முகமூடிகள்
ராமலக்ஷ்மி
ஒன்றல்ல இரண்டல்ல
ஒருநூறு முகமூடிகள்
அணிந்தது அறியாதபடி
தோலோடு சங்கமமாகி
சதையோடும் எலும்போடும் ஊடுருவி
பளபளத்த முகமூடிகளுக்கே
எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள்
அத்தனையும் ரசித்தபடி
இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி
உயிரோடு ஒன்றிப்போய்
உலகுக்கான அடையாளமாகி
ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில்
விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம்
கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத்
தன்னிச்சையாக
ஒவ்வொன்றாக அன்றி
ஒட்டு மொத்தமாக
சுற்றம் மறந்து நிதானம் இழந்து
மதி மழுங்கி மற்றவர் வருத்தி
மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில்
எதிரே இருந்த கண்ணாடியை
எதேச்சையாய் ஏறிட
பேதலித்து அலறுகிறது சுயமுகம்
தன்கோரம் தானே காணச் சகியாமல்.
***
உடைந்து போன பொம்மையைக்
கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த
குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும்
விளையாட்டுச் சாமான்களைப் போலக்
கலைந்து கிடந்தது வீடு
கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால்
கலங்கி நின்ற மனதை
ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள்
தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின
ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை
குவிந்த முகமூடிகளுக்குள்
அமுங்கி மூச்சுத் திணறி
மீட்கக் கோரி வெளி நீண்ட கையை
ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட
மகானுபாவர்,
”வருத்தம் விடு!
மனிதருக்காகவே
படைக்கப்பட்டவைதாம் இவை.
சேர்ந்து கிடப்பதில்
இன்னும் சிறப்பானதாய்த்
தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள
கிடைத்த வாய்ப்பாகப் பார்”
உபதேசித்தார்
நழுவத் தொடங்கிய தன் முகமூடியை
கெட்டியாகப் பிடித்தபடி.
http://www.uyirmmai....s.aspx?cid=3097