Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ், கிளிநொச்சி உள்ளூராட்சி தேர்தல் நிலவரம் : 13:07:2011

Featured Replies

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. 19 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற தோரணையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள்

சுதந்திர முன்னணியில் முற்று முழுதாக ஈ.பி.டி.பி. கட்சியின் வேட்பாளர்களே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல். எப். (சுரேஷ் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி , புளொட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். ரெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசிய விடுதலை முன்னணியை ஆரம்பித்த முன்னாள் எம். பி.க்களான என். ஸ்ரீகாந்தா, எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் அந்தக் கட்சியினை கலைத்து விட்டு மீண்டும் ரெலோ அமைப்பில் இணைந்துள்ளனர்.

ரெலோ அமைப்பில் இணைந்து கொண்ட முன்னாள் எம்.பி. எம்.கே. சிவாஜி லிங்கத்திற்கு அந்த அமைப்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்றார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் வேட்பாளர்களும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் ஏற்பாடுகளை மேற் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த சபைகளில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றாவது அணியாக இடம் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரத்திற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு சபைகளுக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு தினங்களாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதேபோல், வல்வெட்டித் துறை நகரசபைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டிலான் பெரேரா கடந்த ஒரு வாரகாலமாக அங்கே தங்கியிருந்து வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் ஒவ்வொரு சபைகளுக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தமது பரிவாரங்களுடன் அங்கு தங்கியிருந்து பணியினை மேற் கொண்டு வருகின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் டக்ளஸ் தேவானந்தா அந்தக் கட்சியின் எம்.பி.க் களான முருகேசு சந்திரகுமார், அலஸ்டீன் ஆகியோரும் பல்வேறு இடங்களிலும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர். இதனை விட தென்பகுதியிலிருந்து வந்து தங்கியுள்ள அமைச்சர்கள் நாள்தோறும் மக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடாநாட்டுக்குச் சென்ற அமைச்சர் ராஜித சேனாரத்ன கடற்றொழில் சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களுக்கான பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதேபோல் குடாநாட்டில் அதிபாதுகாப்பு வலயங்களாகக்கப்பட்டிருந்த சில வீதிகளும் திறக்கப்படுகின்றன. அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி தொண்டைமனாறு வீதி திறக்கப்பட்டது.

இதேபோல் பருத்தித்துறை ஆழிய வளை வீதி கடந்த மூன்றாம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதேபோல் மீள்குடியேறாத மக்களும் மீள்குடியேற்றப்படுவது போன்ற சித்தரிப்புக்களும் இடம் பெற்று வருகின்றன. ஆசியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அரச சேவை உத்தியோகத்தர்கள் என பல தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். பாடசாலைகளுக்கு கணினிகள் உட்பட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

குடாநாட்டில் பல அமைச்சர்கள் முகாமிட்டு மக்களை சந்தித்து வருகின்றனர். நாள்தோறும் பல கூட்டங்கள் இடம் பெறுகின்றன. இவ்வாறு தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இத்தகைய செயற்பாடுகளை தடுக்கும் வகையில் அரசியல் வாதிகள் பங்குபற்றும் நிகழ்வுகளை தேர்தல் முடியும் வரை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாடசாலை அதிபர்களுக்கும் அரச திணைக்கள அதிகாகளுக்கும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தல் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் ஆணையாளன் கருத்துக்கள் எதுவும் செவிமடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் யாழ்., கிளி நொச்சி மாவட்டங்களில் பாடசாலைகளிலும் அரச திணைக்களங்களிலும் பிரசாரத்திற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு கட்டமாக எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தரா ஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 19 ஆம் திகதியும் அவர் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 20 ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றவுள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்.

அங்கு அவர் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் பங்கேற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முழு அரச வளங்களையும் பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தம்மால் முடிந்தளவு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 17 சபைகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் இரண்டு சபைகளிலும் போட்டியிடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த மாதம் அளவெட்டியில் நடைபெற்ற போது இராணுவத்தினர் அக்கூட்டத்தில் பங்குபற்றியோர் மீது தாக்குதலை நடத்தியதுடன் குழப்பம் விளைவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டமைப்பு ஆதரவாளர்களிடம் ஒரு அச்ச நிலை தோன்றியிருந்தது. இதனையும் பொருட்படுத்தாது கூட்டமைப்பினர் பல்வேறு இடங்களிலும், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.

கடந்த 6ஆம் திகதி மானிப்பாய் கட்டு டையில் வசிக்கும் கூட்டமைப்பு வேட்பாளரான கிராம அலுவலர் சிவகுமான் வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் நாய் ஒன்றை வெட்டி உடலை வீட்டின் வாசலில் போட்டதுடன் நாயின் தலையை பிரதான வாசல் கதவில் தொங்க விட்டு சென்றிருந்தனர். இதேபோல் வலி. தென் மேற்குப் பிரதேச சபையில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்குச் சென்ற நபர்கள் அவரது வீட்டு முற்றத்தில் மலத்தினை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனைவிட தமிழ் கூட்டமைப்பு பிரகர் ஒருவன் வீட்டிலும், நாயை வெட்டி கிணற்றுக்குள் போட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி கொடிகாமம் தவசிக் குளத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு வேட்பாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரது வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சுடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களை எடுத்து வந்து வீட்டின் முன் எறிந்துள்ளதுடன் சுடலைச் சாம்பலையும் வீட்டு முற்றத்தில் வீசிச் சென்றிருந்தனர். கடந்த 9 ஆம் திகதி அதிகாலை வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளருமான எம்.கே.

சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீதும் வாய்க்கால் கழிவுகளை வீசிவிட்டு இனம்தெரியாத நபர்கள் சென்றனர். இதேபோல் வலி. மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ஐங்கரன் நாகரஞ்சனி வீட்டின் மீதும் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன் கல் வீச்சுத் தாக்குதலும் இடம் பெற்றுள்ளது. கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களானது அவர்களை அச்சுறுத்தி அவர்களது பிரசார ப்பணியினை முடக்குவதற்கான முயற்சியாகவே மேற் கொள்ளப்படுகின்றது.

இதனைவிட கிளிநொச்சிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற் கொள்ளும் பிரசார நடவடிக்கைகளை படையினர் குழப்பி வருவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை இராணுவத்தினர் தடுத்து வருவதாக கூட்டமைப்னர்கள் தொடர்ந்தும் குற்றச் சாட்டி வருகின்றனர்.

கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்பிலும் பிரசாரத்திற்கான இடையூறுகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தேர்தல் ஆணை யாளருக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார். இருந்த போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இது வரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

வடக்கில் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு அரசாங்கம் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபடுவது இதுவே முதல் தடவையாகும். இந்தத் தேர்தலில் பெரும்பான்மை சபைகளை கைப்பற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டி அரசாங்கம் செயற்படுவதானது வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவே கருதப்படுகின்றது. அரச தரப்பினன் இத்தகைய செயற்பாடானது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நீதி , நியாயமான தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

அரசாங்கம் வடக்கில் அராஜகப் போக்கில் செயற்படுவதாகவும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் இதனால் நீதி நியாமான தேர்தல் அங்கு சாத்தியமில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இதேபோல் நீதிக்கும் சுதந்திரத்திற்குமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் இத்தகைய சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளினால் தேர்தல் தொடர்பிலான அச்சம் மக்கள் மத்தியில் உருவானால் அது வாக்களிப்பு வீதத்தை குறைத்து விடும். வாக்களிப்பு வீதம் குறையுமானால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே பாதகமாக அமையலாம். இத்தகைய ஒரு அச்சத்தை உருவாக்கும் வகையிலேயே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் நீதி நியாயமான தேர்தல் நடைபெறுவதை கண்காணிப்பதற்கு வெளிநாட்ட கண்காணிப்பாளர்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் முன்வைக்க வேண்டும். இல்லையேல் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பலர் இருப்பதாக தெரிகின்றது.

ஆனாலும் இத்தகைய கோரிக்கையினை இன்னமும் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் முன்வைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னம் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த நடைமுறை சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான விடயமாகும். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் இடம் பெற்றது. இதில் ஒரு சில சபைகளைத் தவிர சகல சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருந்தது. இந்த நிலையிலேயே இந்த 19 உள்ளூராட்சி சபைகளிலும், பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் செயற்படுகின்றது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்த குற்றச்சாட்டானது பலமான சர்வதேச அழுத்தத்தை அரசாங்கத்திற்கு உருவாக்கியுள்ளது. இந்த அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் பல்வேறு பட்ட செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளூராட்சி சபைகளை வெற்றி கொள்வதன் மூலம் வடக்கில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவு தமக்கே உள்ளதாக அரசாங்கம் சித்தரிக்கப் பார்க்கின்றது. இதன் மூலம் யுத்தக் குற்றச் சாட்டுக்கள் எவ்வாறு சுமத்தப்பட்டாலும், மக்கள் எம் பக்கமே என்பதை உலகிற்கு பறைசாற்ற முயல்கின்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றுமானால் தமிழ் மக்கள் அரசாங்கத்தறிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். என்பது உலகிற்கு தெரியவரும் என்ற அச்சம் அரச தரப்பு மத்தியில் காணப்படுகின்றது. அரசாங்க அமைச்சர்களின் பேச்சுக்கள் மூலம் இதனை நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிட்டிருந்தது. இந்த மூன்று சபைளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியிருந்தது. இங்கு ஒரு சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி போட்டியிட்டிருந்தது. அந்தக் கட்சிக்கு ஒரு உறுப்பினரைக் கூட எடுக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. இவற்றை உதாரணமாகக் கொண்டே இம்முறை 19 சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு அரசாங்கம் செயற்படுகின்றது. யுத்தத்தினால் நொந்து நூலாகிப்போயிருக்கும் தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களில் இன்னமும் முற்று முழுதாக அடிப்படை வசதிகளுடன் குடியேற முடியவில்லை. தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கான சூழல் இன்னம் உருவாகவில்லை.

இந்த நிலையில் அரசாங்கம் தனது வளங்களை பிரயோகித்து அமைச்சர்களை முகாமிட செய்வதன் மூலம் குடாநாட்டு மக்களின் மனங்களை மாற்ற முடியுமா என்பது பெரும் கேள்வியை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

அமைச்சர்கள் தமது பரிவாரங்களுடன் அங்குமிங்கும் செல்வதும் வாகனத்தில் பவனி வருவதும் தென்பகுதியினருக்கு பிடித்தமான விடயங்களாக இருக்கலாம்.

ஆனால் வடபகுதி மக்களைப் பொறுத்த வரையில் அமைச்சர்களின் இத்தகைய செயற்பாடுகளை அவர்கள் வேண்டா வெறுப்பாகவே பார்ப்பார்கள். இதனால் தேர்தலில் பெரும் மாற்றங்கள் ஏற்படு ன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்பார்க்குமானால் அது சாத்தியமாகுமா என்பது சந்தேகமே எனவே நீதி நியாயமான தேர்தல் ஒன்று இடம் பெறுமானால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.