Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்

Featured Replies




                                                                            [1] முன்குறிப்புகள்

                                         இந்தப் பதிவுத்தொடருக்கு " தமிழர்களாய்  ஒன்றுபடுவோம்" என்பது பிரதான தலைப்பாகும்.
தொடர இருக்கும் பதிவுகளுக்கு தனித்தனியான  "துணைத்தலைப்புகளும் எண்களும்"  தரப்படும். அப்பதிவுகளுக்கான
"முன்குறிப்புகள்" இதுவாகும். பரந்துபட்ட பின்னணி கொண்டதாக இப்பதிவுகள் அமையும்.

                    முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பது ஈழத்தமிழர்க்கு மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் எல்லோருக்கும்
ஏற்பட்ட ஒரு சோகமான பின்னடைவாகும். நாம் உண்மையான அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பின், அந்தக்
கூட்டுஅனுபவத்திலிருந்து நாம் விலகிநிற்க முடியாது; விதிவிலக்குப் பெறமுடியாது. ஏனெனில் தமிழர்களின் பல்லாயிரக்-
கணக்கான ஆண்டு வரலாற்றில் இத்தகைய பேரழிவை அவர்கள் முன்பு ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அதன் முழுப்
பரிமாணத்தையும் நம்மில் பலர் உணராமல் இருக்கலாம். வேண்டத்தக்க அந்த உணர்வு நமக்கு ஏற்படின் நாம் விலகிநிற்க
முனையமாட்டோம்.
          
                          இருபதுக்கு மேற்பட்ட  வலிமைமிகுந்த நாடுகள் -- வல்லாதிக்கசக்திகள் -- இந்தத்  தமிழினஅழிப்பில் வரிந்து
கட்டிக்கொண்டு ஈடுபட்டதற்கான சான்றுகளை  'விக்கிலீக்ஸ்'  வழங்குகிறது. இந்தநாடுகள் தமது வழமையான பகைமை-
களைக்கூட ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அழிப்பில் ஒன்றுபட்டுச்செயற்பட்டார்கள். இந்தியா+பாகிஸ்தான்;
இந்தியா+ சீனா; இஸ்ரேல்+ ஈரான்; அமெரிக்கா+ ரஷ்யா; அமெரிக்கா+சீனா  என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு சிறிய
நாட்டிலுள்ள  ஒருசிறுபான்மையினத்தின் விடுதலைப்போராட்டத்தைப்  "பயங்கரவாதம்"  எனப் பெயர் சூட்டி அழித்தனர்.

தமிழ்மக்கள் தம் தாய்நாடாகக்கருதிய இந்தியாவே தமிழினஅழிப்பில் முதன்மையான பாகத்தை வகித்தது என்பது மிகுந்த
வருத்தத்துக்குரிய விடயமாகும். டெல்கி ஆட்சியாளரின் இந்தத் தமிழினஅழிப்பிற்கு  தமிழ்நாட்டை ஆண்டுகொண்டும்,
மத்தியஅரசில் செல்வாக்கும் செலுத்திக் கொண்டிருந்த திமுக ஆதரவளித்ததென்பது மிகமோசமான ஈனச்செயலாகும்.
இவர்களின் இத்தகைய  இழிவான செயற்பாட்டிற்கு தமிழர்களிடம் தமிழ்த்தேசியஉணர்வோ அல்லது தன்மானஉணர்வோ
இல்லாமையே காரணம் எனலாம்.  ஐநூறுக்குமேற்பட்ட தமிழகமீனவர்கள் இலங்கைக்கடற்படையினரால் கொல்லப்பட்டபோதும்
மத்தியஅரசு காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது தமிழர்களையே புறக்கணிக்கும் அல்லது துச்சமாக மதிக்கும்
டெல்கி ஆளும்வர்க்கத்தினரின் மனோபாவத்தைக்காட்டுவதாகும்.

நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் எமது விடுதலைப்போராட்டம் என்பது சனநாயகவழிமுறைகளில் முன்னெடுக்கப்படும்
அறிவாயுதப்போராட்டமாகும். விதைக்கப்படும் கருத்துக்கள் மூலமாக  உருவாக்கப்படும் மக்கள்சக்தியை -- அரசியல்சமூகவிழி-
ப்புணர்வை -- அடிப்படையாகக் கொண்டதாகும். தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகள்  மக்களாட்சிவழிமுறைகளுக்கு மதிப்பளிப்பவை.
சனநாயக அரசியல்வழிமுறைகளைப் பின்பற்றுபவை. எனவே அமைதிவழியில், அவர்களின் சட்டஒழுங்குமுறைகளுக்குட்பட்ட வகையில்
போராட்டங்களை நடத்துவதற்கான அரசியல்இடைவெளி அங்கு தாராளமாக உண்டு. இந்தவகையிலேயே சர்வதேச சமூகத்தின்
 அங்கீகாரத்தை   நாம்  பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு தேசஅரசு [ Nation Stae]  என்ற சாதனம் -- கருவி -- நம்வசம் இல்லை. அப்பெரிய குறைபாடு காரணமாகவே சர்வதேச அமைப்புகளிடம்
நமதுபக்கக் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து முன்வைக்கமுடியாமல் அழிவைச்சந்தித்தோம்.  எனவே ஓரளவு சுயாட்சிஉரிமைகளைக்
கொண்டதாக விளங்கும் தமிழ்நாடு மாநிலமும், அது மத்தியஅரசில் கொண்டுள்ள செல்வாக்கு என்பனவும் நமக்கு முக்கியமானதாக
அமைகிறது.  எமது இனஅழிப்பிற்கு ஆதரவு வழங்கிய இந்திய மத்தியஅரசை நல்வழிப்படுத்த தமிழ்நாடு மூலமாகவே நாம் முயலவேண்டும்
என்பதையும் நாம் மனதில் இருத்திச் செயற்படவேண்டும்.


சர்வதேச சமூகம், அருகிலுள்ள பிராந்திய வல்லரசு இந்தியா, கடமைதவறிய ஐ.நா. அமைப்புகள்  என்பவற்றை எதிர்கொள்ளவேண்டிய
நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எம்மை அழித்தவர்களிடமே நீதிநியாயத்திற்காக மன்றாடவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் நாம்
உள்ளோம்.  இப்போதுள்ள உலகஒழுங்கு  அப்படித்தான் உள்ளது. அவர்கள் தமது பூகோளஅரசியல்பொருளாதாரபாதுகாப்புநலன்களையே
முன்னிறுத்தித்தான் விடயங்களைப் பார்ப்பார்கள். எனவே எமது வாழ்வுரிமையை வென்றெடுக்க நாம் நீண்டநெடிய போராட்டத்திற்கு
ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அதற்கு நாம் நம்மை வெகுவாகப் பலப்படுத்திக்கொள்ளவேண்டும். உண்மையான பலம் என்பது நமக்குள்ளேதான்
உள்ளது. நாம் எவர்மீதும் தங்கியிருக்கக்கூடாது.  அவர்கள் எவரையும் நம்பியிருக்கவும் கூடாது. எத்தகைய பின்னடைவு ஏற்பட்டாலும் நமது
சொந்தக்காலில் நாம் நிற்கவேண்டும்.  நாம் பூமிப்பந்தில் எங்கு வாழினும் தமிழ்த்தேசிய உணர்வுடன், தமிழ்உறவுகள் என்றவகையில்
சகோதரர்கள் ஆகவேண்டும். இதற்கான ஆர்வம், நெஞ்சுரம், செயலாற்றல் என்பன நமக்கு வேண்டும். விடுதலை என்பது வேறெவரிடமிருந்து
வேண்டிப்பெறுவதல்ல. விடுதலைக்கான தகுதியினை,உன்னதநிலையை நாம் பெறவேண்டும். அத்தகைய நிலைக்கு நம்மைநாமே
உயர்த்திக்கொள்ளவேண்டும்; அதற்கான உறுதிமிகுந்த உழைப்பு வேண்டும். அதற்கான உன்னதங்கள் எவையாகினும் அவற்றை ஏற்றுக்
கொள்பவர்களாக, அத்தகைய மனப்பாங்கு உள்ளவர்களாக தமிழ்ச்சமூகம் மாறவேண்டும்.


ரிக்வேதத்தில் ஒரு வாசகம் வருகிறது:  " Let noble thoughts come to us from every side " [ Rigveda, I - 89 - i ]
அதாவது, 'உன்னதமான சிந்தனைகள் -- எண்ணங்கள் -- எல்லாப்பக்கத்திலுமிருந்து எம்மை நோக்கி வரட்டும்'  என்பதாகும். அத்தகைய பரந்துபட்ட,
உன்னத சிந்தனைகளை முன்வைப்பதாக தொடர்ந்துவரும் பதிவுகள் அமையும். முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது மிகுந்த பழமையும்
தொன்மையும் கொண்ட தமிழ்ச்சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஓர் அறைகூவலாகும். நாமும் நமது பிற்சந்ததியினரும் அந்தச் சவாலுக்கு முகம்
கொடுத்து முன்செல்ல உழைக்கவேண்டும். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் எல்லோர்மீதும் காலம் சுமத்தியுள்ள வரலாற்றுக்
கடமை அதுவாகும். எனவேதான் விலகிநிற்பதனை விட்டு தமிழர்களாய் ஒன்றுபட்டுச் செயற்படுவோம். இவைபற்றிச் சிந்திக்க இப்பதிவுகள்
மூலமாக மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

உன்னதங்களுக்காகப் போராடுவோம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

                                                                                 [2] அரசியல், அரசியல், அரசியல்



நமது அன்றாடவாழ்க்கையில் அரசு அல்லது அரசாங்கம் நம்மீது செலுத்தும் ஆதிக்கம் அதிகமானது. புதிய பல தொழில்நுட்பக்கருவிகள் மலிந்துள்ள இக்காலத்தில்
அந்த ஆதிக்கம் அல்லது தலையீடு மிகமோசமாக அதிகரித்துள்ளது. எனவே ஆதிக்கம் மிகுந்த அரசியல் துறையில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசிய-
மாகிறது.அதன் இயல்பைப் புரிந்துகொள்ள மேலைநாட்டுஅறிஞர்கள் சிலர் அரசியல்பற்றிக் கூறிய வாசகங்களையும் விளக்கங்களையும் முதலில் பார்ப்போம்.

                       [1] " We do not say that a man who takes no interest in politics is a man who minds his own business; we say he has no business here at all."
                                                                    
--------------  Pericles; 495 -- 429 BC- [கிரேக்கம்].

   " அரசியலில் ஆர்வம் காட்டாத மனிதனை தனது சொந்த வேலையில் மட்டும் அக்கறைகாட்டும் ஒரு மனிதன் என நாம் கூறுவதில்லை; மாறாக அவனுக்கு
                 இங்கு ஒருவேலையும் இல்லை என்றே நாம் கூறுவோம்"
என்கிறார் பெரிகிள்ஸ். இவர் ஒரு கிரேக்கப் படைத்தளபதி. அதாவது தமது தாய்நாட்டைக்
காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்ய ஆயத்தமான ஒருவர். எனவே அதற்கான மதிப்புமரியாதையுடன் அவருடைய கூற்றினை நாம் நோக்கவேண்டும். அவர் அரசியலில்
ஆர்வம் இல்லாத ஒருவரை  " உதவாக்கரை மனிதன் " என்றே புறக்கணிப்பதை நாம் கவனிக்கவேண்டும். தமிழர்களாகிய நாமும் ஓர் உதவாக்கரைக்கூட்டமோ எனச்
சந்தேகிக்கவேண்டியுள்ளது.


                           [2] " The price to pay for those who shy away from public life is to be governed by people worse than themselves."
                                                                        ------------  Plato; 427 -- 347 BC- [கிரேக்கம்].

            " பொதுவாழ்விலிருந்து விலகி ஓடுபவர்கள் அதற்காகக் கொடுக்கும் விலை என்பது அவர்களைவிட மோசமானவர்களால் ஆளப்படுவதே ". நம்மில்
பலர்  "அரசியல் ஒரு சாக்கடை "; எனவே அதில் நேர்மையான,கண்ணியமான மக்கள் ஈடுபடமுடியாது என்கின்றனர்.. அப்படி ஒதுங்கிக்கொண்டால் பிளேட்டா கூறுவது
போல், நம்மைவிட மோசமான,தரக்குறைவான மக்களின் ஆட்சிக்குள் அகப்பட்டு அல்லற்படவேண்டியதே. மாறாக நல்லவர்கள் பெருமளவில் கலந்துகொள்வதின்
மூலமே நிலமையைச் சீர்செய்யமுடியும். அதாவது அமைச்சர்பதவிகளுக்கும், குடும்பத்திற்குச் சொத்துச்சுகம் சேர்ப்பதற்காகவும் அரசியலில் ஆர்வம் காட்டாமல்,
தமிழர்சமூகத்தின் நல்வாழ்வுக்காக  தீவிரமான தியாகஉணர்வுடன் செயற்படுபவர்களாக அவர்கள் விளங்கவேண்டும்.

                             [3] " In our time, the destiny of man presents its meaning in political terms."
                                                                        ---- Thomas Mann; 1875 -- 1955 - [ஜெர்மனி].
  " எமது காலத்தில், மனிதர் தலைவிதியின் கருத்து அரசியல் அம்சங்களாலேயே வெளிப்படுத்தப்படுகிறது "
.  இந்த உலகவாழ்க்கையின் எல்லாத்தேவைகளையும்
விருப்பங்களையும் அவர்களின் அரசியல்செயற்பாடுகள் மூலமாகவே நிறைவேற்றக்கூடியதாக இருக்கிறது. இத்தாலியைச் சேர்ந்த மார்க்சியச்சிந்தனையாளர்
அன்ரோனியோ கிராம்சி கூறியதுபோல் " அரசியலே எல்லாம் " [ " Politics is everything "--- Antonio Gramsci; 1891 -- 1937 ] என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

நமது காலத்தில் உலகை ஆள்பவர்களாக, அதன்மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பவர்கள் மேற்குநாட்டு வெள்ளையினமக்களே. இது விரும்பத்தகாத
உண்மையாயினும் நடைமுறை அப்படியாகவே இருப்பதினால் நாம் அதனை ஏற்றுக்கொண்டு  செயற்படவேண்டியுள்ளது. அதனாலேயே அரசியல் ஆட்சிபற்றி
அவர்கள் கூறும் கருத்துகளை மேலே முதன்மைப்படுத்தினேன். நாமும் அவர்களைப்போல் ஏற்றம் பெறவேண்டுமாயின் அவர்களின் அறிவுரையைப் பின்பற்றல்
அவசியமாகிறது.

                            மேலைநாட்டு அறிஞர்களின் அனுபவ வாசகங்களைக் கவனிக்கும்போது, நமது அறிஞர்கள் அரசியல், ஆட்சியியல் பற்றி என்ன கூறியுள்ளனர் என்ற
கேள்வி நம்மிடம் எழுவது இயல்பே. புறநானூற்றுப் புலவர் மோசிகீரனார் அவர்கள்:
                        " நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
                           மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம். "  [ புறநானூறு - 186 ]   
என்கிறார். இங்கு இந்தத் தமிழ்ப்புலவர் மேலைநாட்டு அறிஞர்களைவிட ஒருபடி
மேலே சென்று அரசனை உலகத்தின் உயிர் என்கிறார். ஒரு நாட்டின் உணவுவளம், நீர்வளம் போன்ற செல்வங்களைவிட வேந்தனே உயர்ந்த செல்வம்; உயிராக
இருந்து இயக்குபவன் என்கிறார். மக்களே மன்னர்களாகவுள்ள இக்கால ஆட்சிமுறையில் தமிழ்மக்கள்  தம்கடன் உணர்ந்து -- உயிராக இருந்து இயக்கும்
பொறுப்புணர்ந்து -- செயற்படவேண்டியுள்ளது.

                          மேலும் தெய்வப்புலவர் திருவள்ளுவரோ மிகச்சரியாக அரசனை,  இறைவன்[கடவுள்] என்றே கொண்டாடுகிறார்.
                                           " முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
                              
                  இறையென்று வைக்கப்படும். "   [ திருக்குறள் - 338 ]    என்று கூறுவதோடு நின்றுவிடாமல் அந்த அதிகாரத்திற்கே " இறைமாட்சி"
என்றே தலைப்பும் கொடுத்துள்ளார். அரசியல்தான் நம் தலைவிதியைத் தீர்மானிக்கும் இறைவன் என்கிறார்.

மேற்குநாட்டினர் தமது அரசியல் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து அதற்கு ஏற்பவே வாழ்ந்தனர். மிகுந்த அரசியல் விழிப்புணர்வு
உடையவர்களாகத் தொடர்ந்து இருந்ததினால் தமது நாடுகளின் இறைமையைப் பேணி ஆள்பவர்களாக இன்றுவரை இருந்துள்ளனர். ஆசியஆபிரிக்கநாடுகளின்
மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இப்போதும் இருக்கின்றனர். எமது அறிஞர்கள் அரசியல்பற்றி மிகமிகச் சரியாக அறிந்திருந்தபோதும் நமது மக்களிடையே
அதுபற்றிய தெளிவான செயற்பாடுகள் தொடர்ந்து பேணப்படவில்லை
. இராசராசசோழன் காலத்தின் பின்னான ஆயிரம் ஆண்டுகள்வரை  தமிழர்கள்
அடிமைகளாக --- பிறரால் ஆளப்படுபவர்களாக --- வாழ்ந்து பழகிவிட்டனர். பிறநாடுகளுக்குக்கூட தமிழர்கள் கூலிகளாக அல்லது அகதிகளாகவே சென்றுள்ளனர்.
எனவே பழிக்கப்படும் இந்த அடிமை மனப்பாங்குகளிலிருந்து -- அடிமை மோகத்திலிருந்து --- நாம் விரைவாக விடுதலை பெறவேண்டும்.

மக்கள் ஆட்சியே மகேசன் ஆட்சி என்று கருதப்படும் தற்போதைய உலகில் தமிழர்களாகிய நாம் எந்தநாட்டில் வாழ்பவர்களாக இருப்பினும் அந்த நாட்டின் சட்ட-
திட்டங்களுக்கு அமைய நமது அரசியல் கடமைகளைச் செம்மையாகச் செய்யவேண்டும். நாம் எந்தத் தொழிலைச்செய்பவர்களாக இருப்பினும் இந்த அரசியல்
செயற்பாட்டில் தவறாத ஆர்வம் காட்டல் அவசியமானது. அதுவும் நமது தேசவிடுதலைக்காகப் போராடும் தமிழினமக்களுக்கு இந்த அரசியல் விழிப்புணர்வுடன்
கூடிய ஒன்றுபட்டசெயற்பாடு மிக அவசியமானது. எனவே நமது இளம்தலைமுறையினரும் எதிர்காலச்சந்ததியினரும் உரிய அரசியல் ஆர்வம் மிகுந்தவர்களாக
இருப்பதனை அவர்களின் பெற்றோர்களும் சமூகப்பெரியவர்களும் உற்சாகப்படுத்தி உறுதிசெய்தல் வேண்டும். மேற்குநாட்டினருக்கும் நமக்குமுள்ள வேறுபாடு
என்னவெனில் அவர்கள் தமது ஆன்றோரின் அறிவுரைகளை தவறாது போற்றி ஒழுகி மேலானநிலையில் தொடர்ந்தும் வாழ்கின்றனர். நாமோ பழம்பெருமை
பேசுவதோடுமட்டும் நின்றுவிட்டோம். எனவே நாம் எமது ஆன்றோரின் அறிவுரைகளை எமது வாழ்வில் உறுதியோடு தொடர்ந்து செயற்படுத்தவேண்டும்.
ஆதலினால் எங்கு வாழினும், என்ன தொழில் செய்யினும் அரசியல்செயற்பாடு என்பது தமிழர்களின் தவிர்க்கமுடியாத பகுதிநேரத் தொழிலாக வேண்டும்.

நீதிநியாயத்திற்கான போராட்டம்




 

  • 1 month later...
  • தொடங்கியவர்

                                                 [3] மாற்று வழிமுறைகள்

                                                       

 


எமது விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மிகப்பெரிய நாடுகளின் கூட்டுமுயற்சியால் முறியடிக்கப்பட்டது.நம்மவர்களின் ஆயுதங்கள்
மௌனிக்கப்பட்டன. எனவே ஆயுதவன்முறைப் போராட்டவழிமுறையை விட்டுவிலகி வேறுவழிமுறையில் எமது போராட்டத்தைத்
தொடரவேண்டியநிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே
ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளின் மக்களாட்சி வழிமுறைகளுக்கு ஏற்ப அறிவே ஆயுதமாகக்கொண்ட
அமைதிவழிப்போராட்டமே எமது தெரிவாகும். அதாவது எமது அறிவையும் ஆன்மிகபலத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் வழிமுறை.
ஒரு தேசஅரசு[ Nation State ] இல்லாத நாம் இனி தேசஅரசுகளின் எல்லைகள்,கட்டுப்பாடுகள்,மட்டுப்பாடுகள்,கெடுபிடிச்சோதனைகள், பாதுகாப்பு
நடவடிக்கைகள், என்பவற்றிற்கு அகப்படாத, அப்பாற்பட்ட, அவற்றைவிஞ்சிய வழிமுறையைப் பின்பற்றுவதே மிகப்பொருத்தமானது. நமக்கு
எதிராகச் செயற்படுபவர்கள் முயற்சித்தாலும் அழிக்கமுடியாத, அணுகமுடியாத ஒரு புதிய தளத்திற்கு, பரிணாமத்திற்கு, எமது போராட்ட -
வழிமுறையை நாம் உயர்த்தவேண்டும். அதிக ஆரவாரமின்றி, அமைதியான எனினும் மிகுந்த அர்ப்பணத்துடனும் மனஉறுதியுடனும் கூடிய
வழிமுறையாக அது விளங்கவேண்டும். அதன் இந்த இயல்பு காரணமாக, புலம்பெயர்தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள், தமிழீழத்தில் வாழும்
தமிழர்கள், பிறதமிழர்கள் என்ற எல்லோரும் தமிழர்களாய் ஒன்றுபட்டு மேற்கொள்ளும் பரந்துபட்ட மக்கள்போராட்ட வழிமுறை அதுவாகும்.
மக்கள் கூட்டாகவும் -- அமைப்புரீதியாகவும் --  தனிமனிதராகவும் பங்குகொள்ளக்கூடிய உன்னதமான வழிமுறையாக அது அமையும்.


 

நமது விஞ்ஞானதொழில்நுட்பமுன்னேற்றங்கள் என்பன நமக்கு வெளியே, புறத்தேயுள்ள உலகத்தில் தேவைப்படும் கருவிகள்,வழிமுறைகள்
பற்றிய முன்னேற்றமே. அத்தகைய முன்னேற்றத்தினால்தான் நமக்கு பலம் அதிகமாகிறது என நாம் நம்புகிறோம். ஆனால் இது தவறான கருத்தாகும்.
இதுபற்றிச் சிறிது ஆராய்வோம். ஒரு மனிதருக்கு பெருத்த தோள்கள்,தசைகள் என்பன அமைந்து பெரிய பயில்வான் போல் தோற்றமளித்தால்
அவரை மிகுந்த பலசாலியென நாம் நம்புகிறோம். கண்ணுக்குத் தெரியக்கூடியதாக உள்ள தோற்றத்தைப் பார்த்து அப்படிச் சொல்கிறோம்.அத்தகைய
பலசாலியின் கையின் நரம்பில் ஒரு சுளுக்கு ஏற்பட்டால் அவரால் அந்தக் கையை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது போய்விடும். கண்களுக்குத்
தெரியாத நுண்மையான அந்த நரம்பு பலம் தரும் தசைகளைக் கட்டுப்படுத்தும் நுட்பத்தை அங்கு நாம் காணலாம். எனினும் அந்த நரம்புகளைவிட
கூடிய வலிமை கொண்டது மனமாகும். கண்ணால் காணமுடியாத நமது மனதில் நோய் அல்லது மனமுறிவோ ஏற்பட்டால் நம்வாழ்வு முற்றாக
நிலைகுலைந்துவிடும். அத்தகைய மனதையும்விட வலிமை மிகுந்ததே நம்முள்ளே இருக்கும் உயிர்ச்சக்தி. நமது ஆற்றல்கள்,திறமைகள்,
எல்லாவற்றிற்கும் மூலமாக, அடிநாதமாக விளங்குவது உயிரின் சக்தியாகிய ஆத்மசக்தியே.நமது கண்களுக்கு புலப்படாமல் இயங்கும் இந்த
சக்திகளே ஆயுதபலத்தைவிடக் கூடிய ஆற்றல் படைத்தவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வெளிப்புறத்திலேயே முழுக்கவனத்தையும்
செலுத்தும் நமது இக்கால வாழ்க்கைமுறையில் மேற்குறித்த விடயங்கள் நம்பமுடியாதவையாக இருக்கலாம். எனினும் ஓர் உதாரணத்தைப்
பார்ப்போம். அதாவது நமது தலைவர் பிரபாகரனின் உள்ளத்தில்தானே முதலில் ஈழவிடுதலைக்காகப் போராடவேண்டுமென்ற எண்ணம்
தோன்றியது. அதன்பின்புதானே அமைப்புகள், ஆயுதங்கள் என்பன வந்தன. எனவே அமைப்பு, ஆயுதங்கள் என்பவற்றைவிட அந்த ஆர்வம்
மிகுந்த எண்ணம், உண்மையான மனஉறுதிப்பாடு,  என்பவைதான் ஊற்றுக்கண்ணாக விளங்குவது என்ற புரிதலோடு நமது அறிவாயுதப்
போராட்டத்தை முன்னெடுப்போம்.

நீண்டகாலமாக அடிமைப்பட்டுக் கிடந்ததினாலும் பிறகாரணங்களாலும் நாம் கிணற்றுத்தவளைகளாய் வாழ்ந்து பழகிவிட்டோம். பிறபகுதிகளில்
இடம்பெற்ற அறிவுத்துறை முன்னேற்றங்களை, குறிப்பாக மேற்குநாடுகளில் ஏற்பட்ட சிந்தனைப்புரட்சிகளை, நம்மவர்கள் அறிந்திருக்கவில்லை.
நாம் நமது சாதிசமயப்பிரிவுகள், மூடநம்பிக்கைகள், அவைபற்றிய வீண்தர்க்கங்கள் என்பவற்றிலேயே மூழ்கிக்கிடந்தோம். நம்மவர்களிடம்
அரசியல்விழிப்புணர்வோ, விடுதலைவேட்கையோ இருக்கவில்லை. உதாரணமாக பிரெஞ்சு அறிஞர் ஏர்னெஸ்ட் றெனன் [Ernest Renan ]
அவர்கள் 1882இல் எழுதிய " ஒரு தேசம் என்றால் என்ன? " என்ற நூல் முக்கியமானது. தேசம், தேசியம் பற்றிய உலகப்புகழ்பெற்ற
ஆவணம் அது எனலாம். நாம் அரசியல்பற்றி ஆர்வம் எதுவும் இல்லாதவர்களாக இருந்த 19ஆம் நூற்றாண்டில் அவர்கள் இதுபோன்ற
விடயங்கள்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. " ஒரு தேசம் என்பது ஓர் ஆத்மா; ஓர் ஆன்மிகக்கோட்பாடு ...............
ஒவ்வொரு தனிமனிதனதும் இருப்பு அவனின் தொடர்ச்சியான உயிர்ப்பில் தங்கியிருப்பதுபோன்று ஒரு தேசத்தின் இருப்பும் ஒவ்வொருநாளும்
வழங்கப்படும் மக்கள் கருத்தாதரவில் தங்கியுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.அதாவது நம்  தேசத்தின் இருப்பை நாம் ஒவ்வொருநாளும்
நினைந்து வாழவேண்டும். நம் தேசத்திற்காக, அதன் விடுதலை விமோசனத்திற்காக நாம் நம்மை ஒவ்வொருநாளும் அர்ப்பணிக்கவேண்டும்.
அந்த நினைவுபடுத்தல்,ஆர்வம்,ஈடுபாடு, மனஉறுதி, என்பவைதான் முக்கியமானது என்பது அவரின் கருத்தாகும்.

இவரைப்போன்றே ஜெர்மனிய அறிஞர்  J G Fichte   என்பவரின்  " ஜெர்மன் தேசத்தினருக்கான உரைகள் " என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி என்ற தேசமே உருவாகாத 1806இல், நெப்போலியனின் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்தவேளையில் அவரின் இந்த உரைகள் இடம்-
பெற்றதை நாம் கவனிக்கவேண்டும். " வலிமையான வலதுகரமோ அல்லது பலம் மிகுந்த ஆயுதங்களோ வெற்றியைத் தேடித்தரா; ஆத்மபலம்
மட்டுமே வெற்றியைத்தரும் " என்றார் அவர்.[" It is neither the strong right arm nor the efficient weapon that wins victories,but only the power of
the soul"]



தமிழர்கள் முருகவேளை தமிழ்க்கடவுள் என்று போற்றுகிறார்கள். " தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் " என்று புகழ்கிறார்கள். ஆனால்
நம்மவர்கள் முருகன் போருக்குரிய கடவுள் என்பதை அறிந்திருக்கிறார்களா?  தேவசேனாதிபதி என்று கூறப்படும் அவரின் புகழ்பெற்ற கோவில்கள்,
ஆலயங்கள் என்பன  " படைவீடுகள் " என்றுதானே அழைக்கப்படுகின்றன? பகவத்கீதையில், " தளபதிகளுள் நான் ஸ்கந்தன் " என்று கண்ணன்
கூறுவது கவனிக்கத்தக்கது. ஆறுபடைவீடுகளுக்கு ஆர்வத்துடன் புனிதயாத்திரை மேற்கொள்ளும் நாம் இவைபற்றி எண்ணிப்பார்த்திருக்கிறோமா?
போருக்குரிய கடவுளை வழிபடும் நம்மிடம் ஏன் போர்க்குணம் மிகவில்லை?  தீமைகளை எதிர்த்துப்போராடுவது சிறந்த வழிபாடு என்ற புரிதல்,
தெளிதல் நம்மவர்களிடம் எப்போது ஏற்படும்? அதன் வெளிப்பாடாக நம்மிடமுள்ள கோழைத்தனங்கள், அஞ்சி அஞ்சிச்சாதல் அகலவேண்டும்.
நமது வழிபாடு வெறும் சடங்காக அமையாமல், உண்மையான உயிர்ப்பும் போர்க்குணமும் மிகுந்த சமுதாயமாக நம்மை மாற்றவேண்டும்.
வெறுமனே " வீரவேல்,வெற்றிவேல் " என்று கூடிச்சத்தமிட்டால் போதாது. "வேலை வணங்குவதே நம் வேலை " என்று அடுக்குத்தமிழ்
பேசினால் மட்டும் போதாது. உண்மையான  வீரஉணர்வுள்ளவர்களாக  நாம் மாறவேண்டும்.



நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜொசப் அவர்கள் அளித்த சாட்சியத்தின்படி 146,679 பேர் போரின்போது
இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். தமிழர்களுடைய வரலாற்றில் இத்தகைய மோசமான தமிழினஅழிப்பு முன்பொருபோதும்
இடம் பெற்றதாக இல்லை. எனவே தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பேரழிவு ஏன் ஏற்பட்டது என்பதுபற்றிச் சிந்திக்க-
வேண்டும். இத்தகைய தமிழினஅழிப்பு மீண்டும் நிகழாமல் இருப்பதை எப்படி நாம் உறுதிசெய்யலாம்? அதற்கான வழிமுறைகள் என்ன?
இவற்றைப்பற்றிச் சிந்திக்கும்போது நம்மில் பலர் நாம் சிறுபான்மையினர், எனவே பலவீனமானவர்கள், எனவே விடிவு கிடைக்க வழியில்லை
என்றுகூறி மனச்சோர்வும் விரக்தியும் அடைவது கவனிக்கத்தக்கது. ஆனால் உண்மையில் தமிழர்களின் நிலைமை அப்படியல்ல.
முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு நிகழ்ந்தபோது தமிழர்களிடம் போதிய பலம் இருந்தது. ஆனால் தமிழர்கள் அந்தப்பலத்தைச் சரியான
வழியில் பயன்படுத்தவில்லை. தெளிவாகக் கூறுவதாயின், 2009 மேமாதக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்ப திமுக
ஆட்சி இருந்தது. அந்தக்கட்சி இந்திய மத்தியஅரசிலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில்தான் இருந்தது. எனினும் முதல்வர் கருணாநிதி
தமது பதவிவிலகல் கடிதங்கள்,உண்ணாவிரத நாடகங்கள் மூலம் மத்திய அரசின் ஈழத்தமிழினஅழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
அத்துடன் போர் முடிந்து தமிழீழமக்கள் அகதிமுகாம்களில் அவலப்பட்டபோது தமது மகள் கனிமொழியும் இடம்பெற்ற தமது
ஆதரவாளர் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி மகிந்த ராசபக்சாவிற்கு பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தார். எனவே ஈழத்-
தமிழரின் துன்பதுயரங்களுக்கு நாம் பிறரைப் பழித்துக் குறைகூறுவது சரியல்ல.தமிழக திமுக ஆதரவாளர் கூட்டமே அதற்குப்
பொறுப்புக்கூறவேண்டும். இந்த திமுக ஆதரவுக்கூட்டம் இப்போது " டெசோ [TESO] " நாடகத்தைக் கையில் எடுத்திருப்பதை நாம்
விழிப்புடன் கவனிக்கவேண்டும் .



இந்திய மத்தியஅரசை அமைப்பதில் கூடிய தாக்கம் செலுத்தக்கூடிய ஆறு பெரிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்திய
மக்களவைக்கு  40 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் வல்லமை தமிழர்களுக்கு உண்டு. மத்தியில் ஆட்சி அமைக்க மாநிலக்கட்சிகளின்
ஆதரவைப் பெறவேண்டிய தேவை காலப்போக்கில் அதிகரிக்கவே போகிறது; அது குறையப்போவதில்லை. எனவே டெல்கி ஆட்சியாளர்களை
நல்வழிப்படுத்துவதற்கான நமது வலிமை அதிகரிக்கும் என்பது மிக்க நம்பிக்கை தருவதாகும்.



நாம் தமிழ்நாட்டிலுள்ள சாதாரண, எளிய மக்களிடம் சென்று ஈழத்தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும்,துரோகங்களையும்
விளக்கவேண்டும். காணொளிகள், பிற ஆவணங்கள்,சாட்சியங்கள் என்பவற்றைக்காட்டி தமிழக வாக்காளர்களை அடுத்த[2014]  பொதுத்-
தேர்தல்வரை கொதிநிலையில் வைத்திருக்கவேண்டும். அதற்கான செயற்பாடுகளில் ஏற்கனவே மும்முரமாக ஈடுபட்டு வருபவர்களுக்கு
புலம்பெயர் தமிழர்கள் தமது பாரிய ஆதரவையும், உதவிகளையும் ஓர் அவசரத்தன்மையுடனும்,உறுதியான ஈடுபாட்டுடனும், தம்மை
அர்ப்பணித்து வழங்கவேண்டும். " தமிழீழம் என்பது தமிழீழத்தின் தேவை மட்டுமல்ல; அது தமிழகத்தின் தேவையும்கூட." எனத்-
தியாகி முத்துக்குமாரன் கூறிய தீர்க்கதரிசனமான வாசகத்தை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.ஏனெனில் தமிழீழப்போராட்டத்திற்கு
ஆதரவு வழங்குவதின்மூலம், அந்த வேள்வியில் -- தவத்தில் -- பங்கு கொள்வதினால், தமிழ்நாடும் எழுச்சி பெறும்; ஏற்றம் பெறும்.
அந்தப் போர்க்குணம் மிகுந்த தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலமே தற்போது மத்தியஅரசினாலும், பிற  அயல்மாநிலங்களாலும்
புறக்கணிக்கப்படும் -- உதாசீனப்படுத்தப்படும் --  தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்படும். அத்தகைய எழுச்சிமிகுந்த தமிழ்நாடே
சர்வதேச சமூகத்தில் தமிழீழமக்களுக்கு பெருந்துணையாக அமையும். அத்துடன் நீதிநியாயம்,தர்மம் என்பன எமது பக்கமே இருக்கின்றன.
அதனால் காலப்போக்கில் மக்களிடமும், அரசுகளிடமும் எமக்கான ஆதரவு அதிகரிக்கவே செய்யும். ஏற்கனவே சில மேற்குநாடுகளில்
எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளதை நாம் கவனிக்கலாம். இந்தியாவிலும் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும் இந்த மாற்றங்கள் இலகுவில்
ஏற்பட்டுவிடாது. அதற்காக நாம் தொடர்ச்சியாகப்  போராடவேண்டும். பரந்துபட்ட மக்கள் எழுச்சிப்போராட்டமாக அது அமையவேண்டும்.
இணையத்தளங்கள்  -- குறிப்பாக சமூக இணையத்தளங்கள் -- பிற தகவல் தொழில்நுட்பக்கருவிகள், பலதிசைகளிலும் பரந்து வாழும்
தமிழ்மக்கள் தம்மிடையே கலந்துபேசவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வழிசெய்கின்றன. எனவே அவைகளைப் பயன்படுத்தி
தமிழர்களாய் ஒன்றுபட்டு நமது அறிவாயுதப்போராட்டத்தை முன்னெடுப்போம்.


திக்கற்றவர்க்கு தெய்வமே துணை

உன்னதங்களுக்காகப் போராடுவோம்

 

Edited by மகம்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

தொடருங்கள்.......

  • 2 months later...
  • தொடங்கியவர்

                                                [4] இந்தியாவும் ஈழத்தமிழின அழிப்பும்


இருபத்தொராம் நூற்றாண்டில் இடம்பெற்ற மிகப்பெரிய இனஅழிப்பாக, ஈழத்தமிழினஅழிப்பு விளங்குகிறது.
இதில் இந்தியா வகித்த முதன்மையான பங்கினை நம்மவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.
அப்போதுதான் இதுவரை நடந்தது என்ன?  இனி எவை நடக்கலாம்?  என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அத்துடன் இந்த மோசமான மனித அவலத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் நடந்தபோது, அந்த
நல்லெண்ண முயற்சிகளை  " சோனியா ஆட்சியினர் "  தடுத்துநிறுத்தி தமிழினஅழிப்பை முன்னெடுத்த
இரக்கமற்ற அரக்கத்தனத்தையும்  நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

மகிந்த இராசபக்சா 2005இல் இலங்கை சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் ஈழத்தமிழர்
பிரச்சினையை அமைதிவழியில் தீர்க்கும் நோக்குடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த நால்வர் கொண்ட குழுவை
உருவாக்கினார். அக்குழுவிற்கு  M G தேவசகாயம் என்ற முன்னாள்  IAS  அதிகாரி   தலைவராகச்
செயற்பட்டார். அவரைவிட பிறிதொரு IAS அதிகாரி, ஓர் ஊடகவியலாளர், ஓர் இராணுவ அதிகாரி
ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். சென்னையில் 10 மே 2007 இவர்களின் முதற்சந்திப்பு
இடம்பெற்றது. பின்பு இவர்கள் கொழும்பில் மகிந்த இராசபக்சவையும்  அவரின் ஆலோசகர்களையும்
17 யூலை 2007 இல் சந்தித்துக்  கலந்துரையாடினர். இத்தகைய பல கலந்துரையாடல்களின் பின்பாக
வடக்கு-- கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி அமைப்பை வழங்குவதென ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்பு, 25 மார்ச் 2008 இல் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் ஒரு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தச்
சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள இந்தியத்தூதரகம் இந்த முயற்சிகள் பற்றி அறிந்துகொண்டதும்
" அதிகாரம் அற்றவர்களுடன் "  பேசவேண்டாமென மகிந்தாவைத் தடுத்துவிட்டது. எனினும்
தேவசகாயம் அவர்கள் முன்பு தம்முடன் பணிபுரிந்தவரும் தற்போது  இந்தியப்பிரதமரின்
முதன்மைச்செயலாளராகவும் இருக்கும்  T K A நாயர் அவர்களுக்கு தாங்கள் தயாரித்த தீர்வுக்கான
செயற்திட்டத்தை விளக்கி ஒரு கடிதத்தை  2008 ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பியிருந்தார். அதற்கு
பதில் எதுவும் அனுப்பப்படவில்லை. எனினும் டெல்கி ஆட்சியாளர்களுக்கு அமைதிவழியில்
  ஓர் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு ஓராண்டுக்கு  முன்பாகவே  [2008 ஏப்ரல்]

எட்டப்பட்டது என்பது தெளிவாகவே தெரியும் என்பதை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
 

 

இந்த அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய மூத்த ஊடகவியலாளராகிய
சாம் இராசப்பா அவர்களின் கூற்றுப்படி  --- கொழும்பில் கிடைத்த தகவல்களின்படி --- விடுதலைப்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்தஅமைப்பின்  உளவுப்பிரிவுத்தலைவர்
பொட்டுஅம்மான் ஆகிய இருவரின் தலைகளும் துண்டிக்கப்படவேண்டுமென சோனியா காந்தி
விரும்பியதாகவும் அதனை நிறைவேற்ற இலங்கைக்கு எல்லா இராணுவ உதவிகளையும்
வழங்குவதாக வாக்களித்ததாகவும் தெரிகிறது. அதாவது:  " According to sources in Colombo,

Sonia Gandhi wanted LTTE leader Velupillai Pirapaharan and its intelligence chief Pottu Amman decapitated and
pledged all military support to Sri Lanka to achieve her goal."  என்கிறார் இராசப்பா

 

பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவராகிய தேவசகாயம் அவர்களின் கருத்துப்படி யாரோஒருவரின்
தனிப்பட்ட " சிசிலியன் பழிவாங்கல் " நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்காகப் புதுடெல்கி
உதவியாளர்கள், கொழும்பு, நியூயோர்க்,ஜெனிவா கொண்ட வலைப்பின்னலுடன் சிறப்பாக
ஒருங்கிணைந்து மிருகத்தனமான இலங்கை இனஅழிப்புக்கு உற்சாகமாக உதவினர் என்கிறார்.  அதாவது:

 

" Pursuing somebody's personal agenda of  ' Sicilian Revenge ' New Delhi minions with a well--synchronized
Network in Colombo,New York, and Geneva, actively assisted the brutal Sri Lankan genocide " என்கிறார் அவர்.
 
இந்தியா என்பது பலமொழிகள் பேசும் தேசியக்குழுக்களை அடைத்துவைத்திருக்கும் சிறைக்கூடமென
ஏற்கனவே வர்ணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பேணுவதாயின் பரந்தமனப்பாங்கும்,
பெருந்தன்மையும் கொண்ட  அரசியல்தலைவர்கள் தேவை. தேசத்தின் பொதுநலனைப்
புறக்கணித்து குறுகிய சுயநலம்கொண்ட பழிவாங்கல்குணத்தை முதன்மைப்படுத்தும் தலைமைகள்
அதற்கு உதவப்போவதில்லை.
 
மேலும் கூடுதலான விளக்கங்களைப் பெற:


[2]  M G தேவசகாயம் வழங்கும் விளக்கம் -- சாட்சியம்.
     http://www.theweekendleader.com/Causes/583/Exclusive:-A-dark-secret.html

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

தொடருங்கள்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.