பாகம் பத்து
புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி
அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் .
இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள்.
கடுமையான சண்டை.
நெருப்பு சுவர்களாக புலிகள்.
சுடுகாடாக புதுக்குடியிருப்பு.
புதுக்குடியிருப்பு....
அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்தி.
கடைதொகுதிகளும், கதிரவன், மதி தேநீர்க்கடைகளில் ஒலிக்கும் புரட்சி பாடல்களும், அழகாக அடுக்கிவைக்கபடிருக்கும் மண்ணெண்ணெய் போத்தில்களும், மாவீரர் மண்டபம் அதை ஒட்டி நிற்கும் பெரிய நிழல் தரு மரம்,
பாண்டியன் உணவகம், பேரூந்து நிலையம் அதற்கு முன்னால் அழகான புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் எல்லாம் அந்த நகருக்கு மிடுக்கை கொடுத்திருந்தன.
மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த எப்போதுமே அந்த நகரின் சந்தியில் காவல் துறையினர் காத்திருப்பர்.
இன்று ...
கட்டடங்கள் தொடர்ச்சியான கொத்து குண்டுகளாலும், இடைவிடாத கிபிர் தாக்குதல்களாலும் அழிதொழிக்கபடிருந்தன.
நாச்சந்தி எது என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
இந்த மூலையில் இருந்து பார்த்தால் அந்த மூலை தெரியுமளவுக்கு தரைமட்டமாகபடிருந்தது.
அழகான அந்த நகரம் அலங்கோலமாக..
இருந்தும் புலிகளின் அந்த மனித வேலி, ராணுவ அரக்கனை உள்ளே விடாமல் தடுத்து வைத்துகொண்டிருந்தது.
மக்கள் புகலிடம் தேடி இரணைபாலை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் நோக்கி போய்விட்டார்கள்.
காகங்களும் நாய்களும் மட்டுமே நகருக்கு சொந்தம் கொண்டாடின.
ராணிமைந்தன் அந்த புலிகளின் மனித வேலியின் ஒரு பகுதிக்கு (கொம்பனிக்கு) பொறுப்பாக இருந்தான். அவனது தீரமிகு சண்டைகள் அவனை அந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தது.
எதிரின் கனரக ஆயுதங்களுக்கும், கொத்து குண்டுகளுக்கும், விமான குண்டுவீச்சுகளுக்கும் நடுவில் சாதாரண ஆயுதங்களையும் மனவலிமையையும் வைத்து போராட போராளிகள் பழகிவிட்டார்கள்.
அன்று அதிகாலை சேகர் அண்ணா, ராணிமைந்தனின் அரணுக்கு வந்திருந்தார். அவனது கடந்த கால செயற்பாட்டுகளை பாராட்டிய அவர், புலிகளின் செய்மதி தொலைதொடர்பு மையத்தில் ஒரு கருவியினை பழுதுபார்க்க அவனை அழைத்து செல்ல வந்திருந்தார்.
புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும்.
அதற்கு ராணிமைந்தனும் விதி விலக்கல்ல.
தனது கள பொறுப்புகளை துணை பகுதிப் பொறுப்பாளனிடம் ஒப்படைத்துவிட்டு சேகர் அண்ணாவுடன் புறப்பட தயாரானான்.
ஆனந்தபுரத்தின் மைய்யபகுதியில் அமைந்திருந்தது அந்த செய்மதி தொடர்பு மையம். புலிகளின், மக்களின் பெரும்பாலான வெளிநாட்டு தொடர்புகள் அந்த மையதினூடாகவே நெறிபடுத்தபட்டன.
நன்றாக உருமறைக்கபட்டு மரங்களூடு செய்மதி கட்டுப்பாட்டு அலைகளை பெறுவதற்காக, மிகவும் சிரமபட்டு ஒழுங்கமைதிருந்தார்கள்.
வன்னி மக்களின் வெளிநாடுக்கான தொடர்பு, பண பரிமாற்றங்கள் (உண்டியல்) எல்லாமே சேகர் அண்ணாவின் கட்டுப்பாடில் இயங்கும் சர்வதேச தொலைதொடர்பு பிரிவினாலே நடாத்தபட்டன. மொத்தத்தில் சேகர் அண்ணா, வன்னிமக்களுக்கு ஒரு கண்காணா தெய்வமாக விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது.
என் காதுபடவே மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " என்று சேகர் அண்ணாவை தெரியாத சனம் கூட பேசி இருக்கு.
ஒரு செய்மதி அலைவாங்கியில் (Receiver ) பிரச்சனை. நாங்கள் இனி புதிதாக வெளிநாட்டில் கொள்வனவு செய்தாலும் கூட நாங்கள் எல்லாம் செத்தாப்பிறகு தான் வந்து சேரும். பழைய பழுதாகிப்போன அலைவாங்கியில் இருந்து ஏதாவது பகுதிகளை (Parts ) எடுத்து ஒட்டி செய்யவேண்டும்.நிறைய கணித சமன்பாடுகள். நிறைய இலத்திரனியல் நுண்ணறிவுகள் வேண்டும்.
வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும்.
புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான்.
அந்த முகாமுக்கு அருகில் இருந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கும் வேலையும் சேகர் அண்ணாவுக்கு இருந்தது. தன்னை அந்த பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு என்னை தொடர்பு மையத்துக்கு போக சொன்னார் சேகர் அண்ணா.
பயிற்சி முகாம்கள் பொதுவாக மக்கள் வாழ்விடங்கள் குறைந்த காட்டுபகுதியில் தான் வைத்திருப்பது வழக்கம். ஆனாலும் எதிரி எங்களை ஒரு குறுகிய நிலபரப்பில் ஒடுக்கி இருந்தமையால், எங்கள் பயிற்சி முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை அண்டித்தான் அமைக்க வேண்டிய சூழ்நிலை. இருந்தும் நாங்கள் மக்களை விமான தாக்குதல் இலக்கு, செல் இலக்கு குறித்து எச்சரித்து அந்த இடங்களில் இருந்து தள்ளி வாழும்படி கேட்டுகொள்வோம்.ஆனால் மக்களும் தான் எங்கு போவார்கள். அவ்வளவு மக்களையும் தாங்க கூடிய நிலமாக இடமாக அந்த இடங்கள் இருக்கவில்லை. அவர்களும் எங்கள் முகாம்களுக்கு அருகிலேயே வாழ்ந்தும் பழகிவிட்டார்கள்.
நான் சேகர் அண்ணாவை அந்த பயிற்சி முகாமில் விட போகும்போது, காலையில் பின்களபணிக்கு ஆண்களை அனுப்பிவிட்டு (அன்றைக்கு இருந்த ஒரே வருவாய் தரும் தொழில்) வாசலில் காத்திருந்தார்கள் பெரும்பாலான பெண்கள்.
பின்களபணி மரம் தறித்தல், பதுங்குகுழி அமைத்தல், அரண் அமைத்தல் என்று வேறு வேறு பணிகள். எதிரியில் எல்லை கோட்டை வைத்து தான் சம்பளபட்டியல். எல்லைகோட்டில் இருந்து இருநூறு மீற்றருக்குள் ஒரு சம்பளம், இருநூறு மீற்றர் தொடக்கம் ஐநூறு மீற்றர் வரை ஒரு சம்பளம், அதற்கு அப்பால் ஒரு சம்பளம் என்று மாறிக்கொண்டே போகும்.
உங்களுக்கு புரியுதோ இல்லையோ உயிரின் விலை அது.
ஆண்களுக்கும் வேற வழி இல்லை. புலம்பெயர் தொடர்பில்லாத மக்கள் தான் வன்னியில் பெரும்பாலானவர்கள். வயல்களையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள். பிச்சை எடுத்து பழக்கமில்லாதவர்கள். தன்மானம் காப்பவர்கள்.உதவி நிறுவனங்கள் கூட அங்கெ இல்லை. உயிரை மூலதனமாக்கி உழைத்தார்கள்.
இது உங்களால் முடியுமா உறவுகளே.. இண்டைக்கு திரும்ப வந்து அம்மாவின், மனைவியின், குழந்தையின் முகத்தை பார்ப்போமா என்று கூட தெரியாமல் வேலைக்கு போக உங்களால் முடியுமா.?
அவர்கள் போனார்கள், எல்லாம் கால் வயிற்று கஞ்சிக்காக.
அவர்கள் வரும்வரை, அந்த பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், மனைவிகள் வாசலில் காத்திருந்தார்கள். பசியால் அழுதுகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மாவை தண்ணியில் கரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். எங்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து முகங்களில் புன்னைகை தவள விடை கொடுத்தார்கள்.மனசுக்குள்ளே எங்களுக்கான மதிப்பு இன்னும் இருக்கு என்று காட்டும் புன்னைகைகள் அவை.
சேகர் அண்ணாவை, பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு விடைபெறும்போது,
"ராணி திருத்தி முடிய தொடர்பெடு, நான் அல்பா 1 அலைபேசி எண்ணில் தான் நிற்பேன். மறந்து போய் விட்டுவிட்டு போயிடாதே" என்றார் சேகர் அண்ணா.
இன்னும் சில கணங்களில் எந்த அலைவரிசையிலும் தொடர்பே எடுக்கமுடியாத இடத்துக்கு, எங்களையும் எங்கள் மக்களையும் தவிக்க விட்டு போக போவது தெரியாமல் ...
(தொடரும்)
பாகம் பதினொன்று இங்கே அழுத்துங்கள்