Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி

Featured Replies

பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி

பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன.

டி.கே.ஏ.நாயரின் பதவி ‘மாற்றம்’ என்பது ஏற்றமா இறக்கமா என்ற மதிப்பீடுகளும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட செய்தியுடன் சேர்ந்தே வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம், முதன்மைச் செயலராக இருந்த இந்த நாயரின் ‘பங்கு’ ஈழத் தமிழர் பிரச்சனையில், அதாவது அவர்களை ஒழித்துக்கட்டிய இனப் படுகொலைப் போர் தொடங்கப்பட்டதில் தொடர்புடையதாகும்.

சமீபத்தில் ‘தி ஸ்டேட்ஸ்மென்’ என்ற பாரம்பரியமிக்க வட இந்திய ஆங்கில நாளிதழில், இந்திய அளவில் மதிக்கத்தக்க இதழாளராக இன்று வரை திகழும் சாம் ராஜப்பா ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த‌க் கட்டுரையில், சேனல் 4 வெளியிட்ட, உலகின் நெஞ்சை உலுக்கிய ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ என்கிற ஆவணப் படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு மட்டும் இல்லாதிருந்திருக்குமானால், இப்படிப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சி ஆவணம் ஒன்று வருவதற்கு வாய்ப்பேயில்லாமல் போயிருக்கும் என்று எழுதியிருந்தார்.

இந்திய மத்திய ஆட்சியை அதிரச் செய்த சாம் ராஜப்பாவின் அந்த‌க் கட்டுரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு அமைதி முயற்சி தொடர்பான முழு விவரமும் வெளியிடப்பட்டிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்:

“சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான அந்த ஆவணப் படத்தில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத்திற்கு புது டெல்லியே காரணியாக இருந்த, இதுவரை சொல்லப்படாத கதை ஒன்று உள்ளது. 2005ஆம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ர‌ணில் விக்கிரமசிங்கேதான் வெற்றி பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஏனென்றால், அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா ராவ், ர‌ணில் விக்கிரமசிங்கேயுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் தமிழருக்கு எதிரான வல்லூறாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார். தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று த‌மிழ‌ர்க‌ள் தேர்தலை‌ப் புறக்கணித்தனர். அவர்கள் மட்டும் வாக்களித்திருந்தால், ர‌ணில்தான் மிகப் பெரிய வெற்றி பெற்று அதிபராகியிருப்பார்.

இலங்கையின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகத் திகழவேண்டுமெனில், தமிழருக்கு எதிரான வல்லூறு என்ற தனது உருவகத்தை மாற்றிக் கொள்ள முற்பட்டார் ராஜபக்ச, டெல்லியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தார், ஆனால் டெல்லி தொடர்ந்து அவரை புறக்கணித்தது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டின் ஆதரவைப் பெற்று இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இங்கு வாழும் சமூக ஆர்வலர்களின் உதவியை நாட ராஜபக்ச முற்பட்டார்.

டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே பாலமாக செயல்பட தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழுவை உருவாக்க ராஜபகசவின் தூதர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தனர். கொழும்புவின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணியாளரும், ஜெயப்பிரகா‌‌ஷ‌் நாராயணன், அன்னைத் தெரசா ஆகியோருடன் நெருக்கமாக பழகியவருமான எம்.ஜி.தேவசகாயத்தை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட ஒரு குழு உருவானது. இதில் மற்றொரு ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், தமிழக உள்துறை செயலராக பணியாற்றிவருமான எஸ்.பி.ஆம்ப்ரோஸ், இலங்கை பிரச்சனையில் விவரமறிந்தவராகத் திகழந்த முன்னாள் இராணுவ அதிகாரி (கர்னல் ஹரிஹரன்), மூத்த இதழாளர் (ராம் ராஜப்பாதான்) ஆகியோர் கொண்ட அந்தக் குழு, 2007ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்குழு, அதிபர் ராஜபக்சவின் ஆலோசகர் சுனிமால் ஃபெர்ணான்டோ தலைமையிலான குழுவுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கைத் தமிழர் இனப் பிரச்சனைக்கு, அவர்களின் நீண்ட கால அரசியல் எதிர்பார்ப்பிற்குத் தீர்வு தராத எந்த ஒரு தரப்பின் இராணுவ வெற்றியும் நீடித்தத் தீர்வை உருவாக்க முடியாது என்பது இந்த சந்திப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியன்று கொழும்புவில் இந்தக் குழு, அதிபர் ராஜபக்ச, அவருடைய செயலர் லலித் வீரதுங்கா, துணைச் செயலர் வருண சிறீதனபாலா, ஆலோசகர் சுனிமால் ஃபெர்னா‌ண்டோ ஆகியோரைச் சந்தித்து பேசியது. இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இந்திய அரசு என்ன கருதுகிறது என்பது பற்றியும், தனது அரசின் நடவடிக்கைகள் மீதான பன்னாட்டு விமர்சனங்களுமே தனக்குக் கவலைத் தருவதாக ராஜபக்ச கூறினார்.

தமிழர் இனப் பிரச்சனைக்கு இலங்கைக்குள்ளிருந்தான் தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதனை இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுக் கருத்துகளைக் கொண்டு முறைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவசகாயம் கூறிய கருத்தை ராஜபக்ச வெகுவாக ஆமோதித்தார். தமிழகக் குழுவுடன் நடத்திய இரண்டு சந்திப்பிற்குப் பிறகு, பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறினார்: “வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் நியாயமான குறைகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய பூமி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையை ரொம்பவும் நீட்டிக்காமல் குறைத்துக் கூறுகிறேன். அதன் பிறகு தமிழகக் குழுவுடன் ராஜபக்ச அரசில் அமைச்சர்களாக இருந்துவர்களும், அதிகாரிகளும், சென்னையிலும் கொழும்புவிலும் கூடி, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல முறை விவாதித்தனர். இந்தச் சந்திப்புகளில் இலங்கையின் அரசமைப்பு விவகாரங்கள் மற்றும் தேச ஒற்றுமை அமைச்சர் டிஈடபுள்யூ குணசேகரா, அரசு மொழி ஆணையத்தின் தலைவர் ராஜா கல்லூரே ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தமிழகக் குழு மீண்டும் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசியது. தீர்வுக்காண திட்டம் வகுக்கப்பட்டது.

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசும், தமிழகக் குழுவும் பேசி வருவதை கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் எப்படியோ மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டது. தேவசகாயத்தை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் ஏ.மாணிக்கம் கேட்டார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவுமில்லை, சந்திக்கவுமில்லை. ஆனால், “அங்கீகாரம் இல்லாத பேர்வழிகளுடன் எதற்காக பேசுகின்றனர் என்று இலங்கை அதிபர் குழுவை இந்தியத் தூதரகம் ‘அதட்டியதாக’ செய்திகள் வந்தது.

இலங்கை இந்தியத் தூதரகத்திடமிருந்து சென்ற செய்தியை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் (மணி சங்கர் ஐயர்) சோனியாவின் காதில் போடுகிறார். அதுமட்டுமன்றி, தமிழர் பிரச்சனைக்கு பஞ்சாயத்து ராஜ் மூலம் தீ்ர்வு காணும் திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் (கிராமத்திற்கு அதிகாரம் அளிப்போம் என்று ராஜபக்ச பேசியதன் பின்னணி புரிகிறதா?) மணி கூறுகிறார்.

இதையெல்லாம் சற்றும் அறியாத தேவசகாயம், தன்னோடு ஒரு காலத்தில் பணியாற்றியவரும், அப்போது (இப்போதும்தான்) பிரதமரின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ.நாயருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக எழுதியனுப்பிய அறிக்கையில், “இலங்கை இனச் சிக்கலிற்கு இராணுவத் தீர்வு என்று ஏதுமில்லை.

இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு, அங்குள்ள சிறுபான்மை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரின் குறைகளையும் தீர்க்கக்கூடிய அரசியல், அரசமைப்பு ரீதியான தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தததைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட ஒரு தீர்வை உருவாக்கும் முயற்சியில் தாங்கள் உருவாக்கியுள்ளத் திட்டத்தை விளக்கினார். ஆனால் அமைதித் தீர்வு காண்பதற்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் இந்திய அரசு அளிப்பது ஏன் என்றும் தேவசகாயம் வினாக்களை எழுப்பியிருந்தார். தமிழகக் குழு முன்னெடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக தமிழகக் குழு உருவாக்கிய நிலையில்தான், இந்திய தனது பாதையை மாற்றிக்கொண்டது. அரசியல் தீர்வு காண வேண்டிய அவசியத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தாமல், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் போருக்கு சமிக்ஞை காட்டியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் தலைகளை சாய்த்திட வேண்டும் என்கிற தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள இலங்கை இராணுவத்திற்கு எல்லா உதவிகளையும் அளிக்க இந்திய மத்திய அரசு உறுதியளித்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசத்தின் நலனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சோனியாவின் விருப்பத்தை நிறைவேற்ற, அன்றைக்கு பிரதமரின் அலுவலகத்தை கட்டுக்குள் வைத்திருந்த தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் (தற்போது தேச பாதுகாப்பு ஆலோசகர்) சி‌வ்சங்கர் மேனன் ஆகியோர் கொண்டக் குழு, இலங்கையில் தமிழினத்தை அழித்த அந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு உதவியது. அதுவே இன்று சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகி, இலங்கை அரசை மீள முடியாத புதைச் சேற்றில் தள்ளியுள்ளது. இலங்கையில் நடந்த இன அழித்தலிற்கு உதவியதால்தான், சானல் 4 ஒளிபரப்பிய ஆவணப் படத்தைக் கண்டு உலகே கோவத்தால் கொதித்துக் கொண்டிருக்க, இந்திய அரசு மட்டும் செவிட்டுத்தனமான மெளனம் காத்து வருகிறது.

தமிழின இன அழித்தலிற்காகவும், போர்க் குற்றத்திற்காகவும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சவும், அவருடைய கூட்டாளிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அங்கு நடந்து அரங்கேறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தில் தாங்கள் ஆற்றிய பங்கில் இருந்து புது டெல்லி தப்ப முடியாது. அதற்கான மணியோசையே சானல் 4 ஒளிபரப்பு” என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார் (தி ஸ்டேட்ஸ்மென், ஜூலை 12, 2011).

இலங்கை இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் ஒரு திட்டத்தை, ராஜபக்சவுடன் பேசி தமிழகக் குழு நேர்த்தியுடனும், நேர்மையுடனும் உருவாக்கியது. அதனை டி.கே.ஏ.நாயரிடமும் அனுப்பியது. ஆனால், இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி பேச்சின் மூலம் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீடித்த, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலை என்று நாடாளுமன்றத்திலேயே கூறி தமிழர்களையும், இதர மக்களையும் ஏமாற்றி வந்த அரசு, இரகசியமாக தமிழின அழிப்பிற்கு, சோனியாவின் பழிவாங்கும் செயலுக்கு முற்றிலுமாகத் துணைபோய் உள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

தமிழின அழிப்புப் போருக்கு வித்திட்டு, உதவி, ஆலோசனை வழங்கி, ஆயுதம் கொடுத்து, ராடார் வழங்கி காட்டிக்கொடுத்தது இந்திய மத்திய அரசு என்பது தெளிவாகிவிட்டது. இப்போது புரிகிறதா, போர் முடிந்தவுடன் இந்தியாவின் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மகிந்த ராஜபக்ச, “நான் இந்தியாவின் போரை நடத்தினேன்” என்று கூறியது ஏன் என்று?

சோனியாவின் பழிவாங்கலும், அதற்கு நாயர்களும், மேனன்களும், நம்பியார்களும் அளித்த உதவியும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு நாள் வெளிவரும். அன்று ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஏன், யாரால் பயங்கரவாதம் என்று முத்திரையிடப்பட்டது என்கிற உண்மையும் வெளிவரும்.

மூலம்: இணையத் தமிழ் - ஆடி 29, 2011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.