பாகம் ஏழு
சூரியகாட்டின் எல்லையோரம் அது.
வற்றாபளை சந்தியில் இருந்து முன்னேறிவந்த ராணுவத்தை தடுத்து நிறுத்த புலிகளால் அமைக்கபடிருந்த காவலரண்கள் அவை.
நந்திகடலோரம் மாலை மயங்கும் அந்தி அழகை கூட ரசிக்க மனமில்லாமல் காவலிருந்தார்கள் அவர்கள்.
முன்னால் நீண்ட புலிகளின் விமானபடை ஓடுபாதை. அதற்கு அப்பால் இருந்த காட்டுக்குள் அரக்கர்கள் கூட்டமா படையெடுத்து வந்து நிலையெடுத்து இருக்கிறது.
நான்கு நாட்களாக அந்த அரக்கர் படை எடுத்த முயற்சிகள் எல்லாம் இவர்களின் தீரமான சண்டைகளால் முறியடிக்கபட்ட கோபத்தில் , கடுமையாக திட்டம் தீட்டி கொண்டிருந்தது எதிரிப்படை.
புதுக்குடியிருப்பின் முக்கியத்துவம் கருதி, எதிரிக்கு விட்டு கொடுக்காமல் களமாட, முக்கிய பணிகளில் இருந்த போராளிகள் கூட குறுகிய பயிற்சியுடன் களமிறக்கபடிருந்தார்கள்.
இவர்களுக்கு வலதுபுறம் நிதிதுறையும், இடதுபுறம் கடற்புலிகளும் களமாடி கொண்டிருந்தார்கள். ஐம்பது மீற்றருக்கு ஒரு அரண் இருந்தாலும் இரண்டுக்கு ஒரு அரணில் தான் போராளிகள் இருந்தார்கள், மற்றவை எல்லாம் டம்மியாகத்தான் (போலியான) இருந்தன. அவ்வளவு ஆட்பற்றாக்குறை.
பளை, கிளிநொச்சி முதல் அம்பகாமம், விசுவமடு,உடையார்கட்டின் மேற்குபுறம், தேவிபுரம், ஒட்டிசுட்டான், சூரியகாடு, வட்டக்கண்டல் என நீண்டு இருந்த அவ்வளவு எல்லை கூட்டிலும் ஆட்களை நிறுத்த புலிகளும் என்ன தான் செய்வார்கள்.
அந்த முறியடிப்புக்காக அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவனாக ராணிமைந்தன் நிலை நிறுத்தபடிருந்தான். பேனை பிடித்த கை முதன் முதலாக தானியக்க ஆயுதத்துடன்.
பதினைந்து நாட்கள் தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள்.
இன்னுமே சரியான குறி வைப்பதில் சிரமம், ஆயுத துப்பரவாக்களில் சிரமம், இப்படியான கள அனுபவம் கொஞ்சம் கூட இல்லாமல் ராணிமைந்தன் கொஞ்சம் சிரமபட்டுதான் போனான்.
ஒரு அரணில் இரண்டு பெண் போராளிகளுக்கு ஒரு ஆண் போராளி என்ற ரீதியில் இவர்களது பிரிவில் விடபட்டிருந்தார்கள்.
அங்கு சந்தித்தவள் தான் கலையரசி. அரணுக்கு காவலுக்கு வந்த முதல் நாளே ராணிமைந்தனுக்கு அவளின் தங்கையை ஞாபகபடுத்தும் உருவமாக திகழ்ந்தவள் கலையரசி. அவளுக்கும் இவன் ஒரு உடன்பிறவா சகோதரனாகவே தோன்றினான். அவர்களிடையே அப்படி ஒரு பாசபிணைப்பு.
வரும் வழங்கல்களை, மீள் உருவாக்கம் செய்து ருசியாக்குவதில் கலையரசிக்கு நிகர் யாரும் இல்லை. பழைய இடியப்பம், பழைய சோறு, கருவாடு, முறுக்கு துண்டுகள் என இவளின் மீள் உருவாக்க உணவுகளின் ருசிக்கு ராணிமைந்தனும் ஒரு அடிமை.
வீட்டை பற்றி நினைக்க எதிரி அவகாசம் கொடுக்காவிட்டாலும், அவனுக்கு வரும் வீட்டு நினைப்பை ஆற்றுப்படுத்தவல்ல ஆளுமை கலையரசிக்கு இருந்தது.
அன்றும் அப்படி தான்.
முதல் நாள் இரவு சாப்பிட்ட மீள் உருவாக்க வழங்கலின் கோளாறு காரணமாக, ராணிமைந்தனுக்கு வயிறு அவ்வளவு சரி இல்லை. அடிக்கடி வயிற்றாலை போக தொடங்கியது, எதிரி எதற்குமே அவகாசம் கொடுக்காமல், அவனிடம் இருக்கும் அவ்வளவு ஆயுதங்களையும் பயன்படுத்தி கொண்டிருந்தான்.
இவர்களின் அரணை தகர்க்க மட்டுமே, இரண்டு ஆர்.பி.ஜி, இரண்டு பி.கே, ஒரு சின்னைப்பர், மற்றும் ஏ.கே யுடன் நான்கு பேர் கொண்ட எதிரி அணி, இடைவிடாது தாக்கி கொண்டிருந்தது. பறந்து வரும் சன்னங்கள், அருகில் பெண்களின் நிலை, இவற்றுக்கு நடுவில், வயிற்று கோளாறு ராணிமைந்தனை படாத பாடுபடுத்தியது.
ஏன்ரா இயக்கத்துக்கு வந்தோம் என்று இருந்தது அவனுக்கு, மக்களாவது மண்ணாகட்டியாவது. வீட்டு நினைப்பு வேற. கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சு வட்டக்கச்சி வரை வந்திடானாம் என்ற செய்தி வேற இடியாக இருந்தது. இனி சண்டை பிடிச்சு என்னத்தை செய்யுறது என்ற நினைப்பு வேற.
ஓடிவிடலாம் முடிவெடுத்தான் ராணிமைந்தன்.
அலைபேசியில், பின்னணி நிலையில் இருந்த கொம்பனி தலைவருக்கு தொடர்பெடுத்தான்.
"கிலோ மக், கிலோ மக், அல்பா சேரா"
"சொல்லுங்க அல்பா சேரா"
" எனக்கு வயிற்று சிக்கல் , உடம்பிலே ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்க கூட வலு இல்லை, என்னை பின்னுக்கு எடுக்க முடியுமா"
"விளங்குது அல்பா சேரா, இண்டைக்கு கஷ்டம், ஆளை மாத்தி விடனும் இரவு மட்டும் தாக்கு பிடியுங்கள், நாளைக்கு மாத்திறம்"
"நன்றி கிலோ மக் "
"நன்றி அவுட்"
இரவுக்கு எப்படிதான் தாக்கு பிடிக்கபோறேனோ என்று தலை வெடிக்க யோசித்தான் ராணிமைந்தன்.
கலையரசி தான் ஆறுதலாக இருந்தாள்.
" ராணி அண்ணா, ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, நாளைக்கு எப்படியும் உங்களை மாத்தி பின்னுக்கு விடுவினம்" .
"கலை சொல்லுறேன் என்று குறை நினைக்காதே. இந்த முறை பின்னுக்கு போனால் மெடிக்சிலே விட்டால், நான் நூறு மீற்றர்.( ஓடப்போறேன் என்றதுக்கு போராளிகள் மத்தியில் இருந்த பரி பாசை அது ). எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு"
"ஒரு மனுஷனுக்கு ஏலாமல் வரும்போது தான் பாசங்களின் நினைப்பு கூட வரும். எனகேண்டால் இந்த சண்டையில நாங்கள் வெல்லுவம் என்ற நம்பிக்கை இல்லை. அம்மாக்கள் எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியலை. அவையோட போய் இருக்க போறேன்."
"இவ்வளவு உன்னோட பழகிட்டு உனக்கு சொல்லாமல் போக கூடாது என்று தான் உனக்கு சொல்லுறேன். யாருக்கும் சொல்லி போடாதே"
"நிச்சயமா அண்ணா சொல்ல மாட்டேன். அம்மாவை கண்டால் நானும் கேட்டேன் என்று சொல்லு. உனக்கு இங்கயும் ஒரு தங்கச்சி இருக்கிறா என்று சொல்லு".
அன்று இரவு முழுவதும், புலிகள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுட்டுகொண்டிருந்த இராணுவ சன்னங்களின் வெடியோசை, நாளை அம்மாவை காண போகிறேன் என்ற சந்தோசத்துக்கு கேட்டதாகவே தோன்றியது ராணிமைந்தனுக்கு.
எப்படா விடியும் என்றிருந்தது ராணிமைந்தனுக்கு.
உடுப்புகள், நாளேடுகள் அடுக்கிவைத்து விட்டு காத்திருந்தவனை எழுப்பியது எதிரியின் சன்னங்கள் தான். இண்டைக்கு அம்மாவை பார்க்க போறேன் என்று அவனுக்கும் தெரிஞ்சிட்டு போல.
காலை பாதினொரு மணிக்கு தான் மாற்று ஆளணி வந்து சேர்ந்தது.
ராணிமைந்தன் மாற்றபட்டு பின்களத்துக்கு வரவழைக்கபட்டான். கலையரசியை பிரிந்தது என்னவோ போலிருந்தது ராணிக்கு. இனி எப்போ பார்க்க போறேனோ..? என்ற கவலை மனசை வாட்டினாலும் அம்மாவை பார்க்க போறேன் என்ற சந்தோசம் எல்லாவற்றையும் வென்றது.
பின்களத்தில் இருந்து மருத்துவ ஓய்விற்காக மூன்று நாட்கள் மெடிக்ஸ் அனுப்பபட்டான் ராணிமைந்தன்.
எப்படியாவது அங்கிருந்து ஓடி அம்மாவிடம் போய்விட வேண்டும். இதை தவிர அவனிடம் வேற எந்த எண்ணமுமே இல்லை.
மூன்றாம் நாளே ஓட வேண்டும். திட்டமிட்டான் ராணிமைந்தன்.
அடுத்தநாள் அவன் திட்டத்தில் இடி விழப்போவது தெரியாமல் அன்று இரவு நிம்மதியாக படுத்துறங்கினான். வெடிச்சத்தம் கேட்காத அந்த இரவு. மறுநாள் ராணிமைந்தன் கனவில் இடிவிழபோகும் அந்த இரவு. மெல்ல கரைந்து கொண்டிருந்தது.
(தொடரும்)
பாகம் எட்டு இங்கே அழுத்துங்கள்