ஓயாத நிழல் யுத்தங்கள் - 3
பனிப்போரின் முக்கிய திருப்பு முனைச் சம்பவங்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொடரில், கொரியப் போர், பெர்லின் சுவர் என்பன பற்றிப் பார்த்தோம். இத்தகைய முக்கிய நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, பனிப்போரின் முக்கிய அம்சமாக விளங்கிய ஒரு அம்சம், வல்லரசுகளுக்கிடையேயான உளவுப் போர். இத்தகைய உளவுப் போரின் சாட்சிகளாக விளங்கிய பலர் பின்னாட்களில் சிறந்த நாவலாசிரியர்களாக உருவாகி, அந்த உளவுப் போரின் உள்ளடக்கங்களை வாசகர்களுக்கு வழங்கினர்.
உளவுப் போர்
1991 இல் முடிவுக்கு வந்த கம்யூனிச, மேற்கு தேசங்களிடையேயான பனிப்போர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆரம்பித்ததாகச் சுட்டிக் காட்ட முடியாது. அந்தளவுக்கு பல்வேறு நிகழ்வுகளில், பரிணாமங்களில் பனிப்போர் நிகழ்வுகள் அடங்கியிருந்தன. ஆனால், உளவு நடவடிக்கைகள் தான், சோவியத்திற்கும், மேற்கின் தலைமை நாடான அமெரிக்காவிற்கும் இடையே முதலில் பனிப்போரின் அடையாளமாக ஆரம்பித்தன.
அமெரிக்க அணுவாயுத நுட்பத்தை உளவு மூலம் கவர்ந்த சோவியத் ஒன்றியம்
அமெரிக்காவின் தலைமை அணுவாயுத விஞ்ஞானி ஒப்பன்ஹிமரின் வரலாறு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இக்காலப் பகுதியில் இதைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும். அமெரிக்காவின் அணுவாயுத தயாரிப்பு முயற்சி என்பது மிக இரகசியமாகப் பேணப்பட்ட ஒரு முயற்சி. ஜனாதிபதியாக றூஸவெல்ட் இருந்த போது ஆரம்பிக்கப் பட்ட இந்த முயற்சி பற்றி, றூஸவெல்ட் இறந்து தான் பதவிக்கு வரும் வரை துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமனுக்கே தெரியாமல் தான் இருந்திருக்கிறது.
ஆனால், மன்ஹற்றன் திட்டம் நடந்து கொண்டிருந்த போதே, சோவியத் ஒன்றியம் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கள் உளவாளிகளை விஞ்ஞானிகளாக இந்த திட்டத்தினுள் விதைத்து விடும் அளவுக்கு, சோவியத் ஒன்றியத்தின் உளவு வலைப் பின்னல் மேற்கில் பலமாக இருந்திருக்கிறது. 2019 வரையான ஆய்வுகளின் படி, குறைந்தது 5 பேர், அணுவாயுத ஆய்வுத் திட்டத்தில் வேலை செய்தோர், சோவியத் உளவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
கிளாஸ் fபுக்ஸ்: லாஸ் அலாமோசில் பணியாற்றிய சோவியத் உளவாளிகளுள், வெற்றிகரமாக மொஸ்கோவிற்கு அமெரிக்க அணுவாயுத இரகசியங்களைக் கடத்திய ஒருவர். சோவியத் விஞ்ஞானிகளின் திறமையுடன், fபுக்ஸ் வழங்கிய அணுவாயுத இரகசியங்களும் 1949 இல் முதல் அணுவாயுதத்தை சோவியத் ஒன்றியம் பரீட்சிக்க உதவியது. பட உதவி நன்றியுடன்: லொஸ் அலாமொஸ் தேசிய ஆய்வுகூட ஆவணம்.
இவர்களுள், அணுவாயுத வடிவமைப்பு தொடர்பான இரகசியங்களை வெற்றிகரமாக மொஸ்கோவிற்குக் கடத்தியவராக கிளாஸ் fபுக்ஸ் (Claus Fuchs) இருந்தார். லாஸ் அலமோசில் இருந்த அணுவாயுத ஆய்வுகூடத்தில் இருந்த 5 சோவியத் உளவாளிகளில், fபுக்ஸ் மட்டும் தான், அணுவாயுதத்தின் சகல தகவல்களும் தெரிந்த பௌதீகவியலாளராக இருந்தார். இதனால், 1950 இல் சோவியத் ஒன்றியம் முதலில் பரீட்சித்த தனது அணுவாயுதம் பல விடயங்களில் அமெரிக்கா 1945 இல் நாகசாகி மீது வீசிய புளூட்டோனியம் குண்டு போலவே இருந்தது.
இந்த சோவியத் உளவாளிகள் எல்லோருமே தண்டனை அனுபவிக்கவில்லை. 1950 இல் அமெரிக்க உளவு அமைப்பின் நடவடிக்கையினால் இந்த 5 பேரில் 4 பேர்கள் அடையாளம் காணப்பட்டனர். கிளாஸ் fபுக்ஸ், பிரிட்டனில் குற்றத்தை ஒப்புக் கொண்டு 10 ஆண்டுகள் சிறை சென்றார், சிறையிலிருந்து மீண்டதும் கிழக்கு ஜேர்மனி சென்று அங்கே ஒரு நல்ல பதவியில் நீடித்தார். இந்த சோவியத் உளவாளிகளுள் மிக இளையவரான தியோடர் ஹால், தண்டிக்கப்படாமலே தன் வாழ்வைத் தொடர்ந்தார். இருவர் மரண தண்டனை பெற்றனர். இன்றும் கூட ரஷ்ய, சீன அரசுகளுக்கு உளவாளிகளாக செயல்படும் அமெரிக்க பிரஜைகள், இராணுவத்தில் பணியாற்றுவோர் சிலர் ஒவ்வொரு வருடமும் கண்டறியப் பட்டுக் கைது செய்யப் படுகின்றனர். அனேகமாக பணத்திற்காக இவர்கள் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். ஆனால், கிளாஸ் fபுக்ஸ், தியோடர் ஹால் போன்ற அக்கால உளவாளிகள், மனப்பூர்வமாக சோவியத் நாட்டின் கம்யூனிச கோட்பாடுகளை ஆதரித்து உளவாளிகளாக மாறினர் என்றே விசாரணைகளில் தெரிய வந்தது.
பிரிட்டனின் உளவு அமைப்பை ஆழ ஊடுருவிய சோவியத் உளவாளிகள்
பனிப்போர் கால உளவுப் போரில், அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்கள் திருடப் பட்டது கூட ஒரு அதிர்ச்சி தரும் நிகழ்வல்ல. இதை விட ஆச்சரியமான உளவுப் போர்முனை பிரிட்டனிலும், ஐரோப்பிய நிலப்பரப்பிலும் 1980 கள் வரை நிலைத்திருந்தது. இதில், பிரிட்டனின் எம்.ஐ 6 (MI6) என்ற இராணுவப் புனலாய்வுப் பிரிவினுள், ஹரோல்ட் கிம் fபில்பி (Harold “Kim” Philby) என்ற சோவியத் உளவாளி நீண்டகாலமாகப் பணியாற்றிய சம்பவம் இன்றும் திரைப்படங்களாகவும், நூல்களாகவும் வலம் வருகிறது. “சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தம், மேற்கின் இலாப நோக்க சித்தாந்தங்களை விட உலகிற்கு நல்லது” என்ற எண்ணத்தில் இருந்த fபில்பி உட்பட்ட கேம்பிரிட்ஜ் பட்டதாரிகள் ஐவர் (இவர்களை The Cambridge 5 என்பர்)- பிரிட்டனின் பல்வேறு இரகசிய திட்டங்களிலும் அரச ஊழியர்களாக இணைந்து சோவியத்தின் கே.ஜி.பி அமைப்பிற்கு தகவல்களை வழங்கும் உளவாளிகளாக நீண்ட காலம் வேலை செய்தனர். இந்த ஐவரில், மூவர் அமெரிக்காவிலும் பிரிட்டன் சார்பில் பணியாற்றியதால், ஏராளமான சோவியத் எதிர் (counterintelligence) நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் சோவியத் ஒன்றியத்திற்கு முன்கூட்டியே தெரியவந்தன.
இவ்வாறு 20 வருடங்கள் தொடர்ந்த கேம்பிரிட்ஜ் ஐவரின் உளவு வேலை 1951 இல் அமெரிக்க புலநாய்வு அமைப்புகள், கே.ஜி.பியினுள் ஊடுருவிப் பெற்ற உளவுத் தகவல்களோடு முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஐவரினதும் தலைவர் என்று கருதப் பட்ட கிம் fபில்பி, 1963 வரை தப்பியிருந்து உளவுப் பணியைச் செய்த பின்னர், மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்று அங்கே 1988 வரை வாழ்ந்தார். கிம் fபில்பியின் உளவுப் பணிகளுக்காக, சோவியத் ஒன்றியம், மாதாந்த ஓய்வூதியமும் வழங்கி 90 களில் அவரை ஒரு சோவியத் ஒன்றிய தபால் முத்திரையின் மூலம் கௌரவித்தது. இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அமெரிக்க, மேற்கு அணிகள் என்ன செய்து கொண்டிருந்தன?
உளவாளிகளின் பாலம்
மேற்கு நாடுகளின் உளவுப்பலம், பெரும்பாலும் சோவியத் கட்டுப் பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளினுள், அந்த நாட்டு மக்களை வைத்தே உளவு வேலைகள் செய்வதில் இருந்தது. இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை வார்சா ஒப்பந்த (Warsaw Pact) நாடுகள் என்ற , நேட்டோவிற்கு எதிரான அமைப்பின் கீழ் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைத்திருந்தது. ஒப்பிற்கு ஒரு உள்ளூர் கட்சி கம்யூனிச ஆட்சி நடத்துவதாகக் காட்டப் படும், ஆனால் பின்னரங்கில் சோவியத்தின் கே.ஜி.பி ஏஜென்டுகளும், செம்படையின் தாங்கிகளும் குவிக்கப் பட்டிருக்கும் (இப்படியான ஒரு கே.ஜி.பி ஓற்றராக கிழக்கு ஜேர்மனியின் ட்றெஸ்டன் நகரில் சில ஆண்டுகள் பணியாற்றியவர் தான் தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி புரின்).
இந்த நிலையில், மேற்கின் ஒரே கவலை, எப்போது சோவியத் ஒன்றியம், கிழக்கில் இருந்து தன் தாங்கிகள் சகிதம் மேற்கினை நோக்கிப் பாயும் என்பதாக இருந்தது. இதனைச் சமாளிக்க, ஏராளமான மேற்கின் உளவாளிகள் வார்சா ஒப்பந்த நாடுகளில் தங்கி வேலை செய்தார்கள். மேற்கு கிழக்கு ஜேர்மனிகளிடையே, பெர்லின் நகரில் சுவர் இருந்தாலும், இரு பகுதியின் ஆயுதப் படையினரும் முன்னரே அறிவித்து விட்டு நுழையும் ஏற்பாடு இருந்தது. இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, சோவியத் அணியும், மேற்கின் பக்கமிருந்து அமெரிக்க, பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளும் விசேட வாகனங்களில் உத்தியோக பூர்வமான பயணங்களை மேற்கொண்டு உளவுப் பணிகளிலும் ஈடுபடுவது ஒரு திறந்த இரகசியமாக இருந்தது. மேற்கின் அணிகள், சோவியத் புதிதாக உருவாக்கிய ரி- 80 (T-80) தாங்கியை இப்படியான ஒரு உளவுப் பயணத்தின் போது தான் முதன் முதலில் படம் பிடித்து வாஷிங்ரனை எச்சரிக்க உதவின. சில சந்தர்ப்பங்களில் இந்த அணிகள் பிடிபடுவதும், மிக அரிதாகக் கொல்லப் பட்டதும் கூட நிகழ்ந்திருக்கிறது. அவ்வாறு ஒரு தரப்பினால் கைதாகும் உளவாளிகளை, கைதிகள் பரிமாற்றம் மூலம் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையும் இருந்திருக்கிறது. பெர்லினில், ஹவெல் நதியின் மேலாக, மேற்கு, கிழக்கு பெர்லின்களை இணைக்கும் கிளைனிக் (Glienicke) பாலத்தில் அனேகமான இந்தக் கைதிகள் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமையால், அந்தப் பாலத்திற்கு "உளவாளிகள் பாலம்" (Bridge of Spies) என்றும் ஒரு பெயர் உருவானது. இப்படி சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையே இப்பாலத்தினூடாகப் பரிமாறப்பட்ட ஒரு முக்கிய நபராக கேரி பவர்ஸ் (Gary Powers) என்ற அமெரிக்கர் விளங்குகிறார்.
70,000 அடிகள் உயரத்திலிருந்து உளவு
"தும்பி" என்று அழைக்கப் பட்ட யூ- 2 உளவு விமானத்தின் ஒரு தோற்றம். 70,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடிய இந்த உளவு விமானம் இன்று யூ 2 சி எனும் நவீன வடிவத்தில் பாவனையில் இருக்கிறது. பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி.
கப்ரன் கெரி பவர்ஸ் பிரபலமாவதற்கு, அவர் செலுத்திய விமானம் தான் காரணம். பனிப்போரின் உச்சத்தில், 1956 ஜூலை 4 ஆம் திகதி, அமெரிக்க விமானப் படை முதன் முதலாக ஒரு புது வகை விமானத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது. யூ 2 (U-2) என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் மிகவும் இரகசியமான திட்டம் மூலமாக , லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் வடிமைக்கப் பட்ட ஒரு உளவு விமானம். சாதாரண பயணிகள், மற்றும் சரக்கு விமானங்கள் 35,000 அடிகள் உயரத்தில் பறப்பவை. பி- 29 (B-29) வகையான, அமெரிக்காவின் அணுகுண்டு காவும் விமானங்கள் (Strategic bombers) 50,000 அடிகள் உயரத்தில் பறக்கக் கூடியவை. இந்த யூ 2 உளவு விமானம், 70,000 அடிகள் உயரத்தில், ரேடார்களின் கண்ணில் படாமல் பறக்கக் கூடியவையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 60 அடிகள் நீளமான, 80 அடிகள் இறக்கை விஸ்தாரம் கொண்ட யூ 2 விமானத்தை "தும்பி" (Dragonfly) என்று செல்லமாக அழைப்பர்.
யூ 2 உளவு விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி வாய்ந்த ஒளிப்படக் கமெராக்கள். 1959 இல், இக் கமெராக்கள் பிடித்த படங்கள், தற்போதைய கூகிள் ஏர்த் படங்களை விட துல்லியம் கூடியவையாக இருந்ததாக ஒரு ஆய்வு அண்மையில் உறுதி செய்திருந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகம், வாசிங்ரன் டி.சி.
70,000 அடிகள் உயரத்தில் ஒட்சிசனின் செறிவு குறைவு, எனவே இந்த விமானத்தை இயக்கும் ஒற்றை விமானி, ஒட்சிசனை சிலின்டரில் இருந்து சுவாசித்த படி விமானத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் சக்தி மிக்க கமெராக்கள் மூலம் கீழே இருக்கும் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் என்பன படம் பிடிக்கப் பட்டு சேகரிக்கப் படும்.
இத்தகைய இரகசியம் நிறைந்த யூ 2 விமானத்தை சி.ஐ.ஏ யின் கீழ் பணியாற்றிய கப்ரன் கெரி பவர்ஸ் மே மாதம் முதலாம் திகதி, 1960 இல் பாகிஸ்தானின் ஒரு அமெரிக்க தளத்திலிருந்து எடுத்துக் கொண்டு வட மேற்காக சோவியத் நிலப்பரப்பின் மீது பறக்க ஆரம்பித்தார். சோவியத்தின் பிரதான நிலப்பரப்பின் மீது 2900 மைல்கள் பறந்து, உளவுப் படங்கள் எடுத்த பின்னர் ஆர்கேஞ்சல் எனும் வட சோவியத் நகரூடாகக் கடந்து நோர்வேயில் தரையிறங்குவதே நோக்கமாக இருந்தது. ஆனால், யூரல் மலைப்பிரதேசத்தின் மீது வைத்து, விமானத்தின் ஒட்சிசன் வினியோகத்தில் கோளாறு ஏற்படவே, விமானத்தை 70,000 அடிகள் உயரத்திலிருந்து 35,000 அடிகளுக்கு இறக்க வேண்டிய நிலை கெரி பவர்ஸுக்கு ஏற்படுகிறது. இது கூட சோவியத் ஏவுகணைகளுக்கு எட்ட முடியாத உயரம் என்றே அமெரிக்கா நினைத்திருந்தது, ஆனால் ஒரு புதிய வகை ஏவுகணை மூலம் கெரி பவர்ஸின் யூ 2 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது, கெரி பவர்ஸ் பரசூட் மூலம் பாய்ந்து உயிர் தப்பி, சோவியத் ஒன்றியத்திடம் கைதியானார். முதலில் கப்ரன் பவர்ஸ் உயிரிழந்து விட்டார் என்று அமெரிக்கா செய்திக் குறிப்பை தயாரித்துக் கொண்டிருந்த போதே, அவர் உயிரோடிருப்பதை சோவியத் ஒன்றியம் வெளிப்படுத்தியது. அத்தோடு, அமெரிக்காவின் இரகசிய யூ 2 விமானத்தின் சிதைவுகளையும் சோவியத் பாதுகாப்புப் பிரிவு கைப்பற்றி ஆராய ஆரம்பித்தது. இந்த யூ 2 விமான விபத்தின் பிரதான விளைவாக, பாரிசில் நடக்கவிருந்த மேற்கு சோவியத் அணுவாயுதப் போட்டி தொடர்பான மாநாடு ரத்துச் செய்யப் பட்டது. 2 வருடங்கள் உளவுக் குற்றச் சாட்டில் சோவியத் சிறையில் அடைக்கப் பட்ட கெரி பவர்ஸ், 1962 இல் உளவாளிகள் பாலத்தின் வழியாக ஒரு சோவியத் உளவாளியோடு கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப் பட்டார்.
இந்த நிகழ்வுகளால் சோவியத் ஒன்றியம், அமெரிக்காவின் உளவுப் பறப்புகள் பற்றி அறிந்து கொண்டாலும், யூ 2 விமானத்தின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தவில்லை. இரு ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் இருக்கும் கியூபாவில் சோவியத் ஒன்றியம் அணுவாயுத ஏவுகணைகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த ஏவுகணைக் கட்டுமானங்களை உளவுப் பறப்பினால் படம் பிடித்து வெளிக்கொணர்ந்தது இதே யூ 2 விமானங்கள் தான். இதனால் விளைந்த கியூப ஏவுகணைப் பிணக்கை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
இன்றும் அமெரிக்கா டசின் கணக்கான யூ 2 உளவு விமானங்களைப் பாவனையில் வைத்திருக்கிறது. புதிய தொழில் நுட்பங்களைப் பரீட்சிக்க இந்த விமானங்கள் பயன்படுகின்றன. ஆனால், செய்மதித் தொழில்நுட்பங்கள் இப்போது விருத்தியடைந்திருப்பதால், எந்தக் கட்டுப் பாடுமின்றி பறப்பு மூலமான (overflight) உளவு பல நாடுகளுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.
உளவுத் தொழிலைப் பிரபலமாக்கிய பனிப்போர்
உளவுப் போரின் பல்வேறு பரிமாணங்களை நூல்களாகவும், திரைக்காவியங்களாகவும் படைத்து, பனிப்போரின் போதான உளவு நடவடிக்கைகள் திரில் நிறைந்தவையாக மக்கள் மத்தியில் பிரபலமாக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுள் சில படைப்புகள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை, எனவே வரலாற்றை சுவாரசியமாக வாசிக்க/பார்க்க விரும்புவோருக்கு இந்தப் புனைவுகள் கூட நல்ல வரலாற்றுத் தகவல் மூலங்களாக இருக்கின்றன. John Le Carre எழுதிய “Tinker, Tailor, Soldier, Spy” என்ற நாவல் - இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது - கிம் fபில்பி சம்பந்தப் பட்ட சம்பவங்களின் அடிப்படையிலானது. ஸ்ரிவன் ஸ்பீல்பேர்க்கின், “Bridge of Spies” என்ற திரைப்படமும் சில உண்மை சம்பவங்களின் ஒரு நாடகபாணி விபரிப்பு.
இது போன்ற நூல்கள், திரைப்படங்கள் மூலம், “நாட்டிற்காக உளவு வேலையில் ஈடுபடுவது ஒரு த்ரில்லிங்கான நல்ல செயல்” என்ற முன்மாதிரி மேற்கு நாடுகளில் தொடர்ந்து விதைக்கப் பட்டு வருகிறது. இது, முடிந்து போன பனிப்போரின் ஒரு எச்சம்!
-தொடரும்