Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும். 1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும். அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை. இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும். ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம். அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். https://sathirir.blogspot.com/2009/02/blog-post_4579.html?m=1
  3. Today
  4. சீனாவுடன் உறவு கொண்டதற்காக கனடாவுக்கு 100 வீதவரி விதிக்க ரம் தீர்மானித்துள்ளார்.
  5. நட்சத்திரன் செவ்விந்தியனின் “இவன் - யானைப்பாகன்” திசையில் படித்ததில் இருந்து எதையும் தவறவிட்டதில்லை. சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவற்றையும் இணையத்தில் படித்திருந்தாலும், தொகுப்பைக் கட்டாயம் வாங்குவேன்
  6. 'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,@EPSTamilNadu கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 ஜனவரி 2026, 02:52 GMT தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா? எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒரே மேடையில் பங்கேற்றது, தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கி பிரதமர் பேசியது என கூட்டணிக்கு உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வுகள் இதில் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், தேர்தலில் கடும் போட்டியைக் கொடுக்க இதுமட்டும் போதுமா என்ற கேள்விகளும் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை இணைந்துள்ள கட்சிகள் பட மூலாதாரம்,@narendramodi அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்த பிறகும், அந்தக் கூட்டணியில் பெரிய பரபரப்பு இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அரசியல் களத்தில் காட்சிகள் சூடுபிடித்தன. அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய சாத்தியமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகள் துவங்கின. ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் வந்து இறங்கி பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தினார். முடிவில் பா.ம.கவும் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர். இவர்கள் தவிர, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகியோரும் இந்தக் கூட்டணியை உறுதிசெய்திருந்தனர். 2019, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தற்போதுவரை இந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை. "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாக யாரும் தங்களைக் கூட்டணிக்காக அணுகவில்லை; ஆகவே எந்தக் கூட்டணி என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை" என்றும் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி கூறிவிட்டார். அதேபோல, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்பதும் சில நாட்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது. ஆகவே மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையில் இந்தத் தலைவர்கள் படங்கள் இடம்பெறவில்லை. இருந்தபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உற்சாகமடையும் வகையில் சில காட்சிகள் மதுராந்தகம் கூட்டத்தில் நடைபெற்றன. பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரன், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளர் யார்? என செய்தியாளர்கள் கேட்டனர். "அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று சொல்லி, எடப்பாடி கே. பழனிசாமி பெயரைச் சொல்வதை தவிர்த்தார் டிடிவி. ஆனால், இந்தப் பொதுக்கூட்டத்தில் இருவருமே மற்றவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது அங்கிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. டிடிவி தினகரன் பேசும்போது ஒருபடி மேலேபோய், "பங்காளிச் சண்டையை மறந்துவிட்டு கூட்டணிக்கு வந்திருக்கிறாம்" என்று குறிப்பிட்டார். பிரதமர் பேசியது என்ன? பட மூலாதாரம்,@narendramodi கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோதி என அனைவருமே தி.மு.க. அரசை கடுமையாக தாக்கிப் பேசினர். பிரதமரின் நீண்ட உரையில், தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார். "தி.மு.க. அரசின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி செய்ய நீங்கள் தி.மு.கவுக்கு வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். தி.மு.க. அரசை மக்கள் சிஎம்சி (CMC) அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் தி.மு.கவையும் சிஎம்சியையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பா.ஜ.க. தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது" என்று குறிப்பிட்டார் பிரதமர். மத்தியில் தே.ஜ.கூ ஆட்சி வந்த பிறகு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் ரயில் திட்டங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் பெருமளவில் இருப்பதாகவும் பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே குழந்தைகள் நாசமாகிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் பிரதமர். பழனிசாமி- டிடிவி தினகரன் கூட்டணி பட மூலாதாரம்,PTI பொதுக்கூட்டம் முடிவடைந்து பிரதமர் மோதி புறப்பட்டவுடன், பியூஷ் கோயல், எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அ.தி.மு.கவும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றது குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் தினகரனும் அளித்த பதில்கள், இரு கட்சியின் தொண்டர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையிலேயே இருந்தது. "இது எங்கள் குடும்பப் பிரச்னை. ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தது உண்மை. அமித்ஷா 2021லேயே முயற்சி செய்தார். அப்போது நடக்கவில்லை. இப்போது அமித் ஷாவும் மோதியும் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னார்கள். இதெல்லாம் நடந்து இரண்டு, மூன்று மாதங்களாகிவிட்டன. இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதல் அளித்த பிறகுதான் என்னை அழைத்துப் பேசினார்கள். 2017 ஏப்ரல் வரை எப்படியிருந்தோமோ அப்படி ஒன்றிணைந்துவிட்டோம்" என்றார் டிடிவி தினகரன். இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மாறிமாறி சுமத்திய நிலையில், அந்த வீடியோக்கள் தற்போதைய பிரசாரத்தில் பயன்படுத்தப்படலாமே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி விரிவாகப் பதிலளித்தார். "வைகோ தி.மு.கவைப் பற்றியும் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் எவ்வளவு மோசமாகப் பேசினார். அதைப் பற்றி நீங்கள் கேட்பதில்லை. அதே வைகோ இப்போது மு.க. ஸ்டாலினோடு இணைந்துவிட்டார். அதற்கடுத்தபடியாக காங்கிரஸ். நெருக்கடி நிலையின்போது மிக மோசமாக சித்ரவதைக்கு உள்ளானோம் என்றது தி.மு.க. மேலும், அறிவாலயத்தின் மேல் தளத்தில் ரெய்டு நடந்தபோது கீழே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இருந்தபோதும் இருவரும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு எங்களுக்குள் எந்த சங்கடமோ, மனவருத்தமோ கிடையாது" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி. "எடப்பாடி கே. பழனிசாமிக்கும் டிடிவிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நல்லுறவு எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கிறது. அந்த அளவுக்கு வேகமாக எடப்பாடி பழனிசாமி டிடிவியை அரவணைத்துக் கொண்டார். இது உடல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வெளிப்பட்டது. இந்த அரவணைப்பு இரு கட்சியின் தொண்டர்களுக்குமே உற்சாகமளிக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ். பி. லக்ஷ்மணன். 'இது ஒரு வழக்கமான கூட்டம் தான்' பட மூலாதாரம்,@narendramodi இதுபோன்ற தருணங்களைத் தவிர, இது ஒரு வழக்கமான கூட்டம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன், "மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேசியது ஒரு வழக்கமான பேச்சு. உள்ளடக்கம் குறைவாகவும் முழக்கங்கள் அதிகமாகவும் இருந்தன. பிரதமரின் உரை அங்கே கூடியிருந்த அவர்களுடைய தொண்டர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கூட்டத்திற்கு வெளியில் இருந்தவர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை." என்கிறார். "பேச்சு நெடுக, பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூ. என்றே பிரதமர் குறிப்பிட்டதும் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயரை ஆரம்பத்தில் சொன்னதைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சொல்லாததும் கவனிக்கத்தக்கதாக இருந்தது." என்று குறிப்பிடுகிறார் ராதாகிருஷ்ணன். அதேபோல, "மதுரையில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு, எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது எந்த அளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை" என்கிறார் அவர். ஆனால், எஸ்.பி. லக்ஷ்மணனைப் பொறுத்தவரை, பிரதமர் ஒரு நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டணியை உருவாக்கியது அமித் ஷா. அதற்குப் பிந்தைய முதல் செய்தியாளர் சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி என்றும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோதி தலைவர் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இப்போதுவரை அறிவிக்கவில்லை" என்கிறார். "தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது தேசிய அளவில் பா.ஜ.கவின் பாணியாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அ.தி.மு.கதான். ஆகவே, அ.தி.மு.கவின் பாணியைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அதைப் பற்றிக் கேட்கும்போது, தேர்தலில் வெற்றிபெறும்போது அ.தி.மு.கவிலிருந்து ஒருவர் முதல்வராவார் என்று தெரிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி 120 தொகுதிகளில் எடப்பாடி பிரசாரத்தை முடித்திருந்தார்." என்று கூறுகிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். தொடர்ந்து பேசிய அவர், "இன்று நடந்த பொதுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, கூட்டணி ஓரளவுக்கு வடிவம் பெற்றுவிட்ட நிலையில் நடந்த முதல் பிரசாரக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் யாரை வீழ்த்தப் போகிறோம், யாரை ஆட்சியில் அமர்த்தப் போகிறோம் என்பதை பிரதமர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் எடப்பாடியின் பெயரையே சொல்லவில்லை. ஏன், அ.தி.மு.கவின் பெயரையே சொல்லவில்லை. தொடர்ந்து பா.ஜ.க - தே.ஜ.கூட்டணி என்றே குறிப்பிட்டார்." என்கிறார். இது பா.ஜ.க. தொண்டர்களுக்கு சந்தோஷமளிக்கலாம், ஆனால், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவ்வாறு இருக்காது எனக் குறிப்பிடும் எஸ்.பி. லக்ஷ்மணன், "தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடிதான். ஆகவே இங்கே அ.திமு.கவுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். இந்தப் போக்கை சரிசெய்வது அவசியம்" என்கிறார். முதலமைச்சர் கூறியது என்ன? இதற்கிடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமரின் பேச்சு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். "ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,பிகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என 'இரட்டை என்ஜின்' என்ற பிரதமரின் முழக்கத்தை விமர்சித்திருக்கிறார் முதலமைச்சர். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி 2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் களத்தை இந்தப் பொதுக்கூட்டம் சூடுபிடிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36837kzwl9o
  7. யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு! 24 Jan, 2026 | 04:39 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026 ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/236906
  8. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு RIL Property PLC இனால் நிதி நன்கொடை 24 Jan, 2026 | 12:54 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு RIL Property PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை RIL Property PLC இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி எம்.சி. விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் RIL Property PLC இன் பிரதான நிதி அதிகாரி டபிள்யூ. ஏ. இந்துனில் பெரேரா மற்றும் உதவி பராமரிப்பு பொறியியலாளர் கசுன் அனுரங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/236889
  9. உயிரினை பறிக்கும் அதிகுளிர்!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 22, 2026 1 Minute 21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது. சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல் வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும். உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை. ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும். 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும். நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை -7°C ஆக இருக்கும். குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் 1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses) உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது: இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும். நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses) பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும். ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார். பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம். சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள் பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும். முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும். மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும். சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும். தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும். நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள் வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும். சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death) உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு: 1. அனுசேபச்சிதைவு (Metabolic Breakdown) உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. 2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம் குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன: இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை. இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது. 3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression) ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும் கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும். ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும். ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும். உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள். மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும். போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!
  10. அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு 24 Jan, 2026 | 01:42 PM அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் தொடங்கிய இந்த பனிப்புயல், வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்லும் போது அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று வானிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பனிப்புயல் அமெரிக்கா முழுவதும் 3,200 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பனி மற்றும் உறைபனி நிலைமைகள் கடுமையாக இருக்கும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நீண்ட நேர மின்வெட்டு, மரங்களுக்கு சேதம், மற்றும் பயணிக்க முடியாத வீதிப்போக்குவரத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துள்ளதால், பல கடைகள் வெறுமையாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விமான சேவை பாதிக்கப்பட்டு, 1,800 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக 18 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பனிப்புயல் எதிரொலி ஏற்படுவதால் மக்கள் முன்னதாகவே தயாராக இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பனிப்புயல் தாக்கம் அதிகமாகும் போது டாகோட்டாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் வெப்பநிலை சாதாரண நிலையைவிட 30 டிகிரியை விட குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் 35 முதல் -50 டிகிரிக்கு கீழே செல்லும் என வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தேவையான உணவு, நீர், மருந்து மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வீடுகளில் தங்கிக் கொண்டு, அவசர தேவைகள் தவிர வீதியில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/236896
  11. டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா? Jan 24, 2026 - 07:47 PM இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருத்துத் தெரிவித்த நக்வி, ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், பங்களாதேஷிற்கு இழைக்கப்பட்டது அநீதியாகும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். உலகக்கிண்ணப் பங்கேற்பு தொடர்பான எமது நிலைப்பாடு பாகிஸ்தான் அரசாங்கம் எனக்கு வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தற்போது நாட்டில் இல்லை. அவர் திரும்பியதும் இறுதி முடிவை அறிவிப்பேன். இது அரசாங்கத்தின் முடிவு. நாங்கள் ஐ.சி.சி-க்கு அல்ல, அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம் என்று அவர் கூறினார். கடந்த ஒரு வாரமாக, போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிய பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மட்டுமே ஆதரவு வழங்கியது. இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்படுகின்ற போதிலும், பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருந்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எல். 2026 குழாமை விட்டு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜனவரி 3ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடுவது தமக்கு பாதுகாப்பானதல்ல என பங்களாதேஷ் கூறியிருந்தது. பங்களாதேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்த ஐ.சி.சி, அட்டவணையை அப்படியே ஏற்பது அல்லது தொடரிலிருந்து நீக்கப்படுவது என இவ்வாரத் தொடக்கத்தில் நிபந்தனை விதித்தது. பங்களாதேஷ் தமது முடிவில் உறுதியாக இருந்ததால், இன்று அவர்களைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ப்பதாக ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த முடிவை விமர்சித்த நக்வி, "பங்களாதேஷிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஒரு நாட்டுக்கு, இந்தியா அவர்கள் நினைத்ததைச் செய்யவும், மற்றவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்யவும் வற்புறுத்த முடியாது. இதனால்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பங்குதாரர், அவர்கள் உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும், என்றார். பங்களாதேஷிற்கு ஆதரவாக பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தைப் புறக்கணிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகிய போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட வேண்டாம் எனக் கூறினால், ஸ்காட்லாந்திற்குப் பிறகு ஐ.சி.சி ஒருவேளை 22வது அணியைக் கொண்டுவர வேண்டியேற்படும். முடிவு அரசாங்கத்திடமே உள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkse9c1z04d1o29nq7abgj45
  12. யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை! Published By: Digital Desk 1 24 Jan, 2026 | 10:40 AM யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236877
  13. அவரது கட்சியில் இருப்பவர்கள் அவரை விட மோசமானவர்களாக இருப்பதால் உள்ளத்திற்குள் தமிழ்த் தேசிய் பேசுகிறார் என்று அவரைத் தெரிவுசெய்கிறார்கள். இவர் அரசியலில் வந்த காலத்தில் இருந்து இப்படித்தான் வடக்கில் ஒன்று சபசுவார். தெற்கில் சம்பந்தர் சுமத்திரன் கிழிச்ச கோட்டைத் தாண்டாமல் அரசு செய்து வந்தார்.தமிழரசுக்கட்சியின்தலைவர் ஆசைவந்து சுமத்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையே பகைவந்ததில் இருந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பெரிது படுத்தப்படுகின்றன.அவர் ஒரு மதில்மேல் பூனை.கழுவுறமீனில நழுவுறமீன்.
  14. தமிழகத்திலிருக்கும் காலச்சுவடு பதிப்பகம் இந்த "முகாமுகம்" என்ற நூலை வெளியிடுகிறது. தலைவரையும் போராட்டத்தையும் மிக இழிவாகச் சித்தரித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தயவுசெய்து தமிழகத்தில் வாழும் தமிழ்த்தேசியர்கள் இந்நூலை முடக்கவேண்டும். Ranjith Joseph
  15. விளையாட்டில் அரசியல் கலந்தால் இப்படித்தான்! பதில்களை திரும்ப பதியவேண்டியதில்லை. இதுவரை பதிந்தவர்களுக்கு பங்களாதேஷ் போட்டிகளை மட்டும் மாற்ற அனுமதிக்கலாம். பாகிஸ்தான் விளையாடாவிட்டால் என்ன செய்யலாம் என்பதை யோசிக்கவேண்டும்
  16. தோழர் இது அரசு பேருந்து அவர்கள் வைத்ததுதானே சட்டம் ? 😄
  17. என்ன இது ?குண்டக்க மண்டக்க? பதில்களை திரும்பவும் பதிய வேண்டுமே?
  18. @ஏராளன் இன் ஏரியா விடுவிக்கப்பட்டுள்ளது. சந்தோசம்.
  19. எவ்வளவு இளமையான வயதில் கணவனை பறி கொடுத்துள்ளார் என்று அம்மாவையும் கணவனின் படத்தையும் பார்க்கும் போது புரிகிறது. ரொம்ப கஸ்டமாகவும் உள்ளது. சிங்கள தேசத்தில் தமிழருக்கு எப்போது தான் நீதி நிஞாயம் கிடைத்துள்ளது. ஆழ்ந்த நினைவஞ்வலிகள்.
  20. வங்களதேசதத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடும் - ஐசிசி அறிவிப்பு. இதனால் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் இருந்து விலக விரும்புகிறது. பாகிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் பிரதமரின் முடிவை எதிர்ப்பார்க்கிறது.
  21. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  22. பொன்ஜூர் ரூஸோ! ஷோபாசக்தி இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸ் நகரத்திலுள்ள ‘பந்தியோன்’ மணிமண்டபத்திற்கு அரசு மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு, வோல்த்தேயரின் உடலுக்கு அருகே சமாதி வைக்கப்பட்டது. இவர்களுக்கு அருகேதான் விக்டர் ஹூகோவும், அலெக்ஸாந்தர் டுமாவும், ஜோசப்பின் பாக்கரும், எமில் ஸோலாவும் நீள்துயிலில் இருக்கிறார்கள். பொன்நிறமான பந்தியோன் மணிமண்டபம் கட்டடங்களின் அரசி போன்று நகரத்தின் மையத்தில் உயர்ந்து நிற்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு இது தேவாலயமாக இருந்தது. புரட்சியின் போது, இந்தத் தேவாலயம் பிரான்ஸின் மாண்புமிகு எழுத்தாளர்களதும் கலைஞர்களதும் அறிஞர்களதும் உடல்களைச் சமாதி செய்து வைக்கும் மணிமண்டபமாக மாற்றப்பட்டது. மண்டபத்திலிருந்து குறுகிய படிகளின் வழியே கீழே இறங்கிச் சென்றால், அங்கே சிலுவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசாலமான பாதாள மண்டபத்துள், அரை இருளில் இவ்வாறாக எண்பத்துமூன்று சமாதிகள் இருக்கின்றன. இவற்றைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வெயில், பனி பாராமல் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். காலை பத்து மணிக்குத்தான் மணிமண்டபத்தைப் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடுவார்கள். மணிமண்டபத்தின் தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறுமணிக்கே வேலைக்கு வந்துவிடுவார்கள். இன்று, சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தைச் சுத்தம் செய்யவேண்டியது அபினாவின் முறை. அபினா இங்கே வேலைக்கு வந்து சரியாக முப்பது வருடங்களாகின்றன. அவர் வேலைக்குச் சேர்ந்த அதே வாரத்தில்தான் ‘ஸ்ஸோ’ நகரத்தில் புதைக்கப்பட்டிருந்த மேரி கியூரியின் உடல் அறுபது வருடங்களுக்குப் பின்பு தோண்டி எடுக்கப்பட்டு, இந்த மணிமண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சமாதி வைக்கப்பட்டது. அப்போது அபினாவுக்கு இருபத்தைந்து வயது. அவர் வட ஆபிரிக்காவிலிருந்து அகதியாக பிரான்ஸுக்கு வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. வோலோவ் குடியில் பிறந்து, சிறிய பாலைவனக் கிராமத்தில் வசித்திருந்த அபினாவுக்கு பாரிஸ் நகரம் மிரட்சியைத்தான் கொடுத்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவத்தைக் கொண்டிருக்கும் அபினா அந்நியர்களுடன் பேசுவதற்குத் தடுமாறினார். வாயை மூடிக்கொண்டு வேலைக்கு வந்து திருத்தமாக வேலையைச் செய்துவிட்டு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது மணிமண்டபத்தின் வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நடுத்தர வயதுப் பிரெஞ்சுக்காரருக்கு அபினாவின் இந்தப் போக்கு அதிருப்தியைக் கொடுத்தது. ஒருவரையொருவர் பணியிடத்தில் காலையில் சந்திக்கும்போது ‘உங்களுக்கு நல்ல நாளாகட்டும்’ என்ற பொருள்தரும் ‘பொன்ஜூர்’ எனும் வணக்கத்தைச் சொல்வது பிரெஞ்சு நடைமுறை. ஆனால், அபினா ‘பொன்ஜூர்’ எனப் பாதுகாப்பு அதிகாரிக்குச் சொல்வதில்லை. அப்படி ஒரு கண்டிப்பான வழக்கம் இருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. பாதுகாப்பு அதிகாரி, தூய்மைப் பணியாளர்களின் மேற்பார்வையாளரிடம் இது குறித்து முறையிட்டார். மேற்பார்வையாளரும் அபினாவின் நாட்டவர்தான். அவர் இந்த ‘பொன்ஜூர்’ நடைமுறையை அபினாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, வாயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அவசியம் வணக்கம் வைக்கவேண்டும் என்றார். அபினா கற்றுக்கொண்ட முதல் பிரெஞ்சு வார்த்தை ‘பொன்ஜூர்’. அன்று முழுவதும் அபினா பரீட்சைக்குப் படிப்பது போன்று இந்த ‘பொன்ஜூர்’ மந்திரத்தை மனதிற்குள் உச்சாடனம் செய்தவாறேயிருந்தார். அவரது நீண்டு தடித்த நாக்கில் அந்த வார்த்தை தங்காமல் வழுக்கி விழுந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையில் அபினா வேலைக்கு வந்தபோது, வாயில் பாதுகாப்பு அதிகாரி வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கையில் அவரைக் காணவில்லை. ‘பொன்ஜூர்’ சொல்லும் அபாயத்திருந்து தப்பித்தேன் பிழைத்தேன் என்று எண்ணிக்கொண்டே அபினா அங்கிருந்து வேகமாக நகர்ந்தார். துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கழிப்பறைகளைச் சுத்தம் செய்யச் சென்றார். வரிசையிலிருந்த முதலாவது கழிப்பறையின் கதவை அபினா தள்ளித் திறந்தபோது, உள்ளே வாயில் பாதுகாப்பு அதிகாரி சிறுநீர் கழித்துக்கொண்டு நின்றிருந்தார். அவர் திடுக்கிட்டுத் திரும்பி அபினாவை உணர்ச்சியற்ற சாம்பல்நிறக் கண்களால் பார்த்தார். அபினாவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நேற்றிலிருந்து உச்சாடனம் செய்துகொண்டிருக்கும் ‘பொன்ஜூர்’ மந்திரம் எதிர்பாராமல் அவரது நாவிலிருந்து நடுக்கத்தோடு உருண்டு விழுந்தது. அதைச் சொல்லிவிட்டு அபினா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட்டார். பாதுகாப்பு அதிகாரி அபினாவின் மேற்பார்வையாளரைத் தேடிச் சென்று அவரிடம் சொன்னார்: “அந்தப் பெண் எனக்கு ‘பொன்ஜூர்’ சொல்லத் தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், மெனக்கெட்டு என்னைத் தேடி வந்து கழிவறைக்குள் கண்டுபிடித்து அவள் வணக்கம் சொல்ல வேண்டியதில்லை.” இவ்வாறாகத்தான் முப்பது வருடங்களுக்கு முன்பு அபினா பிரெஞ்சு மொழி பழக ஆரம்பித்தார். இப்போதுவரை அவரது வாயில் தங்காமல் பிரெஞ்சு மொழி வழுக்கிக்கொண்டேயிருக்கிறது. என்றாலும், எதிர்ப்படும் எல்லோருக்கும் ‘பொன்ஜூர்’ வணக்கத்தை அபினா சொல்லிக்கொண்டேயிருந்தார். தானாகவே போய் உளமும் முகமும் மலரச் சொல்வார். மெத்ரோவில், தெருவில், சந்தையில், மணிமண்டபத்தில் என எல்லா இடங்களிலும் தன்னுடைய புன்னகையால் தோய்ந்த வணக்கங்களை அளித்தார். தற்போது வாயில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவன் போலந்து நாட்டு இளைஞன். அவனுக்கு “என் மகனே…பொன்ஜூர்…” என அபினா வணக்கம் சொல்லிவிட்டு, வேலையைத் தொடங்கினார். பாதாள மண்டபத்தில் இருக்கும் எந்தச் சமாதியில் எவரின் உடல் இருக்கிறது என்பதை இந்த முப்பது வருட அனுபவத்தில் அபினா அறிந்து வைத்திருந்தார். வோல்த்தேயரின் சமாதியைத் பூப்போல துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு, ரூஸோவின் சமாதியைச் சுத்தம் செய்ய அபினா வந்தபோதுதான், அந்தச் சமாதியின் மீது ஒரு மனிதர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அபினாவின் இருதயம் வழுவி அவரது பருத்த வயிற்றுக்குள் விழுந்த சத்தமோ என்னவோ அவருக்கே கேட்டது. அதே நேரத்தில் அவரது பச்சை குத்தப்பட்டிருந்த தடித்த உதடுகள் அகலப் பிளந்து அப்படியே நின்றன. என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறியவர் ‘பொன்ஜூர் ரூஸோ’ எனத் திறந்த வாய் மூடாமலேயே முணுமுணுத்துவிட்டு, வாயைக் கைகளால் பொத்தியவாறே ஓடிச் சென்று, படிகளில் ஏறி மூச்சிரைப்புடன் மணிமண்டபத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மணிமண்டபத்தின் நிர்வாகிகள் இருவர் அலுவலகத்திற்குள் இருந்தார்கள். அபினா தட்டுத்தடுமாறி அவர்களிடம் சொன்னார்: “பொன்ஜூர்…. தனது சமாதியிலிருந்து… திரு. ரூஸோ வெளியே வந்துவிட்டார்.” 2 பந்தியோன் மணிமண்டபத்துள் ரூஸோவின் சமாதிமீது படுத்திருந்தவரது பெயர் கதிரன் சிவபாலன். அவருக்கு நாற்பத்தைந்து வயது. சற்றே வழுக்கையான தலையும் ஒல்லியான உடலும் கொண்ட கரிய மனிதர். “இந்தக் கறுப்பனையா அந்தப் பெண்மணி ரூஸோ எனச் சொன்னார்?” என ஆச்சரியத்துடன் மணிமண்டபத்தின் நிர்வாகி தனது உதவியாளரிடம் கேட்டார். பீட்ரூட் போன்ற நிறமும் உருவமும் கொண்ட உதவியாளர் சதை மடிப்புகள் விழுந்த தனது தாடையைத் தடவியவாறே சற்று யோசித்துவிட்டு “ரூஸோ அடிமை ஒழிப்பு குறித்து நிறைய எழுதியிருப்பதால், ரூஸோ ஒரு கறுப்பரே என அந்தப் பெண்மணி நினைத்திருக்கக்கூடும்” என்றார். “அந்தப் பெண்மணிக்கு எழுதப் படிக்கவே தெரியாதே… வேலை ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பம் வைக்கவே அவருக்குத் தெரியாது. ஒட்டகம் போன்ற ஏதோவொன்றைத்தான் வரைந்து வைக்கிறார்” என்றவாறே நிர்வாகி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே நிமிடங்களில் பாரிஸ் நகரக் காவல்துறையினர் அங்கே வந்துவிட்டார்கள். சென்ற வாரம்தான் கொள்ளையர்கள் ‘லூவர்’ அருங்காட்சியகத்திற்குள் நோகாமல் நுழைந்து நெப்போலியனின் மனைவியின் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்… அதற்குள் பந்தியோன் மணிமண்டபத்தில் ஒரு சம்பவமா எனக் காவல்துறையினர் அலறியடித்துக்கொண்டு அங்கே வந்திருந்தார்கள். சமாதிமீது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கதிரன் சிவபாலனை உலுக்கி எழுப்பிய காவல்துறை அதிகாரிகள் அவரது கைகளில் விலங்கை மாட்டிவிட்டு, மணிமண்டபத்தின் அலுவலக அறைக்கு அழைத்துவந்து உட்கார வைத்தார்கள். சிவபாலனுக்கோ எந்தப் பதற்றமுமில்லை. அவர் உற்சாகமாகத் தனது கால்களை ஆட்டியவாறே “ஒரு தேநீர் கிடைக்குமா?” என ஆங்கில மொழியில் கேட்டார். காவல்துறையினர் அவருக்குத் தேநீர் வழங்கிவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினார்கள். 3 பாரிஸில் ‘லிபி வட்டம்’ என்றொரு தமிழ் இலக்கியக் குழுவினர் ஏழெட்டு வருடங்களாகவே இயங்கிவருகிறார்கள். நாவல் – சிறுகதை வாசிப்பு, விமர்சனம் என அவ்வப்போது கூட்டங்களை நடத்துவார்கள். இந்தக் கூட்டங்களுக்குப் பதினைந்து – இருபது பேர் வருவார்கள். லிபி வட்ட உறுப்பினர்களே ஏழெட்டுப் பேர் இருக்கிறார்கள். எல்லாக் கூட்டங்களிலும் அதே முகங்கள்தான் திரும்பத் திரும்பக் காணப்படுகின்றன. லிபி வட்டத்தினர் உலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் தீவிரமான கருத்துகளைக் கொண்டவர்கள். பேச்சைத் தொடங்கும்போதே “எனக்கு தஸ்தயேவ்ஸ்கி மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, அந்தோனியோ கிராம்ஷி மீது அதிருப்தி இருக்கிறது” என்றெல்லாம் அதீத தன்நம்பிக்கை மிளிரப் பேசக் கூடியவர்கள். தேசியம், தலித்தியம், பெண்ணியம், மார்க்ஸியம், பின்நவீனத்துவம் என எல்லாவற்றைப் பற்றியுமே அவர்களிடம் ஆளுக்கொரு திட்டவட்டமான கருத்து இருந்தது. அவர்கள் எல்லோருமே வாரத்திற்கு ஆறு நாட்கள் கடுமையாக வேலை செய்பவர்கள். இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பது அரிது என்றாலும், இலக்கியத்திற்காகக் காசு செலவழிப்பதில் பின்நிற்காதவர்கள். தமிழில் வெளிவரும் அநேகமான நூல்களை பாரிஸ் தமிழ் புத்தகக் கடைகளில் அறாவிலைக்கு வாங்கியாவது வாசித்துவிடுவார்கள். வாசித்தவற்றைத் தங்களுக்குள் தீவிரமாக விவாதிப்பார்கள். அவர்களுடைய பொதுவான கருத்துப்படி தற்போது இலங்கைத் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுணக்கத்தை உடைப்பதற்குத் தங்களால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தபோதுதான், இலங்கையில் சிறுகதைப் பரிசுப் போட்டியொன்றை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, ஆறுதல் பரிசு என்றெல்லாம் கொடுத்தால் ஆறுதலுக்காக எழுதுபவர்களும் கதைகளை எழுதி எல்லோரது நேரத்தையும் வீணடிப்பார்கள் என்பதால் ஒரேயொரு கதைக்குத்தான் பரிசு. மரத்தில் ஒரேயொரு கனி என்றால்தான் பறவைகளின் கவனம் சிதறாது என்பது லிபி வட்டத்தினரின் எண்ணம். தேர்வு செய்யப்படும் கதைக்கு இலங்கை நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபாயுடன் விருதுக் கேடயமும் கொடுப்பது எனவும் பரிசு பெறும் எழுத்தாளருக்கு பிரான்ஸ் விசா கிடைத்தால், அவரைப் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்துக் கவுரவித்து அனுப்புவது எனவும் முடிவு செய்தார்கள். லிபி வட்டத்தினரிடம் பரிசுப் போட்டி வைப்பதைத் தவிர இலக்கியத்திற்குப் பொருந்தாத இன்னொரு குணமும் உண்டு. அவர்கள் நேரம் தவறாமையை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பார்கள். குறித்த நேரத்திற்கு ஒரு பார்வையாளர்கூட வரவில்லை என்றாலும், வெற்று நாற்காலிகளை வைத்துக்கொண்டே கூட்டத்தை ஆரம்பிக்க அவர்கள் தயங்கியதில்லை. அவர்களுடைய கூட்டத்திற்கு வருவதென்னவோ பத்திருபது பேர் என்றாலும், ஒரு மாநாட்டையே நடத்துவது போன்ற கண்டிப்பான திட்டமிடலுடன்தான் ஒழுங்குகளை மேற்கொள்வார்கள். சிறுகதைப் போட்டிக்கு நடுவர்களாக வெளியாட்களை அவர்கள் நியமிக்கவில்லை. எங்களுடைய பரிசு, எங்களுடைய பணம், எங்களுடைய முயற்சி என்பதால் நாங்களே சிறந்த கதையைத் தீர்மானிப்போம் என்பது அவர்களது நிலைப்பாடு. அதற்கான தகுதி அவர்களுக்கு இல்லையென்று ஒரேயடியாகச் சொல்லிவிடவும் முடியாது. அவர்களைப் பேச விட்டால் புதுமைப்பித்தனை விட எஸ்.பொன்னுத்துரை ஏன் முக்கியமானவர் என ஒருநாள் முழுவதும் விரிவாகப் பேசுவார்கள். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில்தான் சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கதிரன் சிவபாலன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதியிருந்த ‘மாறிலி’ என்ற சிறுகதைதான் பரிசு பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளில் ஈடுபடுவோரின் கனவான் தந்திரங்களைச் சித்திரித்து யதார்த்தமாகவும் எள்ளலாகவும் அந்தச் சிறுகதை எழுதப்பட்டிருந்தது. எழுதியவரின் முதற்பெயர் ‘கதிரன்’ என இருப்பதால் அவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராகவே இருப்பார் என லிபி வட்டத்திலுள்ள ஒவ்வொருவருமே தமக்குள் எண்ணினார்களே தவிர, அந்த எண்ணத்தை எவருமே அடுத்தவருக்கு வெளிப்படுத்தவில்லை. சிவபாலனுக்கு பிரான்ஸ் விசாவைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடக்கியபோதுதான், சிவபாலன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக இருக்கிறார் என்பது லிபி வட்டத்தினருக்குத் தெரிய வந்தது. அரசாங்க உத்தியோகத்தர் என்பது பிரான்ஸ் விசா கிடைப்பதற்குப் பெரும் சாதகமான விஷயம். தவிரவும், லிபி வட்டம் கலாசார அமைப்பாக பிரான்ஸில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் சாதகமான விஷயமே. லிபி வட்டத்தினரால் ‘ஸ்பொன்சர்’ கடிதம் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டு சிவபாலனுக்கும் கொழும்பிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், விசா கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்திலேயே லிபி வட்டத்தினர் இருந்ததால், பரிசளிப்பு விழாத் தேதியை பொதுவெளியில் அறிவிக்காமலேயே இருந்தார்கள். பிரெஞ்சுத் தூதரகத்தில் நூறு கேள்விகள் கேட்டுக் குடைந்த பின்பாக சிவபாலனுக்கு இரண்டு வாரங்களுக்கான விசா வழங்கினார்கள். அந்தச் செய்தியை அறிந்ததும் லிபி வட்டத்தினர் உற்சாகத்தில் குதித்தனர். பரிசளிப்பு விழாவுக்கான தேதி உடனடியாகவே பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது. சிவபாலனை இரண்டு வாரங்கள் கவுரமாகவும் சிறப்பாகவும் பாரிஸில் உபசரித்து, எந்தக் குறையுமில்லாமல் விழாவை நடத்தி முடித்து, விருதுக் கேடயத்துடன் அவரை இலங்கைக்கு வழியனுப்புவது வரையான திட்டங்களை லிபி வட்டத்தினர் பார்த்துப் பார்த்துச் செதுக்கத் தொடங்கினார்கள். சிவபாலன் பாரிஸிலுள்ள தனது உறவினர்களின் வீட்டில் தங்கவே விரும்புவார் என்றே லிபி வட்டத்தினர் நினைத்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் தனக்கு உறவினர்கள் அய்ரோப்பாவிலேயே கிடையாது என்று சிவபாலன் தொலைபேசியில் லிபி வட்டத்தினரிடம் தெரிவித்தபோது, அவர்களுக்கு இது புதினமாகக் கிடந்தது. அய்ரோப்பாவில் சொந்தக்காரர்களே இல்லாத ஒரு யாழ்ப்பாணத்தானா என்று அவர்கள் வாயைப் பிளந்தார்கள். “சிவபாலன் மலையகத்தைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம்… இப்ப யாழ்ப்பாணத்தில படிப்பிக்கலாம்” என்று ஒருவர் தனது ஊகத்தை வெளியிட்டார். லிபி வட்டச் செயற்பாட்டாளர் கருணானந்தன் வீட்டில் முதல் வாரமும், இன்னொரு செயற்பாட்டாளரான அலெக்ஸ் வீட்டில் அடுத்த வாரமும் சிவபாலனைத் தங்க வைப்பதாக முடிவானது. பாரிஸைச் சுற்றிக்காட்டும் பொறுப்பை ‘பசுமை’ மதியரசு ஏற்றுக்கொண்டார். இதற்காகவே வேலையிலிருந்து இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்க அவர் முடிவு செய்திருந்தார். லிபி வட்டத்தினர் எல்லோருடைய வீட்டிலும் முறைவைத்து சிவபாலனை விருந்துக்கு அழைப்பது என்பது அவர்களது பெரு விருப்பம். இந்தத் திட்டங்கள் எல்லாவற்றையும் பிசகில்லாமல் வகுத்த பின்பும் அவர்களிடம் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது. எழுத்தாளர் சிவபாலன் எப்படியான மனிதராக இருப்பார்? தொலைபேசியில் பேசும்போது கொஞ்சம் அப்பாவித்தனமாகவும் அதேவேளையில் தன்னடக்கத்துடனும் பேசுகிறார். “எனக்கும் இலக்கியத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைப் பாருங்கோ… நான் படிச்சது கணிதம், படிப்பிக்கிறதும் கணிதம். பின்ன, கொரோனா காலத்தில வீட்டுக்கேயே அடைஞ்சு கிடைக்கேக்க என்ர மனிசி வாசிக்கிற கதைப் புத்தகங்களில சிலதை எடுத்து வாசிச்சுப் பார்த்திருக்கிறன். உண்மையா நடந்த ஒரு சம்பவத்தை வைச்சுக் கதை எழுதியிருக்கிறன். எனக்கு நீங்கள் தந்த பரிசு இலக்கியத்துக்காக கிடைச்சது இல்ல… உண்மைக்கு கிடைச்சதுதான்” என்றார். தொலைபேசியில் பேசியதைப் போலவேதான் நேரிலும் சிவபாலன் இருந்தார். மிக மென்மையான குரலிலும் தொனியிலும் பேசினார். அடிக்கடி அலைபேசியை உருட்டி அதில் ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஏதாவது கேள்வி கேட்டால் மிக நீளமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். இருபது வருட ஆசிரியப் பணியால் இந்தப் பண்பு அவரிடம் வந்திருக்கலாம். சிவபாலன் பிரான்ஸுக்கு வந்த அன்றிரவு, லிபி வட்டத்தின் பொருளாளர் காண்டீபன் வீட்டில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேசையில் மதுவும் இருந்தது. தனக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்று சிவபாலன் புன்னகையுடன் சொன்னார். அன்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவபாலனுக்குத் தூக்கம் கண்களை அழுத்தினாலும் புன்னகையுடன் சமாளித்துக்கொண்டிருந்தார். பேச்சு சிவபாலனின் ‘மாறிலி’ சிறுகதையில் வந்து நின்றது. கருணானந்தனே முதலில் ஆரம்பித்தார். “உண்மையில மாஸ்டர்… அற்புதமான ஒரு கதை எழுதியிருக்கிறியள். படிச்சால் கண்ணீரும் வருகுது ஆனால், அதை மீறிக்கொண்டு கோவமும் வருகுது. உதுதான் கதையின்ர வெற்றி. டொமினிக் ஜீவாட கதையளிலும் இந்தப் பண்பு இருக்கு. ஒரு தலித்துக்குக் கிடைக்கிற கொடுமையான வாழ்க்கை அனுபவம் எங்கிட லிபி வட்டத்தில இயங்கிற ஒருத்தருக்கும் இல்லை எண்டதுதான் உண்மை. ஆனால், உங்கிட கதை அந்த அனுபவத்தை எங்களில தொற்ற வைச்சிற்றுது. ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டுது. அதுதான் எழுத்தின்ர வீரியம்! கலையின்ர தரிசனம்! பெரிய விஷயம் மாஸ்டர்!” மூர்த்திக்கு உரத்த குரல். “மாஸ்டர் உங்கிட கதையில ‘காடல்முனை’ எண்டொரு ஊர் வருது. நான் கேள்விப்பட்டதேயில்ல…” “கேள்விப்பட்டிருக்க மாட்டியள். அதொரு சின்னக் கிராமம். வடமராட்சியில இருக்கு. அதுதான் என்ர ஊர்” என்றார் சிவபாலன். சிவபாலனை நாளுக்கு ஒவ்வொரு இடமாக ஈஃபிள் கோபுரம், அருங்காட்சியகங்கள், வெர்சாய் அரண்மனை என்றெல்லாம் அழைத்துச் சென்று சுற்றிக்காட்ட வேண்டும் என்று மதியரசு திட்டமிட்டிருந்தார். அதன்படியே ஈஃபிள் கோபுரத்திற்குப் போய்விட்டு வரும் வழியில், தமிழர்களின் கடைத்தெருவான லாசப்பலுக்கு சிவபாலனை தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். சிவபாலன் ஈஃபிள் கோபுரத்தைப் பார்த்தபோது “இதைப் பார்த்துப்போட்டு மகாத்மா காந்தி ‘இரும்புக் குப்பை’ எண்டு சொன்னவராம்… சரியாத்தான் சொல்லியிருக்கிறார்” என்றார். அந்தக் கோபுரத்தையே பார்த்து ஆச்சரியப்படாத சிவபாலன் தமிழர்களின் கடைத்தெருவைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார். பாரிஸில் இப்படி ஓர் இடம் இருக்குமென அவர் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. தமிழர்களின் கடைத்தெரு என்பதை விடக் கடைத் தெருக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழெட்டுத் தெருக்களில் கடைகள் பரவியிருந்தன. நடுவிலே சிங்களத்தில் பெயர்ப் பலகை போட்டு இரண்டு சிங்களக் கடைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் அந்த வீதிகளிலே தேநீர் அருந்தியவாறும், வெற்றிலை சப்பியவாறும், வீதியில் நின்று அரட்டையடித்தவாறும் இருந்தார்கள். சிவபாலனின் கணித மூளை கடகடவெனக் கணக்குப் போட்டு லாசப்பல் டவுன், பருத்தித்துறை டவுனைவிடப் பெரிது எனக் கண்டுபிடித்தது. அடுத்தநாளிலிருந்து மதியரசு எங்கேயாவது அருங்காட்சியம் அல்லது அரண்மனைக்குப் போகலாமென்றால், சிவபாலன் “நாங்கள் லாசப்பலுக்குப் போவம்” என்றார். “மாஸ்டர் அங்க என்ன கிடக்கெண்டு அதைப் பார்க்கோணும் எண்டுறியள்?” என்று மதியரசு சற்றுக் குழப்பத்துடனேயே கேட்டார். “தமிழ் சனங்களைப் பார்க்க ஆசையாக்கிடக்கு.” “ஹோம் சிக்! மாஸ்டருக்கு ஊருக்குப் போற எண்ணம் வந்திற்றுது போல… இன்னும் நாலு நாள்தானே… கூட்டத்தை முடிச்சுக்கொண்டு போயிடலாம் மாஸ்டர். கவலைப்படாதேயுங்கோ” என்றார் மதியரசு. 4 பரிசளிப்புக் கூட்டத்தில் சிவபாலன் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்: “முதலில் லிபி இலக்கிய வட்டத்து நண்பர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எடுத்த முயற்சியால்தான் நான் இப்போது உங்கள் முன்னே நின்று இந்தக் கவுரவத்தைப் பெறுகிறேன்…” சிவபாலன் பேசி முடித்தபோது, மதியரசுவுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. யாரும் பார்க்காதவாறு இரகசியமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். ‘சிவபாலனிடம் பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கலாம்’ என்று அறிவிக்கப்பட்டபோது, சபை சர்வ அமைதியாக இருந்தது. வழமையாகவே இப்படித்தான் நடக்கும் என்பது லிபி வட்டத்தாருக்கும் தெரியும். அந்த அமைதியை உடைத்தெறியும் தந்திரமும் அவர்களுக்கு அத்துப்படி. அவர்களில் ஒருவரே முதல் கேள்வியைக் கேட்டுவிட்டால், பின்பு சபையோர் நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளைக் கேட்பார்கள். கேட்காவிட்டால் தமது மாண்பு குறைந்துவிடும் என்பது போல் கேள்விகளுடன் முண்டியடிப்பார்கள். எனவே, முதல் கேள்வியை கருணானந்தனே கேட்டார்: “நாற்பது வயதுக்குமேலே இலக்கியம் எழுத வந்து வெற்றிபெற்ற ஒரேயொரு எழுத்தாளர் என கி.ராஜநாராயணனைச் சொல்வார்கள். நீங்கள் நாற்பத்தைந்து வயதிலே உங்களது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறீர்கள். இது தொடருமா?” சிவபாலன் தனது வழக்கப்படி நீளமாகவே பதிலளித்தார். “நான் எழுதியது எனது சொந்தக் கதை. விரக்தியின் உச்சத்தில் இருந்து நான் எழுதிய கதை. இருபது வருடங்களுக்கு மேலாக நான் ஆசிரியராக இருக்கிறேன். என்னுடைய கல்வித் தகமைக்கும் பணிமூப்புக்கும் உரிய பதவி எனக்குக் கிடைக்காமலேயே இருக்கிறது. இப்போது நான் தலைமையாசிரியராக ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் தலைமையாசிரியராக வரக்கூடாது என்பதற்காக ஆதிக்கசாதியினர் பல தந்திரமான நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள். இது யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மாவட்டக் கல்வித்துறையில் அதிகாரம் உயர்ந்த சாதி எனச் சொல்லப்படுபவர்களிடமே குவிந்திருக்கிறது. இதற்கு எதிராக நான் பல வழிகளில் போராடிப் பார்த்துவிட்டேன். எல்லாத் திசைகளிலும் நிராகரிப்பே எனக்குக் கிடைத்தது. என்னுடைய கதையில் வரும் ஆசிரியர் கோபமுற்றுத் தனது வேலையையே ராஜினாமா செய்துவிடுகிறார். நான் விரக்தியோடு ஒரு கதை எழுதினேன். அவ்வளவுதான்.” “அய்யா… யாழ்ப்பாணத்தில் இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என்கிறார்களே. கதைக்காக நீங்கள் மிகைப்படுத்திச் சொல்கிறீர்களா?” என்றொரு கேள்வி சபையிலிருந்து வந்தது. “இப்போது சாதி ஒடுக்குமுறை இல்லை என உங்களிடம் யார் சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், சொன்னவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவராக நிச்சயமாக இருக்கமாட்டார். வட்டுக்கோட்டையில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புத் தாக்கப்பட்டது, ஒடுக்கப்பட்டவர்கள் தேரில் வடம் பிடிப்பதைத் தவிர்ப்பதற்காக இராணுவத்திரை, இயந்திரத்தை வைத்துத் தேர் இழுத்த சம்பவங்கள், ஒடுக்கப்பட்ட சாதியினரின் குடியிருப்புக்கு நடுவே ஆதிக்க சாதியினரின் சுடுகாடு, சாமிக்குப் பூ வைத்த ஒடுக்கப்பட்ட சாதி இளைஞன் தாக்கப்பட்டது போன்ற மிகச் சில சம்பவங்கள் மட்டும்தான் வெளியே வந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். உயர்சாதி எனச் சொல்லப்படுபவர்கள் எங்களைச் சக மனிதர்களாகவே மதிப்பதில்லை என்பதே உண்மை.” கேள்விகளுக்குச் சிவபாலனின் பதில்கள் எப்போதும் போலவே மிக விரிவாகவும் தெளிவாகவுமிருந்தன. ஒவ்வொரு பதிலுக்கும் லிபி வட்டத்தினர் கைதட்டினார்கள். விழா முடிவில் ஒட்டுமொத்தச் சபையுமே எழுந்து நின்று கைதட்டி, சிவபாலனுக்கு மரியாதை செலுத்தியது. 5 வியாழக்கிழமை சிவபாலனின் விசா முடிகிறது. அன்றுதான் அவர் இலங்கைக்குத் திரும்ப வேண்டும். திங்கட்கிழமை காலையில், சிற்பக்கலையில் சிறந்த ‘நோத்துறு டாம்’ தேவாலயத்தைப் பார்வையிட சிவபாலனை, மதியரசு அழைத்துச் சென்றிருந்தார். “கெதியாக் கோயிலைப் பார்த்து முடிச்சிட்டு லாசப்பலுக்குப் போய் தமிழ் ஆக்களைப் பார்ப்பம்” என்றார் சிவபாலன். அவர்கள் காரில் லாசப்பலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சிவபாலன் அலைபேசியில் ஏதோ ஆராய்ந்தவாறே வந்தார். பின்பு அவர் மதியரசுவிடம் “நான் இப்பிடியே பிரான்ஸிலேயே நிக்கலாம் எண்டு பார்க்கிறன்…நீங்கள் ஃப்ளைட் டிக்கெட்ட கான்ஸல் பண்ணுங்கோ” என்றார். லாசப்பலில், அம்மாளாச்சி உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “மாஸ்டர் ஒரு நிமிசம் இருங்கோ… இந்தா வாறன்” எனச் சொல்லிவிட்டு மதியரசு உணவகத்திற்கு வெளியே வந்து, மூர்த்தியை அலைபேசியில் அழைத்து “மாஸ்டர் இங்கேயே நிற்கப் போறாராம்” என்றார். “நிற்கப் போறாரோ? இதென்னடாப்பா கரைச்சல்” என்று பதறினார் மூர்த்தி. மூர்த்தியின் மூலமாக லிபி வட்டத்தினருக்கு உடனடியாகச் செய்தி பரவியதும், அவர்கள் எல்லோருமே கலவரமானார்கள். சிவபாலன் பிரான்ஸ் விசா வாங்குவதற்காக ‘ஸ்பொன்சர்’ கடிதம் கொடுத்த தங்களுக்கு எதுவும் சட்டச் சிக்கல் ஏற்படுமா எனக் கலந்தாலோசித்தார்கள். சட்டச் சிக்கல் வராது என்பது தெளிவானதும் கொஞ்சம் நிம்மதியானார்கள். எனினும், பரிசளிப்பு விழாவுக்கு என அழைத்துவிட்டு, விசா முடிந்த பின்பும் அவரை இங்கேயே தங்கவைப்பது நியாயமற்றது என்ற முடிவுக்கே அவர்கள் வந்தார்கள். அன்றிரவு மகிந்தன் வீட்டில் சிவபாலனுக்கு விருந்து ஏற்பாடாகியிருந்தது. இதைப் பற்றி அங்கே பேசலாம் என்று லிபி வட்டத்தினர் முடிவெடுத்தார்கள். வழமைபோல அன்று விருந்து உற்சாகமாக இல்லைத்தான். ஆனால், சிவபாலன் வழமையைவிட உற்சாகமாக இருந்தார். மூத்தவர் கருணானந்தனே பேச்சைத் தொடக்கினார். “மாஸ்டர்… இஞ்சயே நிற்கப்போறதாச் சொன்னீங்களாம்… மெய்யே?” “ஓம். அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறன்!” “உங்களுக்கு விசா முடியுதெல்லே மாஸ்டர்… பிறகு எப்பிடி?” “நான் இஞ்ச அரசியல் தஞ்சம் கேட்கலாம் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.” சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அலெக்ஸ் அந்த அமைதியை உடைத்தார். அவருடைய வீட்டில்தான் சிவபாலன் இப்போது தங்கியிருக்கிறார். “இலங்கையில சண்டை முடிஞ்சு பதினாறு வருசமாகுது மாஸ்டர். நீங்கள் நினைக்கிற மாதிரி லேசா அகதி விசா எடுக்க ஏலாது. கிடைக்காது எண்டதுதான் உண்மை.” “நான் சண்டையைக் காரணம் காட்டி விசா கேட்கப் போறதில்ல. சமூகப் பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை. அதைக் காரணம் காட்டியும் விசா கேட்கலாம் எண்டு ஜெனிவா அகதிச் சட்டத்தில இருக்குத்தானே…” “அப்பிடி இல்லையே மாஸ்டர்…” “இருக்குதுங்கோ… உங்களுக்குத் தெரியாதே? நான் ‘நெட்’டில எல்லாம் தேடி வாசிச்சுத்தான் இந்த முடிவெடுத்தனான்.” “ஆனால், நீங்கள் இலக்கிய விழாவுக்கு எண்டு விசா எடுத்து வந்தனிங்கள். பிறகு என்னெண்டு அகதி விசா கேட்கலாம்?” “முந்தியும் இலங்கையிலயிருந்து வேற வேற இலக்கிய விழாக்களுக்கு விசா எடுத்து வந்த சில ஆக்கள் அகதி விசா போட்டிட்டு இங்கேயே இருக்கினம்தானே?” “அதுவும் ‘நெட்’டில வந்திற்றுதோ?” என்று கொஞ்சம் சலிப்புடன்தான் கேட்டார் மூர்த்தி. “அது பிழைதானே மாஸ்டர்… சட்டவிரோதம்” என்றார் கருணானந்தன். “அகதியா வாற ஆக்கள் எல்லாருமே சட்டவிரோதமா இப்பிடி ஏதாவதொரு வழியிலதானே இங்க வாறது. நீங்களும் அப்பிடித்தானே வந்திருப்பீங்கள்?” “உண்மைதான் மாஸ்டர்… ஆனால், அகதியா வாற அளவுக்கா இலங்கையில சாதிப் பிரச்சினை இருக்குது?” என்று வெடுக்கெனக் கேட்டார் மகிந்தன். “இருக்குது எண்டுதானே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில சொன்னனான்!” “மாஸ்டர்… நீங்கள் அங்க படிப்பிக்கிறீங்கள். அந்த நல்ல வேலையை விட்டிட்டு இஞ்ச நிண்டு எங்களோட சேர்ந்து கூட்டித் துடைச்சு வேலை செய்யப் போறீங்களே?” “மரியாதையோட கூட்டித் துடைக்கலாம் எண்டு நினைக்கிறன். இந்த ரெண்டு கிழமையா ஊரைச் சுத்திப் பார்த்திட்டன். எல்லாருக்கும் எல்லாரும் மரியாதை. உங்கிட எல்லாற்ற வீட்டையும் வந்து நான் சாப்பிடுறன், தங்குறன். என்ன சாதியெண்டு நீங்களும் பார்க்கயில்ல. நானும் பார்க்கயில்ல. லாசப்பலைப் பார்க்க எவ்வளவு சந்தோசமாக் கிடக்கு! என்னென்னவோ சாதி ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்து ஒரு வலுவான சமூகமாக உருவாகியிருக்கிறியள். அதுதான், லாசப்பல் போக வேணும் எண்டு நெடுகவும் மதியரசிட்டக் கேக்கிறனான். எனக்கு அகதி விசா கிடைச்சா என்ர குடும்பத்தையும் இஞ்ச கூப்பிடலாம். நான் படுற அவமானத்தை என்ர பிள்ளையளும் அங்க கிடந்து படவேண்டாம். சாதி பார்க்காம வாய்ப்புத் தாற நாடு இது!” “மாஸ்டர்… இந்த நாட்டில நான் முப்பது வருசம் அகதியாக இருந்த அனுபவத்தில சொல்லுறன்…” என்று மூர்த்தி என்னவோ சொல்ல ஆரம்பிக்க “நான் மூவாயிரம் வருசமா அகதி” என்றவாறே மூர்த்தியின் கண்களைப் பார்த்தார் சிவபாலன். கருணானந்தன் முடிவாகச் சொன்னார்: “மாஸ்டர்! நீங்கள் குறை நினைக்க வேணாம். நாங்கள் ஸ்பொன்சர் கடிதம் தந்துதான் நீங்கள் இஞ்ச வந்திருக்கிறியள். தயவு செய்து நீங்கள் திரும்பிப் போகத்தான் வேணும். பின்னடிக்குப் பிரச்சினை வேணாம்!” சிவபாலன் அமைதியாக இருந்தார். லிபி வட்டத்தினர் தாங்கள் ஒழுங்கமைத்த திட்டப்படியே செயலாற்றினார்கள். செவ்வாய்கிழமையன்று ‘கொன்கோர்ட்’ சதுக்கத்தைப் பார்க்க சிவபாலனை மதியரசு அழைத்துச் சென்றார். எக்காரணம் கொண்டும் லாசப்பலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என மதியரசுவுக்கு லிபி வட்டத்தினர் அறிவுறுத்தியிருந்தனர். புதன்கிழமையன்று காலையில் ‘வைட் சேர்ச்’ பார்க்க சிவபாலனை அழைத்துச் சென்ற மதியரசு மாலை நான்கு மணியளவில், பந்தியோன் மணிமண்டபத்தைப் பார்க்கச் சிவபாலனை அழைத்துச் சென்றார். அதுதான் சிவபாலன் பாரிஸில் பார்க்கப் போகும் கடைசி இடம். நாளை அதிகாலையில் இலங்கைக்குப் புறப்படும் விமானத்தில் அவரை வழியனுப்பிவைக்க லிபி வட்டத்தினர் எல்லோருமே விமான நிலையத்திற்குச் செல்வதாகத் திட்டம். பந்தியோன் மணிமண்டபத்துள் நுழைவதற்குப் பார்வையாளர்கள் பெருங் கூட்டமாகக் காத்திருந்தார்கள். நீண்ட வரிசையில் நின்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு மதியரசுவும் சிவபாலனும் உள்ளே நுழைந்தார்கள். இன்னும் ஒரு மணிநேரத்தில் மணிமண்டபத்தை மூடிவிடுவார்கள். சன நெரிசலோடு நெரிசலாக அவர்கள் சிலுவை வடிவப் பாதாள மண்டபத்தில் சமாதிகளைப் பார்த்துக்கொண்டு மெதுமெதுவாக நகரும்போதே, ‘மணிமண்டபத்தை மூடும் நேரமாகிவிட்டது, பார்வையாளர்கள் வெளியேறவும்’ என்ற அறிவிப்பு ஒலிபெருக்கியில் கேட்டது. பார்வையாளர்கள் குறுகிய படிகளில் மேலேறிச் சென்று கும்பலாக வெளிவாசலை நோக்கி நகர்ந்தார்கள். சிவபாலன் மதியரசுவைப் பார்த்தார். மதியரசு வெளிவாசலில் பார்வையை வைத்தவாறே முன்னே நகர்ந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்த சிவபாலன் அப்படியே திரும்பி, சனக் கும்பலுக்குள் நுழைந்து பாதாள மண்டபத்தை நோக்கி நடந்தார். பாதாள மண்டபத்திற்குள் எங்கெல்லாம் கமெராக்கள் இருக்கின்றன என அவர் முன்பே கணக்குப் போட்டு வைத்திருந்தார். அந்தக் கமெராக்களின் பார்வையில் சிக்காமல் நடந்து சென்று ரூஸோவின் சமாதிக்குப் பின்னால் இருளில் மறைந்துகொண்டார். 6 பந்தியோன் மணிமண்டபத்தின் அலுலக அறைக்குள் சிவபாலனை விசாரணை செய்து முடித்த காவல்துறை அதிகாரி பெருமூச்சொன்றை வெளியேற்றியவாறே சிவபாலனின் கைகளிலிருந்த விலங்கை அகற்றிவிட்டு, ஆங்கில மொழியில் சொன்னார்: “திரு. கதிரன் சிவபாலன்! விமானத்தில், ரயிலில், கப்பலில், காய்கறி மூட்டைக்குள் மறைந்திருந்துவிட்டு அகதித் தஞ்சம் கோரியவர்களை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். சமாதிக்குப் பின்னால் மறைந்திருந்து தஞ்சம் கோரும் ஒருவரை நான் இப்போதுதான் சந்திக்கிறேன். நல்வரவாகுக! இந்தத் துண்டுச் சீட்டில் எழுதப்பட்டிருக்கும் தொண்டு நிறுவனம் இங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் இருக்கிறது. நீங்கள் அங்கே சென்றால், முறையாக அகதித் தஞ்சம் கோருவதற்கு அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.” சிவபாலன் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் மணிமண்டபத்தின் வெளிவாசலை நோக்கி நடந்தார். அந்த வாசலின் கதவுகள் கண்ணாடிகளாலானவை. கண்ணாடியைத் துடைத்து அபினா சுத்தம் செய்துகொண்டிருந்தார். கண்ணாடியில் மங்கலாக சிவபாலனின் உருவம் தோன்றியபோது, அந்த உருவத்தைப் பார்த்து “பொன்ஜூர் ரூஸோ” என்றார் அபினா. (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16-ஆவது மாநில மாநாடு சிறப்பு மலரில் வெளியாகியது. டிசம்பர் -2025) https://www.shobasakthi.com/shobasakthi/2026/01/24/பொன்ஜூர்-ரூஸோ/?fbclid=IwdGRleAPhQjZleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEelNjOvGfSYhzJwAYJxWdJm9TyKgcRk8KiKMQxqneSDw-oVgxu_mlHIvnSlhg_aem_TPU71sFRoGyA0LOMc86Lyg
  23. துடுப்பாடும் ஆனந்தி -இளங்கோ 'டாடி, நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது' என்று மகள் கேட்டபோது தேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் கேள்வி எப்படியோ பிள்ளைகளிடமிருந்து ஒருநாள் கேட்கப்படும் என்று தேவனுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் இவ்வளவு விரைவில் கேட்கப்படும் என்பதைத்தான் தேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் உடல் ஒரு கணம் விதிர்விதிர்த்து, வியர்வையில் தெப்பலாக நனையத் தொடங்கியது. தேவனுடைய மனைவி ஆனந்தி கலகலப்பானவர், செல்வம் கொழித்த குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். அந்தக் குடும்பத்தின் பெயரில் நாட்டின் பல பாகங்களில் பாடசாலைகளும், கோயில்களும் இருந்தன. ஆனந்தியின் தாத்தாவிற்கு பிரிட்ஷ்காரர்கள் 'சேர்' என்று பட்டங்கொடுத்து கெளரவிக்குமளவுக்கு அவர்கள் நாடு முழுதும் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள். தேவன் அப்போது ஒரு பிரபல்யமான கிரிக்கெட் விளையாட்டுக்காரர். வலது கரத்தில் மின்னல் பாய்வதுபோல அவரது துடுப்பு மைதானத்தில் நடனமாடும். அவரின் ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அவருக்கு ஓர் இரசிகர் பட்டாளம் இலங்கையில் இருந்தது. எந்தளவுக்கு சிறந்த கிரிக்கெட்காரராக தேவன் இருந்தாரோ அந்தளவுக்கு பெண்கள் விடயத்தில் 'தீராத விளையாட்டுக்கார'ராகவும் இருந்தார். இரவிரவாக மதுவில் நீராடுவதிலும், விடிய விடிய நடனவிடுதிகளில் பெண்களோடு சேர்ந்து நடனமாடுவதிலும் அலுக்காத ஒருவராக தேவன் இருந்தார். தேவனின் இந்த வித்தைகளைப் பார்க்கும் நண்பர்கள் எல்லாம், 'மச்சான், இவன் மட்டுந்தான் கால்களின் பெறுமதியை கிரிக்கெட்டிலும், நடனத்திலும் சரியாகப் பயன்படுத்துகின்றவன்' என்று பொறாமையில் சொல்லித் திரிவார்கள். இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்கும்போது , விடிய விடிய விழித்திருந்து தேவன் மது அருந்துவதைப் பார்ப்பவர்கள், நாளை இவனால் தள்ளாடாமல் கிரிக்கெட் ஆடமுடியுமா என்று ஐயமுறுவார்கள். ஆனால் மைதானத்திற்குள் வந்துவிட்டால் தேவன் வேறொருவராக விசுவரூபம் எடுத்துவிடுவார். இந்த மனிதனா நேற்று மதுவின் குளியல்தொட்டிக்குள் நீச்சலடித்தான் என்று சந்தேகிக்குமளவுக்கு தேவனின் துடுப்பு பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அப்பால் விளாசித் தள்ளும். அப்போது இலங்கை அணிக்கு சர்வதேசத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்திருக்கவில்லை. ஒருபொழுது ஆஸ்திரேலியா அணி அவர்களின் நட்சத்திர வீரரான டொன் பிராட்மனோடு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட வந்தபோது தேவனே இலங்கை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியில் ஓன்றிரண்டு தமிழர்களே விளையாட இத்தனைகால வரலாற்றில் இடம்பெற அனுமதிக்கப்பட்டபோது, ஒரு தமிழர் அதற்கு ஒருபொழுது தலைமை தாங்கியிருக்கின்றார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும். தேவன் சென்னை சேப்பாக்கத்தில் சாகசம் நிகழ்த்திப் பெற்ற 215 ஓட்டங்கள்தான் அவரை ஓர் நட்சத்திர வீரராக உலங்கெங்கும் மாற்றியது. தேவன் சென்னைக்குப் போனபோது அவரது கையில் ஆடுவதற்கு ஒரு துடுப்பு கூடக் கிடையாது. அவசரமாக அருகிலிருந்த கடையில் துடுப்பை வாங்கிக் கொண்டு மைதானத்துக்குள் நுழைந்திருக்கின்றார். அன்றைய காலங்களில் இந்தியா அணியிடம் இலங்கை அணி மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருந்தது. தேவனின் துடுப்பு காற்றில் எழுதிய கவிதையில் அவர் இரட்டைச் சதத்தை சேப்பாக்கத்தில் பெற்றிருக்கின்றார். தேவனின் ஆட்டத்தில் மெய்சிலிர்த்துப்போன ஒரு சென்னை இரசிகர், அவர் முதல் சதத்தை அடித்தபோது தேவனுக்குப் பிடித்த ரம் போத்தலை அன்பளிப்பாகக் கொடுத்திருக்கின்றார். அதைக் கொடுத்தது மட்டுமில்லை, 'நாளை நீ இரட்டைச் சதத்தை அடிப்பாயானால், நீ பம்பாய் நகரைப் போய்ப் பார்ப்பதற்கான பயணச்செலவும் எனக்குரியது' என்றிருக்கின்றார் அந்தத் தீவிர இரசிகர். தேவன் ரம் போத்தலை தனது காதலியைப் போல உச்சிமோர்ந்து முத்தமிட்டுவிட்டு, 'நாளை மும்பாயிற்கான விமான டிக்கெட்டோடு தயாராக வாருங்கள்' என்று கண்ணைச் சிமிட்டிச் சொல்லியிருக்கின்றார். முதல் நாள் இரவு அருந்திய ரம்மாலோ, இல்லை உண்மையாகவே திறமையாலோ, தேவன் அடுத்தநாள் இரட்டைச் சதத்தை எட்டியிருக்கின்றார். தேவனின் இந்த இரட்டைச் சதத்தை இன்னொரு இலங்கை வீரர் வந்து அதே சேப்பாக்க மைதானத்தில் முறியடிக்க கிட்டத்தட்ட அதற்குப் பிறகு முப்பது வருடங்களாகி இருக்கின்றது. * தேவன் இவ்வாறு ஒரு உச்ச கிரிக்கெட் ஆட்டக்காரராக உயரங்களில் ஏறிப் போனபோது இன்னொருபக்கத்தில் குடும்ப வாழ்வில் அதளபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தார். அவருக்கும் ஆனந்திக்கும் நான்கு பிள்ளைகள் அப்போது பிறந்திருந்தன. தேவனுக்கும் முப்பது வயதைத் தாண்டியிருந்தது. தேவன் மற்ற கிரிக்கெட்காரர்கள் போல ஒரு வேலைக்கு போகவோ, நல்லதொரு குடும்பஸ்தவனாக இருக்கவோ பிரியப்படவில்லை. மனைவியினது பூர்வீகச் சொத்துக்களின் நிமித்தம் அவர் வாழ்க்கை நதி போல மதுவிலும், கிரிக்கெட்டிலும் பொங்கிப் பிராவகரித்துக் கொண்டிருந்தது. ஆனந்தியால் தேவன் வேலைக்குப் போகவில்லை என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ள முடிந்ததென்றாலும், தேவனின் முடிவுறாத பெண்களின் மீதான பித்தை மட்டும் ஒருபோதும் தாங்க முடியாதிருந்தது. தேவனுக்கு அப்போது ஆங்கிலேயப் பின்னணியில் வந்த ஒரு காதலி இருந்தார். அந்தக் காதலியோ விரைவில் ஆனந்தியை விவாகரத்துச் செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்யும்படி தேவனுக்கு நெருக்குவாரம் கொடுத்தபடி இருந்தார். தேவனுக்கு ஆனந்தியின் பணக்காரப் பின்னணியால் கிடைக்கும் செளகரியங்களை விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. எந்த ஆண்தான் குடும்பம் என்ற அமைப்பால் வரும் வசதி வாய்ப்புக்களை விட்டு விலகிச் செல்ல விரும்புவார். தேவனும், மனைவியை ஒரு புறம் வைத்துக்கொண்டு, கிருஷ்ணனைப் போல கோபிகையர்களின் பின்னால் அலைந்தபடி திரிந்தார். திருமணமான புதிதில் தேவனின் இந்த காதல் லீலைகளை கண்டு வெறுத்து, விவாகரத்து வேண்டுமென்று ஆனந்தி தேவனிடம் கோரியிருந்தார். நிலைமை இந்தளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதே என்று சுதாகரித்த இரண்டு பேரினதும் செல்வாக்குள்ள குடும்பங்கள் தலையிட்டுத்தான் அந்த வழக்கை மீளப்பெற வைத்திருந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல, நான்கு பிள்ளைகள் பிறந்தபின்னும் பெண் பித்தில் திளைத்துக் கிடந்த தேவனை என்ன செய்வதென்றும் ஆனந்திக்கும் விளங்கவில்லை. வெள்ளைக்காரப் பெண்ணோடான புதிய காதல் உறவை விட்டுவிட்டு தன்னிடமும் தன் குழந்தைகளிடமும் மீண்டு வரும்படி ஆனந்தி தேவனிடம் மன்றாடியிருக்கின்றார். அது இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற முடிவுவந்தபோதே ஆனந்தி விவாகரத்தை தன் வக்கீல்கள் மூலம் கோரியிருக்கின்றார். இது தேவனின் ஆண் என்கிற மிருகத்தை உலுப்பி எழுப்பியிருக்க வேண்டும். அவர் ஆனந்தியிற்கு மனதாலும் உடலாலும் நிறைய உளைச்சலைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றார். அப்போது ஆனந்தி பொலிஸ் அதிகாரிக்கு ஒரு கடிதத்தை எழுதத் தொடங்கினார்: மதிப்புக்குரிய பொலிஸ் அதிகாரிக்கு, நான் தொலைபேசியில் உங்களிடம் கேட்டதிற்கிணங்க இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். நான் இப்போது எனது கணவர் தேவனிடம் இருந்து விவாகரத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றேன். அவர் தற்சமயம் இங்கிலாந்தில் இருப்பதால் அவரால் இந்த வழக்கிற்கு வரமுடியாதிருக்கின்றது. அவரின் வழக்கறிஞர், தேவன் விரைவில் இங்கிலாந்திருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் வர இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் தேவன் அவரின் தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்து எங்களோடு மீண்டும் வாழப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார். இந்த வீடு எனது சொந்தப்பணத்தில் வாங்கிய வீடாகும். ஒரு விவாகரத்து வழக்கு நிலுவையில் நீதிமன்றத்தில் இருந்தால், எதிர்த்தரப்பை வீட்டில் அனுமதிக்கத் கூடாது என்பது என்பது சட்டமாகும். அத்துடன் எனக்கும் தேவனை எனது வீட்டில் வந்து தங்க அனுமதிக்க வேண்டாம் என்று எனது வழக்கறிஞரால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எனது கணவரை நீண்டகாலமாக நன்கு அறிந்தவள் என்பதால், அவர் எல்லாவித வன்முறையைகளையும் பயன்படுத்தி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கக்கூடும் என்று நான் அச்சமுறுகிறேன். இவ்வாறான சூழ்நிலையில், எனக்கு ஒரு பாதுகாப்பு பொலிஸிடம் இருந்து வேண்டுமென உங்களிடம் கோருகின்றேன். ஏதேனும் ஒரு பிரச்சினை எனது கணவர் மூலம் வருமென்றால் நான் உங்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பேன். அப்போது எனக்குப் பாதுகாப்புத் தர நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். எங்கள் வீட்டில் தொலைபேசி இருக்கின்றது, ஆகவே ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் உங்களுக்கு உடனே தொலைபேசியில் அழைக்க முடியும். மேலும் எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதையும், அவர்களின் பாதுகாப்புக் குறித்தும் நான் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படிக்கு, ஆனந்தி தேவன் * இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்த தேவன் ஐப்பசி மாதம் ஆறாந்திகதி ஆனந்தியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றிருக்கின்றார். அன்றைய இரவை விடுதியில் கழித்த தேவன் ஆனந்தியின் வீட்டுக்குப் போகும்போது விடிகாலை ஒரு மணியாக இருந்திருக்கின்றது தம்பதியினர் இருவரும் அன்றைய இரவை சேர்ந்தே ஒரே வீட்டில் கழித்திருக்கின்றனர். அடுத்த நாள் காலை அவர்களின் இரண்டு பிள்ளைகள் அருகிலிருந்து பாடசாலைக்குச் செல்ல, ஐந்து வயதுக்குள் இருந்த மற்ற இரண்டு பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர். அன்றைய காலை பத்தரை மணியளவில் தேவன் வீட்டிலிருந்து டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். 'அம்மா தலைவலியால் அவதிப்பட்டபடி சமையலறையில் நீண்ட நேரமாக விழுந்து கிடக்கின்றார்' என்று ஆனந்தியின் நான்கு வயது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்குச் சொன்னபோது, அந்த வீட்டுப் பெண்மணி வந்து பார்த்தபோது, சமையலறையில் பக்கத்தில் இருந்த அறையில் ஆனந்தி விழுந்து கிடந்திருக்கின்றார். அவரின் கழுத்தடியில் உலக்கை குறுக்காகக் போடப்பட்டிருந்தது. ஆனந்தியின் உடலில் அசைவுகள் எதுவுமில்லாததைக் கண்டு பயந்து அஞ்சிய அந்தப்பெண்மணி பொலிஸை அழைத்திருக்கின்றார். ஆனந்தியின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்பதை பொலிஸ் உடனே கண்டுபிடித்திருக்கின்றது. ஒரு குடும்பத்துக்குள் கொலை நடக்கும்போது, முதலாவது சந்தேக நபராக கணவராகவோ மனைவியாகவோ இருப்பது சாதாரணம் என்பதால் தேவனை அவரின் நண்பரின் வீட்டில் வைத்து பொலிஸ் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றது. ஆனந்திக்கு வீட்டில் உதவுவதற்கென ஒரு மாதத்துக்கு முன்னரே சிங்களப் பையனான வில்லியம் மாத்தறையில் இருந்து வந்திருக்கின்றான் அப்போதுதான் சமையலுக்கு உதவிக்கென இருந்த வில்லியம் காணாமல் போயிருப்பதைப் பொலிஸ் கண்டுபிடித்திருக்கின்றது. அத்தோடு ஆனந்தி அணிந்திருந்த தாலிக்கொடியும், வளையல்களும் காணாமல் போயிருப்பதும் தெரிந்திருக்கின்றது. ஏன் வில்லியம் தப்பியோடினான், அவனுக்கு இந்த கொலைக்கும் என்ன சம்பவம் என்று அறிய வில்லியமை பொலிஸ் வலைவிரித்துத் தேடியதில் வில்லியமும் அவன் பிறந்த ஊரில் வைத்து பிடிபட்டிருக்கின்றான். மாத்தறையில் வில்லியமைப் கைதுசெய்த பொலிஸ் அவனே நகைகளின் பொருட்டு கொலை செய்தான் என்கின்ற வாக்குமூலத்தை அவனிடமிருந்து பெற்றிருக்கின்றது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனபோது யார் உண்மையில் ஆனந்தியைக் கொலை செய்தார் என்பதில் குழப்பம் வந்திருக்கின்றது. ஒரு கொலை வழக்கு இரண்டு வருடம் சந்தேக நபர்களான இருவரும் சிறைக்குள் இருக்க நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தேவனும் வில்லியமும் சிறைக்குள் இருக்க, ஆனந்தியின் கொலை வழக்கு இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடந்திருக்கின்றது. * தேவனின் சார்பில் பிரபல்யமான வழக்கறிஞர்கள் வந்து தேவன் குற்றமற்றவர் என நிரூபிக்க முயன்றனர். தேவன், ஆனந்தியின் வீட்டை விட்டு வெளியேறிய காலை பத்தரைக்குப் பின்னரே ஆனந்தி கொலை செய்யப்பட்டார் என்று சாட்சியங்களின் மூலம் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். முக்கியமாக தேவனை கூட்டிக்கொண்டு போக காலையில் டாக்ஸிக்காரர் வந்தபோது, ஆனந்தி வாசலடியில் நின்று கையசைத்தார் என்று சொல்லப்பட்டது. தேவன் வீட்டை விட்டுக் கிளம்பியபோது ஆனந்தி உயிரோடு இருந்தார், ஆகவே தேவன் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை என்று டாக்ஸிக்காரரின் சாட்சியத்தை முன்வைத்து தேவனின் வழக்கறிஞர்கள் திறமையான வழக்கைக் கொண்டு சென்றனர். ஆனால் சட்டென்று வழக்கில் ஒரு திருப்பம் வந்தது. தொடக்கத்தில் ஆனந்தியின் நகைகளுக்காக ஆசைப்பட்டே கொலை செய்தேன் என்று ஆரம்பத்தில் வாக்குமூலத்தைக் கொடுத்த பதினெட்டு வயதான வில்லியம் நீதிமன்றத்தில் 'நான் ஆனந்தியைக் கொலை செய்யவில்லை' என்று வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினான். 'நான் காலை ஒன்பது மணியளவில் சமையலறைக்குள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தேன். அப்போது தேவன் என்னை மாடியில் இருந்த அவரின் படுக்கையறைக்கு வரக் கூப்பிட்டார். நான் மேலே போனபோது அங்கே ஆனந்தி கட்டிலில் அழுதபடி அமர்ந்திருந்தார். நான் வருவதைக் கண்டதும் தேவன் சட்டென்று ஆனந்தியின் கூந்தலைப் பிடித்து தனது இடது கரத்தால் ஆனந்தியின் கழுத்தை வளைத்து நெரிக்கத் தொடங்கினார். துடிக்கத் தொடங்கிய ஆனந்தியின் முழங்கால்களை என்னை இறுக்கப்பற்றிப் பிடிக்கும்படி கத்தினார். சில நிமிடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தியின் மூச்சடங்கியதும், ஆனந்தியின் உடலை கீழே இழுத்து வந்து சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த உரலும் உலக்கையும் இருந்த அறையில் நானும் தேவனும் கிடத்தினோம்' என்றான் வில்லியம். 'அப்படியாயின் நீ ஏன் ஆனந்தியின் தாலிக்கொடியையும், வளையல்களையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினாய்' என்று வில்லியத்திடம் வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார். 'தேவன்தான் தாலிக்கொடியையும், காப்பையும் கழற்றித் தந்ததோடு, ஆனந்தியின் கைப்பையிலிருந்து நிறையப் பணத்தையும் கையில் தந்து, இங்கிருந்து எங்கேயாவது தப்பியோடிப் போய்விடு' என்று அதட்டி அனுப்பிவைத்தார் என்றான் வில்லியம். இப்போது நீதிபதிக்கு எல்லாமே குழப்பமாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்போதுபோல கைரேகைகள் எடுத்து குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நுட்பங்கள் வந்துவிடவில்லை. யாரின் கைவிரல்ரேகை ஆனந்தியின் உடலில் இருக்கின்றது என்றும் அறியமுடியாது. ஆனந்தி குப்புறக்கிடந்ததைப் பார்த்த பக்கத்துவீட்டுப் பெண்மணி அவர் மேல் போடப்பட்டிருந்த உலக்கையும் எடுத்து, கொலை நடந்த சாட்சியங்களையும் அவர் அறியாமலே கலைத்தும் விட்டிருந்தார். ஆனந்தியின் கொலையில் வில்லியத்துக்கு மட்டுமில்லை தேவனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்கின்ற குழப்பம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. ஆனாலும் தேவனின் வழக்கறிஞர்கள் தேவன் நிரபாரதி என நிரூபிக்க கடுமையாக இன்னும் முயற்சித்தார்கள். இந்த வழக்கிற்காகவே இங்கிலாந்தில் மிகவும் பிரபல்யமான இருந்த வழக்கறிஞரை நேரடியாகவே இலங்கைக்கு தேவனின் சார்பில் வழக்காட வரவழைத்தனர். அவர் இந்தக் கொலை ஆனந்தி நின்றுகொண்டிருந்தபோது யாரோ ஒருவர் பின்புறமாக கைகளை வளைத்து கழுத்தை நெரித்தே கொலை செய்திருப்பார் என்பதைத் தனது திறமையான வாதத்தால் நிரூபித்தார். அத்தோடு இந்தக் கொலை மேல் மாடியின் படுக்கையறையில் அல்ல, கீழே இருந்த சமையலறையில்தான் நிகழ்ந்திருக்கின்றது என்றிருக்கின்றார். சமையல்காரனான வில்லியம்தான் ஆனந்தியோடு முறைகேடாக நடக்க முயன்றிருக்கின்றான். அப்போது அதற்கு எதிராக ஆனந்தி போராடியபோது, சமையலறையில் இருந்த ஆணி ஆனந்தியின் தலையில் குத்திய காயமும் சாட்சியமாக இருக்கின்றது என்று அந்த வழக்கறிஞர் வாதாடியிருக்கின்றார். இங்கிலாந்து வழக்கறிஞரின் வாதத்துக்கு மேலும் ஆதாரம் சேர்க்க, வில்லியமின் முழங்கையில் ஆனந்தி இறுதி நேரத்தில் மூச்சடங்குவதற்கு முன்னர் அவரது கைகளால் கீறிய காயங்கள் காணப்பட்டன. ஆனந்தியின் உடல்மேல் உலக்கை போடப்பட்டு கொலை செய்யப்பட்டதை பக்கத்து வீட்டுப் பெண்மணி கண்டபோது ஆனந்தியின் உடலில் தேங்காய்த் துருவல்களும் இருந்தன. ஆக தேங்காயைத் துருவிக் கொண்டிருந்த வில்லியந்தான் ஆனந்தியைக் கொலை செய்தார் என்றும், Benefit of a Doubt என்பதன் அடிப்படையில் தேவன் நிரபராதி எனவும் நீதிபதியால் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. * அன்று உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் தலைவர், தான் உலகில் சிறந்த பதினொரு வீர்ர்களைத் தேர்ந்தெடுக்கின்றேன் என்றால் அதில் முதன்மையானவர் தேவன் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கின்றார். தேவன் சிறைக்குள் இருந்தபோது மேற்கிந்தியத் தீவு வீரர்கள் அவரை நேரில் சென்று சந்திக்கும் அளவுக்கு தேவன் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரராக இருந்தார். அவரின் சுழலும் கையின் சாகசத்திற்காகவும், பந்துகளை அடித்தாடும் அழகிற்காகவும் அவருக்கு உலகெங்கும் இரசிகர்கள் இருந்தார்கள். இந்த கொலை வழக்கு முடிந்து விடுதலையான கொஞ்சக் காலத்திலே தேவன் தனது காதலி நான்ஸியை இலண்டனில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் சென்று வசிக்கத் தொடங்கினார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். தேவன் சிங்கப்பூர் நாட்டு கிரிக்கெட் அணிக்கு தலைவராகவும் உயர்ந்தார். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தபோது மலேசியா கிரிக்கெட் அணிக்கும் தேவன் தலைவரானார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று மூன்று நாடுகளுக்கும் கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய ஒரேயொருவர் என்ற புகழும் தேவனுக்குக் கிடைத்தது. தேவனின் விடுதலை பெற்ற கொஞ்ச ஆண்டுகளில் வில்லியமும் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ஒரு கொலை வழக்கில் முதலாம், இரண்டாம் கொலையாளிகளாக இருந்திருக்கக்கூடிய இரண்டு பேருமே விடுதலை செய்யப்பட்டு ஆனந்தியின் பரிதாபமான உயிருக்கு மட்டும் முறையான நீதி வழங்கப்படாது அநாதரவாக அவர் கைவிடப்பட்டிருந்தார். ஆனந்தி கொலை செய்யப்பட முன்னர், இங்கிலாந்தில் இருந்த தேவனுக்கு ஆனந்தி எழுதிய கடிதத்தில், 'தயவு செய்து உங்கள் தீராத காதல் விளையாட்டுக்களையும், குடிக்கு அடிமையான நிலையையும் கண்டபின், உங்களோடு நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனக்கு தயவுசெய்து விவாகரத்து தந்துவிடுங்கள்' என்று உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. தேவனின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அவரது நண்பரொருவர் தேவனைச் சிறைக்குள் சந்தித்தபோது, தேவன், அந்த நண்பனின் மனைவி இந்த வழக்கு குறித்து என்ன நினைக்கின்றார் என்று அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கின்றார். அதற்கு அந்த நண்பர் 'எனது மனைவி நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்' என்று சொல்லியிருக்கின்றார். அதற்குச் சிரித்தபடி தேவன், 'எனது கொலைப்பட்டியலில் அடுத்து உனது மனைவிதான் இருக்கின்றார் என்பதைச் சொல்லிவிடு' எனக் கூறியிருக்கின்றார். ஆனந்தியின் கொலை நடந்தபோது அதே வீட்டில் ஆனந்தி-தேவனின் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்கின்றனர். அதில் நான்கு வயதான மகளிடம் நீதிமன்றம் 'என்ன நடந்தது?' எனக் கேட்டபோது அந்தக் குழந்தை, 'மம்மியை, டாடியும், வில்லியமும் மேலே இருந்து கீழே தூக்கிக் கொண்டு வந்து சமையலறைக்கு பக்கத்தில் படுக்க வைத்திருந்தனர்' என்று சொல்லியிருந்தது. ஆனால் நீதிமன்றம் இரண்டாம் நாள் 'என்ன நடந்தது' என மீண்டுமொரு முறை கேட்டபோது அந்தக் குழந்தை நடந்தவற்றைச் சொல்ல முடியாது தவித்ததால் அந்த முக்கிய சாட்சியம் வழக்கில் கவனத்தில் எடுக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது. அந்த மகள்தான் தனது சகோதரிகளோடு தேவனோடு சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு தேவனைப் பார்த்துக் கேட்டாள், 'டாடி நீங்கள்தானா எங்கள் அம்மாவைக் கொன்றது?'. **** (நன்றி: 'அம்ருதா' - ஜனவரி, 2026) ஓவியம்: கோபிகிருஷ்ணன் https://www.elankodse.com/post/1769190555244_16818_4146?fbclid=IwdGRleAPgnGBleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeQDC1Q9dJTvCvQmTZ9HgZ2Xr-fPjQtfv59VR5tuuBnWDBuX3LSlfEGA5JNOs_aem_mdpMiOZoVi9QJjMeOQHZeQ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.