பிகாசோ என்ன இப்படிச் சொல்கிறார் ?!
ஓவிய மேதை பிகாசோ, ஸ்பெயின் நாட்டில் பிறந்து, பிரான்ஸில் குடியேறியவர். 60 ஆண்டுகளாக ஓவியத்துறையில் பற்பல புதிய உத்திகளைக் கையாண்டு, தமது எண்ணங்களுக்கும், உள்ளத்து எழுச்சிகளுக்கும் உருவம் கொடுத்தவர்.
சித்திரக் கலையில் 'கியுபிஸம்', 'ஸர்ரியலிஸம்' போன்ற நவீன பாணிகளுக்குத் தந்தையாகக் கருதப்படுபவர்.
அவர், தமது கலைத் திறமையை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டு, கலை உலகத்தையே பரப்படையச் செய்துள்ளார்.
அது என்ன அறிக்கை?
"இப்போதெல்லாம் மக்கள் ஓவியக் கலையிலிருந்து மன அமைதியையோ புத்துணர்வையோ பெறுவதில்லை. ஆனால் 'கௌரவமான' மனிதர்கள், பணக்காரர்கள், வேலையற்ற சோம்பேறிகள் ஆகியோர் எப்போதும் புதியவை, மிகையானவை, அவமானகரமானவை ஆகியவற்றையே விரும்புவார்கள்.
அவர்களையெல்லாம், என் மனதுக்குத் தோன்றிய விசித்திரச் சித்திரங்களின் மூலம் நான் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எவ்வளளவு குறைவாக அவர்கள் என் ஓவியங்களைப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் புகழ்வார்கள்!
அர்த்தமற்ற இந்தச் சித்திர விளையாட்டுகளின் மூலம், நான் வெகு விரையில் புகழ் பெற்றவன் ஆனேன். ஓர் ஓவியனுக்குப் புகழ் என்றல், அவன் ஓவியங்களுக்கு விற்பனை அதிகம். அதன் மூலம் அவனுக்குச் செல்வம் குவியும். அப்படித்தான் நான் இன்று பெரும் பணக்காரனாகி இருக்கிறேன். பிரபல ஓவியர்களான கியாடோ, டிஷியன், ரெம்ப்ராண்ட், கோயா ஆகியவர்களைப் போல ஓவியன் என்ற சொல்லுக்கு நான் அருகதை உள்ளவன்தானா என்று ஐயம் எழுகிறது. என்னை ஓர் ஓவியனாக எண்ணிக்கொள்ளவே எனக்குத் துணிவு பிறக்கவில்லை. காலத்தின் மதிப்பை உணர்ந்த ஒரு பொது ஜன பொழுதுபோக்குக் கலைஞன் தான் நான்!"