"தமிழீழ விடுதலைக்கான போராட்ட முழக்கங்கள்"
மத்திய அரசே! மத்திய அரசே!
மௌனம் காட்டும் மத்திய அரசே!
மனிதநேயம் இல்லாமல்
மரமாய் போன மத்திய அரசே!
இரக்கம் இல்லா அரக்கனுக்கு
இணங்கி போகும் மத்திய அரசே!
ஆட்டம் போடும் சிங்களவன்
அடியாள் நீ தான் மத்திய அரசே!
ஆயிரமாயிரம் தமிழர்கள் அழிய
ஆயுதம் தந்த மத்திய அரசே!
இலங்கைகாரன் சொல் படி நடக்கும்
எடுபிடி ஆள் நீ மத்திய அரசே!
கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு
செத்து விழுந்த காட்சிகள் கண்டும்,
வாயை திறந்து தட்டிக்கேட்க
வக்கில்லாத மத்திய அரசே!
பாலகன் முகத்தை பார்த்துப் பார்த்துப்
பாழும் நெஞ்சும் துடிக்கிறதே,
பாவிகளே உங்களுக்கு
பாசம் கொஞ்சமும் கிடையாதா?
உலகமே பதைபதைத்து
ஓலமிட்டு கதறும் போது,
வெளி உறவு வேசம் போட்டு
வேடிக்கைகள் செய்கின்றாய்!
மரணத்தின் ஓலங்கள்
மாநிலம் எங்கும் ஒலிக்கும் போது,
மௌனம் காத்து நிற்பது தான்
மனிதநேய கொள்கையா ?
புத்தன் வேசம் போட்டுக் கொண்டு
பூதங்கள் அங்கு ஆட்டம் போட,
பயிற்சிக் களம் அமைத்து தந்து
பாவம் செய்த மத்திய அரசே!
நடுகடலில் மீனவரை
நாயாய் வந்து சுடுகின்றான்!
தமிழன் என்றால்
இன்னும் கொஞ்சம் தைரியமாக கொல்கின்றான்!
அழுது நாங்கள் சொன்ன போதும்
அமைதி காத்த மத்திய அரசே!
நாங்களும் இந்தியர் என்ற
நம்பிக்கை உனக்கு இல்லையா ?
"ஆம்" என்றால்
அவனை எதிர்க்கும் ஆண்மை கூட இல்லையா?
இறையாண்மை என்று சொல்லி
இலங்கைக்காரன் வால் பிடிக்கும்,
ஈனச் செயலை மத்திய அரசே!
இனியாவது நிறுத்திக்கொள்!
மண்டி போட்டு மண்டி போட்டு,
மௌனம் காத்து வாழ்ந்தது போதும்!
இனப் படுகொலை செய்தவனுக்கு
இறுதிச் சடங்கை செய்திடுவோம்!
ஈழத்தமிழர் வாழ்வுக்காக
இன்னுயிரும் தந்திடுவோம்,
தனி ஈழம் அமைந்திடவே
தமிழர்கள் ஒன்றாய் குரல் கொடுப்போம!
உலகத் தமிழர் எல்லோரும்
ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளே!
எல்லைகள் தாண்டி படந்திருக்கும்
எங்கள் உயிர் பாசக் கொடி,
எழுச்சி தமிழர்கள் எல்லோருக்கும்
என்றும் ஒரே தொப்புள் கொடி!
பதுங்குதல் என்பது கூட
பாயும் புலியின் செயல் தானே?
ஒற்றை கொக்காய் காத்து நின்று
சிங்கள மீன்களை கொத்திடுவோம்!
ஓங்கி உயர உலகம் வியக்க
உயர்ந்த நம் கொடி ஏற்றிடுவோம்!
உலகில் உள்ள தமிழருக்கெல்லாம்
ஒரே ஒரு உறைவிடமாய்,
புயல்கள் ஒன்றாய் மையம் கொண்ட
புலிகளுக்கெல்லாம் புகலிடமாய்,
நாளை மலரும் தமிழீழம்
நமக்கான தனி ஈழம்..
ஓய்வு இல்லா சூரியனாய்
உறக்கம் கொள்ளா கடல் அலையாய்,
உறைந்து நிற்கும் அனல் நெருப்பாய்,
ஒரு நாள் வெடிப்போம் எரிமலையாய்!!
வாழ்வில் சாவும் ஒருமுறை தான்
வந்தால் மடிவோம் வீரர்களாய்,
வரலாறு நம்மை வாசிக்கும்
வரும் தலைமுறை நேசிக்கும்!
-செங்கதிர்