Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீழ்வேனென்று நினைத்தாயோ?

Featured Replies

வீழ்வேனென்று நினைத்தாயோ?

உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?

இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!

இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது. அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.

கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும். முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர். பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.

புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது. இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது. நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள்.

கடல் உப்பு நீரிலும், காயல் நன்னீரிலும் வாழ்ந்து பழகிய நத்தைகள், அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதிகமாக வும் காணப்படுகின்றன. ஆற்று நீரால் கொண்டுவரப்பட்ட வண்டல் மண் படிவு களைச் சுமந்து நிற்பவை காயல்கள். மாங்குரோஸ் என்னும் அலையாத்திக் காடுகள் வளர்வதற்குக் காயல்கள்தான் அடிப்படை.

நந்திக் கடலை இயற்கை வரைந்துவைத்த ஓவியம் என்பார்கள் ஈழத்துக் கவிஞர்கள். வானத்து நீலமும் கடல் நீலமும் சங்கமித்துக்கொள்ளும் புள்ளியில், பூமித் தாய் வளர்த்துவைத்துள்ள அரிய தாவர இனங்கள், உலகின் அபூர்வங்களில் ஒன்று. 8 கிலோ மீட்டர் நீளம், சில இடங்களில் 1 கிலோ மீட்டர் அகலம்கொண்டது நந்திக் கடல். சிறு குழந்தை ஒன்று, பேரலையைத் தன் சிறு கையால் தொட்டுப் பார்க்க முயற்சிப் பதுபோல நந்திக் கடல், பெருங்கடலைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறது. இடையில் ஒரு நிலப் பகுதி இதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலப் பகுதியில்தான் முள்ளி வாய்க்கால் அமைந்து உள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் நந்திக் கடலுக்கும் இடைப்பட்ட பரப்பு, பனை மரக் கூட்டத்தால் பந்தல் போடப்பட்டது. இந்த நிலப் பரப்பு 2 கிலோ மீட்டர் அகலம் இருக்கும். பனை ஓலையால் வேயப்பட்ட சிறு குடில்களே இங்கு அதிகம். பனைத் தொழிலையும் மீன்பிடித் தொழிலையும் தவிர, வேறு எதையும் அறிந்திராத மக்கள் இவர்கள். அயலார் யாருமே எதற்காகவும், வந்து போகாத பூமி என்பது இதன் சிறப்பு.

வலையர் மடம், கரையான் முள்ளி வாய்க் கால், வெள்ளை முள்ளி வாய்க்கால் ஆகிய கடற்கரைக் கிராமங்கள் முள்ளி வாய்க்காலை ஒட்டி அமைந்தவை.

ஈழ மண்ணில் வன்னி, முல்லைத் தீவுப் பிரதேசங்கள் தனித்துவம் மிக்கவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களைக்கொண்டு, இவை மக்களின் வாழ்க்கைக்கான முழுத் தன்னிறைவையும் வழங்கியவை. ஆதி காலம் தொட்டே அந்தக் கிராமங்கள் உணவுக்காக அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருந்தது இல்லை. பசியால் பிச்சை எடுப்பதைப் பார்ப்பதுகூட அங்கு அரிது. அந்த அளவுக்குப் பசி அறியாத மண் அது. இன்று எல்லாம் பழங்கதை. எதுவும் மிச்சம் இல்லை. அத்தனையும் அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம்.

போர் உச்சகட்டம் அடைந்தபோது, மக்கள் கிளிநொச்சியில் இருந்து ராணுவத்தால் விரட்டப்பட்டார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் களைத்துப்போய், முள்ளி வாய்க்கால் வந்து விழுந்தார்கள். இடப் பெயர்வுக் காலங்களில் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு எல்லை உண்டா?

வீடுகள் முழுவதும் நெல் மூட்டைகள் அடுக்கிக்கிடக்க, அவன் குடும்பமே பதுங்கிப் பதுங்கி ஒருவேளை உணவுக்காகக் கையேந்தி நின்றது. அவன் வீட்டைச் சுற்றி தோட்டத்தில் பழுத்துக் கனிந்த, மா, பலா, கொய்யா, வாழை போன்றவற்றை, அணில் கூட்டமும் பறவைக் கூட்டமும் கொத்தியதில் சிந்தியவை சிதறிக்கிடக்க, அவன் வீட்டுப் பிள்ளைகள் தின்பதற்கு எதுவுமற்று ஏங்கிக்கிடந்தார்கள். கடந்த ஓர் ஆண்டில் அவர்கள் வாழ்ந்தது மனித வாழ்க்கை அல்ல.

பல மாதங்கள் பசியால் துடித்தவர்கள், கடைசியில் உயிரையும் துடிதுடித்து இழந்ததுதான் மிச்சம். எந்தக் கறையும் படியாத முள்ளி வாய்க்கால் மண்ணில், மானுடத்தின் ரத்தக் கறை படிந்துவிட்டது. அன்னை மடியில் சுமக்கவைத்தே, அவள் பெற்ற பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இலங்கையின் இன வெறி அரசு, குண்டுகள் போட்டுத் துடிக்கத் துடிக்கக் கொன்று முடித்தது. இவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல. தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா செய்ததும் பெரும் குற்றம்.

'முள்ளி வாய்க்கால் வந்து சேருங்கள், அனைவரையும் காப்பாற்றுகிறோம்’ என்று வாக்குறுதி தந்தன வல்லரசுகள். கடைசி நேரத்தில், பிறருக்குத் தெரியாமல் ஈரத் துணியைப் போட்டு, கழுத்தை அறுத்து முடித்துவிட்டது இலங்கை அரசு. அதற்கு திரை கட்டிப் பாதுகாப்பைத் தந்தவைதான் இந்த வல்லரசுகள். வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எந்தப் பாதகம்தான், அந்த மண்ணில் நடக்கவில்லை? இன்று எல்லாம் முடிந்த நிலை.

உலக வரலாற்றில் மானுடத்தின் ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய நிலப் பகுதி கள் எத்தனையோ உண்டு. ஆனாலும், முள்ளி வாய்க்காலில் நடைபெற்றதைப்போல உலகில் வேறு எங்கும் கொடுமைகள் நடந்து இருக்குமா? பூமி பிளந்து பூகம்பம் வராதா? கடல் கோபம்கொண்டு, இந்தக் கயவர்களுக்குத் தண்டனை தராதா என்ற அளவுக்கு அங்கு கொடுமைகள் நடந்தன.

வரலாற்றுக் காலம் தொட்டு நெஞ்சில் வளர்த்துவைத்திருந்த பகைத் தீயைப் பயன்படுத்தி, அனைத்தையும் எரித்து முடித்துவிட்டது இனப் பகை. எரித்து முடித்ததோடு எல்லாமும் முடிந்துவிட்டது என்று, முன்னரே கணக்கும் போட்டுவைத்து இருந்தனர்.

கொலை செய்து முடிப்பதற்குத் தேவையான எச்சரிக்கை வளையங்கள் முதலில் அமைக்கப்பட்டன. பின்னர், மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டன. இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்கள்கூட நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. அனைத்தும் ரகசியமாகவே நடந்தன. செய்யும் கொடுமைகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையோடு சாட்சிகள் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

கடல் அன்னையைவிட, பூமித் தாயைவிட சாட்சி வேறு உண்டா? யாருக்குமே தெரியாமல் நந்திக் கடல் கொந்தளித்து அலை எழுப்பியது. முள்ளி வாய்க்கால் மண்ணில் புதை குழிகள் அதிர்ந்து வெடித்தன.

ரத்தச் சிவப்பேறிய ஆயிரமாயிரம் கண்களுடன் உலகத்தை இன்று அண்ணாந்து பார்க்கிறது முள்ளி வாய்க்கால். அதன் கோபக் கனல் அகிலத்தையே திடுக்கிடவைத்துவிட்டது. மாபெரும் மரணத்துக்குப் பின் இது பெற்றெடுத்த ஜனனம், உண்மைகளாய் உயிர் பெற்று விண்ணில் எழுந்துவிட்டன. இருள் கவிந்த வான் பரப்பெங்கும் இந்த உண்மைகள், நட்சத்திரங்கள்போல சுடர்விட்டு நிற்கின்றன. வஞ்சிக்கப்பட்ட தனக்கான நீதியைக் கேட்க, சிறகுகளை விரித்துத் தேசங்கள் தோறும் பறந்து செல்கின்றன. இணையதளங்கள் அனைத்திலும் தலை காட்டி, நியாயம் கேட்டு நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நீதி பேசும் அனைவரும் இன்று தலை குனிந்து நிற்கிறார்கள்.

மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதி இணையதளங்களில் மட்டுமே வசித்துவரும் காலம் இது. கணினிப் பெட்டிகளில் தலைகாட்டி நிற்கும் இந்த வஞ்சிக்கப்பட்ட மானுடம் எது என்று பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் மக்கள் கூட்டம் திரண்டு, அங்கு நுழைந்துவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், அச்சு ஊடகங்கள் என்று எதையும் முள்ளி வாய்க்கால் மனிதர் கள் விட்டுவைக்கவில்லை. தன் வீடே தன் உலகம் என்று தனித் தனி அறைகளில் வாழும் நிம்மதி மனிதர்களால், இனிமேல் நிம்மதியோடு தூங்க முடியாது. எது வரை தெரியுமா? முள்ளி வாய்க்கால் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை!

ஆனால், இலங்கையின் இன வெறி அரசு, ஒன்றுமே நடக்கவில்லை என்று மாய வேடம் அணிந்து நிற்கிறது. அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம் என்று வசனம் வேறு பேசுகிறது.

எதை மறைப்பது? யாரை மன்னிப்பது?

- விதைப்போம்...

ஆக்கம்: சி.மகேந்திரன்

மூலம்: ஆனந்த விகடன் - ஆவணி 17, 2011

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு, இது எம்மில் பலருக்கு ஆனந்த விகடன்ன கொம்பு முளைச்சவன் சொன்னதான் விளங்கும், அப்படியும் விளங்கியும் விளங்காமல் நடிக்கிறவர் பலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.