Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது எதற்காக?

2557145739_e113a7a20d.jpg

அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது?

அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்டுச் சட்டை தைத்துக் கொடுப்போம் – என்று பட்டாசு வெடிக்கிறார்களா? இவர்களை எந்த இடத்தில் எட்டி உதைப்பது என்பது கூட தெரியாத சொரணைகெட்ட இனமாகவா மாறிவிட்டிருக்கிறது தமிழினம்!

தங்கள் சொந்தமண்ணில், தாங்கள் ஆண்ட மண்ணில் சிங்களருக்கு முன்பே வாழ்ந்த மண்ணில் உரிமை கேட்டுப் போராடியவர்கள், மானம் மரியாதையோடு வாழ்ந்த ஈழத்துச் சொந்தங்கள். பெரியார் திடல் மேனேஜர்கள் மாதிரியோ, அறிவாலயத்து டேமேஜர்கள் மாதிரியோ டம்மி புலிகள் இல்லை அவர்கள். எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளாமல் சுயமரியாதையோடு போராடிய நிஜப் புலிகள். நண்பன் இலங்கையோடு சேர்ந்து நேரடியாகவே அவர்களை நசுக்க முயன்று இதே இந்தியா மூக்குடைபட்டது உண்மையா இல்லையா என்று கோபாலபுரத்துக்கு ஒரு கடுதாசி எழுதிப் பாருங்கள். ‘அந்தக் கூலிப்படையை வரவேற்கச் செல்லாத மாவீரன் நான்’ என்று, காங்கிரஸோடு உறவு முறிந்த மறுநாளே உங்களுக்கு பதில் வராவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.

உண்மையில் விடுதலைப் புலிகளிடம் தோல்விகண்டு அவமானத்தோடு திரும்பியது இந்திய ராணுவம் அல்ல…. ராஜீவ் காந்தியின் பக்குவமற்ற பரிதாபகரமான ராஜதந்திரம். ராஜீவ் காந்தி என்கிற மாஜி பைலட், தனது அறியாமையின் காரணமாக, திட்டமிட்டு தம்மைத் தவறாக வழிநடத்திய அசட்டு அம்பிகளை நம்பிக் கெட்ட வரலாறு அது. தேசப்பற்று ஒன்றே ஆக்சிஜனாக இருக்கும் வெள்ளிப் பனிமலைகளின் மீது நின்று எல்லை காக்கப் போராடும் ஈடு இணையற்ற இந்திய வீரர்களுக்கு ‘கூலிப்படை’ என்கிற வில்லையைக் கட்டி, விபரீத விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள் அவர்கள். தேசம் காக்கும் எங்கள் வீரர்களைக் கூலிப்படை ரேஞ்சுக்குக் கொண்டுசெல்லாதே – என்று குரல் எழுப்பக்கூட துணிவின்றி மௌனம் சாதித்தது நாடு. ராஜீவ் காந்தி என்கிற ஒரு அரசியல்வாதியின் தவறான முடிவுக்கு, ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் விலைகொடுக்க வேண்டியிருந்தது.

‘ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கும் பலனில்லை, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் பலனில்லை. வேறு யாருக்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது’ என்று பீல்டுமார்ஷல் மானெக் ஷா போன்றவர்கள் கேட்டது ராஜீவின் காதில் விழவில்லை. ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரியின் ஊளைச்சத்தம் மட்டும் தான் அவரது காதில் விழுந்தது. தனித்த பண்புகளும் அடையாளங்களும் உள்ள ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, பாரம்பரியம் மிக்க தன் ராணுவத்தை இரவல் கொடுக்கப்போய், வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டது இளிச்சவாய் இந்தியா. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது – என்று சொல்லாமல் இதை வேறெப்படித்தான் விவரிப்பது!

இன்று இதைச் சொல்லும்போது காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்லத் துணை நின்ற குற்றத்துக்காக காங்கிரஸை நாம் விரட்டி விரட்டி அடிக்கும்போது, தோசையை அப்படியே திருப்பிப் போடுவார்கள்… இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறான முடிவுகளை எடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் காரணமல்ல என்பார்கள்.

இதெல்லாம் கற்பனையல்ல. காங்கிரஸின் எதிர்காலத் தலைவராக 1975ல் முன்நிறுத்தப்பட்டவர், ராஜீவின் தம்பி சஞ்சய் காந்தி. (அப்போதெல்லாம் விமானத்தை விட்டால் சோனியா, சோனியாவை விட்டால் விமானம் என்பதுதான் ராஜீவின் வாழ்க்கையாக இருந்தது) அன்று, அடுத்த தலைவராக முன்நிறுத்தப்பட்ட சஞ்சய்காந்தியின் முன் காங்கிரஸின் மூத்த தலைவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள். இன்று, அதே சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை கால தவறுகளுக்குக் காரணம் என்று கூசாமல் அறிவிக்கிறது காங்கிரஸ். இன்னும் சில ஆண்டுகளில், இலங்கைப் பிரச்சினையில் எடுத்த தவறான முடிவுகளுக்கு ராஜீவ்தான் காரணம் என்று அறிவிக்காமலா போய்விடப் போகிறது காங்கிரஸ்! சஞ்சய்காந்தியின் நிலை ராஜீவுக்கு வராமல் போய்விடப் போகிறதா என்ன?

அன்று ராஜீவ் காந்தி என்கிற விவரமில்லாத திடீர்த் தலைவர் செய்த இமாலயத் தவறுக்கான விலையை, தமிழினம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி எங்கள் மரியாதைக்குரிய தலைவர் – என்று இன்றைக்குக் கடிதம் எழுதும் நமது பழைய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், பான்ஜூர் என்றெல்லாம் ஆரம்பித்து சோனியாகாந்திக்கு நண்பர்கள் கடிதம் எழுதட்டும்… ராஜீவ் காந்தியை மலர்மாலையோ வேறு மாலையோ போட்டு அவர்கள் மதிக்கட்டும். அவர்களுடைய தனிப்பட்ட வியாபாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை. அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டதால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியும் என்கிற அவர்களது அசட்டு நம்பிக்கைகளை நாம் அங்கீகரிக்கப் போவதுமில்லை.

நண்பர்களே இப்படியென்றால், பார்டரில் பாஸ் செய்து பாராளுமன்றத்துக்குள் போனவர்கள் சும்மா இருப்பார்களா? 1991மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளுக்கும் காங்கிரஸுக்கும் எந்த விரோதமும் இல்லையாம்! போகிற இடமெல்லாம் இப்படி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார் சிவகங்கை சிதம்பரம். 1987 செப்டம்பரிலேயே பிரபாகரனைக் கொல்லச் சொல்லி டெல்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உத்தரவு போனதே… 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது அளவுக்கதிகமான பாசத்தாலா? உள்துறைக்கும் உளவுத்துறைக்கும்தான் வெளிச்சம்!

தமிழர்களை எவ்வளவுதான் கேவலமாக நினைத்தாலும், ஒரே ஒரு தீர்மானத்தை மட்டுமாவது இவ்வளவு காலமாக உருப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது காங்கிரஸ். ராஜீவ் சொன்னதைப் போல் இலங்கையில் தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் ஒரே மாகாணமாக இணைக்க வேண்டும் – என்பதுதான் அந்த தீர்மானம். இந்தமாதம் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தையும் காணோம். ராஜபட்சே மனம் கோணுகிற மாதிரி நடந்து கொள்ளலாமோ… ராஜீவின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ராஜபட்சேவுடன் சேர்ந்து மாஞ்சா நூலில் காற்றாடி விட்டு மிச்சமிருக்கிற ஈழத் தமிழர்களின் கழுத்தையும் அறுக்கப் பார்க்கிறது சோனியா காங்கிரஸ்.

சோனியாவைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. இத்தாலி, ரோம், பிரான்சு, ஜெர்மன் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, ஈழத்தைப் பற்றியும் இலங்கையைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமுமில்லை. என்றாலும், தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவரப் போவதாக அதிரடியாக அறிவித்துக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.

ராஜீவ் மகன் ராகுலுக்கும், சித்தப்பா சஞ்சய் காந்திக்கும் நிறைய ஒற்றுமைகள். மூத்த தலைவர்களை அவமதிப்பதிலும் இளைஞர் காங்கிரஸ்தான் காங்கிரஸ் என்கிற தோற்றத்தை உருவாக்குவதிலும் அச்சு அசலாக சித்தப்பாவோடு அப்படியே பொருந்துகிறார் ராகுல். சஞ்சய் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கியமாதிரி, ராகுலைப் பார்த்தும் நடுங்குகிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைகள். தறுதலைகளெல்லாம் பெருந்தலைகள் ஆகிவிட்ட ஒரு இயக்கத்தில் இதுதான் நடக்கும். அதனால்தான், ராகுலுக்கு தேசிய அரசியலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது, தேசத்தின் தலைவராகப் பெரிதுபடுத்திக் காட்டப்படும் அளவுக்கு அவர் என்ன தியாகம் செய்திருக்கிறார்….என்கிற குமைச்சலெல்லாம் இருந்தாலும் அதை மறைத்தபடி மரியாதை காட்டுகிறார்கள் காங்கிரஸில் இருக்கிற மரப்பாச்சி பொம்மைகள். ராகுல் சொல்வதெல்லாம் வேதவாக்காக மாறிவிடுகிறது.

டிசம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல், சென்னையில் அறிவுஜீவிகள் சிலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அறிவுஜீவிகளா, அப்படியென்றால் யார் – என்று கேட்பவர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். திபெத், பாலஸ்தீனம், கிழக்கு திமோர், வட அயர்லாந்து, எரித்திரியா போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களையெல்லாம் அங்கீகரித்துவிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க எவரெல்லாம் மறுக்கிறாரோ அவரெல்லாம் இங்கே அறிவுஜீவி. உணர்ச்சி வசப்பட மாட்டார்களாம்… அறிவு சார்ந்தே யோசிப்பார்களாம்…! கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. தங்கள் குடும்பத்து பெண்பிள்ளை யாராவது இசைப்பிரியா மாதிரி கதறக்கதறக் கற்பழித்துக் கொல்லப்பட்டால் இந்த அறிவுஜீவிகள் உணர்ச்சி வசப்படாமல், பொறுமையையும் அமைதியையும் போதித்துக் கொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இங்கே, சமூகப் பொறுப்பும் போர்க்குணமும் இல்லாதவர்களே அறிவுஜீவிகள் என்றாகிவிட்டது. அறிவுஜீவிகளின் இலக்கணம் தலைக்கனம் தான் என்கிற மூட நம்பிக்கை வேறு. இதனால்தான், சிறையில் இருக்கிற சீனத்து அறிவுஜீவிக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டு அவரது உறவினர்களாவது வந்து வாங்கிக் கொள்வார்களா என்று காத்துக்கிடந்தது நோபல் பரிசு தேர்வுக் குழு. ராகுல் காந்தி வரமாட்டாரா என்று வழிமேல் விழிவைத்து கன்னிமாரா ஓட்டலில் காத்திருந்தது இங்கேயுள்ள அறிவுஜீவிகள் குழு.

நாளைக்கு ராகுல் பிரதமராகிவிட்டால்? அதனாலேயே அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தங்களது வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாகக் கருதி, காத்துக் கிடந்து பார்த்தார்கள் தமிழக அறிவு ஜீவிகள். அவர்களில் உண்மையான மனிதர்களும் இல்லாமலில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அந்த மனிதர்களில் ஒருவர், ‘இனப்படுகொலை செய்த ராஜபட்சேவை காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கு அழைத்தது நியாயமா’ என்று நேரடியாகக் கேள்வி கேட்க, அலட்டிக்கொள்ளாமல் ராகுல் அதற்கு அளித்த பதில் – ராஜபட்சேவை நான் அழைக்கவில்லை- என்பதுதான்.

நல்லவேளையாக, கருணாநிதி பாணியில், ‘காமன்வெல்த்தா… கல்மாடியிடம் போய்க் கேளு’ என்று அவர் சொல்லிவிடவில்லை.

இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் ராகுல் பேசும்போது, போதனைகளுக்கு பஞ்சமேயில்லை. காமராஜைப் போல், கக்கனைப் போல் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்று ராகுல் பேசியதற்கு என்ன அர்த்தம்? ஒரு தங்கபாலு மாதிரி, ஒரு இளங்கோவன் மாதிரி, ஒரு சிதம்பரம் மாதிரி, ஒரு வாசன் மாதிரி இருக்கவேண்டும் என்று அவராலேயே கூட சொல்லமுடியாத அளவுக்கு ஆளாளுக்கு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்ன! ராகுலுக்கே வெளிச்சம்.

காமராஜ் என்கிற பெயரை உச்சரிக்கும் ராகுலுக்கு, அந்த உயர்ந்த மனிதரைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது தெரியவில்லை. டெல்லிக்குக் காவடி எடுக்காமலேயே 14 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அவர். காமராஜின் ஆதரவாளர்களை – ஒரு கோஷ்டி – என்று பொருள்படுகிற மாதிரி மகாத்மா காந்தி தனது பத்திரிகையில் எழுதிவிட, அவருடைய அந்தப் பார்வை தவறானது என்றும், அப்படி எழுதியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் காமராஜ் கடிதம் எழுதினார். காந்தி வருத்தம் தெரிவித்தபிறகுதான், பிரச்சினை முடிவுக்கு வந்தது. அவர்தான் காமராஜ்! காங்கிரஸில் வேறு எவர் காமராஜ்?

நடமாடும் காமராஜ், வாழும் காமராஜ், குட்டி காமராஜ், ஜெராக்ஸ் காமராஜ் என்றெல்லாம், காங்கிரஸ் தலைகளிடம் மேட்டர்களை முடிப்பதற்காகக் காத்திருப்பவர்கள் அவர்களுக்கு பேனர் வைக்கிறார்களே, அதைப் பார்க்கும் போது, ஜி.கே.வுக்கோ, ஈ.வி.கே.எஸ்.சுக்கோ, கே.வி.க்கோ, பி.சி.க்கோ தொடையின் மீது கம்பளிப்பூச்சி ஊர்வதுமாதிரி அருவருப்பாயிருக்காதா? அல்லது அவர்களுக்கு அருவருப்பு என்கிற உணர்வே இல்லாது போய்விட்டதா? புரியவில்லை! காங்கிரஸ் பெருந்தலைகளை ராகுலிடம் போட்டுக் கொடுப்பதிலேயே குறியாயிருக்கும் இளைஞர் கோஷ்டி, ராகுலின் கவனத்துக்கு இதையும் எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் கோபாலபுரத்தை ராகுல் தவிர்த்துவிடுவதற்கு அரசியல் அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம். திருமலைப் பிள்ளை தெருவையும் தவிர்த்து விடுகிறாரே, ஏன்? காமராஜ் ஆட்சி, காமராஜ் ஆட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தரம் முனகுகிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள். ராகுல் காந்தியோ, அந்த மக்கள் தலைவர் வாழ்ந்த திருமலைப் பிள்ளை சாலை இல்லத்துக்குப் போய் அஞ்சலி செலுத்துவதைக்கூட தவிர்க்கிறார். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல. காமராஜ் வீடு மாதிரி ஒரு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்தானே, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் எளிமையாக வாழ முடியும் என்கிற நம்பிக்கை வலுப்படும்!

லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்று இரண்டு பிரதமர்களை உருவாக்கிய காமராஜை கிங்மேக்கர் என்று இந்தியத் தலைவர்கள் அழைத்த காலம் ஒன்று இருந்தது. அது, சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு. காங்கிரஸ் உடைந்து இந்திராவின் தலைமையில் இ.காங்கிரஸும், காமராஜ் தலைமையில் பழைய காங்கிரஸும் இயங்கியபோது, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜை கருணாநிதியுடன் சேர்ந்து நக்கலடித்துக் கொண்டிருந்தது இ.காங்கிரஸ். அப்போது, இ.காங்கிரஸ் மேடைகளில் பிரச்சார பீரங்கி திருவாளர் ப. சிதம்பரம்தான். இப்படியாக, காமராஜுக்கு எதிர் அணியிலேயே இருந்த சிதம்பரமே, காமராஜ் ஆட்சி என்று சொல்லும்போது, ராகுல் மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். காமராஜைக் காட்டாமல் யுவராஜைக் காட்டியே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிறாரா!

தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருப்பதை ராகுல் விரும்பவில்லையாம். அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? (நமக்குக் கூடத்தான், காங்கிரஸ் இரண்டாமிடத்தில் இருப்பதாக ராகுல் புளுகுவது பிடிக்கவில்லை….) இளைஞர் காங்கிரசார் கிராமங்களுக்குப் போகவேண்டுமாம்… கிராம அளவில் காங்கிரஸைப் பலப்படுத்தினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமாம்…. அப்போது இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதலமைச்சராக வருவாராம். இதெல்லாம் ராகுலின் கிளிஜோதிடம். இவர் சொல்வதில் எதுவுமே புதிதல்ல! கொக்கைப் பிடிக்க வேண்டுமானால் ஆற்றின் மையப்பகுதிக்குப் போகவேண்டும்… அதற்குப் பிறகு கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கவேண்டும்… வெண்ணெய் உருகி கண்ணில் வழியும் போது கொக்கு கண்ணை மூடும்… அப்போது லபக்கென்று பிடித்துவிடவேண்டும்… என்பதெல்லாம் தமிழ்நாட்டில் எவ்வளவோ காலமாக இருக்கின்ற நக்கல் கதைகள். இது இருக்கட்டும்… கிராமங்களுக்குப் போங்கள் – என்பதுதானே அண்ணல் காந்தியின் அறிவுரை. டெல்லியைவிட்டுப் போய்விட்டார்களா இந்திராவின் குடும்பத்தார்?

ராகுல் இப்படியெல்லாம் அலப்பரை செய்து கொண்டிருக்க, அவரது தாயார் டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பொரிந்து தள்ளியிருக்கிறார். எதற்காகப் பொரிகிறார் என்று பார்த்தால், ஊழலுக்கு எதிராகப் பொரிகிறாராம். அதுவும் ஆவேசத்துடன். ஊழலில் ஈடுபடுவோரை அவரால் சகித்துக் கொள்ளவே முடியாதாம்…. ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டுமாம். இதெல்லாம் சாட்சாத் சோனியா காந்தியே சொன்னது. விட்டால், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட குவோட்ரோச்சியை பிடித்து உள்ளே தள்ளி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார் போல் இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளால் நாட்டுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்கிறார்கள். ஆனால், தொகை சிறிதாக இருந்தாலும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் இதைக்காட்டிலும் மோசமானது. நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட பீரங்கிகளிலேயே கமிஷன் என்றால், அதை வாங்கியவர்களின் கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கமுடியுமா? ஆட்சியில் இருந்தவர்களுக்குத் தெரிந்தே அந்த கமிஷன் கைமாறியிருந்தால், அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்குத் தெரியாமலேயே யாரோ கமிஷன் அடித்திருந்தால், ஆட்சியிலிருக்கவே தகுதி அற்றவர்கள். இந்த இரண்டில் ராஜீவ் எது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும். ராஜாவுக்குத் தெரிந்தே தவறுகள் நடந்திருந்தால், அவர் குற்றவாளி. அவருக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால், பதவியிலிருக்கவே அவர் லாயக்கில்லாதவர். ராஜாவை விடுங்கள்…டெல்லி வரை வீல்சேரில் போய், இப்படிப்பட்ட ஒருவருக்காக வாதாடி போராடி பதவியை வாங்கிக் கொடுத்தாரே, அந்த மனிதர் எதற்கு லாயக்கு?

கடைசியில் காமன்வெல்த் ஊழலில் கல்மாடி சொன்னதைத்தான் அத்தனைப் பேரும் சொல்லப் போகிறார்கள். காமன்வெல்த் போட்டி செலவில் 10 சதவீதம்தான் எங்கள்வாயிலாக செலவிடப்பட்டது, மீதி 90 சதவீதத்தை டெல்லி அரசு தான் செலவு செய்தது – என்பது கல்மாடியின் வாதம். 90 சதவீத ஊழல் அங்கேதான் நடந்தது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார் கல்மாடி. இவர்களையெல்லாம் இங்கே வைத்துக்கொண்டிருந்தால், சோனியா இத்தாலிக்குப் போய் கோட்ரோச்சியுடன் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்கவேண்டியிருக்கும்.

சொன்னதைப் போலவே ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும் என்று நினைத்தால் சோனியா என்ன செய்யவேண்டும்? ஊழல் புகார் எழுந்தால் அதுபற்றி உடனடியாக விசாரிக்கவேண்டும். அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்குப் பணியாமல் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆறஅமர பொறுமையாக விசாரித்துக் கொண்டிருந்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பொரிந்து தள்ளுகிறாரே அக்பர் ரோடு அன்னை…. யாரைக் காப்பாற்ற இப்படி சீன் போடுகிறார்? பிரியாணியை ஒரு பிடிபிடித்து ஏப்பமும் விட்டபிறகு, யார் வீட்டு ஆடு என்று கண்டுபிடித்துவிடப் போகிறாரா சோனியா?

அறிவுஜீவிகள் இதைப்பற்றி யோசிக்கிறார்களோ இல்லையோ, அப்பாவி வாக்காளர்கள் இதைப்பற்றி யோசிக்கவேண்டும். ஒன்றே முக்கால் லட்சம் கோடியைப் பற்றி நாடு கவலைப்படும்போது, ஒரு லட்சம் உயிர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டும். காலங்கடந்தாவது பொரிந்து தள்ளும் அன்னை சோனியாவால் ஒன்றே முக்கால் லட்சம் கோடியைக் கூட மீட்டுவிட முடியும், முள்ளிவாய்க்காலில் உழுது புதைக்கப்பட்டுவிட்ட ஒரு லட்சம் உயிர்களை அந்த ஆறுதல் மாதாவால் மீட்டுத்தர முடியுமா என்று பொட்டில் அடிக்கிற மாதிரி போட்டு உடைக்கவேண்டும். அப்போதுதான், தமிழகத்தின் அடையாளங்களான காமராஜ், கக்கனைக் காட்டி கடைவிரிக்க முயல்பவர்களுக்கு நம்மால் தடை விதிக்கமுடியும்.

புகழேந்தி தங்கராஜ்

நன்றி: தமிழ் முழக்கம்

இந்தியம் என்னும் மாயைக்குள் சிக்கியுள்ள மோட்டு இந்தியர்கள் 1991 கட்டுக் கதைகளை நம்பிவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.