Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பழைய குருடி கதவைத் திறவடி’

Featured Replies

‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற நிலையில் இன்று தமிழர் விவகாரம்

ஆக்கம்: சி.வி. விவேகானந்தன், சட்டத்தரணி

1956 ஆம் ஆண்டு தொடக்கம் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழரசக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்ட மேசை மகாநாடுகள், சர்வ கட்சி மகாநாடுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் பல கண்டனர். பலன் பூச்சியமே.

உடன்படிக்கைகள் எழுதப்பட்டன. தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிங்களத் தலைவர்கள் பின் வாங்கினர்.

பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன் மூலம் அதிகாரப் பகிர்வு வடக்கு, கிழக்கு இணைப்பு முன்வைக்கப்பட்டன. தெற்கின் எதிர்பலையால் பிரதமரே உடன்படிக்கையைக் கிழித்தெறிந்தார்.

டட்லி சேனாநாயக்கா செல்வநாயகம் உடன்படிக்கை எழுதப்பட்டது. மாவட்ட சபை தீர்வாக முன்வைக்கப்பட்டது. மாவட்ட சபை சட்ட மூலம் வர்த்தமானியில் வெளிவந்தது. எதிர்ப்பலை ஓங்கி வீசியது. சட்ட மூலம் கைவிடப்பட்டது.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு திட்டத்தை பிரஸ்தாபித்தது. கல்வி, காணி, தொழில், குடியேற்றம் போன்ற தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஆணைக்குழு அமைத்து தீர்வு காண்பதாகக் கூறப்பட்டது. அத் தேர்தலில் அமோக வெற்றி கண்ட ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் பிரதம நீதியரசர் விக்டர் தென்னகோன் தலைமையில் ஆணைக்குழு அமைத்தது. மாவட்ட அபிவிருத்தி சபையை தீர்வாக முன்வைத்தது.

யாழ். மாவட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் வைக்கப்பட்டது. அத் தேர்தல் காலத்தில்தான் யாழ்ப்பாண நூல் நிலையம் எக்கப்பட்டது. அதுதான் தீர்வு என சொல்லாமல் சொல்லப்பட்டது.

சிறிது காலத்தின் பின் மாவட்ட அபிவிருத்தி அஸ்தமித்தது. ஜே.ஆர். மாவட்ட அபிவிருத்தி சபைச்சட்டத்தை இரத்துச் செய்துவிட்டார். ஆணைக்குழுவின் தீர்வு மெல்லெனத் தானாக மறைந்தது.

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டது. வட மாகாணத்திற்கு மாகாண சபை தேவையற்றதாகிவிட்டது. வழங்கிய அதிகாரங்கள் மீளப்பெறப்படுகின்றன. மாகாண சபை தீர்வு இன்று திரிசங்கு நிலையில் இருக்கின்றது.

எங்கள் நாட்டின் தீர்வைத்தான் ஏற்போம். மாற்றான் திணிக்கும் தீர்வை துறப்போம் என்ற குரல் தெற்கில் உரக்க பேசப்பட்டது.

பேராசியர் திஸ்ஸ வித்தாரண தலைமையில் சர்வகட்சி ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. எம் நாட்டில் காணப்படும் தீர்வைக் கட்டாயம் செயல்படுத்துவோம் என்ற அதிகாரம் கொண்டவர்கள் ஆர்ப்பரித்து நின்றனர். பல வருடங்களின் பின் அறிக்கையும் வெளிவந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அவ்வறிக்கைக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது.

யுத்தம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது 13ஐத் தருவோம். அதற்கு மேலாலும் தருவோம். 13+ஐ அதாவது 13 இல்லை என தெற்கு வாக்குறுதியை அள்ளி வீசியது.

யுத்தம் முடிந்தது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அது என்ன? என்ற தொனியில் அரசாங்கம் இருக்கின்றது. ஆறு கடக்கும் வரையும் அண்ணன் தம்பி, ஆறு கடந்த பின் நீ யாரோ ? நான் யாரோ? என்ற நிலைப்பாடு.

இவற்றிற்கு முதல் ஒஸ்லோ பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. சமஷ்டி அரசியல் முறைப்படி தீர்வு, உள்ளக சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் இவை போன்ற பிரகடனங்களுக்கு விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் கைச்சாத்திட்டன. “புலிகள் ஒஸ்லோ பிரகடனத்தை உதாசீனப்படுத்துகின்றனர். நாம் அவற்றை ஏற்று நடைறைப்படுத்துவோம்' என அன்று அரசாங்கத்தால் பரப்புரை செய்யப்பட்டது. இன்று பழைய குருடி கதவைத் திறவடி என்ற நிலை.

தமிழர்களின் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்படிக்கை தொடக்கம் ஒஸ்லோ பிரகடனம் வரையும் விலாவாரியாக எடுத்தியம்பப்பட்டுள்ளன. எல்லோருக்கும் அவை தெரிந்த பாடங்கள். புதிதாக தமிழர்கள் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கத் தேவையில்லை. அரசாங்கம் தான் தீர்வை முன் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும். அன்றேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை அவ்வாறான தீர்வு திட்டத்தை முன்வைக்கும்படி நிர்ப்பந்தித்திருக்க வேண்டும்.

அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தால் அத்திட்டத்திலிருந்து நாம் முன்னேற்றம் கண்டிருக்கலாம்.

நம்மவர்கள் முன்வைத்தார்கள் என்ற தோற்றம் விசுவரூபமாகத் தெரிகின்றது. அதனால் அவர்கள் வெட்டி கொத்திக் கொன்று இருக்கின்றார்கள். காணி, பொலிஸ் அதிகாரங்கள் கேட்கப்படாது. புலிகளைப் போல பேசுகின்றீர்கள் என எச்சரிக்கின்றார்கள். பயறுத்தல் வரைக்கும் சென்று விட்டார்கள். இந்நிலை எமது அணுகுமுறையால் வந்தவினை. இந்த வேதனையை விமர்சித்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலவீனமாக்கும் செயல் என்பது பிரமை. கூட்டமைப்பை பலப்படுத்துவதுதான் உண்மை.

தீர்வுத் திட்டத்தை முன்வைக்காமல் தெரிவுக் குழுவிற்கு பங்குபற்ற உடன்படும்படி கூட்டமைப்பை வலியுறத்துகின்றார்கள். தற்பொழுது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பொறி வைத்தது போல் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றுவதற்கு பொறி வைக்கின்றார்கள். அதற்கெதிராக குரல் கொடுத்து எச்சரிப்பது மக்கள் கடமை அல்லவா? தமிழ் சிவில் சமூகம் இதனை வெளிப்படுத்துவதற்காக பெருமூச்சு விடுகின்றது. பலவீனப்படுத்த அல்ல. பலப்படுத்தவே அவர்களது பெருமூச்சு.

தமிழ் சிவில் சமூகம், பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு பொழுதும் தமது கொள்கைகளிலிருந்து தளம்பவில்லை.

தலைவர்கள் தளம்பியதுண்டு. தவறு இழைத்ததும் உண்டு. குறிப்பாக 1977 ஆம் ஆண்டு தேர்தலின் பின் மோசமான தளம்பல் நிலை ஏற்பட்டது. இயக்கங்கள் வளருவதற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையின் தளம்பல் நிலையும் ஒரு காரணமாகும். அவ்வாறான நிலை மீண்டும் வரப்படாது என பெரும்பான்மையான தமிழர்கள் விரும்புகின்றார்கள். தமிழ் சிவில் சமூகமும் அவ்வாறே எண்ணுகின்றது.

1977 ஆம் ஆண்டு தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்திற்கு ஆணை கேட்டது. தமிழ் மக்கள் ஆணை கொடுத்தால் சங்கிலியன் தோப்பில் தமிழீழ அரசியலமைப்பை உருவாக்குவோம் என வாக்குறுதி செய்தனர் கூட்டணித் தலைவர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி புதியதோர் அரசியலமைப்பிற்கு ஆணை கேட்டனர். இரு சாராரும் கேட்டவாறு ஆணை பெற்றனர். ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியலமைப்பை உருவாக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணி தடம்புரண்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது அரசியல் சாணக்கிய சாதுரியத்தின் மூலம் கூட்டணியினரை அரவணைத்துக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி, வேறு பல சலுகைகள் கொடுக்கப்பட்டன. பெட்டிப் பாம்பானார்கள் கூட்டணியினர். தேநீர் விருந்து கொடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜே.ஆர்.

தமிழீழக் கொள்கையில் மாற்றமில்லை. பயணிக்கும் பாதை மாற்றப்படுகின்றது. பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றுவோம் என அறிக்கைகளை கூட்டணித் தலைமை வெளியிட்டது. தேநீர் விருந்து பேச்சுவார்த்தை தொடர்ந்தது. என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களின் தலைவிதியை அடகு வைத்து விட்டார்களென பின்னால் தெரியவந்தது.

அவற்றில் முக்கியமானவை இதோ ஒரு சில:

1) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அங்கீகரித்தமை சட்ட மூலம் கொடுக்கப்பட்டது.கூட்டணியினரின் ஏற்புடைமை கோரப்பட்டது.

அற்புதமான தீர்வு என ஏற்றுக் கொண்டனர். நாடாளுமன்றத்திலும் ஒரு பேச்சில்லை. இச்சட்டத்தின் பிரகாரம் குட்டி மணிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட பின் தான் ஜே.ஆர். ஏமாற்றிவிட்டார் என அழுது புலம்பினர்.

2) மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழீழப் பிரகடனத்திற்கு ஈடாக பெற்றுக் கொண்டனர். சட்ட அறிவற்ற இளைஞர்கள் இச்சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லையே என முரண்பட்டனர். மண்ணைக் கயிறாகத் திரிக்கும் சட்ட அறிவு பெற்றவர்கள் நாங்கள் வெற்றி கொள்வோம். கவலைப்படாதீர் என இளைஞர்களை அமைதிப்படுத்தினர். பின்பு, தவிசாளராக இருந்த செனெட்டர் நடராசா “கதிரையும் மேசையும் கூட வாங்குவதற்கே அதிகாரம் இல்லை” எனக் கூறி இராஜினாமா செய்தார்.

3) 82 ஆம் ஆண்டு இரண்டாவது தவணைக்கான ஜனாதிபதித் தேர்தல் நடந்தது.

ஏதேதோ எல்லாம் தருவேன் எனப் பசப்பு வார்த்தை கூறி தேர்தலில் பகிரங்கமாக தன்னை ஆதரிக்கும்படி ஜே.ஆர். கேட்க கூட்டணித் தலைமை ஒத்துக் கொண்டது.

இதனை முறியடிப்பதற்கு சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை ஒரு திட்டத்தை வகுத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் குட்டிமணி ஜனாதிபதி தேர்தலில் நிற்பாட்டப்பட வேண்டும் என்பதே அவரது திட்டம். நண்பர் சந்திரகாசனும் நானும் அத்திட்டத்தை கேட்டோம். நான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சிக்குள் பேசி முடிவு எடுக்க வேண்டுமென்பது எனது கருத்து.

தலைமை இட்டதுதான் சட்டம். அதுதான் கட்சியின் முடிவுமாகும் என்பது அவர்கள் வாதம். நண்பர் சந்திரகாசன் அத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

“இளைஞர்களுக்கு வேகம் உண்டு. விவேகம் இல்லை” என அண்ணன் அமிர்தலிங்கம் அறிக்கை வெளியிட்டார். அத்தோடு பகிரங்க ஆதரவு கைவிடப்பட்டது.

1983 ஜூலை மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வருடாந்த மகாநாட்டை மன்னாரில் நடத்தியது. 24 ஆம் திகதி பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழீழக் கோரிக்கையை மீளவும் புதுப்பிக்கப்போவதாகவும் என்ற தொனியில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஆறிய கஞ்சி பழங்கஞ்சி. ஓடையிலே வீச வேண்டியது. ஆனால் வரலாறு வேறு திசையில் வீசத் தொடங்கியது. கலவரம் வெடித்தது. எங்கும் தீச் சுவாலை தமிழ் மக்கள் பட்ட துயர் எழுதவும் முடியாது.

ஜே.ஆர். ஆறாவது அரசியலமைப்பின் திருத்தத்தின் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிவிட்டார். கூட்டணியினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவ்வாறான சூழ்நிலை தமிழ் மக்களுக்கு மீண்டும் வரப்படாது என்பதுதான் மக்களின் ஆதங்கம். வெள்ளம் வரு முன்னே அணை கட்ட முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான செய்கை கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதல்ல பலப்படுத்துவதேயாகும்.

சில யோசனைகள்

1 கூட்டமைப்பு உள்ளக குழுவொன்றை நியமித்து தற்பொழுது நடைபெறும் பேச்சுவார்த்தை பற்றி உள்ளக விமர்சனம் செய்து தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

2 தமிழ் மக்கள் அல்லது சிவில் சமூகத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளின் நிறைவேற்றம் பற்றி கலந்துரையாடல் செய்ய வேண்டும்.

3 ஒரே நிலைப்பாடு கொண்ட கட்சிகளை, சிந்தனையாளர்களை, எழுத்தாளர்களை கூட்டமைப்பு அரவணைத்துப் போகவேண்டும். அபிப்பிராயங்களை கருவூலங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

4 ஆனந்தசங்கரி, மனோ கணேசன், சித்தார்த்தன், குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்களை அரவணைத்து அவர்களுடன் கருத்துகளை பரிமாறி, ஆலோசனைகள் பெற்று நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.

5 குறிப்பாக ஆனந்தசங்கரி நல்ல, நல்ல விடயங்களை முன்வைக்கின்றார். சமஷ்டி அரசியலமைப்பின் காணி, பொலிஸ் அதிகாரங்கள், உள்ளக சுயநிர்ணய உரிமைகள் போன்றவற்றிற்கு வெளிப்படையாகக் குரல் கொடுக்கின்றார்.

ஒரே இலங்கைக்குள் தீர்வு அமைய வேண்டுமெனக் கூறுகின்றார். அதே நேரத்தில் ஒற்றையாட்சி திட்டம் ஏற்றுக் கொள்ள முடியாது என திட்டவட்டமாகத் தெவிக்கின்றார். அவற்றுக்காக தனியான பீடம் அமைத்து அவரது கருத்துக்கள் பல இடங்களுக்கும் பரவும் வகை செய்ய வேண்டும். துணிவுடமை, வெளிப்படைத்தன்மை எதிலும் தளம்பல் இல்லாத செயல்திறன் கொண்டவர்.

அ) கூட்டணி விரும்பாத பொழுதும் கிளிநொச்சியை நிர்வாக மாவட்டமாக உருவாக்குவதில்,

ஆ) அவர் ஒரு சோசலிசவாதி. என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா அவரது அரசியல் குரு ஆவர். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு அவர் ஆதரவு கொடுக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் வெற்றி பெற்ற மாட்டினும் தமிழ் காங்கிரஸில் வெற்றி பெற்ற அருளம்பலம் தியாகராசாவும் ஆதரித்தனர். எனது குரு எனக் கூறி தமிழர்களின் உரிமையை இழக்கவிடவில்லை. தனது குரு பக்தியைக் காட்டுவதற்காக துரோணற்கு தனது பெருவிரலை வெட்டி காணிக்கையாகக் கொடுத்த ஏகலையனாக மாறவில்லை. அவ்வாறான ஆனந்தசங்கரிக்கு தனிப்பீடம் அமைத்து கொடுப்பதினால் அவர் சமஷ்டி அரசியலமைப்புக்கான அடித்தளத்தை போடுவதற்கு பெரும் உதவி செய்வார்.

6) தமிழகத்திலும் டில்லியிலும் கூட்டமைப்பு அலுவலகம் திறக்க வேண்டும். எமது கருத்துக்களை நன்றாக வேரூன்றும் வண்ணம் பலவகையிலும் பரப்புரை செய்ய வேண்டும்.

7) உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எழுத்தாளர்களை சிந்தனையாளர்களை, பேராசிரியர்களை, வரலாற்று ஆசியர்கள் போன்றவர்களை அரவணைத்து அவர்கள் மூலம் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட வேண்டும். அதிகாரப் பகிர்விற்கெதிராக சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்விற்கு ஆதரவாக புத்தகங்கள், கட்டுரைகள் வெளியிடப்படவில்லை.

8) சத்தியாக் கிரகப் போராட்டம் நடத்துவோம் என்று குரல் எழுப்பப்படுகின்றது. 60 களில் செய்த சத்தியக் கிரகப் போராட்டத்தை இன்று செய்ய முடியாது. அவ்வாறு நடத்த முயன்றாலும் தமிழ் மக்களை விட்டு குழப்பி விட அவர்களால் முடியும். அதனால் சுண்டங்காய் தீர்வு திணிக்கப்படுவதற்கு முன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையிலிருந்து விலக வேண்டும். தங்களுக்கு விரும்பியவர்களுடன் அரசு கதைத்து தீர்வை எட்டட்டும் அல்லது அரசு தான் விரும்பிய தீர்வை முன்வைக்கட்டும் என்று திட்டவட்டமாகக் கூறி பேச்சுவார்த்தையிலிருந்து விலக வேண்டும்.

9) அல்லது பேச்வார்த்தையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க முன்வரவேண்டும்.

10 மகாவம்சத்தையே மேற்கோள் காட்டலாம். கஜபாகு மன்னன் தனது தந்தை காலத்தில் சிறை பிடித்துச் சென்ற 12 ஆயிரம் பேரையும் மீட்டதற்கு 12 ஆயிரம் தமிழர்களை சிறைக் கைதிகளாக இலங்கைக்கு கொண்டு வந்ததாக மகா வம்சம் கூறுகின்றது. தந்தை செய்ய முடியாததை மகன் செய்தான்.

அவ்வாறே இந்த சந்ததியினர் செய்ய முடியாததை அடுத்து சந்ததிக்கு விட்டு விடுவோம். சுண்டங்காய் தீர்வுக்கு கட்டுப்பட்டு அடுத்த சந்ததியினரை கட்டுப்படுத்தக் கூடாது. இது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

மூலம்: வீரகேசரி - தை 1, 2012

பிரசுரித்த நாள்: Jan 03, 2012 14:08:03 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.