Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ன...?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ன...?

தமிழ்ச் சமூகம் எவருக்கும் அடிமைப்பட்டதாக இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டமை தமிழ் இளைஞரை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. தனித்துவம் மிக்க இனமாக வாழ நினைத்த தமிழினத்தை ஒடுக்க முற்பட்டமையே போர் அழிவுகள் இடம்பெற்றமைக்குக் காரணமாயிருந்தன.

ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 34ஆவது சிரார்த்ததினம் இன்றாகும்

1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி கணபதிப்பிள்ளை காங்கேயர் தம்பதிகளுக்கு அருந்தவப் பேறாகத் தோன்றிய பொன்னம்பலம் இளமையில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சென்.ஜோசப்ஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். அவருடைய கல்லூரிக் காலத்திலே பேச்சுத் திறமைக்காகத் தங்கப்பதக்கம் பெற்ற தோடு விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகப் படிப்புக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய உபகாரச் சம்பளத்தைப் பெறும் அதிர்ஷ்டசாலியுமாகி, இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்று, எம்.ஏ. பட்டதாரியாக வெளியேறினார். இவர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் லிங்கன்ஸ் இன் என்னும் சட்டப்பள்ளியில் சட்டம் கற்று, பரிஸ்டரானார்.1929ஆம் ஆண்டில், இலங்கை திரும்பிய இவர். இலங்கை உச்ச நீதிமன்ற அப்புக்காத்தாகத் தன்னைப் பதிவு செய்து சட்டத் தொழில் புரிந்துவரும் போது அரசியலிலும் பிரவேசித்தார். அக்காலத்தில், இலங்கையின் அரசியல் அமைப்பில் சிறுபான்மை மக்களின் நிலையைப் புரட்சிகரமாக மாற்றவல்ல டொனமூர் கமிஷன் சிபார்சுகள் நாட்டுமக்களின் முன் வைக்கப்பட்டிருந்தன. இக்கமிஷன் சிபார்சுகளை ஏற்பது சிறுபான்மை மக்கள் மரணத்தை ஏற்பதற்குச் சமானம் என்று முன்னெச்சரிக்கை செய்த எங்கள் முதுபெருந்தலைவர் சேர்.பொன். இராமநாதன் அவர்கள் இந்தச் சிபார்சுகளை ஆட்சேபிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சேர்.பொன்.இராமநாதன் இல்லாத சமயத்தில், இலங்கையில் ஆங்காங்கிருந்த தமிழ்ப்பிரமுகர்கள் இச் சிபார்சுகள் விடயமாக ஒரே முகமாக யாதொன்றும் செய்யமுடியாதிருந்தனர். அவர்களுள் சிலர் சிபார்சுகளை ஏற்பதுதான் சரி என்றும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். உதாரணமாக, 1929ஆம் ஆண்டில் கொழும்பில் சில தமிழர்கள் கூடி, சிபாரிசுகளை ஏற்பதென்று ஒரு தீர்மானத்தையும் கூட்டத்தில் கொண்டு வந்தனர். அந்தக் கூட்டத்துக்கு இளம் பொன்னம்பலமும் வந்திருந்தார். அத் தீர்மானத்தின் மீது ஒரு திருத்தத்தைப் பிரேரிப்பதாக எழுந்து நின்று டொனமூர் கமிஷன் சிபார்சுகளை ஏற்கக்கூடாது என்று அவர் பிரேரித்த திருத்தம் அதிகப்படியான வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. சிபார்சுகளை ஏற்பதற்கென்று கூடிய கூட்டம் அவற்றை நிராகரிப்பது என்ற தீர்மானத்துடன் நிறைவேறியது.அவர் இலங்கை முழுவதுமுள்ள தமிழ் பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டும் அவற்றில் கவனஞ்செலுத்தும் பொருட்டும் 1944 ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் தொடக்கி வைத்தார்.1930களின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தினுள் அடியெடுத்துவைத்த ஜீ. ஜீ.பொன்னம்பலம் 1930 ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியத் தமிழர்கள் உட்பட இலங்கைத் தமிழர்களின் பேச்சாளராக விளங்கினார். இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு எதிர்காலத்தில் நேரவிருந்த நெருக்கடியை அவர் முன்னரே கண்டுணர்ந்ததனால் 1945 இல் சோல்பரி ஆணையாளர்களிடம் சரிசமநிலையான பிரதிநிதித்துவத்திற்கான கருத்துரைகளை முன் வைத்தார்.காலஞ்சென்ற பேராசிரியர் ஜயரட்ணம் வில்சன் இலங்கைத் தேசியவாதம் ( Sri Lankan Nationalism) என்ற தமது நூலில் காலஞ்சென்ற ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைப்பின்வரும் முறையில் விவரிக்கின்றார்.

".......(இராமநாதன், அருணாசலம்) சகோதரர்களினால் விடப்பட்ட இந்த அளப்பரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டி இருந்த காலத்தில் ஜீ. ஜீ.பொன்னம்பலம் அதனை நிரப்பினார். எனினும் அவர்களிடமிருந்து அவர் தமது அரசியல் கோட்பாட்டை உருவாக்கவில்லை. மாறாக, மேலாதிக்கம் இருக்கக்கூடாதென்ற சேர் வில்லியம் மனிங்கின் எச்சரிக்கையிலிருந்தே அதனை உருவாக்கினார். அதன் விளைவுதான் ஐம்பதுக்கு ஐம்பது சமநிலையான பிரதிநிதித்துவம்.

காலஞ்சென்ற ஜீ. ஜீ. பொன்னம்பலம் 1939 இல் அரசசபையில் சரிசம நிலையான பிரதிநிதித்துவம் பற்றிய தமது மரதன் உரையில்:"தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ன? எமது நிலைப்பாடு இதுதான் என்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். நாம் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றோம். தமிழ்ச் சமூகத்தின் ஒரு கிளையினர் எமது சிங்களச் சகோதரர்களை விட நீண்ட காலம் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். இதுவே எமது தாயகம். அரசியல் ரீதியாகவும் வேறுவகையிலும் நிரந்தர உரித்துக்களைக் கோருவதற்கு சிங்கள மக்களுக்குள்ள அதேயுரிமை தமிழர்களாகிய எமக்குமுண்டு. நாம் வேண்டப்படாத அந்நியர்களாக நடத்தப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மத்திய ஐரோப்பாவின் நாஸிஸ நாடுகளில் யூதர்களைப் போன்று கெட்டோக்களில் பிரித்து வைக்கப்படுவதையும் நடத்தப்படுவதையும் சகித்துக்கொள்ள முடியாது.சோல்பரி ஆணையாளர்களினால் சரிசமநிலையான பிரதிநிதித்துவக்கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், பின்னர் 1956, 1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளின் திட்டமிட்ட இனப்படுகொலைகளைத் தவிர்த் திருக்கலாமென்பதுடன், தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி அவமானப்படுத்திய தூஷிக்கப்பட வேண்டிய சிங்களம் மட்டும் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்க முடியாது.சரிசமநிலையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் மட்டும்தான் சனநாயக நாடொன்றில் உரிமைகளை நசுக்குவதைத் தடுக்க முடியும். சரிசமநிலையான பிரதிநிதித்துவமென்ற இந்தக் கோட்பாடு ஐக்கிய அமெரிக்காவில் செனற்றர்களைத் தெரிவு செய்வதில் பின்பற்றப்படுகின்றது.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற 1947ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது. பொதுத்தேர்தலின் பின்னர் உருவாக்கக்கூடிய எந்தவோர் அரசாங்கமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்குமாயின் அந்த அரசாங்கத்திற்கு எதிர்வினை ஒத்துழைப்பை வழங்குமென அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியது. 1947ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 42 ஆசனங்களை மட்டும் பெற்றதனால் அறுதிப்பெரும்பான்மை அதற்குக் கிடைக்கவில்லை. அந்த வேளையில் ஐ.தே.கட்சிக்கு எதிராயிருந்த எல்லாக்கட்சிகளும் ஐ.தே.கட்சிக்கு எதிரான மாற்று அரசொன்றை உருவாக்குகின்ற சாத்தியங்கள் பற்றி ஆராயும் பொருட்டு கொழும்பில் காலஞ்சென்ற ஸ்ரீ நிஸங்க அவர்களின் வீட்டில் யமுனாமாநாடு என்று அழைக்கப்பட்ட ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தன. இந்த மாநாட்டுக்குக் காலஞ்சென்ற ஜீ. ஜீ.பொன்னம்பலம் தலைமை வகித்தார். எனினும் இடதுசாரிகள் மத்தியில் காணப்பட்ட ஒற்றுமையின்மையின் நிமித்தம் பயனுள்ள எதனையும் இந்த மாநாட்டினால் சாதிக்க முடியவில்லை. காலஞ்சென்ற பீட்டர் கெனமன் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியதும் "சற்றடேறிவியு'' பத்திரிகையில் வெளியிடப்பட்டதுமான ஒரு கட்டுரையில், யமுனா மாநாட்டில் இடதுசாரிகள் மத்தியில் ஒற்றுமை நிலவியிருக்குமாயின் இலங்கையின் சரித்திரமே வேறுபட்ட தாயிருக்குமென்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தான் 1930 ஆம் ஆண்டிலிருந்து இந்திய வம்சாவளியினரின் உரிமைகளுக்காப் போராடி அவர்களின் சுயமரியாதையைப் பாதுகாத்தவர். கோவிந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபலமான மூலோயா தோட்டச் சம்பவம் தொடர்பிலும் சேர் ஜாக்சன் ஆணைக்குழு நியமிக்கப்பட்டபோதும் நெவ்சுமோயர் தோட்டம் சுவீகரிக்கப்பட்டபோதும் இந்தியத் தமிழர்களின் சார்பாகப் பேசி அவர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம். சோல்பரி ஆணைக்குழு முன் இந்தியத் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான விடயங்களை எடுத்துரைப்பதற்கு அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒருநாள் முழுவதையும் ஒதுக்கினார். அதன் விளைவாகத்தான் இந்தியப்பிரசைகளுக்கு நாடாளுமன்றத்தில் 14 வீதமான ஆசனங்கள் ஒதுக்கப்படவேண்டுமென சோல்பரி ஆணைக்குழு சிபாரிசுசெய்தது.1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரிவினையைக் கோருவதென்று தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள் தீர்மானித்த போதிலும் பிரிவினைவாதக் கோஷம் அத்தலைவர்களின் மூளையில் உதித்ததொன்றல்ல. காலஞ்சென்ற எஸ். டபிள்யு. ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் 1956 இல் தூஷிக்கப்படவேண்டிய சிங்களம் மட்டும் சட்டத்தைப் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததன் மூலம் இந்த நாட்டில் தமிழ்ப் பிரிவினைவாதக் கோஷத்துக்கு அடிக்கல் நட்டார். எமது தலைவர் காலஞ்சென்ற ஜீ. ஜீ.பொன்னம்பலம் அதனை எதிர்த்துப் பேசியதுடன் சிங்களம் மட்டும் சட்டம் எமது பாதைகள் பிரிந்துபோவதற்கு வழி வகுக்குமென்றும் அரசையும் சிங்கள மக்களையும் அப்போதே எச்சரித்திருந்தார். தமிழர்கள் சமமாக நடத்தப்படாவிட்டால் பிரிவினையைக் கோருவதைத் தவிர அவர்களுக்கு மாற்று வழி எதுவுமில்லையென்று எச்சரித்த முதலாவது தலைவர் அவரேயாவார். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த 1958,1977,1983 ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைகள் தமிழ் இளைஞர்கள் தம்மையும் தமிழ்ச்சமூகத்தையும் பாதுகாப்பதற்கு ஆயுதந்தரிக்கும்படி அவர்களைத் தூண்டின. 1965, 66 இல் பிரதமர் டட்லி சேனநாயக்காவின் ஐ.தே.க.அரசாங்கத்துக்கு, ஐக்கியநாடுகளுக்கான பேராளர் குழுவுக்குத் தலைமைவகித்துச் செல்லும் கௌரவம் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியு.சி.அவர்களுக்குக் கிடைத்தது. அங்கு அவர் உரையாற்றி முடித்தவு டன் அமெரிக்கப் பேராளரான பிரான்சிஸ் வில்லிஸ் அம்மையார் அவரைத் தேடிவந்து அவரின் கைகளைக் குலுக்கி, அபிவிருத்தியடையாத ஒரு தேசத்தின் குரல் இதுவென்றால் நாம் அனைவரும் அபிவிருத்தியடையாத நாடுகளாக இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுமளவுக்கு மாண்புமிக்க அப் பேரவை அவரின் சொல்வன்மைக்குக் கட்டுண்டது.தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கு சம்பந்தமாக சில விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக மலேசியா சென்ற பொழுது 09.02.1977 அன்று மலேசியாவில் ஜீ.ஜீ. இறைபதமடைந்தார். ஏறக் குறைய அரைநூற்றாண்டு காலம் அரசியலில் அவர் ஆற்றிய பங்குகளுக்காக முழுத் தமிழ்ச் சமூகமும் உண்மையிலேயே அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி

சிரேஷ்ட சட்டத்தரணி,

நாடாளுமன்ற உறுப்பினர்,

முன்னாள் தலைவர்,

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

நன்றி - உதயன் இணையம்

onlineuthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.