வெறுமனே அவலம் என்றும் நினைவு கூறல்களும் என்றும் சொல்லிக்கொண்டு இருப்பதும் சரி அல்ல என நினைக்கின்றேன். இந்த அவலத்திற்கு நாங்களும் ஒரு காரணம் என்பதாலும், எங்களது செயற்பாடுகள் இன்னமும் காத்திரமான வழியில் செல்லாது வெறுமனே குழு அரசியலிலும், முடி சூடுவதிலும் கழிவதாலும் தனி மனிதர்களாக எம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திப்போம்.
அடுத்த மே 18 இற்குள் பின்வருவனற்றை செய்ய ஆரம்பிப்போம்.
1. இரண்டு குடும்பங்கள் சேர்ந்து, இன்னும் கல்வி வசதி அற்று இருக்கும் போரால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் தேவையான விடயங்களை பொறுப்பெடுப்பது.
2. ஒரு வருடத்தில் நாம் செய்ய நினைத்து இருக்கும் களிப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றினைக் குறைத்து அதற்கான செலவை போரால் பாதிக்கப்பட்டு இருக்கும் பாடசாலை ஒன்றுக்கு உதவித் தொகையாகக் கொடுப்பது
3. தாயகத்தில் உள்ள நில புலங்களை விற்க நேரிடும் போது அதில் கிடைக்கும் பணத்தில் ஆகக் குறைந்த 2 சத வீதமெனினும் ஒரு முன்னால் போராளியின் சுயதொழிலுக்கு வழங்குவது. இதன்படி பத்து இலட்சத்துக்கு ஒரு வீட்டை / காணியை விற்றால் கூட 20,000 ரூபாவாவது கொடுக்க முடியும் (இன்று வடக்கில் உள்ள காணிகளின் வீடுகளின் விலை பல மில்லியன்கள்)
4. உதவ விருப்பம் இருப்பினும் இன்னும் உதவாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவ்வாறான உறவினர்களில் ஒருவரையாவது நேர்மையுடன் உதவி புரியும் அமைப்பின் தொடர்புகளை எடுத்து கொடுத்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உதவ வைப்பது.
இவை தனி மனிதர்களாக எம்மால் செய்யக் கூடியவற்றில் சில. உங்களுக்குத் தோன்றும் விடயங்களையும் எழுதவும்.