எதுவுமே நிரந்தரமல்ல
சமீபத்தில் வலைதளங்களில் பார்த்த ஒரு வீடியோ க்ளிப் மனத்தை வலியில் தள்ளியது. அதில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி திருமதி. பி. சுசீலா பேசியிருந்தார். அது:
"செத்துப்போயிடலாமான்னு இருக்கு. சாவு நம்ம கையில இல்லை. கடவுள் எப்ப கூப்பிட்டாலும் போக வேண்டியதுதான். ஒரு ஆர்டிஸ்டு உயிரோடு இருக்கறப்ப யாரும் பார்க்கறதில்லை சார். பாட முடியாம இருக்கிறேன். வாய்ஸ்ம் இல்லை, சக்தியும் இல்லை. எண்பது வயதுக்கு மேல அதிகமாயிடுச்சு. யாராவது வந்து கேட்கிறாங்களா. சுசீலாம்மா சரஸ்வதிதேவி, மேல் உலகத்திலிருந்து கீழே வந்தவங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. சரஸ்வதிக்கு உடுத்தறதுக்கு துணி வேணாமா? சாப்பிடறதுக்கு பணம் வேணாமா? வீட்டில வளர்க்கிற நாய்க்குகூட வேளாவேளைக்கு சாப்பாடு போடுவாங்க. தேசத்துக்காக நாங்க எவ்வளவு பண்ணறோம். எங்களுக்கு என்ன பண்ணிச்சு தேசம்? கவர்மெண்ட் எங்களை ஜெயில்ல வைப்பாங்களா? வீடு கூட ஜெயில் மாதிரிதான் இருக்கு. இருக்கு! சாப்பிடறதுக்கு இருக்கு! பிச்சை எடுக்கறதுக்கு இன்னும் . . . . . ", இப்படி பேசிக்கொண்டே சென்றார்.
பல மொழிகளில் நாற்பதாயிடம் பாடல்களுக்கு மேல் பாடியவர். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பாடி வந்துள்ளார். அந்த கானக்குயிலின் குரல் பல நாட்கள் நம் கவலைகளை மறந்து உறங்க வைத்துள்ளது. தென்னிந்தியாவில் பி. சுசீலாவின் குரலை கேட்காமலோ, முணுமுணுக்காமலோ ஒரு நாள்கூட நாம் கடந்துவிட முடியாது. தவிர்க்க முடியாத இசையரசியாக வாழ்ந்தவர், இன்று தொலைந்துபோன தன் முகத்தை இன்றைய சமுதாயத்தில் தேடிக்கொண்டிருக்கிறார். இவரைப் போலவே தன் முகத்தை தொலைத்த பல பெரிய மனிதர்களை இன்றும் பார்க்கிறோம். சிலர் வெளிப்படையாக தனது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னமும் 'முன்னால்' சிந்தனையோடு இந்நாளும் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கிராமத்து கோவிலில் ஒரு பெரியவரை சந்தித்தேன். நெற்றியில் விபூதிப்பட்டை. பார்ப்பதற்கு எளிமையான தோற்றம். அவரின் படிப்பறிவை அனுமானிக்க முடியாத தோற்றம். மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை ஆச்சர்யத்தில் தள்ளியது. அவர் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
"நான் சர்வீஸ்ல இருக்கும் போது என்னைச் சுத்தி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாரைப் பார்த்தாலும் இவனுக்கு நம்மைவிட அதிகம் தெரியாது என்று நினைக்கத் தோன்றும். சிறிய தவறுக்கும் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றும். கோபமே பணியாளர்களை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் என்று நினைப்பேன். பணியின் கடைசி நாளில் கல்கத்தாவிலிருந்து ரசகுல்லா வாங்கி வந்து அழகாக பேக் செய்து எல்லா பணியாளர்களின் மேஜைக்கும் அனுப்பிவைத்தேன்.
மாலை பிரிவு உபசார விழா நடந்தது. அது முடிந்ததும் என் இருக்கைக்கு வந்து கடைசியாக ஒரு முறை அமர்வதற்காக வந்தேன். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய மேஜை முழுவதும் ரசகுல்லா நிரம்பியிருந்தது. யாருக்கெல்லாம் நான் கொடுத்தேனோ, அவர்கள் எல்லாம் மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் கோபத்தை வெளிபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நாளை நான் எதிர்பார்க்கவில்லை. பிறகு அங்கிருந்து வந்து இந்த கிராமத்தில் தங்கிவிட்டேன். என்னை மறைத்துக்கொள்ள இந்த கிராமமும், பக்தியும் எனக்கு உதவுகிறது, என்றார் அந்த மனிதர்.
எல்லாம் முடிந்தபிறகு உணர்ந்துகொள்வது அடுத்தவரின் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு பாடமாக உதவலாம். அது நமக்கு எந்த வகையிலும் உதவாது.
அட்டென்ஷன் சீக்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தனிமை, வருத்தம், தன்னம்பிக்கை இழந்த நிலை, இன்னும் சிலருக்கு பொறாமை, இவையெல்லாம் வயது முதிர்ந்தவர்கள் பலருக்கு இருப்பதை பார்க்கிறோம். அவர் குடும்பத்தோடுதான் இருக்கிறார். அதெப்படி தனிமை என்று சொல்ல முடியும்? உண்மையில் அதுவும் தனிமைதான். சுற்றி பலர் இருந்தாலும், அந்த கூட்டத்தினிடையே தன்னை தனிமையாக உணரும் நிலை அது. ஒரு காலத்தில் எதையெல்லாம் சாதனை என்று நினைத்தோமோ அவையெல்லம் இன்றைய நாளின் நினைவுகளாய், சோதனைகளாக மாறிப்போயிருக்கும். ஒரு குட்டிக்கதை.
ஒர் முதிர்ந்த அரசன். வயது தொன்னூறு. ஒருநாள் இளவரசன் அவரிடம் வந்து,
தந்தையே! எனக்கு ஐம்பது வயதாகிவிட்டது. எல்லோரும் என்னை இளவரசே என்று தான் அழைக்கிறார்கள். எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி, 'பதினெட்டுவயதில் அரசனாக முடிசூட்டிக்கொண்டேன்', என்றுபெருமையாக சொல்வீர்களே! அதே போன்ற பெருமை எனக்கு கிடைக்கவில்லையே! எனக்கு எப்போது முடிசூட்டப்போகிறீர்கள்? என்று கேட்டான்.
அரசன் பதிலளித்தான்.
மகனே! பல காலங்களுக்கு முன் ஒரு சாதுவை சந்தித்தேன். நான் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ்வேன் என்று எனக்கு வரமளித்திருக்கிறார். அரசன் என்ற பதிவியில்லாமல் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்பவில்லை. ஆகையால், உன்னுடைய ஆசையை விட்டுவிடு என்று சொன்னான் அரசன்.
அதிர்ந்துபோனான் இளவரசன். அடுத்த நாள் காலை. தனது ஆதரவாளர்களுடன் அரண்மனைக்குச் சென்றான். தூங்கிக்கொன்டிருந்த அரசனை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தான்.
இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அரசனை சந்திக்க சாது வந்தார்.
'சாதுவே! என் நிலையைப் பார்த்தீர்களா? இந்த நாட்டையும், மக்களையும் சிறப்பாக ஆட்சி செய்தேன். ஆனால், இன்று வீட்டுச் சிறையில் இருக்கிறேன். எனக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், யாரும் குரலெழுப்பவில்லை', என்று வருத்தப்பட்டார்.
அதோடு நிற்காமல் தான் செய்த சாதனைகளையெல்லாம் சாதுவிடம் சொல்லி புலம்பினார்.
'சாதுவே! என் ஆயுள் நூற்றி ஐம்பது வருடங்கள் என்று வரமளித்திர்கள். அன்று அது வரமாகத் தெரிந்தது. இன்று அது சாபமாகத் தெரிகிறது. எந்த முக்கியத்துவமும் இல்லாமல் எப்படி அடுத்த அறுபது ஆண்டுகள் உயிர்வாழ்வது? என்னுடைய மனைவிகள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள். என் மகன் என்னை புறக்கணித்துவிட்டான். நான் உங்களிடம் வரம் கேட்கும் போதே அந்த வரத்தில் ஒளிந்திருக்கும் இந்த மோசமான நிலையை எனக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா? நீங்கள் எனக்கு அளித்தது வரமல்ல. சாபம்', என்று வருத்தப்பட்டான் அரசன்.
'அரசனே! ஒரு மனிதனின் ஆயுட்காலம் வயதோடு தொடர்புடையது. அதில் குறிப்பிட்ட சில வருடங்களை சாதனைக்காலம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல, அந்தக்காலம் நீங்கள் செய்த சாதனைக்கானது என்றால், அந்தச் சாதனைகளையெல்லாம் நீங்களே செய்தீர்கள் என்றால், இன்று அது உங்களுடனே இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லையே! இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சாதனைகளை செய்வதற்கான காலத்தின் கருவியே நாமெல்லாம். உயர்ந்த நிலையை அடையும் போது,
இது நிரந்தரமானதல்ல என்பதை நீங்கள் உணரவில்லை. "நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி ஒரு மோசமான நிலை நமக்கு வரும் என்று கணிக்கத் தவறியவனும், மோசமான நிலையில் இருக்கும் போது வாழ்ந்து முடித்த நாட்களே உயர்ந்தது என்று கணக்குப்போடுபவனும் நிம்மதியாக வாழமுடியாது". ஆகையால், பிரச்னையோ அல்லது அதன் தீர்வோ எல்லாமே நம் மனத்தில்தான் இருக்கிறது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுமே மாயைதான். இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் இறந்த காலத்தை உயர்ந்த காலம் என்று சொல்லமாட்டார்கள்.
நிகழ்காலத்தை ரசிக்கின்ற ஒருவனே வாழ்க்கையின் கடைசி நாள்வரை நிம்மதியாக வாழ்கிறான். இதை உணராதவனின் வரங்கள் எல்லாமே சாபமாகிறது, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது
அரசன் சிறையில் இருக்கும் நிகழ்காலம் ரசிக்க வேண்டிய விஷயமல்ல. ஆனால், இந்த நிலையை இறந்தகாலத்தில் உணர்ந்திருந்தால், அதை அரசன் தவிர்த்திருக்கலாம். இராமாயணத்தில், தசரதன், தன் தலையில் முதல் நரை முடியைப் பார்த்தவுடன், ராமனுக்கு முடிசூட்ட விரும்பினான் என்று படித்திருக்கிறோம். இருக்கும் வரை தான் மட்டுமே அனுபவிக்கவேண்டும் என்று தசரதன் நினைக்கவில்லை. தன்னைச் சார்ந்தவர்களை அமர்த்தி அழகு பார்க்கும் பக்குவம் அவனிடம் இருந்தது. இந்தப் பக்குவம் மொகலாய பேரரசர் ஷாஜகானிடம் இல்லை.
அதனால்தான் அவனுடைய கடைசி நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை அவனது மகன் ஒளரங்கசீப் ஏற்படுத்தினான்.
இந்தக் கதை நமக்கு உணர்த்தும் விஷங்கள் இரண்டு.
ஒன்று, உயர்ந்த நிலயாகக் கருதப்படும் நிலையிலிருக்கும் போது அது நிரந்தரமல்ல என்பதை உணருதல்.
மற்றொன்று, தனக்கு மட்டுமே எல்லாக் காலங்களிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
"அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்", என்று இதற்கு ஒரு பெயரிட்டு உலவியல் ரீதியாக இதை அணுக வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் கடந்துதான் தீரவேண்டும். இந்த நிலையை கடப்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு உதவியாக இருந்தது இறைநம்பிக்கை, பக்தி. உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்ட காலங்களிலும், நலிவடைந்த நிலை என்று சொல்லப்பட்ட காலத்திலும் நம்முடன் இணைந்திருக்கும் ஒரே இணைப்பு பக்தி.
ஒன்றை உதற வேண்டுமென்றால், மற்றொன்றை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எந்த நேரமும் இறைநம்பிக்கையை பிடித்துக் கொண்டவனுக்கு மற்ற விஷயங்கள் நிரந்தர பிடிப்பை ஏற்படுத்தாது.
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய நிலைக்கு என்ன பெயர் வைத்தாலும் சரி, அல்லது அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றே வைத்துக் கொண்டாலும் சரி, அவர் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குறியது. ''உயர்ந்த மனிதன்'' என்ற திரைப்பத்தில் அவருக்கு தேசிய விருதுபெற்றுத் தந்த அந்தப் பாடல் வரிகள் என்றும் இளமையானவை. அவை நம் நினைவிற்கு வருகிறது. முகம் தெரியாத காதலனுக்காக பாடுவதாக அந்தப்பாடல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலுக்காகத்தான் பின்னணி பாடகர்களுக்கான முதல் தேசிய விருதைப் பெற்றார் திருமதி. பி. சுசீலா. ஐந்து முறை தேசிய விருதும் பெற்றவர்..
நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா . . .
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. . . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு. . .
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு . . .
திருமதி. பி. சுசீலாவின் இன்றைய தனிமைக்காக தென்றல் நின்று போனாலும் வருத்தத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் அவருக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
(Bala shares..........))