Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தில் நோர்வே அதீத அமைதி காப்பது ஏன்?

Featured Replies

இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தில் நோர்வே அதீத அமைதி காப்பது ஏன்? Aftenposten நாளிதழ் கேள்வி!

இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காண்பிக்கப்பட்ட போது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை.

இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் அதன் அனைத்துலக அரசியல் கட்டுரையாளர் Kristoffer Ronemberg.

நேற்று முன்தினம் (05.07.2011) எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அரசாங்கத்திற்கும் நோர்வேக்கும் இடையேயான உறவில் 'இயல்பு நிலையை' ஏற்படுத்தும் முனைப்பில் நோர்வேயும் எரிக் சூல்ஹைமும் இருக்கின்ற புறநிலையிலேயே சிறிலங்கா தொடர்பாக நோர்வே அதீத அமைதி காக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் விரைவில் நோர்வேக்கு வரவுள்ளார். இதற்கு அடுத்ததாக சிறிலங்காப் பயணம் மேற்கொள்ளும் நம்பிக்கையில் சூல்ஹைம் உள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குரிய சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் நியமிக்கப்படுவதற்குரிய முனைப்பினை நோர்வே மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வட பகுதியை இராணுவ மயப்படுத்தும் தெரிவை கொழும்பு மேற்கொண்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரங்கட்டப்படுகின்றது எனவும் Kristoffer Ronemberg இக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இக்கட்டுரையின் முழுமையான தமிழாக்கத்தினை இங்கே தருகின்றோம்.

உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடாத்த வேண்டுமென நோர்வே கருதுகின்றது.

உலக அரசியலில் இரண்டு ஆண்டுகள் மிகவும் குறுகிய காலமாகும். ஆனால் 2009 ஜனவரி முதல் மே வரை இலங்கைத் தீவின் வட பகுதியில் நடந்தேறிய கொடூரங்களுக்கான நீதியைக் கோருவோருக்கு இந்த இரண்டு ஆண்டுகள் மிக நீண்ட காலமாகும். 350 000 வரையான ஏழைத் தமிழர்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் ஒதுக்கப்பட்டனர். அது அரசாங்கத்தால் 'போரற்ற பகுதி' என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

இறுதி மாதங்களில் போரின் இறுதிக்கட்டம் தொடர்பான 3 காத்திரமான மீளாய்வுகள் உலக சமூகத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அறிக்கை, 3 சுயாதீனமான நிபுணர்களால் உருவாக்கப்பட்டு, ஐ.நா செயலாளர் நாயகத்தினால் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

2009இன் முதல் 5 மாதங்களிலும் 40 000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், பெருமெண்ணிக்கையான படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பெனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணொளியில் பதிவான தாக்குதல்கள்

அதற்கு அடுத்ததாக சிறிலங்காவிற்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் Gordon Weiss அவர்கள் The Cage - கூண்டு' எனும் தலைப்பிலான நூலினை வெளியிட்டுள்ளார். அந்நூலில் அவர் ஊடகவியல் உத்திகளுடனும் நம்பகமான தகவல்களுடனும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அதே தீர்மானத்திற்கு வருகின்றார். அந்நூலின் சில விபரிப்புகள் நேரடியாக இதயங்களைக் கீறக்கூடியவை.

அண்மையில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற கொடூரமான அந்த ஆவணப்படம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நிகராக ஐ.நா அறிக்கையோ Weiss அவர்களின் நூலோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

நாலா பக்கத்தலிருந்தும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தததையும், உணவு மற்றும் மருத்துவ வசதிகளின்றி பல மாதங்களாக அவலப்பட்டதையும், இரத்த வெள்ளத்தில் தோய்ந்ததையும் செல்லிடத் தொலைபேசி ஒளிப்பதிவின் ஊடாகவும் நேர்காணல்கள் மூலமாகவும் சனல் 4இன் ஆவணப்படத்தில் தமிழ் பொது மக்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

சிறிலங்கா படையினரால் தமிழ்க் கைதிகள் உடல்வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்படும் காட்சிகளும் ஆவணப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன.

தாமே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இன அழிப்பு, போர்க்குற்றம் மற்றும் மனிதத்திற்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வந்துள்ளது. கொழும்பு அரசாங்கத்தினை விமர்சிப்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடம் பணம் பெற்றவர்கள் எனச் சிறிலங்கா ஊடகங்கள் எழுதுகின்றன.

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தாமே விசாரிக்கப் போவதாக தெரிவிக்கும் சிறிலங்கா அரசாங்கம், சுயாதீனமான எந்தவொரு பொறிமுறையையும் அனுமதிக்கப் போவதில்லை என மறுத்து வருகின்றது. ஐ.நா நிபுணர் குழு உறுப்பினர்களே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மீள் நல்லிணக்கத் திட்டத்தினைப் பாதிக்குமெனக் கொழும்பு கூறுகின்றது.

நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் உண்மையாகச் செயற்படுகின்றதாயின் அக்கூற்று நியாயமானதாக இருக்கும். மாறாக இலங்கையின் வட பகுதியை இராணுவ மயப்படுத்தும் தெரிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு அங்கு பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரங்கட்டப்படுகின்றது. அதிகார மையத்தை விமர்சிப்பவர்களின் குரல்கள் அடக்கப்படுகின்றன.

அமைதி காக்கும் நோர்வே

சிறிலங்கா தொடர்பாக அதீத அமைதியைக் கடைப்பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வெளியுறவுக் குழு உறுப்பினருமான Peter Gitmark சிறிலங்கா விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். வெளியுறவு அமைச்சர் Jonas Gahr Støre அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையில், சிறிலங்கா நிலைமைகளை நோர்வே நுணுகிக் கவனித்து வருகின்றது எனத் தெரிவித்ததோடு, போர்க் குற்றம் தொடர்பாக சிறிலங்கவின் உள்ளக விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையீனத்தினையும் வெளியிட்டார்.

'ஐ.நா பாதுகாப்பு பேரவை தனது பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும்' என வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இது விவகாரம் முன்வைக்கப்படும் பட்சத்தில் சீனாவும் ரஸ்யாவும் அதனைத் தடுக்கும் என்பதை நன்கு அறிந்த நிலையில் அவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் சனல் 4 ஆவணப்படத்திற்கான நோர்வேயின் ஆதரவுக்குரல் எங்கே? மே மாதம் ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில்; காண்பிக்கப்பட்டபோது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை.

நோர்வேக்கு எவ்வித இழப்புகளும் இல்லாத நாடுகளின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நோர்வே வெளியுறவு அமைச்சகம் அடிக்கடி ஊடக அறிக்கைகளை வெளியிடுகின்றது - ஈரான், மற்றும் லிபியா போன்றன இரண்டு எடுத்துக்காட்டுகள். ஆனால் சவூதி-அரேபியா, சீனா, ரஸ்யா மற்றும் ஏனைய மூலோபாய நலன்சார் நாடுகள் என்று வருமிடத்து பெரும்பாலும் செவிப்புலன் அற்ற நிலையை ஒத்த மௌனத்தையே விக்ரோறியா தெறாஸ்சவில் (Victoria terrasse - நோர்வே வெளியுறவு அமைச்சகம் அமைந்திருக்கும் முகவரி) அவதானிக்க முடிகிறது.

புதிய உறவு

கொழும்பு அரசாங்கத்திற்கும் நோர்வேக்கும் இடையேயான உறவில் 'இயல்பு நிலையை' ஏற்படுத்தும் முனைப்பில் நோர்வேயும் எரிக் சூல்ஹைமும் இருக்கின்ற புறநிலையிலேயே சிறிலங்கா தொடர்பான நோர்வேயின் மௌனத்தை நோக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் விரைவில் நோர்வேக்கு வரவுள்ளார். இதற்கு அடுத்ததாக சிறிலங்காப் பயணம் மேற்கொள்ளும் நம்பிக்கையில் சூல்ஹைம் உள்ளார்.

விமர்சனக் கருத்துக்கள் 'இயல்பு நிலையை' ஏற்படுத்துவதற்குத் தடையாக அமைந்து விடும். நாம் ஏலவே புரிந்து வைத்திருப்பதற்கு அமைய 'உரையாடல்' என்பது இந்த அரசாங்கத்திற்கு அதீத முக்கியமாகப்படுகின்றது.

இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை 'இலங்கையின் Srebrenica தருணம்' என Gordon Weiss குறிப்பிடுகின்றார். மேலும் பலரால் Rwandaவில் நடந்தேறிய படுகொலைகளுடன் இது ஒப்பிடப்படுகின்றது. ஆகவே படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஐ.நா தலைமையில் குற்றவியல் நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்திடம் மூடிமறைப்பதற்கு ஏதும் இல்லையெனில் இவ்வாறான பொறிமுறைக்கு அவர்கள் அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை.

சிறப்பு நீதி மன்றம்

இலங்கை தொடர்பாக மென்போக்கினைப் பேண விரும்பினாலும், சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் நியமிக்கப்படுவதற்குரிய முனைப்பினை நோர்வே மேற்கொள்ள வேண்டும். இதனை நாங்கள் கொள்கை சார் காரணங்களுக்காகவேனும் மேற்கொள்ள வேண்டும். இதனால் அரசியல் ரீதியில் விலை கொடுக்க நேரிடும் என்ற வாதம் ஏற்க முடியாதது. நாம் மிகச் சிறிய அளவிலான பொருளாதார நலன்களையே இலங்கைத் தீவில் கொண்டுள்ளோம்.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியனவற்றிற்கு இடையிலான புவிசார் அரசியல் சதுரங்க விளையாட்டின் முக்கிய அமைவிடத்தில் சிறிலங்கா அமைந்துள்ளது என்பது கருத்திலெடுக்க வேண்டிய வாதமாகும். ஆனால் அதற்காக மிகக்கொடூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் புறக்கணிக்க முடியாது.

இந்த அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஓட்டுனர் இருக்கையில் நோர்வே அமராமல் விடுவதற்கு ஏற்புடைய காரணங்கள் ஏதும் இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டுள்ள ஒரு தேசம் என நாம் கூறி வருவதில் உள்ளார்ந்த வினைத்திறன் கொண்டவர்கள் என்பதைக் காட்ட முடியும்.

ஆனால் சிறிலங்கா விவகாரத்தில் நாங்கள் ஓட்டுனர் இருக்கையில் இல்லை. நாங்கள் கடைசி இருக்கையில் கூட இல்லை என்பதே உண்மை. நாங்கள் வீதி ஓரத்தில், வாய் நிறைய அழுக்குடன் நிற்கின்றோம். அது தவறு என Aftenposten கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={EDCB6318-1E2E-4A14-860B-5558A6B130D2}

திரு. பிளேக்கும், சொல்கெயுமும் channel-4 இன் ஆவணத்திற்கு பிறகு (நாகரீகமடைந்த நாடுகளில் இரு்ப்பதால்) தாம் செய்த களவுகளை மறைக்க அமைதியாய்விட்டார்கள். இந்த பஞ்சமிக்கூட்டத்தின் மற்ற மூவரும் இந்தியாவில் இருப்பதால் மானமற்று, கேடுகளை இன்னமும் தொடர்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.