Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    11
    Points
    2597
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46808
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    34975
    Posts
  4. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    4644
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/19/15 in all areas

  1. காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு July 31st, 2014chiddu இயற்பெயர் – சிற்றம்பலம் அன்னலிங்கம் பிறந்த இடம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை வீரனாய் – 04.11.1971 – வித்தாய் – 01.08.1997. கடலும் கடல்சார்ந்த அழகையும் கொண்ட உடுத்துறைக் கிராமத்தில் 04.11.1971 அன்று சிற்றம்பலம் தம்பதிகளின் கடைசி மகனாக வந்துதித்தான் அன்னலிங்கம். 9வது குழந்தையாக 5அண்ணன்களுக்கும் 3அக்காக்களுக்கும் கடைக்குட்டியாக வீட்டின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தவன். பெருமையோடு அவனை எல்லோரும் கொண்டாடிக் கொள்ளும் அளவுக்கு அவனது குழந்தைக்காலம் வித்தியாசமானது. 12வயதில் புலிவீரனாக தடியால் துப்பாக்கியை வடிவமைத்து விளையாட்டுக் காட்டிய பிள்ளையவன். ஆரம்பக்கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் கற்றவன் க.போ.த.சாதாரண தரத்திற்கு வந்த போது தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் மாணவனாகினான். அவன் சாதிக்கப் பிறந்த பிள்ளையாகவே அம்மாவின் கனவை நிறைத்த கடைக்குட்டி. எதிர்காலத்தில் ஒரு அறிஞனாகவே அம்மாவின் மனசில் எழுந்த கோட்டையின் இராசகுமாரன் அவன்.அது இந்திய இராணுவ காலம். 1987களில் அளவெட்டியில் வாழ்ந்த அவனது அண்ணனுடன் அன்னலிங்கமும் போயிருந்து படிக்கத் தொடங்கினான். தமிழ் ஆசிரியரான அண்ணன் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமான தெல்லிப்பழை கல்வி நிலையமொன்றில் மாணவனாகினான். இயல்பிலேயே அமைந்த இனிமையான அவனது குரல் கல்வி நிலையத்தில் நண்பர்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்காய் அவன் பாடிய அன்றைய சினிமாப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் அவன் இசைக்கலைஞனாய் அடையாளமாகினான். மேசையில் தாளம் போட்டு அவன் பாடும் காதல் பாடல்கள் தொடக்கம் தத்துவப்பாடல்கள் வரை அவனது குரலின் தனித்துவம் என்றுமே அவனுக்கான சிறப்பு. அன்னலிங்கத்தின் மூத்த சகோதரர் திரு.பாலச்சந்திரன் அவர்கள் சிறந்த பொப்பிசைப்பாடகர். இலங்கை வானொலியில் ஒருகாலம் கொடிகட்டிப்பறந்த அந்தப்பெயரை இன்றும் இசை ரசிகர்கள் மறந்துவிடவில்லை. அந்த மாபெரும் கலைஞனின் கடைசித் தம்பியான அன்னலிங்கத்தின் இசைத்திறனை அந்தக் கல்வி நிலையம் மட்டுமல்ல அவனது குரலுக்கு வசமான அனைவருமே ரசித்த காலமது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுமாம் என்பார்கள். ஆனால் அன்னலிங்கம் உலவும் இடமெங்கும் வீசும் காற்றும் இசையாலேயே நிரம்பியிருக்கும். ஏனெனில் அவனது வாய் எப்போதும் ஏதோவொரு பாடலை இசைத்துக் கொண்டேயிருக்கும். அவன் மாணவனாய் இருந்த காலத்தில் அவனது இசையின் மீதான ஆழுமையின் வெளிப்பாடானது அவனது நண்பர்கள் நினைவுகளில் நீங்காத பசுமையான நினைவு. எப்போதுமே முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் அவனது பண்பு என அவனது புன்னகைக்கும் அன்புக்கும் ஆட்பட்டவர்களே அதிகம். எதிரிகள் என்று எவருமே அவனுக்கு இருந்ததில்லை. எல்லோரையும் நேசித்தான். எல்லோர் மீதும் அன்பைச் சொரிந்தான். அன்னலிங்கம் அன்புக்கு அர்த்தம் சொல்லும் தோழன். 000 000 000 இந்திய இராணுவம் ஊர்களை உழுது வீதியில் வீடுகளில் காணுமிடங்களில் மறிப்பதும் புலிவீரர்களைத் தேடி அலைவதுமான காலம் அது. புடிப்பும் , பாட்டும் , இசையுமென இருந்தவனை இந்திய இராணுவத்தின் கொலைகள் , வன்புணர்வுகள் என அனைத்து அக்கிரமங்களையும் அனுபவித்த ஊர்களை அவனும் பார்த்தான். தமிழினத்தைத் தேடித்தேடி அழித்துக் கொண்டிருந்த இந்தியப்படைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த புலிகளுடன் அவனுக்கு உறவு மலரக்காரணமானது கூட இந்தியப்படைகளே. புலிப்போராளிகளுக்கான மறைமுக ஆதரவுகளை காலத்தின் கடனை அவன் மாணவனாக இருந்தபடியே செய்து கொண்டிருந்தான். அப்போது தேசிய இராணுவம் என்ற பெயரில் EPRLF பிள்ளைபிடியில் இறங்கிய நேரம். இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சிகள் வழங்கி கைகளில் ஆயுதங்களைத் திணித்த பொழுதுகள். அப்போதுதான் EPRLF குழுவினால் அன்னலிங்கமும் கைது செய்யப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். விடுதலை செய்யப்பட்ட பின்னரும் நிம்மதியாய் உறங்க முடியாது இந்தியப்படைகள் கண்ணிலும் EPRLFகைகளில் சிக்காமலும் தப்பிக்க அவன் அலைந்த அந்த நாட்கள் மிகவும் கொடியவை. ஊரில் நிம்மதியாய் வாழ விடாமல் கொடியவர்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள். அந்த வதையின் பின்னரேயே அவன் விடுதலைப் போராட்டம் பற்றி விடுதலைப்புலிகள் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினான். ஆனால் அவனை உயிரோடு காத்து வாழ வைக்கும் கனவில் அவனது அக்காக்களும் , அம்மாவும் வெளிநாடு அனுப்பி வைக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். இந்திய இராணுவ காலத்தில் கொழும்பில் வாழ்வது பாதுகாப்பானதாக இருந்த காலம் அது. அன்னலிங்கம் சில மாதங்கள் கொழும்பில் தங்கியிருந்த போது வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. தாய்நிலத்தைப் பிரியும் நினைவே இல்லாதிருந்தவனால் புலம்பெயர்ந்து அன்னியத் தெருவில் அலைவதில் உடன்பாடிருக்கவில்லை. பயண முகவருக்கு பணம் கட்டி அவன் வெளிநாட்டுக்குச் செல்லும் நாளை பயண முகவர் தீர்மானித்து முடிவு வர முதலே திடீரென கொழும்பிலிருந்து ஊர் திரும்பியவன் நீண்ட கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு 1989களின் இறுதியில் காணாமற்போனான். காடுகளில் கடுமையான தூரங்கள் நடந்து கடந்து சென்றான். மணலாற்றுக் காடுகள் அவனுக்கு புதிய வாழ்வை புலிகளின் வாழ்வை அடையாளம் காட்டியது. காட்டில் உருவாகிய போராளிகள் பலரோடு ஆயுதப்பயிற்சியைப் பெற்றுக் கொண்டான். அன்னலிங்கமாய் பிறந்தவன் அன்னலிங்கமாய் வாழ்ந்தவன் சிட்டு என்ற பெயரைத் தாங்கிப் புலிவீரனானான். இசை பலருக்கு வரம் அதேபோல அருமையான குரல் சிலருக்குத்தான் வரம். அந்த வரத்தைப் பெற்றிருந்தான் சிட்டு. காட்டில் போராளிகளின் களைப்பைப் போக்கவும் உற்சாகத்தை வலுப்படுத்தவும் ஒரே மருந்து அவனது இனிமையான குரலென்பதனை அவனோடு கூடவிருந்த போராளிகள் நினைவு கூரும் அளவுக்கு இசையை நேசித்தான். இசையில் அவன் தனது களப்பணிகளையும் மேற்கொண்டான் என்பதனை வரலாறு மறந்து போகாது. 1990களில் இந்தியப்படைகள் ஈழமண்ணை விட்டு வெளியேறிப் போக யாழ்மண்ணில் வந்திறங்கிய புலிகளுடன் சிட்டுவும் வந்தான். பழைய குறும்பு , குழந்தைத்தனம் எல்லாம் மாறி பொறுப்பு மிக்க போராளியாய் வந்திருந்தான். அந்தக் காலம் பெரும் எழுச்சியின் மாற்றத்தை மிக மிக வேகமாக உருவாக்கிய காலம். போராளிகள் தனித்துவமான சீருடைகளணிந்து யாழ் மண்ணில் பணிகளில் இறங்கிய காலம் அது. பள்ளிக்கால உறவுகளை அவன் மறந்து போகவில்லை வீதிகளில் சந்திக்கிற போது பழைய நட்பையெல்லாம் புதுப்பித்துக் கொண்டான். ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற வீரத்தை ஒவ்வொருவருக்கும் ஊட்ட முனைந்தான். 000 000 000 1990 யூன் மாதம் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. மணலாற்றிலிருந்து வந்திருந்த 600 வரையான போராளிகளை உள்ளடக்கி 1990 இறுதியில் முதல் முதலாக புலிகளின் அரசியல் பாசறை மட்டுவில் பகுதியில் நடைபெற்றது. 6மாதங்கள் நடைபெற்ற அரசியல் பாசறையிலிருந்து மக்களோடு இறங்கி பணிசெய்யக்கூடிய திறமையாளர்களை உருவாக்கியது மட்டுவில் அரசியல் பாசறை. ஒற்றைக் கைத்துப்பாக்கியோடு தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்ட கரந்தடி போராளி அமைப்பாக உருவாகிய புலிகள் அமைப்பானது மரபுவழி இராணுவமாக மாற்றம் காணத் தொடங்கிய காலம் அது. இராணுவ ரீதியிலான முன்னேற்றம் மரபுவழி இராணுவமாக பரிணமித்த சம காலத்தில் அரசியலிலும் புலிகளின் மாற்றம் அரசியலில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் காணத்தொடங்கி முக்கியமான காலகட்டத்தில் தான் மட்டுவில் அரசியல்பாசறை உருவாக்கம் பெற்றது. அதுவரையில் அரசியல் பணிகளையும் சரி , படையணியைத் திரட்ட போராளிகளை இணைப்பதிலும் சரி , சமூகப்பிரச்சனைகள் தொடக்கம் மொத்தப் பணிகளையும் ஒவ்வொரு ஊர்களுக்கும் நியமிக்கப்பட்ட ஊர்களுக்கான பொறுப்பாளர்களே செய்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஒரு கிராமசேவகர் போல ஒவ்வொரு ஊரின் பொறுப்பாளரின் தலையிலும் கிராமங்களின் சுமைகள் யாவும் தேங்கியிருந்தது. துறைசார் திறமையாளர்களை உருவாக்குவதன் மூலம் அவரவர் திறமைகளுக்கு ஏற்ப பணிகளை பகிர்ந்தளிக்கவும் , பணிகளை இலகுபடுத்தவும் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே மட்டுவில் அரசியல் பாசறை. அரசியல்துறையின் ஆரம்ப வித்தும் அடையாளமும் தியாகி திலீபன் அவர்கள். அவரே அரசியல் பணிகளுக்காக ஆரம்பத்தில் போராளிகளை உருவாக்க முனைந்து அதற்கான தோற்றத்தின் மூலமாக இருந்தார். மட்டுவில் அரசியல் பாசறையில் கட்டம் கட்டமாக உள்வாங்கப்பட்டு பயிற்றப்பட்ட போராளிகளில் இருந்தே பின்னர் அந்தந்த பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் போராளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். இங்கு உருவாக்கப்பட்ட போராளிகள் அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகப் பொறுப்பாளரே அந்தந்த பிரிவு சார்ந்த இடங்களுக்கு போராளிகளை பொறுப்பாளர்களை நியமித்து அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்தார். இங்கிருந்தே கலைபண்பாட்டுக்கழகம், மாணவர் அமைப்பு , பிரச்சாரப்பிரிவு என துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனியான அலகுகளின் கீழ் அரசியல் போராளிகள் பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அரசியல் நிர்வாகத்துறையிலிருந்தே கோட்டங்களுக்குத் தேவையான துறைசார் அரசியல் போராளிகள் அனுப்பப்பட்டனர். அரசியல் நிர்வாகப்பொறுப்பாளருக்கு அடுத்தே அரசியல் பொறுப்பாளர்கள் பணிகளில் இறக்கப்பட்டார்கள். பின்னாட்களில் அரசியல்துறையின் வளர்ச்சிக்கும் சிறந்த பணிகளுக்கும் அரசியல் வளர்ச்சியின் வெற்றிக்கும் வேராக அமைந்ததே மட்டுவில் அரசியல்பாசறை. மட்டுவிலில் ஆரம்பித்த அரசியல் பயிற்சிப்பாசறையில் சிட்டுவும் அரசியல் போராளியாக வந்திருந்தான். அங்கேயும் சிட்டுவின் இனிமையான குரலே போராளிகளின் களைப்பை அலுப்பை சலிப்பை ஆற்றும் மருந்தாகியது. பாசறை சோர்வடைந்தால் சரி சிட்டுவை பாடச்சொல்லி எழுப்பி விடுவார்கள். தெய்வப்பாடல்களுக்கு புரட்சி வடிவம் கொடுத்து தெய்வப்பாடல் மெட்டுக்களுக்கு புரட்சி வரிகளை அமைத்துப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். காலத்துக்கு ஏற்ற வரிகளும் அவனது குரலும் அன்றைய அரசியல் பாசறைப் போராளிகளின் நினைவுகளில் சிட்டுவை என்றும் மறந்ததில்லை. ஏனெனில் அவனது குரலுக்கு அத்தனை வசீகரம் இருந்தது. போராட்டத்திற்காக ஆள்பலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய காலமாக இருந்தது அந்தக்காலம். மக்களை இலகுவாய் சென்றடையக்கூடிய ஊடகமாக இசையே முதன்மையாக இருந்தது. அப்போதுதான் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட இசை வெளியீடுகளும் மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியாகிக் கொண்டிருந்தது. தென்னிந்தியப்பாடகர்களால் இசைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்பாடல்கள் முதல் முதலாய் 90களில் தனித்த ஆழுமையுடன் விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகத்தால் மிகவும் சிறப்பான முறையில் எங்களது கலைஞர்களின் இசையமைப்பில் எங்களது கலைஞர்களின் குரல்களில் ஈழதேசமெங்கும் ஒலிக்க வகை செய்யப்பட்டது. அப்போது தான் எங்கள் சிட்டுவும் முதல் முதலாக மேஜர் செங்கதிர் அவர்களால் எழுதப்பட்ட‚’கண்ணீரில் காவியங்கள்’ என்ற பாடலைப்பாடி இசையுலகில் தனக்கான அத்தியாயத்தை எழுத அடியெடுத்து வைத்திருந்தான். அப்போதைய பாடகர்களில் சிட்டு தனித்துவமானவனாகப் பரிணாமம் பெற்றான். இசையில் கலந்தவனை அவனது ஆற்றலை அவதானித்த அரசியல் நிர்வாகம் சிட்டுவை யாழ்மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாக்கி அவனைப் பொறுப்புகளைச் சுமக்கும் திறனையுடையவன் என்பதனை இனங்காட்டியது. கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளனாய் வந்த போது மக்களுடன் மாணவர்களுடன் இணைந்தான். கருத்தரங்குகள் விழிப்பூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் போராளிகளோடு சிட்டுவின் பங்கும் காத்திரமானதாகியது. அடுத்து புலிகளின் குரல் பொறுப்பாளனாகி வானொலி ஊடகத்தின் மூலம் மக்களிடம் சென்று சேரும் போராட்ட விழிப்பை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கைச் செய்த பெருமை சிட்டுவிற்கும் உண்டு. பிறேமதாசா அரசால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு வடக்கில் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மிகவும் சிரமம் நிறைந்த காலமது. எரிபொருட்கள் தொடக்கம் எல்லாமே தடைப்பட்டிருந்தது. வானொலிக்காகவும் சரி தனது பணிகளுக்காகவும் சரி மிகுந்த பொறுமையோடு மக்களை அணுகி தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான். களத்தில் நிற்கிற போராளிகளுக்கு நிகராக அவன் நிலத்தில் மக்களோடு மக்களாகி கலையூடகம் மூலம் மக்களை விழிக்கச் செய்தான். தனது இனிய குரலால் இளையோர்களைக் கவர்ந்தான். அவனது குரலில் அவனது கருத்தில் ஈர்க்கப்பட்டு விடுதலையின் தேவையை உணர்ந்து போராளியாகியவர்களால் கூட சிட்டு நினைவு கொள்ளப்படும் மக்கள் கலைஞன் ஆகினான். சாதனையாளன் தன்னை அடையாளம் காட்ட ஒரு சிறுபொறி போதும். சிட்டுவின் ஆற்றலை இனங்காண அவனுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளே அந்தப் பொறியை பற்றவைத்த ஆதாரமாகியது. மிக விரைவாக சிட்டு மக்கள் கலைஞன் ஆகினான். மறக்க முடியாத குரலுக்குரிய சிறந்த பாடகனாக மக்களோடு கலந்தான். காலம் அவனை ஒரு போராளியாய் மட்டுமன்றி உலகறிந்த பாடகனாய் ஈழத்தமிழ் இதயங்களில் இசையாய் என்றென்றும் நிலைப்பானென்று கூட எவரும் அறிந்திருக்காத ஒரு குழந்தையை காலம் மாற்றியது மட்டுமன்றி அவனைச் சிறந்த போராளியாக்கியது வரலாறு. சிட்டு இல்லாத இசைநிகழ்ச்சிகள் இல்லையெனும் அளவு சிட்டுவின் இசைக்குக் கூடிய மக்கள் வெள்ளம் அவனது இசையுலகின் வெற்றியின் சாட்சிகள். ஒரு பாடகனுக்கு உரிய சகல தகுதிகளையும் கொண்டிருந்தவன் இலகுவில் மக்கள் மனங்களில் இசைக்கலைஞனாகவே நினைவில் நின்றான். அவன் பாடிய ஒவ்வொரு பாடலிலும் அவன் அந்தத் தருணங்களாகவே வாழ்ந்திக்கிறான். உயிரில் உணர்வைக் கலந்து உணர்வில் தன் உயிரைக் கலந்து மக்களிடம் போய்ச் சேர்ந்தது அவனது பாடல்கள். 1995 யாழ்மண் பகைவனிடம் இழக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருந்த போது கூட அவனது குரலிலும் ஏனைய தமிழீழப்பாடகர்களின் குரலிலும் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தது கலைபண்பாட்டுக்கழகம். சோர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களின் ஆற்றுப்படுத்தலாக சிட்டுவின் குரலும் இருந்ததை அந்த நாட்கள் மறக்காது. யாழிலிருந்து பின்வாங்கி வன்னியில் புலிகள் தளமிட்டு மக்கள் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் வன்னியின் மூலையெங்கும் சிட்டுவும் இசையாய் கலைவடிவங்களாய் வாழ்ந்திருந்தான். கலைபண்பாட்டுக்கழகம் முன்னெடுத்த கலையரங்கம் அல்லது தெருநாடகங்கள் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் பணிகள் யாவிலும் சிட்டுவும் கலந்தேயிருந்தான். நோயாளியாகிப் போன அம்மாவிற்காக வீடு திரும்பிவிடக் கேட்ட சகோதர சகோதரிகளின் வேண்டுதலையெல்லாம் புறம்தள்ளி தமிழீழக்கனவோடு அலைந்த பாடகன் அவன். இறுதி மூச்சை நிறுத்துவதானால் தான் நேசித்த மண்ணிலேதானென எல்லோருக்கும் சொல்லியதோடு மட்டுமன்றி அவன் நேசித்த அவனை நேசித்த உறவுக்கும் மடல் எழுதினான். தனது மாற்றங்களை கடிதங்கள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டு விடுதலை வானில் சிறகடித்துக் கொண்டிருந்ததான் சிட்டு. வன்னியைக் கைப்பற்றி கண்டிவீதியூடே சென்று யாழ் மண்ணில் கொடியேற்றும் கனவில் அப்போதைய பாதுகாப்பமைச்சர் ரத்தவத்தையின் கனவை நனவாக்க பெருமெடுப்பிலான இராணுவ முன்னேற்றமும் ஓயாத சண்டையும் நடந்து கொண்டிருந்த ஜெயசிக்குறு சமர். 18மாதகாலம் நீடித்த அச்சமரே விடுதலைப்புலிகளின் சண்டை வரலாற்றிலேயே பெரும் வரலாற்றுச் சமராக காலம் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வரலாற்றுச்சமரில் பங்கேற்க சிட்டுவும் ஆசைப்பட்டான். தானாகவே விரும்பி சண்டைக்குப் புறப்பட்டான். கலையோடு கலைஞனாய் மக்களின் மனங்களில் நிலைத்தவனைக் காலம் களத்திற்கு வாவென்றழைத்தது. ஒலிவாங்கியோடு மேடைகளில் பாடல் இசைத்தவன் கையில் வோக்கிரோக்கியுடன் களத்தில் நின்றான். களமே பலமென்ற காலத்தில் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு முன்னால் அவர்களது களைப்பைப் போக்க அவன் ஒலிவாங்கியோ இசைக்கருவிகளோ இல்லாமல் பாடினான். அவன் நின்றிருந்த களமுனைப் போராளிகளின் வேண்டுகோளையெல்லாம் சலிக்காமல் ஏற்றுக் கொண்டு மக்களின் முன் பாடிய குயில் சக போராளிகள் முன்னால் பாடிக் கொண்டிருந்தான். எதிரியின் ஓயாத எறிகணை வீச்சு மழைபோல் பொழியும் துப்பாக்கிச்சூடு ஒவ்வொரு போராளியும் சாவிற்குள் நின்று போராடிக்கொண்டிருந்த களம். ஏ9நெடுஞ்சாலையின் ஊடாக ஆனையிறவைத் தொடுவதற்கு எதிரி முன்;னேறுவதும் புலிகளின் எதிர்த்தாக்குதலும் களநிலமை இதோ அதோ என்ற வேகத்தில் அங்கே போராளிகளின் ஆயுதங்களே எதிரியுடன் பேசிக் கொண்டிருந்தது. கிடைக்கிற சின்ன இடைவெளியில் சிரித்து சண்டை பிடித்து மகிழ்ச்சியோடு போராளிகள் ஒவ்வொருவரின் களவாழ்வும் கழிந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஒருநாள். சிதைவுகளையும் அழிவுகளையும் கொண்ட ஏ9வீதியின் இருமருங்கும் எறிகணைகளின் தாக்குதலிலும் துப்பாக்கி சன்னங்களினாலும் உருக்குலைந்து ஒரு சூனியவெளியில் நிற்பதான உணர்வைக் கொடுத்த நேரமது. பெரியமடுப் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யும் நோக்கில் தயரானது படையணி. எதிரியுடனான சமருக்குத் தயாராக ஆண் பெண் போராளிகள் வரிச்சீருடைகளில் வீதிக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடையவிருந்த முன்னணிக்களத்தின் தூரத்தையடையும் வேகத்தில் படையணி நகர்ந்து கொண்டிருந்தது. அரும்புமீசைக்கனவறுத்து எதிரியைத் தேடிப்போய்க் கொண்டிருந்த ஆண்போராளிகளுக்கு நிகராக சமூகத்தின் விலங்குடைத்து இரட்டைப்பின்னல் அழகை வெறுத்து இதயம் முட்டிய கனவுகளைத் தூக்கியெறிந்து ஒரு சமூகத்தின் முன்னோடிகளாகிய பெண்போராளிகளும் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். மருத்துவ அணிகள் முதல் வழங்கல் அணிகள் வரை அவரவர் தங்களது கடமைகளை முடிக்கும் கனவோடு நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். களங்களில் பணிசெய்யும் மருத்துவ அணியின் பங்கானது மிகவும் சாவல்கள் நிறைந்தது. சமர் இடம்பெறும் இடங்களினை அண்டி நின்று போராளிகளைக் காப்பாற்றும் கடவுளர்கள் மருத்துவப் போராளிகளே. அத்தகைய பணியை முடிக்க மருத்துவ அணியும் போராளிகளுடன் இணைந்தார்கள். பொதுவான மருத்துவ அணியின் சேவைகள் போலில்லாமல் அச்சமருக்கான ஏற்பாடு வித்தியாசமாக இருந்தது. இதுவரைகாலச் சண்டைகளில் மருத்துவத்துக்குத் தேவையானவற்றை வாகனங்களில் கொண்டு சென்று மருத்துவ அணி தயாராகும். ஆனால் இம்முறை மருத்துவப் போராளிகள் தங்கள் தோழ்களில் சுமந்தே செல்ல வேண்டியிருந்தது. அக்களத்தின் நெஞ்சுக்கூட்டினுள் இறங்கி நடக்கவிருந்த சமராகையால் மருத்துவப் போராளிகளின் பயணமும் அதற்கேற்றாற்போல அமைந்திருந்தது. சற்று பிசகினால் கூட நிலமை தலைகீழாகிவிடும் அபாயம் நிறைந்த அந்தக் களத்தில் அதிக இழப்புகளையும் அதேநேரம் எதிரியின் குகையில் மாட்டுப்படக்கூடிய எதிரியே சுற்றிவரச் சூழ்ந்த களம் அது. தாக்குதலை ஆரம்பிக்கும் அணியானது குறித்த நேரத்தில் வென்று எதிரியின் பிரதான முகாம்களையும் மினிமுகாம்களையும் கைப்பற்ற வேண்டும். மருத்துவ அணியானது கிழக்கிலிருந்து மேற்காக வீதியை ஊடறுத்து குறைந்தது 2கிலோமீற்றர் தொலைவில் மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஆயத்தங்களோடு போராளிகளுடன் மருத்துவ அணியும் பயணிக்கத் தொடங்கியது. சிட்டு அந்தக்களத்தின் போராளிகளுக்கான காவும் குழுவிற்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டு நகர்ந்த அணிகளோடு சென்று கொண்டிருந்தான். காயமடையும் போராளிகளை மருத்துவ அணியிடம் கொடுத்தல் , தொடக்கம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்படும் ஆயுதங்களை உரிய இடத்திற்கு அனுப்புதல் , களமுனைக்குத் தேவையான விநியோகத்தையும் செய்யும் பொறுப்பு காவும் அணிக்கானதாக அமைந்தது. தேவையேற்படும் போது காவும்குழுவினர் சண்டையில் பங்கெடுக்கவும் தயாராகவே செல்வார்கள். எல்லாவற்றிற்கும் தயாராகச் சென்ற காவும் அணியோடு ஏற்கனவே காயமுற்று கட்டையாகிய காலோடு சென்று கொண்டிருந்த வீரர்களுக்குச் சமனான வேகத்தில் போனான் சிட்டு. இரும்பாய் கனத்த இதயங்களும் பனித்துளியாய் மாறும் என்பதற்கு அடையாளமாக பல்வகைப்பட்ட முகங்கள் அந்த நகர்வில் நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோர் முகங்களும் ஜெயசிக்குறுவை வெல்வோம் என்ற உறுதியோடே பயணித்துக் கொண்டிருந்தார்கள். 000 000 000 மதியம் வெளிச்சத்தில் புறப்பட்ட சமரணியானது மாலையில் முகாமின் முன் காவலரணைத் தாண்டி நிறுத்திக் கொண்ட பயணம் நன்றாக இருள் படர்ந்ததும் மீண்டும் தங்களது சண்டை நிலைகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு போராளியும் எதிரியை விழிக்கவிடாமல் மிகவும் அவதானமாகத் தங்களது பாதங்களை அடியெடுத்து வைத்து அந்த இருளோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரியின் முகாமைச் சுற்றி எதிரியால் அமைக்கப்பட்ட மண்ணணைகளையும் தாண்டி முட்கம்பி வேலிகள் தடையரண்கள் யாவையும் தாண்டி அணிகள் குறித்த இடங்களைச் சென்றடைந்திருந்தது. இருள் முழுவதுமாகச் சூழ்ந்திருந்தது. சண்டை மூண்டது. எதிரி உசாரடைந்துவிட்டான். தனது அனைத்துப் பலத்தையும் ஒன்று திரட்டி போராளிகளுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினான். வெற்றி அல்லது வீரமரணம் என்ற முடிவோடு போராளிகளின் அணிகள் எதிரிக்கு சவாலாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். எதிரியால் செலுத்தப்பட்ட எறிகணைகள் மழைக்காலம் போல இடி மின்னல் வேகமாய் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. இரு பகுதியினராலும் ஒளிபரவச்செய்த பராவெளிச்சத்தில் போராளிகள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். டோபிடோக்களைக் கொண்டு சென்று கம்பிவேலிகளில் பொருத்திவிட்டு கண்ணிமைக்குள் நொடிக்குள் நிலையெடுத்துக் கொள்ளும் கண நேரத்தில் எதிரியின் கம்பிச்சுருள்களும் கம்பிவேலியும் காணாமற்போய்க் கொண்டிருக்க அப்பாதைகளினூடு துப்பாக்கிகளோடு பாய்ந்து சென்று கொண்டிருந்தார்கள் வீரர்கள். கைக்குண்டுகள் , ரைபிள் கிரனைட்கள் வீசப்பட்டு எதிரியின் காவலரண்கள் பற்றியெரிந்து கொண்டிருந்தது. யுத்த களமானது தீப்பொறிகளால் நிறைந்து கந்தகப்புகையால் காற்றை நிறைத்தது. இரவு பகற்பொழுது போல பராவெளிச்சத்தால் நிலவின் வரவாய் வானம் வெழுத்தும் நெருப்புத் துண்டங்களால் நிறைந்தது அந்தப்பகுதி. நிலமையை உணர்ந்து கொண்ட எதிரி பிரதான தளம் நோக்கி பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தான். புலிகள் வசம் அப்பகுதி வீழ்ந்திருந்தது. தப்பியோடிய எதிரி பிரதான தளத்திலிருந்து புலிகளின் பகுதி நோக்கி நெருப்பை விதைத்தாற் போல கனரகங்களால் தாக்கிக் கொண்டிருந்தான். காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் காவும் குழுவும் மருத்துவப் போராளிகளும் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்தவர்களைத் தேடித்தேடிச் சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கியது மருத்துவ அணி. புலிகளின் கட்டுப்பாட்டினுள் வந்திருந்த அப்பகுதியை நோக்கிய எதிரியின் எறிகணைத் தாக்குதல் பலமாகியது. நிலமை ஆபத்தானதாகிறது. போராளிகள் காயமடைந்து கொண்டிருந்தார்கள். அதிக குருதிப்பெருக்கால் வீரமரணங்களும் நடந்து கொண்டிருந்தது. மருத்துவப்போராளிகள் ஓடியோடி உயிர்காப்பைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த இருளில் மருத்துவப்போராளியொருவன் அங்கே காயமடைந்து முனகிக் கொண்டிருந்த ஒரு போராளியைப் புரட்டுகிறான். வானை அறுத்து வெளிச்சத்தைப் பரப்பிய பராவெளிச்சத்தில் பார்க்கிறான் அந்த மருத்துவப் போராளி. அங்கே வயிற்றில் பெரும் காயமடைந்து சிட்டு முனகிக்கொண்டிருந்தான். அடுத்து தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சிட்டுவை இழந்துவிடக்கூடிய அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டு உடனடியாகச் சிகிச்சை வழங்கினால் மட்டுமே சிட்டுவைக் காப்பாற்ற முடியும். அந்தப் போராளி வேகமாக அவனை அப்புறப்படுத்த முனைகிறான். காற்றையும் அந்த இரவையும் அறுத்தெடுத்துக் கொண்டு எறிகணைகள் வீழ்ந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு அருகாய் எறிகணைகள் நெருங்கி விழுந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து வீசப்பட்ட எறிகணைகள் அவர்கள் அருகில் விழப்போவதை உணர்ந்த மருத்துவப்போராளி நிலத்தில் குப்புறப்படுக்கிறான். மிக அருகில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் காயமடைகிறான். அடுத்த வினாடி மருத்துவப் போராளிகளில் யாவரும் காயமடைந்திருந்ததை அவதானிக்கிறான். உடனடியாக பீல்ட் கொம்பிறசறை எடுத்து தனது காயத்துக்கும் கட்டிவிட்டு ஓடியோடி ஏனைய போராளிகளுக்கும் கட்டுகிறான். அதேநேரம் பின்னுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பிக் கொண்டு சிட்டுவிடம் வந்தான். காற்றே ஒருகணம் மௌனித்து சுவாசமே நின்றுவிடும் போலிருந்தது. அடுத்து விழுந்த எறிகணையில் சிட்டு மேலும் காயமடைந்திருந்தான். அவனிடமிருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அமைதியாய்க் கிடந்தான். ஆம் பாடித்திரிந்த குயில் பேச்சின்றி மூச்சின்றி தன் இறுதி மூச்சை அந்த மண்ணில் நிறுத்திக் கொண்டு மீளாத்துயில் கொண்டான். 01.08.1997 அன்று எங்கள் இதயங்களில் இதய ராகமாக எங்கள் நினைவுகளில் என்றுமே நீங்காதவனாக தமிழீழ விடியலைத்தேடிய பாதையில் தங்கள் சுவடுகளைப் பதித்து அன்றைய சமரில் வீரகாவியமான வீரர்களோடு அவனும் விழிகளை மூடிக்கொண்டான். அவனுக்குள்ளும் போராட்ட வாழ்வோடு பூத்த காதலும் அவனோடு புதைந்து போனது….! காதலைவிட தாயகத்தை அதிகமாய் காதலித்தவன் காலம் முழுவதும் வாழும் காவியமாக அவன் வீரமும் பாடலும் அவன் வாழ்வும் என்றென்றும் அழியாத நினைவுகளாக…..! 75இற்கும் மேற்பட்ட விடுதலைப் பாடல்களைப் பாடி எங்கெல்லாமோ வாழும் தமிழ் ரசிகமனங்களில் நிரந்தரமாகினான் சிட்டு. அவன் அடிக்கடி சொல்வது போல அவனில்லாது போனாலும் அவனது குரலில் நிறைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் அவனை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கிறது. மௌனமாய் கரையும் காற்றின் நுண்ணிய இளைகளில் சிட்டு இசையாய்….! ஈழவிடுதலைக் கனவோடு காவியமானவன் முள்ளியவளை துயிலுமில்லத்தில் துயில்கொண்டான். மூசியெறியும் அலைகளின் முகமாய் , வீசிச்செல்லும் தென்றலில் தளிராய் , மூண்டெரிந்த விடுதலை மூச்சில் அவன் பாடலாய் மனங்களில் நிறைகிறான் மரணத்தை வென்றவனாக….! மேஜர் சிட்டு என்றென்றும் மறக்க முடியாதவானாக எங்கள் மனங்களில் நிறைந்து காற்றுள்ள வரை வாழும் காவியமாக…..! - சாந்தி ரமேஷ் வவுனியன் - http://chiddu.com/chiddu.222.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.