Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்புத்துறைக்கு 229.9 மில்லியன், புனருத்தாரண வேலைகளுக்கு 4.3 மில்லியன், மீள்குடியேற்றத்திற்கு 0.4 பில்லியன்! முழு நாட்டையும் இராணுவமயப்படுத்த உருவாக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு நிராகரிக்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Suresh_Premachacdren_150TNA.jpg

முழு நாட்டையும் இராணுவ மயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எந்தவித நன்மையும் இல்லை எனக் கூறி, வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருக்கின்றது.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அந்த உரையின் முழு விபரம் வருமாறு:

கௌரவ சபாநாயகர் அவர்களே!

யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொது மக்களும், சம்பளம் உயரும் என அரச ஊழியர்களும், முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும், வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஏன்? காரணம் அரசாங்கம் இன்னும் யுத்தமாயையிலிருந்து விடுபடவில்லை.

பாதுகாப்புக்கு 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2012 ஆம் ஆண்டுக்காக 14.7 பில்லியன் ரூபாய்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கபட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிலும் அதிகமானதாகும்.

பாதுகாப்புக்கு கடந்த ஆண்டினை விட 14.7 பில்லியன் ரூபாய்கள் அதிகமாக ஒதுக்கிய அரசாங்கம் கல்விக்கும் உயர்கல்விக்கும் முறையே 2.5 பில்லியன் மற்றும் 3.4 பில்லியன் ரூபாய்களையே அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதுதான் அரசாங்கம் இந்நாட்டின் கல்வியை பாதுகாக்கும் இலட்சணம். இதுதான் இலங்கையை அறிவு மையம் ஆக்குவதற்கான உபாயம்.

அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டால் நாட்டின் அபிவிருத்திக்காக அவர்கள் சம்பள உயர்வை தியாகம் செய்ய வேண்டும் என உபதோசிக்கப்படுகிறது. 30 வருடங்களாக அவர்கள் சம்பள உயர்வினை தியாகம் செய்து இன்று ஆசியாவிலேயே குறைவான சம்பளம் பெறுபவர்கள் என்னும் நிலையை அடைந்துள்ளார்கள்.

பொதுத்துறையின் கீழ் மட்ட ஊழியர்களுக்கும் மேல் மட்ட ஊழியர்களுக்கும் இடையேயான சம்பள விகிதாசாரம் இந்தியாவில் 1:12 ஆகவும் சிங்கப்பூரில் 1:13 ஆகவும் இருக்கையில் இலங்கையில் இவ்விகிதாசாரம் 1:4 ஆக உள்ளது. இவ்வாறு இருக்கும் போது மூளைசாலிகளின் வெளியேற்றம் தவிர்க்க முடியாததாகும். கல்வி, உயர்கல்விக்கு மட்டுமல்ல தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற மிக முக்கியமான அமைச்சுக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 3.7 பில்லியனுக்குப் பதிலாக இவ்வாண்டு 3.1 பில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு தீவாக இருந்தாலும் கடல் உணவுகள் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இருந்தும் கடற்றொழில் நீரக வளமூலங்கள் அமைச்சுக்கு 2011 இல் 4.4 பில்லியன் ஒதுக்கப்பட்ட போதும் 2012 ஆம் ஆண்டுக்காக வெறும் 3 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

பால் மா இறக்குமதிக்காக பெருந்தொகை பணம் செலவிடும் நிலையில் கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சுக்கு 2.6 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கபட்டுள்ளன. இவையெல்லாம் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் அசிரத்தை காட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இறக்குமதிகளைக் குறைப்பது எவ்வாறு?

இந்த வரவு செலவு திட்டத்திலும் யுத்தத்தினால் 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு துரித மீள் கட்டுமானத்திற்கென விசேட அமைச்சு எதுவும் உருவாக்கப்படவில்லை. விவசாயம். மீன்பிடி. கால்நடை போன்ற துறைகள் வடக்கு கிழக்கில் மிகமுக்கியமான துறைகளாகும். யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுவிட்ட போதிலும் வடக்கு கிழக்கில் இம் மூன்று துறைகளும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை.

வடக்கு, கிழக்கில் இம்மூன்று துறைகளும் செழிப்படையாத வரை உணவு பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், பால் மா போன்றவற்றின் இறக்குமதிகளையும் குறைக்க முடியாது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையின் போது அது ஒரு தமிழ் இன ஒழிப்பிற்கான வரவு செலவு திட்டம் என்பதை இச்சபைக்கு நான் தெரியப்படுத்தி இருந்தேன். இந்த வரவு செலவுத்திட்டம் இன்னும் ஒரு படி மேலாகச் சென்று, தமிழ் இனச்சங்காரத்தை விரைந்து முடிப்பதற்கான ஒர் சூழலை உருவாக்கியுள்ளமையே என்னால் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பாக ஒரேயொரு காரணத்தை தான் என்னால் காணக்கூடியதாக உள்ளது. வடக்கு-கிழக்கு மகாணங்களில் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தலை ஊக்குவிப்பது, விரைவுபடுத்துவது என்பதைத் தவிர வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

1981 ஆம் ஆண்டு வரை பலாலி இராணுவ முகாம், காரைநகர் கடற்படை முகாம். தள்ளாடி இராணுவ முகாம், வவுனியா ஜோசப் முகாம், திருக்கோணமலை கடற்படைதளம், திருக்கோணமலை விமானதளம், அம்பாறை கொண்டை வெட்டுவான் முகாம்கள் மாத்திரமே இருந்தன. யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு எங்கும் இம்முகாம்கள் பல்கிப் பெருகி கிராமத்துக்கு கிராமம் இராணுவ முகாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. யுத்தம் முடிந்து 2 � ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் அதே அவலம் தொடர்வதும், அதனை நிரந்தரமாக்க இலங்கை அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதும் தான் வருத்தத்திற்குரியது. அண்மையில் கிளிநொச்சியில் 90 மில்லியன் செலவில் நிரந்தர கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலமையகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் அனைத்தும் முழுமையான இராணுவ ஆக்கிரமிற்குள்ளாக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு கிராம மட்டங்களில் இராணுவ நிலைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் நிலை கொண்டுள்ளது. வட மாகாணத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் படையினர் நிலைகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்களும், வீடுகளும் இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல ஆயிர்ககணக்கான அரச காணிகளும் இவர்களது முகாங்களுக்காகவும், நிரந்தர இராணுவ குடியிருப்புக்களுக்காகவும், தன்னிச்சையாகவும், சட்டவிரோதமாகவும், பலாத்காரமாகவும் கபளீகாரம் செய்யப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 60 இடங்கள் படையினரால் தெரிவு செய்யப்பட்டு முப்படையினரின் தேவைக்காக தமக்கொதுக்கும்படி பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. இவை ஏறத்தாழ பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளன. இதனைப் போன்றே ஏனைய மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இவர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளனர். வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான பூமியை இராணுவத்தினர் விவசாயம் செய்ய பயன்படுத்துகின்றனர். அந்த மண்ணுக்குரித்தான மக்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அகதிமுகாம்களிலும், நண்பர்களுடனும் வாழுகின்றனர்.

'விடுதலைப்புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்கான யுத்தம்' என்று அரசால் கூறப்பட்ட யுத்தம் இன்று தமிழ் மக்களை அடிமைகளாக்கி இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளிய யுத்தமாக முடிவடைந்துள்ளது. புலிகளுக்கெதிரான யுத்தம் என்று கூறப்பட்டாலும் கூட, இது அரசாங்கம் திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கான யுத்தமாகவே நடாத்தியது. அவ் யுத்தமானது, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்து விடவில்லை. தமிழருக்கு எதிரான யுத்தத்தை பல கோணங்களில் அரசு மூர்க்கதனமாக முன்னெடுத்து வருவதையும் நாம் பார்க்க கூடியதாக உள்ளது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவை படைத்தரப்பினரால் அபகரிக்கப்படுகின்றன. புனித பிரதேசம் என்ற பெயரில் பௌத்த பிக்குகளால் அபகரிக்கப்படுகின்றன. சில இடங்களில் அமைச்சர்களாலும் அபகரிக்கப்படுகின்றன.

மன்னார் முள்ளிக்குளம் என்ற கிராமம், இது மிகப் பழமையான ஓர் கிராமம். இந்த கிhமத்தில் உள்ள மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு மிகப்பெரிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் இருப்பதற்கு இடமில்லாமல் இன்னும் அகதி வாழ்க்கையையே வாழ்கின்றனர். தலை மன்னாரில் ஆண்டாணடடு காலம் வாழ்ந்து வந்த 600 குடும்பங்கள் மீள்குடியேறுவதை பொலீசார் தடுத்துள்ளனர்.

வலிகாமம் வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவை முற்றுமுழுதாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் பரவிப்பாஞ்சான் என்ற கிராமத்தை இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அங்கு மக்கள் போய் குடியேற முடியவில்லை.

மூதூரின் சம்பூரில் 7000 க்கு மேற்பட்ட மக்கள் இன்னும் பல்வேறுபட்ட அகதிமுகாம்களில் உள்ளனர். இவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்ப அரசு அனுமதியளிக்க மறுத்து வருகிறது. வல்வெட்டித்துறை நகரத்தின் மையத்தில் 60 தனியார் வீடுகள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் இருக்கின்றது.

முல்லைத்தீவ மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு (வெள்ளாம் முள்ளிவாய்க்கால்), முள்ளிவாய்க்கால் மேற்கு (கரையாம் முள்ளிவாய்க்கால்), பனையடி, வலைஞர்மடம், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, புதுமாத்தளன், பழைய மாத்தளன் உட்பட்ட கிராமங்கள் மீள்குடியேற்றத்துக்கு மறுக்கபட்ட கிராமங்களாக இருப்பதுடன், இதில் கடற்படை முகாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிகின்றது.

இங்கு வசிக்கக் கூடிய கடற்றொழிலாளர்கள் கோம்பாவில் என்ற கிராமத்துக்கு அண்மையில் உள்ள திம்பிலி என்ற காட்டுப்பகுதியில் குடியேற்றுவதற்காக காடு அழிக்கப்பட்டு, துப்புரவு செய்யப்பட்டுவதாக அறியமுடிகின்றது. கடற்றொழிலாளர்களான இம் மக்களை 8 தொடக்கம் 10 கிலோமீற்றருக்கு அப்பால் குடியேற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமான கடற்றொழிலை இழப்பதற்கான நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனை விட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம், சிவநகர், மந்துவில், மல்லிகைத்தீவு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய பிரதேசங்களும் மீள்குடியேற்றத்திற்கு மறுக்கப்பட்டுள்ள பிரதேசங்களாகும். ஏறத்தாழ 2000 குடும்பங்களைச் சேர்ந்த இம்மக்களும், திம்பிலி என்ற காட்டுப்பகுதிக்கே அனுப்பப்படவுள்ளனர். வளம் வாய்ந்த இக்கிராமங்கள் யாவும் இராணுவ முகாங்களுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க வவுனியாவின் நெடுங்கேணி பிரதேச சபைக்குட்பட்ட கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க் கிராமத்தில் அங்கிருந்த மக்கள் யுத்தகாலத்தில் வெளியேற, அக்குளம் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டு திருத்தப்பட்டு, இன்று கலாபோகவௌ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு வரை இலங்கை வரைபடத்தில் இருந்த கொக்கச்சான்குளம் என்ற தமிழ் கிராமத்தின் பெயர் இப்பொழுது இலங்கை வரை படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதே போன்று அம்பாறை மாவட்டத்தில் அஸ்ரப் நகரில் உள்ள முஸ்லீம் மக்களை வெளியேறும் படி இராணுவம் கோருகின்றது. அங்கு இராணுவ முகாம் அமைப்பதற்கு அந்த இடம் தேவை என்பதால் முஸ்லிம் மக்கள் அங்கிருந்து விரப்பட்டப்படுகின்றனர்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நான் இங்கு குறிப்பிட்டது இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு சில பகுதிகளை மட்டுமே. இதனைப்போன்றே பௌத்த துறவிகள் என்று சொல்லக் கூடிய பௌத்த சிங்கள அதிதீவிரவாத பிக்குகளும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையின் திரியாயில் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏறத்தாழ 3000 ஏக்கர் வயல் நிலத்தை திரியாய் பௌத்த கோவிலுக்கு சொந்தமானதென அங்குள்ள பௌத்த பிக்கு உரிமை கோருகின்றார்.

கிளிநொச்சியில் தனியாருக்கு சொந்தமான காணி பௌத்த கோவிலுக்காக கபளீகாரம் செய்யப்பட்டுள்ளது. மாங்குளத்திலும், முல்லைத்தீவிலும் கூட புதுப்புது நிலங்கள் பௌத்த கோவில்களுக்காக கபளீகாரம் செய்யப்படுகின்றன.

ஒருபக்கம் நில ஆக்கிரமிப்புகள் நடைபெற மறுபுறம் சிங்களக்குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு என்று கிராமம் 1983 அளவில் அங்கிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு ஒரு சில சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 83 களிற்கு பின்னர் ஏற்பட்ட யுத்த நிலைமையை காரணங் காட்டி அந்தக்கிராமம் நிர்வாகத் தேவைகளுக்காக வடமத்திய மாகாணத்தில் இருந்த அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்தார்கள். பின்பு படிப்படியாக அக்கிராமத்தில் சிங்கள மக்கள் குடியேற்றபட்டு இப்பொமுது 9000 சிங்கள மக்களைக் கொண்ட கிராமமாக மாறியுள்ளது.

அந்தக் கிராமம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கு தெரியாமலும், வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுடன் பேசாமலும் இரவோடிரவாக முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனித்தமிழ் மாவட்டமாக இருந்த முல்லைத்தீவு மாவட்டம் ஓர் இரவுக்குள் 9000 சிங்கள மக்களையும் அவர்களுக்கான பிரதேச செயலகத்தையும் கொண்ட மாவட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.

இதேபோன்று யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் இரவோடிரவாக நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் பஸ்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களும் அங்கு அரசுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்தி வாழ்வதுடன். அதற்கான முழு ஒத்துழைப்பையும் அரசாங்கத்தின் பல அமைச்சுக்களும் வழங்கி வருகிறது.

மன்னார் மாவட்டத்தின் மடு ரோட்டில் இலங்கை வங்கி அண்மையில் 50 வீடுகளை கட்டிக் கொடுத்தது. இதில் 45 வீடுகள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், 5 வீடுகள் தமிழ் குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதனைப் போன்றே நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வவுனியா நெடுங்கேணியில் உள்ள கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க்கிராமம் 165 சிங்கள மக்களை குடியேற்றி கலாபோக வௌ என்ற சிங்கள கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

சிங்களமயப்படுத்தல் ஒரு புறம் நடக்க தமிழ் மக்களின் கலாச்சார சின்னங்களை அழித்து சிங்கள பௌத்த கலாசார சின்னங்களை. சிங்கள மக்களே இல்லாத இடத்தில் ஸ்தாபிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக கலாசாரங்களை ஒட்டு மொத்தமாக அழித்ததொழிக்கும் வேலையும் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் மாதகலில் சங்கமித்தை வந்திறங்கிய இடமாக கூறி அங்கு சங்கமித்த போதி விகாரை என்ற ஒரு பௌத்த கோவில் கட்டப்பட்டு அது சிங்கள மக்களின் சுற்றுலாத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் மூன்று வைரவர் கோவில்கள், ஐயனார் கோவில், கிறீஸ்தவ தேவாலயம், நுணசை மகாவித்தியலயம் என்ற பாடசாலை, மாதகல் மேற்கு உப தபாலகம், பாரதி சனசமூக நிலையம், விநாயகர் சனசமூக நிலையம், தோமையர் சனசமூக நிலையம், பண்டத்தரிப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை, பிள்ளையார் கோவில் மடம், மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில், சிவன் கோவில் உட்பட பல பொதுக்கட்டிடங்கள் உள்ளன.

இப்பிரதேசத்தை கையகப்படுத்தி அங்கு கடற்படைத்தளம் ஒன்றை அமைக்க அரசு முனைவதாக எமக்கு கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மிக நீண்டகாலமாக அதிவுயர் பாதுகாப்பு வலயமாக இருந்த இப்பகுதியில் அண்மையில் தான் 325 குடும்பங்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் ஓர் சுமூக வாழ்விற்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். இன்னும் 258 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இவர்களில் மிகப்பெரும்பகுதியினர் கடற்றொழிலாளர்கள். இந்த மாதகல் கிராமத்தை கையகப்படுத்துவதன் மூலம் இந்த மக்கள் மீண்டும் நடுத்தெருவுக்கு கொண்டு செல்லப்படுவது மாத்திமல்லாமல் நான் மேலே கூறிய ஆலயங்கள், பாடசாலை, தபாலகம், சனசமூக நிலையங்கள், பல நோக்கு கூட்டுறவு சங்கம் நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் என எல்லாமே அழித்தொழிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

இதே போன்று யாழ்ப்பாணத்தின் கிளாலியிலும், தமிழ் மக்களுக்கு உரித்தான தென்னங்காணிகள், கடற்படைத்தளத்திற்காக அபகரிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். ஏ-9 பாதையின் கனகராயன்குளம், மாங்குளம், கிளிநொச்சி போன்ற சிங்கள மக்கள் அற்ற பகுதிகளில் இராணுவம் பாரிய பௌத்த கோவில்களை கட்டிவருகின்றது. இவைதவிர வடக்கில் இருக்கும் சகல மாவட்டங்களிலும் அரசமரங்களின் கீழ் இராணுவத்தின் உதவியுடன் புத்தர் பெருமான் குடி கொள்ளத் தொடங்கியுள்ளார்.

திருகோணமலையின் பழம் பெருமை வாய்ந்த கன்னியா வெந்நீறூற்று பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டு இன்று அவரின் கட்டுப்பாட்டில் இருப்பது மாத்திரமல்லாமல்;, இறந்து போன தமிழ் இந்து மக்களின் கிரிகைகளை செய்யப்போகும் தமிழ் மக்களிடமே, பெருமளவில் பணம் அறவிடப்படுவதாகவும் அறிகிறோம்.

இதனைப்போல் மூதூர் கங்குவேலியில் அமைந்திருந்த அகத்தியரால் உருவாக்கப்பட்ட அகத்தீஸ்வரம் என்ற சிவனாலயம் உடைக்கப்பட்டு, அங்குள்ள பழமைவாய்ந்த சுவாமி சிலைகளும் உடைக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டள்ளன.

வடக்கு கிழக்கில் அலுவலக உதவியாளர்களாக பொதுநிர்வாக உள்நாடடு அலுவல்கள் அமைச்சு வடக்கு கிழக்கிற்கு வெளியே இருந்து பெருன்பான்மை சிங்கள இளைஞர்களை கொண்டு இங்குள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றது. மன்னார் அரச அதிபராக ஒரு சிங்கள உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட மின்சார சபை பொறுப்பதிகாரியாக ஒரு சிங்கள உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண இளைஞர் சேவை அமைப்புகளிலும் சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். மொத்தத்தில் கீழ் மட்ட பணியிலிருந்து மேல்மட்ட அரசாங்க அதிபர் வரை சிங்கள மக்களால் நிரப்பும் போக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கை நிர்வாக சேவையில் 2 தொடக்கம் 3 வீதம் மாத்திரமே தமிழ் பேசும் உத்தியோகத்தர்களாக இருந்தார்கள். 25 வீத தமிழ்ப் பேசும் மக்கள் உள்ள நாட்டில் இதுதான் நிலைமை. அதுவும் வடக்கு, கிழக்கு மாகாண அதிகாரிகளையும் சேர்த்த நிலையில்தான் இந்த 3 வீத தொகை. இப்பொழுது அதுவும் சிங்களமயமாக்கப்பட்டால், மொத்தத்தில் தமிழ் அதிகாரிகளே இல்லாத ஒர் நிலைமையை தோற்;றுவிக்கவே அரசு விரும்புகிறது.

சகல துறைகளும் பெரும்பான்மை சிங்கள உத்தியோகத்தரின் கைகளில் இருந்தால் அரசின் விருப்பத்திற்கேற்ற அத்தனை காரியங்களையும் செய்ய முடியும் என்பதுதான் அரசின் சிந்தனை.

இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட Tamil Special Provision Act மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக்கபட்டது. அதன் பின்பு 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் அரச கரும மொழியாக்கப்பட்டது. தமிழ் மொழி அமூலாக்கல் பிரத்தியேக சட்டத்தின் பிரகாரம், வடக்கு � கிழக்கில் தமிழ் மொழியில் நிர்வாகத்தை நடத்த முடியும். ஆனால் இன்று வடக்கு-கிழக்கு நிர்வாகத்தில் சிங்கள அதிகாரிகளை திணிப்பதன் மூலம் ஏற்கனவே அரசியல் சாசனம் மூலம் கொடுக்கபட்ட மொழியுரிமைகள் பறிக்கப்பட்டு அதுவும் சிங்கள மயப்படுத்தப்டுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

இவ்வளவையும் செய்து கொண்டுதான் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்க்கவும், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்துவதாக கூறுகின்றது. அத்துடன் இனப்பிரச்சினையை தான் தீர்க்கப்போவதாகவும், வெளிநாடெங்கும் பிரச்சாரம் செய்தும் வருகின்றது.

இந்த இலட்சணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு� என்ற விசாரணைக்குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு அது அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. வடகிழக்கில் அரசாங்களம் எடுத்துவரும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கும் இனப்பிரச்சினை தீர்வு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு என்பதற்கும் எந்த சம்மந்தமும் இருக்க முடியாது. உண்மையாகவே இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண விரும்பினால் முதலில் இவை யாவற்றையும் நிறுத்த வேண்டும்.

ஜனாதிபதியவர்கள் தமது வரவு செலவுத்திட்ட உரையில் கூறும் போது, �அனைத்து சமூகங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வெற்றியினை தந்துள்ளன. சிறுபான்மையினரின் அரசியல் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன� எனக் கூறினார்.

சமூகங்களுக்கிடையில் ஐக்கியத்திற்கான என்ன நடவடிக்கைகள் இதுவரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன? வீதிகள் போடுவது, பாலம் கட்டுவது அல்லது மின்சாரம் தருகிறோம், வைத்தியசாலை தருகிறோம் என்று கூறுவதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்பட்டுவிட முடியாது.

யுத்தம் முடிந்து 2 � வருடங்காளாகியும் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பு, கடத்தல். கொள்ளை மற்றும் காட்டுச்சட்டங்களே நடைமுறையில் உள்ளன. கடந்த வாரம் கிளிநொச்சியின் பரந்தன் என்ற இடத்தில் பெரும்பான்மை இனத்தவரின் பேருந்து ஒன்றும் இன்னுமொரு தனியார் பேருந்தொன்றும் சிறிய விபத்துக்குள்ளாகியது. இதில் அநாவசியமாக தலையிட்ட இராணுவத்தினர் தனியார் பேருந்தில் இருந்த ஓட்டுனர், நடத்துனர் உட்பட பயனிகளையும் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். இராணுவத்தினரின் துப்பாக்கிகளுக்கு மத்தியிலும் அச்சம், பயம், பீதி மத்தியிலும் மக்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றார். அவரது ஆளும் கட்சி சகாவான பௌத்த பிக்கு ஒருவர் பேச்சுவார்த்தை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றுவதற்கான செயற்பாடு என்று வெளிப்படையாக பேசுகின்றார்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

ஏறத்தாழ 2 � மணிநேரம் வரவு செலவுத் திட்டத்தை பற்றி உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள். முப்படையினருக்கும், பொலீசாருக்கும் அரசு செய்யவிருக்கும் உதவிகளை பட்டியலிட்டார். அதற்காக எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆனால் யுத்தத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அப்பாவி மக்கள் பற்றி ஒரு வசனம் அவரது உரையில் இடம்பெறவில்லை. மீள்குடியேற்றம் பற்றியோ, வாழ்வாதாரங்கள் பற்றியோ எதுவும் இல்லை. யுத்தத்தில் அவயங்களை இழந்த மக்களுக்காக அவரது வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை.

அழிவுக்குட்பட்ட தமிழ் மக்களை விட நாளாந்தம் கஞ்சிக்கு கையேந்தும் சிங்கள மக்களை விட முப்படையினரையும் திருப்திபடுத்த வேண்டும், பொலீசாரை திருப்திப்படுத்த வேண்டுமென்பதே அவரின் வரவு செலவுத்திட்டத்தின் மையக்கருவாக உள்ளது.

இலங்கை போன்ற ஒரு சின்னத்தீவு, அதுவும் வளச்சியடையாத ஒர் நாடு வரவு செலவு திட்டத்தின் 20 வீதத்தை பாதுகாப்புதுறைக்கு செலவு செய்கிறது என்றால், அதுவும் யுத்தம் முடிந்து 2 � வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் அரசு இதனைச் செய்கிறது என்றால், தன்னை பாதுகாக்க, தனது அரசைப்பாதுகாக்க விசுவாசமான படைப்பலம் தேவைப்படுகின்றது என்றுதானே அர்த்தம். அப்படியாயின் அரசுக்கு எதிராக யார் செயற்படப்போகிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சியா செயற்படப் போகின்றது? அது சிதறுண்டு போய்க்கிடக்கிறது. அவர்கள் வலுவான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களா செயற்படப் போகின்றார்கள்? அப்படியாயின் வேறு யார்? அரசுக்கு, ஆளும் கட்சிக்குள் இருப்பவர்கள் மீதுதான் முதலாவது அச்சம்.

சதாம் உசேனின் சர்வாதிகார குடுமப் ஆட்சிக்கும். கடாபியின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கும் என்ன நடந்ததோ, அது தனது குடும்பத்திற்கும், தனது ஆட்சிக்கும் நடக்கலாம் என்ற அச்சம். எனவேதான், இவ்வளவு பொருந்தொகை பணம் படையினருக்கு ஒதுக்கப்பட்டு ஒரு விசுவாசமான படைப்பலம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் எல்லா விசுவான படைகளும் மக்கள் எழுச்சிக்கு முன்னால் சின்னா பின்னமாகிப் போனதுதான் வரலாறு. சிங்கள மக்களும் நீண்ட காலம் புலிகள் மீதான வெற்றிக் களிப்பில் சீவிக்க முடியாது. அவர்கள் பாதிப்படையத் தொடங்கும் போது இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்புவார்கள். இதுதான் உலக யதார்த்தம்.

இந்த நாட்டில் புலிகளின் பயங்கரவாதம் தான் பிரச்சினையாக இருந்தது என அரசு கூறி வந்தது. இப்பொழுது புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இனி தமிழ் மக்களுக்கு எந்தப்பிரச்சினையுமில்லை என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அதேசமயம் மிச்சம் மீதியாக இருக்கும் தமிழ் மக்களை விரட்டி விட்டு இதனை தனிச்சிங்கள பௌத்த நாடாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது. ஏற்கனவே 10 இலட்சம் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அராஜகக் கெடுபிடிகளால் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். மிகுதியாக இருப்பவர்களை விரட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசு மேற் கொண்டு வருகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது அரசபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். 1956, 61, 77, 81, 83 என தமிழ் மக்கள் மீது தொடச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அன்றில் இருந்தே விரட்டப்பட தொடங்கினார்கள். தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை கேட்ட பொழுதெல்லாம் தாக்கப்பட்டார்கள், மொழியுரிமை கேட்டபோதும் தாக்கப்பட்டார்கள், சம்ஸ்டி உரிமை கேட்ட போதும் தாக்கப்பட்டார்கள், சுயநிர்ணய உரிமை கேட்ட போதும் தாக்கப்பட்டார்கள், இறுதியாக தனி நாடு கேட்டபோதும் தாக்கப்பட்டார்கள். அப்பொழுதான் தமிழ் இளைஞர்களும் ஆயுதம் எடுத்து போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எனவே இந்த நாட்டில் வன்முறையை உருவாக்கியவர்களும், காலம் காலமாக தமிழ் மக்கள் மீது வன்முறையை ஏவி விட்டவர்களும் அரச தரப்பினரே தவிர நாமல்ல. இன்று மிச்சம் மீதியாக உள்ள தமிழ் மக்களையும் விரட்டிவிடலாம் என்ற அடிப்படையில் தான் அரசு செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து மாறி மாறி வந்த எல்லா அரசுகளின் கதவுகளும் அடைக்கப்பட்ட பின்னர் எந்தவொரு மாற்று வழியுமற்ற நிலையிலேயே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்தார்கள். அரசாங்கத்தின் இன்றைய நடவடிக்கைகள் அத்தனையும் செல்வநாயகம் அவர்களின் கோரிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்கும் நடவடிக்கையாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பிரிக்கமுடியாத நாட்டுக்குள் கௌரவமான தீர்வொன்று தமிழ் மக்களுக்கு தேவையென கேட்ட பொழுதும், அரசின் தொடர் நடவடிக்கைகள் அதற்கு சாதகமானதாக இல்லை. அரசின் நடவடிக்கைகள் தமிழ், சிங்கள மக்களை மேலும் மேலும் துருவ மயப்படுத்துகின்றதே தவிர, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்குவதாகவும் இல்லை.

3500 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான இனமொன்று, அதுவும் உயரிய நாகரீகத்தையும், பண்பாடு, கலாச்சாரங்களையும், மிகத்தொன்மை வாய்ந்த இலக்கிய, இலக்கணச் செறிவு பெற்ற தமிழ் மொழியையும் கொண்ட இனம் ஒன்று சர்வதேச சமூகத்தின் முன் அழிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனநாயம், மனித விழுமியங்கள், மனித உரிமைகள், பழமைகள், தொன்மைகள் பற்றி பேசும் சர்வதேச சமூகம் இன்றும் பார்வையாளராகத்தான் இருக்கின்றது. 2009 இல் பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என ஒர் இனத்தை அழிக்க முற்பட்ட அரசுக்கு முட்டுக்கொடுத்து ஒத்தாசை கொடுத்தவர்கள், அவர்கள் கூறிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டப்பின்பும் இலங்கை அரசின் இன ஒழிப்பை பார்த்துக் கொண்டு இருப்பதுதான் துர்ப்பாக்கியமானது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நாட்டின் நிலையான பொருளாதார வளாச்சிக்கு அதிகூடிய முதலீடு அவசியமானதாகும். உள்நாட்டு முதலீடு போதாது எனும் நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவையாகும். ஆனால் அண்மையில் கொண்டு வரப்பட்ட செயலாற்றல் குறைந்த நிறுவனங்களையும் உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தாத சொத்துக்களையும் அரசாங்கம் கையகப்படுத்தும் சட்டமூலமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. இவ்வாறான நிச்சயம் அற்ற நிலையில் வெளிநாட்டு முதலீகளை எப்படி நாட்டுக்கு கொண்டு வருவார்கள்.

சிங்கப்பூர் மலேசியா, தென் கொரியா பேன்ற நாடுகளின் விரைவான வளர்ச்சிக்கு உறுதியான அரசியல் தலைமை மாத்திரமல்ல ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியும் முக்கியமாக இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் திறைசேரியின் 75 வீத பணம் ஜனாதிபதி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிலையைதான் நாங்கள் இங்கே பார்க்கிறோம்.

பாதுகாப்புத்துறைக்கு 229.9 மில்லியன் ஒதுக்கிய அரசாங்கம் புனருத்தாரண வேலைகளுக்கு வெறும் 4.3 மில்லியன்களையும் மீள்குடியேற்றத்திற்கு 0.4 பில்லியனையும் ஒதுக்கியுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கு 611 மில்லியனை ஒதுக்கியுள்ள அரசாங்கம் யுத்தத்தினால் முழுமையான அழிவுக்குட்பட்ட முல்லைத்தீவுக்கு 157 மில்லியனும், கிளிநொச்சிக்கு 149.3 மில்லியனும் ஒதுக்கியுள்ளது.

கடந்த வருடம் அதாவது 2010 � 2011 இல் இந்தியா யுத்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு 50,000 வீடுகள் தருவதாக கூறினார்கள். ஆனால் இப்பொழுது 50 வீடுகள் தான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் வீடுகள் அழிந்த போயுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவின் வரவு செலவுத்திட்டத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் பற்றிய எந்த ஒரு தகவலும் உள்ளடகப்படவில்லை.

மொத்தத்தில் யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எந்தவித நன்மையும் இல்லை. முழு நாட்டையும் இராணுவமயப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக எதிர்த்து நிராகரிக்கிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=52355&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"முழு நாட்டையும் இராணுவமயப்படுத்த உருவாக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தை கூட்டமைப்பு நிராகரிக்கிறது!"

நல்ல தலைப்பு. நல்ல விடயம். ஸ்ரீ லங்காவில் இராணுவ ஆட்சி நடப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.