Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள்

-முனைவர். மா. தியாகராசன்.

முன்னுரை

சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது.

சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவையாகிய நகைச்சுவையும் இந்நூலில் ஆங்காங்கு அமைந்து கற்போர்க்கு இன்பம் பயக்குகின்றது. அத்தகைய நகைச்சுவைக் காட்சிகளுள் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டி இன்பத்தை ஊட்டுவதே இக்கட்டுரையின் ஆக்கமும் நோக்கமும் ஆகும்.

நகைச்சுவை ஒரு நற்சுவை

“நகையே அழுகை இனிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” என்னும் நூற்பாவைக் கொண்டு பார்க்கும் போது, எட்டு வகையான மெய்ப்பாடுகளும் தமிழ்நாட்டில் நெடுங்காலமாகவே பகுக்கப்பட்டிருந்த மெய்ப்பாடுகள் என்பதை உணர முடிகிறது. இந்த எண் வகைச் சுவையுள் முதற் சுவடியாக அமைந்திருப்பது நகைச்சுவையே யாகும். நகைச்சுவை நயம் மிக்க கவிதைகளைப் படிப்பவர்கள் தங்கள் மனக் கவலையை மறந்து நகைச்சுவை இன்பத்தில் நுழைந்து, திளைத்து மகிழ்வார்கள். நகைச்சுவை களிப்பூட்டுகின்ற விருந்தாக மட்டுமின்றி, மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாகவும் விளங்குகின்றது. நகைச்சுவை அன்றும் இன்றும் மக்களிடையே செல்வாக்குடையதாக இருப்பதால்தான், ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்னும் புதிய பொன்மொழியும் நம் தமிழில் பூத்துள்ளது. அத்தகைய நகைச்சுவை, அகச்சுவையைக் கூறும் கலித்தொகையில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இக் கட்டுரையின் வழியாக ஆராய்ந்து அறிவோம்.

கள்வன் மகன்:

தலைவி ஒருத்தி சிறுமியாய் இருந்தபோது தன் தோழியுடன் தெருவில் மணலால் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது முரட்டுத்தனமான சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியர் அருகில் வந்து அவர்கள் மணல் வீட்டைத் தன் கால்களால் கலைத்துச் சிதைத்து விட்டு ஓடி விட்டான். மற்றொரு நாள் தலைவி சிறுமியாய் விளையாடிக் கொண்டிருந்த போது அதே சிறுவன் அவள் கூந்தலைப் பற்றி இழுத்து அவள் தலையில் சூடியிருந்த பூமாலையைப் பறித்து வீசினான். அவர்களுக்குரிய வரிகளையுடைய பந்தினை எடுத்துக் கொண்டு ஓடினான்.

இங்ஙனம் சிறிய வயதில் தலைவியின் உள்ளம் வருந்துமாறு பல செயல்களைச் செய்த அந்தச் சிறியவன் முரட்டுத்தனமானவன், கட்டுக்கடங்காதவன இன்று வளர்ந்த கட்டிளங்காளையாக இருக்கின்றான். அந்தத் தலைவியும் பருவப் பெண்ணாகப் பூத்துப் பொலிந்திருந்தாள். தலைவன் காளையாகவும் தலைவி பூங்கொடியாகவும் பருவம் எய்திய பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலா நிலை ஏற்பட்டது. தலைவி விளையாடுவதற்கு அனுப்பப்படாமல் வீட்டிலேயே இருந்த சூழ்நிலை. அப்போது அந்தத் தலைவன் தலைவியைக் காண விரும்பினாள்.

காதல் உணர்வுடன் தலைவியின் வீட்டிற்குச் சென்றான். வீட்டின் தலைவியும் அவன் தாயும் இருந்தார்கள். அவன் தலைவியின் தாயைப் பார்த்து “அம்மா! தாகமாக இருக்கிறது பருகுவதற்கு நீர் வேண்டும்” என்று ஒரு வழிப்போக்கனைப் போல கேட்டான். அப்போது தலைவியின் தாய் தங்கக் குவளையில் தண்ணீர் தந்து “இதனை அவனுக்கு அருந்துவதற்கு அளித்து வா” என்று அனுப்பி வைத்தாள், தண்ணீர்க் குவளை ஏந்திய தலைவியும் தன்னை அறியாமல் தலைவனைக் காணுகின்ற ஆவலை உள்ளத்துள் தேக்கி நீர் கொண்டு சென்றாள். தலைவன் முன் நின்றாள். அப்போது தலைவன் தண்ணீர் வாங்குபவன் போல, வளையல்கள் அணிந்த அவள் கரங்களைப் பற்றினான்.

தலைவனின் எதிர்பாராத இச்செய்கையால் அதிர்ச்சியுற்ற தலைவி மருட்சியுற்று, “அம்மா! இவன் என்ன செய்தான் பார்த்தாயா?” என்று உரக்கக் கூவினாள். அவள் குரல் கேட்ட தாய் என்ன நடந்தது என்று அறியாமல் அலறிக் கொண்டு ஓடி வந்தாள். தலைவன் செய்த செயலைத் தலைவி தன் தாயாரிடம் கூறினால் தலைவன் நிலை என்னவாகும்? தலைவி சிந்தித்தாள் தன் உள்ளங் கவர்ந்தவனை அவள் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை அதே நேரத்தில் அன்னையைத் தான் கூறி அழைத்ததற்குரிய காரணத்தையும் கூற வேண்டும்.

இந்த நிலையில் தலைவி தன் திறமையால் அன்னையை ஏமாற்றினாள். “அம்மா இவன் நீர் பருகும்போது நீர் விக்கினான் அதனால் தான் அஞ்சி அலறிக் குரல் கொடுத்தேன்” என்று கூறினாள். இதனைக் கேட்ட அன்னையும், எதிரில் நின்ற இளைஞனைப பார்த்துக் “கவனமாக நீர் அருந்தக்கூடாதா?” எனக் கேட்டுப் பின்னர் அவன் முதுகைத் தன் கரங்களால் தேய்த்துச் சரி செய்தாள். அப்போது, அந்தத் தலைவன் - கள்வன் மகன், தன் கடைக் கண்ணால் தலைவியைக் கொல்வது போல ஒரு பார்வை பார்த்து மெல்ல ஒரு புன்னகை செய்தான்.

இந்த நிகழ்ச்சியைத் தலைவி தன் தோழியிடம் எடுத்துக் கூறினாள்.

பின்வரும் பாடலில் இந்த அழகிய நாடகம் அரங்கேறியுள்ளது. இதோ பாடல்.

“சுடர்த் தொடீஇ!கேளாய் தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலிடன் சிதையா அடைச்சிய

கோதை பரிந்து வரிப்பந்து கொண்டாடி

நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே!

உண்ணுநீர்வேட்டேன்” என வந்தாற்கு அன்னை

அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்!

உண்ணுநீர் ஊட்டிவா என்றான் என யானும்

தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை

வளைமுன் கைபற்றி நலியத் தெருமந்திட்டு

“அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!” என்றேனா

அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா? அன்னையும்

தன்னைப் புறம்பழித்து, நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கை நகைக்கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன்” (கலி.51 குறிஞ்சிக் கலி 15)

இப்பாடலில் அலறி வந்த அன்னையிடம் தன் காதலனைக் காட்டிக் கொடுக்க விரும்பாத தலைவி அன்னையை ஏமாற்றுவதற்கு ஒரு பொய் கூறினாள். அவள் கூறிய பொய் தலைவனுக்குத் தெரியும். ஆனால் அவள் கூறிய பொய்யும் அன்னைக்கு தெரியாது. அவர்கள் காதல் கொண்ட இளைஞர்கள் என்பதும் தெரியாது. எதுவுமே தெரியாத அன்னை. தன் மகள் கூறியதைக் கேட்டு அந்தத் தலைவன் நீர் விக்கினான் எனப் பிறழ உணர்ந்து அவன் முதுகைத் தடவிக் கொடுக்கும் போது அந்தத் தலைவனுக்கும் தலைவிக்கும் மட்டுமா நகைச்சுவை உணர்வு தோன்றியிருக்கும்? அந்தப் பாடலைப் படிக்கும் நமக்கெல்லாம் கூட நகைச்சுவை உணர்வு ஏற்படுகிறது.

அறிவிப்பு செய்யாத அரசனே தவறு உடையவன்:

“காலஞ்சாலா இளமையோன் வயின்

ஏமஞ்சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்

தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்

சொல்லெதிர் பெறா அன் சொல்லி இன்புறுதல்

புல்லித் தோன்றும் கைக்கினைக் குறிப்பே” (தொல்காப்பியம் பொருள்: 50)

என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு ஏற்ப, கலித்தொகைப் பாடலில் ஒரு காட்சி, தலைவி மறுமொழி ஒன்றும் கூறாவிட்டாலும் அவள் எழில்நலத்தைப் புனைந்துரைத்து அவளிடம் கைக்கிளைக் காதல் கொண்டு சில சொற்கள் சொல்லி இன்புறும் தலைவன் ஒருவன் கூறும் சொற்கள் நமக்கு நகைச்சுவை விருந்தளிக்கின்றன.

“பெண்ணே! நீ சிற்பக்கலை வல்லவன் செதுக்கிய பாவையோ? அழகிய பெண்களின் உறுப்பு நலன்களையெல்லாம் ஒன்றி திரட்டி நான்முகன் உருவாக்கிய அழகியோ? கூற்றுவன் உலகத்தவர் மீது வெறுப்பு கொண்டு தானே எடுத்து வந்த பெண் வடிவமோ?” நீ இவ்வாறு அழகே உருவாக நடந்து வீதி வழியாக வந்தால் நின்னைப் பார்க்கும் இ¨ளஞர்கள் உயிரையெல்லாம் நின் அழகு பறித்துவிடும் என்பதை உணராமல் நீ விதி வழியே வருகிறாய் என் போன்ற இளைஞர்கள் படும் துன்பம் அறியாமல் - மறு மொழியும் கூறாமல் நடந்து செல்லும் பெண்ணே! இங்ஙனம் எங்கள் உயிர் பறிக்கின்ற உன் மீதும் தவறு இல்லை. உன்னைத் தெருவில் நடமாட அனுப்பி வைத்த நின் பெற்றோர் மீதும் தவறு ஒன்றும் இல்லை. தெருவில் மதங்கொண்ட யானை ஒன்றினை நீர்நிலைக்குக் கொண்டு செல்லும் போது “மதயானை வருகிறது விலகிச் செல்லுங்கள்” என்று பறையறைந்து அறிவிப்பது போல நீ தெருவில் நடந்து வரும் வேளையிலும் பறையறிந்து நின்னைக் காணாமல் கண்களை மூடிக் கொள்ளுமாறு அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்” என்று தலைவன் கூறினான்.

மதங்கொண்ட யானை போலத் தலைவியின் அழகும் காண்பவரைக் கலங்க வைக்கும் பேரழகு என்று தலைவன் கூறியது நகைச்சுவையுணர்வு மிக்க கற்பனையாகும்.

“நீயும் தவறு இலை நின்னைப்புறங்கடைப்

போதரவிட்ட நுமரும் தவறு இலர்

நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்

பறையறைந்து அல்லது சொல்லற்க என்னா

இறையே தவறு உடையான்” (கலித்தொகை 56 குறிஞ்சிக் கலி 20) என்பது குறிஞ்சிக் கலியில் அமைந்த நகைச்சுவை.

புலிக்கு விரித்த வலையில் சிக்கய நரி

ஊர் முழுவதும் உறங்கிய நள்ளிரவில் ஒரு நாள் காரிருள் நேரத்தில் தலைவனைக் காண்பதற்குத் தலைவி அவன் குறிப்பிட்ட இடத்திற்குத் தன்னை ஒரு போர்வையால் போர்த்துக் கொண்டு வந்து நின்றாள். தலைவன் வரவேண்டிய அந்த வேளையில் தலைவன் வரவில்லை. ஆனால் தலையில் முடியே இல்லாமல் தட்டையாகத் தோன்றும் தலை, தொழுநோயால் விரல்கள் அழுகிக் குறைந்து போன கை, கால்கள், முக்காடு போட்ட உருவம் கொண்டவன், அந்த ஊரைச் சேர்ந்த இளம் பெண்கள் விழிப்புடனே நடந்து கொள்வார்கள். அத்தகையவன் குறியிடத்துத் தனித்திருந்த தலைவிக்கு அருகில் வந்து விட்டான் அவன் தலைவியை நோக்கிக் பெண்கள் எவரும் நடமாடாத இந்த இரவு வேளையில் இங்கு வந்துள்ள நீ யார்? என்றான். வைக்கோலைப் பார்த்த கிழட்டு எருதினைப் போலத் தலைவியை நோக்கிக் பாய்ந்து வந்தான். பெண்ணே நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டாய்’ என்று கூறினான்.

“பெண்ணே! தாம்பூலம் தின்பாய்” என்று கூறி தன் வெற்றியைப் பாக்குப் பையை எடுத்து விரித்து நீட்டினான், முதிர்பார்ப்பான் இவ்வளவு கூறியும் தலைவி மறுமொழி கூறாமல் நின்றதனால் அவளைப் பெண் வடிவில் வந்த பேய் என்று பிறழ உணர்ந்தான். அதனால் அவன் உரத்த குரலில், நீயும் பெண் பிசாசு என்பதைப் புரிந்து கொண்டேன். நான் ஆண் பிசாசு நீ எனக்கு இணங்கா விட்டால் உனக்கு இடும் பலியை நான் பிடுங்கிக் கொள்வேன்” என்றான், அந்த பார்ப்பனன் அஞ்சினான் என்பதை உணர்ந்த தலைவி ஒரு கை மணலை அள்ளி அவன் மீது வீசினாள். அதனால் அதிர்ச்சியுற்ற அந்தப் பார்ப்பனன் ‘ஆ ... ....ஊ... ... என்று அரற்றியவாறு தூர ஓடிவிட்டான்.

ஒரு பெரிய புலியைப் பிடிக்க விரித்த வலையில் ஒரு நரி வந்து சிக்கியதைப் போல தலைவி தலைவனைக் காண வந்த இடத்தில் இத்தகைய முடமான, முதிர்ந்த பார்ப்பனன் வந்து இரவுக்குறி சந்திப்புக்கு இடையூறு ஏற்படுததி விட்டான். இந்தக் காட்சிகளை உள்ளடக்கிய கலித்தொகையைப் பாடலில் சில அடிகள் இதோ...

“முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்துநான்

எஞ்சாது ஒரு கை மணல் கொண்டு மேல்தூவ

கண்டே கடிதரற்றிப் பூசல் தொடங்கினான் ஆங்கே

ஒடுங்கா வயத்தின் கொடுங்கேழ்க் கடுங்கண்

இரும்புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்

கூதில் குறுநரி பட்டற்றால்” (கலித்தொகை 65 குறிஞ்சிக்கலி-29)

இப்பாடலில் இரவில் குறியிடத்துச் சென்ற தலைவி தலைவன் வாராமையால் - முட முதிர் பார்ப்பான், வருகையால் - ஏமாற்றம் உற்றான். அங்கு வந்த முதியவனோ அவளைப் பிசாசு என்று ஏமாற்றம் உற்று அஞ்சினான் - அரற்றினான். இவ்வாறு இவர்கள் ஏமாற்றத்திற்கிடையே இனிய நகைச்சுவை பொங்குகிறது. அது படிப்போர் இதயங்களில் தங்குகிறது.

முடிவுரை

அகப்பொருளை அழகுபடப் புனைந்துள்ள கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகளும் ஆங்காங்கே அமைந்து கற்போர்க்குச் சுவையூட்டுகின்றன. இத்தகைய நகைச்சுவைக் காட்சிகள் அகப் பொருளில் அமைந்துள்ள முதல் கரு. உரிப் பொருள்களை விளக்கும் போது அவற்றின் சுமை தெரியாதவாறு சுவையூட்டி உதவுவதால் கலித்தொகையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் கற்போர் நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதியும் ஆழ்ந்த சிந்தனைக் கருத்துக்களையும் இத்தகைய நகைச்சுவையுடன் இணைத்துக் கூறுவது ஓர் ஒப்பற்ற கலை; அதுவே படிப்போர் நெஞ்சங்களைப் பிணிக்கும் வலை.

நன்றி முனைவர்.தியாகராஜன், சிங்கை

கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள்

"கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கை நகைக்கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன்”

கடைக்கண்ணால் உயிரைக் கொல்வது போல் நோக்கி பின் நகைத்தான் என்ற வரிகள் நகைச்சுவையும் மீறி காதல் மிளரும் தருணங்கள். இணைப்பிற்கு நன்றி நுனவிலான்

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.