கொலை இயந்திரம்
– நரோபா
போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும்
கசங்கி இருந்தாலும் பரவாயில்லை,
ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட,
காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கிழித்தாவது எறியத்தான் வேண்டும்.
ஆனால் வேறு சட்டை வேண்டுமே என கேட்பது காதில் விழுகிறது
அதற்குதான் சித்தாந்த பயிற்சி இருக்கிறதே.
தனக்கான சட்டையை தானே நெய்து கொள்பவன் மனிதன்.
முடியவில்லை என்றாலும் பாதகமில்லை.
எப்படியும் வேறொருவன் கழட்டிப் போட்டது கிடக்கும்.
கிடைக்கவில்லை என்றால்தான் என்ன?
சட்டை இருப்பது போல்
ஒரு பாவனை செய்துகொள்ளக்கூட
திராணியற்றவனா என்ன?
காலரை இழுத்துவிட்டுக் கொள்ளவும்
பித்தான்களைக் கழட்டி மாட்டவும்
வயிற்றை எக்கி உள்ளிழுத்தால்
நம்பகத்தன்மை கூடும்.
விளையாட்டாகவே செய்யலாம்
கடமையுணர்ச்சி கொஞ்சம் இருந்தால் இன்னும் உசிதம்
ஆகச்சிறந்த கொலை இயந்திரம்
இப்படித்தான் தயாராகிறது.
http://padhaakai.com/2015/11/15/killing-machine/