பாகம் எட்டு
விடியற்காலையே சேகர் அண்ணா அந்த மருத்துவபாசறைக்கு வந்திருந்தார்.
ராணிமைந்தனின் உடல்நிலையை அன்போடு விசாரித்துவிட்டு, " தம்பி உங்களுக்கு, இப்போதைய கள நிலைமை விளங்கும் தானே..உங்கட தேவை அங்கெ உடனடியாக தேவைபடுகிறது. ஒரு நாள் விடுமுறையை குறைத்துகொண்டு இண்டைக்கு பின்னேரமே களத்துக்கு போடாப்பா " என்றார்.
சேகர் அண்ணாவை காணும் போது இருந்த மகிழ்ச்சி இப்போ ராணிமைந்தனின் முகத்தில் இல்லை.
வேறு வழி இல்லாமல், கடவுளையும் திட்டி கொண்டு "சரி அண்ணே " என்றான்.
சேகர் அண்ணா, "சரிடாப்பா அப்ப நான் வாறன்" என்று புறப்படும் போது.
" அண்ணே ஒரு நிமிஷம்", ராணிமைந்தன் கொஞ்சம் உரத்து கூப்பிட்டான்.
"அண்ணே நான் இயக்கத்துக்கு வந்ததுக்கு ஒரு நாள் கூட எங்கட அம்மாவை பார்க்கவில்லை, இப்போ எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியாது. இண்டைக்கு ஒரு நாள் அனுமதி தருவீங்களா அம்மாவை தேடி பார்க்க"
கொஞ்ச நேரம் யோசிச்ச சேகர் அண்ணா, "சரி நான் புதுக்குடியிருப்பு சர்வதேச தொலைதொடர்பு நிலையம் போறேன். என் கூட வா. அங்கெ ரமணனுடன் சேர்த்து விடுகிறேன். அவனுடன் போய் தேடிப்பார். அது சரி அவை இருக்கிற இடம் உனக்கு தெரியுமா ?"
"இல்லை அண்ணா, ஆனால் எங்கட சித்தப்பா உடையார்கட்டிலே ஒரு கடை வைச்சிருக்கிறார் அங்கெ போய் கேட்டால் தெரியும் அண்ணே" என்றான் முகத்தில் ஒரு மகிழ்ச்சியுடன்.
"சரி வெளிக்கிடு" என்னுடன் என்றார் சேகர் அண்ணா அவருக்கே உரித்தான புன்னைகையுடன்.
நானும் ரமணன் அண்ணாவும் உடையார்கட்டை அடையும்போது காலை பதினோரு மணி இருக்கும். தெருவெங்கும் மக்கள் முகங்களிலே பீதியுடன், அடுத்த நிலை தெரியாது அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.
உழவு இயந்திரங்களிலும், லான்ட் மாஸ்டர்களிலும் எந்த இடம் பாதுகாப்பானது என்று தெரியாமல் பரபரப்பாக மாறி மாறி ஓடி கொண்டிருந்தார்கள். அதில் தலைகீழாக தொங்கும் கோழிகளின் நிலையும் எம் மக்களின் நிலையும் ஒன்று போல தோன்றியது எனக்கு.
இவற்றுக்கு மத்தியிலும், அம்மாவை பார்க்க போகிறேன் என்ற சந்தோசம் என் முகத்திலே தாண்டவமாடியது. சனம் எல்லாம் என்னை வித்தியாசமாக பார்ப்பது போலவே எனக்கு தோன்றியது.
ரமணன் அண்ணா தனது மூடி தலைகவசத்தை அணிந்து ஈருளியை ஓட்டும் வேகமே தனி, அவரை கட்டி அணைத்து என் மகிழ்ச்சியை சொன்னபோது, "யோசிக்காதே எப்படியும் உன் அம்மாவை கண்டு பிடித்திடலாம்" என்று ஆறுதல் வார்த்தை சொன்னார்.
நான் அவருக்கு சண்டையில் நடந்ததையும் என் பயத்தையும் மறைக்காமல் சொன்னபோது, "சரி ஒண்டு செய்வம், உன்னுடைய அம்மாவை கண்டு பிடிச்சால், உன்னை அவர்களிடம் விட்டுவிட்டு, நான் தனிய திரும்ப போகிறேன். எனக்கு என்ன தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை" என்றார்.
ரமணன் அண்ணா, சேகர் அண்ணாவுக்கு அடுத்த நிலை தளபதி. நடிகர் மதன்பாபு போல சிரிக்க தொடங்கினால் குலுங்க குலுங்க சிரிப்பார். மனசிலே எதையுமே வைச்சிருகாதவர். அவரை பார்த்தல் ஏதோ வெளிநாட்டு மாப்பிளை போல தான் இருப்பார். அவரின் இந்த உருவம், கொழும்பிலே மறைமுக வேலைகளுக்கு பெரிதும் உதவியதாக அடிகடி கூறுவார். கொழும்பிலே வேலை செய்யும்போது அங்கேயே ஒரு பெண்ணை காதலிச்சு, அவரை சமாதான காலத்தில் கைபிடித்து, இப்போ ஒரு குட்டி ரமணனுக்கு அப்பா.
அவர் அடிகடி என்னிடம் கூறும் வசனம் ஒன்று. "டேய் ராணி, நீயும் எனக்கு ஒரு தம்பி மாதிரி தான்" என்று. அதை இன்றைக்கு உண்மையாகவே மெய்பித்து இருக்கிறார்.
நல்லவேளையாக சித்தப்பா கடையிலையே இருந்தார்.
"தம்பி, உங்கட அம்மா ஆட்கள், பிரமந்தனாறு பள்ளிகூடத்துக்கு கிட்டவா தான் இருக்கிறதாக ஒரு முறை தெருவிலே கண்டபோது சொன்னா..ஆனால் இண்டைக்கு அந்த இடத்து ஆட்கள் எல்லாம் எழும்பி இஞ்சாலை போகுதுகள். ஒரே செல்லடியாம்..எதுக்கும் அங்கனேக்கை போய் கேட்டு பார்" என்று ஒரு ஆறுதல் குறிப்பு தந்தார்.
கணநேரம் கூட தாமதிக்காது நாங்கள் தேராவில்லை அடைஞ்ச போது, எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம். கடந்த வாரமாக பெய்த கடும் மழையாலே தேராவில் குளம் நிரம்பி, விசுவமடுவுகான தொடர்பு பாதை துண்டிக்கபடிருந்தது. ஒரு மாற்று வழிப்பாதை மண்ணால் அமைக்கபட்டிருந்தது . அது சேறும் சகதியுமாக, இடம்பெயர்ந்து வரும் மக்களை தாங்க கூடிய வல்லமை அற்றதாகவே இருந்தது.
அங்கால பக்கம் இருந்து வந்த ஒருவர் சொன்னார். தம்பி இதை கடக்க மட்டும் இரண்டு மணித்தியாலம் எண்டாலும் தேவை என்று.
அது எவ்வளவு பெரிய உண்மை என்று அதை கடக்கும் போது உணர்ந்து கொண்டோம். அது ஒரு ஒருவழிப்பாதை. காட்டை வெட்டி அமைத்திருந்தார்கள் . ஒரு முன்னால் போகும் வாகனம் புதைஞ்சாலோ அல்லது பழுதுபட்டாலோ பின்னால் வரும் வாகனம் அனைத்தும் மணிகணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தது. நாங்கள் ஈருளி என்றமையால் காட்டுக்காலே வெட்டி வெட்டி போய் சேர்ந்தோம்.
இயற்கை கூட எங்கள் மக்களை வதைத்து கொண்டிருந்தது. அந்த சன நெரிசலுக்குள்ளும் இராணுவம் தன்னுடைய நரவேட்டையை விடவே இல்லை. எறிகணைகளை மக்கள் நெரிசலுக்குள் ஏவி கொண்டே இருந்தது.காயபட்டவர்களை உடையார்கட்டு மருத்தவமனைக்கு கொண்டுவருவதற்கு கூட வேற வழி இருக்கவில்லை. மக்களின் ஓலங்களும், காயபட்டவர்களை முன்னகர்த்த காவல்துறையினரின் கட்டளைகளும் தான் மாறி மாறி ஒலித்து கொண்டிருந்தன.
ஒருவாறு கண்ணகிபுரம் வந்து, அதனூடு பிரமந்தனாறு போகும்போது வழி நெடுகிலும் மக்கள் எங்களை எச்சரித்தனர். "தம்பிமார் அங்காலே போகாதீங்க. அவன் கண்டபாடுக்கு செல்லடிச்சு கொண்டிருக்கிறான். அங்காலே இருக்கிற ஆக்கள் கூட எல்லாம் எழும்பி வந்து கொண்டிருக்குதுகள்" என்று எங்கள் மேலிருந்த அக்கறையை ,பாசத்தை சொற்களில் காட்டினார்கள்.
அண்ணே, இண்டைக்கு மட்டும் தான் இருக்கு. எப்படி எண்டாலும் ஒருக்கா அங்கெ போய் அம்மா இருக்கிறாவா என்று பார்த்திட்டு போவோம்" என்று நான் சொல்ல,
"தம்பி நீ சொன்னாலும் சொல்லவிடாலும் நான் போய் உங்கட அம்மாவை உனக்கு காட்டாமல் போக போறதில்லை என்ற முடிவோட தான் வந்திருக்கிறேன்" என்று ரமணன் அண்ணா தன் பாசத்தை வெளிபடுத்தினார் வார்த்தைகளாக.
நாங்கள் அந்த பள்ளிகூடத்தடியை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணிக்கு மேலே இருக்கும். மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த ஊர். மக்கள் வாழ்ந்துவிட்டு சென்றதுகான அடையாளங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது. கடும் செல்லடி கேட்டுகொண்டே இருந்தது. எங்களுக்கு பழகி போனதால் சட்டை செய்யாமல், அந்த பள்ளிகூட சுற்றயலை வலம் வந்து கொண்டிருந்தோம்.
செல் சத்தம் கொஞ்சம் குறையும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அகபட்ட தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு ஓடி கொண்டிருந்தார்கள்.நாங்கள் விசாரிக்க கூட நின்று பதில் சொல்லும் நிலையில் மக்கள் இல்லை.
எனது அம்மா கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டிருந்தது மேலழுந்த செல் புகை போல.
எங்களை போலவே,வீதிகளிலே மக்களை தேடி அலைந்தன அவர்களின் வீட்டு வளர்ப்பு நாய்கள். போக்கிடம் தெரியாமல், யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல், அவைகளின் முகத்தில் எங்களை விட கலவரம் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தன.
இவை எல்லாம் ஏன் எங்களுக்கு நடக்கவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று எங்களை பார்த்து கேட்பது போல இருந்தது.
தூரத்தில் ஒரு வீட்டில் இருந்து சமையல் புகை வந்து கொண்டிருந்தது. அது என் கனவில் ஒரு பாலை வார்த்தது போல இருந்தது. அந்த வீடுக்கு வெளியிலே ஈருளியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றோம்.
ஒரு ஐயா பிளாஸ்டிக் கதிரையில் இருந்து பழைய பேப்பரை படித்து கொண்டிருந்தார், உள்ளே நாப்பது வயசு மதிக்கத்தக்க இரண்டு அம்மாக்கள் இருந்து சமைச்சு கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கூட எங்கோ புறப்படுவதற்காக எல்லா சாமான்களையும் கட்டி வைத்துவிட்டு சமைச்சு கொண்டிருந்தார்கள்.
"ஐயா, இங்கே வட்டக்கச்சி ஆட்கள் ஆரும் பக்கத்திலே இருந்தவையோ?"
"தம்பி, இப்போ இரண்டு நாளைக்கு முதல் இந்த பள்ளிகூடத்தை சுத்தி நிறைய வட்டக்கச்சி ஆட்கள் தான் இருந்தவை. அவன் நேற்றில் இருந்து தொடர்ச்சியாக செல் அடிச்சு கொண்டிருக்கிறான். சனம் எல்லாம் இங்கை இருந்து உடையார்கட்டு, மயில்வாகனபுரம் பக்கம் போகுதுகள். கொஞ்ச சனம் திரும்ப வந்து விட்ட சாமான்களை எடுத்து கொண்டு போகுதுகள்" என்றார்.
என் நம்பிக்கை முற்றாக உடைஞ்சு போச்சு. என் முகத்தில் தெரிஞ்ச மாற்றத்தை பார்த்தோ என்னவோ உள்ளே இருந்து வந்த அம்மா கேட்டார்.
" யாரை தேடுறீங்க தம்பி"
"அம்மா!.. நான் என் அம்மாவை தேடுறேன். எனக்கு இயக்கத்திலே இண்டைக்கு மட்டும் தான் லீவு விட்டிருகிறாங்கள். இண்டைகிடையில் பார்க்காவிட்டால் இனி எப்போ பார்க்கமுடியுமோ " என்று என் இயலாமையை சொன்னேன்.
"தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்றார் அந்த அம்மா தாய்மைக்கே உரிய பாணியில்.
எனக்கு என் அம்மாவே நேரிலே வந்து கேட்பது போல தான் இருந்தது.
" சரி அம்மா போகும்போது வாறோம்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம்.
இந்த அம்மாவை கூட இன்னும் கண நேரத்தில் பிரியபோவது தெரியாமல்...
(தொடரும்)
பாகம் ஒன்பது இங்கே அழுத்துங்கள்