பாகம் பதினைந்து
மக்கள் அலையலையாக சென்று கொண்டிருந்தார்கள்.
தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், வயதானவர்கள் காயமடைந்தவர்களை, துணிகளில் கட்டி தூக்கியபடியும், ஒடுங்கிய பாதையூடாகவும், கடல்நீரேரியூடகவும் மக்கள் ராணுவத்திடம் சென்ற வண்ணம் இருந்தார்கள்.
நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.
"கடவுளே என் அம்மா அப்பா, என் குடும்பம் இப்படி இராணுவத்திடம் போக கூடாது" என்று.
மனசை எதுவோ பிசைந்தது. எங்களின் இயலாமை அதில் தெளிவாக தெரிந்தது.
கொள்கைக்கும் உயிராசைக்கும் இடையில் போட்டி நடந்தது.
மானத்துக்கும் மனசுக்கும் போராட்டம் நடந்தது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மனசில், கொண்ட கொள்கையை விட, தமிழனின் மானத்தை விட, உயிர் மேல் இருந்த ஆசை பெருசாகபட்டது.
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் யாருக்காக போரடினமோ அந்த மக்கள் கூட்டத்தில் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து என்னை அதிர வைத்த சம்பவம் அது.
ஆமாம். மக்களை போகவேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்போராளிகளை ஒரு மக்கள் (??) கும்பல், கதற கதற தூக்கி சென்று ராணுவத்திடம் ஒப்படைத்தது. அந்த கொலைவெறி பிடித்த ராணுவ அதிகாரி, அந்த மக்களுக்கு முன்னாலேயே இரு பெண் போராளிகளையும் தலையில் சுட்டு கொன்றான்.
மக்களுக்காக தங்கள் உயிரையும் மதிக்காது போராடிய அந்த போராளிகள், தங்கள் சொந்த மக்களாலேயே தூக்கி சென்று கொடுத்த போதே பாதி உயிரை விட்டிருப்பார்கள். அந்த துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் மீதி உயிரையும் எடுத்து, எங்கள் தாய் மண்ணில், ஈரமும் உப்பும் நிறைந்த அந்த வெளியில் அவர்கள் உடலை சாய்த்தது.
தூக்கி சென்று கொடுத்த மக்கள் கும்பலுக்கு ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பழிக்கு பழி வாங்கிய மகிழ்ச்சி. யாருடைய கோபத்தை வேறு ஒருவரிடம் காட்டிய சந்தோசம்.
ராணுவத்திடம் பாராட்டு வாங்கி மென்பானம் வாங்கி குடித்தார்கள்.
மக்களுக்காக போராடியதை தவிர, எதுவுமே அறியாத அந்த இளம் பெண் போராளிகளின் உடல்கள், உள்ளே வந்த மக்களின் பார்வைக்காக போடப்பட்டிருந்தது.
நெஞ்சையே கொதிக்க வைக்கும் இந்த சம்பத்தை சிலர் மனம் பதைபதைக்க, சிலர் இவங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, சிலர் கண்டும் காணததுமாக போக, சிலர் வழி தெரியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு போனார்கள்.
அந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக எதிரியிடம் சரணடைந்த போராளிகள் கூட எதுவுமே நடக்காதது போல வாழாவிருந்தார்கள்.
சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்கள் சகோதரிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்...? உங்களுகாக தங்கள் ஆசைகள், உறவுகளை விட்டுவிட்டு போராட வந்ததுக்கு இது தான் கைமாறா ..??
அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்..மனம் திறந்து சொல்லுங்கள்.
மக்களிடம் கொக்கரித்து கொண்டிருந்த சிங்கள வெறியன்களுக்கு பாடம் படிப்பிக்க விடுதலை புலிகளின் கரும்புலி அணி தீர்மானித்தது.
சாதாரண பெண்கள் போல சட்டை அணிந்து, உடுப்பு பைகளுடன் இரண்டு பெண் கரும்புலிகள் ராணுவத்திடம் சரணடைய சென்றனர். தங்களை முன்னாள் போராளிகள் என்று இராணுவத்திடம் அறிமுகப்படுத்த அவர்களை தனியே கூட்டிகொண்டு, ராணுவ சகாக்கள் மத்தியில் விடும்போது, அந்த வீர தமிழிச்சிகள், தங்களை வெடிக்க வைத்து சிங்களவனுக்கு மானம் என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன என்று காட்டினார்கள்.
அந்த இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியன்களும் சிதறிப்போய் இருந்தார்கள்.அந்த இரு இளம் பெண் போராளிகளை கதற கதற சுட்ட அதிகாரிகள் உட்பட.
கொலைவெறி கொண்ட சிங்கள ராணுவம் எழுந்தமானதுக்கு மக்களை நோக்கி சுட தொடங்கியது. இனி தப்பி விட்டோம், இனி சாகமாட்டோம் என்று நினைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே உயிரை விட்டார்கள்.
விடுதலைப்போராட்டம் என்பது தனியே உயிர் சம்பந்தபட்ட விடயம் அல்ல. அது மானம் கொள்கை சம்பந்தபட்டது.
சிங்களத்தின் தலைப்பு செய்தி : -
மக்களோடு மக்களாக வந்து புலிகள், தப்பியோடும் மக்களை தாக்கியதில் நாற்பது பொதுமக்கள் பலி.
எங்களை ஏற்றி செல்லவந்த படகுகளில் ஏறி நாங்கள் வலைஞர்மடத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது.
அங்கும் மக்கள் பதட்டமாக கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாக்கால் நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள்.
இராணுவத்தின் செல்களும், துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு வந்த சன்னங்களும் மக்கள் உயிர்களை குடித்து கொண்டிருந்தது.
என் தோளில் துப்பாக்கியை சுமந்தபடி, வலைஞர்மட வைத்தியாலைக்கு முன்னால் இருந்த மண் பாதை வழியாக, இராணுவம் வலைஞர்மடத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க பயணித்து கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு கர்ப்பிணிதாயை ஏற்றி கொண்டு, முகப்பு ஒளியை பாய்ச்சிய வண்ணம், ஒலி எழுப்பியபடி ஒரு நடுத்தர வயது கணவன், பிரசவ வலிதாங்காத தன் மனைவியை உந்துருளியில் ஏற்றிய வண்ணம் கத்தி வழி கேட்டபடி வந்து கொண்டிருந்தான்.
எங்கிருந்தோ வந்த சன்னம் ஒன்று அவன் தாடையை கிழித்து கொண்டு போனது. மனைவியுடன் வீதியில் விழுந்தான். வாய்க்குள் இருந்து தண்ணீர் குழாயில் வருவது போல குருதி கொப்பளித்து பாய்ந்து கொண்டிருந்தது. மூக்கின் கீழ்பகுதி தாடையுடன் இல்லை.
ஓஒ என்று கத்தி அலறிய அந்த கர்ப்பிணி மனைவி, தன் பிரசவ வலியால் ஒரு கையை தன் வயிற்றிலும், மறுகையை தன் கணவனின் வாயிலும் வைத்தபடி கத்தி அழுதாள்.
"அண்ணே யாராவது ஓடி வாங்கோ, ஆராவது வந்து காப்பாத்துங்கோ" என்று தன் பிரசவ வலிக்கும் மத்தியில் பலமாக கத்தினாள்.
தொடர்ந்து வந்து கொண்டிருந்த சன்னகளுக்கு மத்தியில், யாருமே அவர்களுக்கு கிட்டே போகவில்லை.
நான் அந்த இடத்துக்கு விரைந்தேன். வாய் பிளந்து குருதி வருவதால் என்னால் கட்டுப்போட முடியவில்லை. இன்னும் ஒரு மூன்னூறு மீட்டரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டும்.
அவரது உந்துருளியை நிமிர்த்தி அவரை உட்கார வைத்து நான் முன்னால் ஏறி கொண்டேன். இப்போ இன்னொருவர் பின்னால் இருந்து அவரை பிடிக்கவேண்டும். அந்த கர்ப்பிணி தாயால் இரண்டு பக்கமும் காலை போட்டு இருக்க முடியாது. அருகில் இருந்தவர்களை கெஞ்சினேன். யாருமே உதவிக்கு வரவில்லை.
எனக்கு ஒரு கயிறு அல்லது துணி வேண்டும் என்று கேட்டேன். அந்த கர்ப்பிணித்தாய் ஓடி சென்று, ஒரு தரப்பாள் கூடாரத்தில் இருந்த சேலையை உருவி வந்து என்னுடன் தன் கணவரை சேர்த்து கட்டினாள். நான் வைத்தியசாலைக்கு அவரை கொண்டு வர அந்த பெண் கத்தியபடியே பின்னால் ஓடி வந்தாள்.
அவரை கொண்டு போய் நான் வைத்தியரிடம் ஒப்படைத்த போது, அந்த கணவனின் உயிர் பிரிந்திருந்தது.
அந்த கர்ப்பிணி மனைவியை எதிர்கொள்ள மன தைரியமற்ற நான் ஒரு ஒரமாக வெளியேறினேன்.
என் உடலெங்கும் அப்பி இருந்த அவரின் இரத்ததை, ஒரு தொகுதி இலையான்கள் மொய்த்து கொண்டிருந்தன.
(தொடரும்)
பாகம் பதினாறு இங்கே அழுத்துங்கள்