பாகம் ஒன்று
சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்..
கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல்.
"தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது.
யார் அவர்கள்..??
காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது..
"தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய்.
அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள்.
இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம்.
ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை.
காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும்.
அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான்.
"தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக.
வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??"
அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள்.
அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப..
(தொடரும்)
பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்