Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னிக்கலாம், மறக்க முடியாது என்றார் நெல்சன் மண்டேலா -

Featured Replies

I

தம்மீதான நிறவெறிக் கொடுமைகளை மன்னிக்கலாம், மறக்க முடியாது என்றார் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா.

வரலாற்றிலிருந்து இனக்கொலை தொடர்பான விசாரணை ஒன்று, உள்நாட்டில் நிறவெறி தொடர்பான கொலைகள் குறித்த விசாரணையென ஒன்று என இரண்டு விதமான விசாரணைகளை மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் மீது ஜெர்மானியர்கள் நிகழ்த்திய இனக்கொலைகள் குறித்த நூரம்பர்க் விசாரணைகள் நாம் அறிந்தவை. விசாரணையின் முடிவில் இனக்கொலை புரிந்த நாசித்தலைவர்கள் தண்டனை பெற்றார்கள்.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது உண்மை காணலும் நல்லிணக்கமும் என்பதற்கு அமைக்கப்பட்ட குழு வெள்ளையின ஆட்சி மற்றும் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கம் என இருதரப்பினரும் செய்த குற்றங்களை விசாரணை செய்தது. குற்றங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு, விளைவாக தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் நல்லிணக்கம் இடம்பெற்றது.

தமது அடிப்படையான அடையாளமும் வாழ்வும் மறுக்கப்பட்ட மக்களிடம் மறப்பதைப் பற்றிப் பேச முடியாது. உயிர்வாழ்தல் என்பதே அவர்களைப் பொறுத்து வலிகளை மறக்காமல் இருப்பது என்றே அவர்களுக்கு அர்த்தப்படும். ஆகவேதான் மறதிக்கு எதிரான போராட்டமே வாழ்வு என எழுதினார் தற்கொலை செய்துகொண்டு மரணமுற்ற யூதரான பிரைமோ லெவி.

ஈழநிலைமையிலும் இந்த மறத்தலும் நல்லிணக்கமும் அதனோடு சேர்ந்து அபிவிருத்தி அரசியலும் பேசப்படுகிறது.

II

மறத்தல் என்பது மனிதன் வாழும் காலம் வரை சாத்தியமில்லை. இதனையே, நினைவுகள் மரணிக்கும்போது மனிதன் மரணிக்கிறான் என்பார் ஈழத் தமிழ்க் கோட்பாட்டாளரான அ.சிவானந்தன்.

மறத்தல் என்பது வேறு மன்னித்தல் என்பது வேறு. மன்னித்தல் சாத்தியம். அதற்கு முதல் நிபந்தனை குற்றங்களும் தவறுகளும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். யூதர்கள் விஷயத்தில் விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள். தென் ஆப்ரிக்க நிலைமையில், வெள்ளையினத்தவர் தமது நிறவெறிக் கொடுமைகளை ஒப்பினர். இருதரப்பினரும் நல்லிணக்கத்திற்கு வந்தனர். இலங்கை நிலைமை இப்படியானது இல்லை.

இலங்கை அரசு பற்றிய தமிழர்களின் முறைப்பாடு அது பேரினவாத அரசு என்பதுதான். டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசு மீதான இனக்கொலைக் குற்றச்சாட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை 40,000 தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டார்கள் என்கிறது. இந்தக் கொலைகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்-சிங்களக் கலப்பினப் படையினர் அல்ல, நூறு சதவீதம் சிங்களவர்களைக் கொண்டது இலங்கைப் படை. கொன்றவர்கள் சிங்களவர்கள். கொல்லப்பட்டவர் தமிழர். இது நிச்சயமாகவே ஒரு இனப் படுகொலைப் பிரச்சினை. இது இலங்கையின் அரசியல் பிரச்சினையின் பிரதான பகுதி

III

பிறிதொரு பகுதி, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு. இந்த முரண்பாடு விடுதலைப் புலிகள் பிற போராளிக் குழுக்களை அழிப்பதற்கு முன்பாக, அனைத்து போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான முரண்பாடாக இருந்தது. அந்த முரண்பாடு இன முரண்பாடு. அந்த இனமுரண்பாட்டை அரசியல் உரையாடல் என்பதாக அல்லாமல் ஆயுத முரண்பாடாக ஆக்கியதில் பிரதான பாத்திரம் இலங்கை அரசுக்கே உரியது.

இலங்கை அரசின் ஒடுக்குமுறை வடிவங்களே தமிழ் இளைஞர்களின் ஆயுத எழுச்சியாக பரிமாணம் பெற்றது.

இந்த முரண்பாடு வேறு விதமாகப் பின்னாளில் திரிவுபட்டது. விடுதலைப் புலிகள் பிற போராளிக் குழக்களை வேட்டையாடத் துவங்கியதிலிருந்து, சில குழுக்கள் தமது பௌதீக இருத்தலுக்காக - அரசியல் நிலைபாடுகளைத் தொடர்ந்து பேணுவதற்காக அல்ல - விடுதலைப் புலிகளுக்கு நேரெதிரான நிலைபாட்டையும், அரசுக்கு அனுசரணையான நிலைபாட்டையும் எடுத்தது. இன்று அரசுக்கு ஆதரவான குழுக்கள் பிரதானமாக தீர்வுக்கான அடிப்படையாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முன்வைக்கிறார்கள். அதனையொட்டிய ஒரு அரசியலையும் அது அவர்கள் தற்போது வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கும் அரசுக்கும் இடையில் இன்னும் வெளிப்படையாக மேவி வராத முரண்களும் கூட இனப் பிரச்சினையின் முரண்கள்தான். இலங்கையில் இனப் பிரச்சினை அரைநூற்றாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இன்னும் தொடர்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டவட்டமாக தமிழ் மக்களின் சார்பாக நின்று போராடிய ஒரு இயக்கம், ஆனால் ஒரேயொரு இயக்கம் இல்லை. அதனது தந்திரோபாயங்கள், மக்களுக்கும் அதற்குமான உறவு, பிற போராளி இயக்கங்களை அது கையாண்ட முறை, சர்வதேசிய-பிராந்திய அரசியலை அது கையாண்ட முறை, விமர்சனங்களை அது கையாண்ட முறை போன்றவை குறித்த கடுமையான விமர்சனங்களுக்கு அப்பாலும், அது இறுக்கமான முறையிலிருந்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுத எதிர்ப்பைக் கைக்கொண்ட ஒரு இயக்கம் என்பதனை மறுத்துவிட முடியாது.

நிறுவனமயப்பட்டபடி இருந்துகொண்டு, சர்வதேசிய வரைமுறைகளை வஞ்சகமாக மீறியபடி, வக்கிரமான போரை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக, எந்தவிதமான சர்வதேச நிறுவனம்சார் ஒழுங்குகளையும் அறங்களையும் மறுத்த ஒரு அராஜகவாதப் பண்பு கொண்டதாக, ஸ்தாபன அடிப்படையில் ஸ்டாலினிய அடிப்படை கொண்டதாகவே விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டது.

அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அல்கைதா போன்றோ அல்லது பிளாக் செப்டம்பர் இயக்கம் போன்றோ அல்லது ஐரோப்பிய செம்படை இயக்கம் போன்றோ பயங்கரவாத நிகழ்வுகளை மட்டுமே நிகழ்த்திய இயக்கம் அல்ல. வெகுமக்கள் அமைப்பு-ஆயுதப்படை-பயங்கரவாதச் செயல்கள் எனும் மூன்றின் கலவையாகவே அது இருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கம் எனும் பிரச்சினை அடிப்படையில் இனப் பிரச்சினை தீர்வு நோக்கிய பிரச்சினை. அது நிச்சயமாகப் பயங்கரவாதப் பிரச்சினை இல்லை.

இனப் பிரச்சினையை ஓரம் கட்டுவதற்காக இலங்கை அரசு தேர்ந்துகொண்ட சர்வதேசிய அரசியல் தந்திரோபாயம்தான் பயங்கரவாதம் குறித்த பூச்சாண்டி. இந்த விஷயத்தில் ஜோர்ஜ் புஸ்சும் மகிந்த ராஜபக்சேவும் புட்டினும் மன்மோகன் சிங்கும் ஒரே மாதிரியானவர்கள். பின் லாடனின் தோற்றத்திற்குக் காரணம் மத்தியக் கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதும், இஸ்ரேலைத் தனது ஏவல் நாயாக அப்பிராந்தியத்தில் அது வளர்க்கிறது என்பதும்தான். இந்த அரசியலில் இருந்துதான் பின்லாடனின் அழிவுக் கோட்பாடான பயங்கரவாதம் தோன்றியது.

செச்சினிய இனப்பிரச்சினை மிகச் சௌகரியமாக புட்டினுக்குப் பயங்கரவாதமாக ஆகிறது. ஈழத் தமிழ் இனப் பிரச்சினை மகிந்தாவுக்கு பயங்கரவாதமாக ஆகியது. குறியீட்டு அளவில் இதற்கான ஆதாரத்தை புட்டினும், மகிந்தாவும் கண்டுகொள்ளவே செய்தார்கள்.

நியூயார்க் தாக்குதல், இலங்கை மத்திய வங்கித் தாக்குதல், செச்சினிய பள்ளிக் குழந்தைகள் பயணக் கைதிகள் ஆக்கப்பட்டமை என மூன்றிலும் மரணமுற்றவர்கள் யுத்தத்தில் நேரடியாக ஈடுபடாத ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்தான். இதில் கொல்லப்பட்டவர்களின் தொகை மாறுபடலாமேயொழிய, நடவடிக்கை எனும் அளவில் இந்த மூன்று தாக்குதல்களின் பின்னுமிருந்தவை பயங்கரமூட்டுதல்தான் என்பதில் சந்தேகமில்லை.

பின்லேடன் இதனை ஒரு இலட்சியமாகவே கொண்டிருந்தார். செச்சினிய, பாலஸ்தீன, லெபனானிய, செம்படைப் போராளிகள் இதனை தமது போராட்டத்தின் ஒரு வகைத் தாக்குதல் முறைமையாகக் கொண்டிருந்தனர். குறியீட்டளவில் இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் செப்டம்பர் தாக்குதல் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தின் பின், இதனை தமது அரசியல் நடவடிக்கையின் பகுதியாகத் தேர்ந்த அனைத்து இயக்கங்களையும் - அதனது அரசியல் மாறுபாடுகள்,கருத்தியல் மாறுபாடுகள், அரசியல் இலட்சியங்கள் அனைத்துக்கும் அப்பால்-

கியூபா முதல், வியட்நாம் ஈராக, உலகம் பயங்கரவாத இயக்கங்கள் என அடையாளப்படுத்தியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்த அளவில், சர்வதேச அளவிலான இந்த முத்திரைகளோடு, பிராந்திய அளவில் அவர்களது அரசியல் தவறான ராஜீவ்காந்தி படுகொலை, தமிழ் மக்களுக்கு உள்ளக நிலைமையில், ஈழப் பிரதேசத்தில் பிற இயக்கத்தவர்களை அழித்த ஸ்தாபனத் தவறு என மூன்று முனைகளில் எதிர்ப்புத் திரண்டது.

இதனை தனது சர்வதேசிய,பிராந்திய, உள்ளக அரசியல் பொறிமுறைகளின் மூலம் மிகச்சாதுரியாக, தனக்குச் சாதகமாக இலங்கை அரசு கையாண்டது. இது இலங்கையின் அரசியல் தந்திரோபாயம் தானேயொழிய, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அந்தரங்க சுத்தியான அரசியல் நடவடிக்கை இல்லை.

IV

இருதரப்புக் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழவின் அறிக்கை வெளியாகிறது. இலங்கை அரசின் மீது போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்தமையும் சுமத்தப்படுகிறது. 40,000 வெகுமக்கள் சாவுக்கு இலங்கைப் படையினர்தான் பொறுப்புக் கூற வேண்டு;ம். சிறுவர்களை படையில் சேர்த்தமை, பொது மக்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தமை, பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை என மனித உரிமை மீறல்-மற்றும் போரக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டு உண்டு. விடுதலைப் புலிகள் மீதும், இலங்கை அரசின் மீதுமான உலக அமைப்புக்களின் குற்றச்சாட்டுகளில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் மீது ஒரு போதும் இனக்கொலைக் குற்றச்சாட்டையோ அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததான குற்றச் சாட்டையோ எவரும் சுமத்த முடியாது. விடுதலைப் புலிகள் இனக் கொலை செய்தார்கள் என்று எவரும் சொல்ல முடியாது. முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் இனச் சுத்திகரிப்பின் தன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதனை இனப் படுகொலை எனச் சொல்வது சாத்தியமேயில்லை. அதனைத் தமது அரசியல் தவறு என அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியும் இருக்கிறார்கள்.

இலங்கை அரசு இனப்படுகொலைக் குற்றச்சாட்டிலிருந்தும், மனித குலத்திற்கு எதிரான குற்றச் சாட்டிலிருந்தும் தப்ப முடியாது.

சர்வதேசிய விசாரணைகள் என வந்துவிட்டால், இரு தரப்பும் தத்தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதும், ஆதாரங்களை முன்வைப்பதும் தவிர்க்கவியலாதது. விடுதலைப் புலிகளைப் பொறுத்த அளவில் சிறுவர் போராளிகளைப் படையில் சேர்த்தமையை மறுக்கமுடியாது. கடந்த காலங்களில் சர்வதேச அமைப்புக்களிடம் அப்படிச் சேர்த்திருந்தமையை அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது குற்றம் எனில் ஈழத்தின் அனைத்து விடுதலைக் குழுக்களும் இந்தக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். உலகின் அனைத்து விடுதலை இயக்கங்களும் இதனைப் புரிந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை புரட்சிகர இயக்கங்களைப் பொறுத்து அடிப்படையான விவாதத்திற்கு உரியதொரு பிரச்சினையாகும். இதனை முன்வைத்து பிற ஈழக் குழக்களும் இலங்கை அரசும் புலிகளை மனித உரிமை மீறலாளர்கள் எனச் சொல்வதனை புரட்சியாளர்கள் ஒப்புவது கடினம்.

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்து வைத்து, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதற்கான ஆதரமாக, முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, முதன்முதலாக யுத்தப் பிரதேசங்களுக்குச் சென்று திரும்பிய அல்ஜஜீரா ஆவணப்படம் இருக்கிறது. இந்தக் குற்றத்தை புரட்சியாளர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மனித உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சர்வதேசியச் சட்டங்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கை அரசைப் பொறுத்து பொதுமக்களைக் கொன்றமை, மருத்துவமனைகளைத் தாக்கியமை, மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பாவித்தமை, அடிப்படை மருத்துவ உதவிகளை மறுத்தமை, போர்க் கைதிகளைக் கொன்றமை என போர்க்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும், இனப்படுகொலை விசாரணைகளுக்கான காரணங்களும் குவிந்துகிடக்கின்றன.

இதற்கு இருதரப்பினரும் பொறுப்புக் கூறத்தான் வேண்டுமா? விசாரணை என வந்துவிட்டால் அதனது நிறுவன முறைமைக்குள் அதனை எதிர்கொண்டுதான் தீர வேண்டும். இலங்கை அரசுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பாளர்களாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயவும் ஸ்தூல மனிதர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளிற்கு பொறுப்புக் கூற யார் இருக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளின் தலைமையினர் முற்றிலுமாகக் கொல்லப்பட்ட நிலைமையில், மிஞ்சியவர்கள் அரசு சார்பாளர்களாக ஆனநிலையில், பொறுப்புக் கூறுவதற்கு நிறுவன அளவில் எவரும் இல்லை எனவே கூறவேண்டியிருக்கிறது.

இந்தப் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரு கூறுகள் கொண்டது. இலங்கை அரசானாலும் சரி, விடுதலைப் புலிகள் ஆயினும் சரி, சர்வதேசச் சட்டங்களுக்கு அவர்கள் பொறுப்புக் கூறுவது போலவே தம்மால் பாதிக்கப்பட்ட தமது சொந்த மக்களுக்கும் அவர்கள் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள். சர்வதேசச் சட்டங்களுக்குத் தலைவணங்குவதாகப் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட இலங்கை அரசு சர்வதேச நியதிகளுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நிறுவனங்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் எவரும் இல்லை எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய, மக்களுக்கான விடுதலை இயக்கம் எனும் அளவில், அந்த இயக்கத்தின் அரசியல் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறவர்கள் சுயவிமர்சனம் எனும் அளவில் இவைகளுக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

ஏன் எனில், ஒன்றபட்ட மக்கள் அரசியலுக்கும், பொது எதிரிக்கு எதிரான அரசியல் இணக்கத்திற்கும் இது மிக மிக முக்கியமானதாகும்.

இந்த நிலைமையிலிருந்து தான் தமிழ் மக்களின் விடிவிலும் ஒற்றுமையிலும் நம்பிக்கையுள்ளவர்கள் பொறுப்புக் கூறுதல் என்பதனைப் பார்க்க முடியும்.

V

தமிழ் மக்கள் முன்னுள்ள பிரதானமான அரசியல் கடமையாக என்ன இருக்கிறது? இந்தப் பொறுப்புக் கூற வைத்தலை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?

விடுதலைப் புலிகளின் தொடர் அரசியல் செய்பவர்களை நோக்கி அத்தகைய அரசியல் உரையாடலை மட்டுமே வெகுமக்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இது ஒரு வகையிலான கருத்துப் போராட்டம்.

இலங்கை அரசைப் பொறுத்த வரையில் கூடுதலான பொறுப்பு அவர்களுக்குத்தான் இருக்கிறது. அரைநூற்றாண்டுகளாக இலங்கை அரசு தமிழர்கள்பால் மேற்கொண்ட அரசியலின் எதிர்விணைதான் விடுதலைக் குழுக்களின் தோற்றம். இலங்கை அரசின் இழுத்தடிப்பிற்கான எதிர்விணைதான் விடுதலைப் புலிகளின் கடும்போக்கு அரசியல். நடந்து முடிந்த அனைத்துப் பேரழிவுகளினதும், மரணங்களினதும், அரசியல் தோற்றுவாய் இலங்கை அரசுதான்.

ராணுவம், சிவில் சமூகம், அரசு நிறுவனங்கள், அரசியல் அமைப்பு எனும் முழுமையும் இனவாதம் பாரித்துப் போனதற்கான முழுமையான காரணியாக இருப்பது இலங்கை அரசும், இலங்கையின் ஆட்சியாளர்களும்தான்.

இவர்களைச் சர்வதேசியச் சட்டங்களின் அடிப்படையில் நடந்து முடிந்த பேரழிவுகளுக்கான பொறுப்புக் கூறலுக்கு நிரப்பந்திப்பதற்கான ஒரு வாயப்பாக இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இருக்கிறது.

VI

இப்போது புகலிட மாற்றுக் கருத்தாளர்களும் ஜனநாயகவாதிகளும், இலங்கையில் தமிழ்ப் பிரதேசத்தில் இருக்கும் ஜனநாயகவாதிகளும், அபிவிருத்தி அரசியல்வாதிகளும் வெகுமக்கள் படுகொலைகள் நிகழவே இல்லை என்கிறார்கள். இன அடையாள, மத அடையாளப் பிரச்சினை இலங்கையில் இல்லை என்கிறார்கள். இலங்கையின் கடந்த முப்பதாண்டுகளில் இருந்ததெல்லாம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சினைதான் என்கிறார்கள். புலிகள் சாதியவாதிகள்-இந்துத்துவவாதிகள் என்கிறார்கள்.

தமது கடந்த காலத்தை முற்றிலும் மறப்பது வேறு, கடந்த கால அரசியல் பரிமாணங்களை மறுப்பது வேறு. இன்று தமது அரசியல் இருத்தலுக்காகக் கடந்த காலத்தை மறுக்கலாம். ஆனால், வரலாற்றுரீதியில் வளர்ச்சி பெற்றிருக்கிற அரசியல் யதார்த்தம் அவர்களையும் மீறியது. முப்பதாண்டுகளில் இருந்தது பயங்கரவாதம் மட்டும்தான் என்றால், எதற்காக பேச்சவார்த்தையின் அடிப்படையாக முப்பது ஆண்டுகளின் போதான இந்திய-இலங்கை உடன்பாட்டை முன்வைப்பதற்காகவே இன்று கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? வடக்கில் சிங்களத்தில்தான் தேசிய கீதம் பாட வேண்டும் என வற்புறுத்துகிறார்கள் என முப்பது ஆண்டுகளின் பின்னும் மிக மிக அடிப்படையான உரிமையை மகிந்த சகோதரரரிடம் ஏன் வலியுறுத்த வேண்டியிருக்கிறது?

உண்ணுவதற்கு மட்டுமே வாய் திறக்க வேண்டிய நிலைமைதான் இன்று தமிழ் மக்களின் நிலைமை. இதுவே யதார்த்தம்.

அபிவிருத்தி அரசியல், அதாவது பொருளாதார முன்னேற்றம் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு வகை முற்போக்கு அரசியல். இந்த அரசியல் ஒரு காலாவதியாகி விட்ட அரசியல். இனம்,மதம்,மொழி போன்றவற்றில் அடிப்படை கொண்ட கலாச்சார அடையாளங்களை இது மறுதலிக்கிறது. அரசியல் உரிமைகளை இப்பார்வை மறுக்கிறது. கேள்வி கேட்க முடியாத எதேச்சாதிகார அரசியலை இது முன்மொழிகிறது. வரைமுறையற்ற அதிகாரம் நோக்கி அரசை இந்த நிலைபாடு செலுத்தும். இதனைத்தான் ஈராக்கில் சத்தாம் குசைன் செய்து வந்தார். இதனைத்தான் இன்று முவம்மர் கடாபி லிபியாவில் செய்து வருகிறார். மகிந்தா இதனை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறார்.

அரசியல் உரிமைகளும், கலாச்சார உரிமைகளும், பொருளாதார உரிமைகளும் பிளவுபடாதவை. ஓன்று இல்லாமல் பிறிதொன்றில்லை. அரசியல் சுதந்திரமும் பொருளாதார சுதந்திரமும் பிளவுபடாதவை. ஆகவே தமிழ் மக்களின் மீது சுமத்தபட்ட அடிமைத்தனத்திலிருந்து இருவகையிலும் தமிழ் மக்கள் வெளியேற வேண்டும். ஓன்றை முன்வைத்து பிறிதொன்றை மறுக்க முடியாது. இனப் பிரச்சினை தோன்றி அரை நூற்றாண்டுகளின் பின்னும், முள்ளிவாயக்கால் பேரழிவின் பின்பு இரண்டு ஆண்டுகளின் பின்பும் அரசு தரப்பிலிருந்து அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளும் கூட இல்லை.

இச்சூழலில் வெறும் அபிவிருத்தி அரசியல் மட்டும் பேசுவது தமிழ் மக்களை விடுவிக்காது.

அரசு ஆதரவாளர்களை நோக்கி எவரும் உரையாடலை மேற்கொள்ள முடியாது. அவர்களுக்கு அவர்களது அரசியல் இருத்தல் என்பது முக்கியம். தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் நம்பிக்கை கொண்ட, ஆனால் அபிவிருத்திதான் இன்று தேவை என்று சொல்லும் நல்லெண்ணம் கொண்ட தாராளவாதிகளோடு எவரும் உரையாடவே வேண்டும்.

இலங்கையின் உள்ளிருந்து கொண்டு எவரும் வேகமாக மனித உரிமை அரசியலை, போர்க்குற்ற விசாரணை அரசியலை முன்னெடுக்க முடியாது. அது போலவே புகலிடத்தில் இருந்து கொண்டு எவரும் அபிவிருத்தியை முன்னெடுக்கவும் முடியாது. அவரவர் தளத்திலிருந்து அவரவர் அரசியலை அவரவர் முன்னெடுப்பதே யதார்த்தமானதாக இருக்கும்.

தமிழ் மக்களுக்கு நல்லிணக்கமும் சமாதானமும் அபிவிருத்தியும் வேண்டும். நல்லிணக்கத்திற்கு பொதுநோக்கிலான பரஸ்பர உடன்பாடு வேண்டும். பரஸ்பர உடன்பாடு சில வேளைகளில் இருதரப்பினாலும் எட்டப்படுவது உண்டு. தென் ஆப்ரிக்கா அதற்கான உதாரணம். சில வேளைகளில் சர்வதேச அழுத்தங்களால்தான் அதற்கான அடிப்படைகள் உருவாக்கப்படுகின்றன. நியூரம்பர்க் விசாரணை அதற்கான சான்று.

யூத இனக்கொலை விஷயத்தில் பொதுவாக ஐரோப்பியர்களுக்கு ஒருவிதமான கூட்டுக் குற்றவுணர்வு உண்டு. ஜெர்மனியின் புகழ்பெற்ற எழுத்தாளரான குந்தர் கிராஸ் தான் ஒரு போது நாசி பாதுகாப்புப் படையில் இருந்ததை, அரைநூற்றாண்டின் பின் வெளிப்படுத்தியபோது, அவரை பெரும்பாலுமானவர்கள் அருவருப்பாகவே கருதினார்கள். இனக் கொலைக்கு எதிரான வலுவான மனநிலை இது. துரதிருஷ்டவசமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இம்மாதிரியிலான மனநிலையை என்றேனும் பெறுவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகவே நமக்கு முன் தொங்கிக் கொண்டிருக்கிறது..

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

www.globaltamilnews.net

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.