Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமகால புலம்பெயர் தமிழ் ஊடகங்கள்: கருத்துநிலை, சவால்கள் பற்றிய ஒரு குறிப்பு

Featured Replies

சவால்களும் சஞ்சலங்களும் மிக்க சமகால ஈழத் தமிழ் அரசியல் பின்னணியில்,பொங்குதமிழ் இணைய சஞ்சிகையின் ஓராண்டு கால பணியானது முன்னுதாரணம் மிக்கது. குறிப்பாக ஏறத்தாழ முற்று முழுதாக தற்படைப்பான (original) ஆக்கங்களை மின் பிரசுரம் செய்ததன் மூலமாக பொங்குதமிழ்காரர்கள் புலம்பெயர் ஊடகச் சூழலில் தெம்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளனர்.

எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பில் ஒரு சுருக்கமான கணக்கு வழக்கு பார்ப்பதற்கு இதனை விட வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பம்அமையப் போவதில்லை.

இங்கு நாம் பார்வைக்கு எடுக்கும் ஊடகப்பரப்பு தொடர்பில் தெளிவான வரையறைகள் இனம் காணப்படுவது அவசியம்

புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பில், அதன் அரசியல் பரிமாணத்திற்கு அப்பால் அதன் வாழ்வியல் பற்றியதான ஒரு முழுமையான ஆய்வு முயற்சி எதுவும் இன்றுவரைநடைபெறாமை மிகவும் ஏமாற்றமளிக்கும் விடயமாகும். இன்னொரு வகையில் கூறுவதானால், புலம்பெயர் தமிழர்களை அவர்களின் 'நெடுந்தூர தேசியவாதம்' தொடர்பில் ஆய்வு செய்த அளவிற்கு, அவர்களின் வாழ்வியலின் ஏனைய விடயங்களுக்குமுக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஈழத்தமிழ் வாழ்வை அவர்களின் சுயாட்சிக்கான அரசியல்போராட்டம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதையும் இதனால் உய்த்தறிந்து கொள்ளலாம்.

ஈழத்தமிழரின் மேற்கத்தேய புலம்பெயர்வு வாழ்க்கையானது, 1950 கள் தொடக்கம், தொழில் நிபுணத்துவம் மிக்க துறைசார்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்வதுடன் ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் ஆங்கில மயப்பட்ட வாழ்வு முறையானது, குடியேறிய நாடுகளில் அவர்கள் தனித்த ஒரு குழுவினராக அடையாளம் காட்டப்படுவதை தவிர்த்ததுடன், எந்தவித அரசியலும் அற்ற வாழ்வு முறையாகவே காணப்பட்டது.

1970 களின் ஆரம்பத்திலிருந்து 'தரப்படுத்தல்' மற்றும் வேகமாக மாறி வரும் அரசியல் சூழல் காரணமாகவும் தமிழ் மாணவர்கள் பிரித்தானியாவுக்கு உயர்கல்வி கற்க வருவது அதிகரித்தது. சம காலத்தில் முனைப்பு பெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, புலம்பெயர்ந்த தமிழ் இளைஞரிடையே போராட்டம் பற்றிய கருத்துநிலை சித்தாந்தமும் ஆழமாக ஊடுருவியிருந்தது.

அதே வேளையில் 'வயதில் கூடிய' புலம்பெயர் தமிழர்களும், தாயகத்தில் மாறி வரும் அரசியல் சூழல் காரணமாக அரசியல் மயப்படத் தொடங்கியிருந்தனர்.இதன் மூலமாக நாம் அவதானித்துக் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில்; ஈழத் தமிழர் அரசியல் ஆயுதப் போராட்டமாக வடிவ மாற்றம் கொண்டமை, புலம்பெயர் தமிழ் வாழ்வில் ஓர் 'நீர் பிரிநிலையாக' (watershed) கொள்ளலாம்.

நாம் இங்கு பார்வைக்கு எடுத்துள்ள அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், புலம்பெயர் தமிழரின் அரசியல் மயப்படுத்தலுடன் தான் ஆரம்பித்தது எனலாம். அதாவது தற்போது பாவனையிலுள்ள பல்வேறு ஊடகங்களின் ஆரம்ப மூலமாக, எழுபதுகளில் நடந்தேறிய புலம்பெயர் தமிழரின் தமிழ் தேசியம் தொடர்பான அரசியல் மயப்படுத்தலை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த கட்டுரையானது புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான ஒரு வரலாற்று பகுப்பாய்வாக இல்லாத காரணத்தினால், நாம் சம காலத்திற்கு நகர்வோம். அதே வேளையில் புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பிலும் தமிழ் ஊடகங்கள் தொடர்பிலும் முறையான ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று இக்கட்டுரை வலியுறுத்தி நிற்கின்றது.

புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் - தற்போதைய நிலவரம்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல ஈழத் தமிழ் தேசிய அரசியலை மையமாக வைத்தே ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் செயற்பட்டு வருகின்றன. இந்த வகையில் நாம் ஓர் இரு வகையீட்டை பார்க்கலாம். அதாவது தமிழ் தேசிய அரசியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பில் சார்பு நிலைப்பாட்டை கொண்ட ஊடகங்கள், ஏனைய ஊடகங்கள் விடுதலைப் புலிகளை மையமாக வைத்து செயற்படும் அரசியலை, எதிர்க்கும் ஊடகங்கள். இந்த கட்டுரையில் மேற்கூறிய இரு வகையீட்டின் அடிப்படைகள் பற்றி ஆராய்வது நோக்கம் இல்லை என்பதால் இது பற்றி மேலும் விபரிக்கப்படாது.

தற்போது செயற்பாட்டில் உள்ள ஊடகங்களின் புலம்பெயர் தமிழ் சனத்திரளின் மீது ஏற்படுத்தும் ஊடுருவல் தன்மை / பாவனை வீதம் குறித்தோ அல்லது சந்தா விபரம் குறித்தோ பகிரங்கமான தரவுகள் ஏதும் இல்லை என்ற காரணத்தினால்; ஊடகங்களின் செல்வாக்கு தன்மை பற்றி கருத்து கூறுவது மிகவும் கடினமாக உள்ளது.

ஆனாலும் மிகவும் பல்கிப் பெருத்துவரும் இணைய ஊடகங்கள் உள்ள சூழலிலும் 'பாரம்பரியமான' ஊடகங்களான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களான வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றனவேமிக அதிகளவில் வீச்சுப் பெற்றவையாக உள்ளன. அதே வேளையில் கணணி பாவனை என்பது மத்திய தர குடும்பங்களிலேயே செறிவடைந்து காணப்படும் தன்மை தற்போது மாற்றமடையத் தொடங்கியுள்ள சூழலில், இணைய ஊடகங்களின் வீச்சு அதிகரிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் இயங்கு தன்மை மற்றும் கருத்துநிலை ஊடாட்டம்

மேலே குறிப்பிட்டது போல ஊடகங்கள் தமது சார்பு நிலைப்பட்ட அரசியலை எடுத்தியம்புவது மாத்திரம் அல்லாமல் தமது அரசியலை 'நம்பாத' இன்னொரு தொகுதி புலம்பெயர் சனத்திரளை செல்வாக்கு செலுத்துவது குறித்து அக்கறைப்படுவது கிடையாது. அதாவது தமது நிலைப்பட்ட அரசியலை பகிர்ந்து கொள்வோருடனான ஒரு கருத்துநிலை ஊடாட்டமாகவே புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் செயற்பாடு அமைந்துள்ளது.

இவ்வாறான ஊடாட்டம் இதற்கே உரித்தான பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்க்கின்றது. அதாவது ஊடகங்களினதும் அவற்றின் செய்திகளினதும் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுவதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லாமல் போகின்றன, ஏனெனில் அவ்வாறான செய்திகளின் நுகர்வோர், அந்தந்த ஊடகங்களின் சார்பு நிலைப்பட்ட அரசியலைஏற்கனவே வரித்துக் கொண்டவர்களாக இருப்பது காரணமாகும்.அதாவது ஒரு செய்தியின் நம்பகத்தன்மை குறித்து அதனை பிரசுரித்த ஊடகத்தின் நேர்மைத் தன்மையில் மட்டுமே நம்பியிருக்கின்ற நிலவரமே காணப்படுகின்றது. ஒருவர் கூறலாம், வாசகர்களுக்கு இன்னொரு ஊடகத்தை நாடுவதன் மூலம் ஒரு ஊடகத்தின் செய்தியின் நம்பகத் தன்மை குறித்து பரீட்சித்துப் பார்க்கலாம் என்று, ஆனால் நடைமுறையில் தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிர் நிலைப்பாடுள்ள ஊடகத்தை நம்பத் தாயாராகவில்லை என்பதுவே யதார்த்தமாகும்.

இதன் இன்னொரு அங்கமாக நாம் காண்பது, ஊடகங்களின் 'நடுவு நிலைமை' தன்மையாகும். உலகில் எந்த ஒரு ஊடகமுமே நடுவு நிலைமையாக கருத்து கூறுவதாக கருத முடியாது என்றாலும், தற்போது பிரதான ஊடகங்களில் (main stream media) பெருமளவில் பாவனையில் உள்ள 'இரு பக்கத்திலும் இருந்து கருத்து அறிந்து கொள்வது' என்ற தன்மைகூட புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இருப்பது கிடையாது.

இதற்கு இன்னொரு காரணியும் செல்வாக்கு செலுத்துவது காரணமாகும். அதாவது புலம்பெயர் தளத்தில் கருத்துநிலை ஊடாட்டம் என்பது அடிப்படையில் தாயகத்தில் நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் அரசியல் நிலவரங்களின் அடிப்படையிலேயே இயங்குவதுடன், ஊடகங்கள் என்பவை பெரும்பாலும் தாயக அரசியல் சார்ந்த 'செயற்பாட்டியலாகவே' (activism) ஆரம்பிக்கப்பட்டன. இவற்றினை ஆரம்பித்தோரும், பெரும்பாலும் 'செயற்பாட்டாளர்கள்' (activists) ஆகவே காணப்பட்டதுடன், ஊடக ரீதியான தொழில் நிபுணத்துவம் அவர்களிடத்தே காணப்படவில்லை என்பதுவும் முக்கியமான காரணமாகும்.

இதன் பயனாக ஒரு வருந்தத்தக்க கூட்டு ஒன்று உருவாவதை அவதானிக்கலாம். நிபுணத்துவ பயிற்சி அற்ற ஊடகங்களும் அவற்றின் செய்திகளை கேள்விக்கு உட்படுத்தாத அதே அரசியல் கருத்து நிலைப்பட்ட புலம்பெயர் தமிழ் நுகர்வோரும் என்று முனைவாக்கமடைந்த பிளவுபட்ட சமூகக் கூறுகளாகவே புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகின்றனர்.

ஊடக நியமங்கள் அற்ற தன்மை

பொதுவாக ஊடகங்களை பொறுத்தவரையில் அவை ஒரு பொதுவான அறம் சார்ந்த நியமங்களை கடைப்பிடிப்பது வழக்கம். இவை பெரும்பாலும் ஊடகங்களின் தன்னிச்சையான (voluntary) செயலாகவே காணப்படும்.ஊடகப் பயிற்சி காரணமாகவும் அந்தந்த ஊடகங்களின் நிறுவனமயப்பட்ட கலாச்சாரம் காரணமாகவும் இந்நியமங்கள் காக்கப்படுகின்றன.

புலம்பெயர் தமிழ் ஊடகங்களை பொறுத்த வரையில் அவ்வாறான நிறுவனமயப்பட்ட ஊடக கலாச்சாரம் இல்லாத காரணத்தினாலும் உகந்த நிபுணத்துவ பயிற்சி இல்லாமை காரணமாகவும், ஊடக நியமங்கள் கடைப்பிடிக்கப்படுவதில், பரந்த வேறுபட்ட தன்மை காணப்படுகின்றது. சில ஊடகங்கள் மிகவும் உயர்ந்த நிலையில் நியமங்களை கடைப்பிடிக்கின்றன. அதே வேளையில் சில ஊடகங்கள் மிகவும் வருந்தத்தக்க வகையில் எந்த விதமான நியமங்களையும் கடைப்பிடிப்பது கிடையாது. ஊடகங்களின் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது, குறிப்பாக இணைய ஊடகங்களைப் பொறுத்த வரையில் அந்த ஊடகங்களை நடத்துவோர் குறித்து எந்த விதமான தகவல்களும் வழங்கப்படுவது கிடையாது.ஊடகங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதன் மூலமாக அவர்களை பலமடைய செய்தல் என்பது ஒரு முக்கியமான கடமையாகும்.

அந்த வகையில் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. குறிப்பாக அரசியலுக்கு அப்பால், புலம்பெயர் தமிழ் வாழ்வில் இன்னும் பல விடயங்கள் உள்ளன, ஆனால் இவை குறித்த ஊடாட்டம் பெரும்பாலும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இல்லை என்றே கூறலாம்.

உதாரணமாக புலம்பெயர் வாழ்வு பற்றியதான ஓர் உள்முக விசாரணை எமது பிரதான புலம்பெயர் தமிழ்ஊடகங்களில் காண முடியாதுள்ளது.இவ்வாறான கருத்து விசாரணைகள் பெரும்பாலும், தமிழ் தேசியம் சாராத அரசியல் நிலைப்பாடு கொண்ட ஊடகங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழ் தேசியம் சார்ந்த ஊடகங்களின் சுய விமர்சனம் தொடர்பான தயக்கத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

'காலத்துக்கு ஒவ்வாத' இலத்திரனியல் ஊடக விளம்பரங்கள்

வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒலி / ஒளி பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் மிகுந்த 'அரசியல்-கலாச்சார' வேறுபாடு காணப்படுகின்றது.

உதாரணமாக ஒரு தொலைக்காட்சி விளம்பரம் பற்றி இங்கு பார்ப்பது உகந்தது. இந்த அரிசி மாவுக்கான விளம்பரத்தில், மாப்பிள்ளை பெண் பார்க்க இரண்டு வீடுகளுக்கு செல்கின்றார். முதலாவது பெண் வீட்டில் பரிமாறப்பட்டஉணவு குறித்த அரிசி மாவில் செய்யப்படாத காரணத்தினால் சுவையற்று இருந்த காரணத்தால் மாப்பிள்ளை அந்த பெண்ணை 'பிடிக்கவில்லை' என்று கூறுகின்றார். இரண்டாவது வீட்டில் குறித்த அரிசி மாவில் செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது காரணமாக உணவு சுவையாக இருந்தது. எனவே அவர் பெண்ணை 'பிடித்திருக்கின்றது' என்று கூறுகின்றார்.

இந்த விளம்பரம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தொலைக்காட்சி இதன் உள்ளடக்கத்தில் பங்களிப்பு செய்தது போன்று தெரியவில்லை. இங்குள்ள கேள்வி என்னவென்றால், மேற்குறிப்பிட்ட 'பெண் பார்க்கும்' முறைமை மற்றும் திருமணம் தொடர்பான கருத்துநிலைகளில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதாகும். உண்மையில் இரண்டாம் தலைமுறை தமிழர்களை பொறுத்த வரையில் மேற்குறித்த 'பெண்பார்க்கும்' நடைமுறையில் பெருமளவில் நம்பிக்கை கொண்டதாக தெரியவில்லை.

இந்த விளம்பரத்தின் அரசியல் பிற்போக்குத்தனத்துக்கு அப்பால், இந்த விளம்பரத்தின் இலக்காக உள்ள பார்வையாளர் யார் என்று பார்த்தால், யாருமே இல்லை என்பதுவே யதார்த்தமாகும். முதலாவது,

தொலைக்காட்சியில் பார்த்து புலம்பெயர் தமிழர்கள் அரிசி மா தெரிவு செய்வது கிடையாது, இரண்டாவது,இலத்திரனியல் ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் நுகர்வோர் பற்றிய ஆய்வுக்குப் பிற்பாடு சந்தைப்படுத்தல் தொடர்பில் பயிற்சி உள்ளவர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதுவாகும்.

இன்னொரு முக்கியமான விடயம், ஊடகங்களில் வெளிவரும், சித்த மற்றும் ஆயுர்வேத இயற்கை மருத்துவங்கள் தொடர்பான விளம்பரங்கள் மேற்கு நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையல்ல என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். இவ்வாறான விளம்பரங்கள் அப்படியே ஆங்கிலத்தில் அல்லது ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுமாயின், அவை சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக நியமங்களை மீறிய காரணத்தினால் தடை செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

விளம்பரங்கள் தொடர்பிலான ஊடகங்களின் 'கையறு' நிலைமை மேலும் ஒரு பிரச்சினையை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதாவது புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் பொருளாதார ரீதியிலான நிலைத்திருப்பு மிகவும் பலவீனமாகவே உள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறான 'அரசியல் அறம் பிழைத்த' விளம்பரங்களையும் பிரசுரிக்கின்ற அல்லது ஒளி பரப்புகின்ற சூழலில் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் உள்ளன.

இங்கு பாராட்டப்படவேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான அச்சு மற்றும் இணைய ஊடகங்கள், பலரினதும் சம்பளம் இன்றிய உழைப்பிலேயே இயங்கி வருகின்றமையாகும். இன்னொரு வகையில் குறிப்பிடுவதானால், இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்ட பல சவால்களை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் எதிர் கொள்வதன் காரணம், அவை உரிய பொருளாதார பின்புலம் அற்று இருப்பதுவேயாகும். இதுவே புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் எதிர் கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும். இவற்றிற்கு நேரடியான விடைகள் இல்லை என்றாலும், வினைத்திறன் மிக்க ஆக்கச் சிந்தனை மூலமாக இவ்வாறான சவால்களை எதிர் கொள்ள முடியும்.

முடிவாக, தற்போதைய சூழலில் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள்பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஊடக நியமங்கள் மற்றும் நிபுணத்துவ பயிற்சி தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். பொருளாதார நிலைத்திருப்பு தொடர்பில் புதிய திக்கில் சிந்திக்க வேண்டும்.

- அநபாயன்

http://www.ponguthamil.com/thedal/thedalcontent.asp?sectionid=8&contentid={CDA9BCB3-3D2C-4FDA-A719-E2A049D2A3E9}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.