Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள்

Featured Replies

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள்

இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள்

-இதயச்சந்திரன்

அவுஸ்திரேலிய சமஷ்டி காவல் (AFP) துறையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் வெளி விவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொஹன்ன மற்றும் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்கவிற்கு எதிராக போர்க்குற் றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இவ் விசாரணையின் முக்கிய சாட்சியாக இறுதிப் போர்க் களத்தில் நின்ற மீனா கிருஷ்ணமூர்த்தி என்ற பெண் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தான் சந்தித்த அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் (Commomwealth Heads of Government Meeting) இவ் விவகாரம் கிளப்பப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுயாதீன போர்க்குற்ற விசாரணை யொன்றிற்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவிக்காவிட்டால் பொதுநலவாய நாடுகளின் உறுப்புரிமையை இலங்கை இழக்கலாம் என்கிற வகையில் கனடாவும், அவுஸ்திரேலியாவும் முன் நகர்வுகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த படைகளின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவும், இறுதிப் போரில் பொது மக்கள் மீது கடற்கலங்களிலிருந்து எறிகணை வீச்சு நடாத்திய கடற்படையின் தளபதி அட்மிரல் திஸ்ஸ சமரசிங்காவும், இரட்டைக் குடியுரிமை பெற்ற கலாநிதி பாலித பாலித ஹொன்னன்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதே முக்கிய அம்சமாக இருக்கிறது.

கடந்த ஐ.நா மனித உரிமைப் பேரவை யின் 18ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றினை கனடா தேசம் முன் வைக்கப் போகிறதென்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. எவ்வாறாயினும் இச் சர்வதேசம் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமென நம்பியிருந்த தமிழ் மக்கள் குழப்பமடைந்தனர். புதியதொரு நம்பிக்கை ஒளி அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்திலிருந்து தெரிவதாக மறுபடியும் நம்பிக்கை ஊட்டப்படுகிறது.

உலக உணவு உற்பத்திக்கு மிக அத்தியவசியமாகக் கருதப்படும் உரத்தை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனமான பொற்றாஸ் கார்பரேசன் (Potash Corporation) நிலை கொண்டுள்ள கனடா நாடும் நழுவி விட்டது. சுரங்க கைத்தொழில் மூலம் பெறப்படும் பெருமளவிலான கனிப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்து தனது திறைசேரி திவாலாகாமல் காப்பாற்றிக் கொள்ளும் அவுஸ்திரேலியா என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதே வேளை இலங்கை அரசிற்கு நெருக்கமாகவிருந்த பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்சின் பதவியும் அவரது நண்பரால் பறி போயுள்ளது. இலங்கை அரச அதிபரின் தோளில் கை போட்டு உட்காருமளவிற்கு மிக அந்நியோன்யமாக இருந்த கேர்ணல் முகம்மர்

கடாபியும் கிளர்ச்சிப் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னர் தானும் பயங்கர வாதத்திற்கெதிராகப் போராடப் போகின்றேன் என்று உலக ஒழுங்கில் இணைந்து கொள்ள முயன்றவர் தான் இந்தக் கேர்ணல். ஆனால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களை எலிகள் என்று விளித்தவர், ஜனநாயக மயப்படுத்தல் என்கிற கருத்தியலை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை மட்டும் விரும்பிய மேற்குலகின் இராஜதந்திர அணுகு முறையை கடாபி கவனிக்கவில்லை.

ஆகவே சர்வதேச அரசியல் அரங்கில் நேரடியான ஆதரவினை அளித்தவர்களை இலங்கை அரசு இழந்து வருவதைக் காணலாம். ஆசியாவைப் பொறுத்தவரை அங்குள்ள நாடுகளுக்கிடையிலான பொருண்மிய உறவுச் சமன்பாட்டில் அதிரடியான மாற்றங்களும் நிகழ்கின்றன. 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த உள்ளூர் உற்பத்தியாகக் கொண்ட இலங்கையில் பாதுகாப்புத் துறைக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை நேரடி முதலீடுகளை எந்த நாட்டில் செய்வது என்பது குறித்து சிந்திக்கும் பல்தேசியக் கம்பனிகள் தமக்குச் சாதமாக எடுத்துக் கொள்ளாது.

ஏற்கனவே ஜி.எஸ்.பி.வரிச்சலுகை இழக்கப்பட்டதால் அந்த வாய்ப்புகள் பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளை சென்றடைந்து விட்டது. அதேவேளை அனைத்துலக நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கோஷி மத்தாய் "சீபா' உடன்பாடு குறித்து தெரிவித்த கருத்தினால் முரண் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறைமையுள்ள இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இத்தகைய சர்வதேச நிறுவனமொன்று கருத்துக் கூறுவது பொருத்தமானதல்லவென்று அரச தரப்பிலிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் நாணய நிதியத்தினால் கடந்த ஓகஸ்டில் வழங்கப்படவிருந்த 2.9 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை நோக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து, நிதியத்தின் மதிப்பீட்டாய்வு டிசம்பர் வரை ஒத்திப் போடப்பட்டதே இதற்கான காரணியாகக் கொள்ளப்படுகிறது.

இதேவேளை, 60 வர்த்தகர் குழுவோடு வந்திறங்கிய வியட்நாம் அதிபர் குரோங் ரான் சாங் மரணமடைந்த இராணுவத்தினரின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியதோடு இரு தரப்பு பொருளாதார உறவு குறித்தும் பேசியுள்ளõர். இலங்கைக்கு வந்த சீனக்குழுவோ, படைத்துறை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவி புரியலாம் என்பது குறித்து ஆராய்ந்து சென்றுள்ளது.

இவர்களின் வருகையும் பொருளாதார படைத்துறை ஒப்பந்தங்களும் இந்தியாவையும் மேற்குலகையும் தடுமாறச் செய்யுமென்கிற கற்பனையில் இலங்கை அரசு மூழ்கி உள்ளது போல் தெரிகிறது. சீனப் பங்காளியான மியன்மாரோடு பிராந்தியம் சார்ந்த தந்திரோபாய உறவுகளை இந்தியா புதுப்பித்துக் கொள்வது போன்று, முரண்பட்ட சக்திகளை ஒரே நேர் கோட்டில் நிறுத்திக் கொள்ள முடியுமென்று இலங்கை அரசு நம்புகின்றது.

ஆசியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடான இந்தியா 30 ரில்லியன் கன அடி எரிவாயுவை அரகன் (ARAKAN) பிரதேசத்தில் புதைத்து வைத்திருக்கும் மியன்மாரோடு உறவு கொள்வது ஆச்சரியமானதல்ல.

ஆனால் மன்னாரில் கண்டெடுக்கப்படும் மசகு எண்ணெயோ எரிவாயுவோ பயன்பாட்டிற்கு வர இன்னமும் பத்து வருடங்கள் செல்லலாம் என்பதால் அது குறித்து இந்தியாவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

கனிமவளத்தை கையகப்படுத்தும் போட்டியில் சீனாவும் இந்தியாவும் ஈடுபடுவதால் தன்னிடம் எரிசக்தி வளமும் நிலவளமும் இருக்கிறது என்று கூற இலங்கை முற்படுவது போலிருக்கிறது. இந்த இரண்டு விடயமும் வட கிழக்கில் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

ஆனால் புயல், வெள்ளம், மற்றும் கட்டடக் காடுகளாகும் கிராமங்களால் உணவு உற்பத்தி குறைவடைந்து அவற்றின் விலை உலகச் சந்தையில் அதிகரிக்கிறது. இதனால் பண வீக்கமும் அதிகரிப்பதற்கு இது வொரு முக்கிய காரணியாக இருக்கிறது.

தற்போது இந்தியாவின் பணவீக்கமானது 9.72 விழுக்காட்டினை எட்டியுள்ளது. மார்ச் 2010 இலிருந்து இவ்வருட செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் 12 தடவைகள் இந்திய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.

ஆகவே உலகப் பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நிலைவரங்கள் இறைமைக் கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடப்பதால் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைந்து செல்கிறது. ஆதலால் நாடளாவிய உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்வதற்கு தனது இறைமைச் சொத்து நிதியத்திலிருந்து (Sovereign Wealth Fund) பெருமளவிலான நிதியை வங்கிகளுக்கு வழங்க சீனா முன் வருகிறது. அவ்வாறானதொரு நகர்வினை இந்தியாவும் மேற்கொள்ள முனைகிறது.

இந்நிலையில் தமது தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்தவே இவ் விரு நாடுகளும் விரும்புகின்றன.

பிரிக்ஸ் (BRICS) என்கிற ஐவர் கூட்டணியில் இருக்கும் சீனாவும் இந்தியாவும் மேற்குலகிற்கான தமது ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுமாயின் ஆசியச் சந்தைக்கான போட்டியில் குதிக்காமல் அவற்றை பங்கு போடும் இணக்கப்பாட்டு அரசியலை விரும்பி ஏற்றுக் கொள்ளலாம். ஆகவே இவ்விரு நாடுகளுக்கிடையிலான பிராந்திய கடலாதிக்க போட்டியை தமது இருப்பிற்கான மூலதனமாக இதுவரை கொண்டுள்ள தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள், மேற்குலகம் என்கிற மூன்றாவது சக்தியின் அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது

(மின்னஞ்சல் மூலம் )

  • தொடங்கியவர்

வியட்நாம் நீயுமா? - இதயச்சந்திரன்

யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமாயின், அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்துவோமென கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அச்சுறுத்துகின்றார்.

இப்படிச் சொன்னால் மகிந்தர் மனம் குளிர்ந்து போவாரென்பது அவரது கணிப்பு. எரிக் சொல்ஹெமோடு பேச அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவும், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு உரையாட பேராசான் ஜீ.எல்.பீரிசும் பயணம் செய்த விடயம் கருணாவிற்கு தெரியவில்லை.

மகிந்தரை போர்க் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க கருணாவும், கே.பியும் பலவிதமான அறிக்கைகளையும், நேர்காணல்களையும் வழங்குகின்றார்கள். விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இப்போது போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் குறித்து அலட்டிக் கொள்ளும் பல நாடுகள், இலங்கை அரசிற்கு உதவி புரிந்தது சிதம்பர இரகசியமல்ல.

காட்டிக் கொடுக்கும் படலத்தை தொடரும் கருணா, இனி என்ன புதிதாகச் செய்யப்போகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களையும் தெரிந்தவன் நானென்று கூறுவதால், இவருக்கு கலாநிதிப் பட்டமா வழங்கப் போகிறது இலங்கைப் பல்கலைக்கழகம்?

ஒடுக்கு முறைக்கு எதிராக இப் பூமிப் பந்தில் நடைபெற்ற பல போராட்டங்களில் இத்தகைய காட்டிக் கொடுப்புக்களும், எதிரியோடு கைகுலுக்குவது போன்ற அசிங்கங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

கே.பியும், கருணாவும், முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கி சிங்களத்தோடு சங்கமமாகிய சருகுகளும், நல்ல உதாரணங்கள்.

புலம் பெயர் தமிழ் மக்கள், விடுதலைப் பயணத்தில் இணைவதைத் தடுப்பேன் என்கிறார் குமரன் பத்மநாதன் (கே.பி).

மகிந்தரை அச்சுறுத்தும் சர்வதேச நாடுகளின் நிஜமுகத்தை அம்பலமாக்குவேன் என்கிறார் முன்னாள் புலிப் போராளி கருணா.

மகிந்த கம்பனி திவாலானால், தமது இருப்பிற்கு ஆபத்து வந்துவிடுமென்பதே இந்த இரு பிரகிருதிகளின் அச்சம். ‘தமிழ்மிறர்’ என்ற இணையத் தளத்திற்கு கே.பி வழங்கிய நேர்காணலில் இந்த அச்சம் தெளிவாகத் தெரிந்தது.

போராளிகளைக் காப்பாற்றப் போகிறேனென அறிக்கைமேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இந்த சுதந்திரமாக

உலவும் சூழ்நிலைக் கைதி, அலரிமாளிகையில் 1800 போராளிகளை விடுதலை செய்வதாக பொய்யுரைத்த மகிந்தரின் ஏமாற்று வித்தை குறித்து இன்னமும் வாய்திறக்கவில்லை.

கூட்டமைப்பு போட்டியிடாததால், இலவசமாக கிடைத்த முதலமைச்சர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையானும், கருணா, கே.பி போன்று அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை கூற ஆரம்பித்துள்ளார். இலட்சியத்திற்கும் இலட்சத்திற்கும் வேறுபாடு புரியாத தமிழ்த் தலைவர்களைத் தான் சிங்கள தேசமும் விரும்புகிறது.

அதற்கேற்றவாறு பொருத்தமான இடத்திலேயே பிள்ளையானையும் அரசு அமர்த்தியுள்ளது. ஏனெனில் விடுதலை உணர்வற்ற, ஒடுக்கு முறையாளனோடு சமரசம் செய்யக்கூடிய, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் சிறு குழுக்களையே சிங்களம் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் இந்த அடிபணிவு வாதிகளால் போர்க்குற்ற அழுத்தங்களிலிருந்து தன்னைக் காப்பாற்ற முடியாதென்கிற விடயத்தையும் மகிந்த சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள்.

புலம் பெயர் மக்களால் முன்னெடுக்கப்படும் பரப்புரைப் போராட்டத்திற்கு எதிராக சிறு அசைவையும் இவர்களால் ஏற்படுத்த முடியாது. ஆகவேதான் விடுதலைப் புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்குகிறார்கள் என்கிற வகையில் இவர்களூடாக எதிர்ப்பரப்புரைகளில் கவனம் செலுத்துகிறது சிங்களம்.

அதே வேளை தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி ஆயுதப் போராட்டத்தை து£ண்டுகிறது என்று சிலர் உளற ஆரம்பித்துள்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டுமென்கிற போராட்டங்கள், சிங்கள பேரினவாதத்தை தண்டித்து விடுமோ என்கிற பதட்டமே, இத்தகைய ஒவ்வாத மதிப்பீடுகளின் ஆதாரமாகவிருக்கிறது. நிலம் பறிபோனாலும், மக்களின் இயல்பு வாழ்வு அபகரிக்கப்பட்டாலும், ஒடுக்குமுறையாளன் தண்டிக்கப்படக்கூடாதென்கிற விடயத்தில், இத்தகைய அடிபணிவு சக்திகளின் நலன்களும் அடங்கி இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

இவற்றைவிட மிக அபத்தமான விடயமொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. மூன்றுநாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த வியட்நாம் குடியரசின் அதிபர் ரூரோங் ரான் சாங் அவர்கள், போரில் கொல்லப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய விவகாரம், போராடும் இனங்களுக்கு நெருடலான விடயமாக இருக்கிறது.

அதாவது அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள், தமிழ்த்தேசிய இன அழிப்பில் ஈடுபட்டு மாண்டுபோன படையினருக்கு அஞ்சலி செலுத்தி, உலகின் போராட்ட வரலாற்றில் பெரும் கறையினை ஏற்படுத்தியுள்ளார்களெனக் கூறுவதில் தவறேதுமில்லை.

தென் சீனக் கடல் கனிம வள ஆதிக்கத்தில் சீனாவோடு வியட்நாம் முரண்பட்டாலும், இனவழிப்பில் ஈடுபடும் சிங்களத்திற்கு ஆதரவு வழங்குவதில் இவர்கள் ஒன்றாகப் பயணிப்பதை என்னவென்று சொல்வது.

ஆகவே போராளியாக இருந்து பின் போராட்டத்திற்கு எதிராகத் திரும்பிய கருணா, பிள்ளையான், கே.பி வரிசையில், ஒரு காலத்தில் ஓடுக்கப்பட்ட உலக மக்களின் தோழமை நாடுகளாகவிருந்த செஞ்சீனாவும், கம்யூனிஸ்ட் வியட்நாமும் அணிசேர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இந்தச் சிவப்புச்சாயம் பூசிய கம்யூனிஸ்ட் நாடுகள், ஒடுக்கப்படும் மக்களின் பார்வையில் நவீன ஏகாதிபத்தியங்களாகவே காட்சியளிக்கும்.

கடந்த வாரம், தோழர் மாவோவினால் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை இராணுவத்தின் பெருந்தலையான மேஜர் ஜெனரல் குயன் லிஹுவா அவர்கள் இலங்கை வந்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்து களைப்படைந்திருக்கும் மகிந்தரின் சிங்கள இராணுவத்திற்கு உடற்பயிற்சி வழங்கப் போவதாக இப் பெருந்தகை கூறியது. அது மட்டுமல்லாது தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவக்கல்லூரியின் உட்கட்டுமாண விரிவாக்கத்திற்கு உதவுவதோடு, படையினருக்கு உயர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப் போவதாகவும் இக்குழு உறுதியளித்துள்ளது.

ஆகவே இந்தியாவிற்கு எதிரான போட்டி நகர்வதாக இது இருந்தாலும், இதனால் மேலும் நசிபடப்போவது ஈழத்தமிழினமே.

நன்றி: ஈழமுரசு / புலத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.