப்பினக் கலாச்சாரத்தைக் குறிப்பிடுகிறார் ஹோமி கே பாபா. இவரது வார்த்தையில் சொல்வதானால் "இரண்டு பண்பாட்டு கருத்துகளும், அமைப்புகளும் எந்தவித இடர்ப்பாடு மின்றி உருவாவதற்கு வசதிமிக்க மூன்றாவது வெளி ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார் ஆனந்தரங்கர்.'

இந்த மூன்றாவது வெளியின் படைப்பாற்றல் காலனித்துவ அதிகாரமும் காலனிமயப்படுத்தப் பட்ட மக்களும் சந்திக்கும் ஒரு இடத்தில் மையம் கொள்கிறது. தங்களுக்கு அன்னியமான ஒரு பண்பாட்டுப் பிரதேசத்தில் இறங்கி நடப்பதற்கு கொடுக்கப்படும் முழுச் சம்மதம், சர்வதேசப் பண்பாடு என்ற ஒன்றை கருத்துருவாக்கம் செய்வதற்கு வழிவகுக்கிறது. இது பன்முகப் பண்பாடு எனும் கருத்தை ஜீரணித்துக் கொண்டதனாலோ, பண்பாடுகளுக்குள் பேதங்கள் இருக்கத்தான் செய்யும் என்கிற புரிதலினாலோ உண்டானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக பண்பாடுகளுக்குள் ஒரு கலப்பு ஏற்பட வேண்டும் என்கிற புரிதலினால் உண்டானது.

இதற்கான மிகச் சிறந்த உதாரணம், புதுவையில் இன்றைக்கும் ஆனந்தரங்கம் பிள்ளை வீதியில் உள்ள ஆனந்தரங்கரின் வீடு. கீழை நாட்டு கட்டடக் கலையுடன் பிரெஞ்சுக் கட்டடக் கலை இணைந்த ஒரு கலப்பின மரபின்படி அந்த கட்டடத்தைக் கட்டச் செய்திருக்கிறார் அவர். இதன் விளைவாக ஒரு எழ்ஹய்ஸ்ரீர்-பஹம்ண்ப் கட்டடக் கலை தோன்றுவதற்கு மனம் திறந்து வழி கொடுத்திருக்கிறார்.

அதே போன்று பிரெஞ்சுக்காரர்களின் பண்பாட்டில் தமிழ்ப் பண்பாட்டை ஊடுருவல் செய்திருக்கிறார். பிரெஞ்சு கவர்னர் மாளிகைக்குள் தமிழ் அடையாளம் கொண்ட மேள தாளத்துடன், தங்கப் பிடி போட்ட கைத்தடி, பாதக்குரடு சகிதமாக உள் நுழையும் அதிகாரத் தையும் பெற்றிருக்கிறார். இந்த இடைப்பட்ட வெளிபண்பாட்டின் சுமையையும் அர்த்தத்தையும் தாங்கிக் கொண்டுவிடுகிறது.

இதனை மகத்துவப்படுத்திப் பேசுவது என்பதன் கீழ் மறைந்திருக்கும் காலனி அடிமை மன நிலையையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறக் கூடாது.

தொலை தூரப் பிரதேசங்களில் தங்களின் குடியேற்றங்களை உருவாக்கும் மறைமுகமான செயல் திட்டம் கொண்ட பிரெஞ்சுக்காரர் களின் காலனி ஆதிக்கச் செயல் குறித்த குற்ற உணர்ச்சி ஏதும் அவர் கொண்டிருந்தாரில்லை.

அதே நேரத்தில் ஆனந்தரங்கரின் மிகப்பெரிய சாதனையாக நாம் கருத வேண்டியது அவர் தனது டைரிக் குறிப்புகளை எழுதத் தேர்ந்தெடுத்த மொழி. அவர் பிரெஞ்சு மொழியில் தனது டைரியை எழுதாமல் தனது இந்திய மொழியான தமிழில் எழுதத் தொடங்கியது சிறப்பு. இந்த மொழித் தேர்வுதான் அவரது டைரி அந்தரங்க நோக்கம் கொண்டதே அன்றி பொதுவான வாசகனை நோக்கிச் செய்யப்பட்டது அல்ல என நிரூபிக்கின்றது.

இவ்வாறு காலனி ஆதிக்கத்துக்குப் பிறகான எல்லா பிரதிகளையும் எல்லா கலைப் படைப்புகளையும் நாம் ஆராய வேண்டும். இதன் ஒரு கிளைதான் நான் முன்வைக்கும் கருத்துருவாக்கமான தமிழ் அழகியலுமாகும்.''

"கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' தொகுப்பின் மூலம் தமிழில் முதன் முதலாக ஆதிவாசி கவிதைகளைக் கொண்டு வந்தவர் என்ற வகையில் நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

""ஆதிவாசிகளின் கவிதையும் அக்கவிதைகளின் அழகியலும் தனித்துவமானவை. உண்மையை எளிமையாகவும் நேரிடையாகவும் பேசுபவை. சங்க இலக்கியம்போல் இயற்கையைப் பேசி அதன் மூலம் தங்களைப் பேசி விடுபவை. ஆதிவாசிகளின் அழகியல்தான் இந்தியாவின் அழகியல். இந்தியப் பண்பாடு என்ற பெயரில் இன்று கட்டப்பட்டி இருப்பவை எல்லாம் ஆதிவாசிகளின் கலாச்சாரத்தின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டவைதான். அதனால் அது வெளிப்படையாகத் தெரியவில்லை.

அங்கே ஒரு பெண் தனது நாவினாலேயே அடுப்பைப் பற்ற வைத்து விடுகிறாள். காதலைப் பாடுகிறபோது மனமும் உடம்பும் ஒருசேர ஆராதிக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியப் பண்பாடு, இந்திய இலக்கியம் என்று நாம் பரவலாகப் பேசுகிறபோது ஆதிவாசிகளின் பண்பாடு, இலக்கியம் குறித்து எந்த அளவுக்குப் பேசுகிறோம்- எந்த அளவுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வியாக இன்னமும் திகழ்கிறது.

இம்மக்களைப் பொதுவாக Tribals, Tribes, Sheduled Tribes என்று ஆங்கிலத்திலும்; கிரிஜன்- அதாவது மலையின மக்கள் அல்லது பன்வாசி- அதாவது வனத்தில் வாழ்பவர்கள் என்று இந்தியிலும்; மலையின மக்கள் என்று தமிழிலும் நாம் பெயரிட்டு அழைக்கிறபோது அவர்களைப் பிரித்துப் பார்க்கிற தொனி வந்து விடுகிறது. எனவேதான் இந்தி- சம்ஸ்கிருத வார்த்தையான ஆதிவாசி’’ என்கிற சொல்லோ அல்லது தொல்பழங்குடிகள் எனும் தமிழ்ச் சொல்லோ பயிலப்படுவதை சமூக- அரசியல் பிரக்ஞை கொண்டவர்கள் வரவேற்கிறார்கள்.

ஆதிவாசி என்ற சொல் இவர்களது பண்பாட்டு அடையாள நீட்சியை - வரலாற்றை நினைவூட்டும் சொல்லாக இருப்பதால் இம்மக்களேகூட விரும்பி ஏற்கும் ஒரு சொல்லாக இது திகழ்கிறது. மையங்களால் அங்கீகரிக்கப்பட்ட குரல்களின் பட்டியலில் இடம்பெறாத ஒன்றாக ஆதிவாசிகளின் கவிதைகள் அதிகாரம் இன்னமும் உள்ளன. இதோ பாருங்கள் அண்மைக்கால ஆதிவாசி பாடல் ஒன்றை.

"சிவன் எப்போது பிறந்தார் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

இயேசு எப்போது பிறந்தார் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

அவர்களுக்கு முன்னால் நாங்கள் இங்கே இருந்தோம்.

நீண்டகாலத்திற்குப் பிறகு அவர்கள் இங்கே பிறந்தார்கள்.

அவர்கள் மக்களுக்கு மத்தியிலிருந்து பிறந்து வந்தார்கள்.

நாங்கள் கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்.'

இந்திய இலக்கியத்தின் அடி ஆழத்தில் சலசலத்து நீரோடைபோல வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு வாய்மொழி வழக்காகவே இன்னமும் உயிர்த்துடிப்போடு ஓடி வந்து கொண்டிருக்கும் ஆதிவாசி களின் இலக்கியம் குறித்து நாம் காட்டும் உதாசீனமும் இளக்காரமும் அம்மக்களையும் அவர்தம் ஆன்மாவாகிய இலக்கியத்தையும் வெளிறிப் போன நிழல்களாக்கி விடுகின்றன. இந்த கோபம்தான் பீகார் ஜார்கண்டில் கோயெல்-கேரோ அணைக்கட்டு எதிர்ப்பு ஊர்வலத்தில், 1994-ல் இந்த கவிதையாக வெளிப்பாடு கொண்டது.

அவர்தம் அன்றாட வாழ்க்கை மரபுகளிலிருந்து விலகிப் போய் விடக்கூடாது என்பதில் அவர்கள் காட்டும் தீவிரமும், பண்பாட்டு அடையாளங்களை இழந்து விடக்கூடாது என்பதில் அவர்களின் நெஞ்சுரமும் அவர்களது கவிதைகளை அவர்களது பண்பாட்டு ஆவணங்களாக- மூலசக்தி மிக்க வெளிப்பாடுகளாக, கிரகமயப்படுதலை, சூழலியல் சீர்குலைவுகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் போர்க் குணம் மிக்க குரல்களாக செய்து விடுகின்றன. தாங்கள் வாழ்ந்த இயற்கையின் சூழலைப் பறிகொடுக்க விரும்பாத ஆதிவாசி கவிதை, சூழலியல் அக்கறை ஆதிவாசியின் இரத்தத்தில் ஊறியது. இதோ ஒரு ஆதிவாசி கவிதை:

"யூகலிப்டஸ் மரங்கள் அழகானவை.

ஆனால் அவை ஆடுகள் மேயும் புற்களுக்கான

நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகின்றன.

குளத்துக்குப் பக்கத்தில்

யூகலிப்டஸ் மரங்கள் செழித்து வளர்கின்றன.

வறண்ட பாறைகளிலும் கூட.

ஆனால், அம்மரத்தின் இலைகள்

குளத்தின் நிறைய மீன்களைச் சாகடித்து விடுகின்றன.'’

கிரகமயமாதலும் நகரமயப்படுதலும் ஆதிவாசிகளின் வாழ்க்கையை- பண்பாட்டை- இலக்கியத்தைச் சீரழித்து விடுகின்றன. கனரகத் தொழிற்சாலைகளை நிறுவுகிறோம் என்பதன் பெயரால் ஆதிவாசிகள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். அவர்களின் நிலங்கள் அவர்களிடமிருந்து பொருளாதார வளர்ச்சியின் பெயரால் பிடுங்கப்பட்டு விடுகின்றன. ஆதிவாசிகள் பெருநகரங்களில் குடியேறும் நெருக்கடிக்கு ஆளாகிறபோது போதைப் பொருள் விற்பவர்களாகவோ, ரிக்ஷா இழுக்கிறவர்களாகவோ, விபசாரத்தில் ஈடுபடுபவர்களாகவோ மாற்றப்பட்டு விடுகிறார்கள். நிலத்தை இழந்த ஒரு ஆதிவாசி கவிஞனின் குரலைக் கேளுங்கள்:

"உணவுப் பொருள்களை விளைவிக்க

எங்களுக்கு நிலம் வேண்டும்.

எங்கள் பூமியில் விளைந்த உணவு வேண்டும்.

எங்கள் மூதாதையர்களின் ஆன்மாக்கள்

எங்கள் உணவுகளை அளிக்கிறார்கள்.

எங்கள் நிலத்தில் விளைவிக்கிறபோது அவை சுவைக்கின்றன.

எங்கள் மூதாதையர்கள் பயிர்களில் சுவாசிக்கிறார்கள்.

எங்கள் ஆன்மாக்கள்

அவற்றிற்கான மழையைக் கொண்டுவருகின்றன.

எங்கள் தந்தை

அவற்றிற்கு வண்ணத்தைக் கொண்டு வருகிறார்.

எங்கள் காடுகள் வெது வெதுப்பைக் கொண்டு வருகின்றன.

கடைகளில் விற்கப்படும் தானியங்கள் புளிக்கின்றன.

நாங்கள் இப்போது புளித்த தானியங்களால் வாழ்கிறோம்.

நாங்கள் நீண்டகாலம் உயிர் வாழப் போவதில்லை.'

நிலங்களைத் தனி உடமையாகக் கருதும் மனப்போக்கு ஆதிவாசி பண்பாட்டுக்கு அந்நியமானது. ஆதிவாசிகள் காடுகளின் பங்காளிகள். காடுகளைக் காப்பாற்றும் முயற்சியில் வனக் காவல் அதிகாரிகள் ஆதிவாசிகளுக்கு அவர்களின் காடுகளின்மீது இருக்கும் உரிமைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.''

ஆதிவாசி கவிதைகளை தற்காலமயப்படுத்த வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

""பிற தேசிய மொழிகளைப்போலவே ஆதிவாசிகளின் மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். வாய்மொழியாக இருக்கும் கவிதைகள் எழுத்து மொழியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆதிவாசிப் பகுதிகளில் ஆதிவாசிகளையே ஆசிரியர்களாக அமர்த்துவதன் மூலமாக ஆதிவாசி கவிதைகளை தற்கால ஆதிவாசிகள் உணர்ந்து ரசிக்கும் நிலை ஏற்படும்.

ஆதிவாசி கவிதைகளின் அழகியல் குறித்து நாம் ஆராயத் தொடங்கினால் நமது கவிதைகளின் அழகியல் எல்லைகள் மேலும் விஸ்தீரணம் அடையும்.''

தற்கால இலக்கிய உலகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

""ஒரு சீனியர் எழுத்தாளன் என்ற வகையிலும், ஒரு கலை விமர்சகன் என்ற வகையிலும் தற்காலத் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமாகவே எனக்குத் தென்படுகிறது. குறிப்பாக தமிழகத்திலிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்குக் கணிப்பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் பல தமிழர்கள் சென்றபோதிலும், இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த அரசியல் நெருக்கடிகளினால் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களினால்தான் தமிழ் ஒரு புதிய பன்முகப் பரிமாண வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தமிழுக்கு ஒரு ஷோபா சக்தி, ஒரு சேரன், ஒரு வ.ஐ.ச. ஜெயபாலன், ஒரு முத்துலிங்கம், ஒரு கி.பி. அரவிந்தன் போன்ற உன்னதமான எழுத்தாளர்கள் ஈழத் தமிழர்கள்தான்.''

வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தமிழர்களைச் சொல்ல மாட்டீர்களா?

""நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் முதலில் நினைவுக்கு வரும் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. ஒரு நல்ல நாவலாசிரியரான இவர் பிரெஞ்சிலிருந்து நேரிடையாக மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்புகள், அறிவார்ந்த கட்டுரைகள் ஆகியவற்றால் மிக முக்கியமானவர்.''

இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் குறித்து உங்கள் விமர்சனம் என்ன?

""சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினன் என்பதையும், 1975-ல் நான் மும்பையில் வாழ்ந்த காலம்தொட்டு எனது மிக நெருங்கிய நண்பர் என்பதையும் கடந்த நிலையில் சொல்கிறேன். நாஞ்சில்நாடன் தார்மீகக் கோபம் கொண்ட மிகச் சிறந்த ஒரு எழுத்தாளர். தமிழ் மண்ணின் அடையாளத்தை நாஞ்சில் நாட்டு மொழி வளத்தோடு படைப்பிலக்கிய மாகக் கொடுத்தவர். சாகித்ய அகாடமியின் தமிழ் கன்வீனராக இருக்கும் கவிஞர் சிற்பியின் காலகட்டத்தில் நடந்திருக்கும் மிக முக்கியமான பங்களிப்பு நாஞ்சில்நாடனுக்கு விருது கொடுத்திருப்பது. மும்பையில் நான், நாஞ்சில்நாடன், ஞான.ராஜசேகரன், ஞானபானு ஆகியோரெல்லாம் ஒன்றாகக் கலை - இலக்கியத்தில் ஈடுபட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.''

நேர்காணல்: எழில்முத்து

புகைப்படம்: கீதாஞ்சலி

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8196

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.