Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடவடிக்கை எல்லாளன் - திரைவிமர்சனம்.

Featured Replies

26756_115423341803275_100000068304660_261089_1792252_n.jpg

வன்னிப்பகுதியில் மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009 இன் ஆரம்பத்தில் எல்லாளன் திரைப்பட முன்னோட்டம் வெளியாகி இருந்தது.மிக நேர்த்தியான காட்சியமைப்புகளோடு இருந்த அந்த முன்னோட்டம் அநேகர் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பின் இறுகிய முற்றுகையும் முள்ளிவாய்க்கால் முடிவும் அத்திரைப்படம் தொடர்பிலான அக்கறையை இல்லாது செய்திருந்தன.ஆனால் இதையெல்லாவற்றையும் தண்டி இவ்வருட ஆரம்பத்தில் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு இணையங்களூடாக இடுகையிடப்பட்டதோடு "நடவடிக்கை எல்லாளன்" என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றும் தொடங்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது கரும்புலிகள்,வான்புலிகள் நடத்திய வெற்றிகரமான கூட்டு நடவடிக்கை பற்றியதே எல்லாளன் திரைப்படம் என்பதைவிடவும் மேலதிக விடயங்கள்,பேட்டிகள் என்பன அத்தளத்தில் காணப்பட்டன.இத்தருணத்தில் எல்லாளன் திரைப்படம் பற்றி அத்தளத்தில் எழுதப்பட்டிருந்த பத்தி ஒன்றை அப்படியே இங்கே தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

எல்லாளன்

தமிழீழவிடுதலைப்போராட்டத்தின்வரலாற்றுப்பதிவு.முழுமையான,கற்பனைக்கலப்பில்லாத வரலாற்றுத்திரைப்படம்.உலகில் ஒரு விடுதலைப்போராட்டத்தை நிகழ்த்துபவர்களே போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம்."எல்லாளன் நடவடிக்கை" தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய மிக முக்கியமான தாக்குதல்.இலங்கை ராணுவத்தின் மிக முக்கியமான விமானப்படைத்தளமான அனுராதபுரம் மீது புலிகளின் தற்கொடைதாக்குதல் அணி நிகழ்த்திய இத்தாக்குதல் விடுதலைப்புலிகளின் திறனையும் நுட்பமான திட்டமிடுதலையும் உலகிற்க்கு காட்டிய நிகழ்வு.21 கரும்புலிகள் தங்கள் உயிரை ஈந்து நடத்திய தாக்குதலை எவ்வித கற்பனைக்கலப்பும் இன்றி அப்படியே மீண்டும் ஒரு முறை நம் கண்முன் நடத்திக்காட்டுவது தான்" எல்லாளன்" எனும் திரைக்காவியம்.

ஒரு வெற்றிக்கு பின் உள்ள திட்டமிடுதலும்,போராளிகளின் ஈகத்துக்கு பின் உள்ள அவர்களின் உள்ளத்தின் ஈரமும் உலகம் அறியாதது.ஒரு சில மணி நேரத்தாக்குதலுக்காக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி எனும் தவம்புரிந்துள்ளனர் என்பதும்...நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து அளிக்கும் ஒவ்வொரு போராளியின் பின்பும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும்,நட்பும்,ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது.

இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைப்புக்கான தொடக்க நிலை கலந்துரையாடல்கள் சனவரி 2008 இல் தொடங்கப்பட்டன.பெப்ரவரி,10,2008 படப்பிடிப்பை தொடங்கி 2008 செப்ரெம்பர் வரையான 8 மாதங்கள் வரை வன்னிப்பெருநிலத்தில்,இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல்களுக்கும்,பொழியும் குண்டுகளுக்கும் நடுவே தங்களின் வியர்வையோடு உண்மையாகவே இரத்தத்தையும் சிந்தி "எல்லாளன்" எனும் உண்மைக்காவியத்தை நமக்காக பதிவு செய்துள்ளனர்.படப்பிடிப்பை தொடங்கிய ஏழாம் நாள்,பெப்ரவரி 17 2008 அன்று இப்படத்தில் இளங்கோ வேடத்தில் நடித்து வந்த மேஜர் புகழ்மாறன் உட்பட நால்வர் பளைப்பகுதியில் நடந்த படப்பிடிப்பின் போது இலங்கை ராணுவத்தின் எறிகணை வீச்சில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் இளங்கோ வேடத்தில் யுகந்தன் நடித்தார்.திரைப்படத்தின் பிற்ச்சேர்க்கை வேலைகள் அக்டோபர்2008 முதல் ஜனவரி 2009 வரை தமிழீழத்துக்கு வெளியே நடைபெற்றன.சனவரி 2009 இல் இத்திரைப்படம் திரையிடத்தயாரான நேரம் போர் உச்சமடைந்ததால் இத்தனை காலம் காத்திருக்க நேர்ந்தது.இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் உயிரோடு இல்லாத நிலையில்...அவர்களின் வாழ்வின் சாட்சியாகவும்,வீரம்செறிந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாட்சியாகவும் எல்லாளன் உங்கள் முன் வருகிறான்.

மார்ச் மாத தொடக்கத்தில் கனடாவில் முதலாவதாக எல்லாளன் திரையிடப்பட்டது.பின்னர் பிரித்தானியவில் பல இடங்களில் திரையிடப்பட்ட போது,குறேடன்,பெயர்பீல்ட் சினிமாவில் 26 ம் திகதி இப்படத்தைக்காணும் வாய்ப்பு கிடைத்தது.7 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அநேகர் காலதாமதமாகவே வந்து சேர்ந்ததால் 1 மணித்தியாலம் தாமதமாகவே திரைப்படம் ஆரம்பமானது.ஏறக்குறைய 250 பேரளவில் வந்திருந்தார்கள்.எல்லாளன் நடவடிகையில் காவியமான 21 கரும்புலிகளுக்கும்,படப்பிடிப்பில் வீரச்சாவைத்தழுவிய போராளிகளுக்கும்,கதாநாயகனாக நடித்து வீரச்சாவடைந்த மேஜர் புகழ் மாறன் ஆகியோருக்கு இத்திரைப்படம் காணிக்கை என வரிகளுடன் படம் தொடங்கும் போதே திரைப்படத்தின் கனதி விளங்கிவிடுகிறது.பசுமையான வயல்க்கரையோரம் சிறுவன் ஒருவன் பட்டம் ஏற்றி விளையாடிக்கொண்டிருக்கிறான்.எங்கோ தூரத்தில் "கிபிர்" விமானத்தின் இரைச்சல்,அது கண்டு அழைக்கிற தாயின் குரல் எதையுமே கவனிக்கிற நிலையில் அவனில்லை.திடீரென இடி இடித்தால்ப்போல ஒரு சத்தம்.சற்றுமுன் அழைத்த தாய் நின்ற இடம் புகையுள் அமிழ்ந்து கொண்டிருந்தது.சிதையில் எரிகிற சடலத்தைப்பார்த்து அம்மா,அம்மா என்று கதறுகிறான் அவன்.திரை இருண்டு காட்சி மாறுகின்றது.

muimmc.jpg

கர்ஜனை செய்தபடி நிற்கிறது கொடூரமாய் ஒரு சிங்கம்.கையில் வாளுக்குப்பதிலாக தீப்பந்தம் எரிந்துகொண்டிருக்கிறது.சிங்கத்தின் கையில் இருந்து எறியப்படும் தீப்பந்தில் யாழ்நூலகம் பற்றி எரிய, பாதி எரிந்து போன சரஸ்வதி சிலையோடு வருகிற "தமிழ்த்திரைக்கண் வழங்கும்" என்ற டைட்டில்,வாளையும் துப்பாக்கியையும் இணைத்து போடப்பட்ட "எல்லாளன்" தலையங்கம் என ஒவ்வொன்றும் கலைஞர்களின் நுணுக்கமான படைப்பாற்றலை பறைசாற்றி நிற்கின்றன.அனுராத புரம் நோக்கி வேவுப்புலிகள் போகிறார்கள்.அதே நேரம் கரும்புலிகள் படையணியில் இருந்து 21 பேரை இளங்கோ தலைமையில் நடவடிக்கை ஒன்றுக்காக தெரிவு செய்யப்படுகிறார்கள்.

23sdbth.jpg

யார் இந்த இளங்கோ?....

தளபதி பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இத்தாவில்ச்சமரின் போது விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தவன்தான் இந்த இளங்கோ.அங்குகாப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவனது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க,ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டவன். இதன் மூலம் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக தமிழர் பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன்.இளங்கோ தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கு நடவடிக்கைக்கேற்ற வகையில்வடிவமைக்கப்பட்ட சிறப்புப்பயிற்சி ஆரம்பமாகிறது.

மறுபுறம் விமானக்குண்டு வீச்சால் மக்கள் கொல்லப்படும் அவலம் தொடர்ந்தபடி இருக்கிறது.பாடசாலைகளில் இழப்புக்களை குறைக்கும் முகமாக தற்பாதுகாப்பு,முதலுதவி பயிற்சி வகுப்புக்கள் வழங்கப்படுகின்றன.இத்தருணத்தில்த்தான் செஞ்சோலை இல்லம் விமானக்குண்டு வீச்சில் சிதைக்கப்படுகிறது.விமானக்குண்டு வீச்சுல் இறந்த அனைவரும் பயங்கரவாதிகள் என்று சிறிலங்கா அரசு அறிவித்ததாக வானொலி சொல்ல கேட்டு மக்கள் கோபப்படுகிறார்கள்."சமாதானம் சமாதானம் எண்டு உலகம் முழுக்க திரிஞ்சாங்கள்,உந்த கிபிரை விழுத்த ஒண்டையும் வாங்காமல்

விட்டுட்டாங்களே?" என புலிகள் மீது ஆதங்கப்படுகிறார்கள்.கரும்புலி அணிக்கான பயிற்சி தொடர்ந்தபடி இருக்கிறது.புலிகளுக்கே உரித்தான மரியாதை

செய்யும் முறைகள்,தமிழில் வழங்கப்படும் அணிவகுப்பு கட்டளைகள்,விதம் விதமான ஆயுதப்பயிற்சிகள் என ஒவ்வொன்றும் வியக்கும் படி இருக்கிறது.வெறுமனே ஆயுதப்பயிற்சியை மட்டும் காண்பிக்காமல் கரும்புலிகளின் வாழ்க்கை,அவர்களின் இளகிய மனது,சகபோராளியில் காட்டும் அன்பு போண்ற விடயங்களையும் கலந்து கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பது அருமை.

svhwzp.jpg

கடுமையான பயிற்சி முடிந்ததும் தாக்குதலுக்கு போக முன்பாக பெற்றோரை சந்திக்க கரும்புலிகள் அனுப்பப்படுகிறார்கள்.கலியாணப்பேச்சை தாய்மார் எடுக்க சமாளிப்பது,"இதிலை எவள பிடிச்சு இருக்கு?" என்று தாய் கேட்டபடி விரட்ட வீட்டைச்சுற்றி ஓடுவது,"ஏன் இயக்க பிள்ளையள் யாரையேனும் பார்த்து வச்சிருக்கிறியே தம்பி?" போண்ற கேள்விகளை எதிர்கொள்வது என எல்லா காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.கரும்புலிகள் வீடுகளில் நின்றசமயங்களிலும் "கிபிர்" விமானங்களின் மனித வேட்டை தொடர்கிறது.

14dn7gw.jpg

"மாமா,உங்களால கிபிருக்கு அடிக்கேலாதோ?" எனக்கேட்ட சிறுவனுக்கு "இல்லையடா அதுகள் உயரத்தால போகுதுகள்,அடிக்கேலாது" என பதில் சொல்கிறான் இளங்கோ.அவன் விடாமல் கேட்கிறான் "அதுகள் எங்கயாவது ஒரு இடத்தில போய் இறங்கத்தானே வேணும்.அங்க வச்சு அடிக்கேலாதோ?".அந்த வீரம் செறிந்த நிலத்தில் பிறக்கும் போதே எங்கள் குழந்தைகள் இப்படி ராணுவரீதியாக சிந்திக்கத்தொடங்கி விடுகின்றனவோ என்னவோ?.

2e0pc1x.jpg

இதேசமயம் அனுராதபுரவான் தள தலைமையகத்தில் "புலிகள் ஏதாவது ஒரு விமானத்தளம் மீது தாக்குதல் நடாத்தவாய்ப்பிருப்பதாக" கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்து அதிகாரிகள் சந்திப்பு நடைபெறுகிறது.அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்பு தொடர்பில் இறுமாந்திருக்கும் அவர்கள் ஹிங்குராங்கொடை தளத்தில் இருக்கும் வானூர்திகளையும் அனுராதபுரத்திற்க்கு மாற்ற முடிவெடுக்கிறார்கள்.எல்லாளன் நடவடிக்கையின் ஒரு அங்கமாக புலிகளின் வேறு ஒரு சிறப்பு அணி எதிரியின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள தரப்பட்ட ஆல்கூறில் ஊடுருவி நிலை எடுக்கிறது.மறுபுறத்தில் வேவுப்புலிகள் அனுராதபுரதளம் மீதான வேவு நடவடிக்கையை முடித்துக்கொண்டு திரும்புகிறார்கள்.

1234j9x.jpg

வேவுத்தகவல்களை வைத்து மாதிரித்தளம் அமைத்து தாக்கி அழித்து பயிற்சி எடுத்தபின் கரும்புலிகள் காடுகளூடாக நீண்ட பயணம் மேற்க்கொண்டு அனுராதபுரம் வருகிறார்கள்.முகாமுக்குள் நுழைய முதல் இளங்கோ அணிக்கு சொல்லுகிறான்... "சரி எல்லாரும் கவனியுங்கோ,நீங்கள் கொண்டு போற ரைபிள்கள் எல்லாம் விமானங்களை உடைக்கும்,அதில ஒரு சந்தேகமும் இல்லை,மன உறுதியிலை தான் தங்கியிருக்கு.கோயில்த்திருவிழா மாதிரி லைட்டால சோடிச்சு வச்சிருக்கிறாங்கள்.முன்னுக்கு அடிவிழுந்தாலும் சரியான இலக்கை போயே சேரோணும்.மற்றது ஆர்.பி.ஜி காரர்.ஒரு செல் அடிச்சு முடிச்ச உடனேயே அடுத்த செல்ல லோட் பண்ணிடோணும்.சண்டையபார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது,முதல் ரவுண்ஸ் அடிக்கும் வரைக்கும் தான் என்னால சண்டை குழம்பக்கூடாது எண்ட பதட்டம் இருக்கும்.சண்டை தொடங்கிட்டெண்டா விளையாட்டாத்தானிருக்கும்.இதிலை எல்லாரும் எதிர்பார்த்து போறம்,சண்டை பிடிக்கிறம், உடைக்கிறம், அவசரப்படாம நிதானமா உடைக்கிறம்".இன்னும் சில மணித்துளிகளில் மரணிக்கப்போகிறோம் என்ற எண்ணம் துளியும் கூட பேசாமல் நிதானமாய் பேசுகிறான் அந்த வீரமறவன்.

zlvtc2.jpg

கம்பி வேலி வெட்டி உள்ளே புகுந்து விமானங்கள் இருக்கும்இடத்தைச்சென்றடைய முதல் ஆமிகண்டுவிட சண்டை 3.20 க்கு தொடங்குகிறது.விமானங்கள் இருக்கும் இடத்துக்கு செல்வதற்க்கு தடையாக எதிரி கனோன் ஆயுதத்தால் தாக்கத்தொடங்குகிறான்.ஈழப்பிரியாவும்,பஞ்சீலனும் கனோனை கைப்பற்றி எதிரிக்கு திருப்பி அடிக்கிறார்கள்.இதைவாய்ப்பாக பயன்படுத்தி விமானங்கள் இருக்கும் இடத்துக்கு ஓடுபாதைவழியே ஓடி வருகிறார்கள்.எதிரிவிமானி ஒருவன் உலங்குவானூர்தியை கிளப்ப தாயாரானபடி இருப்பது கண்டு அதை உடனடியாக அழிக்கிறார் தர்மினி.முகாமுக்குள் இருந்தா காவலரண்களை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின் ஒவ்வொரு விமானமாக தாக்கி அழிக்கிறார்கள்.இந்நேரத்தில் இளங்கோவிற்க்கு காலில் காயம் ஏற்பட்டுவிட்டபோதிலும் கட்டுப்போட்டுவிட்டு அந்த இடத்திலிருந்தே கட்டளைகளை வழங்குகிறான்.

கட்டளைகள் தலைமைப்பீடத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தன.தளபதிகளுக்கு சண்டையில் நடப்பனவற்றை அவதானித்தபடியிருந்தனர்.சண்டையின் போது எடுக்கப்ப்ட்ட தொடர்பாடலின் ஒலிப்பதிவு இருந்ததால் இளங்கோ பேசிய வசனங்களை அப்படியே திரைப்படத்திலும் பாவிக்ககூடியதாக இருந்ததாக ஒளிப்பதிவாளர் சந்தோஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.அது அப்படியே தெரிந்தது.வசனங்களில் கூர்மை அதிகம்."ஒண்டு விடாம அடிச்சு நெருக்குங்கோ,விடியும் வரை நிக்கோணும்,இவங்களுக்கு நாங்கள் யார் எண்டத காட்டோணும்" என ஆக்ரோஷம் வீசும் காட்சியிலாகட்டும்,காயப்பட்ட கரும்புலி வீரன் உடலில் கட்டி இருக்கும் குண்டை வெடிக்க வைக்கும் படி கேட்க கவலையோடு அனுமதி கொடுக்கும் காட்சியிலாகட்டும் யுகந்தன் "நடிப்பு" என்ற பதத்தைத்தாண்டி இளங்கோவாகவே மாறிருக்கிறார்.

சண்டை தொடங்கி ஒரு மணித்தியாலம் தாண்டிய பொழுதுகளில் வான்புலிகள் கரும்புலிகள் அணிக்கு உதவியாக தாக்குதல் நடத்த வருகிறார்கள்.வவுனியாவில் இருந்து ராணுவ உலங்குவானூர்தி விமானங்களை பின் தொடர்கிறது.வான்புலிகளை ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருந்த சிறப்பு அணிநின்ற இடத்தினூடு செல்லும் படி தாக்குதல் தலைமைப்பீடம் பணிக்க,அவர்கள் பின் தொடர்ந்து வந்த உலங்கு வானூர்தியை அந்த சிறப்பு அணியினர் சுட்டுவீழ்த்துகின்றனர்.இந்த ஒரு நகர்வே போதும் புலிகள் ஒவ்வொரு விடயத்தையும் எவ்வளவு ஆழமாக யோசித்து காய்களை நகர்த்துபவர்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்க்கு. ஓடுபாதைஅருகிலும்,தரிப்பிடங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் ஒன்று விடாமல் அழித்து முகாமுக்குள் நுழைய முயன்ற இராணுவத்தோடு சண்டையிட்டபடி இருக்கையில் இளங்கோ மேலும் இரண்டு இடத்தில் காயப்படுகிறான்.

"நான் நெருப்புக்கு நடுவில தான் கிடக்கிறன்,3 இடத்தில காயப்பட்டுட்டன்,சிக்கலில்லை,நான் சொன்ன வேலையளசெய்திட்டன்,அண்ணைதான் முக்கியம்,அவர கவனமா பார்த்துக்கொள்ளுங்கோ,இனி என்ர தொடர்பு இல்லாம போயிடும்"

qx5u7a.jpg

இளங்கோ இறுதியாக சொன்ன வார்த்தைகள் இவை.கேட்டதும் நம்மையறியாமலே கண்கள் குளமாகின்றன.உடம்பெல்லாம் காயப்பட்ட நிலையிலும் ஒரு கரும்புலி முகாமிள்ளே நின்ற மரம் ஒன்றில் புலிக்கொடியை பறக்கவிடுவதோடு படம் நிறைவடைகிறது."எவ்வளவு ஆற்றல்,தியாகம்,திட்டமிடுதல்,தொழில்நுட்பம் என்பனவற்றோடு இருந்தார்கள் எம்வீரர்கள்?,ஆனால் இன்று நம் முன்னால் சூனியமான எதிர்காலமல்லவா மிஞ்சி இருக்கிறது?".....படம் முடிந்ததும் ஓவ்வொருவர் முகத்திலும் கவலை படர்ந்திருப்பதை காணமுடிந்தது.எம்போராட்டம்,எம் வாழ்க்கை,எமது இயக்கம் போண்ற விடயங்களில் இருந்து விலகி எல்லாளனை சினிமாவாக பார்த்தால்.....

எல்லாளன் சர்வதேசதரத்தில் உருவான முதல் ஈழத்து திரைப்படம் என்பதை அடித்துச்சொல்ல்முடியும்.ஒளிப்பதிவு செய்து இயக்கிய சந்தோஸிற்க்கு ஈழத்துமக்கள் கடமைப்பட்டுள்ளனர்.கமெரா கோணங்கள்,அசைவு என சகல விடயங்களிலும் ஒளிப்பதிவு செய்த சந்தோசின் திறமை தெரிகிறது.படம் எந்த ஒரு இடத்திலும் தொய்வடையவில்லை.அந்தளவுக்கு கச்சிதமான எடிடிங்.கரும்புலி அணி வன்னியில் இருந்து அனுராதபுரம் செல்கையில் வருகிற "தாயக மண்ணே" பாடல் புதுவைரத்தினதுரையின் வரிகளில் எஸ்.பி,பாலசுப்பிரமணியம் குரலில் உணர்ச்சிப்பிரவாகம்.

இறுதியாக வருகிற சண்டைக்காட்சி ஆங்கிலப்படங்களிலும் கண்டிராதது.போலி ஆயுதங்களையும் துப்பாக்கியே பிடித்திராத நடிகர்களை வைத்து எடுக்கப்படும் சாதாரண சினிமாவுக்கும் எல்லாளனுக்குமான இடைவெளி தாக்குதல்காட்சிகளில் தெளிவாக தெரிகிறது.பின்ணணி இசை,பாடல் இசை என்பனவற்றில் ஈழத்து இசையமைப்பாளர் நிரு புகுந்து விளையாடி இருக்கிறார். அனுராதபுரம் விமானநிலையத்தை திரைப்படத்திற்காக வன்னியில் உருவாக்கிய கலைஞர்கள் திறமை வியக்க வைக்கிறது.

உலக சினிமாவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கும் எல்லாளனை ஆங்கில மொழிமாற்றி வெளியிடுவது நம் போராட்ட நியாயங்களை அனைவரும் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.தரமில்லாத இந்தியத்திரைப்படங்கள் கூட சர்வதேச விழாக்களில் விருதுகளுக்காக அனுப்பப்படும் நிலையில் நம் நிலத்தில் இறுதியாய் உருவான எல்லாளனை ஏன் அனுப்பக்கூடாது?.பொறுப்பானவர்கள் இவற்றைச்செய்ய வேண்டும்.

நம் எல்லோருக்கும் எல்லாளன் நடவடிக்கை பற்றி தெரியும்,அனுராதபுரம்,வன்னி என்பனவற்றின் அமைவிடங்கள் தெரியும்.ஆனால் இவை எதுவுமே அறியாத இளையோர்களுக்கு கரும்புலி அணியின் பயணப்பாதை தொடர்பில் குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதை அறியமுடிந்தது.வரைபடமூடு அணிநகர்ந்த பாதையை,100 கிமீ கால்நடைப்பயணம் என்ற பரிமாணத்தை காட்டியிருப்பின் இந்தக்குறை இல்லாமல்ப்போயிருக்கும் என்பது என் கருத்து.தாயக மண்ணே பாடலில் வரும் சில "றிவேஸ்" காட்சிகள்,வேகப்படுத்தப்பட்ட காட்சிகள் சாதாரண இந்திய சினிமாவை நினைவூட்டுவதோடு,படம் நெடுக வியாபித்து நிற்க்கும் உண்மைத்தன்மைக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன.விமானக்குண்டு வீச்சு காட்சிகளில் "கிபிர்" விமானத்தின் இரைச்சலோடு மக்கள் ஓடுவதை காண்பிக்கிறார்கள்.ஒரு சில காட்சிகளில் விமானங்களையும் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இவ்வாறு கண்ணுக்குத்தெரியாத மிகச்சிறிய குறைகள் சில இருந்தாலும் "எல்லாளன்" சினிமா ஈழவரலாற்றில் ஒரு பொக்கிசம்.தோல்வியாய் துவண்டு போயிருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற,மலையளவு மனோபலம் கொண்ட புனிதர்களின் கதை சொல்லும் காவியம்.நாமெல்லாம் மனத்தின் மூலைகளில் ஒதுக்கி

வைத்திருந்த ஈழக்கனவுகளை மீளவும் "எல்லாளன்" உயிர்ப்பித்திருக்கிறான் என்றால் மிகையாகாது.

நன்றி.....

________________________

லாவண்யா சிற்றம்பலம்

Via Facebook

http://www.facebook.com/lavanya.sitampalam

_________________________

Edited by darmaraj

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் தர்மராஜ். நான் எழுதிய திரைவிமர்சனத்தை விட பல மடங்கு சிறப்பாக எழுதியிருக்கிறார். பலவற்றை நுணுக்கமாக அவதானித்து பதிந்திருக்கிறார் இலாவண்யா சிற்றம்பலம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஓமண்ணே!... மிகத்தரமானதும் விரிவானதுமான விமர்சனம் தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.