அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை.
அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே
இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை.
கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட.
எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி.
நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம்.
பத்து வயசிலையே அந்த அம்மன் கோவிலில் வைத்து "சிவ தீட்சை" எடுத்துவிட்டேன்.
ஐயர் பூசையாக்கும் போது கேட்டுக்கேட்டே எனக்கும் சில மந்திரங்கள்
அத்துப்படி. அந்தளவுக்கு அம்மாளாச்சி என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டா.
ஆனால் அப்பாவுக்கு அப்படியல்ல,
அப்பாவின் முன்னோர்கள் வழி வந்த கோவில் என்று அப்பாவும்,அவர் சகோதரர்களும்
சொல்லுவார்கள். பிற சாதியினர் செல்வதற்கு எல்லாம் தடைவிதிக்கப்பட்டிருந்த
காலங்கள் அவை வெளியில் இருந்து தான் கும்பிடலாம், கோவிலுக்குள்
நுழைவதோ,சுவாமி தூக்குவதோ தடைசெய்யப்பட்டிருந்தது, மீறினால் தண்டனைகளும்
வழங்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பிறகாலத்தில் இயக்கங்களின் வருகையோடு பல
மாற்றங்கள் நடந்தது அப்படித்தான் இங்கும் "கிரகப்பிரவேஷம்" என்ற பெயரில்
புலிகளால் அனைத்து சமூகத்தவர்களும் கோயிலுக்குள் செல்லவும், திருவிழாவின்
போது ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு திருவிழாவும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
இதை முன்னின்று செய்தது கூட ஒரு வகையில் எமக்கு பெரியப்பா முறை தான்,
அவர்களே திரும்பவும் கோவில் நிர்வாகத்தை பொதுச்சபையைக் கூட்டி திர்ம்ப
வந்தது போன்ற பல சம்பவங்களால் அப்பா கோவிலுக்குள் போவதே இல்லை. எப்போதாவது
வாசலில் நின்று கும்பிட்டு விட்டு வந்திடுவார்.
ஆனால் என்ரை அம்மாளாச்சியும் கன ஷெல்லடியளை எல்லாம் தாங்கினவாவாம்.
எண்பத்தியேழாம் ஆண்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த
இராணுவத்தின் மீதான மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலைத் தொடர்ந்து
வல்வெட்டித்துறை,திக்கம், பொலிகண்டிச் சனம் எல்லாம் அந்த அம்மன் கோவில்லை
தானாம் இருந்ததுகள், அப்ப ஆமிக்காரன் ஆட்லறி அடிச்சு எவ்வளவோ சனம்
உடல்சிதறிப்பலியானார்களாம். எல்லாற்றை சடலமும் பக்கத்திலை இருந்த
பள்ளிக்கூடத்திலையும், கோயில் மடத்திலையும் தான் புதைச்சாங்களாம்.
அந்த கொடுமையுக்குள்ளையும் கனக்கச் சனம் கொண்டுவந்த நகையள், பிணங்களிலை இருந்த நகையளைக் கூட கொள்ளையடிச்சதுகளாம்.
அப்படி அம்மாளச்சியும் தன்ரை வாசல்லை கனக்க கண்டுபோட்டா.
அதே போல அம்மாளாச்சியைப் பற்றிய கதைகளுக்கும் கூடக் குறைவில்லை.
அதுக்காக நான் வரலாறுகளை எல்லாம் சொல்ல வரேல்லைப் பாருங்கோ.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இளைஞர்களிடம் தான் கோயில் நிர்வாகம்
இருந்தது. அப்ப தான் பொடியள் கனகாலத்துக்குப் பிறகு கோயிலுக்கு
கும்பாபிசேகம் செய்வதற்காக பல திட்டங்கள் போட்டிருந்தார்கள்.
கேணிகட்டுவது
பூங்காவனம் கட்டுவது
சித்திரத் தேரும்,மணிமண்டபமும்.
அன்னதான மடம்
இப்படிப் பல..
கும்பாபிசேகத்துக்காக இரவு,பகலா பொடியள் வேலை செய்துகொண்டிருந்த காலம்.
ஒருநாள் எல்லாரும் கோயிலடியிலை படுத்திருந்திருக்கிறாங்கள். விடிய
எழும்பிப் பார்க்க குகனை மட்டும் காணேல்லையாம். தேடிப் பார்க்க கனக்கத்
தூரம் தள்ளி ஒரு கடை வாசலிலை ஒவ்வொரு படியிலையும் தலை மேலை,கால் கீழை
இருக்கிற மாதிரி கிடத்தி இருக்காம். அவன் நல்ல நித்திரையாம். "அம்மாளாச்சி
தான் அங்கை தூக்கிக் கொண்டுபோய் போட்டிட்டா" என்று சொல்லுவாங்கள்.
அதை விட சாமப் பூசை முடிஞ்சதும். கதவு எல்லாம் பூட்டினாப் போலை அம்மன்
நடப்பாவாம். சலங்கைச் சத்தம் கேட்கும் என்று எல்லாம் சொல்லுவார்கள்.
சின்னப்பிள்ளை தானே எல்லாத்தையும் நம்பினது தான்.
ஆனால் எனக்கு அப்பவே இது உண்மையா என்று பார்க்க வேணும் என்று ஆசை. என்னை
அக்கா தான் எப்பவும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போவாள். ஒரு நாள் கோயில்
திருவிழா நேரம் நான் அண்ணாட்டை கடைக்குப் போறேன் என்று சொல்லிப்போட்டு
சுவாமி வெளிவீதி வர நான் ஓடிப்போய் உள்ளை படுத்திட்டன்.
"அம்மாளாச்சி வருவா வருவா என்று பார்த்தால் வரவே இல்லை, சலங்கை சத்தம்
கூடக் கேட்கவே இல்லை" பிறகு என்ன நடந்தது என்றே தெரியலை படுத்திட்டன்.
யாரோ என்னை எழுப்புற மாதிரி இருந்திச்சுது அம்மாளாச்சி தான் வந்திட்டா
"வரம் கேட்டிட வேண்டியது தான்" போல என்று பயந்து, நடுங்கி எழும்பிப்
பார்த்தால் அண்ணாவும்,அக்காவும், கோயில்லை மணி அடிக்கிறவனும்
நிக்கிறாங்கள்.
தொடரும்..