Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிவிழாவில் கறை பூசிய ‘உதயன்’ நாளிதழ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, February 20th, 2011 | Posted by thaynilam

வெள்ளிவிழாவில் கறை பூசிய ‘உதயன்’ நாளிதழ்!

உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.

உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.உதயன் பத்திரிகை தனது 25ஆவது அகவையை எட்டி நிற்கும் பொழுது அது அடைகின்ற ஆனந்தத்திலும் அதனை சார்ந்து நிற்கின்ற வாசகர்கள் அடைந்து நிற்கின்ற பூரிப்பானது எல்லையற்றது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் உதயன் சோர்ந்து விடவில்லை.

உதயனின் ஒவ்வொரு ஆண்டுப் பூர்த்தியின் போதும் உதயனுக்காக உயிர் கொடுத்த ஊழியர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதிப்புக்களை உதயன் வெளியிடவும் பின்நிற்கவில்லை.இன்றைய நாள் வெள்ளிவிழாச் சிறப்புக்குரிய நாள் என்பது பெருமைக்குரிய விடயம் தான் ஆனால், தேசத் தலைவனைத் தந்த அன்னையின் பிரிவிற்காக இன்றைய நாளைத் தியாகம் செய்திருக்கக் கூடாதா? என்று உதயன் ஊழியர்களே நிகழ்வில் சென்றவர்களிடம் மனம் நொந்திருக்கிறார்கள்.

வல்வெட்டித்துறை அமெரிக்க மிசன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இன்று தனது பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டியினை இடை நிறுத்தியிருக்கின்றது. குறித்த பாடசாலை நிர்வாகம் உடனடியாகவே இராணுவத்தினரின் நெருக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது.நிகழ்விற்கான கௌரவ விருந்தினர்களாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துரசிங்கவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமையை காரணமாகக் காட்டி நிகழ்வினை இடை நிறுத்த முடியாது என்று கூறலாம்.

அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் என்ன?. எந்த இராணுவத்தால் தலைவர் அவர்களின் தந்தையாரும், தாயாரும் நிரந்தர நோயாளிகளாக்கப்பட்டு உயிரிழப்பு வரையில் அவர்களைத் தள்ளும் நிலை ஏற்பட்டதோ அதே இராணுவத்தின் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதேவேளை உடலத்தை பொறுப்பேற்கவோ அதனை பார்வையிடவோ முடியாத அளவிற்கு வல்வெட்டித்துறை வைத்தியசாலையினை முற்றுகையிட்டு இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது.

வைத்தியசாலையின் ஒதுக்குப்புறமான அறை ஒன்றில் அனாதை போல வீரத் தலைவனின் தாயாரின் உடலம் வைக்கப்பட்டிருக்கின்ற அவலம் உதயன் பத்திரகை நிறுவனத்திற்கு தெரியாதா?இவ்வாறான போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அளவிடமுடியாத அர்ப்பணிப்புக்கள், உயிர்கொடைகள், தியாகங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்தே பயணிப்பதாகக் காட்டிக்கொண்ட உதயன் இன்றைய நாளில் இத்தனை பெரிய உலகம் வியந்த விடுதலை அமைப்பை கட்டி வழிநடத்திய ஒரு தலைவனை ஈன்ற தாயைப் பற்றி ஒரு வார்த்தையேனும் தனது நிகழ்வின் போது சொல்லியிருந்தால், அவருக்காக ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தியிருந்தால் குற்றம் சாட்டுவதில் நியாயம் இருந்திருக்கப் போவதில்லை.

சரிதம் ஆசிரிய பீடம்.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3003

  • கருத்துக்கள உறவுகள்

"அவ்வாறாயின் தேசியம் எனச் சொல்லிக் கொள்வது எதனை? தேசியத்திற்காக கொடுக்கப்பட்ட அதி உயர் விலைகளுக்கு ஈடாக கௌரவ விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தால் கருதப்படுகின்றார்களா? "

வியாபாரிகள் அல்லது பிழைப்பவாதிகளிடம் போய் இதனை எதிபார்கலாமோ அல்லது கேட்கலாமோ?

தமிழரின் உடைமைகள் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், உதயன் சரவணபவன் வெளியிட்ட சிறப்புப் படம் "ஐக்கிய இலங்கை" என்ற தொனியிலும் அமைந்துள்ளது மிகக் கொடுமை.

உதயன் ஊழியர் படுகொலைகளில் பங்கெடுத்த சிங்கள ராணுவக் கொலைகாரர்களும், டக்ளசும் சிறப்பு விருந்தினர்கள்.

சரவணபவனின் புத்தி பேதளித்துவருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thursday, February 24th, 2011 | Posted by thaynilam

சரிதம் ஆசியர் பீடத்தின் கருத்திற்கு உதயன் நாளிதழ் பதில்

உதயன் நாளிதழ் தனது இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவின் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்தேறிய சில சம்பவங்கள் தொடர்பில் சரிதம் ஆசிரியர் பீடம் ”வெள்ளிவிழாவில் கறை புசிய உதயன்” என்ற கட்டுரையினை ஆதாரத்துடன் பிரசுரித்திருந்தது. குறித்த கட்டுரையினை புலம்பெயர் தளத்தில் உள்ள 25 ற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீள் பிரசுரம் செய்திருந்தன. அக் கட்டுரை தொடர்பில் உதயன் பத்திரிகை விளக்க அறிக்கை ஒன்றை எமக்கு அனுப்பிவைத்துள்ளது அதன் முழு விபரம் வருமாறு.

உதயன் தனது இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் தன் ஊடகப் பயணத்தில் முசெல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது. நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடைபயின்று வந்தது. இன்னும் நடைபயிலும்.

எனினும் இந்த விழாத் தொடர்பாக புலம்பெயர் இணையத் தளங்களில் வெளிவந்த விமர்சனங்களையும் கண்டனங்களையும் உதயன் அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனத்தில் எடுக்கின்றது.

தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் பற்றுதியுடன் செயற்படும் இந்த இணையத்தளங் களுக்கு உதயனை விமர்சிக்கவோ கண்டிக்கவோ தவறுகளைச் சுட்டிக்காட்டவோ பூரண உரிமை உண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றோம்.

அவைகளால் விமர்சிக்கப்பட்ட விடயங்களை மறந்து அவற்றை நியாயப்படுத்த நாம் இங்கு முயலவில்லை. அப்படியான சம்பவங்களை மேற்கொள்ளப்பட்டமைக்கான சில தவிர்க்கமுடியாத காரணங்கள் தொடர்பாக சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதியம்மாளின் மரணச்செய்தி எங்களை வந்தடைந்தபோது விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுபெற்றுவிட்டன. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற தொலைதூரங்களிலிருந்தும் கூட ஊடகவியலாளர்களும் ஆதரவாளர்களும் வந்துசேர்ந்து விட்டனர்.

ஏற்கனவே இவ் விழா தைமாதம் 22ஆம் திகதி இடம்பெற விருந்து சில கெடுபிடிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. எல்லாத் தாயாரிப்புக்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை ஒத்தி வைப்பது நியாயமற்றதாகவே தென்பட்டது. அதுமட்டுமன்றி இறுதிச் சடங்குகள் அடுத்தநாளே இடம்பெறுவதால் அன்று விழாவை நடத்துவதால் பாதகம் எதுவுமில்லை என நம்பினோம்.

எனவே நாம் அன்னையைக் கௌரவிக்கவில்லையென்றோ அவரின் மறைவுக்கு மனம் வருந்தவில்லையெனவோ தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம் என அன்புடன் வேண்டுகின்றோம்.

கடந்த காலங்களில் உதயன் பத்திரிகை பலமுறை தாக்கப்பட்டு பெரும் சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. பல பணியாளர்கள் எமது வேலைத்தளத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயப்படுத்தப்பட்டனர். எமது பிரதம ஆசிரியர் மேல் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் மயிரிழையில் உயிர் தப்பி படுகாயப்படுத்தப்பட்டார். விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் கூட மிரட்டப்பட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் இனம் தெரியாதவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்தாலும் பொலிஸாரோ நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களோ இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதில் சிரத்தை கொள்ளவில்லை.

இன்றும் இந்த இனம் தெரியாதவர்கள் யாழ். குடாநாட்டில் கொலை, கொள்ளை உட்பட பல வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயன் தேசியத்தின் குரலாக 25 வருடங்களை நிறைவு செய்து பெருவிழா எடுப்பது மட்டுமன்றி ஊடக வரலாற்றிலேயே ஒரு முன்னுதாரணமாக ஆசிரிய பீடத்தினர், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள் என இப்பணியுடன் தொடர்புடைய அனைவரையும் விருது வழங்கி கௌரவித்தோம்.

இப்படியான ஒரு நிலையில் இனம் புரியாதவர்களால் சில அசம்பாவிதங்கள் ஏற்படுத்தப்படலாம் என கடந்த கால அனுபவங்கள் எமக்கு நினைவூட்டின. இதில் உயிர்கள் பலவும் கொல்லப்படவும் கூடும்.

ஒரு சில குறிப்பிட்ட நபர்களை அழைப்பதும் அதை வெளியில் பிரசாரம் செய்வதும் இவ்விழாவை இந்த இனம் புரியாதவர்களிடமிருந்து பாதுகாக்கும் என நம்பினோம்.

ஊடகம் சம்பந்தப்படாத எவரும் இங்கு உரையாற்றி தமது கருத்துக்களைத் திணிக்க நாம் மேடையமைக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நீட்டப்பட்ட துப்பாக்கிகள் நடுவிலும் ஊடக பணியாற்றும் எமது பணியை நேர்மையாகவும் இடையறாமலும் செய்ய சில ஆபத்தற்ற விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றோம் என்பது கவனத்தில் எடுக்கப்படவேண்டியதாகும்.

எமது நேர்மையான துணிச்சலான பணியைப் பாராட்டிய அதேசமயம் எமது குறைபாடுகளை சுட்டிக்காட்டியமைக்கும் எம்மேல் காட்டிய அன்புக்கும் அக்கறையுடன் கூடிய விமர்சனத்துக்கும் எமது நன்றிகள்.

கள நிலைமைகளைக் கருத்தில் எடுத்து இனம் புரியாதவர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கு, சமயோசித முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை புலம் பெயர்ந்த அன்பு உள்ளங்கள் மறக்கமாட்டீர்கள் என நாம் நன்கு அறிவோம்.

உதயன், யாழ்ப்பாணம்

இத்துடன் தொடர்புபட்ட செய்தி

Short URL: http://thaynilam.com/tamil/?p=3159

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதயன் விவகாரம் சூடு பிடிக்கிறது! முன்னாள் ஊழியர் மடல்!

Posted by admin On February 25th, 2011 at 2:04 pm / No Comments

உதயன் நாளிதழ் தனது வெள்ளிவிழா நிகழ்விற்கு இராணுவத்தரப்பை அழைத்தது சரியென நியாயப்படுத்தியுள்ள அறிக்கையை வாசித்து அதிர்ச்சியுற்றவர்களில் நானுமொருவன். எத்தனையோ அளப்பரிய தியாகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உதயன் நாளிதழ் இப்படியான கீழ்த்தரமான செயலைச் செய்யுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அதுசரியென விளக்கியுமுள்ளீர்கள். இதன்மூலம் யாழ்ப்பாண சமூகத்தை பிழையான வழியில் நடத்திச் செல்ல விளைகின்றீர்கள்.

நீங்கள் கூறும் அந்த இனம்புரியாதவர்களால் சில அசம்பாவிதங்களால் ஏற்படுத்தப்படலாம் என்பதாலேயே அவர்களை விழாவிற்கு அழைத்திருந்தீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். சுமார் 5 வருடங்களாக – போர்க்காலப்பகுதியில் உதயன் பத்திரிகையில் கடமையாற்றியவர்களில் நானும் ஒருவன். அப்பொழுதும்கூட இப்படியான விழாக்களை நாங்கள் சந்தித்திருந்தோம். ஆனால் அன்றைய காலப்பகுதியில் இனம்புரியாதவர்களை அழைத்திராத நீங்கள் இன்று அழைத்ததன் காரணம்தான் என்ன? இனம்புரியாதவர்களின் பாதுகாப்புடன் நீங்கள் விழாவை நடத்தியிருந்தால்கூட தமிழ்மக்கள் அதனை ஓரளவேனும் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் நீங்கள் இனம்புரியாதவர்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்ததுமுதல் அவர்களைக்கொண்டு உயிரிழந்த ஊடகர்களுக்கு சுடர் ஏற்றியது மட்டுமன்றி,மூத்த ஊடகவியலாளர்களைக் கௌரவித்தும் இருக்கின்றீர்கள். எந்தவிதத்தில் நீங்கள் இதனை நியாயப்படுத்தப் போகின்றீர்கள்? இதில் வரவேற்கத்தக்க விடயமென்னவென்றால் வெள்ளிவிழாவை மூத்த ஊடகர் புறக்கணித்தமைதான்.

முன்பக்க வாசலிலிலே உயிரிழந்த ஊழியர்களின் சடலங்கள் கிடக்க பின்வாசலால் பத்திரிகை அடித்து வெளியிட்டவர்கள் நாங்கள். தமிழ்மக்களுக்கான எங்களின் உன்னதபணியை எத்தனை விலைகொடுத்தும் செய்வோம் என்ற திமிர் எங்களிடத்திலிருந்து இருந்தது.இருந்துவருகின்றது. இனிமேலும் இருக்கவேண்டும்.

நீங்கள் அழைத்த அந்த இனம்புரியாதவர் எங்கள் இனத்துக்கு இழைத்த கொடூரங்கள் உங்களுக்குத் தெரியாமல் இல்லை. குட்டிமணி மற்றும் தங்கத்துரை போன்றோரின் உயிர்களைக்காவுகொண்ட வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரியென்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏனென்றால் உங்களுக்கு இப்பொழுது வயது இருபத்தைந்து. கொன்றவனைக் கொண்டே நீங்கள் சுடர் ஏற்றி உங்களுக்காக சாவைத்தழுவிய ஊடகர்களின் தியாகத்தை களங்கப்படுத்திவிட்டீர்கள். களநிலைமைகளைக் கருத்தில் எடுத்து இனம்புரியாதவர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கு சரியாக யோசித்து முடிவெடுப்பது உங்களுக்கும் உங்களைச் சார்ந்திருக்கும் இனத்திற்கும் நல்லது. போராட்டத்தில் விட்டுக்கொடுப்புக்கள் இருக்கலாம். ஆனால் விட்டுக்கொடுப்பிற்காக எமது போராட்டம் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு.

யாழிலிருந்து உதயனின் முன்னாள் ஊழியர்.

uthayanandarmy1.jpg

குறிப்பு:மேற்குறித்த மடல் வாசகரின் தனிப்பட்ட கருத்தாகும். இதற்கும் சரிதத்திற்கும் தொடர்பில்லை.

saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகர்களுக்கு இராணுவத்தினர் சுடர் ஏற்றியமை பெருமைக்குரிய விடயம் என்கிறார் சரவணபவன்! முரண்பட்ட கருத்துக்களுடன் உதயனும் நிர்வாகியும்!!

Posted by admin On March 1st, 2011 at 6:01 am /

உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்டமும் அதன் பின்னர் அது எதிர்கொண்ட ஊடக எதிர்ப்பலைகளும் அணைந்துவிடக்கூடாது என்று கருதுவதாலோ என்னவோ உதயனே அதனைப் புதுப்பித்துக் கொள்ள எத்தனிப்பதாக எண்ணத் தோன்றும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறியே வருகின்றன.

உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி அழைக்கப்பட்டிருந்த போதிலும் கேணல் பெரேரா எனப்படுகின்ற சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி சமூகம் கொடுத்து அவர் உயிரிழந்த ஊடர்களுக்கான முதற் சுடரை ஏற்றியமை தொடர்பில் பல இணையத்தளங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.

ஊடக தர்மம் கருதி நடந்த நிகழ்வு தொடர்பில் கௌரவமான மொழி நடையில் நாம் எமது கருத்துக்களை எழுதியிருந்தோம். இந்த விடயங்கள் நிகழ்ந்தேறியிருந்தமை பேரன்னை வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் மறைந்தநாள் அன்று என்பதால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை தேசியத்தினை உண்மையாக நேசிக்கின்ற ஊடகங்களுக்கு இருந்தமையால் அந்த விடயத்தினை இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் புலம்பெயர் ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.

சொல்லப்பட்ட பாங்கு – கடந்த காலத்தில் உதயன் செய்தவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி இந்தத் தவறை ஏன் செய்தது? என்ற தொனிப்பொருளியேயே அமைந்திருந்தது. இதனை அடுத்து உதயன் நாளிதழில் இருந்து எமது இணையம் உட்பட்ட ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் தவிர்க்க முடியாத நிலையிலேயே நிகழ்வினை ஒத்திவைக்க முடியவில்லை என்ற சாரப்பட எழுதப்பட்டிருந்தது. குறித்த அறிக்கை ஊடாக வெள்ளிவிழாவில் நடைபெற்ற சம்பவத்தினை நியாயப்படுத்த முற்படாமல் தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றியைக்கூடத் தெரிவித்திருந்தது.

ஆனால் அதேவேகத்தில் அதன் நிர்வாகப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஈ.சரவணபவன் மாறுப்பட்ட கருத்தினை புலம்பெயர் தொலைக்காட்சி ஊடகமான ஜீரிவிக்கு வழங்கிய செவ்வியில் சம்பவத்தினை வெளிப்படுத்தியவர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகிறது.

நிகழ்விற்கு ஒரே ஒரு இராணுவத்தினரே வந்திருந்ததாகவும் அவர் நிகழ்வில் சுடர் ஏற்றுவதை மட்டும் ஏன் பெரிய விடயமாக வெளியிட்டார்கள் என்று சிறுபிள்ளைத் தனமாக அவர் கேள்வி எழுப்பியிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்கும் கேள்விதானா? என்று எண்ணத் தோன்றுகின்றது.

இதனைவிடவும் நிகழ்விற்கு மூத்த ஊடகர்கள் அழைக்கப்பட்டு அவர்களும் இராணுவ அதிகாரியால் கௌரவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விருது பெற்ற எவரும் கவலை வெளியிடவில்லை என்றும் தன்னுடன் இணைந்து புகைப்படம் பிடிக்கவே ஆசைப்பட்டார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர் தாம் செய்த குற்றத்தினை நியாயப்படுத்த மூத்த ஊடகர்களையும் துணைக்கு அழைத்திருப்பதனை எந்த வகைக்குள் அடக்குவது?

இராணுவ அதிகாரி அழைக்கப்பட்டமை தொடர்பில் பெருமைப்பட வேண்டும் என்றும், கொன்றவர்களைக் கொண்டே சுடர் ஏற்றியிருப்பது பெருமைக்குரியவிடயம் என்றும் தமது ஊடர்கள் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறிப் புகழாங்கிதம் அடைந்திருக்கின்றார்.

ஆக, வெள்ளிவிழாவில் நடந்த சம்பவங்களில் எந்தத் தவறும் இல்லை என்றும் அதனை எழுதியவர்களே தவறிழைத்திருக்கிறார்கள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிர்வாகப் பணிப்பாளருமான ஈ.சரவணபவன் வழங்கிய செவ்வியினையும், அதற்கு நேர்மாறாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையினையும் வாசகர்கள் ஒப்பீடு செய்து கொள்வதற்காக இரண்டு விடயங்களையும் இணைப்புச் செய்கின்றோம்.

உண்மை உண்மையானது! பொய் பொய்யானது! உண்மை பொய்யாகாது! பொய் உண்மையாகாது!

ஒலிவடிவம்

GTV இற்கு சரவணபவான் வழங்கிய செவ்வி

சரிதம் ஆசியர் பீடம்.

தொடர்புபட்ட செய்திகள்

உதயன் ஆசிரியர் பீடத்தின் பதில்!

வெள்ளிவிழாவில் கறை பூசிய உதயன்!

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.