பாகம் பதினெட்டு
எல்லோருடைய கண்களும் அவனை நோக்கியே இருந்தது.
ராணி உறுதியோடு நிமிர்ந்தே நின்றான்.
அவன் முகத்தில் எந்தவித கலக்கமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக நின்றான்.
தான் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் முழுசாக தெரிந்தவனாக இருந்தான்.
நேற்று இரவு கூட, உணவுகளை பொதி கட்டும் போது, சந்தோசமாக பேசி கொண்டிருந்தவன்..
" மச்சான் இந்திய இராணுவ காலபகுதியில் நாங்கள் சின்ன பிள்ளைகள், தலைவர் காட்டுக்குள்ளே இருக்கும்போது நாங்கள் அவரின் பக்கத்தில் இல்லை. இப்போ எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. எங்கட மக்களின் போராட்டத்தை கொண்டு நடத்தும் தலையாய பொறுப்பு எங்களுக்கு கிடைச்சிருக்கு. "
" நான் என் வாழ்நாளிலையே பார்க்காத தலைவர் கூட சாப்பிட்டு படுத்துறங்கி அவரை பாதுகாக்கும் கடமை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன் " என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்த ராணிமைந்தன், கரும்புலியாக தான் போகிறேன் என்றால் யாருக்கு தான் ஆச்சரியமாக இருக்காது.
" ராணி இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் இல்லை. இதற்கு நிறைய உறுதி வேணும். பயிற்சி வேணும். திடீர் என்று முடிவெடுத்து இலக்கை துல்லியமாக தாக்க முடியாது..." அந்த மூத்த தலைவர் சொல்லி முடிக்க முதலே ..
"இல்லை அண்ணே ..நான் செய்வேன் ..என்னை நம்புங்க.. உங்கள் மேல் ஆணையாக ..இந்த தாய் மண் மீது ஆணையாக நீங்கள் சொல்லுற இலக்கை தாக்கி அழிப்பேன்" மிகவும் உறுதியாக அவன் வாயிலிருந்து வசனங்கள் வெளிப்பட்டன.
"அப்படி இல்லை ராணி.. உன்னிலே எனக்கு நம்பிக்கை இருக்கு...ஆனால் இது வழக்கமான தாக்குதல் பாணி இல்லை ..ஒரே ஒரு முறை தான் தாக்கலாம். அதுவும் இலக்கை சரியாக தாக்கவேணும். பிழைச்சுதோ அவன் சுதாரிச்சிடுவான். அப்புறம் நாங்கள் தாக்கவே முடியாது. நிறைய பயிற்சி தேவை ..தலைவர் சம்பந்தபட்ட விடயம் வேற..அது தான் யோசிக்கிறேன்.."
"அண்ணே ..நேரம் போகுது அண்ணே ..என்னை நம்புங்க அண்ணே ..நான் நிச்சயமா வெற்றிகரமாக முடிப்பேன்"..
வேறுவழி இல்லாமலும். ராணியின் உறுதியின் பேரிலும் இரண்டுமனசுடன் அந்த மூத்த தலைவர் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார்.
ராணியின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி. அதன் வெளிபாடோ என்னவோ ஒப்புதல் கிடைத்தவுடனேயே அந்த மூத்த தலைவருக்கு ராணுவ வணக்கம் செலுத்தினான்.
சொல்லுங்கள் உறவுகளே ..இவர்கள் பிறந்த இனத்தில் தானே நாங்களும் பிறந்தோம். இவர்களுக்கு இருக்கும் உறுதியும் வேட்கையும் எங்களுக்கும் இருக்கத்தானே வேணும் ..
நேற்றுவரை தலைவருடன் வாழணும் என்று நினைத்த ஒருவனால்..
தன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தங்கைகளுக்கும் நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி வந்த ஒருவனால்..
தன் வாழ்நாளில் பொறியிலாலராக வரவேண்டும் என்று இலட்சியத்துடன் வாழ்ந்த ஒருவனால்..
இன்று தன்னுயிரையே உவந்து அளிக்கும் வல்லமையை யார் கொடுத்தது..
சொல்லுங்கள் உறவுகளே..
நாங்கள் பிறந்த அதே மண்ணில் தானே இவர்களும் பிறந்தார்கள்...
நாங்கள் விளையாடிய அதே தெருக்களில் தானே இவர்களும் விளையாடினார்கள்..
நாங்கள் கும்பிட்ட அதே கடவுளை தானே இவர்களும் கும்பிட்டார்கள்..
நாங்கள் படிச்ச அதே பள்ளிகூடத்தில் தானே இவர்களும் படிச்சார்கள்..
இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த உணர்வுகள் வந்தது.. இவர்களுக்கு மட்டும் ஏன் தங்கள் உயிரை சொன்ன நேரத்தில் மக்களுக்காக கொடுக்கும் வல்லமை வந்தது..
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் ..
இவர்களா பிழைக்க தெரியாதவர்கள்..
இவர்களா யதார்த்தம் தெரியாதவர்கள் ..
இவர்களா சுழிக்க தெரியாதவர்கள் ..
இவர்களா இரக்கமற்றவர்கள் ...
அந்த எதிரியின் முன்னணி கட்டளை மையம் தான் ராணியின் இலக்கு.
அன்பு மாஸ்டர் ராணிக்கு திட்டத்தை விளங்கபடுத்தி கொண்டிருந்தார்.
"இங்கே பார் ராணி ..அவன் அந்த கட்டளை மையத்தை சுற்றி கடும் பாதுகாப்பு போட்டிருப்பான். நீ எப்படி என்றாலும் சக்கையை அந்த மையத்திலே இருந்து ஒரு முப்பது மீற்றருக்குள் வெடிக்கவை..மிச்சத்தை நாங்கள் பார்க்கிறோம். என்ன பாடு பட்டாலும் முப்பது மீற்றருக்குள்ளே போயிடு..அதில் தான் எங்கட தாக்குதல் வெற்றி தங்கி இருக்கு."
"உனக்கு இலக்கை அடையும் வரை காப்புச்சூடு வழங்க கனிவாளனும், எழில்வண்ணனும் வருவார்கள். அவர்கள் உனக்கான தடைகளை உடைத்து தருவார்கள்."
"சரி அண்ணே "
"ராணி ..உன்னில் தான் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே தலைவர் வருவார். அவர் இங்கே வாறதும் ..எங்கட அடுத்த திட்டத்தின்ட வெற்றியும் உண்ட கையிலே தான் இருக்கு..""
"எனக்கு விளங்குது அண்ணே...."
"சரி வெளியிலே சக்கை நிக்குது போய்ட்டுவா ..தொடர்பிலே பேசுவோம்.."
"சரி அண்ணே.."
மூத்த தலைவரிடம் வந்த ராணி அவரை ஆரத்தழுவினான்.
கண்கள் கலங்க.. அண்ணே .. எனக்கு பயத்தாலே கண்கலங்கவில்லை அண்ணே ..
இன்னும் பத்து நிமிஷம் நின்றால் நான் வாழ்நாளிலே காணாத என் தலைவனை காணலாம் அந்த பாக்கியம் கூட என்னக்கு இல்லையே என்று தான் அண்ணே.. கண் கலங்குது.
என்னை இப்படி வழிநடத்தின உங்களை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் அண்ணே கண் கலங்குது..
அண்ணே எப்படியாவது தலைவரை பாதுகாப்பாக கொண்டுபோய் சேருங்கள் அண்ணே ..
அண்ணே நீங்களும் தலைவரும் தமிழீழம் கிடைக்கும்வரை உயிரோட இருக்கணும் அண்ணே ..அது தான் அண்ணே என்னுடைய கடைசி ஆசை..
நன்றி வணக்கம் அண்ணே.... சொன்ன ராணி திரும்பி கூட பார்க்காமல் புறப்பட்டு தனக்கு காப்புச்சூடு வழங்கபோகும் தோழர்களிடம் வந்தான்.
தனது பழ ரின்னையும், இறைச்சி துண்டுகள் ரின்னையும் உடைத்து அவர்களிடம் நீட்டினான்.. சாப்பிடுங்க மச்சான் சண்டை பிடிக்க தெம்பு வேணும்..
அவர்கள் இவனுக்கு ஊட்ட வெளிக்கிட ..இல்லை மச்சான் இன்னும் பத்து நிமிசத்திலே சாகபோற எனக்கு, என் வயிற்றுக்கு எதுக்கு மச்சான் சாப்பாடு..நீங்களே சாப்பிடுங்க மச்சான்.. அப்போ தான் தெம்பா சண்டை பிடிக்கலாம்.. நீங்கள் உடைச்சு கொடுத்தால் தான் நான் கடைசி மட்டும் போகலாம் ..சாப்பிடுங்க என்று ஊட்டி விட்டான் ராணி ..
அந்த காட்சியை பார்த்தவர்கள் மனசு இறுகுவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது..
தற்கொலை செய்யபோறவர்கள் கூட கடைசி ஆசைக்கு விரும்பினதை சாப்பிடுவார்கள் ...மக்களுக்காக வெடிக்க போகும் அவன் பசிக்கு கூட சாப்பிடாமல் தோழர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றான்..
ராணிக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.. ஆனால் அவன் அதை என்றைக்குமே சொன்னது இல்லை.. அவனுக்கு CBZ ஈருளி ஓடனும் என்று நிறைய நாள் ஆசை...ஆனால் அவனுக்கு அது என்றைக்குமே கிடைத்ததில்லை. இறுதி காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாருமே வைத்திருந்ததும் இல்லை...
ராணி அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தான்..
அவனுக்கான சக்கை வாகனம் காத்திருந்தது.
அது ஒரு CBZ.
(தொடரும்)
பாகம் பத்தொன்பது இங்கே அழுத்துங்கள்