இனப்பிரச்சினை தீர்வுக்கு எம்மால் தடையில்லை : அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள் உலகத்தமிழர் பேரவையிடத்தில் தெரிவிப்பு
09 DEC, 2023 | 10:43 AM
(ஆர்.ராம்)
நாட்டில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துவிதமான பிரச்சினைகளும் நீடித்துக்கொண்டிருப்பதற்கு பௌத்த தேரர்களே காரணமாக உள்ளனர் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் நிரந்தரமான சமாதனம் ஏற்படுவதற்கு நாம் எப்போது தடைகளை ஏற்படுத்தவில்லை.
அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உலகத்தமிழர் பேரவையிடத்தில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பௌத்த தேரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டதோடு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்டனர் .
இந்தச் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
முதலில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை குறித்த குழுவினர் சந்தித்தனர். இதன்போது இமயமலைப் பிரகடனம் அவரிடத்தில் கையளிக்கப்பட்டதோடு, அதனடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சம்பந்தமாக தெளிவு படுத்தப்பட்டது.
அச்சமயத்தில் நிறைவேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனத்தை தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக தெரிவித்த மகாநாயக்க தேரர், குறித்த பிரகடனம் மக்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு உரிய கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் செய்யப்பட்டு மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மக்களின் பங்கேற்புடனேயே தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் அத்தோடு, நான், சகோதரத்துவம், சமாதானம், சமத்துவம் என்ற நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதையே தொடர்ச்சியாக விரும்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்துரூபவ் மல்வத்து பீடத்துக்குச் சென்ற குறித்த குழுவினர், மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடினார்கள்.
இதன்போது, நாட்டில் காணப்படுகின்ற பல பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலமாக தீர்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தேன். எனினும் அவை கைகூடியிருக்கவில்லை.
பின்னர் போர் முடிவுக்கு வந்ததையடுத்துரூபவ் திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டேன். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினேன்.
விசேடமாக, பாடசாலைகள் மீள்கட்டுமானம், குடிநீருக்கான கிணறுகள் நிர்மாணம், உள்ளிட்டவற்றுக்கு உதவிகளை வழங்க முடிந்திருந்தது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய சூழலில் மிகவும் பாதிப்படைந்திருப்பதனால் அவர்களுக்கு உரிய உதவிகளை தெற்கிலிருந்து தான் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றோம்.
இதேநேரம், தமிழ் மக்களிடையே பௌத்த மதகுருமார்கள் தான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்ற நிலைப்பாடு விதைக்கப்பட்டுள்ளது.
நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தடையானவர்களாக இருக்கப்போவதில்லை. நானும் இலங்கையர் என்ற வகையில் தமிழர், முஸ்லிம், சிங்களவர்கள் என் பாரபட்சம் பாராமல் பிரச்சினைகளுக்கு நிரந்தமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக நிரந்தரமான சமாதானமும் சாந்தியும் நாட்டில் தோற்றம் பெற வேண்டும். அதற்காக குறித்த குழுவினரை ஆசீர்வதிக்கின்றேன்.
மேலும், தலதா மாளிகைக்கு சென்று அங்கே வரலாற்று பெருமை மிக்க வணக்க தலத்தினை பார்வையிடுமாறு கோருகின்றேன் என்றார். இதனையடுத்து குறித்த குழுவினர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/171298